“உயிர் தமிழுக்கு - உடல் மண்ணுக்கு’’ என்று பேசப்பட்டது. “எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்’’ என்றும் முழக்கம் கேட்டது. அதெல்லாம் இப்போது இல்லை.
“தமிழ்ப் படிப்பதால், என்ன பயன்?’’- என்று தமிழனே கேட்கிறான். தமிழ் மொழியின் மீது ஒரு, நம்பிக்கை யின்மையை தமிழ் மக்களின் மனதில் ஆழமாக திட்டமிட்டு விதைத்து விட்டார்கள்.
கல்வி என்றால் என்ன? தாய் மொழி என்றால் என்ன? பயிற்று மொழி என்றால் என்ன?- என்பதைப் பற்றி தெளிவற்றவர்களாக தமிழர்கள் பலரும் இருக்கிறார்கள்.இதில் பல கற்றறிந்த கல்வி யாளர்களும், அரசு அலுவலர்களும், அரசியலாளர்களும் அடக்கம்.
குறிப்பாக பாடமொழிக்கும் பயிற்று மொழிக்கும் உள்ள வேறுபாட்டை பலர் புரிந்து கொள்வதில்லை. தமிழ் மொழியை ஒரு பாடமாக கல்வி அமைப்பில் வைத்திருப்பதையே, “கல்வியில் தமிழ் இருக்கிறது’’- எனக் கருதுபவர்கள் நிறைய இருக்கிறார்கள்.தமிழ் இலக்கியங்களையும் இலக்கணங் களையும் கொண்டது பாடமொழி. அறிவியல், பொருளியலை, சமூகவியலை தமிழ் மொழி மூலம் கற்பது பயிற்று மொழி.
கேரளாவில் சென்ற திங்கள் ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மலையாளத்தை பயிற்று மொழியாகக் கொண்டு படித்தவர்களுக்கு மட்டுமே அரசுத் துறையில் வேலை வாய்ப்பு என்பது அந்தச் சட்டம். முன்பு அரசாணையின் மூலம் கேரள அரசு இதனைக் கடைப் பிடித்து வந்தது. அந்த அரசாணையின் நோக்கத்தை வலிமை பெறச் செய்ய தற்போது சட்டமாகக் கொண்டு வந்திருக்கிறது. கருநாடகத்திலும், ஆந்திரத்திலும் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கணக்காயர் (அக்கவுண்டண்ட் ஜெனரல்) அலுவலகம் நடுவண் அரசைச் சார்ந்தது. இரண்டாண்டுக்கு முன் கணக்காயர் துறையில் அனைத்திந்திய அளவில் தேர்வு நடைபெற்றது. தேர்வு பெற்றவர் களில் பத்தொன்பது தமிழர்கள், பெங்களூர் கணக்காயர் அலுவலகத்தில் பணி அமர்த்தப்பட்டனர். கன்னட மொழி அறியாதவர்களைப் பணி நியமனம் செய்யக் கூடாது என்று தடை விதித்தது கருநாடக மாநில அரசு. தமிழர்களால் பணியில் சேர இயலவில்லை.
நடுவண் அரசு அலுவலகத்தில் மாநில அரசுக்கு என்ன உரிமை என வினவலாம். நடுவண் அரசு ஒரு கொள்கையை வகுத்திருக்கிறது. எந்த மாநிலம் அந்த மாநில மொழியை ஆட்சி மொழியாகவும் கட்டாயக் கல்வி மொழியாகவும் வைத்திருக்கிறதோ, அந்த மொழியிலும் நடுவண் அரசு அலுவலகங்களில் இயங்கும் என்பதுதான் அந்தக் கொள்கை.
கருநாடக அரசின் ஆட்சி மொழியும் கட்டாயக் கல்வி மொழியும் கன்னடம். ஆகவே அது அவர்களுக்குப் பொருந்தும். தமிழ்நாட்டில் தமிழ் விருப்பப் பாடம்தான். விரும்பினால் தமிழ் படிக்கலாம். விரும்பாவிட்டால் இந்தி, சமற்கிதம், பிரஞ்சு, செருமானியம் படிக்கலாம். மழலையர் பள்ளி முதல் உயர் கல்வி வரை தமிழைப் படிக்காமல் பட்டங்கள் பெறலாம். தமிழ் நாட்டில் கல்வியில், ஆங்கில மொழி கட்டாயம். எனவே கட்டாயமாகப் படித்தறிய வேண்டிய ஆங்கிலத்தை தமிழ் நாட்டிலுள்ள நடுவண் அரசின் நிறுவனங்கள் தங்களின் பயன் மொழியாகவும் ஏற்றுக் கொண்டுள்ளன. தமிழ் நாட்டில் தள்ளி வைக்கப்பட்ட மொழியாக ஏன், தமிழ் இருக்கிறது?அரசியல். ஆம் எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. மொழியிலும் அரசியல் இருக்கிறது.
தமிழ் மொழி வளர்ச்சி என்பது தமிழ்ச் சமூக வளர்ச்சி. தமிழ்ச் சமூகத்தை ஒதுக்கி வைக்க, ஓரங்கட்ட, இந்த மொழி அரசியல் தேவைப்படுகிறது. பல நூறு ஆண்டுகளாக, கல்வி மறுக்கப்பட்ட சமூகம், தமிழ்ச் சமூகம். கல்வி என்பதே வேதக் கல்விதான். பாடசாலை என்பதே வேதபாடசாலை தான். சிறுபான்மைக் கூட்டந்தான் வேதம் படித்தது. வேதம் ஓதியது. பெரும்பான்மை மக்களுக்கு வேதம் (கல்வி) மறுக்கப் பட்டது. வேதத்தை ஓதினால் நாக்கு அறுக்கப்படும்; கேட்டால் செவியில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றப்படும் என மனு(அ)நீதி கட்டளை இட்டது. 1700 ஆண்டுகள் பிற மொழியாளர்கள் தமிழ் நாட்டை ஆண்டார்கள். அடிமைப் பட்டிருந்ததற்கு அடிப்படைக் கரணியம், தமிழ் மக்களுக்கு கல்வி மறுக்கப் பட்டதுதான். ஆங்கிலேயர்கள் தமிழ் நாட்டை அடிமைப்படுத்தியபோது அவர்களிடம் பீரங்கிகள் இருந்தன. நம்மவர்களிடம் வில், வேல், வாள், ஈட்டிகள் மட்டுமே இருந்தன. இவைகளைக் கொண்டு அவர்கள் ஆங்கிலேயர்களை எதிர் கொள்ள இயலவில்லை.
பூலித் தேவனும், சின்னமருதுவும், கட்டபொம்மனும் ஆங்கிலேயரினும் வீரம் மிகுந்தவர்கள். ஆனால் அவர்களிடம் போர்க் கருவிகள் இல்லை. காலா காலமாய் கல்வி மறுக்கப்பட்டதால், உழைப்பாளி மக்கள் தங்கள் உற்பத்திக் கருவிகளில் முன்னேற்றம் காண இயலவில்லை. ஆடைகளைத் தூய்மைப்படுத்த நீராவியைப் பயன்படுத்தும் “வெள்ளாவி’’ - என்ற முறையை ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே அறிந்திருந்தவர்கள் தமிழர்கள். 16- ஆம் நூற்றாண்டில், நீராவியின் பயன்பாட்டை அறிந்து புதிய புதிய பொறிகளை உருவாக்கினார்கள் ஐரோப்பியர்கள். தொடர் வண்டியை இழுத்துச் செல்லும் பொறிகலனை (இன்ஜினை) உருவாக்கினார்கள்.
ஐரோப்பியாவில் நீராவி பெரிய தொழிற் புரட்சியைக் கொண்டு வந்தது. அங்கே எல்லோருக்கும் வேறுபாடின்றி கல்வி கிடைத்தது. உழைப்பும், கல்வி யறிவும் ஒன்றாக இணைந்ததால், புதிய கண்டுபிடிப்புகளுக்கு உரியவர்களாக அவர்கள் முன்னேறினர். தமிழ் நாட்டில் உழைப்பை மறுத்த- ஒரு சிறுபான்மைக் கூட்டத்தின் கையில் மட்டுமே கல்வி தேங்கிக் கிடந்தது. வெள்ளைக்காரன் வந்த பிறகுதான் பள்ளிகள் திறக்கப்பட்டன. வாய்ப்பு கிடைத்தவர்கள் படிக்கத் துவங்கினார்கள். 1950- களின் துவக்கத்தில், சென்னை மாகாண முதல்வராக வந்த சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். அரை நாள் பள்ளி; அரை நாள் அவரவர் சாதித் தொழில் கல்வி. தெளிவாகக் கூறினால் “அப்பன் தொழில்’’. இதுவே குலக்கல்வி. வேத மரபின் தொடர்ச்சி இக்கல்வி. 600 துவக்கப் பள்ளிகளை மூடினார். இவரின் இச்செயலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. முதல்வர் பதவியை இராசாசி இழந்தார்.
காமராசர் முதல்வர் ஆனார். ஊர்கள் தோறும் பள்ளிகள் திறக்கப் பட்டன. சிற்றூர்களில் கூட ஓராசிரியர் பள்ளிகள் துவக்கப்பட்டன. மதிய உணவு மாணவர்களுக்குக் கிடைத்தது.
இன்று தமிழ்ச் சமூகத்தின் பல பதவிகளிலும் ஏனைய துறைகளிலும், மேநிலையில் வாழ்பவர்கள் காமராசரின் கல்விக் கொடையால் வளர்ந்தவர்களே! கல்வியையும் தமிழர்களையும் இணைத்தவர் காமராசர்தான். பக்தவச்சலம் முதல்வர் ஆனார். இலால்பகதூர் சாத்திரி தலைமையிலான தில்லி அரசு, இந்தி மொழிப் பாடத்தை கல்வி நிலையங்களில் கட்டாயமாக்க வேண்டுமென, தமிழ் நாட்டரசுக்கு கட்டளை இட்டது. அவ்வாணையை பக்தவச்சத்தின் அரசு ஏற்றுக் கொண்டது. ஆங்கிலம், தமிழ், இந்தி என மும்மொழித் திட்டம் நடைமுறைக்கு வந்தது.
இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து மாணவர்கள் கிளர்ந்தெழுந்தார்கள். ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் தமிழ் நாட்டை உலுக்கி எடுத்தது. நாற்பத்தி ஒன்பது நாட்கள் இராணுவத்தின் பிடியில் தமிழ்நாடு இருந்தது. ஐநூறு மாணவர்கள் உயிரிழந்தனர். உலக அளவில் மொழிக்காக இந்த அளவு உயிரிழப்பு நேர்ந்ததில்லை. இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!- என்பதே மாணவர்களின் முழக்கமாக இருந்தது. மாணவர்களின் மொழிப் போராட்டத்தின் விளைவாகவே பேராயக் (காங்கிரசு) கட்சி 1967-இல் தோற்கடிக்கப்பட்டது. திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தது.
இராசாசியின் சுதந்திர கட்சியுடன் கூட்டணி வைத்து தி.மு.க. வென்றது. “இது இந்திக்கு எதிராக வந்த வெற்றி; இது தமிழுக்கு ஆதரவாகச் சென்றுவிடக் கூடாது; தடுத்து நிறுத்த வேண்டும்’’ - என்று முடிவெடுத்தார் இராசாசி. தமிழுக்கு மாற்றாக ஆங்கிலத்தை முன் வைத்தார் இராசாசி. “இந்தி எப்போதும் இல்லை; எப்போதும் ஆங்கிலம் தான்; (ழiனேi சூநஎநச; நுபேடiளா நஎநச)’’ என்ற அவரது முழக்கம் தி.மு.க. வினரை ஈர்த்தது. 1968-இல் இருமொழிக் கொள்கையை அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்தது. அக்கொள்கை:
பகுதி ஐ தாய்மொழி அல்லது தமிழ் அல்லது பிற இந்திய அயல் நாட்டு மொழிகளில் ஒன்று. - இது விருப்பப்பாடம். பகுதி ஐஐ ஆங்கிலம் - இது கட்டாயப் பாடம். இந்தி அகற்றப்பட்டது. ஆங்கிலம் கட்டாயமாக்கப்பட்டது. தமிழ் விருப்பப் பாடமாகிவிட்டது. விரும்பினால் தமிழ்ப் படிக்கலாம் அல்லது, தமிழை விட்டு விட்டு சமற்கிருதத்தையோ, இந்தியையோ, பிரஞ்சு மொழியையோ பயிலலாம்.
ஆங்கிலம் கட்டாயமொழியாகி, தமிழ்மொழி விரும்பினால் படிக்கலாம்; படிக்காமலும் போகலாம் என்ற இந்தக் கொள்கைதான் தமிழின் இன்றைய அவல நிலைக்கு அடித்தளமிட்டது. பாடமொழி என்ற அளவில் தமிழ் தன்னுரிமையை இழந்தாலும் பயிற்று மொழி தமிழாகவே இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியிலும் பேராயக் கட்சி ஆட்சியிலும் இருந்தது போலவே தமிழ், பயிற்று மொழியாக தி.மு.க- வின் தொடக்கக் கால ஆட்சியில் தொடர்ந்தது.
1976- ஆம் ஆண்டு வரை இந்திய உயர் தொழில் நுட்பக் கல்வி தவிர, மற்றெல்லாக் கல்வியும்- மழலையர் கல்வி தவிர, மற்றெல்லாக் கல்வியும்- மழலையர் முதல் பல்கலைப் படிப்பு வரையில்- முற்றிலுமாக மாநில அரசு விரும்பும் வகையில் “கல்விக் கொள்கை’’யை அமைத்துக் கொள்ள மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருந்தது. கல்வி என்பது மாநில அரசுப் பட்டியலில் இருந்தது.இந்திரா காந்தி 1976-இல் அவசர நிலை கொண்டு வந்தார். 3.1.1977 முதல் கல்வி என்பது பொது அதிகாரப் பட்டியலுக்கு கொண்டு சென்றுவிட்டார்.
நடுவண் அரசிற்கும் மாநில அரசிற்கும் கல்வி குறித்த திட்டமிடல் அதிகாரம் உண்டு (ஊரnஉரசசநவே டளைவ) என சட்டமியற்றினார். இதன் விளைவாக மாநில அரசின் “கல்வி’’ முற்றிரிமை தளர்வுற்றது.
அதிகாரத்தை பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றாலும், மழலையர் பள்ளி முதல் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டமுதலான உயர் கல்வி வரை தமிழ் மொழி வழியாக - பயிற்று மொழியாக- கற்பிக்க மாநில அரசுகள் சட்டமியற்றி செயல்படுத்த இயலும். இதை நடுவண் அரசு தடுக்க இயலாது. இந்த விதிகளைப் பின்பற்றி மற்ற மாநிலங்கள் தங்களின் மாநில மொழியை- தாய் மொழியை- பயிற்று மொழியாகக் கொண்டு இயங்கி வருகின்றன. ஆனால் தமிழ் நாட்டில் இந்த விதி, ஆங்கிலத்திற்கு ஆதரவாக செயல்படுத்தப்படுகிறது.
1977- ஆம் ஆண்டிற்குப் பிறகு கல்வியில் தனியார் துறை நுழைந்தது. கல்வி வணிக மயமாகியது. பணங் கொழிக்கும் செல்வத் தொழிற்சாலையாக பள்ளிகளும் கல்லூரிகளும் மாறிப் போயின. ஆயிரம் ஆண்டுகளாக தங்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி, தங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும். அக்கல்வி, உயர்நிலைக் கல்வியாக இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகின்றனர். அவர்களின் விருப்பதை ஈடேற்ற பள்ளிகள், கல்லூரிகளின் எண்ணிக்கையை உயர்த்த அரசுகள் நடவடிக்கை மேற் கொண்டிருக்க வேண்டும். அதைச் செய்ய தனியார்கள் முன் வந்தார்கள். தங்கள் விருப்பம்போல் கல்வி முறையை மாற்றி அமைத்துக் கொண்டனர்.
