தமிழ் நாட்டில் எழுத்தறிவைக் கூட்டியதில் அறிவொளி இயக்கத்தின் பங்கும் அந்த இயக்கத்தைத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்ற ச. தமிழ்ச்செல்வனின் பங்கும் முக்கியமானது. அதே தீவிரத்துடன் நடப்பு அரசியல், வரலாறு, சமூகவியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளிலும் இவர் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிறார். இந்திய மற்றும் தமிழக கல்வி முறை குறித்தும் மாற்று கல்வி முறைக்கான தேவை குறித்தும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன் அளித்த நேர்காணலின் முதல் பகுதி.
முதலில் அடிப்படைக் கேள்வி. ஒருவருக்கு ஏட்டுக் கல்வி எதற்குத் தேவைப்படுகிறது? அது எத்தகைய தன்னம்பிக்கையை, பலத்தை ஒருவருக்குத் தருகிறது. உதாரணத்துக்கு, சுரண்டும் பண்ணையாரை ஒரு எளிமையான விவசாயி அனா ஆவன்னா கற்பதன் மூலம் மட்டும் எப்படி எதிர்கொண்டுவிடமுடியும்?
பண்ணையார் கதை எல்லாம் பழைய காலம். இப்போது சுரண்டலின் வடிவங்கள் நேரடியாக முன்போலக் கண்ணுக்குத் தெரிவதில்லை. தான் எவ்விதம் சுரண்டப்படுகிறோம் என்பதைப் புரிந்துகொள்ளவே உழைப்பாளிக்கு கல்வி தேவைப்படுகிறது. 1940களில் தஞ்சை மண்ணில் பண்ணையார்கள், ஜமீன்கள் மற்றும் சைவ மடங்களின் ஆதிக்கத்துக்கும் சுரண்டலுக்கும் எதிராக சாட்டையடிக்கும் சாணிப்பாலுக்கும் எதிராக உழைப்பாளி மக்கள் திரண்டு எழுந்திட பி.சீனிவாசராவ்,ஏ.எம்.கோபு போன்ற படிப்பாளிகளின் துணையும் வழிகாட்டலும் தேவைப்பட்டதை மறந்துவிடக்கூடாது.
இன்று இந்தியாவில் இருக்கும் கல்விச்சாலைகளை ஆளும் வர்க்கமும் ஆளும் வர்க்க அரசும் நடத்துகின்றன. அதில் எப்படி ஒடுக்குமுறைக்கு எதிரான உள்ளடக்கம் இருக்கும்? நம்மை மென்மேலும் மங்குணி ஆக்கத்தான் பாடத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. பாடசாலைகளை அரசு நடத்துவதே ஆளும் வர்க்கத்துக்குத் தேவையான மனித மனங்களைத் தகவமைக்கத்தான். இந்திய ஆளும் வர்க்கமான பெருமுதலாளிகள், பெரு நில உடமையாளர்கள், பன்னாட்டு மூலதனக் கூட்டணிக்கு ஆள் தயாரிக்கும் ஒரு பண்பாட்டுத் தொழிற்சாலைதான் பாடசாலை.
உழைப்பாளிகளை அரசியல்ரீதியாகவும் பண்பாட்டுரீதியாகவும் அடிமைகொள்ள ஆளும் வர்க்கங்களின் நலன் காக்க ஐஏஎஸ் உள்ளிட்ட உயர்படிப்புப் படித்த ஏராளமான பேர்கள் ராப்பகலாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே உழைப்பாளிகள் கண்முன் காணும் யதார்த்தத்தை மட்டும் வைத்துக்கொண்டு போராட்டங்களை இறுதிவரை நகர்த்திச்செல்ல முடியாது. எதிரியின் போக்கைப் புரிந்துகொள்ள கண்டிப்பாகப் படிப்பு வேண்டும். ஆனால் ஆளும் வர்க்கத்தின் பள்ளிப்படிப்பை மட்டும் வைத்துக்கொண்டு உழைக்கும் வர்க்கம் ஒரு ஆணியையும் புடுங்க முடியாது. கார்ல் மார்க்ஸ் போல அம்பேத்கர் போல பள்ளிக்கு வெளியே நிறையப் படிப்பதன் மூலம்தான் போராடுவதற்கான சக்தி கிடைக்கும்.
பள்ளிக்கூடம் தரும் எண்ணறிவும் எழுத்தறிவும் உழைப்பாளி மக்களுக்கு ஒரு திறவுகோல் மட்டுமே. ஆனால் அது இல்லாமல் அறிவின் கதவுகளைத் திறக்க முடியாது. இரண்டு விதமான கல்வி இருக்கிறது. ஒன்று ஆள்பவர்கள் தருவது. இன்னொன்று உழைப்பாளி மக்கள் தாமே கற்றுக்கொள்வது. ஆளும் வர்க்கம் எல்லோருக்கும் கல்வி தருவதே உழைப்பாளி மக்கள் நடத்திய போராட்டத்தினால்தான். அது ஏதோ முதலாளித்துவம் தானே முன்வந்து மக்களுக்குக் கல்வி அளிப்பதாகக் கருதக்கூடாது. ஆகவே அதில் எடுக்க வேண்டியதை மட்டும் எடுத்துக்கொண்டு உழைப்பாளி வர்க்கம் சொந்தக் கல்வியைத் தொடர வேண்டும்.
கல்வி என்பதில் வர்க்கங்களுக்கு அப்பால் இந்த இயற்கையை, பிரபஞ்சத்தை, அதன் இயக்கத்தைப் புரிந்து கொள்வதும் அடங்கியிருக்கிறது.
இந்தியக் கல்வி வரலாறு பற்றிச் சுருக்கமாகச் சொல்லுங்கள்.
வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதபடி முரண்பட்டு நிற்கையில் அரசு என்கிற ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறைக் கருவி தோன்றுகிறது என்பார் லெனின். வெறும் வன்முறைக் கருவியால் மட்டும் மக்களை ஆண்டுவிட முடியாது. உழைப்புச் சுரண்டலை வெற்றிகரமாகத் தொடர முடியாது. ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தை மனப்பூர்வமாக மக்களை ஏற்றுக்கொள்ளச்செய்ய ஆளும் வர்க்கத்தின் கலாச்சார மேலாதிக்கத்தைப் பயன்படுத்தி (cultural hegemony) பண்பாட்டுத் தளத்தில் பல வேலைகளை ஆளும் வர்க்கம் செய்யும். அதில் தலையாய ஒன்றாக இருப்பது தன் ஆளுகைக்குள் இருக்கும் மக்களுக்குக் கல்வி அளிப்பது.
இந்திய சமூகத்தில் அரசு உருவான பின்னரே கல்வி என்பது வந்திருக்க முடியும். இந்திய சமூகத்தின் சிறப்பு அசிங்கமான சாதியக் கட்டமைப்பு அரசு உருவாக்கத்தின் கூடவே வளர்ந்ததுதான். ஆகவே இங்கு சுரண்டும் வர்க்கமும் சாதிய மேலாதிக்கமும் இணைந்தே ஆட்சி புரியும் நிலை ஏற்பட்டது. கல்வியையும் இந்தக் கூட்டணியே முடிவு செய்தது. ஆள்வதற்குத் தேவையான கல்வியை காட்டுக்குள் பர்ணசாலை அமைத்து பிராமண/சத்திரியக் குழந்தைகளுக்கு அளித்தார்கள். அவர்கள் கற்ற/கற்பித்த வித்தைகளை விஞ்சி நின்றதால் பஞ்சமன் ஏகலைவனின் கட்டை விரலை வெட்டி எறிந்தார்கள்.
துரோணாச்சாரியார், ஆளும் வர்க்கக் கல்வியின் அடையாளமாகவும் ஏகலைவன், உழைக்கும் மக்கள் கல்வியின் குறியீடாகவும் காலங்கள் தாண்டியும் நிற்கிறார்கள். காலனியக் காலம் வரையிலும் இக்கல்வி மக்களுக்கு மறுக்கப்பட்டே வந்தது. திண்ணைப் பள்ளிக் காலம் பிறகு வந்தது. அக்கிரகாரம் மற்றும் சில உயர்சாதி மக்களே திண்ணை வைத்த வீடு கட்டிக்கொள்ள முடியும். சூத்திரச் சாதியார் அத்தகைய திண்ணைத் தெருக்களுக்குள் நுழையவே முடியாத தடை இருந்தது. ஆகவே திண்ணைப் பள்ளியும் உயர்சாதியினருக்காகவே இருந்தது.
காலனியக் கல்வி இந்தியாவை ஒட்டச் சுரண்ட அவர்களுக்குத் தேவைப்பட்ட குமாஸ்தாக்களை உருவாக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது. கிழக்கிந்தியக் கம்பெனி ஊழியர்களுக்கு இருந்த பெரும் பிரச்னை மொழி மற்றும் இந்திய மக்களின் வாழ்முறை பற்றிய அவர்களின் அறியாமை. ஆகவே கம்பெனி ஊழியர்களுக்கு உள்ளூர்க்காரரான ஒரு செயலாளர் தேவைப்பட்டார். கிராமப்புறத்திலிருந்து கப்பல் வரைக்கும் சரக்கு வந்து சேரப் பல உள்நாட்டு ஊழியர்கள் தேவைப்பட்டனர். அவர்களும் கம்பெனி ஊழியம்தான் செய்தனர். அவர்களில் முக்கியமானவர் கொமஸ்தா அல்லது குமாஸ்தா எனப்பட்ட ஒருவகை புரோக்கர். கொமாஸ்தா என்பது இடைத்தரகர் எனப் பொருள்படும் ஒரு பெர்சிய மொழிச் சொல்லாகும்.
காலனிய ஆட்சிக்காலத்தில் பார்ப்பனர்கள் முதலிலும் பின்னர் பிற உயர்சாதியினரும் ஆங்கிலக்கல்வி கற்று காலனி ஆட்சியின் பகுதியாகச் சீக்கிரமே மாறினர். 1947க்குப் பிறகும் அதே சாதியினர் அதிகார மையங்களில் தொடர்ந்ததால் கல்விமுறையில் அடிப்படை மாற்றங்கள் எதையும் அனுமதிக்க அவர்கள் விரும்பவில்லை. பாடத்திட்ட உருவாக்கத்தில் (காலனிய ஆட்சிக்காலத்தில்) பிராமணியத்தின் பங்கு பற்றிய ஓர் ஆய்வேட்டை ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வாளர் ஒருவர் சமர்ப்பித்திருப்பதைக் காண முடிந்தது.
இந்தியச் சாதிகளில் உழைப்பாளிச் சாதிகளே அதிகம். அவர்களது வாழ்க்கைச் சூழலில் மனப்பாடம் என்பதே தேவையில்லை. மருத்துவம் பார்க்கும் ஒரு சிறு பிரிவுக்கு மட்டும் அது தேவைப்பட்டிருக்கலாம். அன்றாடம் மந்திரம் ஓதும் சாதியாருக்கே மனப்பாடம் தினசரித் தேவையாக இருக்கும். நம் கல்வி முறையில் மனப்பாடம் இன்றளவும் மையப்புள்ளியாக இருப்பதை நாம் மறைத்துவிட முடியாது.
ஜனநாயகம் வந்ததால் கீழிருந்து வரும் குரல்களுக்குச் சற்றேனும் செவிமடுத்தாக வேண்டிய கட்டாயம் இந்த வர்க்க அரசுகளுக்கு உண்டு என்பதால் அவ்வப்போது கல்விமான்களைக்கொண்ட கமிட்டிகளைப் போட்டுச் சீர்திருத்தங்களைக் கொண்டுவரப்போவதாக பிலிம் காட்டுவார்கள். கோத்தாரி கமிஷன் உள்ளிட்ட பல நல்ல குழுக்கள் நல்ல ஆலோசனைகளை வழங்கினாலும் அவை போடப்பட்டதே கண் துடைப்புக்காக என்பதால் கல்வியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
ராஜிவ் காந்தி, புதிய கல்விக்கொள்கை என்ற பேரில் வளர்ந்து வந்த பன்னாட்டு மூலதனத்தின் தேவைக்கேற்ற ஒரு கல்விக்கொள்கையை முன்வைத்தார். இன்று அது மன்மோகன் சிங்கால் உலகமயப் பொருளாதாரத்தின் தேவைக்கேற்ப மேலும் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.
ஏகலைவன் துரோணாச்சாரியார் புராணக்கதை எந்த அளவுக்கு உண்மை? தொழிற்புரட்சி நடந்து அச்சு ஊடகமும் போக்குவரத்து வசதிகளும் பெருகத் தொடங்கி பல்வேறு வேலைகளுக்கான தேவைகள் அதிகமான பிறகுதான் கல்வி அனைவருக்கும் விரிவாக்கப்பட்டிருக்கிறது. உலகளவில் இதுவே நிலை. அதோடு ஏட்டுக் கல்வி குறித்து முன்பு பெரிய மரியாதை இருந்ததில்லை. ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதில் ஆரம்பித்து, கல்வி கற்காத பரிசல்காரன் நீச்சல் தெரியாத பண்டிதன் உரையாடல் வரை பல உதாரணங்கள் சொல்லலாம். எனவே, ஏட்டுக் கல்வியை அனைத்து சாதியினரும் கற்காததை வேறு கோணத்தில்தான் பார்க்கவேண்டும். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, துவிஜர்கள் நீங்கலாக பிற பிரிவினருக்கான கல்வி ஒப்பீட்டளவில் கூடுதலாகவே தரப்பட்டிருப்பதாக பிரிட்டிஷ் ஆவணங்கள் சொல்கின்றன. பல இடங்களில் பிராமணர்களைவிட சூத்திர சாதியினர் அதிகம் பேர் கல்வி கற்றிருக்கின்றனர். சூத்திர/தலித் சாதிகளில் இருந்து ஞானிகள் தோன்றியிருக்கிறார்கள். பிராமணர்களுக்கு வேதம் கற்றுத் தந்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் திராவிடர் கட்சியினர் செய்வதைப்போல் புறந்தள்ளிவிட முடியுமா என்ன?
ஏகலைவன் கதையை மட்டும் வைத்துக்கொண்டு கல்வியின் வரலாறே இதுதான் என்று சொல்லவில்லை. அனைவருக்கும் கல்வி என்பது தொழிற்புரட்சிக்குப் பிறகு சாசன இயக்கம் போன்ற தொழிலாளர் இயக்கங்களும் கம்யூனிஸ்ட் அறிக்கையும் வந்த பிறகு எழுந்த முழக்கம் என்றுதான் நானும் சொல்கிறேன்.
ஒரு சமூகத்துக்குத் திட்டமிட்டுக் கல்வி தர வேண்டிய அவசியம் அரசு உருவாக்கத்துக்குப் பிறகுதான் வந்திருக்க முடியும். அதை அவர்கள் எல்லோருக்கும் தரவில்லை. ஆனால் அதற்காக சூத்திரர்களும் பஞ்சமர்களும் கல்வியறிவற்றவர்களாக இருக்கவில்லை. அவர்களுக்கான கல்வியை அவர்களே பார்த்துக்கொண்டார்கள். நாராயணகுரு தாழ்த்தப்பட்ட ஈழவ சமூகத்தில் பிறந்தாலும் வர்க்கலையில் சமஸ்கிருதப் பள்ளியைத் தொடங்கி எல்லாச் சாதியினரும் கற்றுக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தியது ஓர் உதாரணம். சூத்திர /தலித் சாதிகளில் ஞானிகளோ மேதைகளோ சுவாமிஜிகளோ வரவில்லை என்று யார் சொன்னது. அவர்களை உயர்சாதியினர் வணங்கினார்களா? இன்றும் வணங்குகிறார்களா? அந்தச் சாமிகளின் பெயர்களை உயர்சாதியினர் தம் பிள்ளைகளுக்குச் சூட்டுகிறார்களா? பிராமணர்கள் பள்ளிக்கூடம் நடத்தி அதில் சமஸ்கிருதத்தையும் வேதங்களையும் சூத்திரர்களுக்கும் தலித்துகளுக்கும் கற்றுக்கொடுத்தார்களா?
சூத்திரர்களும் தலித்துகளும் சர்வசாதாரணமாக அக்கிரகாரத்துக்குள்ளே போய்ப் பாடம் கற்றது போன்ற சித்திரத்தை நீங்கள் வரைய முடியாது. தமிழகத்திலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் சூத்திர சாதியினரும் தலித்துகளும் கல்விக்காகவும் சமமான கல்வி கற்றாலும் சமமான வாய்ப்பு கிட்டாததாலும் நடத்திய எண்ணற்ற போராட்ட வரலாற்றை நீங்கள் சொல்லும் பிரிட்டிஷ் ஆவணங்களால் மறுத்துவிட முடியுமா என்ன?
அயோத்திதாசப்பண்டிதரும் பெரியாரும் அம்பேத்கரும் பல நூற்றுக்கணக்கான நிகழ்வுகளை ஆவணப்படுத்தியிருக்கிறார்களே! அவையெல்லாம் பொய்யாகிவிடுமா?அக்கிரகாரத்துக்குள் போய் சிறு வயதில் என் அப்பாவும் அடுத்த தலைமுறையில் நானும் பட்ட அவமானம் பற்றி என்னுடைய பேசாத பேச்செல்லாம் நூலில் எழுதியிருக்கிறேன். இன்றைக்கு நான் ஒரு அக்கிரகாரத்தில்தான் குடியிருந்து வருகிறேன். நுட்பமான அவமதிப்புகளைச் சந்தித்தும் இருக்கிறேன். பழைய காயங்களிலிருந்து புறப்பட்ட உணர்வுதான் இங்கே வந்து வாழ ஆசைப்பட்டது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
இன்று எனக்கு துளியும் பிராமண துவேஷம் கிடையாது. எண்ணற்ற நெருக்கமான நண்பர்கள் பிராமண சமூகத்தில் எனக்குண்டு. ஆனால் வரலாறு வரலாறுதானே? அதை தி.க.வினர் சொல்லும் பாணியில் நான் சொல்லவில்லை. ஆனாலும் சொல்லத்தானே வேண்டும்? தவிர, தி.க சொல்வதெல்லாம் அவதூறு என்று புறக்கணிப்பதும் ஒரு பயங்கரமான அரசியல்தானே?
தமிழகக் கல்வி வரலாறு பற்றிச் சொல்லுங்கள்.
கல்வி மத்திய மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் (Concurrent list)வைக்கப்பட்டுள்ளது.இந்தியக் கல்வி வரலாற்றின் ஒரு பகுதிதான் தமிழகக் கல்வி வரலாறும். கூடுதலான சில சிறப்பு அம்சங்கள் பற்றி சொல்ல வேண்டும். பகுத்தறிவு இயக்கம் பொது வெளியில் விரிவாக நடைபெற்ற மாநிலம் தமிழ்நாடு. ஆனால் அவ்வியக்கத்தின் பகுதியான திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்து சுமார் 50 ஆண்டுகாலம் ஓடிவிட்டாலும் தமிழகக் கல்வி முறையிலும் பாடத்திட்ட வடிவமைப்பிலும் பகுத்தறிவுக்கு இன்னும் இடம் கிடைக்கவில்லை.
ராஜாஜி கொண்டுவந்த புதிய கல்வித் திட்டம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அன்று வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக இருந்தது. போதிய நிதிவசதி இல்லை. அனைவருக்கும் கல்வியைக் கொடுத்தாக வேண்டும் என்ற முனைப்பு இருந்தது. எனவே, ஷிப்ட் முறையைக் கொண்டுவந்தார். ஆனால், பலரும் குற்றம் சாட்டுவது போல் குழந்தைகள், அப்பாவின் வேலையை மட்டுமே கற்க வேண்டும் என்று அவர் சொன்னாரா? அல்லது, க்யூபக் கல்விமுறை தொடங்கி கம்யூனிச கல்விமுறைவரை பலரும் வலியுறுத்தும் தொழில் கல்வியை வெளிப்படுத்தினாரா?
1953இல் முதலமைச்சராக இருந்த ராஜாஜி ஒரு கல்வித்திட்டத்தை அறிமுகம் செய்தார். Modified Scheme of Elementary Education 1953 என்று அறிமுகப்படுத்தப்பட்ட அத்திட்டத்தின்படி மாணவர்கள் பாதிநேரம் பள்ளிக்கூடத்தில் மொழிப்பாடம், கணிதம், அறிவியல் போன்றவற்றைப் பயில்வார்கள். பள்ளிக்கு வெளியே மூன்று மணிநேரம் அவர்களுடைய தாய் தந்தையரோடு அவர்கள் செய்யும் தொழிலைக் கற்றுக்கொள்வார்கள். பெண் குழந்தைகள் அவரவர் வீடுகளில் வீட்டு வேலை செய்ய வேண்டும். இதற்கு வருகைப்பதிவேடு, கண்காணிப்பு எதுவும் இருக்காது. நேரு, ராஜேந்திர பிரசாத் போன்றோர் இத்திட்டத்தை ஆதரித்தனர்.
இத்திட்டம் குலக்கல்வித்திட்டம் என திராவிட இயக்கத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்டதோடு தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களே எதிர்க்க நேர்ந்தது. பின்னர் இத்திட்டம் கைவிடப்பட்டு, ராஜாஜி முதலமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது.
இன்று நிதானமாக ராஜாஜி முன் வைத்த திட்டத்தை வாசித்துப்பார்த்தால் ஒரு பார்வையில் இது மகரங்க்கோ (Anton Markarenko) சோவியத்தில் செயல்படுத்திய திட்டத்தின் கூறுகளோடு இருப்பதாகப்படும்.ஆனால் இறுகிப்போன சாதிய சமூகமான இந்தியாவில் இது சாதிகளைக் கேள்விக்குள்ளாக்குவதற்குப் பதில் அதனோடு சமரசம் செய்துகொள்ளவே உதவும் என்றே இப்போதும் எனக்குப் படுகிறது. பின்னர் வந்த காமராஜர் அனைவருக்கும் இலவசக்கல்வி,கட்டாயக்கல்வி,மதிய உணவு ஏற்பாடு என்று இயங்கியதுதான் பெரிய வெற்றியைக்கொண்டு வந்தது. ஆரம்பப்பள்ளிச் சேர்க்கை காமராசர் காலத்தில் இருமடங்காக உயர்ந்தது.
ராஜாஜி முன் வைத்த திட்டத்திலிருந்து சில கூறுகளை வேறு விதமாக மாற்றி இப்போது முயற்சி செய்யலாம். கக்கூஸ் கழுவுவது, சாக்கடை சுத்தம் செய்வது செருப்புத் தைப்பது,சவரம் செய்வது போன்ற தொழில்கள் இன்றைக்கும் சாதி ரீதியானவையாகவே தொடர்கின்றன. இதை மாற்றும் கடமை பள்ளிக்கல்விக்கு உண்டு. ஆகவே அனைத்து உயர்சாதிப் பிள்ளைகளும் இத்தொழிலில் பள்ளிக்காலத்தில் பயிற்சி பெறலாம் என கொண்டு வரலாம். தொழில்களின் மீது ஏற்றப்பட்டுள்ள சாதி இழிவுகளுக்கு எதிரான உணர்வைப் பிஞ்சு மனங்களில் விதைக்கலாம்.
சரியாகச் சொன்னீர்கள். காந்தி இதைத்தான் தென்னாப்பிரிக்காவிலேயே செய்தார். ராமகிருஷ்ண பரமஹம்சரும் இதையே முன்னெடுத்திருக்கிறார். சுலப் இண்டர்நேஷனல் என ஒன்றை ஆரம்பித்த டாக்டர் பிந்தேஷ்வர் பத்தக் கூட மிகப் பெரிய புரட்சியை அமைதியாக முன்னெடுத்திருக்கிறார். சூத்திர, தலித், கம்யூனிஸ போராளிகள் இது தொடர்பாக ஒரு துரும்பையும் கிள்ளிப் போட்டதாகத் தெரியவில்லை. ஆலய நுழைவுப் போராட்டத்துக்கு முன்னதாக பீ வாளி எதிர்ப்புப் போராட்டம் அல்லவா முதலில் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கும் மனுவாதிகள்தான் முன்வரவேண்டியிருக்கிறது.
நன்றி : ஆழம் மாதாந்திர இதழ்
No comments:
Post a Comment