தனியார் பள்ளிகள் 25 சதவிகித இடங்களை பின்தங்கிய வகுப்பினருக்கும் ஏழைகளுக்கும் ஒதுக்கவேண்டும் என்கிறது கல்வி உரிமைச் சட்டம். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதைக் காட்டிலும் முக்கியமானது, இது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பது. அரசு ஏன் தனியார் பள்ளிகளிடம் தன் பொறுப்பைப் பகிர்ந்துகொள்ளவேண்டும்? நம் சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார் , பொதுப்பள்ளி கோரி அதற்கான இயக்க கட்டமைப்பை உருவாக்கி வரும் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
கல்வி உரிமைச் சட்டம் நீங்கள் எதிர்பார்த்தது போல் அமைந்திருக்கிறதா?
இல்லை. ஏழை, நலிவடைந்தோருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் அரசு கல்வி அளிக்கவேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. ஆம், அம்பானி, டாடா, பிர்லா வீட்டுப் பிள்ளைகளுக்கும் சேர்த்துத்தான் இலவசக் கல்வி கேட்கிறோம். காரணம், கல்வி என்பதை அரசுதான் தரவேண்டும். சாசனச் சட்டம் 21 வாழ்வுரிமையை வலியுறுத்துகிறது. கண்ணியமிக்க வாழ்க்கை வழங்குவதே வாழ்வுரிமை. ஒரு குடிமகனின் கண்ணியமான வாழ்க்கை என்பது யாரையும் சாராமல், யாசிக்காமல், அடிமையாக இல்லாமல் வாழ்வது. ஆனால், இன்றுள்ள நிலையில் அம்பானி மகன்கூட தன் கல்விக்காக அப்பாவை எதிர்பார்த்து வாழ்வது என்னவிதமான கண்ணியம்? அரசு கல்வி வழங்கினால்தான் அரசு மீதான அக்கறையுள்ள குடிமகனாக ஒரு மாணவன் உருவாக முடியும். நாட்டிலுள்ள பல கோளாறுகள் கட்டுப்படுத்தப்படும். வளர்ந்த நாடுகளில் இதுதான் நிலை! அதனால்தான் அங்கு முன்னேற்றம் நிகழ்கிறது.
எல்லோருக்கும் கல்வி அளிக்க அரசிடம் நிதி இருக்குமா?
அனைவருக்கும் கல்வி வழங்கப்படும் என்று அரசே 1950ல் அறிவித்தது. பிகாரில் கடும் வறட்சியும் உணவுப் பஞ்சமும் நிலவிவந்த சமயம் அது. ஒப்பீட்டளவில் இன்று நம் பொருளாதாரம் எப்படி இருக்கிறது? சந்திரயான், அக்னி என்று போட்டிபோட்டுக்கொண்டு விண்ணைத் தொட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனாலும் நம்மால் வாக்குறுதியை நிறைவேற்றமுடியவில்லை. பஞ்சம் நிலவிய காலத்தில் வெளிப்படுத்திய உறுதியும் லட்சியமும் பொருளாதார பலம் கூடிக்கொண்டு இருக்கும் இப்போது இல்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது. கல்விக்காக என்று சொல்லி 2005 முதல் 3 சதவிகித செஸ் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
இனி, கூடுதலாக 25 சதவிகித மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இணைந்து படிப்பார்கள் என்பது நல்ல விஷயம்தானே?
தரமான கல்வியை நாங்கள் வழங்குகிறோம் என்று சொல்வதற்குப் பதில், தரமான கல்வி தரும் இடத்தில் 25 சதவிகிதம் உங்களுக்காக இடம்தர உத்தரவிடுகிறோம் என்று சொல்வது கேலிக்கூத்தானது. இதை எஸ்.சி., எஸ்.டி. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப்போல் பார்க்கக் கூடாது! இது எங்கே சென்று முடியும் என்றால், படிப்படியாக அரசுப் பள்ளி மாணவர் எண்ணிக்கை குறைந்து, காலப்போக்கில் உரிய மாணவர்களின் வருகைக் குறைவால் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவிடும்.
நான் ஏதோ கற்பனையில் கூறுவதாக நினைக்க வேண்டாம். இதே சென்னை மாவட்டத்தில், உரிய மாணவர் வருகைக் குறைவால் 30 சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் சத்தமில்லாமல் மூடப்பட்டுவிட்டன. நூற்றுக்கணக்கான அரசுப் பள்ளிகள் மூடுவிழா கண்டுள்ளன. கர்நாடக அரசு ஆணையின்படி, புதிய கல்வி உத்தரவு வெளியான ஒரே மாதத்தில் அங்கு 3000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதையெல்லாம் பார்க்கும்போது, தனியார் பள்ளிகள் லாபம் அடையவேண்டும் என்பதுதான் அரசின் நோக்கமோ என்று சந்தேகம் எழுகிறது. அரசு தன் பொறுப்பிலிருந்தும் கடமையிலிருந்தும் நழுவியிருக்கிறது.
அப்படியென்றால், தனியார் பள்ளிகள் அரசு உத்தரவை ஏன் எதிர்க்கின்றன?
தனியார் பள்ளிகள் இத்தனை காலமாக வசதியான, வாய்ப்புள்ள குழந்தைகளை மட்டுமே சேர்த்து நூறு சதவிகித தேர்ச்சியைக் காட்டி பழகிவிட்டார்கள். வசதியான பின்னணியில் இருந்து வந்த குழந்தைகள் என்பதால் வீட்டிலும் பெற்றோரின் உதவி அவர்களுக்குக் கிடைக்கிறது. வீட்டுப்பாடம் என்னும் சுமையையும் அவர்களே தாங்குகிறார்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் தனிப் பயிற்சி ஏற்பாடு செய்து சொந்த முயற்சியால் குழந்தைகளை வெற்றிபெறச் செய்கிறார்கள். இந்த வெற்றியை தனியார் பள்ளிகள் தங்கள் வெற்றியாக விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். இந்நிலையில், ஏழை வீட்டுப் பிள்ளைகளைச் சேர்த்தால், பாடம் நடத்த வேண்டிய, கற்றலுக்கு உதவ வேண்டிய அவசியம் ஏற்படும். கற்றல், கற்பித்தல் என்றால் என்னவென்றே தெரியாத பள்ளிகளுக்கு இது பேரிடியாக இருப்பதால்தான் எதிர்க்கிறார்கள்.
தனியார் பள்ளிகளில் என்னதான் சொல்லிக்கொடுக்கிறார்கள்?
அங்கு, ‘கோச்சிங்’தான் நடக்கிறதே தவிர, ‘டீச்சிங்’ இல்லை!
பள்ளி என்பதற்கான வரையறை என்ன?
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சமூகத்தில் எல்லா வாய்ப்புகளும் மறுக்கப்பட்ட பெரும் பகுதி மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்பை அரசு ஏற்படுத்தி தருகிறது. இந்தப் பள்ளிகளை ஆய்வு செய்ய மாவட்டக் கல்வி அலுவலர், மூத்த கல்வி அலுவலர், பள்ளிக் கல்வி இயக்குநர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைமைப் பொறுப்பில் பள்ளிக் கல்வி இயக்குநர் இருக்கிறார். ஆனால், மெட்ரிக் பள்ளிகளுக்குக் கல்வி அதிகாரிகள் யாரும் இல்லை. ஆய்வாளரும் இயக்குநரும் மட்டுமே உள்ளனர். முறையான பள்ளிக் கல்வியை அரசுப் பள்ளிகள் மட்டும்தான் வழங்குகின்றன. வழங்க முடியும்!
படம்: வி. சேகர்
நன்றி: ஆழம் மாதாந்திர இதழ்
No comments:
Post a Comment