Sunday, 1 June 2014

அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி மினி மாரத்தான்

Author: கம்பம்,

அரசு பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
அரசு பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்து பலப்படுத்தவும் பாதுகாக்கவும் வேண்டும், வளர்ந்த நாடுகளிலும் இருப்பதைப் போல இனம், மொழி, சாதி, ஏழை பணக்காரர் போன்ற வர்க்கப்பாகுபாடற்று அனைத்துக் குழந்தைகளும் இணைந்து படிக்கும் அருகமைப் பொதுப்பள்ளிகளை இந்தியாவில் கொண்டுவரவேண்டும். அந்தப்பள்ளிகள் குழந்தைகளின் அனைத்து திறமைகளையும் வளர்க்கும் வகையில், தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருக்கவேண்டும். இப்பள்ளிகள் முழுவதும் அரசின் செலவிலும் பொறுப்பிலும் இயங்க வேண்டும் போன்ற அம்சங்களை வலியுறுத்தி தேனி மாவட்டம் கூடலூரில் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

ஓட்டத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், குரு பயிற்சி அகாதெமி மற்றும் அக்னி சிறகுகள் பயிற்சி மையத்தோடு இணைந்து நடத்தின. அறிவியல் இயக்கத்தின் கூடலூர் கிளைத்தலைவர் கு.மோகன் தலைமை வகித்தார். கிளைச் செயலர் சூர்யபிரகாஷ் வரவேற்றார். பிரசார இயக்க துண்டுப்பிரசுரத்தினை அறிவியல் இயக்கத்தின் மாவட்டக் கல்வி ஒருங்கிணைப்பாளர் க.முத்துக்கண்ணன் வெளியிட குரு அகாதெமி நிர்வாக இயக்குநர் போ.பிரபாகரன், அக்னிச்சிறகுகள் பயிற்சி மைய இயக்குநர் பிரகாஷ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். மினி மாரத்தான் போட்டியினை அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலர் வி.வெங்கட்ராமன் முன்னிலையில் மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர் தே.சுந்தர் கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரசு பள்ளி நமது பள்ளி, அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்ப்பது குறித்த வாசகங்களைக் கொண்ட பதாகைகளைத் தாங்கி 150 க்கும் மேற்பட்ட வீரர்கள் ஓடினர்.

கூடலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஓடத் துவங்கி லோயர் கேம்ப் பென்னிகுவிக் மண்டபம் வரை சென்று திரும்பினர்.

போட்டியில் முதல் பரிசினை எஸ்.பிரதீப், இரண்டாம் பரிசினை ம.ரீகன், மூன்றாம் பரிசினை சி.அமர்நாத் ஆகியோர் பெற்றனர். தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் கம்பம் ஓன்றியக் கிளைத்தலைவர் பா.சிவக்குமார், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.பாண்டியன் ஆகியோர் பரிசுகளை வழங்கி கௌரவித்தனர். கிளைப் பொருளாளர் ராஜ்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அறிவழகன், நிருபன், ராஜேஷ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

No comments:

Post a Comment