உலகிலேயே மிகப் பெரிய சொத்து, மனித வளம். ஒவ்வொரு நாட்டின் மிகப் பெரிய பலம், அதன் அறிவார்ந்த சமுதாயம்தான். இந்த அறிவார்ந்த சமுதாயத்தின் அடித்தளம், பள்ளிக்கூடங்கள்தான் என்பது அனைவருமே அறிந்த விஷயம்தான். ஆனால், இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் கல்வி நிலவரம் கவலைக்கிடமான நிலையில் இருப்பதையும் இதற்குப் புத்துயிர் அளிப்பதற்கான முனைப்பான செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்படாததையும், பள்ளிக் கல்வித் துறை சார்ந்தவர்கள், முழுமையாக உணர்ந்ததாகத் தெரியவில்லை.
தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் பதின்பருவ மாணவ சமுதாயத்தின் எதிர்காலத்தை முடிவுசெய்வது பன்னிரண்டு ஆண்டுகாலப் பள்ளிக் கல்விதான்.
ஒவ்வொரு ஆண்டும் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் அதிகரித்துவருகிறது. 2010-ல் 85.2% இருந்த தேர்ச்சி விகிதம் 2011-ல் 85.9%, 2012-ல் 86.7%, 2013-ல் 88.1%, 2014-ல் 90.6 என அதிகரித்த வண்ணம் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் உயர வேண்டும், அதாவது உயர்த்திக் காட்டப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் எழுதப்படாத ஒரு சட்டம். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் பின்பற்றப்படும் சட்டம் இது. இதே நிலை நீடித்தால், அதிகபட்சம் இன்னும் 10 வருடங்களில் 12-ம் வகுப்புத் தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சியை எட்டி இமாலய சாதனை படைத்த ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என வெற்றி முரசு கொட்டிக்கொள்ளும் புரட்சிகரமான நிலையும் வரலாம். ஆனால், இப்படிப்பட்ட சாதனை முழக்கம் பள்ளிக் கல்வியின் உண்மையான நிலையை, குறிப்பாக 12-ம் வகுப்பு மாணவர்களின் உண்மையான கல்வித் தகுதியைப் பிரதிபலிக்கவில்லை என்பதுதான் கவலை தரும் நிலவரம்.
தாராளமயக் கொள்கை
10-ம் வகுப்பில் 500 மதிப்பெண்களுக்குத் தேர்வு எழுதியவர்கள், 12-ம் வகுப்பில் 1,200 மதிப்பெண்களுக்குத் தேர்வு எழுதுகின்றனர். 11-ம் வகுப்பின் பாடங்கள் அடியோடு புறக்கணிக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைப் பொறுத்தவரை பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர்கள் தொடங்கி, ஆசிரியர்கள் வரையிலான அனைவரின் அக்கறையும் கவனமும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மட்டுமே மையம் கொண்டுள்ளது. இதனால், 11-ம் வகுப்புப் பாடங்கள்குறித்தோ அந்த வகுப்பு மாணவர்களின் கல்வித் தரம் குறித்தோ யாருமே பொருட்படுத்துவதில்லை.
தனியார் பள்ளிகளிலோ காலாண்டுத் தேர்வு முடிந்ததுமே 11-ம் வகுப்புகளில் 12-ம் வகுப்புப் பாடங்களை நடத்தி மதிப்பெண்களைக் குவிப்பதற்கான ‘வித்தைகளை’ ஆரம்பித்துவிடுகின்றனர். தமிழக அரசின் கல்வித் துறையும் மாணவ, மாணவியரை சுலபமாகத் தேர்வுகளை எழுத வைப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுகிறது. அதிக எண்ணிக்கையில், அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைய வைப்பதற்கு ஏற்பதான் வினாத்தாள்களும் தயாரிக்கப்படுகின்றன. விடைத்தாள்களைத் திருத்து வதிலும் ‘தாராளமயக் கொள்கைதான்’ பின்பற்றப் படுகிறது.
200/200 அல்லது 199/200, 198/200 மதிப்பெண்கள் பெறும் விடைத்தாள்கள் மட்டும் கூடுதல் கவனத்துடன் சரிபார்க்கப்படுகின்றன. தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்ணில் 5, 6 மதிப்பெண்கள் குறைவாகப் பெறுவோரின் விடைத்தாள்கள் மீண்டும் மதிப்பிடப்பட்டுச் சலுகை மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. இந்த இரண்டு நிலைக்கும் இடைப்பட்டோரின் விடைத்தாள்கள் திருத்தப்படுவது, சம்பந்தப்பட்ட ஆசிரியரின் திறன், மனநிலை ஆகியவற்றைப் பொறுத்தது எனச் சொல்லப்படுகிறது. மதிப்பெண் கூட்டலில் தவறு செய்வது ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது.
