கட்டாய இலவசக் கல்வி சட்டத்தின் கீழ் நிரப்ப வேண்டிய 25% இடங்களுக்கான மனு கொடுக்க வேண்டிய தேதியை நீட்டி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய கல்வியாண்டு தொடங்குவதற்குப் பல மாதங்களுக்கு முன்பாகவே பல தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளிலுள்ள மழலையர் மற்றும் ஒன்றாம் வகுப்புக்கான இடங்களை நிரப்பிவிட்டன.
அப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதற்கு அனுமதி மனு வாங்குவதற்காகப் பெற்றோர்கள் இரவு முழுதும் நடைபாதையில் தங்கியதை நாளிதழ்கள் புகைப்படமெடுத்து வெளியிட்டன. மழலையர் வகுப்புகளுக்கான கல்விக் கட்டணங்களைக் கேட்டால் மயக்கம் வந்துவிடும். ஐம்பதாயிரத்தில் தொடங்கி இரண்டு லட்சம் வரை எல்.கே.ஜி. வகுப்பில் சேரக் கல்விக் கட்டணங்கள் வாங்குகின்றனர். அரசு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில்கூட அத்தகைய கட்டணங்கள் வாங்கப்படுவதில்லை.
உண்மையிலேயே சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பின்னடைவுற்ற வகுப்புகளிலிருந்து வரும் மாணவர்களுக்கும், ஏழை மாணவர்களுக்கும் உள்ள இடஒதுக்கீடு கடந்த இரண்டாண்டுகளாக நிரப்பப்பட்டுவருகின்றனவா என்ற கேள்விக்கான பதில் ஏமாற்றத்தையே அளிக்கும். 2009-ல் குழந்தைகளுக்கான கட்டாய இலவசக் கல்வி உரிமை வழங்கும் சட்டத்தை இயற்றியது தங்களது சாதனையென்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தைச் செய்திருந்தாலும், அதைக் காதில் வாங்குவோர் எவருமில்லை.
‘ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி எது?’ என்று பாவ்லோ ஃப்ரையிரே என்ற பிரேசில் நாட்டு அறிஞர் எழுதியுள்ள புத்தகத்தில் சம்பிரதாயமான கல்வியைப் பற்றி இவ்வாறு கூறியுள்ளார்:-
“கல்வி என்பது வங்கியில் பொருளைப் போட்டு வைப்பது போன்ற ஒரு வேலையாகிறது. தகவல்களைத் தெரிவிப்பவராக, பகிர்ந்துகொள்பவராக இல்லாமல் அதிகாரபூர்வ அறிவிப்புகளை/தகவல்களை வெளியிடு
பவராக ஆசிரியர் இருப்பதைக் காண்கிறோம். அதிகாரபூர்வ தகவல் பகுதிகளைச் சேமித்துப் போட்டு வைக்கப்படும் வங்கியாக மாணவர்கள் இருப்பதால் அதை அவர்கள் ஏற்றுப் பொறுமையாகத் திரும்பவும் சொல்லி, மனப்பாடம் செய்து வைத்துக்கொள்ள வேண்டியதாகிறது. அவர்கள் சேமிப்பாளர்களாகவோ, தாங்கள் உட்பதிவு செய்த விவரங்களின் பட்டியலாளர்களாகவோ இருப்பதே உண்மை… ஆனால், ஆய்ந்தறியும்போதோ மனிதர்களைச் சுயசிந்தனை அற்றவர்களாக, படைப்பாற்றல் அற்ற ஜந்துக்களாக இந்தத் தவறான கல்வி முறை ஆக்கிவிடுவதைக் காண்கிறோம்”
அப்படிப்பட்ட சம்பிரதாயக் கல்வி முறைகூட இந்தியாவில் பெரும்பான்மையான சாதியினருக்குப் பல நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்டே வந்துள்ளது. எல்லா அறிவும் வேதங்களில் உள்ளது என்று கூறிய மனுதர்மமும், அவ்வேதங்களைக் கற்கும் உரிமையை அனைவருக்கும் அளிக்கவில்லை. சாதிக் கட்டுமானத்தை மீறிக் கற்க முயன்ற ஏகலைவனுக்கும் சம்பூகனுக்கும் ஏற்பட்ட கதியை நாமறிவோம்.
காலனி ஆட்சி முறை வந்த பின்னர்தான் சம்பிரதாயக் கல்விக்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. ராணுவக் குடியிருப்புகளிலும், சுவிசேஷப் பிரச்சாரம் செய்ய வந்த கிறித்துவ குருமார்கள் பள்ளிகள் சிலவற்றை நிறுவிப் பாகுபாடின்றி அனைத்து சமுதாயத்தினரும் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தினர். அச்சிறிய நடவடிக்கையைகூடப் பாராட்டி, வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு அளிக்கும் தனது கவிதையில் பாரதி இவ்வாறு பதிவு செய்தார் :-
“மேற்றிசை இருளினை வெருட்டிய ஞான
ஒண்பெருங் கதிரின் ஓரிரு கிரணம் என்
பாலரின் மீது படுதலுற்றனவே.”
