Thursday, 10 July 2014

கல்வி

சமச்சீர் கல்வியும், சமச்சீரின்மையும்

தமிழகக் கல்வி அமைப்பு சமூக ஏற்றத்தாழ்வை மேலும், மேலும் விரிவடையச் செய்வதோடு நியாயப்படுத்தவும் செய்கிறது. இது தன்னிச்சையாக உருவானதல்ல. ஆட்சியாளர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை தான். 1970வரை பெரும்பாலும் ஏற்றத்தாழ்வுகள் அற்ற ஒரே வகைப்பட்ட தாய்மொழி அல்லது மாநில மொழிவழி கற்கும் பள்ளிகள் தான் இருந்தன. இந்தியாவின் அனைத்துத் துறைகளிலும் மிகச் சிறந்த வல்லுனர்கள், அறிவுஜீவிகளை உருவாக்கியதும் இப்பள்ளிகள் தான். அதன் பிறகுதான் இந்திய கல்வியின் சரிவும் சீரழிவும் தொடங்கியது.

1976ஆம் ஆண்டில் 34 மெட்ரிக் பள்ளிகள் மட்டுமே இருந்த தமிழகத்தில் இன்று சுமார் 10 ஆயிரம் வரை பள்ளிகள் உருவாகியுள்ளன. பல விதமான சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உள்ளடக்கியதாக இப்பள்ளிகள் கட்டணத்திற்கேற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இது போன்ற பள்ளிகளில் வசதிபடைந்த மாணவர்கள் மட்டுமே கல்வி கற்க முடியும். 1986இல் புதிய பொருளாதார கொள்கைக்கு பின்பு கல்வித்துறை மிகப்பெரும் வணிக சந்தையாக மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மெட்ரிக் பள்ளி வாரியம், மத்திய கல்வி வாரியம், மாநில பள்ளிவாரியம், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள், சர்வதேச பள்ளிகள் என்று ஒவ்வொரு வகைப்பட்ட பள்ளிகளிலும் பாடத்திட்டம், கற்றல் மற்றும் கற்பித்தல் முறை ஆங்கில வழிக்கல்வி, பள்ளி வளாகம், வகுப்பறை சூழல், கட்டணங்கள் என அனைத்தும் வெவ்வேறான சமூக ஏற்றத்தாழ்வை உருவாக்கக் கூடியதாக அமைந்துள்ளது. “கல்வி என்பது சமத்துவ சமூகத்தை உருவாக்கும் ஒரு கருவி’’ ஆனால், தமிழகத்தில் கல்விச் சேவை என்பது புறந்தள்ளப்பட்டு மெல்ல மெல்ல பெரும் வணிகமாக மாற்றப்பட்டுள்ளது. ஆக இலாபம் மட்டுமே நோக்கமாக கொண்டு இப்பள்ளிகள் செயல்படுகிறது. இதனால் லட்சக்கணக்கான மாணவர்களும், பெற்றோர்களும் கடுமையாக சுரண்டப்படுகின்றனர்.

2004ஜூலை 16இல் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி தீ விபத்தும், அதில் 94 பச்சிளம் குழந்தைகள் கருகியதும் கல்வி வியாபாரத்தின் கோரமுகம் என்பதை யாராலும் மறுக்கவும், மறக்கவும் முடியாது. அதிலும் குற்றம் இழைத்த அதிகாரிகளை தப்பிக்க வைத்தது என்பது அரசும், நீதிமன்றமும் கல்வி வியாபாரமயக் கொள்கைக்கு ஆதரவாக இருப்பதையே தெளிவுபடுத்தியுள்ளது.

சமூக ஏற்றத்தாழ்வை உருவாக்கும் கல்வி அமைப்பு தகர்த்தெறியப்பட வேண்டும் என்றால் கல்வி வியாபாரமயக் கொள்கைக்கு எதிரான ஒன்றுபட்ட வலுவான மக்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்கிற அவசியத்தையும் இன்றைய சூழல் நமக்கு உணர்த்துகிறது. தமிழகத்தில் கல்வி வியாபாரமாக்கலுக்கு எதிராக நடந்த போராட்டங்களின் விளைவே சமச்சீர் கல்விக்கான போராட்டமாகும்.

முதற்கட்டமாக, 2010_11 கல்வியாண்டிலிருந்து முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பில் சமச்சீர்கல்வி அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் அறிக்கையின் முக்கிய பரிந்துரைகள் அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும் வகையில் பொதுகல்விச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.

ஐந்து வகையான வாரியங்களுக்கு மாறாக எல்லாப் பள்ளிகளையும் இணைத்து தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய ஒரு பொதுக்கல்வி வாரியம் அமைக்கப்பட வேண்டும்.

எல்லாப் பள்ளிகளுக்கும் பொருந்தும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஆசிரியர் தகுதி ஆகியவை நிர்ணயிக்கப்படவேண்டும்.

அனைத்து குழந்தைகளுக்கும் பொதுவான பாடத்திட்டம், பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

உலகளாவிய நடைமுறைப்படி பள்ளிகளில் பயிற்று மொழி தாய்மொழியாகவோ, வட்டார மொழியாகவோதான் இருக்கவேண்டும்.

தேர்வுகளை மையப்படுத்தியே வகுப்பறை கற்பித்தல் என்ற நடைமுறையை மாற்றி பொதுத்தேர்வு முறையில் பெருமளவு சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்..

மாணவரது பன்முக வளர்ச்சிக்கு முக்கிய இடம் அளிக்கப்பட வேண்டும். பள்ளிகளில் விளையாட்டு, நுண்கலை, கைத்தொழில், விருப்பத்தொழில், இசை போன்ற கலைத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.

இத்திட்டத்தை அமல்படுத்திட மாநில அரசு கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீட்டை உறுதிசெய்திட வேண்டும். உள்ளிட்டவைகளை குழு தனது அறிக்கையில் பரிந்துரை செய்தது.

பரிந்துரைகள் மீது அரசின் முடிவுகள்

சமச்சீர் கல்விக்குழுவின் அறிக்கை பரிந்துரைகளில் எவை அரசால் ஏற்கப்படுகின்றன. எவை ஏற்கப்பட வில்லை அதற்கான காரணங்கள் என்ன என்பதை அரசு இதுவரை தெளிவுபடுத்தவில்லை.

பள்ளிக்கல்வி குறித்து எந்த ஒரு முடிவையும் எடுக்கமுடியாத ஒரு அதிகாரமற்ற தூரியமும், சட்டமும் அவசர அவசரமாக இயற்றப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் சமச்சீர்கல்வி என்கிற ஒருவார்த்தை கூட இடம் பெறவில்லை. நான்கு கல்வி வாரியமும் கலைக்கப்படாமல் ஒருங்கிணைக்கப்பட்டு கடமைக்காக உருவாக்கப்பட்டுள்ளதால் நான்கு கல்வி வாரியங்களும் அரசால் ஏற்படுத்தப்பட்டவைதான் அவற்றின் விதிமுறைகளும் அரசால் உருவாக்கப்பட்டவையே ஆகவே, நான்கு வாரியங்களையும் கலைத்துவிட்டு புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு ஒரே கல்வி வாரியமாக உருவாக்குவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அரசு தனியார் பள்ளி முதலாளிகளை பகைத்துக்கொள்ள தயாரில்லை விரும்பவில்லை என்பதைத்தான் அரசின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கை காட்டுகிறது. பொதுப்பாடத்திட்டம் கொண்டு வந்ததோடு தனது கடமை முடிந்துவிட்டதாக அரசு கருதுவது யாரை ஏமாற்றுவதற்கு மேலே சொல்லப்பட்டுள்ள அடிப்படை அம்சமான முக்கிய பரிந்துரைகளை நிறைவேற்றாமல் சமச்சீர் கல்வி பற்றி பேசவே முடியாது. இவற்றை விட்டு விட்டு கல்வித்துறையில் புரட்சிசெய்துவிட்டதாக வெற்று புகழ்பாடி விடுவதோடு, சமச்சீர் என்கிற வார்த்தைக்கு புதிய அர்த்தத்தை தமிழக அரசு கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது.

பொதுப்பள்ளிமுறை, அருகமைப் பள்ளிகள் ஆகிய இரண்டு அம்சங்களையும் விட்டுவிட்டு சமச்சீர்கல்வி பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. கல்வி வணிக சந்தையாக மாறாமல் இருந்தபோதே 1964 ஆண்டே கோத்தாரி கமிஷன் நம் நாட்டிற்கு ஒரு பொதுப்பள்ளி முறை தேவை என்று வலியுறுத்தியது. இந்திய அரசியல் சாசன லட்சியமான சமத்துவம், ஜனநாயகம் மதச்சார்பின்மையே பாதுகாக்கப்பட வேண்டுமானால் எல்லோருக்கும் சமவாய்ப்புகளை உருவாக்கும் பொதுப்பள்ளி முறை தேவை என்று வலியுறுத்தினார். இந்நிலை ஏற்படுத்தப்பட வில்லை என்றால் விரும்பத்தகாத சமூக ஏற்றத்தாழ்வுகளும், பிரிவினைகளும் உருவாகும் என்று எச்சரித்திருந்தார்.

1964 கோத்தாரி கமிஷனாலும் 1986 ஆம்ஆண்டு தேசிய கல்வி கொள்கையாலும் வலியுறுத்தப்பட்ட கல்வி முறை மூன்று முறை ஆட்சியாளர்களால் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டும் இன்றுவரை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. தனது வீட்டருகில் உள்ள பள்ளியில் சேர்ந்து படிக்கும் உரிமை குழந்தைகளுக்கும் பள்ளி அருகில் உள்ள எல்லா குழந்தைகளை சேர்த்துகொள்ளும் கடமை பள்ளிகளுக்கும் வேண்டும். இப்படிப்பட்ட அருகமைப்பள்ளிகள் குறித்தும் பொதுப்பள்ளி முறை குறித்தும் இந்த அரசுகள் மௌனம் சாதித்தே வருகின்றன.

இன்றுள்ள நிலையில் தனியார் பள்ளிகளின் கட்டுக்கடங்காத கட்டணங்களை முறைப்படுத்த வேண்டுமென்ற அக்கறையோடு செயல்படாமல், இரட்டைத்தன்மையோடு மக்களை குழப்பி வருகின்றனர். கட்டண ஒழுங்கு முறை சட்டத்தின் அடிப்படையில் கட்டணநிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணத்தை கூட தனியார் பள்ளிகள் ஏற்றுக்கொள்ளவில்லை மாறாக நீதிமன்ற உத்தரவை கூட காற்றில் பறக்கவிடும் நிலைதான் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் அப்பள்ளியில் உள்ள வசதிக்கேற்ற கட்டண நிர்ணயம் என்பதே சமச்சீரின்மையை நியாயப்படுத்துவதாகவே உள்ளது. இக்கட்டண நிர்ணயம் என்பதிலேயே சமச்சீர் கல்வியின் அடிப்படை அம்சமே கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி முதலாளிகளை, கல்வி வியாபாரத்தை பாதுகாக்கும் ஒரு முதலாளித்துவ அரசால் சமச்சீர் கல்வியை அமல்படுத்த முடியாது. முதலாளித்துவ நிலையை உயர்த்தி பிடிக்கும் இந்த அரசின் சமச்சீர்கல்வி என்கிற நாடகத்தை மக்களிடம் அமல்படுத்த வேண்டும். அனைவருக்கும் சமமான தரமான பொதுக்கல்வி முறைக்கான வலுவான போராட்டத்திற்கு அனைத்துதரப்பு மக்களும் அணிதிரளவேண்டும்.

No comments:

Post a Comment