Wednesday, 4 June 2014

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பிரசார இயக்கம் தொடக்கம்

By dn, சென்னை
First Published : 03 June 2014 04:05 AM IST

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான பிரசார இயக்கத்தை சென்னையில் தொடங்கிவைத்து துண்டு பிரசுரங்களை விநியோகிக்கிறார் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வி.வசந்திதேவி. உடன் (இடமிருந்து) தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் சக்திவேல், தலைவர் மணி, பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பேராசிரியர் மாடசாமி, கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபால்.

அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்காக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநிலம் தழுவிய பிரசார இயக்கம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வி.வசந்திதேவி பிரசார இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி டி.என்.பஹிரா பானு 500-க்கு 499 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றார்.

அதேபோல், பிளஸ் 2 தேர்வில் 5 அரசுப் பள்ளி மாணவர்கள் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 3 ஆயிரம் மாணவர்கள் 185-க்கு மேல் கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவர்களின் இந்தச் சாதனையை பொதுமக்கள் மத்தியில் எடுத்துக்கூறி, அரசு, மாநகராட்சிப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதோடு, அந்தப் பள்ளிகளை வலுப்படுத்துவதற்காக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்தப் பிரசார இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சியில் பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நோட்டீஸ்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபால், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பேராசிரியர் மாடசாமி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment