அங்கத்திலே குறை இருந்தாலும் அன்பு குறைவதுண்டோ? இப்பாடலின் வரிகளை புரிந்துகொள்ளும் அவசியம் காவல் துறைக்கு ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சி பெற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், ஆசிரியர் தகுதித் தேர்வில் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச மதிப்பெண்ணான 60 சதவீதத்தை குறைக்கும்படி சென்னையில் போராட்டங்கள் நடத்தினர். அவர்களை சமாளிக்கத் தெரியாமல் காவலர்கள் பெண்களிடம் கடுஞ்சொற்களை பிரயோகித்ததுடன், போராடியவர்களை வாகனங்களில் ஏற்றிச் சென்று தொலைதூரப் பகுதிகளில் நிர்க்கதியாக இறக்கிவிட்டனர். வெள்ளைக் குச்சி உதவியுடன் வழக்கமான பாதையில் செல்பவர்களை தவிக்கவிட்ட காவலர்களுக்கு உடனடித் தேவை உளவியல் ரீதிப் பயிற்சியே.
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளுக்கு செவிகொடுக்க சமூக நலத்துறையினருக்கு நேரம் இல்லை. இறுதியில் நசுரூல்லா என்ற பார்வையற்ற வழக்கறிஞர் விடுத்த வேண்டுகோளை சுயமான ரிட் மனுவாக நீதிமன்றம் ஏற்றபின் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மீண்டுமொரு தகுதித் தேர்வு வைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
கட்டாய இலவசக் கல்வி சட்டம் இயற்றிய பின்னர், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களின் தகுதியை அறிய தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் தவிர, நூற்றுக்கணக்கான சுயநிதிப் பள்ளிகளில் பயின்று பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெறும் அனைவரின் திறனும் சோதிக்கப்பட வேண்டும். ஆசிரியர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பக பதிவு மூப்பின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் நடைமுறை இங்கு மட்டுமே இருக்கிறது.
மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பதவிகளுக்குக் கோரப்படும் விண்ணப்பத்தில் 57 வயது வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 57 வயதில் நியமனம் செய்யப்படுபவர் ஓராண்டு மட்டுமே சேவையாற்ற முடியும். ஆசிரியர் பயிற்சியில் பட்டம் (அ) பட்டயம் பெற்றதை மட்டுமே வைத்து வேலை அளிப்பது முறையற்றது. கல்வித் தகுதி பெற்ற அனைவருக்கும் போதிக்கும் திறன் இருக்கும் என்று நம்ப முடியாது. அரசுப் பள்ளிகளில் 5-ம் வகுப்பு தாண்டியும் அரிச்சுவடி படிக்க முடியாதவர்கள் பலர் உண்டு.
உள்கட்டமைப்பு வசதியின்றி மாட்டுக் கொட்டகைகளில் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளில் தேர்ச்சி பெற்றோரின் உண்மை அறிவை சோதிக்கவே தகுதித்தேர்வு. அதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றும் 0.67 % மட்டுமே முதல் தேர்விலும், இரண்டாவது வாய்ப்பில் 3 %-க்கும் குறைவானர்கள் மட்டுமே தேர்வு பெற்றனர். இது அதிர்ச்சி அளிக்கிறது. இத்தேர்வு பதவிக்கான போட்டித் தேர்வு அல்ல; தரத் தேர்வு மட்டுமே.
பட்டியல் இனத்தைச் சேர்ந்த சிலர் தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச 60% மதிப்பெண்ணை குறைக்கக் கோரிய வழக்குகளை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. தகுதித் தேர்வின் நோக்கம் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வரும் ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி அளிப்பது என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ விழையும் சட்டத்தின் நோக்கம் அவர்களுக்கு அனைத்து இடங்களிலும் சம வாய்ப்பு அளிப்பதற்கே; சலுகைகளுக்கு அல்ல. எனவே, மதிப்பெண்ணை குறைக்க அவர்களில் சிலர் போட்ட ரிட் மனுக்களும் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடியாகின.
இப்பிரச்சினையின் முழு பரிமாணத்தை உணர்ந்து தனி நிகழ்வாக நடத்தவிருக்கும் தகுதித் தேர்வில் வெற்றி பெற மாற்றுத் திறனாளிகள் முயற்சிக்க வேண்டும்.- நீதியரசர் சந்துரு
நன்றி : தமிழ் இந்து
No comments:
Post a Comment