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கோபால கிருஷ்ண கோகலேதான் முதன்முறையாக 1909-ம் வருடம் இந்தியக் குழந்தைகள் அனைவருக்கும் பாகுபாடற்ற கட்டாய இலவசக் கல்வி வழங்கக்கோரிக் குரலெழுப்பினார். 1933-ல் மகாத்மா காந்தி வார்தாவில் கூட்டிய கல்வி மாநாட்டில் குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி வலியுறுத்தப்பட்டது.
சுதந்திர இந்தியா என்ன செய்தது?
வசதி படைத்த செல்வந்தர்கள் சிலரும் கிராமப்புறங்களில் சில நிலச்சுவான்தார்களும் ஆரம்பக் கல்விக் கூடங்களை கிராமங்களில் அமைத்தனர். ஆனால், அவர்களின் நோக்கமோ வேறு. கன்னட நாவலாசிரியர் நிரஞ்சனா 1955-ல் எழுதிய ‘சிரஸ்மரணா’ என்ற நாவல், தமிழில் ‘நினைவுகள் அழிவதில்லை’ என்று மொழிபெயர்க்கப்பட்டது. அந்நாவலில், கிராமத்தில் பள்ளி ஏற்படுத்திய நிலச்சுவான்தாரரைப் பற்றி மற்ற ஆதிக்கப் பிரிவினர் விமர்சனம் செய்தபோது, அவர் இவ்வாறு தன்னிலை விளக்கம் அளிக்கிறார்:-
“பள்ளிக்கூடம் ஏற்படுத்துவதில் நான்தான் காரணமாக இருந்த போதிலும், விவசாயிகளின் பிள்ளைகளுக்குக் கல்வி புகட்டும் விஷயத்தில் எனக்குத் தனியான கருத்து இருக்கிறது. இவர்கள் யாரும் கல்லூரிக்குப் போக வேண்டியதில்லை. விவசாயிகளின் பிள்ளைகள் கையெழுத்துப் போடக் கற்றுக்கொண்டால் போதும்.
இந்த அளவுக்குக் கல்வி எதற்கென்று தெரியுமா? வெறும் கைநாட்டு வைப்பவராக இருந்தால், ஒன்றும் தெரியாதவர்களை ஏமாற்றுவதாக இவர்கள் கூச்சல் போடுவார்கள். இனிமேல் அப்படியல்ல. ஒப்பந்தங்கள் செய்யும்போது எழுதிய அனைத்தையும் புரிந்துகொண்டதாகக் கூறி இவர்கள் எழுத்திலேயே கையொப்பமிடுவாரகள். என்ன சொல்றீங்க?” (பக்கம் : 85)
சுதந்திர இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தில் அனைவருக்கும் கட்டாய இலவச ஆரம்பக் கல்வி என்பது அடிப்படை உரிமையாக்கப்படவில்லை. பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் 2002-ம் ஆண்டு அரசமைப்புச் சட்ட 86-வது திருத்தத்தின்படி 21-A என்ற ஷரத்து நுழைக்கப்பட்டு, 14 வயது வரை குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி என்பது அடிப்படை உரிமையாக்கப்பட்டது.
அதற்குரிய சட்டமோ 2009-ம் வருடம்தான் இயற்றப்பட்டது. அச்சட்டத்தின்படி அனைத்து தனியார் சுயநிதிப் பள்ளிகளிலும் 25% சமூக, பொருளாதாரரீதியில் பிற்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்க வேண்டுமென்றும் அதற்குரிய கட்டணத் தொகையைச் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே வழங்க வேண்டுமென்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. 6 முதல் 14 வயதுக்குரிய குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களைத் தண்டிக்கவும் சட்டம் வழிவகுத்தது.
அச்சட்டத்தை எதிர்த்துத் தனியார் பள்ளிகள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மூன்று வருடங்களுக்குப் பின்னர் 12.4.2012-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. இலவசக் கல்வி சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமல்ல என்று தீர்ப்பளிக்கப்பட்டாலும், அச்சட்டம் அனைத்து உதவி பெறும் மற்றும் சுயநிதி சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.
தமிழகத்தில் சிறுபான்மையினர் நிர்வாகத்தில்தான் மிகப் பெரும் கல்விக்கூடங்கள் நடத்தப்படுகின்றன என்பதால், இச்சட்டம் பிறப்பிலேயே ஊனமுற்றுவிட்டது. 2012-13 முதல் அமலுக்கு வந்த அச்சட்டம், மழலையர் மற்றும் ஒன்றாம் பிரிவில் புதிதாகச் சேர்க்கப்படும் மாணவர் சேர்க்கைக்கு மட்டுமே பொருந்தும்.
