Tuesday 15 July 2014

பொதுப்பள்ளியின் நாயகன் : பேரா.என்.மணி

தமிழ்நாட்டில் பாகுபாடற்ற பொதுப்பள்ளிக் கல்வி முறை பெருமளவு சீரழிந்துள்ளது. சமச்சீர் கல்வி என்ற பெயரில் உள்ள சமச்சீரான பாடத்திட்டம் கூட கடுமையான இந்திய மாணவர் சங்க போராட்டத்திற்கு பிறகு கொண்டு வரப்பட்டதுதான். அதுவும் கூட பல்வேறு தடைகள் தாண்டி உச்சநீதிமன்றம் சென்றபிறகு அமுல்படுத்தப்பட்டது. சமச்சீர் கல்வி என்ற சொல்லாடல் கடந்த ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டதால் தற்போதைய அரசு அச்சொல்லையே பயன்படுத்தக் கூடாதென கல்வித்துறை அதிகாரிகளுக்கு மறைமுக உத்தரவிட்டுள்ளது.


சமச்சீர் கல்வி என்று பேசப்படுகிற பொதுப்பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஆண்டுகள் மூன்றாகியும் முன்பிருந்த அரசுப் பள்ளி, மெட்ரிக் பள்ளி, ஆங்கிலோ இந்திய பள்ளி, ஓரியண்டல் பள்ளி என்ற நால்வகை வாரியங்களையும் இணைந்து ஒரு வாரியமாக மாற்றி அறிவிக்கக்கூட இன்னமும் இயலவில்லை. இதற்காக ஒரு வழக்கு உயர்நீதிமன்றத்தில் போடப்பட்ட பிறகுதான் “மாற்றும் எண்ணம் உள்ளது; பதில் மனுதாக்கல் செய்ய கால அவகாசம் தேவை” என அரசு கேட்டுள்ளது. பாகுபாடில்லாத அனைவருக்கும் சமமான கல்வி இனி இல்லை. ஏழைக்கு ஒரு கல்வி, பணக்காரனுக்கு ஒரு கல்வி என்பது நீதியாகவே மாறிவிட்டது.
எனவே, எப்பாடுபட்டாயினும் நமது பிள்ளைகளை தரமானதாக கூறப்படும் தனியார் பள்ளிகளில் சேர்ப்போம் என்று அவரவர் வருவாய் பிரிவுக்கு தக்க தனியார் பள்ளிகளை நாடத்துவங்கிவிட்டனர். அரசும் தன் பங்கிற்கு நிதி இல்லை என காரணம் கூறி அரசுப்- பள்ளிகளை வலுப்படுத்தாமல் தனியார் பள்ளிகளை ஊக்கப்படுத்தியும் அதன் வழியாக மூலதன சுரண்டலை ஊக்குவித்தும் வருகிறது. இதன் விளைவாக தமிழக தொடக்கக் கல்வி குத்துயிரும் குலையிருமாய் கிடக்கிறது. தொடர்ந்து பள்ளிகள் மூடப்படுவதையும் மூடப்பட இருப்பதையும் மூடப்படும் அபாயத்தில் இருக்கும் பள்ளிகளைப் பற்றியும் நாள்தோறும் செய்திகள் வந்தவண்ணமே இருக்கிறது.
இந்நிலையில் பொதுக்கல்விக்கு வித்திட்ட (இன்றைக்கு அது பெரும் சவாலுக்கு உள்ளாகியிருக்கிற) காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசு பெயரளவிற்கேனும் கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியது. அனைவருக்கும் சமமான தரமான கட்டாய இலவச கல்வி வேண்டுமென போராடும் அனைவரும் இந்த நாளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பொதுப்பள்ளி முறையை மீண்டும் வலுப்படுத்த புதிய சபதங்களையும், மேற்கொள்ளும் நாளாக இந்நாளை கைக் கொள்ள வேண்டும்.
தேசத்தின் முன்னேற்றத்திற்கு கல்வி ஆணிவேர் கல்வி பெறும் உரிமையை பரவலாக்க வேண்டும் என்று கனவு கண்டனர், தேசபக்த முன்னோடிகளான பகத்சிங் மகாத்மா காந்தி, கோபாலகிருஷ்ண கோகலே போன்றோர். இக்கனவை நனவாக்க சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத்தும் சட்டமேதை மாமேதை அம்பேத்கரும் பெரும் முயற்சிகள் மேற்கொண்டனர். 14வயது உட்பட்ட அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமையை அரசியல் சாசனத்தின் வழியாக கொண்டுவருவதற்கு அன்றே முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் இந்த குழுவிற்கு தலைவராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் நிதி இல்லை என்று காரணம் கூறி அடிப்படை உரிமையில் சேர்க்கப்படவேண்டிய சட்டப்பிரிவை வழிகாட்டும் நெறிமுறையில் கொண்டு சேர்த்து கல்வி உரிமையை முடக்கினார். இன்றுவரை கல்வி உரிமை ஈடேறவில்லை. கல்வி உரிமை சட்டத்திற்கு பிறகும் அது கனவாகவே நீடிக்கிறது.
மத்திய அரசின் நிதி இல்லை என்று காரணம் கூறி 14வயதுக்குட்பட்டோரின் கல்விக்கு துரோகம் இழைத்த நிகழ்விற்கு சவால் விடும் வகையில் இரண்டு முக்கிய தலைவர்கள் தாங்கள் முதல்வராக இருந்த மாநிலங்களில் கல்விப் பணிகளை துவக்கினர். ஒருவர் காமராஜர். மற்றொருவர் கேரளாவின் முதல்வராக இருந்த இ.எம்.எஸ். நம்பூதிரிபாத். காமராஜர் ஆட்சிக்கு வந்தவுடன் அனைவருக்கும் ஒரே மாதிரியான பாகுபாடற்ற பொதுப்பள்ளிகளை (அரசுப் பள்ளிகள்) திறந்தார். 3 கிமீக்கு ஒரு தொடக்கப் பள்ளி, 5 கிமிக்கு ஒரு உயர்நிலைப்பள்ளி, என்ற முடிவை எடுத்தார். அப்பள்ளிகளில் பயில வரும் மாணவர்களின் வருகையை உத்தரவாதம் செய்ய சீருடை, நோட்டுபுத்தகம், மத்திய உணவு என வலுவான பொதுப்பள்ளியை விஸ்தரித்துக் கொண்டே சென்றார். அவருக்கும் “நிதி இல்லை கஜானா காலி தனியாரை நாடலாம்” என்று அதிகாரிகள் ஆலோசகர்கள் ஆலோசனைகள அள்ளித்தெளித்தனர். இவர்களது ஆலோசனைகளையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு பள்ளி சீரமைப்பு மாநாடுகளை நடத்தத் துவங்கினார். இம்மாநாடுகளில் தனியாரின் தாரளமான நிதி பொதுப்பள்ளிகளுக்கு கோரினார். அரசுப் பள்ளிகள் வளர்ந்தது. பள்ளிகள் மட்டும் அரசின் முழுக்கட்டுப்பாட்டில் வந்த்து. இன்ரைய PPP Public Private partnership முன்மாதிரி பள்ளிகள் அன்று கூறி அரசுப் பள்ளிகளை தனியாருகு தாரைவார்ப்பதற்கு மாற்றான முறைகளை அன்றே உருவாக்கி காட்டினார். இந்தப் பள்ளிகளில் சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வின்றி கல்வி வழங்கப்பட்டது. பாடப்புத்தகம் வழியாகவும் இத்தகைய பள்ளி முறையின் வழியாகவும் மாணவர்கள் பாடம் பயின்றனர்.
தமிழகம் இன்று அடைந்துள்ள முன்னேற்றத்தில் ஆரோக்கியமான விஷயங்களில் இந்தக் கல்வி முறைக்கும் அதில் பயின்று வளர்ந்தவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. அவ்வாறு உருவாக்கப்பட்ட பள்ளிகள் தான். இன்று தொடர்ந்து மூடப்பட்டு வந்திருகின்றன. எங்கள் ஆட்சிதான் உண்மையான காமராசர் ஆட்சி என்று சொல்லிக்கொள்ளுபவர்கள் காமராசர் ஆட்சியை இனிமேல்தான் உருவாக்கப்போகிறோம் என்று சொல்பவர்கள் எல்லோரும் சேர்ந்து அரசுப் பள்ளிகளுக்கு திவசம் செய்துவருகிறார்க்ள். தங்கள் பங்கிற்கு ஆளுக்கொரு தனியார் பள்ளி கட்டிக் கொண்டு இடரற்ற லாபம் ஈட்டியும் வருகிறார்கள் . மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்சி பள்ளிகள் சர்வதேச பள்ளிகள் என பள்ளிக் கல்வி புற்றீசல் போல் தனியார்மயம் பெருகிக் கொண்டே செல்கிறது.
“அரசுப் பள்ளிகளில் எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும் தனியர் பள்ளிகள் அவற்றில் ஈடுகட்ட முடியாதென்று அதன் உள்ளார்ந்த காரணத்தை வைத்துதான் அமர்த்தியா சென் கூறுகிறார். காமராசர் அரும்பாடுபட்டு உருவாக்கிய பொதுப்பள்ளி முறை பள்ளிக்கல்வி முழுவதும் அரசின் பொறுப்பிலும் பாகுபாடின்றியும் கொடுக்கப்படவேண்டியது இன்றைய தேவை. தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே காமராசர் துவங்கிய பொதுப்பள்ளி ஒரு முன்மாதிரி. பொதுப்பள்ளி என்றால் நம் நினைவுக்கு காமராசர் வருவது போல் அடுத்து நினைவுக்கூரப்படவேண்டியவர் இ.எம்.எஸ். உலக கம்யூனிச இயக்க வரலாற்றில் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதல் கடமையை இஎம்எஸ்ஸும் கேரளாவில் துவங்கினார். அனைவருக்கும் தரமான சமமான கல்வியை வழங்கும் கேரள கல்வி மாசோதாவை உருவாக்கினார். கல்வி வியாபாரிகள் கொந்தளித்தனர். உச்சநீதிமன்றம் இம்மாசோதா சரியானதென்று தீர்ப்பளித்தது. இருந்தபோதும் இஎம்எஸ்சின் அரசு இந்த கல்வி மசோதாவிற்காகவே கவிழ்க்கப்பட்ட்து. ஒரு ஜனநாயக குடியரசின் அடிப்படை கடமையே அனைவருக்கும் சமமான தரமான இலவசமான கல்வியை வழங்கவேண்டியதே. அதை இத்தனை ஆண்டுகள் போராடியும் பெறமுடியவில்லை. ஆனால் இக்கல்வி அடிப்படை உரிமைக்காக போராடுபவர்களுக்கு காமராசரும், இஎம்எஸ்ஸும் எப்போதும் உயிரோட்டமான உந்துசக்தியாகவே இருப்பார்கள்.
கட்டுரையாளர் முனைவர் நா.மணி,
மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

Friday 11 July 2014

தமிழ்நாடு : மோசமான நிலை - கே. சத்யநாராயன்

குறிப்பிட்ட ஆண்டில் கல்விக்காக எத்தனை சதவிகிதம் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது, எத்தனை பள்ளிகள் கட்டப்பட்டன, பள்ளிக் கட்டட உருவாக்கத்துக்கு எவ்வளவு செலவானது போன்ற தகவல்கள் நமக்குக் கிடைக்கும். சரி, இந்தப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களின் தரம் என்ன? ஒரு மாணவன் வகுப்பறையில் இருந்து உண்மையில் என்னென்ன கற்றுக்கொள்கிறான்?
தமிழ்நாட்டின் கல்வித் தரம் குறித்து ஆறு மாதங்களுக்கு முன்பு இரண்டு ஆய்வறிக்கைகள் வெளிவந்தன. அவற்றின் முடிவுகள் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளன.
அறிக்கை 1:
PISA (Programme for International Student Assessment), 2011
உலகம் முழுவதும் 73 நாடுகளில் இந்த அமைப்பு ஆய்வுகளை மேற்கொண்டது. இந்தியாவில், தமிழ் நாடு மற்றும் இமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுக்கு உட்பட்ட 5,000 மாணவர்கள் பங்கேற்றனர். தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 2 மணி நேரம் தேர்வு எழுதினார்கள்.
  • தமிழ்நாட்டில் 100 மாணவர்களில் 17 பேரால் மட்டுமே சரளமாக வாசிக்கமுடிகிறது. 15 பேருக்கு மட்டுமே அடிப்படை கணிதம் தெரிந்திருக்கிறது. அடிப்படை அறிவியல் அறிவும் 15 பேருக்கு மட்டுமே இருக்கிறது.
  •  முதல் வரிசையில் இருக்கும் சீனாவோடு ஒப்பிட்டால்தான் தமிழ்நாடு எந்த அளவுக்கு பின்தங்கியிருக்கிறது என்பது தெரியும். சீனாவில் 100 பேரில் 95 பேரால் சரளமாக வாசிக்கமுடியும். 95 பேருக்கு அடிப்படை கணிதமும் அறிவியலும் தெரியும்.
  • முடிவு: தேர்வில் பங்கேற்ற 73 நாடுகளில் இந்தியாவுக்குக் கிடைத்த இடம், 72.
அறிக்கை 2:
ASER (Annual Szazus of Educazion Reporz), 2011
ப்ரீத்தம் என்னும் தனியார் தொண்டு நிறுவனத்தின் 7வது வருடாந்தர ஆய்வறிக்கை இது.
  • கிராமப்புறங்களில், 3வது வகுப்பில் படிக்கும் 70 சதவிகித மாணவர்களால் 1ம் வகுப்புக்குண்டான விஷயங்களைப் படிக்கமுடியவில்லை. 5ம் வகுப்பு மாணவர்களில் 65 சதவிகிதம் பேரால் 2ம் வகுப்புக்கான விஷயங்களை படிக்கமுடியவில்லை. 20 சதவிகிதம் பேரால் 100 வரையிலான எண்களைக் கண்டறியமுடியவில்லை. 80 சதவிகிதம் பேரால் வகுத்தல் கணக்கைப் போட முடியவில்லை.
  • முடிவு: தமிழ்நாட்டில் கல்வித் தரம் மிகவும் கவலையளிக்கும்படி இருக்கிறது என்று தொடர்ந்து இந்த நிறுவனம் ஆதாரபூர்வமாகச் சொல்லிவருகிறது என்றாலும் தமிழ்நாடு அரசு ஒவ்வொருமுறையும் இந்த அறிக்கையை உதாசீனம் செய்துவருகிறது.
அபாயகரமான இந்த நிலைமைக்கு அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளும் இரண்டுமே சமஅளவில் பொறுப்பேற்கவேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையா? - கி. ரமேஷ்

முன்பெல்லாம், ஆசிரியர் பயிற்சி முடித்ததும் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பதிவு செய்துகொள்வார்கள். சீனியாரிடி அடிப்படையில் நியமனம் செய்யப்படும். 199196ல், அதிமுக ஆட்சியின்போதுதான் முதன்முதலாக இந்த நடைமுறை அகற்றப்பட்டு தகுதித் தேர்வு அமல்படுத்தப்பட்டது. அப்போது, பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் நியமனம் பெற்றனர். பல முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்பட்டாலும் அந்தத் தேர்வு முறையாகவே நடந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால், அப்படித் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் தமது சொந்த ஊரிலிருந்து வெகுதூரத்தில் நியமிக்கப்பட்டார்கள்.  கன்னியாகுமரியில் இருப்பவர்களை சென்னைக்கும், சென்னையில் இருப்பவர்களை மதுரைக்கும், திருநெல்வேலிக்கும் தூக்கி அடித்தார்கள்.

