சமீபத்தில் மிகப்பெரிய விவாதம் தனியார் பள்ளிகளால் முன் வைக்கப்பட்டது. கடந்த ஆண்டில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி முதல் வகுப்பில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசு இது வரை செலுத்தாததால் இந்த ஆண்டு அதற்கான வழியைச் செய்த பிறகே சேர்க்கை செய்ய முடியும் என்பதுதான் அது. தனியார் பள்ளிகளின் வரவு செலவில் மிகவும் குறைந்த அளவிலான தொகைக்காக இது நடப்பதாக பலரும் கருதவில்லை. மாறாக தமது சுதந்திரத்தில் அரசு தலையிடுவதை விரும்பாததையே இது வெளிப்படையாக காட்டுவதாக உள்ளது. இது தொடர்பான பேட்டிகளில் தனியார் பள்ளி நிர்வாகிகள் பலரும் முன் வைத்த கருத்துக்கள் மிகவும் முகம் சுளிக்கவே வைத்தன. உதாரணமாக அரசாங்கம் கொடுத்த கெடுபிடிகள் குறித்தும் குறிப்பாக ஒரே படிவத்தை திரும்ப திரும்ப கேட்டது குறித்தும் அங்கலாய்த்தார்கள். ( ஒரு வேலை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அரசின் கல்வி துறையும் இதில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்) மொத்தத்தில் கல்வி ஒரு வியாபாரம் நாங்கள் வியாபாரம் செய்கிறோம். உரிய கட்டணத்தை வாங்கிக்கொண்டு சான்றிதழ் கொடுக்கவேண்டிய வேலைதானே அரசுடையது எங்களை ஏன் கணக்கெல்லாம் கேட்கிறீர்கள் என்கிற தொனியில் இருந்தது.
மேம்போக்காக பார்க்கும்போது இது சரி என்று கூட தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. அப்படியெல்லாம் அவரவர் இச்சைப்படி கல்வி நிறுவனங்கள் நடத்துவது பொது நன்மைக்கும் சமுக ஒழுங்கிற்கும் எதிரானதாகவே அமையும். . எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். சான்றிதழை மட்டும் ஏன் அரசு கொடுக்க வேண்டும் அதையும் நாங்களே கொடுத்துக்கொள்கிறோம் என உயர்கல்வி நிலையில் நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள் வந்துவிட்டன. நல்ல வேளையாக 12 ஆம் வகுப்பு வரையிலான சான்றிதழை அரசு கொடுப்பதால் அதுவரையாவது தனியார் நிறுவனங்கள் அரசை மதிக்கவேண்டிய நிலை உள்ளது. உண்மையில் கல்வி என்பது வேலை வாய்ப்புக்கானது என்ற நிலை மேன்மேலும் அதிகரிக்க அதிகரிக்க இது போன்ற சான்றிதழ் விற்பனை கன ஜோராகவே நடக்கும். தனியார் கையில் அனைத்து வகையான சான்றிதழ்களும் கிடைக்கும் நிலை வந்த பிறகு யார் யாருக்கெல்லாம் வாய்ப்பு உள்ளதோ அவரவர்கள் தங்கள் தேவைக்கேற்ப வாங்கி முன்னேற முற்படுவர். ஒரு கால கட்டம் வரை இது சரியாகவும் முதலில் முந்துவோருக்கு நல்ல வேலை நல்ல சம்பளம் கிடைக்கும் பின்னர் குறிப்பிட்ட சான்றிதழுக்கான தேவை குறையக் குறைய நல்ல சம்பளம் என்பது கானல் நீராகும்.
இந்தியாவிலேயே அதிக பொறியியல் கல்லூரிகளைக் கொண்ட தமிழகத்தில் பொறியாளர்கள் ஐயாயிரத்துக்கும் பத்தாயிரத்துக்கும் வேலைக்குச் செல்லும் அவலத்தினை இன்று நாம் கண்டுகொண்டிருப்பது அதற்கு உதாரணம். எது எப்படியிருப்பினும் கல்வியில் தனியார் மயமாக்கத்தினைக் கட்டுப்படுத்துவது என்பது அவசர அவசியம். குறிப்பாக துவக்கக் கல்வியிலும் இடைநிலைக் கல்வியிலும் சமநிலையினைக் கொண்டுவர துவக்கப் புள்ளியாகப் பார்க்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் 25 சதவிகித இட ஒதுக்கீடு என்பது படும்பாட்டை வைத்தே கல்வி உரிமைச் சட்டத்தின் கையறு நிலையினை புரிந்துகொள்ள இயலும். கொஞ்சம் கல்வி உரிமைச் சட்டத்தின் வரவுக்கு முந்தைய வரலாற்று நிகழ்வுகளைப் பட்டியிட்டுவிட்டு பின்னர் விஷயத்திற்கு வரலாம்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சிப்பொறுப்பில் இருப்போர். அவரவர்களது சொந்த நலன்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதவாறு இருப்பதை உறுதி செய்தபின்னர் மக்களில் சிலர் கல்வி பெறுவதை அனுமதித்தனர். . குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் கல்வி, குறிப்பிட்ட பிரிவினருக்கு குறிப்பிட்ட கல்வி, குறிப்பிட்ட கல்வி மட்டுமே அனைவருக்கும் என பல்வேறு காலகட்டங்களை கடந்து இன்று கல்வி பெறுவது குறிப்பாக இந்தியாவில் 6 முதல் 14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கு கல்வி பெறும் அடிப்படை உரிமை கிடைத்துள்ளது. இந்த உரிமையும் பல்லாண்டு கால போராட்டங்களுக்கு பிறகே பெறப்ப்பட்ட்து. இந்த இடத்தில் கல்வி அடிப்படை உரிமை என்றாகும்போது, உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றுக்கு நிகரானது கல்வி என்று பொருள் கொள்வது அவசியம்.
இந்நிலையில் அனைவருக்கும் கல்வி பெறும் உரிமை என்பது விரைவில் தரமான, சமமான கல்வி பெறுவது உரிமை என்றாகவேண்டும். கோத்தாரிக் கல்விக்குழு உள்ளிட்ட கல்விக்குழுக்கள் கல்வி பெறுவதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்காமல் அனைவருக்கும் சமமான தரமான கல்வியினை அளிக்க இயலாது என அழுத்தம் திருத்தமாக பரிந்துரைத்தன. ஆனாலும் இடையில் ஏற்பட்ட பல்வேறு கோளாறுகளால் குறிப்பாக தமிழகத்தில் தனியார் கல்விக் கூடங்கள் பல்கிப்பெருகின. உயர் கல்வி முழுவதும் ஆங்கிலத்திலேயே இருந்த நிலையில் வாய்ப்புள்ள சமூகத்தினர் துவக்கம் முதலே ஆங்கில வழியில் கற்பிக்க இந்த பள்ளிகள் உதவின. தமிழிலேயே அனைத்து உயர்கல்வியும் பெற இயலும் என்ற நம்பிக்கையினை இதுவரை விதைக்க இயலாத சூழலில் பெற்றோரின் விருப்பம் என்ற நிலையிலேயே இன்று வரை ஆயிரக்கணக்கான பள்ளிகள் முளைத்து வருகின்றன. இதனிடையே தமிழ் வழிக்கல்வியில் நம்பிக்கை இழந்த நிலையில் அரசே துவக்கக் கல்வியினை ஆங்கில வழியில் அளிக்க முயற்சிக்கிறது. அரசு பள்ளி ஆசிரியர்களின் தொழில்சார் நெறியும் பொறுப்புணர்வும் மேன் மேலும் மேம்படவேண்டிய சூழலில் இது எந்த் அளவுக்கு வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் உயர்நிலை மேநிலைப்பள்ளிகளில் தனியார் பள்ளிகள் போல 9 ஆம் வகுப்பில் அடுத்த பள்ளிக்கு துரத்தாமல் தங்களால் இயன்றவரை கற்பிக்கும் கண்ணியமிக்க ஆசிரியர்களையும் நாம் கண்டிப்பாக அடையாளம் கண்டு பாராட்டவேண்டும். இவர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளதும் ஒருவகையில் ஆரோக்கியமான விஷயம்.
சரி இது இவ்வாறு இருக்கட்டும். கல்வி உரிமைச் சட்டம் 25 சதவிகித குழந்தைகளை சேர்க்கவேண்டும். என்று வரையறுத்துள்ளதை அனைவரும் பள்ளியின் முழு எண்ணிக்கையில் 25 சதவிகிதம் என்று புரிந்துகொண்டு இது எப்படி சரியாக இருக்கும் என்று வாதிடுவதும் நடக்கிறது. குறிப்பாக 500 குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் 125 இடங்கள் என அது அப்படியல்ல. தனியார் பள்ளியில் எது புகும் நிலை வகுப்போ அதில் 25 சதவிகிதம்தான். அதாவது 30 இடங்களில் 25%. அடுத்த ஆண்டு இந்த குழந்தைகள் அடுத்த வகுப்பிற்குச் செல்வர் இப்படியாக 5 ஆம் வகுப்பு வரை 25 அடைய 5 வருடங்களாவது ஆகும். .
ஒரு வகையில் ஒரு பகுதியிலுள்ள அனைத்துப் பிரிவைச்சேர்ந்த குழந்தைகளும் ஒரே பள்ளியில் சமமான தரமான கல்வி பயில்வதனை ஒரளவாவது உறுதி செய்யும் என்ற வகையில் இதனை கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்துகிறது. ஆனால் உண்மையான சமூக ஆர்வலர்களின் கருத்தின்படி இது கூட சரியல்ல அனைத்துக்குழந்தைகளும் தங்கள் அண்டையிலுள்ள அரசின் பொதுப்பள்ளியில் பயில்வதே இதனை உறுதி செய்யும். அந்த கனவினை நனவாக்க இன்னும் பல காலம் தேவைப்படலாம். .இன்னும் இன்னொரு படி மேலே போய் யோசிப்போமேயானால் அனைவரும் தாம் எந்த பகுதியில் வசிக்கிறோமோ எந்த இடத்தில் நமக்கு குடியுரிமை உள்ளதோ அந்த இடத்திலுள்ள பள்ளியில் தமது குழந்தைகளை சேர்ப்பதே அருகாமைப்பள்ளி ஆகும். இது போன்ற நடைமுறையில் சமூகத்தில் பொருளாதார ரீதியாக வசதியானவர்களும், அரசியல் பிரமுகர்களும், அரசு நிர்வாகத்துறையினை இயக்குபவர்களும், அரசின் சகலவிதமான ஊழியர்களும் தமது குழந்தைகளை இப்பள்ளியில் சேர்ப்பர். இந்நிலையில் அப்பள்ளியில் நடைபெறும் போதானா முறை, கட்டமைப்பு, ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம், பள்ளியின் நடைமுறைகள் போன்ற அனைத்தும் சரியாக நடைமுறையாகும். இதனை உத்தரவாதப்படுத்த வேண்டிய அரசியல் விருப்புறுதி கிடைக்கும். எனவேதான் சமூக ஆர்வலர்கள் அருகாமைப்பள்ளி மற்றும் பொதுப்பள்ளியினை நடைமுறைப்படுத்தப்பட அரசினை நிர்ப்பந்திக்கின்றனர்.
சமுகத்தின் எதிர்பார்ப்பு இவ்வாறு உள்ள நிலையில் கடந்த ஆண்டு இந்த 25 சதவிகிதம் இடங்களை ஒதுக்கவேண்டும் என்று வந்த நிலையில் தனியார் பள்ளிகள் முன்வைத்த சொத்தை வாதங்கள் சிலவற்றையும் பார்ப்போம். பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் குழந்தைகளிடத்தில் அவர்கள் காட்டிய கரிசனத்தினைப் பாருங்கள்
.
பின் தங்கிய வகுப்பு குழந்தைகளின் பேச்சு என்பது கொச்சையானது, அந்த குழந்தைகளும் இந்த குழந்தைகளும் இணைந்து பயில்வது மற்றும் பயிற்றுவிப்பது நடைமுறையில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
ஒழுக்கம் குறைந்த குழந்தைகளாக அவர்கள் இருப்பதால் பள்ளியில் பொருட்கள் காணாமல் போகும்.
அதிக கவனம் அந்த குழந்தைகளுக்காக செலுத்த வேண்டும். இதனால் மேல் தட்டு குழந்தைகளின் கல்வி போதிக்கும் நேரம் குறையும்.
அந்த குழந்தைகளின் கட்டணத்தை வேண்டுமானால் அரசு கொடுக்கும் ஆனால் அவர்களுக்கான சீருடை, ஷூ , சாக்ஸ், டை மற்றும் வருவது போவதற்கான செலவுகளை யார் ஏற்பது?
பாவம் அந்த குழந்தைகள் தமக்கு வசதியான வாழ்க்கையும், ஆங்கிலக் கல்வி பெறும் தகுதி இல்லையே என தாழ்வு மனப்பான்மை கொள்வர்” என்கின்றனர்.
இன்னும் நிறைய கருத்துக்கள் உண்டு என்றாலும் இத்துடன் நிறுத்திக்கொள்வோம். கல்வி என்பதற்கான புரிதல் வேலை வாய்ப்புக்கானது, ஆங்கில அறிவினை முழுமையாக அடைவது, தன்னை சமூகத்தில் பிரித்துக் காட்டிக் கொள்ள உதவுவது என்ற பல்வேறு தவறான புரிதல்களின் விளைவும் அது சமூகத்தில் ஆழ்ந்தும், அகன்றும் பரவியுள்ளதால் வரும் விளைவு இது தமது வணிக நோக்கிற்கும், தமது தரப்பெயருக்கு (பிராண்ட்) எந்தவிதமான பாதகமும் வந்துவிடக் கூடாது. அது தமது வணிகத்தையும், லாபத்தையும் பாதிக்கும் என்ற ஆற்றாமையாலேயே வரும் வார்த்தைகள்.
அவர்களது வாதங்களிருந்து தொடங்குவோம். குழந்தைகளுக்கு மொழி நெகிழ்வான ஊடகமாக வேண்டுமானால் அவர்கள் பலதரப்பட்ட மொழியியல் சூழலில் வாழ்வது நல்லதே தவிர தீமையானதல்ல. இது தாம் பேசும் மொழியே தூய்மையான மொழி என்ற மேட்டிமையால் வருவது. உதாரணத்திற்காக ஒன்றைப் பார்ப்போம். ”இழுத்துக்கொண்டு சென்றது” என்ற சொற்றொடருக்கான இரு வகையான பயன்பாட்டைப் பார்ப்போம். ஒன்று ”இசுத்துக்கினு போச்சு” இரண்டாவதானது “இழுத்துண்டு போரது” இது இரண்டுமே தூய்மையானது இல்லையே.
அடுத்ததாக பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள் ஒழுக்கம் குறைந்தவர்களாக இருப்பர்?. . ஏழைகள் எல்லோருமே திருடர்களா? வழிப்பறி செய்பவர்களா? ஒழுக்கம் குறைந்தவர்களா? ஆத்ம சுத்தியோடு இந்த கேள்வியைக் கேட்டுக்கொள்ளுங்கள். ஏழைகள் அனைவரும் சிறையில்தான் இருக்கவேண்டும். இந்திய நாட்டின் சிறைகள் கொள்ளாது. மாறாக ஏழைகளின் தன் மானத்துடன் கூடிய வாழ்வியல் நெறிகள். இன்றும் பல அரசு பள்ளிகளில் தரையில் கிடக்கும் ரப்பர், பென்சில், நாணயம் போன்றவற்றால் தினம் தினம் நிறையும் தலைமை ஆசிரியர்கள் மேசைகள் உண்டு.
