Monday, 2 June 2014

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

பதிவு செய்த நாள் : புதன்கிழமை, மே 28, 3:40 PM IST
விருதுநகர், மே 28–


விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், பெரிய பேராலி கிராமத்தில் பொதுமக்களிடையே கல்வி விழிப்புணர்வு மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ஹரிகரன் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:–

தமிழக முதல்–அமைச்சர், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ– மாணவியர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், கல்வி ஊக்கத் தொகைகள், கல்வி உபகரணங்கள், விலையில்லா காலணி, விலையில்லா சீருடைகள், சத்துணவு உள்பட பள்ளி குழந்தைகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள் வழங்கி கல்வித்தரத்தை உயர்த்தி வருகிறார். எனவே நடப்பு கல்வியாண்டில் 10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றதுடன் கூடுதல் மதிப்பெண்களும் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

மேலும், குழந்தைகள் ஆர்வத்துடன் கற்க செயல் வழிக்கற்றல் முறை, மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையான தரமான சமச்சீர் பாடத் திட்டம், இலவச பேருந்து பயண அட்டை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிகணினி, மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு ஆசிரியர்கள் போன்ற எண்ணற்ற வசதிகளை மாணவர்களுக்கு தமிழக அரசு செய்து வருகிறது. அரசு வழங்கும் சலுகைகள் அனைத்தும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு இப்பேரணி நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ராமச்சந்திரன், பெரியபேராலி ஊராட்சி மன்ற தலைவர் ஜக்கம்மாள் சோனை, தலைமை ஆசிரியர்கள் ஜான்சிராணி, செல்வராஜ், தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் இப்ராகிம் மற்றும் நிர்வாகிகள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிவராமகிருஷ்ணன், வான்மதி உள்பட பள்ளி மாணவ–மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி: மாலைமலர்

No comments:

Post a Comment