சென்ற இதழில் வெளிவந்த பேட்டியின் இரண்டாவது மற்றும் இறுதி பகுதி.
ச. தமிழ்ச்செல்வன் தொடர்கிறார்…
சென்ற இதழில் பேட்டியின் முடிப்பு வாசகமாக நீங்கள் குறிப்பிட்டிருந்த விஷயங்களைக் கடுமையாக மறுக்கிறேன். பீ வாளி எதிர்புப் போராட்டத்தை தலித் அமைப்புகளும் கம்யூனிஸ்ட்டுகளும்தான் நடத்தினார்கள், நடத்துகிறார்கள். சஃபாய் கரம்சாரி அந்தோலன், ஆதித்தமிழர் பேரவை, அருந்தமிழர் இயக்கம், சிபிஎம்தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்புகள்தான் மலம் அள்ளும் தொழில், சாக்கடை அள்ளும் தொழில்செருப்புத் தைக்கும் தொழில்களில் ஈடுபடும் தொழிலாளிகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார்கள். 3% உள் ஒதுக்கீடும் பெறப்பட்டுள்ளது. கையால் மலம் அள்ளுவதை மேற்குவங்க இடது முன்னணி ஆட்சியில் முற்றிலுமாக தடை செய்து அத்தொழிலாளிகளுக்கு மாற்றுப்பணிகள் வழங்கப்பட்டன. வர்ணாஸ்ரம மநுவாதிகள் மக்கள் வாழ்க்கையில் மண்ணள்ளிப் போட்டதைத் தவிர வேறு ஒன்றும் செய்ததில்லை.
வர்ணாஸ்ரமத்தைப் பற்றி விரிவாகப் பேச இந்தப் பேட்டி போதுமானதல்ல. மேலும் பீ வாளி எதிர்ப்புப் போராட்டம் என்பதற்குப் பதிலாக சிந்துசரஸ்வதி சமவெளியில் இருந்ததுபோல் மலக் கழிவுகளை ஒவ்வொரு வீட்டிலிருந்தும் கால்வாய் வெட்டி ஓரிடத்தில் சேரும்படி ஏற்பாடு செய்திருக்கலாம். மனித மலத்தை மனிதனே அள்ளும் நிலை மாற ஃபிளஷ் அவுட் டாய்லெட்டை அறிமுகப்படுத்திய முதலாளிகள் அளவுக்கு போராளிகள் எதுவும் செய்துவிடவில்லை. இருட்டைப் பழிப்பதைவிட ஒற்றை அகல் விளக்கை ஏற்றுவது நல்லதல்லவா? உதாரணத்துக்கு, குஜராத்தில் சமீபத்தில் கடைநிலைப்பணிகள் செய்யும் பிரிவினர் உயர் சாதி இந்துக்களின் திருமணங்களை முன்னின்று நடத்த வழி செய்யும்வகையில் மோடி அரசு ஒரு சட்டம் கொண்டுவந்திருக்கிறது. சுலப் இண்டர்நேஷனல் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதுபோல் கம்யூனிஸ்ட் இயக்கம் எதையெல்லாம் முன்னெடுத்திருக்கிறது?
இந்தப் பேட்டி வர்ணாஸ்ரமம் பற்றியதல்ல என்பதை ஏற்கிறேன். அதற்காக சிந்து சமவெளிக்கு இடையில் சரஸ்வதியைச் சொருகுவதை ஏற்க முடியாது. சுலப் இண்டர்நேஷனல் கழிப்பறைகளுக்கு நானும் போயிருக்கிறேன். தமிழகத்திலும் பல கோயில்களில் அவை இயங்குகின்றன. அக்கழிப்பறைகளை தேவர்களும் சைவப்பிள்ளைமார்களும் பிராமணர்களும் சுத்தம் செய்து நான் பார்க்கவில்லை. பிறகென்ன புதுமை அதில் இருக்கிறது? குஜராத்தில் தலித்துகளின் நிலை என்பது பற்றி வண்டி வண்டியாக தொலைக்காட்சி சேனல்களின் விவாதங்களிலேயே கொட்டுகிறது. அவற்றையும் பாருங்கள்.
