முன்பெல்லாம், ஆசிரியர் பயிற்சி முடித்ததும் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பதிவு செய்துகொள்வார்கள். சீனியாரிடி அடிப்படையில் நியமனம் செய்யப்படும். 199196ல், அதிமுக ஆட்சியின்போதுதான் முதன்முதலாக இந்த நடைமுறை அகற்றப்பட்டு தகுதித் தேர்வு அமல்படுத்தப்பட்டது. அப்போது, பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் நியமனம் பெற்றனர். பல முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்பட்டாலும் அந்தத் தேர்வு முறையாகவே நடந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால், அப்படித் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் தமது சொந்த ஊரிலிருந்து வெகுதூரத்தில் நியமிக்கப்பட்டார்கள். கன்னியாகுமரியில் இருப்பவர்களை சென்னைக்கும், சென்னையில் இருப்பவர்களை மதுரைக்கும், திருநெல்வேலிக்கும் தூக்கி அடித்தார்கள்.
1996ல், திமுக ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக அவர்களுக்கெல்லாம் விரும்பிய இடத்துக்கு மாற்றம் கொடுக்கப்பட்டு பிரச்னை தீர்க்கப்பட்டது. பணி நியமனம் பழையபடி மூப்பு அடிப்படைக்கு மாறியது. இப்போது, அதிமுக ஆட்சி அனைத்தையும் மாற்றுவதுபோல் மீண்டும் தகுதித் தேர்வுக்கு மாறியுள்ளது.
இருபுறத்திலும் இதற்கான காரணங்கள், எதிர்க் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஆசிரியர் தகுதித் தேர்வு வைக்கக்கூடாது. மூப்பு அடிப்படையிலேயே நியமனம் செய்ய வேண்டுமென்று போடப்பட்ட வழக்கு, உச்சநீதி மன்றம் வரை சென்று தோற்றுவிட்டது. தகுதித் தேர்வே சரி என உச்சநீதி மன்றம் கூறியுள்ளது. மத்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தை இயற்றியதோடு, ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு தகுதித் தேர்வையும் புகுத்தியுள்ளது. இதை ஆசிரியர் நியமனத்துக்காகக் காத்திருப்போரும் ஆசிரியர் சங்கங்களும் எதிர்க்கின்றனர்.
ஏற்கெனவே பயிற்சி முடித்து தகுதி பெற்றுள்ள நிலையில் இன்னுமொரு தேர்வா என்பதுதான் ஆசிரியர்களின் கேள்வி. எனினும், இந்தத் தேர்வு அறிவிக்கப்பட்டதும் பல லட்சம் பேர் வேறு வழியின்றி விண்ணப்பித்துள்ளனர். கல்வி வியாபாரமாகும் சூழலில் மாணவர்களைப் போல் ஆசிரியர்களும் மார்க் பெறும் மெஷின்களாக மாறவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிற தொழில்களைப் போல் ஆசிரியர் தொழிலையும் கருதாமல் இருக்கவேண்டுமே என்னும் கவலையும் பிறக்கிறது.
மற்றொரு பக்கம், ஆசிரியர் படிப்பு படித்துவிட்டு வருடக் கணக்கில் காத்திருந்தும் நியமனம் கிடைக்காமல் பலர் தவிக்கிறார்கள். தனியார் பள்ளிகளோ மாணவர்களிடம் இருந்து பெரும் பணம் கறந்துகொண்டாலும், ஆசிரியர்களுக்கு குறைவான சம்பளத்தையே அளிக்கின்றன. அனைவருக்கும் நல்ல கல்வி கிடைக்கவேண்டுமென்றால் மாணவர்கள் பிரச்னைகளோடு சேர்த்து ஆசிரியர்களின் பிரச்னைகளையும் இனம் கண்டு களையவேண்டும்.
நன்றி: ஆழம் மாதாந்திர இதழ்
No comments:
Post a Comment