Tuesday, 13 May 2014

கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துக : தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயற்குழுவில் தீர்மானம்

வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் மே 10, 11 தேதிகளில் மதுரை மாவட்டம் மேலக்கோட்டையில் நடைபெற்றது. மாநிலத்தலைவர் பேரா.என்.மணி, பொதுச்செயலாளர் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன், மாநிலப் பொருளாளர் எல்.பிரபாகரன், மாநிலக் கல்வி ஒருங்கிணைப்பாளர் தே.சுந்தர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் அனைத்து மாவட்டச்செயலாளர்களும் மாநிலச் செயற்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கல்வி குறித்த பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தீர்மானம் 1 : கல்வி உரிமைச் சட்டம் 25% இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்துக...

குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட நிலையிலும் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள பல முக்கிய அம்சங்களை இதுவரை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை.

மழலையர் கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை அனைத்து குழந்தைகளுக்கும் அரசே தனது சொந்தப் பொறுப்பில், செலவில் அருகமைப் பொதுப்பள்ளி முறையில் வழங்க முன்வரவேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறது

அதுவரையில் தற்காலிக ஏற்பாடாக கல்வி உரிமைச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள 25% இடஒதுக்கீட்டை முழுமையாக அனைத்து தனியார் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்துவதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் 25% இட ஒதுக்கீட்டுக்கான கட்டணத்தை இலாபமீட்டக்கூடிய நிறுவனங்களாகச் செயல்படக்கூடிய தனியார் பள்ளிகள் தங்களுடைய சமூகப் பொறுப்பு என்ற அடிப்படையில் அவர்களே ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும் எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.

மேலும் உச்சநீதிமன்றம் கல்வி உரிமைச்சட்டம் சிறுபான்மை நிறுவனங்களுக்கு பொருந்தாது எனத் தீர்ப்பு வழங்கியிருப்பதை சிறுபான்மை இனத்தவரில் நலிவடைந்த பிரிவினருக்கு எதிரானதாகவே பார்க்கவேண்டியுள்ளது. எனவே மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மேல்முறையீடு செய்வது குறித்து மறுபரிசீலனை செய்யவேண்டும் எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 2 : அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் ஒரே கட்டணத்தை நிர்ணயித்திடுக..

தமிழகத்தில் சமச்சீர் கல்விக்கான முதல்படியாக பொதுப்பாடத்திட்ட முறை கடந்த 2009ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கிறது. அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டம் எனும்போது தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஒரே கட்டணம்தான் வசூலிக்கப்படவேண்டும். மாறாக மழலையர் கல்வி முதலாகவே கட்டணம் என்ற பெயரில் இலட்சக்கணக்கில் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுகின்ற அவலம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அரசு உடனடியாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் எனவும் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயித்திட வேண்டும் எனவும் 

பள்ளிகளுக்கிடையே வேறுபாடுகள் இல்லையெனும்போது பதின்மநிலைப் பள்ளிகள் (மெட்ரிக்குலேசன் பள்ளிகள்) என்று அழைக்கப்படவேண்டிய அவசியமில்லை. எனவே அனைத்துப் பள்ளிகளும் மழலையர், துவக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என்றே அழைக்கப்படவேண்டும். ஆதலால் அதற்கான அரசாணை பிறப்பிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 3 : அனைத்துக் குழந்தைகளுக்கும் முன்பருவக் கல்வியை உத்தரவாதப்படுத்துக...

பள்ளிக்கல்வி என்பது முன்பருவக் கல்வியோடு இரண்டறக் கலந்தது. இதுவரையிலும் முன்பருவக் கல்வியை அரசுப் பள்ளிகளில் துவங்காததன் விளைவாகவே தனியார் நர்சரி பள்ளிகளை நோக்கி தள்ளப்பட்டு தனியாருடைய இலாபவேட்டைக்கு மக்கள் இரையாகிறார்கள்..

எனவே தமிழக அரசு முன்பருவக் கல்வியை (LKG, UKG) வருகின்ற கல்வியாண்டில் அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் தொடங்கவேண்டும் எனவும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டத்தை கல்வித்துறையுடன் இணைத்து அனைத்து ஏழை எளிய மக்களின் குழந்தைகளுக்கும் முன்பருவக் கல்வி கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது. 

தீர்மானம் 4 : தாய்மொழிவழிக் கல்வியை உறுதிப்படுத்துக...

கர்நாடகா மாநிலத்திலுள்ள சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் குழந்தைகளின் பயிற்றுமொழியை அரசு தீர்மானிக்க முடியாது அல்லது தீர்மானிக்கும் உரிமையில் தலையிட முடியாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் தாய்மொழியே சிந்தனை மொழி ஆகவும் வீட்டு உபயோக மொழியாகவும் வட்டார மொழியாகவும் இருப்பதால் இதுவே உண்மையான கற்றல் நடைபெறவும் படைப்பாற்றலை வளர்க்கவும் மேம்படுத்தவும் ஏதுவான மொழியாக இருக்குமென்பது உலக அளவிலான கல்வியாளர்களின் கருத்தும் அனுபவமும் ஆகும். ஆனால் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அதற்கு முரணாக அமைந்திருப்பது மிகவும் வருந்தத் தக்கது. பள்ளிக்கல்வி தாய்மொழியில் இருப்பது குழந்தை உரிமை மீறலாகாது. மாறாக இயல்பான கற்றலுக்கு அதுவே வழிவகுக்கும்.

எனவே இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவும் திருத்தி எழுதவும் மத்திய மாநில அரசுகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். தாய்மொழிவழிக் கல்வியை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது..

தீர்மானம் 5 : கல்வி தனியார்மயமாவதைத் தடுத்திடவும் அரசுப்பள்ளிகளைப் பாதுகாத்திடவும் மாநிலந்தழுவிய அளவில் அறிவியல் இயக்கக் கலைப்பபயணம்...

தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்கவும் அவற்றின் தரத்தினை மேம்படுத்தவும் மாநிலம் தழுவிய கல்வி விழிப்புணர்வுக் கலைப்பயணம் ஒன்றை வரும் ஆகஸ்ட்-15 (சுதந்திர தினம்) முதல் செப்டம்பர்-5 (ஆசிரியர் தினம்) வரை நடத்துவதென தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு தீர்மானித்துள்ளது.

இந்தக் கலைப்பயணத்தின் வாயிலாக சமச்சீர் பாடத்திட்டம் என்பதைத் தாண்டி உண்மையான சமச்சீர் கல்வியாக அமல்படுத்துதுதல், செயல்வழிக்கற்றலை, கற்றலை மேம்படுத்தத் தக்கதாக மாற்றி அமைத்தல், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு உத்தியை பொருள் உள்ளதாக மாற்றுதல், PPP கல்வி நிலையங்கள் அமைக்கும் கொள்கையைத் திரும்பப் பெறக்கோருதல், தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்துதல், கல்வி வணிகமயமாவதைத் தடுத்தல், தாய்மொழிவழிக் கல்வியை அடிப்படையாகக் கொண்ட அருகாமைப்பள்ளி அம்சத்துடன் கூடிய பொதுப்பள்ளிகள் என்பது முற்றிலும் அரசு நிதியிலேயே சாத்தியமாகும். அதன் வழியே தரமான, சமமான கல்வி பெறும் உரிமை அனைவருக்கும் சாத்தியமாகும் என்பதை வலியுறுத்தும் விதமாக நாடகங்கள், பாடல்களை உள்ளடக்கியதாக இந்தக் கலைப்பயணம் அமையும். இந்தக் கலைப்பயணத்தை மேற்படி கோரிக்கைகளுக்கு ஆதரவான அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொண்டு நடத்துவது எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.

No comments:

Post a Comment