லீலாவதி கொலை செய்யப்பட்டது எதற்காக? குடிதண்ணீர் என்கிற சமூக நலப்பிரச்னையில் தலையிட்டதால் தானே? திருவாரூர் நாவலன் படுகொலை எதனால்? சாராய சாம்ராஜ்ஜியத்தைத் தட்டிக்கேட்டதால்தானே? பள்ளிப்பாளையம் வேலுச்சாமி கொல்லப்பட்டது எதனால்? கந்துவட்டிக்கும்பலைத் தட்டிக்கேட்டதால்தானே?
சுனாமியின்போது தன்னெழுச்சியாக கடற்கரையை நோக்கி ஓடியதும் மக்களைக் காத்ததும் கம்யூனிஸ்ட் இளைஞர்கள்தான். ‘அலைகொண்டபோது’ என்கிற புத்தகத்தில் நாகை, கடலூர், குமரி மாவட்டங்களில் அவர்கள் ஆற்றிய நலப்பணிகள் பற்றி விரிவாகப் பதிவு செய்துள்ளேன். குளச்சலில் நூற்றுக்கணக்கான பிணங்களை கம்யூனிஸ்ட் தோழர்கள் அகற்றி அடக்கம் செய்ததையும் மக்களுக்கு நிவாரணம் வழங்கியதையும் நேரில் பார்த்தவன் நான். சில தினங்கள் கழித்து அங்கு வந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களையும் பார்த்தேன். அவர்கள் வேனை விட்டு இறங்கி ஓடோடிச்சென்று மக்களைக் காக்கவில்லை. முதலில் வேட்டி சட்டைகளைக் கழற்றி வைத்துவிட்டு காக்கி டவுசர் அணிந்து கையில் ஆர். எஸ். எஸ்.பட்டி அணிந்து நிதானமாகத் தயாராகி அப்புறம்தான் களத்தில் இறங்கினார்கள். ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் தம்மை யாரென்று அடையாளப்படுத்திக் கொள்வதில் அக்கறை காட்டாமல் ஆபத்தை உணர்ந்து உடனே களத்தில் குதித்தார்கள்.
நரேந்திர மோடி பற்றி தயவுசெய்து பேச வேண்டாம். அந்தப் பேரைக் கேட்டாலே ஒரு நடுக்கம் எனக்குள் வந்து விடுகிறது. அவர் இந்துத்துவாவாதி நான் ஒரு மார்க்சிஸ்ட் ஊழியன் என்பதையெல்லாம் தாண்டிய ஒரு தனிப்பட்ட உளவியலாக இது இருக்கிறது. குஜராத்தில் நடந்த பச்சைப்படுகொலைகளை தொலைக்காட்சியில் அன்று பார்த்த இரவு முதல் எனக்குள் இப்படி ஓர் அச்ச உணர்வு ஏற்பட்டுவிட்டது. அவர் எத்தனை சாந்த சொரூபமான நடவடிக்கைகளில் இனி ஈடுபட்டாலும் கடவுளின் அவதாரமாகவே ஆக்கப்பட்டாலும் . . . அய்யோ வேண்டாம். அந்தப் பேச்சே வேண்டாம். டிவியில் அவர் முகம் தெரிந்தாலே சேனல் மாற்றிவிடுகிறேன். வெறுப்பல்ல காரணம். அச்சம். அச்சம். அச்சம்.
குஜராத் நிகழ்வுகளைக்கண்டு இந்த அளவுக்கு பயப்படும் நீங்கள் உலகெங்குமான கம்யூனிஸ அரசுகள் செய்த செயல்களைக் கண்டு அச்சப்படாதது ஏன்? இந்த செலக்டிவ் அம்னீஷியாதான் பெரும்பாலான பிரச்னைகளுக்குக் காரணம் என்று கருதுகிறேன். காந்தி பக்கம் அல்லவா நீங்கள் நகர்ந்திருக்க வேண்டும்?
நரேந்திர மோடியை ஒரு சமூக சீர்திருத்தவாதிபோல நீங்கள் சித்திரித்ததால்தான் அவர் பற்றிய என் உளப்பதிவைச் சொல்ல நேர்ந்தது. செலக்டிவ் அம்னீஷியா (ஒருகாலத்தில் காந்தியவாதியாக இருந்ததால்) எனக்கு வந்ததே காந்தியிடம் பாடம் கற்றதால்தான். பகத்சிங், சுகதேவ், ராஜகுரு தூக்கு, இந்தியாவுக்கு உண்மையிலேயே விடுதலை வாங்கித்தந்த ஏகாதிபத்தியத்துக்கு இறுதி மரண அடி கொடுத்த 1946 கப்பற்படை எழுச்சியையும் அதில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான ஏழை எளிய உழைப்பாளி மக்களையும் பற்றிய காந்திஜியின் செலக்டிவ் அம்னீஷியா பற்றி வரலாற்றில் வாசித்துப்பாருங்கள்.
என் கண்முன்னால் நடக்கும் படுகொலைகளைக் கண்டு நான் நடுங்குவதற்கும் நான் பிறப்பதற்கு முன்னால் 40களில் ஸ்டாலின் காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் கொடுமைகளுக்கும் தூரத்து தேசங்களில் நடக்கும் கொடுமைகளுக்கு நான் நடுங்குவதற்கும் நிச்சயம் வேறுபாடு இருக்கத்தான் செய்யும்.
எந்தவொரு முதலாளித்துவ கம்பெனியைப் போய்க் கேட்டால்கூட அவர்களும் நீங்கள் சொல்வதுபோல் வேறு சில சமூக நலப்பணிகளைப் பட்டியலிடத்தான் செய்வார்கள். நான் கேட்க விரும்பியது அது அல்ல. பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கு எதிராகப் போராடும் அதே வேளையில் சித்த, ஆயுர்வேத பாரம்பரிய மருத்துவமுறைகளை ஊக்குவிக்கும் பணியை முன்னெடுக்கலாம் அல்லவா? கந்துவட்டி கும்பலை எதிர்ப்பதோடு ஏழைகள் பயன்பெறும்படி முறை சாரா வங்கிகள் ஏற்படுத்தலாமே?
முதலாளி கம்பெனி செய்யும் ‘சமூக நல’ நடவடிக்கைகளையும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் தோழர்களை உயிர்ப்பலி கொடுத்துச் செய்யும் சமூக நடவடிக்கைகளையும் அவசரமாக சமப்படுத்தி இடதுசாரிகளை அவமானப்படுத்துகிறீர்கள். தோழர் நல்லகண்ணு தொடுத்த வழக்காலும் ஸ்ரீவைகுண்டம் மார்க்சிஸ்ட் அலுவலகம் இடிக்கப்படும் அளவுக்குத் தோழர்கள் போராடியதாலும் தாமிரபரணியில் மணல்கொள்ளை 5 வருடத்துக்காவது நிறுத்தப்பட்டுள்ளதே இதுபோல எந்த முதலாளி ‘சமூகப்பணி’ஆற்றியிருக்கிறார். வருமான வரி கணக்குக்காக முதலாளிகள் செய்யும் நல உதவிகளை மார்க்சிஸ்ட்டுகள் பணியோடு ஒப்பிடுவது ஆபத்தானது.நாம் வங்கி துவக்குவதை விட இருக்கும் அரசு வங்கிகளை உண்மையிலேயே மக்களுக்கானவையாக மாற்றுவதுதான் சரியான பார்வை.
கம்யூனிஸ்ட்டுகளை என். ஜி. ஓ. நடவடிக்கைகளில் ஈடுபடச்சொல்லும் உங்கள் ஆலோசனை புதியதல்ல. அகல்விளக்கு நடவடிக்கையான பூதான இயக்கத்தால் நிலமற்ற விவசாயக்கூலிகளின் அனுபவபாத்தியதைக்கு வந்த நிலத்தின் அளவைவிட கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டங்களால் அம்மக்கள் பெற்ற நிலங்களே பன்மடங்கு அதிகம். கம்யூனிஸ்ட்டுகளும் என்.ஜி.ஓ. நடவடிக்கைகளுக்குப் போய்விட்டால் அப்புறம் அடிப்படை மாற்றங்களுக்காக யார்தான் போராடுவது.அகல்விளக்கு நடவடிக்கைகளிலும் கம்யூனிஸ்ட்டுகள் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். எண்ணற்ற கம்யூனிஸ்ட் மக்கள் மருத்துவர்கள் தமிழகத்திலேயே இருக்கிறார்கள். தொழில்முனைவோரும் இருக்கிறார்கள். வீட்டுமனைப் பட்டாவுக்கான போராட்டம் மார்க்சிஸ்ட்டுகள் தலைமையில் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. பட்டாக்களை மக்கள் பெற்றுக்கொண்டும் இருக்கிறார்கள். தினசரி செய்திகளை நீங்கள் வாசிப்பதில்லையா அல்லது கம்யூனிஸ்ட் செய்திகளுக்கு மட்டும் செலக்டிவ் அம்னீசியாவா?
கம்யூனிஸ கோட்பாட்டின்படி கல்வியின் நோக்கம் என்ன?
கம்யூனிசம் வெறும் கோட்பாடல்ல. அது இயங்கும் அறிவியல். புரட்சி என்பதே சமூக வெளியில் நடக்கும் ஒரு கல்வி இயக்கம் என்பதுதான் கம்யூனிஸ்ட்டுகளின் புரிதல். பாவ்லோ பிரையர் சொன்னதுபோல விமர்சன விழிப்புணர்வை மக்களுக்குத் தருவது கல்வியின் நோக்கம். வர்க்க உணர்வு என்பது தொழிலாளி வர்க்கத்துக்கு பிறப்பால் வருவதல்ல, ஊட்டப்படுவது. ‘வர்க்க உணர்வூட்டுவது’ என்றால் என்ன? அது நூறு சதம் ஒரு கல்வி நடவடிக்கைதான்.
உண்மையில் இன்றைய கல்வியானது ஒடுக்கப்பட்டவர்களின் உள்ளார்ந்த விருப்பங்களுக்கும் ஆதிக்க வர்க்கத்தின் தேவைகளுக்கும் இடையில் நடக்கும் பேச்சுவார்த்தையே. இதில் ஆதிக்க வர்க்கம் அதிக லாபம் அடைவது உண்மைதான். ஆனாலும் கூட்டாகப் போராடுவதன் மூலம் இந்த உறவு நிலையில் மாற்றம் கொண்டுவர முடியும். இந்தப் ‘பேச்சு வார்த்தை’ இங்கிலாந்தின் முதல் தொழிலாளர் போராட்டம் நடந்த சாசன இயக்க காலத்தில்(1838 &1848) தொடங்கியது. சாசன இயக்கத்தில் தொழிலாளர் வைத்த கோரிக்கைகளில் ஒன்றுதான் அனைவருக்கும் கல்வி என்பது. 1848இல் வெளியிடப்பட்ட மார்க்ஸ்ஏங்கல்ஸ்ஸின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் இறுதி அத்தியாயத்தில் முன் வைத்த கோரிக்கை முழக்கங்களில் ஒன்று அனைவருக்கும் பொதுவான ஒரு பொதுக்கல்வி முறை என்பதாகும்.
உங்கள் பார்வையில் உலகில் மிகவும் சிறந்து விளங்கும் கல்வி முறை எந்த நாட்டில் இருக்கிறது? அதன் சிறப்பு அம்சங்கள் என்ன?
அப்படி ஒரு நாட்டை மட்டும் குறிப்பாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. மனித குலத்தின் மீது அக்கறை உள்ள ஒரு மாணவர் சமூகத்தை உருவாக்கும் விதத்தில் க்யூபக் கல்விமுறை அமைந்துள்ளதாக அறிகிறேன். ஒருமுறை ஆசிரியர் அல்லது டாக்டர் பட்டம் பெற்று சான்றிதழ் பெற்றுவிட்டால் போதும். அப்புறம் ரிடையர் ஆகிறவரை எதையும் படிக்கத் தேவையில்லை என்கிற இந்திய நிலைக்கு மாறாக க்யூபாவில் எந்தப்பட்டமும் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும். மீண்டும் அவர்கள் தேர்வு எழுதித் தம் தகுதியை உறுதிப்படுத்தவேண்டும். அரசாங்கச்செலவில் உயர்கல்வி வரை படித்துவிட்டு அப்புறம் அப்படியே அமெரிக்கா போய் செட்டில் ஆகிற நம் ஊர் வழக்கம் அங்கு இல்லை. அப்படி வெளிநாடு போகிறவர் அவருக்காக நாடு செலவழித்த முழுப்பணத்தையும் அரசுக்குக் கட்டிவிட்டுத்தான் வெளியே காலெடுத்து வைக்க முடியும்.
அமெரிக்காவில் ஜான் ஹோல்ட் ஆரம்பித்த பள்ளிக்கூடம் இல்லாக் கல்விமுறை அங்கு அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் உயர் கல்வி ஆய்வுமுறை மிகச்சிறப்பாக இருக்கிறது. இந்தியாவில் இருப்பதுபோன்ற காசுக்குத் தகுந்த கல்வி அங்கு இல்லை.
சோவியத் யூனியனில் ஆண்டன் செமினோவிச் மகரங்க்கோவின் கல்விச் சிந்தனையின் அடிப்படையில் அங்கு கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் முக்கியமானவை. பள்ளிக்கூடம் மட்டும் கல்விச்சாலை அல்ல என்றார் அவர். பள்ளிக்கூடம், குடும்பம், ஊர்களில் இயங்கும் பல்வேறு சிறு குழுக்கள், உழைப்புத்தளங்கள், குழந்தைகள் வளரும் பிரதேசங்களில் உள்ள சமூக அமைப்புகள் போன்ற எல்லாக் கல்விச்சாலைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டுக் குழந்தைகளுக்குக் கல்வி தர வேண்டும் என்றார். என்ன அற்புதமான கனவு!
ஜப்பானின் டோட்டொ சான் நாம் எல்லோரும் அறிந்த பள்ளி. இப்படி ஒவ்வொரு நாட்டுக் கல்வி அனுபவத்திலிருந்தும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதைத் தேட வேண்டும். இந்தியாவில் கவி தாகூர் முயற்சியால் உருவான சாந்திநிகேதனிலும் ஜே. கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் ரிஷிவேலியில் நடத்தும் பள்ளியிலும் உருவாக்கப்பட்டுள்ள கல்விமுறைமையிலிருந்தும் ஏற்க வேண்டியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பக்கம் சமச்சீர்கல்விக்கும் இன்னொருபுறம் ஆங்கில வழிக் கல்விக்கும் அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. தமிழகக் கல்வியின் இன்றைய நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இன்று தெளிவாக தமிழகக் கல்வி நிலை இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது. வசதியானவர்களுக்கு தனியார் பள்ளி. வசதியற்ற குழந்தைகளுக்கு அரசுப்பள்ளி. தனியார் பள்ளி என்றால் தரமான கல்வி என்கிற தப்பெண்ணம் வலுவாக பெற்றோர் மனதில் ஏற்றப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் அரசுப்பள்ளிகளின் இழிநிலைதான். வேலை வாய்ப்பை அரசு உருவாக்காமல் எல்லாவறையும் தனியாருக்குத் திறந்து விட்ட பொருளாதாரப்பின்னணியில் நாம் கல்வியைப் பார்க்க வேண்டும். இட ஒதுக்கீடு உள்ள அரசுத்துறைகளில் இடமே (வேலையே) இல்லை. வேலை இருக்கும் தனியார் துறையில் ஒதுக்கீடே இல்லை. தனியார் கம்பெனியில் ஆங்கிலம் ஒரு முக்கியமான அம்சமாக இருக்கிறது. உலகமயப் பொருளாதாரப் பின்னணி அதற்குக்காரணம். ஆகவே ஆங்கிலம் முக்கியம் என்கிற நிலைமையை கடந்த 50 ஆண்டுகால தமிழக ஆட்சியாளர்கள்தான் உருவாக்கிவிட்டுள்ளனர். தமிழில் படித்தாலே வேலை கிடைக்கும் என்கிற நிலை சமூகத்தில் இருந்தால் யார் ஆங்கிலப்பக்கம் போவார்கள்? மேலும், சமச்சீர் கல்வி தமிழகத்தில் இன்னும் வரவில்லை. ஒரே பாடத்திட்டம் என்பது மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது. அதையும் மாற்றிக்கொள்ள மெட்ரிக் பள்ளிகளுக்கு வாய்ப்புள்ளது. தவிர பல தனியார் மெட்ரிக் பள்ளிகள் இந்த வம்பே வேண்டாம் என்று வசூலுக்கு இடைஞ்சல் இல்லாத சிபிஎஸ்ஸி கல்வி முறைக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழக அரசு கல்வித்துறையில் உடனடியாகக் கொண்டுவரவேண்டிய சீர்திருத்தங்கள் என்னென்ன?
1.ஐந்து வகையான கல்வி முறைகள் தமிழகத்தில் இருப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். ஒரே இயக்குநரின் கீழ் ஒரே கல்வி முறை இருக்க வேண்டும்.
2.சமச்சீர் கல்வி முறையை முழுமையாக அமல்படுத்தவேண்டும்.
3.அருகமை பொதுக்கல்வி முறையை அமலாக்க வேண்டும்.அமெரிக்காவில் உள்ளதைப்போல எல்லாக் குழந்தைகளும் ஒரே பள்ளியில் பயில வேண்டும்.
4.அரசுப்பள்ளிகளின் உள் கட்டுமானங்களை அதிகரிக்கவேண்டும்.
5.அரசே தொழில்கள் தொடங்கியும் தனியார் துறைகளை தேசியமயமாக்கியும் தமிழ் வழியில் கற்றோருக்கு வேலை வாய்ப்பு உண்டு என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்
6.கல்வித்துறையில் லஞ்சம் ஊழலை ஒழிக்கவேண்டும்.
7.ஆசிரியர்களைக் கேவலமாக நடத்தும் கல்வித்துறையில் தலைகீழ் மாற்றங்கள் கொண்டு வந்து ஆசிரியர், அதிகாரிகள் எல்லோருமே காசு பற்றிக் கவலைப்படுபவர்களாக இல்லாமல் குழந்தைகள் மற்றும் அவர்களது கல்வி மேம்பாடு பற்றிக் கவலைப்படுபவர்களாக மாற்றப் பெருமுயற்சி எடுக்க வேண்டும்.
8.போதிய ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி உடனுக்குடன் நிரப்ப வேண்டும்.
9.அறிவியல்பூர்வமான அணுகுமுறையுடன் குழந்தைகளை மையமாகக் கொண்ட ஒரு பாடத்திட்டத்தையும் கற்பித்தல் முறைமையையும் கொண்டு வர வேண்டும்.
10.தகுதிக் கணக்கீடு செய்யும் முறையைச் செழுமைப்படுத்தி தேர்வுகளே இல்லாத கல்விமுறையைக் கொண்டுவர வேண்டும்.
11.கல்விப்புலத்துக்கு வெளியே உள்ள எழுத்தாளர்கள்,சிந்தனையாளர்களை பாடத்திட்ட உருவாக்கத்திலும் பிற கல்வி முயற்சிகளிலும் ஈடுபடுத்தவேண்டும்.
12.நூலகங்களில் புத்தகம் எடுத்துப் படிக்காத ஆசிரியர்களுக்கு இன்கிரிமெண்ட் கிடையாது என சட்டம் போட வேண்டும்.
13. திமுக அரசு கொண்டுவந்த தமிழ் வழியில் கற்றோருக்கு 20% இட ஒதுக்கீடு என்பதைப் பரவலாகப் பிரசாரம் செய்வதும் அதை ஆண்டுதோறும் கறாராகக் கடைப்பிடிப்பதும் அவசியம்.
14. தேர்வுகளும் வடிகட்டுதலும் இல்லாத கற்பவரும், கற்பிப்பவரும் கூட்டாகச் சேர்ந்து இப்பிரபஞ்சத்தை இவ்வுலகைப் புரிந்துகொள்வதுதான் கல்வி என்பதை அடிப்படையாகக் கொண்டு சதா கேள்வி கேட்கும் நம் குழந்தைகளை, கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லும் எந்திரங்களாக மாற்றும் இன்றைய கல்வி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
15. மீண்டும் கல்வி கட்டாயமாக மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
அறிவொளி இயக்கம் மூலம் என்னவெல்லாம் சாதிக்க விரும்பினீர்கள்? என்னவெல்லாம் சாதிக்க முடிந்தது?
இந்திய அரசு 1947 தொடங்கி இன்றுவரை இந்தியாவில் கல்லாமையை ஒழிக்க உருப்படியான திட்டம் எதையும் கொண்டுவரவில்லை. அறிவொளி இயக்கம் மக்கள் குரலுக்கு செவி சாய்த்தும், பன்னாட்டு நிதி மூலதனத்தின் நெருக்கடிக்கு இணங்கியும் கொண்டுவரப்பட்ட திட்டம். மூன்றில் இரண்டு பங்கு மத்திய அரசும் ஒருபங்கு மாநில அரசும் நிதி ஒதுக்கீடு செய்து தன்னார்வத் தொண்டர்கள் என்னும் பெரும்படையால் நடத்தப்பட்ட இயக்கம்.
ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒரு அலகாகக்கொண்டு அம்மாவட்டத்தில் உள்ள 15 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட வயதினர் அனைவரும் எண்ணறிவும் எழுத்தறிவும் பெற்றிட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 2 லட்சம் பேர் கற்போராக வந்தனர். அவர்களுக்குக் கற்பிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் 20,000 தொண்டர்கள் தாமாக முன்வந்தனர். காசில்லாமல் இந்த நாட்டில் எதுவும் நடக்காது என்கிற கூற்றைத் தகர்த்தெறிந்த மிகப் பெரிய கல்வித்திருவிழாவாக அதை நடத்தினோம். 75% மேல் வெற்றி பெற்ற ஒரு பண்பாட்டு இயக்கம் அது. கற்றதைத் தக்க வைக்க தொடர்ந்த வாசிப்பும் கல்வி நடவடிக்கையும் தேவை. இல்லாவிட்டால் மீண்டும் கல்லாத நிலைக்கே போய் விடுவார்கள். அரசு தொடர்ந்து அதை நடத்தி இருக்க வேண்டும். ஆனால், அதற்கான அரசியல் மன உறுதி ஆள்பவர்களிடம் இல்லை.