அடுத்ததாக அது போன்ற குழந்தைகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டியதால் மேல்தட்டு குழந்தைகளுக்கான செலவிடும் நேரம் குறையும். கல்வி என்பது நேரம் செலவிடுவதன் மூலம் அடையக்கூடியதல்ல. மாறாக சரியான புரிதல், சரியான நபருக்கு சரியான நேரத்தில் அடைவதே. பலதரப்பட்ட குழந்தைகளுக்கு போதிக்கத் தயாரவதே ஒவ்வொரு ஆசிரியரின் தொழில் சார் திறன்களை வளர்த்தெடுக்கும். வசதியான வீட்டு குழந்தைகள் அனைவரும் என்ன ஒரே மாதிரியான புத்திசாலிகளா என்ன? அவர்களிலும் தானே கல்வியில் பின் தங்கியவர்கள் இருப்பர். மேலும் ஆசிரியர்கள் கல்வியில் பின் தங்கிய குழந்தைகளுக்காக செலுத்தும் கவனம் என்பது சந்தேகமுள்ள இந்த குழ்ந்தைகளுக்கும் பலனளிப்பதாக இருக்கும். மாண்டிசோரி போன்ற கல்வியாளர்கள் சாதாரண உழைப்பாளி மக்களின் குழந்தைகளுக்கான கல்வி முயற்சியிலேயே கற்றுக்கொண்டது அதிகம் என்கின்றனர்.
எது எப்படியோ துவக்கக் கல்வியில் தனியார் மயமாக்கம் என்பது உயர்கல்வியை ஒப்பிடும்போது குறைவாக உள்ள சூழலிலேயே இவ்வளவு எதிர்ப்புக்குரல்கள் வருகிறது என்று சொன்னால் அடுத்த உயர்கல்வியினை அடிப்படை உரிமையாக்குவதற்கு எவ்வளவு கடினம் என்பதை புரிந்துகொள்ள இயலும். அரசு கூடுதல் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வதும் சமூகத்தில் கல்வி பற்றிய சரியான புரிதல் வருவதும் அவசர அவசியம். கல்வி என்பது தனிமனிதர்களின் நடத்தையில் ஆரோக்கியமான மாற்றங்களை கொண்டுவர வல்லது என்று கல்வியாளர்களின் பலரும் வலியுறுத்தி வரும் நிலையில் அது அப்படியல்ல கல்வி என்பது வேலைவாய்ப்புக்கானது என்ற எண்ணம் அதிக அளவில் மேலோங்கி வருகிறது. எங்கும் எதிலும் வேகம் என்ற முதலாளித்துவத்தின் கனவுகளுக்கு ஈடுகொடுப்பதாகவே கல்வி மாறி வருவது சமூக அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் கேடானதாகவே முடியும். துவக்க நாட்களில் கல்வி கொடுப்பதே தமது நோக்கம் என்று கல்விக்கூடங்களைத் துவங்கிய சிறுபான்மை நிறுவனங்களின் நோக்கமும் கல்வி உரிமைச் சட்ட அமலாக்கத்தில் தெளிவாகிவிட்டது. அரசு கொடுக்காத போதே தாங்கள் கொடுக்க முன்வந்தவர்கள் இன்று அரசே முன் கை எடுக்கும்போது ஏன் பின்வாங்குகின்றனர் என்பது புரியாத புதிராக உள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தில் குழந்தைகள் உரிமை சார்ந்த பல முற்போக்கான சரத்துகள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் குழந்தைகள் பள்ளிக்குள் வந்த பிறகே செயல்படுத்த இயலும். ஆனால் பள்ளிக்குள் நுழைவதே (குறிப்பாக தனியார் பள்ளிகளில்) பிரச்சனையாக உள்ள சூழலில் எதைப் பற்றி விவாதிப்பது. எது எப்படியோ புதிய கல்வியாண்டு துவங்க உள்ள நிலையில் அறிவுள்ள தமிழ்ச்சமூகத்தின் முன்னால் பல விவாதப் பொருட்கள் உள்ளன அவற்றை அறிவுபூர்வமாக விவாதிப்பதே நம் அனைவரின் கடமை.
கட்டுரையாளர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத்துணைத் தலைவர்