தமிழ் நாட்டில் 12,536 தனியார் பள்ளிகளும், 500-க்கும் மேற்பட்ட தன்னிதித் தனியார் கல்லூரிகளும் இருக்கின்றன. இவைகளில் ஆங்கிலம், சமற்கிருதம், இந்தி, பிரஞ்சு, செருமானியம் முதலான மொழிகள் பாடமொழிகளாகவும், பயிற்று மொழியாக ஆங்கில மொழியும் இருக்கின்றன. அரசுக் கல்லூரிகளில் எவற்றிலும் தமிழ்ப் பயிற்று மொழியாக இல்லை. பள்ளிகளில் தமிழ்ப் பயிற்று மொழியாக இருந்தது. அதுவும் தற்போது மாற்றம்பெற்று வருகிறது. பள்ளிகளில் தனியார் பள்ளிகள் போல, ஆங்கில மொழியைப் பயிற்று மொழியாக, அரசு ஆதரவு அளித்து வருகிறது. பல அரசுப் பள்ளிகள் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டு விட்டன.மாற்றத்தை ஏற்றுக் கொண்டு விட்டன.
இந்தச் சூழல் எப்படி வந்தது? இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட “தமிழ்ப் படிப்பதால் என்ன பயன்?’’ என்று தமிழர்கள் கேட்பது அரசின் செவிகளுக்குச் சென்று விட்டது.
தங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் தான், வாழ்க்கையில் வெற்றியை ஈட்டித் தரும் என்ற கருத்து பெற்றோர்களின் உள்ளத்தில் ஆழமாக பதிந்திருக்கும் உண்மையை மறக்கக் கூடாது. இந்த கருத்தை விதைத்த சக்திகள் எவை?
இந்த மொழியழிப்புச் சக்திகளை எதிர்கொள்ள நாம் மக்களைச் சந்திக்க வேண்டும். அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மக்கள் தமிழ் மொழிமீது கொண்டிருக்கும் நம்பிக்கையின்மையை தகர்க்க வேண்டும். பாட மொழி, பயிற்று மொழி குறித்த தெளிவை உருவாக்க வேண்டும். இந்த மண்ணில் விளைந்த மொழி, தமிழ். இந்த மொழிதான் இயற்கையான மொழி. உலக அறிஞர்கள் இப்படித்தான் கூறுகிறார்கள். மக்கள் பேசும் தாய் மொழி தவிர வேறு எந்த மொழியிலும் சிந்திக்க இயலாது. ஆயிரம் மொழிகள் அறிந்திருந்தாலும் சிந்திக்கும் செயல் தாய் மொழியில்தான் நிகழும்.
மொழி அறிவு வேறு. சிந்தனை அறிவு வேறு. பொறியியலை ஆங்கில மொழியில் பயில்கிறார்கள். இவர்கள் பொறியியலின் செயல்பாடு குறித்த தகவல்களை அறிந்து கொள்கிறார்கள். ஆனால் இயல்பான சிந்தனை மொழியாக அது இல்லாததால் ஆய்வுகளை அவர்கள் நிகழ்த்த இயலவில்லை. புதிய கண்டு பிடிப்புகளை கொண்டு வர முடியவில்லை. இதுதான் உண்மை.
