By dn, தேனி-
First Published : 21 May 2014 01:17 AM IST
தேனியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மாணவர் சேர்க்கையினை வலியுறுத்தி பிரசார இயக்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை வலியுறுத்தி பொதுமக்கள் மத்தியில் பிரசார இயக்கத்தினை, கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதேபோல், இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை வலியுறுத்தி பிரசார இயக்கத்தினை மேற்கொள்ள, கடந்த வாரம் மதுரையில் நடைபெற்ற மாநிலச் செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி மாவட்டம் சார்பில், மாணவர் சேர்க்கையினை வலியுறுத்தி பிரசார இயக்கம், திங்கள்கிழமை தேனி முதன்மைக் கல்வி அலுவலகத்தில் துவங்கப்பட்டது. பிரசாரத்தை தொடங்கி வைத்து, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்ப்பதன் அவசியம், அரசுப் பள்ளிகளில் அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், நலத்திட்டங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரத்தை, தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம். வாசு வெளியிட்டார். இதனை, பெரியகுளம் கல்வி மாவட்ட அலுவலர் என். நாகராஜு பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலக் கல்வி ஒருங்கிணைப்பாளர் தே. சுந்தர், மாவட்டத் தலைவர் பா. செந்தில்குமரன், மாவட்டச் செயலர் வி. வெங்கட்ராமன், தேனி மாவட்டக் கல்வி ஒருங்கிணைப்பாளர் க. முத்துக்கண்ணன், போடி கிளைச் செயலர் ஸ்ரீதர், மாவட்ட இணைச் செயலர் ஜேசுராஜ், பெரியகுளம் கிளைத் தலைவர் எ.எஸ். பாலசுப்ரமணியன் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். அம்மையப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அரசுப் பள்ளி என்பது மக்கள் பள்ளி, அரசுப் பள்ளிகளால் மட்டுமே அனைவருக்கும் சமமான, தரமான கல்வியை வழங்கமுடியும். எனவே, அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கவேண்டும். அரசுப் பள்ளிகளைப் பலப்படுத்தவேண்டும். மேம்படுத்த வேண்டும் என பிரசாரத்தில் வலியுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment