Sunday, 6 July 2014

செயல் வழிக் கற்றல்: ம. எட்வின் பிரகாசு

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் இரண்டு நாள் பயிற்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்தேன். உணவு இடைவேளையின் போது பயிற்சியில் கலந்துகொண்டுள்ள ஆசிரியர்கள் அளவளாவிக் கொண்டிருந்தோம். பொதுவாக ஆசிரியர்கள் இருவர் பேசிக்கொள்வதாக இருந்தால் பெரும்பாலும் அவர்களின் பேச்சு ஊதியம் தொடர்பானதாகவே அமையும். இன்னமும் அறிவிக்கப்படாமல் இருக்கும் அகவிலைப் படி உயர்வு, நடுவரசு பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஊதியக் குழு, இந்த ஆண்டு அரசால் வழங்கப்படவிருக்கும் பொங்கல் பரிசு பற்றிய எதிர்பார்ப்பு என்ற நிலையிலேயே உரையாடல்கள் அமைந்திருக்கும். அன்று விதிவிலக்காக உரையாடல் பள்ளி மாணவர் சேர்க்கை, ஆசிரியர் பணியிடங்கள் நிறுவுதல் போன்றவற்றை சுற்றியதாக அமைந்துவிட்டது.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சூன், சூலை மாதங்களில் முடிக்கப்பட்டு விடும். சூலை 31-ஆம் நாள் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடம் ஒவ்வொரு பள்ளிக்கும் நிறுவப்படும். 40 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற வீதத்தில் பணியிடம் நிறுவப்படும். தொடக்க நிலை வகுப்புகளில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்களின் எண்ணிக்கை அரசால் முடிவு செய்யப்படுகிறது. உயர்தொடக்க, உயர், மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலையில் ஆசிரியர் எண்ணிக்கை முடிவு செய்யப்படுகிறது. இவ்வாறு எண்ணிக்கை முடிவு செய்வதில் தவறுகள், விதிமீறல்கள் நிகழா வண்ணம் இருப்பதற்காக பல்வேறு அறிவுரைகள் - பல வேளைகளில் அச்சுறுத்தல்களை கல்வி அதிகாரிகள் நிகழ்த்துவர். அரசுப் பள்ளிகளில் இதன் தாக்கம் வெளிப்படையாக தெரியாவிட்டாலும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் இதன் விளைவுகள் தெளிவாகத் தெரியும். அரசு உதவி பெறும் பள்ளிகள் தங்கள் ஆசிரியர் பணியிடங்களை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு உத்திகளை மேற்கொள்ளும்.

இந்தக் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை அரசு, மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மிகவும் குறைந்து விட்டதாக ஆசிரியர் ஒருவர் வருந்தினார். தமிழகம் முழுவதும் தமிழ் வழி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. தொடக்கப் பள்ளிகளில் இதன் தாக்கம் அதிகமாகத் தெரிகிறது. இந்த சேர்க்கைக் குறைவிற்கு தொடக்கப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தபட்டுள்ள புதிய கற்றல் கற்பித்தல் முறையே காரணம் என்று ஒட்டுமொத்த ஆசிரியர்களும் கூறுகின்றனர். சென்ற கல்வியாண்டி(2007-08) அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ′செயல் வழிக் கற்றல்′ என்ற புதிய கல்விப் பயிற்றுமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கல்வியாண்டில் தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அளவுக்கதிகமாக அதிகரித்துள்ளதாக மற்றொரு ஆசிரியர் குமுறினார். அவரது கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பயிலும் பெரும்பான்மை மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ்(T.C.) பெற்று அருகில் உள்ள ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்துள்ளனராம். கடந்த ஆண்டுகளில் வகுப்புக்கு ஒன்று அல்லது இரண்டு பிரிவுகளுடன் இருந்த அந்த ஆங்கிலப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டில் ஒவ்வொரு வகுப்பிற்கும் கூடுதலாக ஒரு பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாம். அண்மை தமிழ் வழி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பெரும்பாலோர் அந்த ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்துள்ளதே இந்த உயர்வுக்குக் காரணமாம். இதனால் அந்த ஆங்கிலப் பள்ளியில் கல்விக் கட்டணமும் உயர்ந்துவிட்டதாம்.

தனியார் ஆங்கிலப் பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கைக்கென ஆண்டுதோறும் பரப்புரையில் ஈடுபடுவர். அந்தப் பரப்புரையில் இந்தக் கல்வியாண்டில் முக்கியமாக இடம் பெற்றிருந்த செய்தி அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ′செயல் வழிக் கற்றல்′ பற்றியதுதானாம். தனியார் ஆங்கிலப் பள்ளி ஆசிரியர்களும், மேலாண்மையினரும் ′செயல் வழிக் கற்றல்′ முறையின் நீள அகலங்களை தெளிவாக தெரிந்து வைத்துள்ளனராம். இம்முறையினால் மாணவர்களுக்கு ஏற்படும் இழப்புகளைப் பட்டியலிட்டு பெற்றோர்களிடம் பரப்புரை செய்கின்றனராம். இந்தப் பரப்புரைகளால் ஆங்கிலப் பள்ளிகளுக்கு பெருமளவு வெற்றியும் கிட்டியுள்ளதாம்.

′செயல் வழிக் கற்றல்′ நடைமுறைப்படுத்தப்பட்ட தொடக்கத்தில் குமரி மாவட்டத்தின் தலைநகரில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பெரும் போராட்டத்தில் இறங்கினர். தங்கள் குழந்தைகளுக்கு இந்தக் கல்வி முறை தேவையில்லை எனவும், தொடர்ந்து இம்முறையிலேயே கல்வி பயிற்றுவிக்கப்படுமாயின் தங்கள் குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழை வழங்குமாறு கூறி போராட்டத்தைத் தொடர்ந்தனர். ஒரு வார காலஅளவில் நடைபெற்ற இப்போராட்டம், அப்போது பரவலாக கவனம் பெற்றது. தாளிகைகள் முன்னின்று போராட்டத்திற்கு ஆதரவாக பரப்புரை செய்தன. இறுதியில் கல்வி அதிகாரிகள் அப்பள்ளியில் முகாமிட்டனர். பெற்றோர்கள் பலவகைகளிலும் ′மூளைச் சலவை′ செய்யப்பட்டனர். இறுதியில் போராட்டம் வலுவிழந்துவிட்டது.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ‘அனைவருக்கும் கல்வித் திட்டம்’ அதன் தொடர்ச்சியான ′செயல்வழிக் கற்றல்′ முறை திருநெல்வேலி மாவட்டத்தில் முறையாக செயல்படவில்லை என்று தெரிகிறது. இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளின் மேலாண்மையர் தங்கள் பள்ளிகளில் ′அனைவருக்கும் கல்வி இயக்க’த்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு நீதிமன்ற தடை ஆணை பெற்றுள்ளனராம். இதனால் நெல்லை மாவட்டத்தில் ′செயல் வழிக் கற்றல்′ பரவலாக செயல்படுத்தப் படவில்லை.

′செயல் வழிக் கற்றல்′ முறை பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படுவதை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதை மையப்படுத்தி ஆசிரியர் கழகங்கள் ஆர்ப்பாட்டம், உண்ணாநோன்பு என பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். இத்தகு போராட்டங்கள் மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் நாளும் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இந்தக் கல்வியாண்டில் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு இந்தச் ‘செயல் வழிக் கற்றல்’ முறையே காரணம் என்று கூறி அவர்கள் களமிறங்கியுள்ளனர். பள்ளியில் பாடப் புத்தகங்களின் துணையின்றி கற்றல் - கற்பித்தல் நடைபெறுவதால் பாடப் புத்தகங்கள் தேவையற்றதாகியுள்ளன. இம்முறையில் அட்டைகளை வைத்து மாணவர்கள் தாமே படித்துக் கொள்ள வேண்டியதுதானாம். இதனால் பெற்றோர்களிடத்தில் கடும் எதிர்ப்பு உருவாகி அவர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனராம்.