உலகின் முதல் நூறு கண்டு பிடிப்புகளில் எழுபது கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. வரலாற்றில் பெரும் அறிவியலாளராக ஏற்கப்பட்ட ஐன்°டீன் ஆங்கிலக் கல்வியில் தோல்வியுற்றார். அறிஞர் அண்ணா பத்தாம் வகுப்பில் ஆங்கிலத் தேர்வில் தேர்வு பெற இயலவில்லை. பெருமையாகப் பேசப்படும் பரிசு நோபள் பரிசு. இந்த பரிசு பெற்றவர்களில் எழுபத்தி ஐந்து விழுக்காட்டினர் அவர்களின் படைப்புகளை ஆங்கிலத்தில் எழுதவில்லை. இரவீந்தரநாத் தாகூர் நோபள் பரிசுப் பெற்றார். அவருடைய தாய் மொழி வங்காளம். வங்காள மொழியில்நோபள் பரிசு பெற்றார்.
உலகைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட புரட்சி மெய்யியலை (தத்துவத்தை)த் தந்தவர் கார்ல் மார்க்சு புகழ் பெற்ற “மூலதனம்’’ என்ற நூலை, தன் தாய் மொழியான செருமானிய மொழியில்தான் எழுதினார். காந்தியடிகள் தனது வரலாற்றை (சத்திய சோதனை) தன் தாய் மொழியான குசராத் மொழியில்தான் எழுதினார். இங்கிலாந்தில் படித்துப் பட்டம் பெற்ற அவர் ஆங்கிலம் அறியாதவரா? ஆங்கிலத்தில் எழுத இயலாதவரா? உளமாற ஒரு செய்தியைச் சொல்லச் சரியான அறிவுத்தொடர்பு, தாய் மொழி வழியேதான் முடியும் என்று அவர்கள் எல்லாம் கருதினார்கள். தமிழ் மொழிக்கு இன்று ஏற்பட்டிருக்கும் அவல நிலை ஆங்கிலத்திற்கும் ஏற்பட்டதுதான். பதினாறாம் நூற்றாண்டின் இறுதிக் காலம் வரை இங்கிலாந்தில், பிரஞ்சு அரசியல் மொழி, இலத்தீன் சமயமொழி, கிரேக்கம், உரோமானியம் இலக்கிய மொழி.
விழிப்படைந்த ஆங்கிலேயர்கள் கிளர்ச்சி செய்து ஆண்ட மன்னனை அச்சுறுத்தி தங்கள் மொழியை முதன்மையான இடத்திற்கு கொண்டு வந்தனர்.
ஆங்கிலம் தமிழ் மொழி போல தொன்மை மொழி அல்ல. எனவே அதில் அறிவியல் சொற்கள், கலைச் சொற்கள் இல்லை. ஏனைய மொழிச்சொற்களை இணைத்துக் கொண்டு எங்கும் ஆங்கிலம்; எதிலும் ஆங்கிலம் என்று நடைமுறைப் படுத்தினர். தமிழுக்கு அந்தச் சிக்கல் இல்லை. புதிய கண்டுபிடிப்புகள் அனைத்திற்கும் நம்மிடம் சொற்கள் இருக்கின்றன. அறிவியல் சொல்லாக்கத்தில் ஆங்கிலத்தை மிஞ்சும் பொருள் பொதிந்தச் சொற்கள் தமிழில் உள்ளன. சான்றாக கணணிப் பொறியில் ஒரு சிறு பகுதி “மவு°’’ என்றழைக்கப் படுகிறது. சுண்டெலி போலத் தோற்றம் இருப்பதால் அதை “மவு°’’ என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள். அதைத் தமிழில் “சுட்டி’’ எனக் கூறுகிறோம். சுட்டுவதால் அது “சுட்டி’’.