1996ல், திமுக ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக அவர்களுக்கெல்லாம் விரும்பிய இடத்துக்கு மாற்றம் கொடுக்கப்பட்டு பிரச்னை தீர்க்கப்பட்டது. பணி நியமனம் பழையபடி மூப்பு அடிப்படைக்கு மாறியது. இப்போது, அதிமுக ஆட்சி அனைத்தையும் மாற்றுவதுபோல் மீண்டும் தகுதித் தேர்வுக்கு மாறியுள்ளது.
இருபுறத்திலும் இதற்கான காரணங்கள், எதிர்க் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஆசிரியர் தகுதித் தேர்வு வைக்கக்கூடாது. மூப்பு அடிப்படையிலேயே நியமனம் செய்ய வேண்டுமென்று போடப்பட்ட வழக்கு, உச்சநீதி மன்றம் வரை சென்று தோற்றுவிட்டது. தகுதித் தேர்வே சரி என உச்சநீதி மன்றம் கூறியுள்ளது. மத்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தை இயற்றியதோடு, ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு தகுதித் தேர்வையும் புகுத்தியுள்ளது. இதை ஆசிரியர் நியமனத்துக்காகக் காத்திருப்போரும் ஆசிரியர் சங்கங்களும் எதிர்க்கின்றனர்.
ஏற்கெனவே பயிற்சி முடித்து தகுதி பெற்றுள்ள நிலையில் இன்னுமொரு தேர்வா என்பதுதான் ஆசிரியர்களின் கேள்வி. எனினும், இந்தத் தேர்வு அறிவிக்கப்பட்டதும் பல லட்சம் பேர் வேறு வழியின்றி விண்ணப்பித்துள்ளனர். கல்வி வியாபாரமாகும் சூழலில் மாணவர்களைப் போல் ஆசிரியர்களும் மார்க் பெறும் மெஷின்களாக மாறவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிற தொழில்களைப் போல் ஆசிரியர் தொழிலையும் கருதாமல் இருக்கவேண்டுமே என்னும் கவலையும் பிறக்கிறது.
மற்றொரு பக்கம், ஆசிரியர் படிப்பு படித்துவிட்டு வருடக் கணக்கில் காத்திருந்தும் நியமனம் கிடைக்காமல் பலர் தவிக்கிறார்கள். தனியார் பள்ளிகளோ மாணவர்களிடம் இருந்து பெரும் பணம் கறந்துகொண்டாலும், ஆசிரியர்களுக்கு குறைவான சம்பளத்தையே அளிக்கின்றன. அனைவருக்கும் நல்ல கல்வி கிடைக்கவேண்டுமென்றால் மாணவர்கள் பிரச்னைகளோடு சேர்த்து ஆசிரியர்களின் பிரச்னைகளையும் இனம் கண்டு களையவேண்டும்.

கல்வி உரிமைச் சட்டம் : குறைபாடுகள் - பல்லவன்

1.  குழந்தைகள் பெறும் கல்வியின் தரத்தைப் பற்றி சட்டம் கண்டுகொள்ளவில்லை.
குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்களா என்பது பற்றி சட்டம் இயற்றுபவர்கள் கவலைப்படவே இல்லை. பள்ளி இருக்கவேண்டும், வகுப்பறை இருக்கவேண்டும், ஆசிரியர் இருக்கவேண்டும் என்றெல்லாம் சொல்பவர்கள், அவற்றைக்கொண்டு எவ்விதமான கல்வியை மாணவர்களுக்குத் தரவேண்டும் என்பது பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. அதைவிட மோசமாக,மாணவர்கள் கற்றுக்கொண்டிருக்கிறார்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்காமல் அவர்கள் கற்றுக்கொள்ளாவிட்டாலும் அவர்களை அடுத்த வகுப்புக்கு அனுப்பிவிடவேண்டும் என்கிறது சட்டம். கணிதத்தில் கூட்டல், கழித்தல் தெரியாவிட்டாலும் மாணவர்களுக்கு பெருக்கல், வகுத்தல் சொல்லிக்கொடுக்கப்படவேண்டும். இவை எதுவும் தெரியாவிட்டாலும் உயர் கணிதத்தைச் சொல்லித்தரவேண்டும் என்கிறது சட்டம்.
2.  பள்ளிகளை அதிகப்படுத்த விரும்புகிறது சட்டம். மாறாக, பள்ளிகள் குறைவதற்கே சாத்தியம் அதிகம்.

ஒவ்வொரு பள்ளிக்கும் இத்தனை இடம் இருக்கவேண்டும், இத்தனை மாணவர்களுக்கு இத்தனை ஆசிரியர்கள் இருக்கவேண்டும், ஒவ்வோர் ஆசிரியருக்கும் குறிப்பிட்ட தகுதி இருக்கவேண்டும், ஆசிரியர்களுக்கு அரசு குறிப்பிடும் சம்பளம் தரப்படவேண்டும் என்கிறது சட்டம். இந்த விதிமுறைகளில்        அடங்காவிட்டால் பள்ளியின் அனுமதி குறிப்பிட்ட காலத்துக்குள் ரத்து செய்யப்படும் என்றும் சொல்கிறது சட்டம்.
இன்றைய தேதியில் மிகப் பெரும்பான்மையான தனியார் பள்ளிகளிடம் அரசு கோரும் இடம் இல்லை. ஆசிரியர்களுக்கு அவர்கள் தரும் சம்பளமும் குறைவு. இவற்றையெல்லாம் சரி செய்வதற்கு வாய்ப்பே இல்லை. நகரங்களில் பள்ளிகளை விரிவாக்க இடமே இல்லை. கட்டணங்கள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும் 25% இட ஒதுக்கீட்டுக்கு அரசு தரும் கட்டணம் குறைவாக இருக்கும் நிலையிலும் ஆசிரியர்களுக்கு அரசு தீர்மானிக்கும் சம்பளத்தைக் கொடுக்க பெரும்பான்மைத் தனியார் பள்ளிகளால் முடியவே முடியாது.
எனவே, இந்தப் பள்ளிகள் ஒன்று தாமாகவே கல்வித் துறையிலிருந்து விலகிக்கொள்ளும். அல்லது சட்டத்தின்படி அவர்களது அங்கீகாரம்  ரத்து செய்யப்படும். அரசிடம் புதிய பள்ளிகளை உருவாக்கத் தேவையான பணம் இல்லை என்பதால்தான் தனியார் கல்விக்கூடங்களில் 25% இடத்தை அரசு கேட்டுப் பெற்றது. இப்போது, தனியார் பள்ளிகள் மூடப்பட்டால் அங்கு படிக்கும் குழந்தைகள் அனைவரையும் எங்கு        கொண்டுபோய் சேர்ப்பது?
3. தனியார் யாருக்கும் புதிதாகப் பள்ளிக்கூடம் கட்ட ஊக்கம் வரப்போவதில்லை.
இதுவரை, குறிப்பாக எந்தச் சட்டமும் கல்வி நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கக்கூடாது என்று சொன்னதாகத் தெரியவில்லை. அவ்வப்போது சில உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் இவ்வாறு சொல்லியுள்ளன. ஆனால்,        நடைமுறையில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஏதோ ஒருவகையில் லாபம் சம்பாதித்துதான் வந்துள்ளன. இப்போது கல்வி உரிமைச் சட்டம் மிகத் தெளிவாக, கல்விக்கூடங்கள் அனைத்தும் லாப நோக்கு அற்றவையாகவே இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டது.
லாப நோக்கு இல்லை என்றால் லாபத்தை விரும்பும் யாருமே பள்ளிகளைக் கட்டப்போவதில்லை. இப்போது நடப்பதைப் போல, சட்டத்தைப் பற்றிக்        கவலைப்படாதவர்கள்தான், தவறு என்று   தெரிந்தும்கூட கல்விக்கூடங்களைக் கட்டி முறையற்ற வழியில் லாபம் சம்பாதிக்கப்போகிறார்கள். இவர்கள் யாருக்கும் கல்வியின்மீது அக்கறை கிடையாது. மொத்தத்தில் லாபத்தை விலக்குவதன் மூலமாக, நிஜமாகவே கல்வியின்மீது அக்கறை கொண்ட, சட்டபூர்வமாக நடந்துகொள்ளக்கூடிய நிறுவனங்கள் அனைத்தும் கல்வித்துறையில் இருக்கவே போவதில்லை. இதனால் நஷ்டம் பொதுமக்களுக்குத்தான்.
4.  தனியார் பள்ளிகள்மீது விதிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள் எவையுமே அரசுப் பள்ளிகளுக்குக் கிடையாது.
தமிழகத்தில் எத்தனையோ அரசுப் பள்ளிகளில் தேவையான ஆசிரியர்கள் கிடையாது. ஆசிரியர்மாணவர் விகிதம் பல அரசுப் பள்ளிகளிலும் படுமோசமாக உள்ளது. மிகப் பெரும்பான்மையான அரசுப் பள்ளிகளில் கழிவறை வசதி தொடங்கி, குடிநீர் வசதிவரை எந்தவித அடிப்படைத் தேவையுமே        சரியில்லை. இந்த வசதிகள் இல்லாத எந்தத் தனியார் பள்ளியையும் அரசால் மூடமுடியும். ஆனால், தன் பள்ளிகளில் இந்த வசதி இல்லை என்றால் அரசு என்ன செய்யும் என்பது சட்டத்திலேயே இல்லை. இந்த வசதிகள் ஒருவேளை நாளடைவில் அரசுப் பள்ளிகளில் ஏற்படலாம் என்று வைத்துக்கொண்டால்கூட, அதற்கென கெடு ஏதும் விதிக்கப்படவில்லை. ஆனால், தனியார் பள்ளிகளுக்குக் கடுமையான கெடு இருப்பதுடன், இந்தப் புதிய வசதிகளைச் செய்து தருவதற்காக அரசு மானியம் ஏதும் தருவதாகவும்        சொல்லவில்லை. அதே நேரம், தமிழகத் தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணம் கட்டுப்படுத்தப்படுகிறது. மேற்கொண்டு 25%  மாணவர்களுக்கான கட்டணம் குறைக்கப்படப்போகிறது. இதைத் தாண்டி எப்படி அந்தப் பள்ளி இந்த வசதிகளைச் செய்துதரப்போகிறது என்பது பற்றி சட்டம் கவலைப்படவே இல்லை. அரசுப் பள்ளிகளில் வசதிகள் சரியில்லை என்றால் யார்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டம் சொல்லவில்லை.
5. அரசுப் பள்ளி அல்லது அரசு உதவி  பெறும் பள்ளி ஒவ்வொன்றிலும் பள்ளி நிர்வாகக் குழு என்றொரு குழு அமைக்கப்படவேண்டும். ஆசிரியர்கள் ஒழுங்காகப் பள்ளிக்கு வருவதையும் ஆசிரியர்கள் பிரத்யேகமாக டியூஷன் நடத்தாமல் இருப்பதையும் இந்த நிர்வாகக் குழுதான் செயல்படுத்தவேண்டும் என்கிறது சட்டம். ஆனால், அதற்கேற்ற எந்த  அதிகாரத்தையும் இந்தக் குழுவுக்குச் சட்டம் வழங்கவில்லை. தவறு செய்யும் ஆசிரியர்களை நீக்கும் அதிகாரம் இந்த நிர்வாகக் குழுவுக்கு அளிக்கப்படவில்லை. எனவே நிர்வாகக் குழுவால் தமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பணிகளை ஒழுங்காகச் செய்ய முடியாது.
இந்தச் சட்டம் பல்வேறு ஆட்கள் எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று சொல்கிறது ஆனால், ஒருவர் ஒரு செயலைச் செய்யவில்லை என்றால் என்ன தண்டனை, செய்யாவிட்டால் யார் அவரைச் செய்ய வைப்பது என்று எதுவுமே சொல்லப்படவில்லை. மொத்தத்தில் எந்தவிதச் சிந்தனையும் இன்றி இயற்றப்பட்ட ஒரு சட்டமாகவே தெரிகிறது.
0
பெட்டிச் செய்தி
சிக்கல்களே அதிகம்!
கல்வி உரிமைச் சட்டம் பல சிக்கலான கேள்விகளை எழுப்பியுள்ளது. நாடு முழுவதிலும் சீர்குலைந்து கிடக்கும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தாமல், 25 சதவிகிதம் இடம் அளிக்குமாறு தனியார் பள்ளிகளைக் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? வரும் நாள்களில் இந்த 25 என்பது 50 அல்லது 60 சதவிகிதமாக உயராது என்பதற்கு என்ன உத்தரவாதம்?  இந்த 25 சதவிகித மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஆகும் செலவை அரசுப் பள்ளிகளுக்கு எப்படிப் பட்டுவாடா செய்யப்போகிறது?
கல்வி கற்பிப்பதற்கான அடிப்படை வசதிகளை அனைத்துப் பள்ளிகளும் கொண்டிருக்கவேண்டும் என்பதும் அதற்கான விதிமுறைகள் வகுக்கப்படவேண்டும் என்பதும் வரவேற்கத்தக்க முடிவுதான். விதிமுறைகளுக்குப் பொருந்தாத மற்றும் அரசு அங்கீகாரம் பெறாத பள்ளிகள் இனி தடை செய்யப்படும் என்கிறது சட்டம். இந்த விதிகளால் அதிகம் பாதிக்கப்படப்போவது என்னவோ தனியார் பள்ளிகள்தாம். தனியார் பள்ளிகள் குறித்த அடிப்படை புள்ளிவிவரங்கள் எதையும் தெரிந்துகொள்ளாமலேயே இப்படியொரு சட்டம் வகுக்கப்பட்டுள்ளது வேதனைக்குரியது.
நான் ஒரு தீர்வை முன்வைக்க விரும்புகிறேன். 25 சதகிவிதம் மாணவர்களுக்கான கட்டணத்தைச் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்குவதற்கு பதி லாக, குழந்தைகளின் பெற்றோருக்கு கூப்பன் வடிவில் வழங்கிவிடலாம். எந்தப் பள்ளியில் தங்கள் குழந்தையைச் சேர்க்கவேண்டும் என்பதை பெற்றோர் தீர்மானித்துக்கொள்ளட்டும்.எது தரமான பள்ளி, எதில் சேர்ப்பது எதிர்காலத்துக்கு நல்லது என்பதை அவர்களே ஒப்பிட்டுப் பார்த்து முடிவு செய்துகொள்ளட்டும். பண விநியோகம் தொடர்பான ஊழலையும் இதன் மூலம் கட்டுப்படுத்தமுடியும்.
(பா. சந்திரசேகரன், ஆலோசகர், மத்திய திட்டக்குழு. இது கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்து).

கல்வி உரிமைச் சட்டம் – ஓர் அறிமுகம் - கே. சத்யநாராயன்

உரிமை: இந்தச் சட்டத்தின்மூலம் ஆறு வயதிலிருந்து பதினான்கு வயது வரையுள்ள குழந்தைகள் அனைவருக்கும் இலவசமாகக் கல்வி பெறும்  உரிமை கொடுக்கப்படுகிறது.
கடமை: இந்தக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் கடமை அரசுக்கும் உண்டு, பெற்றோர்களுக்கும் உண்டு. ஆனால், பெற்றோர் தம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்தால் அவர்கள்மீது நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாது; தண்டனை ஏதும் தரமுடியாது. அவர்களை அரசால் வற்புறுத்த மட்டுமே முடியும். மொத்தத்தில் குழந்தைகளுக்குக் கல்வி தரும் பொறுப்பு முழுவதும் அரசின்மீது மட்டுமே விழுகிறது.
இலவசம்: ஏழைகள் மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்குமே கல்வி இலவசமாகத் தரப்படும். பொருளாதார நிலைமை பற்றிக் கவலையின்றி, அனைத்துப் பிள்ளைகளும் அரசுப் பள்ளிகளில்  அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் முற்றிலும் இலவசமாகக் கல்வி கற்கலாம்.

ஊனமுற்றோர்: ஊனமுற்ற குழந்தைகளுக்கான பிரத்யேக உதவிகளையும் அரசே ஏற்கவேண்டும்.
வயதுக்கேற்ற வகுப்பு: பள்ளிக்கூடத்துக்கே போகாத குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும்போது அவர்களது வயதுக்கு ஏற்ற வகுப்பில் சேர்க்கவேண்டும். அதாவது, 12 வயதுக் குழந்தையாக இருந்தால் அந்தக் குழந்தை அதற்குமுன் பள்ளிக்கே சென்றிருக்காவிட்டாலும் 6ம் வகுப்பில் சேர்க்கவேண்டும். சேர்த்த பின், அந்தக் குழந்தைக்காக பிரத்யேகமான கல்வியைத் தருவது அரசின் பொறுப்பு. பள்ளியே சென்றிருக்காத குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படும்போது, அவர்கள் வயது 14ஐத் தாண்டிவிட்டாலும் இந்தச் சட்டம் அவர்களுக்குச் செல்லுபடியாகும்.
தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு: அரசின் உதவி பெறாத தனியார் பள்ளிகளாக இருந்தாலும், 25% இடங்களை பின்தங்கிய வகுப்பினருக்கும் ஏழைகளுக்கும் ஒதுக்கவேண்டும். பின்தங்கிய வகுப்பினர் என்றால் சமூகரீதியில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் போன்ற வகுப்பினர். ஏழைகள் என்றால் ஆண்டு வருமானம் குறிப்பிட்ட அளவுக்குக் கீழ் இருப்போர். ஒவ்வொரு மாநில அரசும் இது குறித்து தத்தம் மாநிலங்களுக்கான வரையறைகளை நிறுவிக்கொள்ளலாம். இந்த இடங்களுக்கு தனியாக விண்ணப்பம் கோரப்பட்டு, குலுக்கல் மூலம் தீர்மானிக்கப்படும். தமிழ்நாட்டில், ஆண்டு வருமானம் இரண்டு லட்ச ரூபாய்க்குக் கீழ் இருந்தால் ஏழைகள் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளே இல்லாத இடத்தில் பள்ளிகள்: ஒவ்வோர் இடத்திலும் ஒரு கிமீ தூரத்துக்குள் ஆரம்பப் பள்ளி ஒன்றும், மூன்று கிமீ தூரத்துக்குள் நடுநிலைப் பள்ளியும் இருக்கவேண்டும். இதனை ஏப்ரல் 2013க்குள் நிறுவவேண்டும். எங்கெல்லாம் இதுபோன்ற பள்ளிகளை நிறுவ முடியாமல் உள்ளதோ, அங்கெல்லாம் மாணவர்களுக்குப் போக்குவரத்து வசதி அல்லது உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் படிக்கும் வசதியை அரசு செய்து தரவேண்டும்.
பள்ளிக்கூட வசதிகள்: எல்லாக் காலநிலைக்கும் பொருந்தக்கூடிய கட்டடம், ஒவ்வோர் ஆசிரியருக்கும் ஒரு வகுப்பறை, அலுவலகம், தலைமை ஆசிரியர் அறை, பொருள்கள் சேகரிப்பு அறை, நூலகம், விளையாட்டு வசதிகள், பிற வசதிகள் ஆகியவை இருக்கவேண்டும். தடையின்றிப் பிள்ளைகள் செல்லக்கூடியதாக, சுத்தமான குடிநீரும் தேவையான அளவு கழிவறைகளும் கொண்டதாக பள்ளிகள் இருக்கவேண்டும். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி தரப்படவேண்டுமானால் மாநகராட்சி என்றால் ஆறு கிரவுண்டு, மாவட்டத் தலைநகர் என்றால் எட்டு கிரவுண்டு, நகராட்சி என்றால் பத்து கிரவுண்டு, டௌன்ஷிப் என்றால் ஒரு ஏக்கர், கிராமம் என்றால் மூன்று ஏக்கர் நிலமாவது அவர்களிடம் இருக்கவேண்டும். நிலம் சொந்தமானதாகவோ அல்லது குறைந்தபட்சம் முப்பது ஆண்டு லீஸில் இருக்கவேண்டும்.
ஆசிரியர்கள்: டி.எட் அல்லது பி.எட் சான்றிதழ் இல்லாத ஆசிரியர்கள் ஏப்ரல் 2015க்குள் தேர்வு எழுதி சான்றிதழ் பெறவேண்டும். அத்துடன் மத்திய அல்லது மாநில அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி அதில் தேர்வு பெற்றிருக்கவேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம் எவ்வளவு என்பதை மாநில அரசு அவ்வப்போது நிர்ணயிக்கும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, முப்பது முதல் நாற்பது மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற கணக்கில் ஆசிரியர் எண்ணிக்கை இருக்கவேண்டும். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பத்தைந்து மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர், ஒவ்வொரு பாடத்துக்கும் தனி ஆசிரியர் என்று இருக்கவேண்டும். நூறு மாணவர்களுக்குமேல் இருந்தால், அப்பள்ளியில் நுண்கலை, விளையாட்டு, கைவேலை ஆகியவற்றுக்குத் தனி ஆசிரியர்கள் இருக்கவேண்டும். எந்த ஆசிரியரும் தனியாக டியூஷன் நடத்தக்கூடாது.
பள்ளி நிர்வாகக் குழு: அரசு உதவி பெறாத பள்ளிகளைத் தவிர்த்து, அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி நிர்வாகக் குழு ஒன்று அமைக்கப்படவேண்டும். இக்குழுவின் உறுப்பினர்களில் 75% பேர் பெற்றோர்கள், 8% உள்ளாட்சி உறுப்பினர்கள், 8% ஆசிரியர்கள், மீதம் பள்ளி மாணவர்கள் அல்லது கல்வியாளர்கள் இருக்கவேண்டும். மொத்த உறுப்பினர்களில் பாதிப் பேராவது பெண்களாக இருக்கவேண்டும். இந்தக் குழு, அரசு நிதியை பள்ளி எப்படிப் பயன்படுத்துகிறது என்பதையும் பள்ளி ஆசிரியர் யாரும் தனி டியூஷன் நடத்தாமல் இருப்பதையும் கண்காணிக்கும்.
நுழைவுத் தேர்வு, நன்கொடை: பள்ளியில் குழந்தைகளை அனுமதிக்க, நன்கொடை கேட்கக்கூடாது. எவ்விதமான நுழைவுத் தேர்வோ நேர்முகத்தேர்வோ வைக்கக்கூடாது.
குழந்தைகளை நடத்துவது: ஐந்தாம் வகுப்பு வரை எந்தக் குழந்தையையும் ஃபெயில் ஆக்கக்கூடாது. எந்தக் குழந்தையையும் உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்தக்கூடாது.
000
ஏற்கெனவே உள்ள தனியார் பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 2013க்குள் கல்வி உரிமச் சட்டத்தின் ஷரத்துகளைப் பின்பற்றுவதாக உறுதிமொழி எடுத்து, அரசின் அனுமதியைப் பெறவேண்டும். இனி வரப்போகும் எந்தப் புதுப் பள்ளியாக இருந்தாலும் கல்வி உரிமைச் சட்டத்தின் ஷரத்துகளுக்கு உட்பட்டுத்தான் ஆரம்பிக்க முடியும்.
இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இச்சட்டம் எல்லாத் தனியார் பள்ளிகளுக்கும் செல்லுபடியாகும் என்றும், சிறுபான்மையினர் நடத்தும் அரசு உதவி பெறாத பள்ளிகளுக்கு மட்டும் செல்லுபடியாகாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தனியார் பள்ளிகள் vs அரசுப் பள்ளிகள் - ஸ்ரீராம்

உணவு, சீருடை, கல்வி, புத்தகங்கள் என்று அனைத்தையும் அரசுப் பள்ளிகள் இலவசமாக வழங்கினாலும், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்கள்கூட, கடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதற்கு என்ன காரணம்? ஏன் அரசுப் பள்ளிகளால், தனியார் பள்ளிகளின் தரத்தை எட்டிப் பிடிக்கமுடியவில்லை?
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும்  தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள்
சம்பளம் : ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் சம்பளத் தொகை ரூ. 25,000 முதல் ரூ. 30,000 வரை.   தனியார் : ரூ. 3,000 முதல் ரூ. 7,000 வரை.
பணி நிரந்தரம் : பலமான சங்கம் இருப்பதால் அவ்வளவு சுலபத்தில் ஒழுங்கு நடவடிக்கையோ பணி நீக்கமோ செய்யமுடியாது. தனியார் :  பள்ளி நிர்வாகம் தன் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்யலாம். பல இடங்களில் 10 மாத ஒப்பந்தத்துடன் பணியில் அமர்த்துகிறார்கள். இரு மாத கோடை விடுமுறையின் போது சம்பளம் கொடுக்க வேண்டியதில்லை அல்லவா?
தரம் : பி.எட். (தற்போது டி.எட்.)  முடித்திருக்கவேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கவேண்டும். தனியார் : அருகிலுள்ள பள்ளிகளோடு  போட்டிபோடும்போதும் அல்லது பெற்றோர் வற்புறுத்தும்போதும் உயர் படிப்பு படித்த ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
பயிற்சி : அரசு செலவில் அடிக்கடி நடத்தப்படும். தனியார் : ஒரு சில பிரபல பள்ளிகள் தவிர மற்றவை ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள்அளிப்பதில்லை.
ஊக்கம் : நன்றாக வகுப்பெடுப்பதற்கு எந்தவித ஊக்கமும் அளிக்கப்படுவதில்லை. தனியார் : நன்றாக வகுப்பெடுக்கும்படி நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் தருகிறது.
பிற பணிகள் : தேர்தல் சமயங்களில் பணியாற்றவேண்டும். கணக்கெடுப்பில் ஈடுபடவேண்டும். தவிர்க்கமுடியாது. தனியார் :    பிற வேலைகள் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படுவதில்லை. ஆனால், அதிக நேரம் பணியாற்றுமாறு கோரப்படுவார்கள். வீட்டிலும் வேலையை எடுத்துச் சென்று செய்யவேண்டியிருக்கும்.
பணி மாற்றம், பதவி உயர்வு : ஆசிரியரின் விருப்பத்தை அறியாமல் பணி மாற்றம்  செய்யமுடியாது. குறிப்பிட்ட இடத்தில் பணி காலியாக இருந்தால், விண்ணப்பித்து பணிமாற்றம் செய்துகொள்ளலாம். தனியார் : பணிமாற்றம் சாத்தியமில்லை. பதவி உயர்வு பெரும்பாலும் சாத்தியமில்லை.

டீச்சிங் இல்லை, கோச்சிங் மட்டும்தான்! :- க. குணசேகரன்

தனியார் பள்ளிகள் 25 சதவிகித இடங்களை பின்தங்கிய வகுப்பினருக்கும் ஏழைகளுக்கும் ஒதுக்கவேண்டும் என்கிறது கல்வி உரிமைச் சட்டம். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதைக் காட்டிலும் முக்கியமானது, இது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பது. அரசு ஏன் தனியார் பள்ளிகளிடம் தன் பொறுப்பைப் பகிர்ந்துகொள்ளவேண்டும்? நம் சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார் , பொதுப்பள்ளி கோரி அதற்கான இயக்க கட்டமைப்பை உருவாக்கி வரும் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

கல்வி உரிமைச் சட்டம் நீங்கள் எதிர்பார்த்தது போல் அமைந்திருக்கிறதா?