′செயல் வழிக் கற்றல்′ பற்றி ‘அனைவருக்கும் கல்வி இயக்க’த்தால் மிக அதிக அளவில் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இப்புதிய முறையினால் மாணவர்களின் பல்வேறு திறமைகள் வளர்த்தெடுக்கப்படுமாம்! தமிழகத்தில் மெளனமாக ஒரு கல்விப் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம்! இந்தப் புரட்சி தமிழகத்தின் எதிர்காலத்தையே மாற்றப்போகிறதாம்!

பல்வேறு விவாதங்களையும், உரையாடல்களையும் ஏற்படுத்தியுள்ள இந்த ′செயல் வழிக் கற்றல்′ என்பது உண்மையில் என்ன? இத்திட்டம் எவ்வாறு உருபெற்றது? இது எவ்வாறு பயிற்றுவிக்கப்படுகிறது? இதனை நடைமுறைப்படுத்துவதன் நோக்கமென்ன? பள்ளிகளில் இதனை எப்படி நடைமுறைப் படுத்துகின்றனர்?

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட இயக்குநர் எம்.பி. விசயகுமார் இ.அ.ப. அவர்களின் சிந்தையில் உதித்த கனவுத் திட்டம்தான் ′செயல் வழிக் கற்றல்’. விசயகுமார் அவர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கொத்தடிமைகளாக இருந்த சிறார்கள் சிலரை மீட்டெடுத்திருக்கிறார். அச்சிறார்களுக்கு கல்வி சொல்லித் தர எண்ணியபோது அவர்கள் பள்ளி வயதைக் கடந்தவர்களாக இருந்தமையால் அவர்களுக்கென சிறப்புப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. அவர்களுக்கு கற்றுத் தருவதற்கென சிறப்பான கற்றல் - கற்பித்தல் முறைகள் ஏற்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. விசயகுமார் அவர்கள் சென்னை மாநகராட்சி ஆணையராகியபோது வேலூர் அனுபவத்தை செயல்படுத்தும் களமாக மாநகராட்சிப் பள்ளிகளைப் பயன்படுத்திக் கொண்டார்.

′செயல் வழிக் கற்றல்’ அறிமுகம் செய்வதற்கு முன்பு நடைமுறையில் உள்ள கற்றல் கற்பித்தல் முறையில் மாணவர்கள் பெறும் அடைவுத் திறன் குறைவதற்கான காரணங்களை ஆய்வதற்கென ஒரு குழு உருவாக்கப்பட்டதாம். அந்தக்குழு பின்வரும் நோய்க் காரணிகளை பட்டியலிட்டதாம்.

Ø ஆசிரியரை மையப்படுத்திய வகுப்பறைகள்.
Ø அங்கொன்றும் இங்கொன்றுமாக பயன்படுத்தப்படும் கற்றல் கற்பித்தல் பொருள்கள்.
Ø விரிவுரை முறையிலேயே பெரும்பான்மை நேரங்களில் பாடம் நடத்துதல்.
Ø ஆசிரியர்கள் மட்டுமே அனைத்தும் அறிந்தவர்கள்; மாணவர்களுக்கு எதுவுமே தெரியாதவர்கள்.
Ø ஆசிரியர் – மாணவர் இடைவெளி.
Ø கற்றலை விட கற்பித்தலுக்கே முக்கியத்துவம்.
Ø மாணவர்கள் பள்ளிக்கு வருகை தராத நாள்களுக்கான பாடங்களைக் கற்க வழியற்ற நிலை.
Ø பழமையான/பாரம்பரியமான மதிப்பீட்டு முறைகள்.
Ø மகிழ்ச்சியைத் தராத இணைக் கல்விச் செயல்பாடுகள்.
Ø விளையாட்டுமுறை, செயல் வழிக் கற்றல் இல்லாத கல்வி.
Ø தானே கற்றல், இணைக்கற்றலுக்கு குறைவான வாய்ப்புகள்.
Ø கற்றல் செயல்பாடுகளுக்கு குறைவான வசதிகளையுடைய வகுப்பறைகள்.
Ø மாணவர்களைக் கவராத ஆழ்ந்த / முழுமையான கற்றலுக்கு உதவாத கற்பித்தல் கருவிகள்.
Ø சுதந்திரமற்ற கற்றல்.
Ø பெரும்பான்மை நேரம் வகுப்பிலேயே முடங்கியிருக்கும் சூழ்நிலை.

இத்தகு நோய்க்கூறுகளிலிருந்து விடுபடவேண்டுமாயின் அதற்குத் தகுந்ததொரு மாற்று தேவை. செயல் வழிக் கற்றல் முறையே தகுந்த மாற்று எனக் கொண்டு சென்னை மாநகராட்சியின் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் இப்புதிய கற்றல் முறை செயல்படுத்தப்பட்டதாம்.

நான்கு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், 26 ஆசிரியர்கள் உள்ளிட்ட குழுவினர் ஆந்திர மாநிலம் ரிசி பள்ளதாக்கு(Rishi Vally) பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். மூன்று முதல் நான்கு கட்ட பயிற்சியின் பயனாக இக்குழுவினரால் ′செயல் வழிக் கற்றல்′ என்ற புதிய கற்றல் முறை வடிவம் பெற்றது. இதற்கென தனிப் பயிற்சி கட்டகம் உருவாக்கப்பட்டது. இம்முறையில் ‘ரிசி பள்ளதாக்கு’ பட்டறிவுகள் அப்படியே பயன்படுத்தப்படாமல் தமிழகச் சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாம்.

ஆய்வு அடிப்படையில் இத்திட்டம் மாநகராட்சியின் 10 மண்டலங்களில் உள்ள 13 பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது நடைமுறையில் உள்ளதுபோல் அட்டைகள் எதுவும் அப்போது பயன்பாட்டில் இல்லாதால் புதிதாக உருவாக்கப்பட்டன. முதல் நிலையில் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகள் மட்டுமே ‘செயல் வழிக் கற்றல்’ முறைக்கு உட்படுத்தப்பட்டன. பின்னர் இது நான்காம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின் வெற்றியால் ஏற்பட்ட ஊக்கத்தினால் சென்னை மாநாகராட்சியின் 264 பள்ளிகளிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாம்.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட இயக்குனராக திரு. விசயகுமார் அவர்கள் பொறுப்பேற்ற நிலையில் ‘செயல் வழிக் கற்றல்’ தமிழகத்தின் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

‘செயல் வழிக் கற்றல்’ முறையில் கற்பிக்கப்படுவதற்கென பாடங்கள் பல்வேறு பகுதிகளாக - அலகுகளாக பகுக்கப்பட்டு பல்வேறு செயல்பாடுகள் உள்ளதாக மாற்றப்பட்டுள்ளனவாம்.

Ø ஒவ்வொரு பகுதி/அலகும் ஒரு மைல்கல்(mile stone) என அழைக்கப்படும்.
Ø ஒவ்வொரு பாடமும், தொடர்புடைய மைல்கற்கள் தொடரியாக இணைக்கப்பட்டு, தொடரியாக இணைக்கப்பட்ட மைல்கற்கள் ஏணிப்படி(Ladder) என அழைக்கப்படும்.
Ø ஒவ்வொரு மைல்கல் நிலையிலும் வெவ்வேறு கற்றல் நிகழ்வுகளுக்காக அமைக்கப்படும் படிகள் குறியீடு(logo) என அழைக்கப்படும்.
Ø மைல்கற்கள் எளிமை(Simple)யிலிருந்து கடின(Complex)மானவற்றிற்குச் செல்வதாக அமைக்கப்பட்டிருக்கும்.
Ø மாணவர்கள் குழுக்களாக ஒருங்கிணைக்கப்பட்டு, குழு அட்டைகள் பயன்படுத்தப்பட்டு கற்றல் நிகழும்.
Ø இத்திட்டத்தில் மதிப்பீடு(Evaluation) உள்ளடங்கியுள்ளது. தனியான அட்டைகள்/ செயல்பாடுகள் இதற்கென பயன்படுத்தப்படும்.
Ø வலுவூட்டுதல்(reinforcement) நிகழ்வின்போது ஒவ்வொரு மாணவனுக்கும் தனித்தனி பயிற்சிப் புத்தகம் / பயிற்சித்தாள் வழங்கப்படும்.
Ø மாணவர்களின் முன்னேற்றம்(Progress) இறுதி மதிப்பீடு அட்டை(Annual Assessment Chart)யில் பதிவு செய்யப்படும்.
Ø ஒவ்வொரு மைல்கல்லும் பல்வேறு செயல்பாடுகளைக் கொண்டதாக அமைந்திருக்கும். அறிமுகம்(introduction), வலுவூட்டுதல்(reinforcement), பயிற்சி(practice), மதிப்பீடு(evaluation), குறைதீர்த்தல்(remedial), வளப்படுத்துதல்(enrichment) போன்ற செயல்கள் வெவ்வேறு குறியீடுகளாக(logo) பகுக்கப்பட்டிருக்கும்.

‘செயல் வழிக் கற்றல்’ நிகழ்வின் மூலம் பெறப்படும் பயன்களாக பின்வருவற்றைக் குறிப்பிடுகின்றனர்.

Ø மாணவர்கள் தங்களுக்குரிய வேகத்தில் கற்கிறார்கள்.
Ø தானே கற்றலுக்கு(Self Learning) அதிகமான நேரமும் ஆசிரியர் வழிகாட்டுதலுடன் கற்றலு (Teacher Directed Learning)க்கு குறைவான நேரமும் செலவிடப்படுதல்.
Ø குழுக்கற்றல், இணைக் கற்றல், தானே கற்றல் போன்ற செயல்களுக்கு ஊக்கமளித்தல்.
Ø ஆசிரியரின் கற்பித்தல் நேரம் வரையறுக்கப்பட்டு தேவையான மாணவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் கற்றுத்தரும் நிலை.
Ø கற்றலின் ஒவ்வொரு படிநிலையிலும் மாணவர்களின் பங்களிப்பு உறுதிப்படுத்தப்படுகிறது.
Ø உள்ளிணைந்த மதிப்பீட்டு முறை பின்பற்றப்படுவதால் மாணவர்களை அறியாமலே மதிப்பிடுதல் நிகழ்ந்துவிடல்.
Ø மாணவர்களின் தொடர் வருகையின்மை கவனப்படுத்தப்படல்.
Ø வகுப்பறைச் செயல்கள் மாணவர்களின் தேவை மற்றும் விருப்பம் சார்ந்து அமைந்திருந்தல்.
Ø மாணவர்களுக்கு கற்றல் செயலைத் தேர்ந்தெடுக்கும் உரிமை.
Ø பல்வகுப்புக் கற்றல்/பல்நிலைக் கற்றல் சிறப்பாக கவனப்படுத்தப்படல்.
Ø கவர்ச்சியான அட்டைகள்/செயல்பாடுகள் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டுதல்.
Ø படைப்பாற்றல் மற்றும் தொடர்பு கொள்ளும் திறன் வளர்தல்.
Ø குழுவாக வட்டமாக அமர்வதால் மாணவர்களின் பாதுகாப்பு அதிகமாவதை உணர்தல்.
Ø கற்றல் செயல்களை தேர்ந்தெடுக்க மாணவர்கள் வகுப்பினுள் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுதல்.
Ø ஆசிரியர் - மாணவர் இடைவெளி வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதோடு ஆசிரியர் உதவுபவராக செயல்படுகிறார்.

‘செயல் வழிக் கற்ற’லை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களாக கல்வியாளர்கள் பின்வருவனவற்றைக் கூறுகின்றனர்.

Ø அனைத்துப் பாடக் கருத்துகளையும் கொண்டு செல்ல இயலாமை.
Ø அனைத்து வகை மாணவர்களுக்கும் ஏற்ற தனித்தனிச் செயல்களை அமைக்க இயலாமை.
Ø பாடங்களைக் குறிப்பிட்ட கால அளவிற்குள் முடிக்க இயலாமை.
Ø மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கற்றலுக்கு அதிக நேரமாதல்.
Ø மெதுவாகக் கற்போருக்கு அதிக நேரம் செலவாதல்.
Ø அனைத்து மாணவர்களையும் கற்றலில் ஈடுபடச் செய்யாதிருத்தல்(குழுவாக செயல்படுவதால்).
Ø கருப்பொருள் கருத்துகளுக்கு(Abstract Concept) செயல்கள் அமைப்பதில் உள்ள இயலாமை.
Ø கற்றல் - கற்பித்தல் துணைக்கருவிகள் பயன்படுத்துவதில் ஏற்படும் தேக்கம்.
Ø ஒரே ஆசிரியர் எல்லா பாடங்களையும் மாணவர்களுக்கு வழங்குவதால் மாணவர்களுக்கும்/ ஆசிரியருக்கும் சலிப்பு ஏற்படுதல்.
Ø ஒரே வகுப்பில் மாணவர்கள் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் இருப்பதால் ஏற்படும் மனச்சோர்வு, சோம்பல் போன்ற எதிர்மறைச் சூழலினால் செயல்பட இயலாமை.
Ø ஒரு செயலை மாணவர்களுக்கு வழங்குவதிலிருந்து அதனை முடிக்கும் வரையிலும் தொடர்ந்து அறிவுரைகள் கொடுக்க வேண்டியுள்ளதால் ஆசிரியர் விரைவில் சோர்ந்து விடுதல்.
Ø ‘செயல் வழிக் கற்றல்’ முறையை செயல்படுத்துதல் தொடர்பாக ஆசிரியர் கவனம் மற்றும் சிந்தனை இயக்கம் கொள்வதால் ஓய்வு நேரத்திலும் பணிச் சுமை ஏற்படும் வாய்ப்பு; அதனால் ஏற்படும் மன உளைச்சல்.

மாணவர்கள் குறிப்பிட்டதொரு கற்றல் நிகழ்வில் தனியாகவோ, குழுவாகவோ முழுமையாகவோ ஈடுபட்டு அதனைச் செய்து பார்த்தோ, அதுபற்றி விவாதித்தோ, படங்கள் வரைந்தோ, தகவல் சேகரித்தோ, விளையாட்டின் மூலமோ, பகுத்தாய்ந்தோ, ஐம்புல உணர்வுகளின் வழியாகவோ, மகிழ்ச்சியான முறையில் நிலையான கற்றல் அனுபவத்தைப் பெறுவதே உண்மையில் ‘செயல் வழிக் கற்ற’லாகும். இக்கற்றல் மூலம் மாணவர்கள் பாடப் பொருளினைச் செயல் வடிவில் அறிந்து, புரிந்து, செய்து, பகுத்து, தொகுத்து, மதிப்பிட்டு அறிய முடியும்.

‘செயல் வழிக் கற்றல்’ என்பது முழுமையானதொரு கற்றல் - கற்பித்தல் வழிமுறையாக அமைத்துவிட முடியாது. பாடப் பொருள்களை கற்பிக்க/கற்க கல்வியாளர்கள் பல்வேறு கற்றல் - கற்பித்தல் முறைகளை பரிந்துரைக்கின்றனர். பல்வேறு வகையான கற்றல் - கற்பித்தல் முறைகள்/உத்திகள் தற்போது நடைமுறையில் உள்ளன. ஒரு வகுப்பிற்கென வரையறுக்கப்பட்டுள்ள கலைத் திட்டத்தில் உள்ள அனைத்து வகைப் பாடங்களையும் குறிப்பிட்டதொரு கற்றல் - கற்பித்தல் முறையில் மாணவனுக்கு வழங்கிவிட முடியாது. பாடப்பொருளின் தன்மை, அளவு, மாணவர்களின் மனநிலை போன்ற பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு கற்றல் - கற்பித்தல் முறையை ஆசிரியர் முடிவு செய்கிறார்.

அறிவியல் கணிதம் போன்ற பாடங்களில் உள்ள விதிகளைக் கற்பிப்பதற்கு ‘விதிவருமுறை’ ‘விதி விளக்கு முறை’ போன்ற கற்பித்தல் முறைகளே சிறந்ததாக அமையும். அறிவியல் பாடத்தில் காணப்படும் ஆய்வுகளை மாணவர்களுக்கு விளக்குவதற்கு ‘செய்துகாட்டல் முறை’ என்ற கற்பித்தல் உத்தி பயன்படுத்தப்படுகிறது. புதிய ஒரு அறிவியல் கருத்தை அறிமுகம் செய்வதற்கு ‘விரிவுரை முறை’யே சிறப்பானதொரு உத்தியாக அமையும். வரலாற்றுப் பாடத்தின் பல்வேறு பகுதிகளை விளங்கிக் கொள்வதற்கு ‘களப்பயணம்’ தேவைப்படலாம். அரசர்கள், ஆட்சியாளர்கள் தேசத் தலைவர்கள் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதற்கு ‘நடிப்புமுறை’ சிறப்பாக பயன்படும். குளம் என்ற சூழ்நிலை மண்டலத்தை கற்பிக்க/கற்க ‘செயல்திட்டமுறை’ என்ற கற்றல் - கற்பித்தல் முறையை பயன்படுத்த வேண்டும். தொழிற்சாலைகளினால் ஏற்படும் நன்மை தீமைகளை அறிந்து கொள்வதற்கு ‘ஒப்படைப்பு முறை’ ஏற்புடையதாக அமையும். இதுபோன்று பாடப் பொருளின் தன்மைக்கு ஏற்ப கற்றல் கற்பித்தல் உத்திகளை பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

‘செயல் வழிக் கற்றல்’ என்பதன் உண்மைப் பொருளை உணர்ந்து இப்பயிற்று முறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. மாணவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு இப்பயிற்று முறை உருவாக்கப்பட்டுள்ளதா என்பதே நமக்கு எழும் வினா. உண்மையில் செயல்வழிக் கற்றல் என்பது வெறும் அட்டைகளைப் பயன்படுத்தி வகுப்பறையின் உள்ளே நிகழ்வதுதானா?

தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள 37ஆயிரத்து 486 அரசு, அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் ஏறக்குறைய 38இலக்கத்து 78ஆயிரம் மாணவ மாணவிகள் கல்வி பயிலுகின்றனர். இவர்களுக்காக ஆண்டுதோறும் ஏறக்குறைய ரூ.25 கோடி செலவில் இரண்டு கோடியே 5இலக்கம் பாடப் புத்தகங்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தால் அச்சிடப்படுகின்றன. ‘செயல் வழிக் கற்றல்’ முறையில் அட்டைகளை பயன்படுத்திக் கற்பிக்கப்படுவதற்கு பாடப் புத்தகங்கள் தேவையில்லை என்ற நிலையே காணப்படுகிறது. சென்ற கல்வியாண்டிலே தமிழகம் முழுவதும் ‘செயல்வழிக் கற்றல்’ முறை நடைமுறையில் உள்ளதால் பாடப்புத்தகங்கள் பயன்பாட்டில் இல்லை. பின்னர் எதற்காக பாடப்புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன? 2008-2009ஆம் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளதே! எதற்காக இந்தப் பண வீணடிப்பு?

‘செயல் வழிக் கற்றல்’ முறையில், பாடப் புத்தகம் கைவிடப்பட்டுள்ளதால் படிக்கும் திறன், எழுத்துப்பயிற்சி, மனப்பாடத்திறன், நூலறிவு, வீட்டுப்பாடம் ஆகியவை தேவையற்றதாக ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. பள்ளிகளில் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு திறனான மனப்பாடத்திறனும் இல்லாமல் செய்யும் இம்முயற்சி ஒரு திட்டமிட்ட நடவடிக்கையோ என்ற ஐயத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

‘செயல் வழிக் கற்றல்’ முறை தேவை என ஏதேனும் கல்விக் குழு பரிந்துரை செய்துள்ளதா? கல்வியாளர்கள்/குழந்தை மனவியலாளர்கள் போன்றோர் ஆய்வுகள் மேற்கொண்டு இத்திட்டம் சிறந்ததென அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனரா? தமிழகத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் உலகின் எங்கேனும் அல்லது இந்தியாவின் ஏதேனும் ஒரு மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளதா? எவருமே பரிந்துரைக்காத, எங்குமே செயல்படுத்தப்படாத ஒரு திட்டத்தின் மூலம் தமிழகக் குழந்தைகள் பரிசோதனை எலிகளாக ஆக்கப்பட்டுள்ளது ஏன்?

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் இதன் நிறைகுறைகள் ஆய்வு செய்யப்பட்டதா? கல்வியாளர்களின் கருத்துகள், திட்டத்தை செயல்படுத்தும் ஆசிரியர்களின் கருத்துகள் பெறப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டனவா?

′ஒரு தேசத்தின் எதிர்காலம் வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது′ என்று கோத்தாரி கல்விக் குழு குறிப்பிடுகிறது. எதிர்கால தமிழகத்தை வளர்த்தெடுக்கும் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் இப்புதிய பயிற்று முறை கல்வியினை ஒன்றுமில்லாததாக்கிவிடாதா? வெளி விசைகள் ஏதேனும் இதன் பின்னணியில் செயல்படுகிறதோ?

‘கணக்குப் பிள்ளைகளை உருவாக்கும் கல்வி முறை’ என்று கேலி பேசப்படும் மெக்காலே கல்வி முறைக்கு நாம் விடை கொடுக்க வேண்டியதும் மாற்று கல்வி முறைக்கு நாம் மாற வேண்டியதும் காலத்தின் கட்டாயம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் பல தலைமுறைகளாகப் பின்பற்றிய ஒரு கல்வி முறையிலிருந்து புதிய கல்வி முறைக்கு நாம் மாறும்போது அதுபற்றிய ஆழ்ந்த சிந்தனை, தொலைநோக்குப் பார்வை, முன் தயாரிப்புகள், அடிப்படைக் கட்டமைப்புகள் போன்றவை மிகத் தேவை. அரசின் நடவடிக்கைகளில் ஆர்வம் தெரிகிறதே தவிர நடைமுறைத் தெளிவு இல்லை. ′சமச்சீர்க் கல்வி′ நடைமுறைப்படுத்தப்படப்போவதாக அரசு ஒருபுறம் கூறிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுக் கல்வித்துறை ‘செயல் வழிக் கற்றல்’ என்ற புதிய முறையை ‘அனைவருக்கும் கல்வி இயக்க’த்தின் மூலம் முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. கூறுபட்டும் வேறுபட்டும் கிடக்கும் தமிழகக் கல்விச் சூழலில் எதுவும் எப்போதும் நடக்கலாம்.

′விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்’ என்ற பாடல் வரிகளை ஏனோ முணுமுணுக்கத் தோன்றுகிறது.

எழுதியவர் ம. எட்வின் பிரகாசு ; நாளும் நேரம்: மதியம் வியாழன், நவம்பர் 13, 2008

No comments:

Post a Comment