Friday 20 November 2015

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை: அச்சுறுத்தும் அபாயங்கள்

பள்ளிக்கல்வியில்….

Ø படித்தவர்கள் அனைவருக்கும் வேலை இல்லை.. காரணம் வேலைவாய்ப்புகள் அரசால் திட்டமிட்டு உருவாக்கப்படவில்லை. இந்த உண்மையினை மறைத்து திறன்கள் இல்லாமை தான் காரணம் எனக்கூறி திறன்களை வளர்க்கிறோம் என்ற பெயரில் எட்டாம் வகுப்பிற்கு மேல் சேவை சார் தொழிற்கல்விக்கு (service) பரிந்துரைக்கிறது. இதன்மூலம் கிராமப்புற மாணவர்கள் பெரும்பாலானோர் உயர்கல்விக்கு செல்லும் வாய்ப்பைத் தடுத்து அவர்களை கூலித் தொழிலாளர்களாக மாற்றும் அபாயம் உள்ளது.

Ø மாணவர்களின் கல்வித்தரம் குறைவாக இருப்பதற்கு பாடத்திட்டம், தேர்வுமுறை, ஆசிரியர், கட்டமைப்பு, நிர்வகித்தல், சமூகச்சூழல், வீட்டுச்சூழல் எனப் பல காரணங்கள் உள்ளன. ஆனால் கட்டாயத் தேர்ச்சி முறை தான் காரணம் என முன்வைக்கப்படுகிற அபாயம் உள்ளது.

Ø கல்வித்தரம் குறைவிற்கு ஆசிரியர்களே முக்கியக் காரணம் எனக் கருதி தகுதி / திறன் அடிப்படையில் பணி உயர்வு வழங்குதல் பரிந்துரைக்கப்படும் அபாயம் உள்ளது.

Ø கல்வியில் தரமில்லாததற்கு ஆசிரியர்களின் வருகையின்மையையும் காரணம் கூறி ஆசிரியர்களுக்கு ரேகைப் பதிவிடும் முறையை (Bio-Metric Attendance) அமுல்படுத்தும் அபாயம் உள்ளது..

Ø தாய்மொழிக் கல்வி பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆங்கிலவழிக்கல்விக்கு வித்திடும் அபாயம் உள்ளது..

Ø மும்மொழிக்கொள்கை தான் மத்திய அரசின் கொள்கை என அறிவிக்கிறது. தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு வேட்டுவைக்கிறது. இந்தி, சமஸ்கிருத திணிப்பு அபாயம் உள்ளது..

Ø சமூக அறிவியல், சூழல் அறிவியல் ஆகிய பாடங்கள் கைவிடப்பட்டு அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் அபாயம் உள்ளது..

Ø அறிவியலும் கணிதமும் கூட அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கும் பிரச்சனைகளை அலசும் திறனை வளர்ப்பதற்குமான கல்வியாகப் பார்க்காமல் உற்பத்திக்கான கல்வியாக மட்டுமே அணுகும் அபாயம் உள்ளது..

Ø ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வ சிக்‌ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ), ராஷ்ட்ரிய சிக்சா அபியான் (ஆர்.எம்.எஸ்.ஏ) ஆகிய திட்டங்களுக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல ஆயிரம் கோடி நிதி வெட்டப்பட்டுள்ளது. இச்சூழலில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு பற்றியே பேசப்படவில்லை..

Ø கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பல்வேறு அம்சங்களை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டம் குறித்து எதுவுமே இல்லை..

உயர்கல்வியில்….

Ø உயர்கல்வியில் மாணவர்கள் திறன் / தரம் இல்லாமைக்கு நிறுவனங்களின் நிர்வாகத் திறனின்மையே காரணம் என்பதை விவாதப் பொருளாக முன்வைப்பதன் மூலம் உயர்கல்வியில் உள்ள பிரதானப் பிரச்சனைகளைப் பின்னுக்குத் தள்ளுகிறது..

Ø ஒரு உயர்கல்வி நிறுவனம் எந்தப் பகுதியில் செயல்படுகிறது எந்த சமூக மாணவர்களுக்குக் கல்வி தருகிறது என்பதைக் கணக்கிடாமல் உயர்கல்வி நிறுவனங்களை கால இடைவெளியில் தேசிய தர மதிப்பிடுதல், அளவிடுதல் செய்து அதனடிப்படையிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்கிறது. தரம் பெற்ற கல்லூரிகள் அவர்களாகவே கட்டணம் நிர்ணயித்து வசூலித்துக் கொள்ளலாம் எனப் பரிந்துரைக்கிறது. இதனால் கிராமப்புறக் கல்லூரிகளும் கிராமப்புற மாணவர்களும் பெருமளவில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது..

Ø உரிய கட்டமைப்புகள் இல்லாமலேயே உயர்கல்வியில் தரத்தை அதிகரிக்கிறோம் என்ற பெயரில் CBCS முறையை கட்டாயப்படுத்துகிற அபாயம் உள்ளது..

Ø ஒரே பாடத்திட்டம், ஒரே வகையான நிர்வாக முறை, தேசிய நுழைவுத் தேர்வுகள் மூலமாக மையப்படுத்தப்பட்ட உயர்கல்வி அமைப்பை உருவாக்கும் அபாயம் உள்ளது..

Ø மாணவர்கள் அனைவருக்கும் உதவித்தொகை என்ற கொள்கை கைவிடப்படும் என உறுதியாகக் கூறுகிறது. அதற்குப் பதிலாக தகுதி அடிப்படையில் உதவித்தொகை என்ற பரிந்துரையினை முன்வைப்பதன் மூலம் ஏழை, எளிய மாணவர்களின் கல்வியை மறுதளிக்கும் பேராபாயம் உள்ளது..

Ø உயர்கல்வி நிறுவனங்கள் முழுக்க முழுக்க தொழிற்கல்வி தரும் சமுதாயக் கல்லூரிகளாக மாற்றப்படும் அபாயம் உள்ளது..

Ø உயர்கல்வியில் பெண்களின் பங்கேற்பு குறைவு என்பதை வெறுமனே ஒரு சட்ட ஒழுங்குப் பிரச்சனையாகக் கருதி அதற்கான காரணங்களைக் கேட்பதன் மூலம் உண்மையான அரசியல், பொருளாதார, சமூகக் காரணிகளை மறைக்கின்ற அபாயம் உள்ளது..

Ø உயர்கல்விக்கான நிதி குறித்து எந்தவிதமான குறிப்பும் இல்லாதது, பிர்லா அம்பானி அறிக்கை பரிந்துரைத்த உயர்கல்வியை தனியார்மயமாக்குதல் கொள்கைக்கு ஒப்புதல் கொடுப்பது போல இருப்பதால் அரசு உயர்கல்வியில் இருந்து விலகும் அபாயம் உள்ளது..

Ø யு.ஜி.சி., மருத்துவக் கவுன்சில், தொழில்நுட்பக் கவுன்சில், NCVT ஆகிய அனைத்து அமைப்புகளையும் கலைத்துவிட்டு தேசிய கல்விக்கமிஷன் என்ற ஒற்றை அமைப்பை உருவாக்கும் அபாயம் உள்ளது..

Ø உயர்கல்வியில் இறக்கும் தருவாயில் உள்ள பல மொழிகளை காக்கும் முயற்சிகளை விடுத்து சமஸ்கிருதத்தை திணிக்கும் அபாயம் உள்ளது..

பொதுவாக…..

Ø தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான கல்வியை சமூக நீதியின் ஓர் அங்கமாகப் பார்க்காமல் விடுபட்டோர் பட்டியலாக முன்வைக்கிறது..

Ø ஆசிரியர்கள் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிற்றுவிக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக நவீனத் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் ஆசிரியர் இல்லாமலேயே ஆன் லைன் படிப்புகள், திறந்தவெளிப் பலகலைக் கழகப் படிப்புகள் ஆகியவற்றிற்கு வழிவகுத்து முறைசாராக் கல்வியை ஊக்குவிக்கிறது..

Ø கார்ப்பரேட் கம்பெனிகளின் சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து அரசுப் பள்ளிகளை, உயர்கல்வியைப் பலப்படுத்தாமல் அரசு-தனியார் கூட்டு (PPP) என்ற பெயரிலும் தொழிற்சாலைகளுடன் இணைப்பு என்ற பெயரிலும் தனியாருக்கு தாரை வார்க்கும் அபாயம் அதிகமுள்ளது..

Ø இந்தியக் கல்வி முழுவதுமே அந்நிய முதலீட்டிற்கும், அந்நியப் பல்கலைக் கழகங்கள் / நிறுவனங்கள் நுழைவதற்கான பேராபயங்கள் உள்ளன..

Ø இந்தியக் கலாச்சாரம் என்ற பெயரில் உயர்கல்வியில் இந்தியவியல் (Indology) என்ற துறை துவங்குவதற்கான ஆலோசனைகளைக் கேட்டிருப்பது மறைமுகமாக வேதங்கள், உபநிடதங்கள், பிராமணங்கள், மனுஸ்மிருதி போன்ற இந்துத்வா கோட்பாடுகளை பயிற்றுவிப்பதற்கான துறையாக உருவாக்குவதற்கான அபாயம் இருக்கிறது. தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், உழைப்பாளிகள் ஆகியோரின் பன்முகக் கலாச்சாரங்களை அழிக்கும் வகையில் உயர் வகுப்பினரின் கலாச்சாரம் சார்ந்த இந்துத்வா ஒற்றைக் கலாச்சாரத்தை அமுல்படுத்தும் அபாயம் உள்ளது..

Ø மொத்தத்தில் கல்வி பற்றிய பார்வை, வரலாறு, ஆய்வு, புள்ளி விபரங்கள் எதையுமே கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மத்திய அரசின் தற்போதைய கொளகைகளுக்கு ஏற்பத் தயாரிக்க்கப்படும் கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் கோரும் பேரபாயம் உள்ளது..

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்