இல்லை. ஏழை, நலிவடைந்தோருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் அரசு கல்வி அளிக்கவேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. ஆம், அம்பானி, டாடா, பிர்லா வீட்டுப் பிள்ளைகளுக்கும் சேர்த்துத்தான் இலவசக் கல்வி கேட்கிறோம். காரணம், கல்வி என்பதை அரசுதான் தரவேண்டும். சாசனச் சட்டம் 21 வாழ்வுரிமையை வலியுறுத்துகிறது. கண்ணியமிக்க வாழ்க்கை வழங்குவதே வாழ்வுரிமை. ஒரு குடிமகனின் கண்ணியமான வாழ்க்கை என்பது யாரையும் சாராமல், யாசிக்காமல், அடிமையாக இல்லாமல் வாழ்வது. ஆனால், இன்றுள்ள நிலையில் அம்பானி மகன்கூட தன் கல்விக்காக அப்பாவை எதிர்பார்த்து வாழ்வது என்னவிதமான கண்ணியம்? அரசு கல்வி வழங்கினால்தான் அரசு மீதான அக்கறையுள்ள குடிமகனாக ஒரு மாணவன் உருவாக முடியும். நாட்டிலுள்ள பல கோளாறுகள் கட்டுப்படுத்தப்படும். வளர்ந்த நாடுகளில் இதுதான் நிலை! அதனால்தான் அங்கு முன்னேற்றம் நிகழ்கிறது.

எல்லோருக்கும் கல்வி அளிக்க அரசிடம் நிதி இருக்குமா?

அனைவருக்கும் கல்வி வழங்கப்படும் என்று அரசே 1950ல் அறிவித்தது. பிகாரில் கடும் வறட்சியும் உணவுப் பஞ்சமும் நிலவிவந்த சமயம் அது. ஒப்பீட்டளவில் இன்று நம் பொருளாதாரம் எப்படி இருக்கிறது? சந்திரயான், அக்னி என்று போட்டிபோட்டுக்கொண்டு விண்ணைத் தொட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனாலும் நம்மால் வாக்குறுதியை நிறைவேற்றமுடியவில்லை. பஞ்சம் நிலவிய காலத்தில் வெளிப்படுத்திய உறுதியும் லட்சியமும் பொருளாதார பலம் கூடிக்கொண்டு இருக்கும் இப்போது இல்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது. கல்விக்காக என்று சொல்லி 2005 முதல் 3 சதவிகித செஸ் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

இனி, கூடுதலாக 25 சதவிகித மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இணைந்து படிப்பார்கள் என்பது நல்ல விஷயம்தானே?

தரமான கல்வியை நாங்கள் வழங்குகிறோம் என்று சொல்வதற்குப் பதில், தரமான கல்வி தரும் இடத்தில் 25 சதவிகிதம் உங்களுக்காக இடம்தர உத்தரவிடுகிறோம் என்று சொல்வது கேலிக்கூத்தானது. இதை எஸ்.சி., எஸ்.டி. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப்போல் பார்க்கக் கூடாது! இது எங்கே சென்று முடியும் என்றால், படிப்படியாக அரசுப் பள்ளி மாணவர் எண்ணிக்கை குறைந்து, காலப்போக்கில் உரிய மாணவர்களின் வருகைக் குறைவால் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவிடும்.

நான் ஏதோ கற்பனையில் கூறுவதாக நினைக்க வேண்டாம். இதே சென்னை மாவட்டத்தில், உரிய மாணவர் வருகைக் குறைவால் 30 சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் சத்தமில்லாமல் மூடப்பட்டுவிட்டன. நூற்றுக்கணக்கான அரசுப் பள்ளிகள் மூடுவிழா கண்டுள்ளன. கர்நாடக அரசு ஆணையின்படி, புதிய கல்வி உத்தரவு வெளியான ஒரே மாதத்தில் அங்கு 3000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதையெல்லாம் பார்க்கும்போது, தனியார் பள்ளிகள் லாபம் அடையவேண்டும் என்பதுதான் அரசின் நோக்கமோ என்று சந்தேகம் எழுகிறது. அரசு தன் பொறுப்பிலிருந்தும் கடமையிலிருந்தும் நழுவியிருக்கிறது.

அப்படியென்றால், தனியார் பள்ளிகள் அரசு உத்தரவை ஏன் எதிர்க்கின்றன?

தனியார் பள்ளிகள் இத்தனை காலமாக வசதியான, வாய்ப்புள்ள குழந்தைகளை மட்டுமே சேர்த்து நூறு சதவிகித தேர்ச்சியைக் காட்டி பழகிவிட்டார்கள். வசதியான பின்னணியில் இருந்து வந்த குழந்தைகள் என்பதால் வீட்டிலும் பெற்றோரின் உதவி அவர்களுக்குக் கிடைக்கிறது. வீட்டுப்பாடம் என்னும் சுமையையும் அவர்களே தாங்குகிறார்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் தனிப் பயிற்சி ஏற்பாடு செய்து சொந்த முயற்சியால் குழந்தைகளை வெற்றிபெறச் செய்கிறார்கள். இந்த வெற்றியை தனியார் பள்ளிகள் தங்கள் வெற்றியாக விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். இந்நிலையில், ஏழை வீட்டுப் பிள்ளைகளைச் சேர்த்தால், பாடம் நடத்த வேண்டிய, கற்றலுக்கு உதவ வேண்டிய அவசியம் ஏற்படும். கற்றல், கற்பித்தல் என்றால் என்னவென்றே தெரியாத பள்ளிகளுக்கு இது பேரிடியாக இருப்பதால்தான் எதிர்க்கிறார்கள்.

தனியார் பள்ளிகளில் என்னதான் சொல்லிக்கொடுக்கிறார்கள்?

அங்கு, ‘கோச்சிங்’தான் நடக்கிறதே தவிர, ‘டீச்சிங்’ இல்லை!

பள்ளி என்பதற்கான வரையறை என்ன?

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சமூகத்தில் எல்லா வாய்ப்புகளும் மறுக்கப்பட்ட பெரும் பகுதி மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்பை அரசு ஏற்படுத்தி தருகிறது. இந்தப் பள்ளிகளை ஆய்வு செய்ய மாவட்டக் கல்வி அலுவலர், மூத்த கல்வி அலுவலர், பள்ளிக் கல்வி இயக்குநர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைமைப் பொறுப்பில் பள்ளிக் கல்வி இயக்குநர் இருக்கிறார். ஆனால், மெட்ரிக் பள்ளிகளுக்குக் கல்வி அதிகாரிகள் யாரும் இல்லை. ஆய்வாளரும் இயக்குநரும் மட்டுமே உள்ளனர். முறையான பள்ளிக் கல்வியை அரசுப் பள்ளிகள் மட்டும்தான் வழங்குகின்றன. வழங்க முடியும்!

படம்: வி. சேகர்

இலவசக் கல்வி : சட்டப்படி சரியா? - எஸ்.பி. சொக்கலிங்கம்

1950ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, தன் குடிமக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், பாதுகாப்பு, மருத்துவ உதவி, கல்வி, வேலைவாய்ப்பு முதலியவற்றை வழங்கவேண்டும் என்பதுதான்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் பகுதி 3, இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளை வரையறுக்கிறது. பகுதி 4, அரசாங்கத்தின் பொது கொள்கைகள் (டைரக்டிவ் பிரின்ஸிபிள்ஸ்). அடிப்படை உரிமைக்கும், பொது கொள்கைக்கும் ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை மீறப்பட்டால், அரசை எதிர்த்து வழக்குத் தொடுத்து தன் உரிமையை நிலைநாட்டலாம். ஆனால், பொது கொள்கைகள் செயல்படுத்தப்படவில்லை என்றால் அதற்காக வழக்கு தொடுக்கமுடியாது.
அரசியல் அமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்குள் 6 வயதிலிருந்து 14 வயது உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமாக இலவசக் கல்வி கிடைக்கச் செய்வது அரசின் கடமை என்பது பொது கொள்கைகளில் ஒன்று. நிதி போதாமையால் இது நிறைவேறவில்லை.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அமலில் வருவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பு, ஐக்கிய நாடுகளின் பொதுசபை 1948ம் ஆண்டு மனித உரிமைகளின் சர்வதேச  தீர்மானத்தை பிரகடனப்படுத்தியது. அதன்படி, உலக மக்கள் அனைவரும் இலவசமாக கல்வி பெறுவது அவர்களுடைய உரிமை. இதனை ஏற்று சுமார் 135 உலக நாடுகள் இலவசக் கல்வியை அடிப்படை உரிமையாக அங்கீகரித்துள்ளன.
· · ·
1991ம் ஆண்டு, மோகினி ஜெயின் என்பவர் கர்நாடக அரசின் ஓர் அரசிதழ் அறிவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று கர்நாடக அரசு அறிவித்திருந்தது. அனைவருக்கும் இலவசக் கல்வி என்பது பொது கொள்கைதான் என்பதால் அதை வலியுறுத்தமுடியாது என்பது அரசின் வாதம்.
உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு அரசுக்குச் சாதகமாக இருக்கவில்லை. ‘ஒருவர் கௌரவத்துடன் வாழ கல்வி அவசியம்.  எனவே அரசாங்கம் தம் மக்களுக்கு கல்வி வழங்குவது வெறும் பொது கொள்கையாக எடுத்துக்கொள்ளமுடியாது, அது அடிப்படை உரிமையாகத்தான் கருதப்பட வேண்டும்’ என்றது தீர்ப்பு.
இரண்டாண்டுகள் கழித்து மேலும் ஒரு வழக்கு (உன்னிகிருஷ்ணன் vs ஆந்திரப்பிரதேச மாநிலம்) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மோகினி ஜெயின் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு சரிதானா என்று 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விவாதித்தது. விசாரணையின் முடிவில்,  முந்தைய தீர்ப்பு சரிதான் என்று தீர்ப்பானது.
இந்த தீர்ப்பு வெளியாகி சுமார் 9 ஆண்டுகள் கழித்து, 2002ம் ஆண்டு அரசியல் அமைப்புச் சட்டத்தில் புதிதாக 21ஏ என்னும் சட்டவிதி சேர்க்கப்பட்டது. அதன்படி, அரசாங்கத்திடமிருந்து கல்வி பெறுவது அடிப்படை உரிமை. 6 வயதிலிருந்து 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அரசாங்கம் கட்டாயமாக இலவசக் கல்வியை வழங்கி ஆக வேண்டும்.
ஆனால், இதிலுள்ள சிக்கல்களையும் சவால்களையும் எப்படி எதிர்கொள்வது? அனைத்து மாணவர்களுக்கும் போதிப்பதற்கு லட்சக்கணக்கான ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள். எப்படி அவர்களைப் பணியில் அமர்த்துவது? எப்படிச் சம்பளம் கொடுப்பது? எத்தனை புதிய பள்ளிகளைக் கட்டுவது?
2009ம் ஆண்டு கொண்டு வரப் பட்ட இலவசக் கல்விச் சட்டம் (The Right of Children to Free and Compulsory Education Act, 2009) சில தீர்வுகளை முன் வைத்தது. இந்தச் சட்டம், தனியார் பள்ளிகள், அரசாங்கத்தின் நிதி உதவியுடன் செயல்படும் பள்ளிகள், அரசிடம் நிதி உதவி பெற்று சிறுபான்மையினருக்காக நடத்தப்படும் பள்ளிகள் ஆகிய அனைத்துக்கும் பொருந்தும். இவர்கள் அனைவரும் தங்கள் பள்ளிகளில் உள்ள இடத்தில் 25 சதவிகிதத்தை சமுதாயத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். பள்ளிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை அரசாங்கம் ஓரளவுக்கு சரி செய்யும். அதாவது, அரசாங்கப் பள்ளியில் ஒரு மாணவன் படிக்க எவ்வளவு செலவாகும் என்பதை கணக்கிட்டு, அந்தத் தொகை தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும்.
பல தனியார் பள்ளிகள் இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. தீர்ப்பு அவர்களுக்கு எதிராகவே இருந்தது. அரசாங்கத் திடமிருந்து நிதி உதவி பெறாத சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் தவிர மற்றபடி இலவசக் கட்டாய கல்விச் சட்டம் செல்லுபடியாகும் என்று தீர்ப்பானது.
நம் முன் உள்ள முக்கியக் கேள்வி, அரசாங்கம் இந்தச் சட்டத்தை எப்படி செயல்படுத்தப்போகிறது என்பதுதான். உண்மையாகவே இந்தியாவில் உள்ள 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி கிடைக்குமா அல்லது மற்ற சட்டங்களைப் போல் இதுவும் ஒரு காகிதப் புலியாகத்தான் இருக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கல்விமுறையும் வன்முறையும் - ரவீந்திரன்

கடந்த சில வருடங்களாக மாணவ, மாணவியரின் தற்கொலைகள் அதிர்ச்சி தரும் விதத்தில் அதிகரித்துள்ளன. இவர்கள் அனைவருமே நிஜ வாழ்க்கையில் சொந்த முயற்சியில் காலடி எடுத்து வைக்காதவர்கள். கல்வி என்பது மனதுக்கு, அறிவுக்கு பல விஷயங்களை குறித்துத் தெளிவாக்கும் வழிமுறை. அது மட்டுமின்றி எந்தத் துறையில் காலடி எடுத்து வைக்க முடியும் என்பது பற்றி முடிவு செய்யும் அளவுகோலும்கூட. ஆனால் இதனாலேயே மணவர்கள் மனதில் எதிர்பார்ப்பையும், பயத்தையும் உருவாக்கும் கருவியாகவும் செயல்படுகிறது.
இந்த இரு உணர்வுகளையும் அதீதமான முறையில் பெற்றோர்களும் மற்றவர்களும் அக்கறை என்ற பெயரால் தூண்டி விடுகிறார்கள். ‘இந்த நவீன யுகத்தில் நன்றாகப் படித்தால்தான் கவுரமான நிலையை அடையலாம்’ என்பதை மட்டும் வலியுறுத்தாமல் அப்படியில்லாவிட்டால் வாழ்க்கையே சூனியமாகும் என்பதையும் சேர்த்தே சொல்கிறார்கள். ‘நல்லா படிச்சா டாக்டர், என்ஜினியர், ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரி ஆகலாம். இல்லன்னா ஓட்டல்ல தட்டு எடுக்க வேண்டியதுதான்’ என்று சொல்லாத பெற்றோர்கள் மிகவும் குறைவு. இதன் அர்த்தம் என்ன? எல்லாவற்றுக்கும் மேலே இருக்க வேண்டும் அல்லது அடிமட்டத்தில் சிக்கி சிதைந்து போவாய்!
இடையில் இருக்கும் பல துறைகள் பற்றி மாணவர்களைச் சிந்திக்க விடுவதேயில்லை. 10 வருடங்களுக்கு முன்னால் ப்ளஸ் டூவில் இருந்த பாடப் பிரிவுகள் குறைவு. ஆனால் இன்றைக்கு பல பத்து மடங்குகளாகி விட்டன. இதே நிலைதான், கலை, தொழிற்கல்வி ஆகியவற்றின் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளிலும் உள்ளது. ஆனால் இவற்றைப் பற்றி எத்தனை பெற்றோர்கள் அறிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள்?
இதைத்தவிர மாணவர்களை ப்ளஸ் டூ, கல்லூரி படிப்புகளில் சேர்க்கும்போது பெற்றோர்கள் சில தவறுகளை ‘நல்ல நோக்கத்துடன்’ செய்கிறார்கள். முதலாவது, ‘நான்தான் இந்த கல்வியைப் படிக்கவில்லை, என் பிள்ளையாவது படிக்கட்டுமே’ என்ற முடிவில் குறிப்பிட்ட கல்விப் பிரிவில் சேர்த்து விடுவது.இரண்டாவது, அவன்தான் குறிப்பிட்ட கல்விப் பிரிவு வேண்டும் என்று கேட்டான் என்று சொல்லும் பெற்றோர்கள் ஏராளமானவர்கள். குறிப்பிட்ட பிரிவில் அவனுக்குத் திறமை இருக்கிறதா என்பது பற்றியெல்லாம் சிந்திப்பதில்லை.

அடுத்ததாக, தனது பொருளாதார நிலைமைக்குத் தகுந்த கல்லூரியை தேர்வு செய்யாதது பெரும் பிரச்னையில் கொண்டுவிடும் என்பதை யாரும் உணர்வதில்லை. இப்போதெல்லாம் வங்கிக் கடன் ஓரளவுக்காவது சுலபமாக கிடைக்கிறது. இதை படிப்பு செலவுகளுக்கு மட்டும்தான் ஈடாக்க முடியும். பணம் படைத்த கல்லூரிகளில் கேட்கப்படும் இதர கட்டணங்கள், தங்கிப் படிக்கும் மாணவருக்கு வேண்டிய அன்றாட வசதிகள், உடை, கைச் செலவு ஆகியவற்றுக்கு மற்ற மாணவர்களைப் போல நம்மால் செலவு செய்யமுடியுமா என்று பெற்றோர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை.
நுழைவுத் தேர்வில் மட்டும் மிகக் கடுமையாக முயற்சித்து தேறிவிட்டு, புகழ் பெற்ற கல்லூரிகளில் சேர்பவர்களால், அங்கே இயல்பாகவே பணக்காரர்கள், ஆங்கில மொழி நன்கு அறிந்தவர்கள், நாகரிகம், உடல் தோற்றம் ஆகியவற்றில் மெருகு கூடியவர்கள், கையில் பணம், பிற வசதிகள் போன்றவற்றை பிறவியிலிருந்தே பெற்றவர்கள் போன்றவர்களோடு, இவை இல்லாதவர்கள், அவர்களுக்குள்ளேயே ஒப்பீடு செய்து உள்ளுக்குள் வெதும்புகிறார்கள்.
கல்வியில், நட்பில், புதிதாக கிடைத்த உறவில் அடி விழுந்தால், தாங்க முடியாமல் நொறுங்கி போகிறார்கள். சமீபத்தில், புகழ் பெற்ற கல்லூரி ஒன்றில் படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த கடிதத்தில் ‘படிப்பில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை என்பதால் தேர்வில் தோல்வி அடைவது நிச்சயம். அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன்’ என்று எழுதி வைத்திருந்தார்.
அடுத்ததாக, கல்லூரி ஆசிரியப் பெருமக்களும் தங்களை அறிந்தோ அறியாமலோ மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்க காரணமாகி விடுகிறார்கள். ப்ளஸ் டூ முடித்து வரும் மாணவர்கள், ஒரு வித எதிர்பார்ப்போடு, பயத்தோடு வருகிறார்கள். பள்ளிக்கட்டுப்பாடுகள் (சீருடையிலிருந்து ஆரம்பித்து பல விஷயங்கள்) இருக்காது என்ற எண்ணத்துடன் வருகிறார்கள். இவர்கள் தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் செய்யும்போது அவர்களை அவமானப்படுத்தும் விதத்தில் நடத்துவது, பயமுறுத்துவது அவர்கள் மனத்தில் எந்த விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி ஆசிரியர்கள் யோசிக்க வேண்டியது அவசியம்.
துரிதமாகச் செயல்படும் மனம் உள்ள பருவம் என்பதால், தவறான முடிவுகளையும் அவர்கள் விரைவில் எடுத்துவிடுவார்கள். இந்த விஷயத்தை பெற்றோர்களும் புரிந்து கொண்டால் வீட்டுக்கும் நாட்டுக்கும் லாபம்.
(ஆழம் இதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்.)

பள்ளிகளில் நவீன தீண்டாமை - என். சொக்கன்

சில மாதங்களுக்கு முன்னால், பெங்களூரில் எங்கள் மகளின் பள்ளியில் பெற்றோர்: ஆசிரியர் கூட்டம் நடந்தது. வந்தவர்கள் அனைவருக்கும் ஒரு சீட்டைக் கையில் கொடுத்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மினி வக்கீல் நோட்டீஸ் ரேஞ்சுக்கு மிரட்டல் தொனியில் எழுதப்பட்டிருந்த அந்தச் சீட்டின் வடிகட்டப்பட்ட சாரம்: ‘இந்திய அரசாங்கம் கல்வி உரிமைச் சட்டத்தைக் கொண்டுவர உத்தேசித் திருக்கிறது. இதன்படி, தனியார் பள்ளிகள் அனைத்திலும் கால்வாசி இடங்களை ஏழை மாணவ, மாணவியருக்கு இலவசமாகத் தரவேண்டுமாம். இது நியாயமா? இவர்களெல்லாம் படிக்க வந்துவிட்டால் உங்களுடைய பிள்ளைகள் என்ன மாதிரி பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்வார்கள்? இதை நீங்கள் அனுமதிக்கலாமா?’
தீர்வையும் அவர்களே சொன்னார்கள். ‘நீங்க எதுவும் செய்யவேண்டாம், தனியார் பள்ளிகள் சார்பா வாதாடறதுக்காகவே ஒரு பெரிய வழக்கறிஞரை நியமிச்சிருக்கோம், அதுக்கான செலவுகளையெல்லாம் நாங்க ஏத்துக்கறோம், நீங்க இந்தச் சீட்டுல ஒரு கையெழுத்து மட்டும் போட்டாப் போதும்!’
மளமளவென்று அவர் கையில் இருந்த தாள் மொத்தமும் பெற்றோரின் கையொப்பங்களால் நிரம்பியது. இந்தப் பள்ளியில் மட்டுமல்ல, இப்படி இந்தியா முழுவதும் கல்வி உரிமைச் சட்டம் பற்றி எதுவும் தெரியாமலே, அல்லது ஒருதலைப்பட்சமாக முன்வைக்கப்பட்ட மிரட்டல்களை மட்டுமே வாசித்துவிட்டு, அதற்கு எதிரான வழக்கின் ‘பிரதிநிதி’களாக மாறிய பெற்றோர்தான் அதிகம். இதன்மூலம் ஏராளமானோர் தங்களது குழந்தைகளின் எதிர்காலம் கருதி, அவர்களே இந்தக் கல்வி உரிமைச் சட்டத்தைக் கண்டித்து ஒரு குடையின்கீழ் திரள்வதான ஒரு பிம்பத்தைத் தனியார் பள்ளிகள் உருவாக்கின.
இந்தியாவில் 6 முதல் 14 வயது வரையில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வி ஓர் அடிப்படை உரிமை என்பதுதான் இந்தச் சட்டத்தின் ஒரு வரிச் சுருக்கம். இதன்படி, அரசுப் பள்ளிகள்மட்டுமல்ல, தனியார் பள்ளிகளும் மொத்த இடங்களில் இருபத்தைந்து சதவிகிதத்தை ஏழைக் குழந்தைகளுக்காக ஒதுக்கிவைத்துவிடவேண்டும்.
தனியார் பள்ளிகள் ஏழை மாணவர்களுக்கு இலவசமாகப் பாடம் சொல்லித்தரப்போவதில்லை. இந்தப் பிள்ளைகளின் கல்விக் கட்டணத்தை அரசாங்கமே செலுத்திவிடும். எனில், என்னதான் பிரச்னை அவர்களுக்கு? ‘காசு கொடுத்துப் படிக்கிறவர்களுக்கும் இலவசமாகப் படிக்கிறவர்களுக்கும் எங்களால் ஒன்றாகப் படிப்புச் சொல்லித்தரமுடியாது. அப்படிச் செய்தால் கல்வியின் தரம் குறைந்துவிடும்’ என்கிறார்கள்.
இது நவீன தீண்டாமை. இதைப் பரப்புவதற்கு நாடு முழுவதும் உள்ள பல தனியார் பள்ளிகள் ஒன்று சேர்ந்து கூட்டமைப்புகளை உருவாக்கி கல்வி உரிமைச் சட்டத்தை எதிர்த்தன. நீதிமன்றத்துக்குச் சென்றன. பெற்றோர் கையெழுத்துகளையும் வலியச் சேகரித்தன. ஆனால் இவர்களுடைய கோரிக்கையை ஏற்க மறுத்தது உச்ச நீதிமன்றம். தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது.
ஆனாலும், ஆரம்பத்திலிருந்தே இச்சட்டத்தை எதிர்த்துவந்த தனியார் பள்ளிகள் இன்னும் தங்கள் கையில் இருக்கும் சாட்டையைக் கீழே போடுவதாக இல்லை. சட்டப்படி, இலவசமாகப் படிக்கும் குழந்தைகள், பணம் கொடுத்துப் படிக்கும் குழந்தைகள் என்று எந்தப் பள்ளியும் பாகுபாடு பார்க்கக்கூடாது. ஆனால் பல பள்ளிகளில் ‘கோட்டா சில்ரன்’ என்றே பெயர் சூட்டி இவர்களை அவமானப்படுத்துகிறார்களாம், வகுப்பில் இவர்களைத் தனியே பிரித்து உட்கார வைக்கிறார்களாம். மற்ற குழந்தைகள் இவர்களுடன் பேசக்கூடாது என்று எழுதப்படாத விதிமுறையாம். இவர்கள் கொண்டுவரும் பள்ளிப் பை, டிபன் பாக்ஸ் போன்றவற்றைத் திறந்து பார்த்துப் பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கிறார்களாம். வகுப்பில் மற்ற பிள்ளைகளின் பெயர் எழுதப்பட்டிருக்கும் அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரில் இவர்களுடைய பெயர்கள்மட்டும் இருக்காது. இவர்களிடம் எந்தக் கேள்வியும் கேட்கப்படுவதில்லை. பரீட்சை கிடையாது. ஹோம் வொர்க் தருவதில்லை.
ஏன் இப்படி நடத்துகிறீர்கள் என்று கேட்டபோது, ‘அடுத்த பேரன்ட்ஸ், டீச்சர்ஸ் மீட்டிங்ல இதையெல்லாம் சொல்லுங்க. இப்ப ஒண்ணும் செய்யமுடியாது’ என்று சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டார்கள். பிரச்னை என்னவென்றால், பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களுக்கும் இந்தப் பிள்ளைகளின் தாய், தந்தையர் அழைக்கப்படுவதில்லை.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒரு சம்பவம் சமீபத்தில் பெங்களூரில் நந்தினி லேஅவுட்டில் உள்ள ஆக்ஸ்ஃபோர்ட் பள்ளியில் நடந்திருக்கிறது. கல்வி உரிமைச் சட்டத்தின்படி தங்கள் பள்ளியில் சேர்ந்திருக்கும் ஒன்றாவது வகுப்பு படிக்கும் நான்கு குழந்தைகளை வித்தியாசப்படுத்திக் காட்டவேண்டும் என்பதற்காக, அவர்கள் தலைமுடியை வெட்டிக் கொடுமைப்படுத்தியிருக்கிறது ஒரு பள்ளி. கேட்டால் சக மாணவர்கள்மீது பழியைப் போடுகிறார்கள். Karnataka Unaided School Managements’ Association (KUSMA) என்னும் அமைப்பில் உள்ள ஒரு பள்ளி இது. (தி ஹிந்து, ஜூலை 18, 2012).
இந்தக் கொடுமையைக் கண்டு கோபப்பட்ட பெற்றோரோ மற்றவர்களோ நேரில் வந்து நியாயம் கேட்டால், பள்ளி நிர்வாகம் அவர்கள்மீதே போலிஸில் புகார் செய்கிறது. Kusmaவின் தலைவரான ஜி. எஸ். சர்மா இப்படித் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார், ‘ஏழைக் குழந்தைகள் எங்கள் பள்ளிகளில் சேர்ந்தால், மற்ற பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இங்கே படிக்க வைக்கத் தயங்குவார்கள். நல்ல தண்ணீரில் சாக்கடை சேர்ந்தால் மொத்தமும் கெட்டுப்போகும் அல்லவா?’
ஏழைக் குழந்தைகளைச் ‘சாக்கடை’ என்று வர்ணித்த சர்மாமீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புதிய போராட்டம் தொடங்கியிருக்கிறது. அரசாங்கம் என்ன சொல்கிறது? ‘புதிய சட்டத்தின்படி படிக்க வரும் மாணவர்களை எந்தப் பள்ளியாவது தவறாக நடத்தினால், அது மனித உரிமை மீறல். அந்தப் பள்ளிகள்மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்ந்தால், அவர்களுடைய உரிமம் முடக்கப்படும்.’
இதற்கிடையில் கல்வி உரிமைச் சட்டத்தை எதிர்த்து ஓதண்ட்ச் நிர்வாகம் ஒரு வார காலம் போராட்டம் நடத்திய பிறகு பள்ளிகளைத் திறந்துள்ளது. ஒத்த கருத்து எட்ட முடியவில்லை என்று சொல்லி ஜி.எஸ். சர்மா தன் பதவியை ராஜிநாமா செய்திருக்கிறார். ஏழைக் குழந்தைகளைச் சாக்கடை என்று தான் கூறவில்லை என்றும் மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதே போல், குழந்தைகள் தலைமுடி கத்தரிக்கப்பட்டது பள்ளி நிர்வாகத்தால் அல்ல என்றும் விளையாட்டுத்தனமாக சில மாணவர்கள் செய்த செயல் அது என்றும் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது.

தனியார் பள்ளிகளை மூட வேண்டும் - க. குணசேகரன்

தனியார்மயத்தை கல்வியில் ஊக்குவிக்கவே 25% இட ஒதுக்கீடு, கட்டண நிர்ணயம் போன்றவற்றை அரசு மேற்கொள்கிறது’ என்று குற்றம்சாட்டுகிறார் சமச்சீர் கல்வி பாடத்திட்டக் குழு உறுப்பினரும் விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் வரலாற்றுத் துறை பேராசிரியருமான டாக்டர் அ. கருணானந்தம். கடந்த மாதம் சென்னை, மதுரவாயலில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியால் நடத்தப்பட்ட கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டில் ஆற்றிய உரையில், கல்வி தனியார்மயமாவதை ஏன் எதிர்க்கவேண்டும் என்பதை விரிவாக விளக்கினார்.

‘2002-ல் அரசியல் சட்டத்தின் 86வது பிரிவுக்கு திருத்தம் கொண்டு வந்தது பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு. காங்கிரசும் அதை ஏற்றுக் கொண்டது. அந்தத் திருத்தத்தை பலர் வெற்றியாகக் கொண்டாடினார்கள்.  மக்களுக்கு கல்வி அளிக்க அரசு எடுக்கும் நடவடிக்கை என்று சித்தரித்தார்கள். ஆனால் உண்மையில் மாற்றியது என்ன? 1) அடிப்படை உரிமைகளில் ஒன்றை புதிதாக சேர்ப்பது. 2) வழிகாட்டும் நெறிகளில் ஒன்றை மாற்றுவது. 3) அடிப்படை கடமைகளின் ஒன்றை புதிதாக சேர்ப்பது.
‘21அ ஷரத்தில் 6 முதல் 14 வயது வரையிலான எல்லா குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி வழங்க வேண்டும் என்பது சேர்க்கப்பட்டது. ஆனால் அதற்கான பொறுப்பை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. மத்திய அரசு மாநில அரசைக் கைகாட்டியது. மாநில அரசு உள்ளாட்சி அரசைக் கைகாட்டியது. இரண்டாவதாக, அரசியலமைப்புச் சட்டத்தின் 45வது ஷரத்தில் 10 ஆண்டுகளுக்குள் (அதாவது 1960க்குள்) 14 வயதிலான அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி கொடுக்க அரசு முயற்சி செய்யவேண்டும் என்று கூறப்பட்டிருப்பதை, 6 வயது வரை மழலையர் பராமரிப்பு கல்வி தர முயற்சிக்க வேண்டும் என்று மாற்றியிருக்கிறார்கள்.
‘மூன்றாவதாக, 6 முதல் 14 வயது வரை குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டியது பெற்றோரின் கடமை என்பதை சேர்த்திருக்கிறார்கள். ஆனால் கல்வி என்பது இதற்கு முன்பே ஆரம்பமாகிறது.
6 ஆண்டு வரையில் பணக்கார குழந்தைகளுக்கும் ஏழை குழந்தைகளுக்கும் ஏற்படப் போகும் இடைவெளியை நிரப்ப எந்த திட்டமும் இல்லை.’
மேலும், ‘தனியார் பள்ளியில் 25% இடம் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு நியாயமான கட்டணத்தை அரசே செலுத்தி விடும் என்கிறார்கள். இலவசம் என்று சொல்லி விட்டு நியாயமான கட்டணம் என்றால் எப்படி? அவர்கள் சொல்லும் நியாயமான கட்டணம் என்பது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கட்டுப்படியாவது என்பதில்லை, பள்ளிகளுக்கு கட்டுப்படியாகுமா என்பதைத்தான் குறிக்கிறது.’
கல்வி நம் தேவை என்பதைப் புரிந்துகொண்டு, அதைப் பயன்படுத்தி கோடிகளை குவிக்க வேண்டும் என்ற ஆசையால்தான் கல்வி நிலையங்களை தனியார் முதலாளிகள் நடத்துகிறார்கள் என்கிறார் கருணானந்தம். ‘நாம் விரும்புவது மக்களிடம் இருந்து மாணவர்களை அந்நியப்படுத்தாத கல்வி. உழைக்கும் மக்களுக்கான கல்வி.’

கேள்வி கேட்கும் பண்பாட்டை வளர்ப்பதுதான் கல்வியின் அடிப்படை - பி.ஆர். மகாதேவன்

சென்ற இதழில் வெளிவந்த பேட்டியின் இரண்டாவது மற்றும் இறுதி பகுதி.
ச. தமிழ்ச்செல்வன் தொடர்கிறார்…
சென்ற இதழில் பேட்டியின் முடிப்பு வாசகமாக நீங்கள் குறிப்பிட்டிருந்த விஷயங்களைக் கடுமையாக மறுக்கிறேன். பீ வாளி எதிர்புப் போராட்டத்தை தலித் அமைப்புகளும் கம்யூனிஸ்ட்டுகளும்தான் நடத்தினார்கள், நடத்துகிறார்கள். சஃபாய் கரம்சாரி அந்தோலன், ஆதித்தமிழர் பேரவை, அருந்தமிழர் இயக்கம், சிபிஎம்தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்புகள்தான் மலம் அள்ளும் தொழில், சாக்கடை அள்ளும் தொழில்செருப்புத் தைக்கும் தொழில்களில் ஈடுபடும் தொழிலாளிகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார்கள். 3% உள் ஒதுக்கீடும் பெறப்பட்டுள்ளது. கையால் மலம் அள்ளுவதை மேற்குவங்க இடது முன்னணி ஆட்சியில் முற்றிலுமாக தடை செய்து அத்தொழிலாளிகளுக்கு மாற்றுப்பணிகள் வழங்கப்பட்டன. வர்ணாஸ்ரம மநுவாதிகள் மக்கள் வாழ்க்கையில் மண்ணள்ளிப் போட்டதைத் தவிர வேறு ஒன்றும் செய்ததில்லை.
வர்ணாஸ்ரமத்தைப் பற்றி விரிவாகப் பேச இந்தப் பேட்டி போதுமானதல்ல. மேலும் பீ வாளி எதிர்ப்புப் போராட்டம் என்பதற்குப் பதிலாக சிந்துசரஸ்வதி சமவெளியில் இருந்ததுபோல் மலக் கழிவுகளை ஒவ்வொரு வீட்டிலிருந்தும் கால்வாய் வெட்டி ஓரிடத்தில் சேரும்படி ஏற்பாடு செய்திருக்கலாம். மனித மலத்தை மனிதனே அள்ளும் நிலை மாற ஃபிளஷ் அவுட் டாய்லெட்டை அறிமுகப்படுத்திய  முதலாளிகள் அளவுக்கு போராளிகள் எதுவும் செய்துவிடவில்லை. இருட்டைப் பழிப்பதைவிட ஒற்றை அகல் விளக்கை ஏற்றுவது நல்லதல்லவா? உதாரணத்துக்கு, குஜராத்தில் சமீபத்தில் கடைநிலைப்பணிகள் செய்யும் பிரிவினர் உயர் சாதி இந்துக்களின் திருமணங்களை முன்னின்று நடத்த வழி செய்யும்வகையில் மோடி அரசு ஒரு சட்டம் கொண்டுவந்திருக்கிறது. சுலப் இண்டர்நேஷனல் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதுபோல் கம்யூனிஸ்ட் இயக்கம் எதையெல்லாம் முன்னெடுத்திருக்கிறது?
இந்தப் பேட்டி வர்ணாஸ்ரமம் பற்றியதல்ல என்பதை ஏற்கிறேன். அதற்காக சிந்து சமவெளிக்கு இடையில் சரஸ்வதியைச் சொருகுவதை ஏற்க முடியாது. சுலப் இண்டர்நேஷனல் கழிப்பறைகளுக்கு நானும் போயிருக்கிறேன். தமிழகத்திலும் பல கோயில்களில் அவை இயங்குகின்றன. அக்கழிப்பறைகளை தேவர்களும் சைவப்பிள்ளைமார்களும் பிராமணர்களும் சுத்தம் செய்து நான் பார்க்கவில்லை. பிறகென்ன புதுமை அதில் இருக்கிறது? குஜராத்தில் தலித்துகளின் நிலை என்பது பற்றி வண்டி வண்டியாக தொலைக்காட்சி சேனல்களின் விவாதங்களிலேயே கொட்டுகிறது. அவற்றையும் பாருங்கள்.
லீலாவதி கொலை செய்யப்பட்டது எதற்காக?  குடிதண்ணீர் என்கிற சமூக நலப்பிரச்னையில் தலையிட்டதால் தானே?  திருவாரூர் நாவலன் படுகொலை எதனால்? சாராய சாம்ராஜ்ஜியத்தைத் தட்டிக்கேட்டதால்தானே?  பள்ளிப்பாளையம் வேலுச்சாமி கொல்லப்பட்டது எதனால்?  கந்துவட்டிக்கும்பலைத் தட்டிக்கேட்டதால்தானே?
சுனாமியின்போது தன்னெழுச்சியாக கடற்கரையை நோக்கி ஓடியதும் மக்களைக் காத்ததும் கம்யூனிஸ்ட் இளைஞர்கள்தான்.  ‘அலைகொண்டபோது’ என்கிற புத்தகத்தில் நாகை, கடலூர், குமரி மாவட்டங்களில் அவர்கள் ஆற்றிய நலப்பணிகள் பற்றி விரிவாகப் பதிவு செய்துள்ளேன். குளச்சலில் நூற்றுக்கணக்கான பிணங்களை கம்யூனிஸ்ட் தோழர்கள் அகற்றி அடக்கம் செய்ததையும் மக்களுக்கு நிவாரணம் வழங்கியதையும் நேரில் பார்த்தவன் நான். சில தினங்கள் கழித்து அங்கு வந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களையும் பார்த்தேன். அவர்கள் வேனை விட்டு இறங்கி ஓடோடிச்சென்று மக்களைக் காக்கவில்லை. முதலில் வேட்டி சட்டைகளைக் கழற்றி வைத்துவிட்டு காக்கி டவுசர் அணிந்து கையில் ஆர். எஸ். எஸ்.பட்டி அணிந்து நிதானமாகத் தயாராகி அப்புறம்தான் களத்தில் இறங்கினார்கள். ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் தம்மை யாரென்று அடையாளப்படுத்திக் கொள்வதில் அக்கறை காட்டாமல் ஆபத்தை உணர்ந்து உடனே களத்தில் குதித்தார்கள்.
நரேந்திர மோடி பற்றி தயவுசெய்து பேச வேண்டாம். அந்தப் பேரைக் கேட்டாலே ஒரு நடுக்கம் எனக்குள் வந்து விடுகிறது. அவர் இந்துத்துவாவாதி  நான் ஒரு மார்க்சிஸ்ட் ஊழியன் என்பதையெல்லாம் தாண்டிய ஒரு தனிப்பட்ட உளவியலாக இது இருக்கிறது.  குஜராத்தில் நடந்த பச்சைப்படுகொலைகளை தொலைக்காட்சியில் அன்று பார்த்த இரவு முதல் எனக்குள் இப்படி ஓர் அச்ச உணர்வு ஏற்பட்டுவிட்டது. அவர் எத்தனை சாந்த சொரூபமான நடவடிக்கைகளில் இனி ஈடுபட்டாலும் கடவுளின் அவதாரமாகவே ஆக்கப்பட்டாலும் . . . அய்யோ வேண்டாம். அந்தப் பேச்சே வேண்டாம். டிவியில் அவர் முகம் தெரிந்தாலே சேனல் மாற்றிவிடுகிறேன். வெறுப்பல்ல காரணம். அச்சம். அச்சம். அச்சம்.
குஜராத் நிகழ்வுகளைக்கண்டு இந்த அளவுக்கு பயப்படும் நீங்கள் உலகெங்குமான கம்யூனிஸ அரசுகள் செய்த செயல்களைக் கண்டு அச்சப்படாதது ஏன்? இந்த செலக்டிவ் அம்னீஷியாதான் பெரும்பாலான பிரச்னைகளுக்குக் காரணம் என்று கருதுகிறேன். காந்தி பக்கம் அல்லவா நீங்கள் நகர்ந்திருக்க வேண்டும்?
நரேந்திர மோடியை ஒரு சமூக சீர்திருத்தவாதிபோல நீங்கள் சித்திரித்ததால்தான் அவர் பற்றிய என் உளப்பதிவைச் சொல்ல நேர்ந்தது. செலக்டிவ் அம்னீஷியா (ஒருகாலத்தில் காந்தியவாதியாக இருந்ததால்) எனக்கு வந்ததே காந்தியிடம் பாடம் கற்றதால்தான். பகத்சிங், சுகதேவ், ராஜகுரு தூக்கு, இந்தியாவுக்கு உண்மையிலேயே விடுதலை வாங்கித்தந்த ஏகாதிபத்தியத்துக்கு இறுதி மரண அடி கொடுத்த 1946  கப்பற்படை எழுச்சியையும் அதில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான ஏழை எளிய உழைப்பாளி மக்களையும் பற்றிய காந்திஜியின் செலக்டிவ் அம்னீஷியா பற்றி வரலாற்றில் வாசித்துப்பாருங்கள்.
என் கண்முன்னால் நடக்கும் படுகொலைகளைக் கண்டு நான் நடுங்குவதற்கும் நான் பிறப்பதற்கு முன்னால் 40களில் ஸ்டாலின் காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் கொடுமைகளுக்கும் தூரத்து தேசங்களில் நடக்கும் கொடுமைகளுக்கு நான் நடுங்குவதற்கும் நிச்சயம்  வேறுபாடு இருக்கத்தான் செய்யும்.
எந்தவொரு முதலாளித்துவ கம்பெனியைப் போய்க் கேட்டால்கூட அவர்களும் நீங்கள் சொல்வதுபோல் வேறு சில சமூக நலப்பணிகளைப் பட்டியலிடத்தான் செய்வார்கள். நான் கேட்க விரும்பியது அது அல்ல.  பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கு எதிராகப் போராடும் அதே வேளையில் சித்த, ஆயுர்வேத பாரம்பரிய மருத்துவமுறைகளை ஊக்குவிக்கும் பணியை முன்னெடுக்கலாம் அல்லவா? கந்துவட்டி கும்பலை எதிர்ப்பதோடு ஏழைகள் பயன்பெறும்படி முறை சாரா வங்கிகள் ஏற்படுத்தலாமே?
முதலாளி கம்பெனி செய்யும் ‘சமூக நல’ நடவடிக்கைகளையும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் தோழர்களை உயிர்ப்பலி கொடுத்துச் செய்யும் சமூக நடவடிக்கைகளையும் அவசரமாக சமப்படுத்தி இடதுசாரிகளை அவமானப்படுத்துகிறீர்கள். தோழர் நல்லகண்ணு தொடுத்த வழக்காலும் ஸ்ரீவைகுண்டம் மார்க்சிஸ்ட் அலுவலகம் இடிக்கப்படும் அளவுக்குத் தோழர்கள் போராடியதாலும் தாமிரபரணியில் மணல்கொள்ளை 5 வருடத்துக்காவது நிறுத்தப்பட்டுள்ளதே இதுபோல எந்த முதலாளி ‘சமூகப்பணி’ஆற்றியிருக்கிறார். வருமான வரி கணக்குக்காக முதலாளிகள் செய்யும் நல உதவிகளை மார்க்சிஸ்ட்டுகள் பணியோடு ஒப்பிடுவது ஆபத்தானது.நாம் வங்கி துவக்குவதை விட இருக்கும் அரசு வங்கிகளை உண்மையிலேயே மக்களுக்கானவையாக மாற்றுவதுதான் சரியான பார்வை.
கம்யூனிஸ்ட்டுகளை என். ஜி. ஓ. நடவடிக்கைகளில் ஈடுபடச்சொல்லும் உங்கள் ஆலோசனை புதியதல்ல. அகல்விளக்கு நடவடிக்கையான பூதான இயக்கத்தால் நிலமற்ற விவசாயக்கூலிகளின் அனுபவபாத்தியதைக்கு வந்த நிலத்தின் அளவைவிட கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டங்களால் அம்மக்கள் பெற்ற நிலங்களே பன்மடங்கு அதிகம். கம்யூனிஸ்ட்டுகளும் என்.ஜி.ஓ. நடவடிக்கைகளுக்குப் போய்விட்டால் அப்புறம் அடிப்படை மாற்றங்களுக்காக யார்தான் போராடுவது.அகல்விளக்கு நடவடிக்கைகளிலும் கம்யூனிஸ்ட்டுகள் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். எண்ணற்ற கம்யூனிஸ்ட் மக்கள் மருத்துவர்கள் தமிழகத்திலேயே இருக்கிறார்கள். தொழில்முனைவோரும் இருக்கிறார்கள். வீட்டுமனைப் பட்டாவுக்கான போராட்டம் மார்க்சிஸ்ட்டுகள் தலைமையில் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. பட்டாக்களை மக்கள் பெற்றுக்கொண்டும் இருக்கிறார்கள். தினசரி செய்திகளை நீங்கள் வாசிப்பதில்லையா அல்லது கம்யூனிஸ்ட் செய்திகளுக்கு மட்டும் செலக்டிவ் அம்னீசியாவா?
கம்யூனிஸ கோட்பாட்டின்படி கல்வியின் நோக்கம் என்ன?
கம்யூனிசம் வெறும் கோட்பாடல்ல.  அது இயங்கும் அறிவியல்.  புரட்சி என்பதே சமூக வெளியில் நடக்கும் ஒரு கல்வி இயக்கம் என்பதுதான் கம்யூனிஸ்ட்டுகளின் புரிதல். பாவ்லோ பிரையர் சொன்னதுபோல விமர்சன விழிப்புணர்வை மக்களுக்குத் தருவது கல்வியின் நோக்கம். வர்க்க உணர்வு என்பது தொழிலாளி வர்க்கத்துக்கு பிறப்பால் வருவதல்ல, ஊட்டப்படுவது. ‘வர்க்க உணர்வூட்டுவது’ என்றால் என்ன? அது நூறு சதம் ஒரு கல்வி நடவடிக்கைதான்.
உண்மையில் இன்றைய கல்வியானது ஒடுக்கப்பட்டவர்களின் உள்ளார்ந்த விருப்பங்களுக்கும் ஆதிக்க வர்க்கத்தின் தேவைகளுக்கும் இடையில் நடக்கும் பேச்சுவார்த்தையே.  இதில் ஆதிக்க வர்க்கம் அதிக லாபம் அடைவது உண்மைதான்.  ஆனாலும் கூட்டாகப் போராடுவதன் மூலம் இந்த உறவு நிலையில் மாற்றம் கொண்டுவர முடியும். இந்தப் ‘பேச்சு வார்த்தை’ இங்கிலாந்தின் முதல் தொழிலாளர் போராட்டம் நடந்த சாசன இயக்க காலத்தில்(1838 &1848) தொடங்கியது. சாசன இயக்கத்தில் தொழிலாளர் வைத்த கோரிக்கைகளில் ஒன்றுதான் அனைவருக்கும் கல்வி என்பது. 1848இல் வெளியிடப்பட்ட மார்க்ஸ்ஏங்கல்ஸ்ஸின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் இறுதி அத்தியாயத்தில் முன் வைத்த கோரிக்கை முழக்கங்களில் ஒன்று அனைவருக்கும் பொதுவான ஒரு பொதுக்கல்வி முறை என்பதாகும்.
உங்கள் பார்வையில் உலகில் மிகவும் சிறந்து விளங்கும் கல்வி முறை எந்த நாட்டில் இருக்கிறது? அதன் சிறப்பு அம்சங்கள் என்ன?
அப்படி ஒரு நாட்டை மட்டும் குறிப்பாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. மனித குலத்தின் மீது அக்கறை உள்ள ஒரு மாணவர் சமூகத்தை உருவாக்கும் விதத்தில் க்யூபக் கல்விமுறை அமைந்துள்ளதாக அறிகிறேன்.  ஒருமுறை ஆசிரியர் அல்லது டாக்டர் பட்டம் பெற்று சான்றிதழ் பெற்றுவிட்டால் போதும்.  அப்புறம் ரிடையர் ஆகிறவரை எதையும் படிக்கத் தேவையில்லை என்கிற இந்திய நிலைக்கு மாறாக க்யூபாவில் எந்தப்பட்டமும் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும்.  மீண்டும் அவர்கள் தேர்வு எழுதித் தம் தகுதியை உறுதிப்படுத்தவேண்டும்.  அரசாங்கச்செலவில் உயர்கல்வி வரை படித்துவிட்டு அப்புறம் அப்படியே அமெரிக்கா போய் செட்டில் ஆகிற நம் ஊர் வழக்கம் அங்கு இல்லை. அப்படி வெளிநாடு போகிறவர் அவருக்காக நாடு செலவழித்த முழுப்பணத்தையும் அரசுக்குக் கட்டிவிட்டுத்தான் வெளியே காலெடுத்து வைக்க முடியும்.
அமெரிக்காவில் ஜான் ஹோல்ட் ஆரம்பித்த பள்ளிக்கூடம் இல்லாக் கல்விமுறை அங்கு அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் உயர் கல்வி ஆய்வுமுறை மிகச்சிறப்பாக இருக்கிறது.  இந்தியாவில் இருப்பதுபோன்ற காசுக்குத் தகுந்த கல்வி அங்கு இல்லை.
சோவியத் யூனியனில் ஆண்டன் செமினோவிச் மகரங்க்கோவின் கல்விச் சிந்தனையின் அடிப்படையில் அங்கு கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் முக்கியமானவை. பள்ளிக்கூடம் மட்டும் கல்விச்சாலை அல்ல என்றார் அவர்.  பள்ளிக்கூடம், குடும்பம், ஊர்களில் இயங்கும் பல்வேறு சிறு குழுக்கள், உழைப்புத்தளங்கள்,  குழந்தைகள் வளரும் பிரதேசங்களில் உள்ள சமூக அமைப்புகள் போன்ற எல்லாக் கல்விச்சாலைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டுக் குழந்தைகளுக்குக்  கல்வி தர வேண்டும் என்றார். என்ன அற்புதமான கனவு!
ஜப்பானின் டோட்டொ சான் நாம் எல்லோரும் அறிந்த பள்ளி.  இப்படி ஒவ்வொரு நாட்டுக் கல்வி அனுபவத்திலிருந்தும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதைத் தேட வேண்டும். இந்தியாவில் கவி தாகூர் முயற்சியால் உருவான சாந்திநிகேதனிலும் ஜே. கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் ரிஷிவேலியில் நடத்தும் பள்ளியிலும் உருவாக்கப்பட்டுள்ள கல்விமுறைமையிலிருந்தும் ஏற்க வேண்டியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பக்கம் சமச்சீர்கல்விக்கும் இன்னொருபுறம் ஆங்கில வழிக் கல்விக்கும் அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. தமிழகக் கல்வியின் இன்றைய நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்? 
இன்று தெளிவாக தமிழகக் கல்வி நிலை இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது. வசதியானவர்களுக்கு தனியார் பள்ளி. வசதியற்ற  குழந்தைகளுக்கு அரசுப்பள்ளி. தனியார் பள்ளி என்றால் தரமான கல்வி என்கிற தப்பெண்ணம் வலுவாக பெற்றோர் மனதில் ஏற்றப்பட்டுள்ளது.  அதற்குக் காரணம் அரசுப்பள்ளிகளின் இழிநிலைதான்.  வேலை வாய்ப்பை அரசு உருவாக்காமல் எல்லாவறையும் தனியாருக்குத் திறந்து விட்ட பொருளாதாரப்பின்னணியில் நாம் கல்வியைப் பார்க்க வேண்டும். இட ஒதுக்கீடு உள்ள அரசுத்துறைகளில் இடமே (வேலையே) இல்லை.  வேலை இருக்கும் தனியார் துறையில் ஒதுக்கீடே இல்லை. தனியார் கம்பெனியில் ஆங்கிலம் ஒரு முக்கியமான அம்சமாக இருக்கிறது.  உலகமயப் பொருளாதாரப் பின்னணி அதற்குக்காரணம்.  ஆகவே ஆங்கிலம் முக்கியம் என்கிற நிலைமையை கடந்த 50 ஆண்டுகால தமிழக ஆட்சியாளர்கள்தான் உருவாக்கிவிட்டுள்ளனர். தமிழில் படித்தாலே வேலை கிடைக்கும் என்கிற நிலை சமூகத்தில் இருந்தால் யார் ஆங்கிலப்பக்கம் போவார்கள்? மேலும், சமச்சீர் கல்வி தமிழகத்தில் இன்னும் வரவில்லை.  ஒரே பாடத்திட்டம் என்பது மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது. அதையும் மாற்றிக்கொள்ள மெட்ரிக் பள்ளிகளுக்கு வாய்ப்புள்ளது. தவிர பல தனியார் மெட்ரிக் பள்ளிகள் இந்த வம்பே வேண்டாம் என்று வசூலுக்கு இடைஞ்சல் இல்லாத சிபிஎஸ்ஸி கல்வி முறைக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழக அரசு கல்வித்துறையில் உடனடியாகக் கொண்டுவரவேண்டிய சீர்திருத்தங்கள் என்னென்ன?
1.ஐந்து வகையான கல்வி முறைகள் தமிழகத்தில் இருப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். ஒரே இயக்குநரின் கீழ் ஒரே கல்வி முறை இருக்க வேண்டும்.
2.சமச்சீர் கல்வி முறையை முழுமையாக அமல்படுத்தவேண்டும்.
3.அருகமை பொதுக்கல்வி முறையை அமலாக்க வேண்டும்.அமெரிக்காவில் உள்ளதைப்போல எல்லாக் குழந்தைகளும் ஒரே பள்ளியில் பயில வேண்டும்.
4.அரசுப்பள்ளிகளின் உள் கட்டுமானங்களை அதிகரிக்கவேண்டும்.
5.அரசே தொழில்கள் தொடங்கியும் தனியார் துறைகளை தேசியமயமாக்கியும் தமிழ் வழியில் கற்றோருக்கு வேலை வாய்ப்பு உண்டு என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்
6.கல்வித்துறையில் லஞ்சம் ஊழலை ஒழிக்கவேண்டும்.
7.ஆசிரியர்களைக் கேவலமாக நடத்தும் கல்வித்துறையில் தலைகீழ் மாற்றங்கள் கொண்டு வந்து ஆசிரியர், அதிகாரிகள் எல்லோருமே காசு பற்றிக் கவலைப்படுபவர்களாக இல்லாமல் குழந்தைகள் மற்றும் அவர்களது கல்வி மேம்பாடு பற்றிக் கவலைப்படுபவர்களாக மாற்றப் பெருமுயற்சி எடுக்க வேண்டும்.
8.போதிய ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி உடனுக்குடன் நிரப்ப வேண்டும்.
9.அறிவியல்பூர்வமான அணுகுமுறையுடன் குழந்தைகளை மையமாகக் கொண்ட ஒரு பாடத்திட்டத்தையும் கற்பித்தல் முறைமையையும் கொண்டு வர வேண்டும்.
10.தகுதிக் கணக்கீடு செய்யும் முறையைச் செழுமைப்படுத்தி தேர்வுகளே இல்லாத கல்விமுறையைக் கொண்டுவர வேண்டும்.
11.கல்விப்புலத்துக்கு வெளியே உள்ள எழுத்தாளர்கள்,சிந்தனையாளர்களை பாடத்திட்ட உருவாக்கத்திலும் பிற கல்வி முயற்சிகளிலும் ஈடுபடுத்தவேண்டும்.
12.நூலகங்களில் புத்தகம் எடுத்துப் படிக்காத ஆசிரியர்களுக்கு இன்கிரிமெண்ட் கிடையாது என சட்டம் போட வேண்டும்.
13. திமுக அரசு கொண்டுவந்த தமிழ் வழியில் கற்றோருக்கு 20% இட ஒதுக்கீடு என்பதைப் பரவலாகப் பிரசாரம் செய்வதும் அதை ஆண்டுதோறும் கறாராகக் கடைப்பிடிப்பதும் அவசியம்.
14. தேர்வுகளும் வடிகட்டுதலும் இல்லாத கற்பவரும், கற்பிப்பவரும் கூட்டாகச் சேர்ந்து இப்பிரபஞ்சத்தை இவ்வுலகைப் புரிந்துகொள்வதுதான் கல்வி என்பதை அடிப்படையாகக் கொண்டு  சதா கேள்வி கேட்கும் நம் குழந்தைகளை, கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லும் எந்திரங்களாக மாற்றும் இன்றைய கல்வி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
15. மீண்டும் கல்வி கட்டாயமாக மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
அறிவொளி இயக்கம் மூலம் என்னவெல்லாம் சாதிக்க விரும்பினீர்கள்? என்னவெல்லாம் சாதிக்க முடிந்தது?
இந்திய அரசு 1947 தொடங்கி இன்றுவரை இந்தியாவில் கல்லாமையை ஒழிக்க உருப்படியான திட்டம் எதையும் கொண்டுவரவில்லை. அறிவொளி இயக்கம் மக்கள் குரலுக்கு செவி சாய்த்தும், பன்னாட்டு நிதி மூலதனத்தின் நெருக்கடிக்கு இணங்கியும் கொண்டுவரப்பட்ட திட்டம். மூன்றில் இரண்டு பங்கு மத்திய அரசும் ஒருபங்கு மாநில அரசும் நிதி ஒதுக்கீடு செய்து தன்னார்வத் தொண்டர்கள் என்னும் பெரும்படையால் நடத்தப்பட்ட இயக்கம்.
ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒரு அலகாகக்கொண்டு அம்மாவட்டத்தில் உள்ள 15 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட வயதினர் அனைவரும் எண்ணறிவும் எழுத்தறிவும் பெற்றிட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 2 லட்சம் பேர் கற்போராக வந்தனர். அவர்களுக்குக் கற்பிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் 20,000 தொண்டர்கள் தாமாக முன்வந்தனர். காசில்லாமல் இந்த நாட்டில் எதுவும் நடக்காது என்கிற கூற்றைத் தகர்த்தெறிந்த மிகப் பெரிய கல்வித்திருவிழாவாக அதை நடத்தினோம். 75% மேல் வெற்றி பெற்ற ஒரு பண்பாட்டு இயக்கம் அது. கற்றதைத் தக்க வைக்க தொடர்ந்த வாசிப்பும் கல்வி நடவடிக்கையும் தேவை. இல்லாவிட்டால் மீண்டும் கல்லாத நிலைக்கே போய் விடுவார்கள். அரசு தொடர்ந்து அதை நடத்தி இருக்க வேண்டும். ஆனால், அதற்கான அரசியல் மன உறுதி ஆள்பவர்களிடம் இல்லை.