தோற்றத்தை வைத்து ஆங்கிலம் பேசுகிறது செயல்பாட்டை வைத்து தமிழ் “சுட்டி’’ என்கிறது. தமிழால் முடியாதது என்று எதுவுமில்லை. ஆங்கிலம் அறிந்தால்தான் வாழ முடியும் என்பது ஒரு புனைவு. மிகவும் வளர்ச்சியடைந்த சீனம், சப்பான், உருசியா, பிரான்சு, செருமனி போன்ற பல நாடுகளில் ஆங்கிலம் இல்லை. இந்த நாடுகளின் தலைவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆங்கிலேயர்கள் ஆண்ட நாடுகளில் தான் ஆங்கிலம் புழங்குகிறது. வட அமெரிக்க, ஆத்திரேலியா, கனடா போன்ற ஆங்கிலேயர்கள் குடியேறிய நாடுகளில் ஆங்கிலம் இருக்கிறது. இந்த நூற்றாண்டில், தகவல் தொடர்பில், கணணி ஒரு சிறப்பானப் பங்கையாற்றுகிறது. எல்லையற்ற அதன் அறிவுப் பாய்ச்சலுக்கு சப்பான் நாடு ஈடு கொடுக்கிறது. எந்த அறிவியல் புதிய கண்டு பிடிப்புகளையும் சப்பான் மொழிக்கு மொழி மாற்றம் செய்ய இரண்டாயிரம் மொழி பெயர்ப்பாளர்களை அது பணியமர்த்தி யிருக்கிறது. அவர்கள் விரைந்து செயல் படுகிறார்கள்.
அவைகள் சப்பானிய மொழியில் வந்து அனைவருக்கும் சென்று சேர்ந்து விடுகிறது. (தமிழுக்கும் மொழி பெயர்ப்பாளர்கள் இருக்கிறார்கள்). இதற்காக சப்பானில் உள்ள மக்களை யெல்லாம் ஆங்கிலம் கற்க கட்டாயப் படுத்துவதில்லை. ஆங்கிலம் தீராத சுமை என்பதை அறிவார்ந்த சப்பானியர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். தமிழ் நாட்டு அரசியலாளர்களுக்கும், இவை யெல்லாம் தெரிந்ததுதான். ஆங்கிலத்திற்கு அடுத்த நிலையில், தமிழ் மொழியில்தான் இணையதளங்கள், மின்னஞ்சல் முகவரிகள் இயங்குகின்றன என்ற செய்தி எத்துணை பேருக்குத் தெரியும்? “குறுஞ்செய்தி’’ (எ°. எம். எ°)யைக் கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் என்பதை எத்தனை பேர் அறிவார்கள்? ஆங்கிலக் கல்வி அந்நியப்படுத்தும் கல்வி. மண்ணிடமிருந்து வாழும் மக்களிடமிருந்தும் அந்நியப்படுத்தும் கல்வி.
தமிழ் மொழி, பயிற்று மொழி என்பதால் ஆங்கில மொழியே வேண்டாம் என்பதல்ல. ஆங்கிலத்தை சிறப்பாக அறிந்து கொள்ளவும் பேசவும் எழுதவும் அறிந்திருப்பது நல்லதுதான். அது ஒரு பாட மொழியாக மொழிக் கல்வியாக இருக்கலாம். ஆனால் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருப்பது அறிவுத் திறனுக்கு எதிரானது. இயல்பு நிலைக்கு முரணானது. நவ இந்தியா- என்ற ஏட்டில் 5.7.1928 அன்று காந்தியடிகள் எழுதிய கட்டுரையில் ஒரு பகுதி: “எனக்குமட்டும் ஒரு சர்வாதிகாரியின் அதிகாரம் இருக்குமானால், நமது சிறுவர், சிறுமியருக்கு அந்நிய மொழியில் பாடம் கற்பிப்பதை உடனடியாக நிறுத்திவிடும்படி உத்தர விடுவேன். இக்கட்டளைக்கு மறுப்பு தெரிவிக்கும் ஆசிரியர்களை வேலையில் இருந்து நீக்கிவிடுவேன். பாட புத்தகங்கள் வெளிவரும் வரை காத்திருக்க மாட்டேன். பயிற்சி மொழி மாறினால், பாடப்புத்தகங்கள் தாமாகவே வெளிவரும். முற்றிய நோய்க்கு அதிர்ச்சி வைத்தியம் தேவை’’.நம்பிக்கைக் கொள்ளுங்கள். தமிழால் முடியும்!
திசம்பர் 2013 “இப்படிக்கு” இதழில்...
No comments:
Post a Comment