Friday, 11 July 2014

பள்ளிகளில் நவீன தீண்டாமை - என். சொக்கன்

சில மாதங்களுக்கு முன்னால், பெங்களூரில் எங்கள் மகளின் பள்ளியில் பெற்றோர்: ஆசிரியர் கூட்டம் நடந்தது. வந்தவர்கள் அனைவருக்கும் ஒரு சீட்டைக் கையில் கொடுத்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மினி வக்கீல் நோட்டீஸ் ரேஞ்சுக்கு மிரட்டல் தொனியில் எழுதப்பட்டிருந்த அந்தச் சீட்டின் வடிகட்டப்பட்ட சாரம்: ‘இந்திய அரசாங்கம் கல்வி உரிமைச் சட்டத்தைக் கொண்டுவர உத்தேசித் திருக்கிறது. இதன்படி, தனியார் பள்ளிகள் அனைத்திலும் கால்வாசி இடங்களை ஏழை மாணவ, மாணவியருக்கு இலவசமாகத் தரவேண்டுமாம். இது நியாயமா? இவர்களெல்லாம் படிக்க வந்துவிட்டால் உங்களுடைய பிள்ளைகள் என்ன மாதிரி பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்வார்கள்? இதை நீங்கள் அனுமதிக்கலாமா?’
தீர்வையும் அவர்களே சொன்னார்கள். ‘நீங்க எதுவும் செய்யவேண்டாம், தனியார் பள்ளிகள் சார்பா வாதாடறதுக்காகவே ஒரு பெரிய வழக்கறிஞரை நியமிச்சிருக்கோம், அதுக்கான செலவுகளையெல்லாம் நாங்க ஏத்துக்கறோம், நீங்க இந்தச் சீட்டுல ஒரு கையெழுத்து மட்டும் போட்டாப் போதும்!’
மளமளவென்று அவர் கையில் இருந்த தாள் மொத்தமும் பெற்றோரின் கையொப்பங்களால் நிரம்பியது. இந்தப் பள்ளியில் மட்டுமல்ல, இப்படி இந்தியா முழுவதும் கல்வி உரிமைச் சட்டம் பற்றி எதுவும் தெரியாமலே, அல்லது ஒருதலைப்பட்சமாக முன்வைக்கப்பட்ட மிரட்டல்களை மட்டுமே வாசித்துவிட்டு, அதற்கு எதிரான வழக்கின் ‘பிரதிநிதி’களாக மாறிய பெற்றோர்தான் அதிகம். இதன்மூலம் ஏராளமானோர் தங்களது குழந்தைகளின் எதிர்காலம் கருதி, அவர்களே இந்தக் கல்வி உரிமைச் சட்டத்தைக் கண்டித்து ஒரு குடையின்கீழ் திரள்வதான ஒரு பிம்பத்தைத் தனியார் பள்ளிகள் உருவாக்கின.
இந்தியாவில் 6 முதல் 14 வயது வரையில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வி ஓர் அடிப்படை உரிமை என்பதுதான் இந்தச் சட்டத்தின் ஒரு வரிச் சுருக்கம். இதன்படி, அரசுப் பள்ளிகள்மட்டுமல்ல, தனியார் பள்ளிகளும் மொத்த இடங்களில் இருபத்தைந்து சதவிகிதத்தை ஏழைக் குழந்தைகளுக்காக ஒதுக்கிவைத்துவிடவேண்டும்.
தனியார் பள்ளிகள் ஏழை மாணவர்களுக்கு இலவசமாகப் பாடம் சொல்லித்தரப்போவதில்லை. இந்தப் பிள்ளைகளின் கல்விக் கட்டணத்தை அரசாங்கமே செலுத்திவிடும். எனில், என்னதான் பிரச்னை அவர்களுக்கு? ‘காசு கொடுத்துப் படிக்கிறவர்களுக்கும் இலவசமாகப் படிக்கிறவர்களுக்கும் எங்களால் ஒன்றாகப் படிப்புச் சொல்லித்தரமுடியாது. அப்படிச் செய்தால் கல்வியின் தரம் குறைந்துவிடும்’ என்கிறார்கள்.
இது நவீன தீண்டாமை. இதைப் பரப்புவதற்கு நாடு முழுவதும் உள்ள பல தனியார் பள்ளிகள் ஒன்று சேர்ந்து கூட்டமைப்புகளை உருவாக்கி கல்வி உரிமைச் சட்டத்தை எதிர்த்தன. நீதிமன்றத்துக்குச் சென்றன. பெற்றோர் கையெழுத்துகளையும் வலியச் சேகரித்தன. ஆனால் இவர்களுடைய கோரிக்கையை ஏற்க மறுத்தது உச்ச நீதிமன்றம். தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது.
ஆனாலும், ஆரம்பத்திலிருந்தே இச்சட்டத்தை எதிர்த்துவந்த தனியார் பள்ளிகள் இன்னும் தங்கள் கையில் இருக்கும் சாட்டையைக் கீழே போடுவதாக இல்லை. சட்டப்படி, இலவசமாகப் படிக்கும் குழந்தைகள், பணம் கொடுத்துப் படிக்கும் குழந்தைகள் என்று எந்தப் பள்ளியும் பாகுபாடு பார்க்கக்கூடாது. ஆனால் பல பள்ளிகளில் ‘கோட்டா சில்ரன்’ என்றே பெயர் சூட்டி இவர்களை அவமானப்படுத்துகிறார்களாம், வகுப்பில் இவர்களைத் தனியே பிரித்து உட்கார வைக்கிறார்களாம். மற்ற குழந்தைகள் இவர்களுடன் பேசக்கூடாது என்று எழுதப்படாத விதிமுறையாம். இவர்கள் கொண்டுவரும் பள்ளிப் பை, டிபன் பாக்ஸ் போன்றவற்றைத் திறந்து பார்த்துப் பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கிறார்களாம். வகுப்பில் மற்ற பிள்ளைகளின் பெயர் எழுதப்பட்டிருக்கும் அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரில் இவர்களுடைய பெயர்கள்மட்டும் இருக்காது. இவர்களிடம் எந்தக் கேள்வியும் கேட்கப்படுவதில்லை. பரீட்சை கிடையாது. ஹோம் வொர்க் தருவதில்லை.
ஏன் இப்படி நடத்துகிறீர்கள் என்று கேட்டபோது, ‘அடுத்த பேரன்ட்ஸ், டீச்சர்ஸ் மீட்டிங்ல இதையெல்லாம் சொல்லுங்க. இப்ப ஒண்ணும் செய்யமுடியாது’ என்று சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டார்கள். பிரச்னை என்னவென்றால், பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களுக்கும் இந்தப் பிள்ளைகளின் தாய், தந்தையர் அழைக்கப்படுவதில்லை.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒரு சம்பவம் சமீபத்தில் பெங்களூரில் நந்தினி லேஅவுட்டில் உள்ள ஆக்ஸ்ஃபோர்ட் பள்ளியில் நடந்திருக்கிறது. கல்வி உரிமைச் சட்டத்தின்படி தங்கள் பள்ளியில் சேர்ந்திருக்கும் ஒன்றாவது வகுப்பு படிக்கும் நான்கு குழந்தைகளை வித்தியாசப்படுத்திக் காட்டவேண்டும் என்பதற்காக, அவர்கள் தலைமுடியை வெட்டிக் கொடுமைப்படுத்தியிருக்கிறது ஒரு பள்ளி. கேட்டால் சக மாணவர்கள்மீது பழியைப் போடுகிறார்கள். Karnataka Unaided School Managements’ Association (KUSMA) என்னும் அமைப்பில் உள்ள ஒரு பள்ளி இது. (தி ஹிந்து, ஜூலை 18, 2012).
இந்தக் கொடுமையைக் கண்டு கோபப்பட்ட பெற்றோரோ மற்றவர்களோ நேரில் வந்து நியாயம் கேட்டால், பள்ளி நிர்வாகம் அவர்கள்மீதே போலிஸில் புகார் செய்கிறது. Kusmaவின் தலைவரான ஜி. எஸ். சர்மா இப்படித் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார், ‘ஏழைக் குழந்தைகள் எங்கள் பள்ளிகளில் சேர்ந்தால், மற்ற பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இங்கே படிக்க வைக்கத் தயங்குவார்கள். நல்ல தண்ணீரில் சாக்கடை சேர்ந்தால் மொத்தமும் கெட்டுப்போகும் அல்லவா?’
ஏழைக் குழந்தைகளைச் ‘சாக்கடை’ என்று வர்ணித்த சர்மாமீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புதிய போராட்டம் தொடங்கியிருக்கிறது. அரசாங்கம் என்ன சொல்கிறது? ‘புதிய சட்டத்தின்படி படிக்க வரும் மாணவர்களை எந்தப் பள்ளியாவது தவறாக நடத்தினால், அது மனித உரிமை மீறல். அந்தப் பள்ளிகள்மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்ந்தால், அவர்களுடைய உரிமம் முடக்கப்படும்.’
இதற்கிடையில் கல்வி உரிமைச் சட்டத்தை எதிர்த்து ஓதண்ட்ச் நிர்வாகம் ஒரு வார காலம் போராட்டம் நடத்திய பிறகு பள்ளிகளைத் திறந்துள்ளது. ஒத்த கருத்து எட்ட முடியவில்லை என்று சொல்லி ஜி.எஸ். சர்மா தன் பதவியை ராஜிநாமா செய்திருக்கிறார். ஏழைக் குழந்தைகளைச் சாக்கடை என்று தான் கூறவில்லை என்றும் மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதே போல், குழந்தைகள் தலைமுடி கத்தரிக்கப்பட்டது பள்ளி நிர்வாகத்தால் அல்ல என்றும் விளையாட்டுத்தனமாக சில மாணவர்கள் செய்த செயல் அது என்றும் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment