Thursday, 10 July 2014

முதல் ஆசிரியர்களை உருவாக்கிய முகாம் : பேரா.என்.மணி

நடுங்கும் குளிர், கான்கிரீட் கட்டடத்தின் அனைத்து ஜன்னல்களும் மூடப்பட்டிருக்கிறது. நேரம், இரவு 10.00 மணியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உள்ளே சகல குளிர்கால உடைகளோடு 18 ஆசிரியர்கள் வட்டமாக அமர்ந்து தீவிர ஆய்வு நோக்கில், தத்தமது கருத்துகளை, ஒருவர் பின் ஒருவராக, முன்வைத்து வருகின்றனர். ஒருவர், அமைதியாக நகர்ந்து என் அருகில் வந்தார். “சார், கூட்டம் முடியும் போது உறுதிமொழி ஒன்று எடுத்துக்கொள்ள விரும்புகிறோம்’’ என்றார். உறுதிமொழியின் சாரம், “புத்தக வாசிப்பு முகாம் முடிந்து, பள்ளிக்கு திரும்பியதும் என் பள்ளியில், முதல் ஆசிரியனாக முன்மாதிரி ஆசிரியனாக, ‘முதல் ஆசிரியர்’ நாவலில் வரும் துய்சேனைப் போன்ற ஆசிரியனாக விளங்குவேன் என இன்றைய நாளில் சபதமேற்கிறேன்.’’ என்பதே.

2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 12, 13 தேதிகளில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு மாவட்டக்கிளை ஏற்பாடு செய்திருந்த புத்தக வாசிப்பு முகாமில்தான் மேற்படி உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. முகாமின் நோக்கம், கல்வி சார்ந்த நூல்களை ஆசிரியர்களுக்கு அறிமுகம் செய்வதும், மாற்றுக்கல்வி குறித்த சிந்தனையைத் தூண்டுவதுமே. முதல் நாள் இரவே எங்கள் எண்ணம் ஈடேறியதில் அளவில்லா மகிழ்ச்சி. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் இத்தகைய சபதமேற்கும் நாள் எந்த நாளோ என மனம் ஏங்கியது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், வனத்திற்கு பெயர் பெற்றது. இந்த வனப்பகுதியில் ஆசனூரில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவு சென்றால், சுற்றிலும் மலை சூழ்ந்து இயற்கை எழிலுடன் உள்ள கிராமம் கெத்தேசால், சோளகர் இனத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். இக் கிராமம்தான் புத்தக வாசிப்பு முகாமுக்கு ஏற்ற இடமாக தேர்வு செய்யப்பட்டது. பாரதி புத்தகாலயத்தின் வெளியீடான ‘முதல் ஆசிரியர்’ புத்தகமும், நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ள ‘பகல் கனவு’ புத்தகமும் வாசிப்புக்கு தேர்வு செய்யப்பட்டது.

‘முதல் ஆசிரியர்’ நூல் மதிப்பீட்டைத் தொடங்கியவரே நிறைவுரை போன்று தன் கருத்தைக் கூறினார். “இந்த நாவலைப் படித்துவிட்டு, கண்களை மூடி, நெஞ்சில் தங்கியிருப்பதை நினைத்துப் பார்த்தேன். துய்சேனின் வகுப்பறையும், அதில் மாட்டப்பட்டுள்ள லெனினது திருவுருவப்படமும் தான் நினைவில் நிற்கிறது’’ என்றார். இவர் மார்க்சிய\லெனினியத்தில் ஈடுபாடு கொண்டவரோ, மார்க்ஸ்\லெனின் பற்றிய கேள்வி ஞானமோகூட இல்லாதவர். ஆசிரியர் பயிற்சி முடித்தவுடன் பெற்றோர்\ ஆசிரியர் கழகத்தின் கீழ் பணி செய்து வந்தவர். நூல் மதிப்பீட்டு அமர்வை ஒருங்கிணைத்த கல்வியாளர் ஜே. கிருஷ்ணமூர்த்தி, இந்நூலை நானும் பல முறை நேசித்து, நேசித்து வாசித்துள்ளேன். ஆர்வலர்கள் பலருடன் விவாதித்துள்ளேன். இந்நாவலை ஒற்றை ஓவியமாக வரைந்து காட்டியவர் யாருமில்லை என்றார். மற்றொரு ஆசிரியர் எழுந்து “எத்தனையோ குழந்தைகள் துய்சேனிடம் பாடம் கற்க வந்தார்கள். அத்தனை பேரையும் அல்தினாய்களாக அவர் ஏன் மாற்றவில்லை? என வினாத்தொடுத்தார். (தாய் இன்றி, சிற்றன்னையிடம் வதைபட்டு, குழந்தைத் திருமணம் உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்டு, உயர்கல்வி கற்று, உயர்ந்த நிலையை அடைந்தவர்) அனைத்துக் குழந்தைகளையும் அல்தினாய்களாக மாறியிருந்தால் தானே அவர் முதல் ஆசிரியர் என்று யாரும் எதிர்பாராத மற்றொரு கோணத்தில் தனது பார்வையைப் பதிவு செய்தார். குறைந்தபட்ச கல்வி அறிவுடன், அறிமுகம் இல்லாத கிராமத்திற்கு வந்து, குதிரை லாயத்தை பள்ளிக்கூடமாக மாற்றி, பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுக்கும் பெற்றோருடன் மல்லுக்கட்டி, கல்வி கற்பித்து, மிகப்பெரிய பள்ளிக்கூடமாக அப்பள்ளி வளரக் காரணமாக இருந்தவர் துய்சேன். ஆனால் அப்பள்ளி திறப்புவிழாக் காணும்போது, துய்சேன் ஒரு தபால்காரர். அத்திறப்புவிழா நிகழ்ச்சியை கண்டுகளிக்காமல், தற்போது தான் ஏற்றுக்கொண்டிருக்கும் தபால் பட்டுவாடா பணியை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.’’

துய்சேன் நிலையில் நம்மைப் பொருத்திப் பார்ப்போம். பள்ளித் துவக்க விழாவில் நம்மை நடுநாயகமாக உட்கார வைத்து மாலை மரியாதை செய்ய வேண்டும். இவ்வூரின் கல்வித் தந்தை இவர்தான் என வாயாரப் புகழ வேண்டும் என விரும்புவோம். புன் சிரிப்போடு அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என மனம் துடிக்கும். லெனினின் அழைப்பை ஏற்று புரட்சிப் படையில் சேர்ந்து பணியாற்றியதும் பின்னர் எழுத்தறிவு இயக்கத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதும், இறுதியாக தபால்காரராக வாழ்ந்து வந்ததுமான தனது பணிகளை, தனது சமூகக் கடமையாகவே செய்து வருகிறார். தருமம் செய்வரை புண்ணியமாகக் கருதாமல் தனது கடமையாகக் கருதிய கர்ணனைப் போல் துய்சேன் தனது வாழ்வை வாழ்ந்து காட்டுகிறார். எனவே தான் துய்சேன் “முதல் ஆசிரியராக’’ உயர்ந்து நிற்கிறார் என்று தன் மதிப்பீட்டை முன்வைத்து அமர்வை நிறைவு செய்ய முனைந்தார் தோழர். ஜே. கே.

சிந்தனையைத் தூண்டும் கல்வியை, அறிவியல் மனப்பாங்கை, சமூக விழிப்புணர்வுள்ள ஆசிரியப்பயிற்சியை வழங்காததும் ஓர் அரசியலே எனக் கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். வாசிப்பு முகாமில் பங்குபெற்ற அனைவரும் நூலை வாசித்து, தத்தமது கருத்துகளை அழுத்தம் திருத்தமாக முன் வைத்தனர் என்பது கோடிட்டுக் காட்ட வேண்டிய செய்தி.

தூங்கச் செல்ல அறையைவிட்டு வெளியே வந்தோம். பனிக்கட்டியை முகத்தில் தடவியது போல், குளிர்காற்று முகத்தில் அடித்தது. அண்ணாந்து வானத்தைப் பார்த்தோம். வெள்ளிக் காசுகளை அள்ளித்தெளித்தது போல் வானம் நட்சத்திரக் கூட்டங்களால் நிரம்பி வழிந்தது. அந்த நேரத்திலும் குரங்குகள் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தது. பள்ளிக் குழந்தைகள் போல், துள்ளிக் குதித்து, மொட்டை மாடிக்கு ஓடிச் சென்றனர். நம் மக்கள் நட்சத்திரக் கூட்டங்களைக் கண்டுகளித்தனர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் உமாசங்கர், கருத்தாளராக மாறி நட்சத்திரங்களை அடையாளம் காட்டத் தொடங்கினார். இருந்தோம். இரண்டாம் நாள் குளிரும் தூக்கமின்மையும் இரண்டாம் நாள்அமர்வைத் தள்ளிப்போடும் என எதிர்பார்த்தோம். ஆனால் எம் ஆசிரிய நண்பர்களோ, குளித்து முடித்து, குறித்த நேரத்தில் ஆஜராகிவிட்டனர். ஒரு குறிப்பிட்ட அலைவரிசைக்கு அவர்கள் ஆட்பட்டிருப்பதை உணர்ந்தோம். ஒரு பௌதீக சக்தி அவர்களை கவ்விப்பிடித்து விட்டதை நாங்கள் கண்ணுற்றோம். இயற்கை அழகும், இதமான குளிரும், தலைக்குக் குளித்ததும் அனைவருக்கும் ஒரு புத்துணர்வைத் தந்தது. இச்சூழலில், பாவ்லோ ஃப்ரையிரேயின் “ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறையை’’ நண்பர் ஜே. கே எடுத்துரைத்தார். 

வாசிப்பு முகாம், ஆதிதிராவிடர் நல உரைவிடப் பள்ளியில் நடந்தது. இது ஒரு நடுநிலைப் பள்ளி. ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனி அறை, ஆய்வகம், பரிசோதனைக் கருவிகள், கற்பித்தலுக்கான உபபொருட்கள், மாணவ மாணவியருக்கு தனித்தனியாக தங்கும் விடுதிகள், ஆசிரிய ஆசிரியைகளுக்கும் தனித்தனிக் குடியிருப்புகள். எல்லாம் ஓர் இடத்தில். பழங்குடி மக்களுக்காக அரசு நடத்தும் பள்ளியா என்ற சந்தேகம் எழுந்தது. ஊர் மக்களோடு பேச்சுக் கொடுத்த போதுதான் நம் அய்யத்திற்கு விடை கிடைத்தது.

வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிகமாக கண்காணிக்கப்பட்ட கிராமங்களில் கெத்தேசாலும் ஒன்று. இக்கிராம வாசிகள் தன்னைப்பற்றி அதிரடிப்படைக்கு உளவு சொல்கிறார்கள் என சந்தேகித்த வீரப்பன் ஏழு பேரை வெட்டிப் படுகொலை செய்தான். இதன் பிறகே தமிழக மக்களுக்கும் ஊடகங்களுக்கும் இக்கிராமம் இருப்பதே தெரிய வந்தது. புதிய பள்ளிக் கட்டடங்களும் இதர வசதிகளும் இதன் பிறகே இவ்வூருக்குள் எட்டிப் பார்த்ததும் வெட்டிக் கொல்லப்பட்ட ஒருவரது மனைவிக்கு அதே பள்ளியில் சமையல்காரர் பணி தரப்பட்டுள்ளது. இதே போன்றதொரு வீரப்பன் தேடுதல் வேட்டையில்தான் கோவை மாவட்டத்தில் உள்ள சின்னாம்பதி என்ற மலைவாழ் மக்கள் கிராமம் அதிரடிப்படைக் காவலர்களின் காட்டுமிராண்டித் தனத்திற்கு பலியானது. காவலர்களின் உடற்பசிக்கு பழங்குடிப் பெண்கள் இரையானார்கள். இதனை ஒட்டியே அக்கிராமம் தமிழ்நாட்டில் இருப்பது தெரியவந்தது. இத்தனைக்கும் சின்னாம்பதி கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் நெடுஞ்சாலைக்கு மிக அருகில். மலை அடிவாரத்தில் இருக்கும் கிராமம். பழங்குடிப் பெண்களின் கற்பு சூறையாடப்பட்ட பிறகே அக்கிராமத்திற்கு பள்ளிக்கூடம் வந்தது. மின்சாரம் வந்தது. சுய உதவிக் குழுக்கள் கூட அதன் பின்னரே உருவாக்கப்பட்டது. 

ஓர் அறிவியல் இயக்க செயல்பாட்டை ஒட்டி, அக்கிராமத்திற்கு சென்ற போது தான் முதல்முதலாக ஒரு குழந்தை எட்டாம் வகுப்புக்கு செல்லத் துவங்கியிருந்ததைக் கண்டோம். 

கெத்தேசால் பள்ளி ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர் மோகன்குமாரும் மிக ஆர்வமுடன் முகாமுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தனர். அந்த ஆசிரியர்களுக்கு நன்றி பாராட்டும் முகத்தான் ஒரு சிறு அமர்வும் நடைபெற்றது. அதில் பேசிய மோகன்குமார், “கால் நூற்றாண்டுக்கும் மேல் கற்பித்தலிலும், காப்பாளர் பணியிலும் ஈடுபட்டு வருகிறேன். செல்போன் கூட எட்டாத இந்த மலை கிராமத்தில், இரவு பதினோரு மணி வரை கல்வி குறித்து விவாதிப்பதும், காலை 7 மணிக்கே எழுந்து மாற்றுக் கல்வி குறித்த சிந்தனைகளைக் கேட்பதுமான ஓர் ஆசிரியர் கூட்டத்தை, அதை வழிநடத்தும் இயக்கத்தை என் வாழ்நாளில் முதல் முறையாகக் காண்கிறேன் எனக் குறிப்பிட்டார்.

புத்தக வாசிப்புக்கு தடையாக உள்ள காரணங்களைப் பட்டியலிடுக என்ற வேண்டுகோளோடு மதுராந்தகம் மாதவன் ஓர் அமர்வைத் துவக்கினார். ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த காரணங்களை வரிசைப்படுத்தினர். பின்னர், ஒவ்வொரு காரணத்தையும் விவாதங்களுக்கு உட்படுத்தினார். முடிவாய், வாசிப்புக்கு தடையாக இருக்கும் காரணிகள் எல்லாம் சொத்தைக் காரணிகளே என அனைவருக்கும் புரியவைத்து அந்த அமர்வை நிறைவு செய்தார். முகாம் முடிந்து வரவு\செலவு கணக்குப் பார்க்கும் நேரம் வந்தது. இரண்டு நாளைக்கும் சேர்த்து செலவு 1400 ரூபாய் மட்டுமே. ‘சோறு சரியில்லை’ என யாரும் நினைத்துவிட வேண்டாம். எல்லா வேளையும் அறுசுவை உணவு. அதில் ஒரு வேளை சிக்கன். ஒரு வேளை மலைமக்கள் உணவு. அதென்ன மலைமக்கள் உணவு என்றுதானே கேட்கிறீர்கள்? இராகிக்களியும் பச்சை அவரைக் குழம்பும். பழங்குடிகளின் விருப்ப உணவு அது. நமது ஆசிரியர் பெருமக்களும்கூட அதை மிகவிரும்பியே சாப்பிட்டனர். 