இதன் எதிரொலியாகத்தான் மறுமதிப்பீடு கோருவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். பன்னிரண்டாண்டு பள்ளிக் கல்வி முடித்து, அதிக மதிப்பெண்களுடன், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் போன்ற முதன்மையான பொறியியல் கல்லூரிகளில் சேரும் ‘பிரைட் ஸ்டூடண்ட்ஸ்’ எனப்படும் தலைசிறந்த மாணவ, மாணவியரில் பெரும்பாலோர் முதல் பருவத் தேர்வில் பல பாடங்களில் வெற்றி பெறுவதில்லை. அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக, ஒரு சிலர் தற்கொலையை நாடும் அளவுக்குப் போய்விடுகின்றனர்.
செக்கு மாடுகளைப் போல மாணவர்களை நடத்தி, 12-ம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வித்தைகளில் தேர்ச்சி அடைய வைத்ததன் விளைவுதான் இந்தத் துயர நிலவரம்.
படித்ததெல்லாம் வீணா?
சென்னையில் சர்வசாதாரணமாக, மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் பிரபலமான ஒரு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு 1,147 மதிப்பெண்களுடன் காமர்ஸ் பிரிவில் தேர்ச்சி அடைந்த ஒரு மாணவர், ஒரு முன்னணிக் கல்லூரியில் மாலை நேர வகுப்பில் தற்போது பி.காம். முதலாண்டில் பயில்கிறார். பகலில் சி.ஏ. பயிற்சி வகுப்புக்குச் செல்கிறார். ‘இன்டர் தேர்வில்’ வெற்றி நிச்சயம் என்று உறுதியுடன் சொல்கிறார்.
“12-ம் வகுப்பில் கடம் தட்டி மனப்பாடம் செய்ய வைத்தனர். பாடம் எங்கே நடத்தினார்கள்? பொருளா தார வளர்ச்சி என்றால் என்ன? அதற்கான அடிப்படை விஷயங்கள் என்ன என்பது பற்றியெல்லாம் பொருளா தார வகுப்பு ஆசிரியர் கற்றுத்தரவும் இல்லை, இதுபற்றி யோசிக்க வேண்டும் என்றுகூட எங்களுக்கு வழிகாட்டவும் இல்லை” என்று கவலையுடன் குறிப்பிட்டார்.
கிட்டத்தட்ட எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் இதுதான் நிலவரம். பள்ளிக்கல்வி என்ற அடித்தளத்தை வலுவாக்காமல், கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் அறிவார்ந்த சமுதாயத்தை, துறை சார்ந்த நிபுணர்களை, மேதைகளை எப்படி உருவாக்க முடியும்?
கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட ஏ.எஸ்.ஈ.ஆர். புள்ளிவிவரத்தில் தமிழகத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோருக்குச் சாதாரண வகுத்தல் கணக்குத் தெரியவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு குழந்தைகளில் 53.4% பேருக்கு மட்டுமே தமிழ் எழுத்துகளை அடையாளம் காணத் தெரிகிறது. மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகளில், இரண்டு எழுத்து, மூன்றெழுத்து தமிழ்ச் சொற்களை வாசிக்கத் தெரிந்தோர் 10.3% மட்டுமே. இவர்கள்தான் இன்னும் எட்டு அல்லது பத்து ஆண்டுகளில் 12-ம் வகுப்புத் தேர்வை எதிர்கொள்ளப்போகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் 12-ம் வகுப்புத் தேர்வு எழுதும் மொத்த மாணவ, மாணவியரில் 90% பேர், அரசு, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்கின்றனர். இவர்களில் சுமார் 85 சதவீதத்தினர் தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் கல்வித் தரம் உயராவிட்டால், சமூக முன்னேற்றத்தை எப்படி எட்ட முடியும்? இதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார்?
எண்ணையும் எழுத்தையும் கற்றுக்கொடுத்துக் குழந்தைகளின் அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டிய ஆசிரியர்களே… எத்தனையோ நூற்றாண்டுகளாகக் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டு இப்போதுதான் பள்ளிக்கூட வாசலில் அடியெடுத்து வைத்திருக்கும், படிப்பறிவு இல்லாத பரம்பரையைச் சேர்ந்த எங்கள் குழந்தைகளைக் கரையேற்றுவதற்கு உங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்?
- மு. சிவலிங்கம், ஊடகவியலாளர்,
மொழிபெயர்ப்பாளர்,
தொடர்புக்கு: mushivalingam@yahoo.co.in
ஆதாரம்: தமிழ் இந்து
No comments:
Post a Comment