சட்டத்தின் ஓட்டைகள்
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 65 வருடங்கள் கழித்துக் கட்டாய இலவசக் கல்விச் சட்டம் வந்த பின்னரும், அதில் பல குறைபாடுகள் உள்ளன. அக்கம்பக்கம் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிலுள்ள பள்ளிகளில் மாணவர்கள் சேரும் உரிமை வழங்கினாலும், அந்தச் சுற்றளவிலுள்ள எந்தப் பள்ளியில் சேர்க்க வேண்டுமென்பது தெளிவுபடுத்தப்படவில்லை.
மேலும், இடம் கிடைக்காத மாணவர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களிடம் முறையிட வேண்டுமென்று கூறினாலும், தமிழகம் போன்ற மாநிலங்களில் கல்விக்கூடங்களின் கட்டுப்பாடு கல்வித் துறையினரிடம் மட்டுமே உள்ளது. புதிதாக ஏற்படுத்தப்பட்ட அதிகார சுதந்திரத்தில் நகராட்சித் தந்தைகள் வேண்டியவர்களின் குழந்தைகளுக்குத் தரமான பள்ளிக்கூடங்களில் அனுமதி வழங்க சிபாரிசுக் கடிதங்கள் கொடுப்பதிலேயே தங்கள் கடமையைக் கழித்துவிடுகின்றனர்.
பள்ளிச் சேர்க்கையில் குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுகுறித்துப் பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி இவ்வாறு கருத்து தெரிவித்தார் :-
“நீதிபதி எழுப்பியுள்ள கேள்விகளுக்கெல்லாம் இந்தச் சட்டத்தில் சரியான விளக்கம் இல்லை. உதாரணமாக, பக்கத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் 25% இட ஒதுக்கீடு என்றால், எந்தப் பகுதியைப் பக்கத்தில் உள்ள பகுதி என்று நிர்ணயிப்பது? பெற்றோர் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க முற்படும்போது, தங்களுக்கு விருப்பப்பட்ட பள்ளிக் கூடத்தையும் தேர்ந்தெடுக்க முடியுமா? இது பற்றிய புகாரை, பெற்றோர் கொடுக்க வேண்டுமென்றால் யாரிடம் கொடுப்பது? இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை யார் கண்காணிப்பது?
பள்ளிக்கூடங்களே மாணவர்களைத் தேர்ந்தெடுக்க முடியுமா, அப்படியென்றால், அதற்கு எந்த முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்? ஒருவேளை, அந்தப் பள்ளிக் கூடத்தில் எல்.கே.ஜி. வகுப்பு இருந்தால், அதில் இந்த மாணவர்களைச் சேர்க்க முடியாதா? ஒரு பகுதியில் இரண்டு, மூன்று பள்ளிக்கூடங்கள் இருந்தால், அதில் எந்தப் பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் இலவசக் கல்வி பெற முடியும்? இலவசக் கல்வி மட்டும் என்றால், அவர்களுக்குச் சீருடை, கல்விச் சுற்றுலா உள்ளிட்ட மற்ற செலவுகள் வழங்கப்படுமா?
மத்திய அரசு இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நல்ல, முறையான விளக்கங்களை அளிக்க முன்வர வேண்டும். அப்போதுதான் மத்திய அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததன் நோக்கத்தின் பலன்களை அனைவரும் அடைய முடியும்.” (8.7.2012)
கல்வி அமைச்சர் கபில் சிபலும், பிரதமர் மன்மோகன் சிங்கும் இதற்கெல்லாம் பதில் சொல்லும் நிலைமையில் இல்லை. மத்தியில் புதிதாகப் பொறுப்பேற்கவிருக்கும் அரசு தான் இதுகுறித்துத் தீவிரமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
கட்டாய இலவசக் கல்வி என்பது அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அடிப்படை உரிமையாக்கப்பட்டிருப்பினும் இன்று தமிழகத் தில் 42% குழந்தைகள் கட்டணம் செலுத்தித் தனியார் பள்ளிகளில்தான் பயின்றுவருகின்றனர் எனும் செய்தி சட்டத்துக்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளியைப் படம்பிடித்துக்காட்டும். தற்போதைய சட்டத்தின் குறைபாடுகள் நீக்கப்படும்வரை தனியார் சுயநிதிப் பள்ளிகளில் ஏழைகளுக்கு இலவச ஒதுக்கீடு என்பது கானல்நீரே!
- சந்துரு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி,
சமூக விமர்சகர்.
நன்றி: தி தமிழ் இந்து
No comments:
Post a Comment