கடைசியாய் சமையல்காரர் ரங்கனை அழைத்து ஒரு சிறு தொகையை ரூ. 400 நன்றியுடன் கலந்து கொடுத்தோம். ரங்கனும் அதே கிராமத்தில் வாழ்ந்து வருபவர். பழங்குடி சமூகத்தவர். பணத்தைப் பார்த்தவுடன் கண்களில் கண்ணீர். நாங்கள் பதறிப் போனோம். தங்கள்குரூப்ஸ், ஸ்டார்குரூப்ஸ் என நகரத்து புகழ்பெற்ற சமையலர்களின் கைப்பக்குவத்தையெல்லாம் மிஞ்சும் ரங்கனின் கைப்பக்குவம். ”எங்கள் கிராமத்திற்கு உங்களைப் போன்றவர்கள் வந்ததே பெரிய விசயம். நல்ல காரியத்துக்கு இக்கூட்டம் நடப்பதாக எங்கள் தலைமை ஆசிரியர் சொன்னார். இந்த இரு நாட்களும் உங்களுக்கு சமைத்துப் போட்டதே எனக்கு பெரும் திருப்தி. நான் செய்த நல்ல காரியம். எனக்கு பணம் ஏதும் வேண்டாம். மிக்க நன்றி. போய் வாருங்கள்’’ என கைகூப்பினார். அவரது கடமை உணர்ச்சியும், பழங்குடி மக்களிடம் பூத்துக் குலுங்கும் மனசாட்சியையும் கண்டு நாங்கள் மனம் நெகிழ்ந்தோம். 

கெத்தேசால் முகாம் தந்த உற்சாகத்தில், அடுத்த மாதமே ஈரோடு நகரத்தை ஒட்டிய ஒரு கல்லூரியில் ஒரு நாள் வாசிப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்தோம். அலுவலக நேரத்திற்கு காலை 10 மணி முதல் மாலை 4 வரை இம்முகாம் நடைபெற்றதாலோ என்னவோ எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. சரியான திட்டமிடுதலும் இல்லை. அலைபேசிகளுக்கு எட்டாத தூரம் அல்லது அனைத்து வைக்கும் ஒழுங்கு, இயற்கை சூழல், குறைந்தபட்சம் ஓர் இரவு, சமூக அக்கறை கொண்ட கருத்தாளர்கள் இதுவே வாசிப்பு முகாமின் வெற்றிக் கூட்டணி. இதுவே கெத்தேசால் நமக்கு உணர்த்தும் பாடம்.

எல்லாம் சரி, வாசிப்பு முகாமில் இரண்டு நூல்கள் வாசிக்கப்பட்டது. ஒன்று முதல் ஆசிரியர். மற்றொன்று பகல் கனவு எங்கே என்று கேட்பது காதில் விழுகிறது. இந்திய மண்ணில் செயல் வழிக்கற்றலுக்கான வித்து ‘பகல் கனவு’. ஆரம்பப்பாட சாலையில் ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு நூலகம் வேண்டும் என்று கனவு கண்டவர் நூலாசிரியர் பிஜீபாய் பகேகே. மாணவர்களின் நன்மைக்காக புதிய முயற்சிகளைத் தொடங்கும் போது சக ஆசிரியர்கள் எள்ளி நகையாடுவது இயல்பே என்பதையும், அம்முயற்சியில் வெற்றிபெறும் போது, கேலி செய்தவர்களே ஆரத்தழுவும் ஆச்சரியம் என பகல் கனவு நூலை நீண்ட நேரம் ஆய்வு செய்தனர்.

இப்பொழுது நினைத்தாலும் நடராஜன், இராமசாமி, கார்த்திகேயன், கெல்வின், உமா, துரைசாமி, அருள்குமார், யுவராஜ், காளியப்பன், கபிலன், உமாசங்கர், வடிவேல், சங்கர், வேணுகோபால், அமல்ராஜ் ஆகிய அனைத்து முகங்களும் வட்டமாக அமர்ந்து வாசிப்பு முகாமில் விவாதித்த காட்சிகள் கண் முன் விரிகிறது. நண்பர் ஜே. கே, நேரிலோ தொலைபேசியிலோ உரையாடும் போதெல்லாம் அனைவரின் பெயரையும் குறிப்பிட்டு நலம் விசாரிப்பார். வாசிப்பு அனுபவம் மாத்திரமல்ல, வாசிப்பில் பங்கு பெற்றவர்கள் பெயர்கள்கூட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகும் மறக்காமல் நிலைத்து நிற்கிறது.

எழுத்தாளர்: நா.மணி, ஆகஸ்ட் 2009

No comments:

Post a Comment