கடந்த சில வருடங்களாக மாணவ, மாணவியரின் தற்கொலைகள் அதிர்ச்சி தரும் விதத்தில் அதிகரித்துள்ளன. இவர்கள் அனைவருமே நிஜ வாழ்க்கையில் சொந்த முயற்சியில் காலடி எடுத்து வைக்காதவர்கள். கல்வி என்பது மனதுக்கு, அறிவுக்கு பல விஷயங்களை குறித்துத் தெளிவாக்கும் வழிமுறை. அது மட்டுமின்றி எந்தத் துறையில் காலடி எடுத்து வைக்க முடியும் என்பது பற்றி முடிவு செய்யும் அளவுகோலும்கூட. ஆனால் இதனாலேயே மணவர்கள் மனதில் எதிர்பார்ப்பையும், பயத்தையும் உருவாக்கும் கருவியாகவும் செயல்படுகிறது.
இந்த இரு உணர்வுகளையும் அதீதமான முறையில் பெற்றோர்களும் மற்றவர்களும் அக்கறை என்ற பெயரால் தூண்டி விடுகிறார்கள். ‘இந்த நவீன யுகத்தில் நன்றாகப் படித்தால்தான் கவுரமான நிலையை அடையலாம்’ என்பதை மட்டும் வலியுறுத்தாமல் அப்படியில்லாவிட்டால் வாழ்க்கையே சூனியமாகும் என்பதையும் சேர்த்தே சொல்கிறார்கள். ‘நல்லா படிச்சா டாக்டர், என்ஜினியர், ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரி ஆகலாம். இல்லன்னா ஓட்டல்ல தட்டு எடுக்க வேண்டியதுதான்’ என்று சொல்லாத பெற்றோர்கள் மிகவும் குறைவு. இதன் அர்த்தம் என்ன? எல்லாவற்றுக்கும் மேலே இருக்க வேண்டும் அல்லது அடிமட்டத்தில் சிக்கி சிதைந்து போவாய்!
இடையில் இருக்கும் பல துறைகள் பற்றி மாணவர்களைச் சிந்திக்க விடுவதேயில்லை. 10 வருடங்களுக்கு முன்னால் ப்ளஸ் டூவில் இருந்த பாடப் பிரிவுகள் குறைவு. ஆனால் இன்றைக்கு பல பத்து மடங்குகளாகி விட்டன. இதே நிலைதான், கலை, தொழிற்கல்வி ஆகியவற்றின் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளிலும் உள்ளது. ஆனால் இவற்றைப் பற்றி எத்தனை பெற்றோர்கள் அறிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள்?
இதைத்தவிர மாணவர்களை ப்ளஸ் டூ, கல்லூரி படிப்புகளில் சேர்க்கும்போது பெற்றோர்கள் சில தவறுகளை ‘நல்ல நோக்கத்துடன்’ செய்கிறார்கள். முதலாவது, ‘நான்தான் இந்த கல்வியைப் படிக்கவில்லை, என் பிள்ளையாவது படிக்கட்டுமே’ என்ற முடிவில் குறிப்பிட்ட கல்விப் பிரிவில் சேர்த்து விடுவது.இரண்டாவது, அவன்தான் குறிப்பிட்ட கல்விப் பிரிவு வேண்டும் என்று கேட்டான் என்று சொல்லும் பெற்றோர்கள் ஏராளமானவர்கள். குறிப்பிட்ட பிரிவில் அவனுக்குத் திறமை இருக்கிறதா என்பது பற்றியெல்லாம் சிந்திப்பதில்லை.
அடுத்ததாக, தனது பொருளாதார நிலைமைக்குத் தகுந்த கல்லூரியை தேர்வு செய்யாதது பெரும் பிரச்னையில் கொண்டுவிடும் என்பதை யாரும் உணர்வதில்லை. இப்போதெல்லாம் வங்கிக் கடன் ஓரளவுக்காவது சுலபமாக கிடைக்கிறது. இதை படிப்பு செலவுகளுக்கு மட்டும்தான் ஈடாக்க முடியும். பணம் படைத்த கல்லூரிகளில் கேட்கப்படும் இதர கட்டணங்கள், தங்கிப் படிக்கும் மாணவருக்கு வேண்டிய அன்றாட வசதிகள், உடை, கைச் செலவு ஆகியவற்றுக்கு மற்ற மாணவர்களைப் போல நம்மால் செலவு செய்யமுடியுமா என்று பெற்றோர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை.
நுழைவுத் தேர்வில் மட்டும் மிகக் கடுமையாக முயற்சித்து தேறிவிட்டு, புகழ் பெற்ற கல்லூரிகளில் சேர்பவர்களால், அங்கே இயல்பாகவே பணக்காரர்கள், ஆங்கில மொழி நன்கு அறிந்தவர்கள், நாகரிகம், உடல் தோற்றம் ஆகியவற்றில் மெருகு கூடியவர்கள், கையில் பணம், பிற வசதிகள் போன்றவற்றை பிறவியிலிருந்தே பெற்றவர்கள் போன்றவர்களோடு, இவை இல்லாதவர்கள், அவர்களுக்குள்ளேயே ஒப்பீடு செய்து உள்ளுக்குள் வெதும்புகிறார்கள்.
கல்வியில், நட்பில், புதிதாக கிடைத்த உறவில் அடி விழுந்தால், தாங்க முடியாமல் நொறுங்கி போகிறார்கள். சமீபத்தில், புகழ் பெற்ற கல்லூரி ஒன்றில் படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த கடிதத்தில் ‘படிப்பில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை என்பதால் தேர்வில் தோல்வி அடைவது நிச்சயம். அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன்’ என்று எழுதி வைத்திருந்தார்.
அடுத்ததாக, கல்லூரி ஆசிரியப் பெருமக்களும் தங்களை அறிந்தோ அறியாமலோ மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்க காரணமாகி விடுகிறார்கள். ப்ளஸ் டூ முடித்து வரும் மாணவர்கள், ஒரு வித எதிர்பார்ப்போடு, பயத்தோடு வருகிறார்கள். பள்ளிக்கட்டுப்பாடுகள் (சீருடையிலிருந்து ஆரம்பித்து பல விஷயங்கள்) இருக்காது என்ற எண்ணத்துடன் வருகிறார்கள். இவர்கள் தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் செய்யும்போது அவர்களை அவமானப்படுத்தும் விதத்தில் நடத்துவது, பயமுறுத்துவது அவர்கள் மனத்தில் எந்த விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி ஆசிரியர்கள் யோசிக்க வேண்டியது அவசியம்.
துரிதமாகச் செயல்படும் மனம் உள்ள பருவம் என்பதால், தவறான முடிவுகளையும் அவர்கள் விரைவில் எடுத்துவிடுவார்கள். இந்த விஷயத்தை பெற்றோர்களும் புரிந்து கொண்டால் வீட்டுக்கும் நாட்டுக்கும் லாபம்.
(ஆழம் இதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்.)
No comments:
Post a Comment