ஆளும் வர்க்கத்தின் பள்ளிகளால் உழைக்கும் வர்க்கத்துக்கு விடுதலை கிடைக்காது! - பி.ஆர். மகாதேவன்

தமிழ் நாட்டில் எழுத்தறிவைக் கூட்டியதில் அறிவொளி இயக்கத்தின் பங்கும் அந்த இயக்கத்தைத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்ற ச. தமிழ்ச்செல்வனின் பங்கும் முக்கியமானது. அதே தீவிரத்துடன் நடப்பு அரசியல், வரலாறு, சமூகவியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளிலும் இவர் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிறார். இந்திய மற்றும் தமிழக கல்வி முறை குறித்தும் மாற்று கல்வி முறைக்கான தேவை குறித்தும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன் அளித்த நேர்காணலின் முதல் பகுதி.
முதலில் அடிப்படைக் கேள்வி. ஒருவருக்கு ஏட்டுக் கல்வி எதற்குத் தேவைப்படுகிறது? அது எத்தகைய தன்னம்பிக்கையை, பலத்தை ஒருவருக்குத் தருகிறது. உதாரணத்துக்கு, சுரண்டும் பண்ணையாரை ஒரு எளிமையான விவசாயி அனா ஆவன்னா கற்பதன் மூலம் மட்டும் எப்படி எதிர்கொண்டுவிடமுடியும்?
பண்ணையார் கதை எல்லாம் பழைய காலம். இப்போது சுரண்டலின் வடிவங்கள் நேரடியாக முன்போலக் கண்ணுக்குத் தெரிவதில்லை. தான் எவ்விதம்  சுரண்டப்படுகிறோம் என்பதைப் புரிந்துகொள்ளவே உழைப்பாளிக்கு கல்வி தேவைப்படுகிறது. 1940களில் தஞ்சை மண்ணில் பண்ணையார்கள், ஜமீன்கள் மற்றும் சைவ மடங்களின் ஆதிக்கத்துக்கும் சுரண்டலுக்கும் எதிராக  சாட்டையடிக்கும் சாணிப்பாலுக்கும் எதிராக  உழைப்பாளி மக்கள் திரண்டு எழுந்திட பி.சீனிவாசராவ்,ஏ.எம்.கோபு போன்ற படிப்பாளிகளின் துணையும் வழிகாட்டலும் தேவைப்பட்டதை மறந்துவிடக்கூடாது.
இன்று இந்தியாவில் இருக்கும் கல்விச்சாலைகளை ஆளும் வர்க்கமும் ஆளும் வர்க்க அரசும் நடத்துகின்றன. அதில் எப்படி ஒடுக்குமுறைக்கு எதிரான உள்ளடக்கம் இருக்கும்? நம்மை மென்மேலும் மங்குணி ஆக்கத்தான் பாடத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. பாடசாலைகளை அரசு நடத்துவதே ஆளும் வர்க்கத்துக்குத் தேவையான மனித மனங்களைத் தகவமைக்கத்தான். இந்திய ஆளும் வர்க்கமான பெருமுதலாளிகள், பெரு நில உடமையாளர்கள், பன்னாட்டு மூலதனக் கூட்டணிக்கு ஆள் தயாரிக்கும் ஒரு பண்பாட்டுத் தொழிற்சாலைதான் பாடசாலை.
உழைப்பாளிகளை அரசியல்ரீதியாகவும் பண்பாட்டுரீதியாகவும் அடிமைகொள்ள ஆளும் வர்க்கங்களின் நலன் காக்க ஐஏஎஸ் உள்ளிட்ட உயர்படிப்புப் படித்த ஏராளமான பேர்கள் ராப்பகலாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே உழைப்பாளிகள் கண்முன் காணும் யதார்த்தத்தை மட்டும் வைத்துக்கொண்டு போராட்டங்களை இறுதிவரை நகர்த்திச்செல்ல முடியாது. எதிரியின் போக்கைப் புரிந்துகொள்ள கண்டிப்பாகப் படிப்பு வேண்டும். ஆனால் ஆளும் வர்க்கத்தின் பள்ளிப்படிப்பை மட்டும் வைத்துக்கொண்டு உழைக்கும் வர்க்கம் ஒரு ஆணியையும் புடுங்க முடியாது. கார்ல் மார்க்ஸ் போல அம்பேத்கர் போல பள்ளிக்கு வெளியே நிறையப் படிப்பதன் மூலம்தான் போராடுவதற்கான சக்தி கிடைக்கும்.
பள்ளிக்கூடம் தரும் எண்ணறிவும் எழுத்தறிவும் உழைப்பாளி மக்களுக்கு ஒரு திறவுகோல் மட்டுமே. ஆனால் அது இல்லாமல் அறிவின் கதவுகளைத் திறக்க முடியாது. இரண்டு விதமான கல்வி இருக்கிறது. ஒன்று ஆள்பவர்கள் தருவது. இன்னொன்று உழைப்பாளி மக்கள் தாமே கற்றுக்கொள்வது. ஆளும் வர்க்கம் எல்லோருக்கும் கல்வி தருவதே உழைப்பாளி மக்கள் நடத்திய போராட்டத்தினால்தான். அது ஏதோ முதலாளித்துவம் தானே முன்வந்து மக்களுக்குக் கல்வி அளிப்பதாகக் கருதக்கூடாது. ஆகவே அதில் எடுக்க வேண்டியதை மட்டும் எடுத்துக்கொண்டு உழைப்பாளி வர்க்கம் சொந்தக் கல்வியைத் தொடர வேண்டும்.
கல்வி என்பதில் வர்க்கங்களுக்கு அப்பால் இந்த இயற்கையை, பிரபஞ்சத்தை, அதன் இயக்கத்தைப் புரிந்து கொள்வதும் அடங்கியிருக்கிறது.
இந்தியக் கல்வி வரலாறு பற்றிச் சுருக்கமாகச் சொல்லுங்கள்.
வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதபடி முரண்பட்டு நிற்கையில் அரசு என்கிற ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறைக் கருவி தோன்றுகிறது என்பார் லெனின். வெறும் வன்முறைக் கருவியால் மட்டும் மக்களை ஆண்டுவிட முடியாது. உழைப்புச் சுரண்டலை வெற்றிகரமாகத் தொடர முடியாது. ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தை மனப்பூர்வமாக மக்களை ஏற்றுக்கொள்ளச்செய்ய ஆளும் வர்க்கத்தின் கலாச்சார மேலாதிக்கத்தைப் பயன்படுத்தி (cultural hegemony) பண்பாட்டுத் தளத்தில் பல வேலைகளை ஆளும் வர்க்கம் செய்யும். அதில் தலையாய ஒன்றாக இருப்பது தன் ஆளுகைக்குள் இருக்கும் மக்களுக்குக் கல்வி அளிப்பது.
இந்திய சமூகத்தில் அரசு உருவான பின்னரே கல்வி என்பது வந்திருக்க முடியும். இந்திய சமூகத்தின் சிறப்பு அசிங்கமான சாதியக் கட்டமைப்பு அரசு உருவாக்கத்தின் கூடவே வளர்ந்ததுதான். ஆகவே இங்கு சுரண்டும் வர்க்கமும் சாதிய மேலாதிக்கமும் இணைந்தே ஆட்சி புரியும் நிலை ஏற்பட்டது. கல்வியையும் இந்தக் கூட்டணியே முடிவு செய்தது. ஆள்வதற்குத் தேவையான கல்வியை காட்டுக்குள் பர்ணசாலை அமைத்து பிராமண/சத்திரியக் குழந்தைகளுக்கு அளித்தார்கள். அவர்கள் கற்ற/கற்பித்த வித்தைகளை விஞ்சி நின்றதால் பஞ்சமன் ஏகலைவனின் கட்டை விரலை வெட்டி எறிந்தார்கள்.
துரோணாச்சாரியார், ஆளும் வர்க்கக் கல்வியின் அடையாளமாகவும் ஏகலைவன், உழைக்கும் மக்கள் கல்வியின் குறியீடாகவும் காலங்கள் தாண்டியும் நிற்கிறார்கள். காலனியக் காலம் வரையிலும் இக்கல்வி மக்களுக்கு மறுக்கப்பட்டே வந்தது. திண்ணைப் பள்ளிக் காலம் பிறகு வந்தது. அக்கிரகாரம் மற்றும் சில உயர்சாதி மக்களே திண்ணை வைத்த வீடு கட்டிக்கொள்ள முடியும். சூத்திரச் சாதியார் அத்தகைய திண்ணைத் தெருக்களுக்குள் நுழையவே முடியாத தடை இருந்தது. ஆகவே திண்ணைப் பள்ளியும் உயர்சாதியினருக்காகவே இருந்தது.
காலனியக் கல்வி இந்தியாவை ஒட்டச் சுரண்ட அவர்களுக்குத் தேவைப்பட்ட குமாஸ்தாக்களை உருவாக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது. கிழக்கிந்தியக் கம்பெனி ஊழியர்களுக்கு இருந்த பெரும் பிரச்னை மொழி மற்றும் இந்திய மக்களின் வாழ்முறை பற்றிய அவர்களின் அறியாமை. ஆகவே கம்பெனி ஊழியர்களுக்கு உள்ளூர்க்காரரான ஒரு செயலாளர் தேவைப்பட்டார். கிராமப்புறத்திலிருந்து கப்பல் வரைக்கும் சரக்கு வந்து சேரப் பல உள்நாட்டு ஊழியர்கள் தேவைப்பட்டனர். அவர்களும் கம்பெனி ஊழியம்தான் செய்தனர். அவர்களில் முக்கியமானவர் கொமஸ்தா அல்லது குமாஸ்தா எனப்பட்ட ஒருவகை புரோக்கர். கொமாஸ்தா என்பது இடைத்தரகர் எனப் பொருள்படும் ஒரு பெர்சிய மொழிச் சொல்லாகும்.
காலனிய ஆட்சிக்காலத்தில் பார்ப்பனர்கள் முதலிலும் பின்னர் பிற உயர்சாதியினரும் ஆங்கிலக்கல்வி கற்று காலனி ஆட்சியின் பகுதியாகச் சீக்கிரமே மாறினர். 1947க்குப் பிறகும் அதே சாதியினர் அதிகார மையங்களில் தொடர்ந்ததால் கல்விமுறையில்  அடிப்படை மாற்றங்கள் எதையும்  அனுமதிக்க அவர்கள் விரும்பவில்லை. பாடத்திட்ட உருவாக்கத்தில் (காலனிய ஆட்சிக்காலத்தில்) பிராமணியத்தின் பங்கு பற்றிய ஓர் ஆய்வேட்டை  ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வாளர் ஒருவர் சமர்ப்பித்திருப்பதைக் காண முடிந்தது.
இந்தியச் சாதிகளில் உழைப்பாளிச் சாதிகளே அதிகம். அவர்களது வாழ்க்கைச் சூழலில் மனப்பாடம் என்பதே தேவையில்லை. மருத்துவம் பார்க்கும் ஒரு சிறு பிரிவுக்கு மட்டும் அது தேவைப்பட்டிருக்கலாம். அன்றாடம் மந்திரம் ஓதும் சாதியாருக்கே மனப்பாடம் தினசரித் தேவையாக இருக்கும். நம் கல்வி முறையில் மனப்பாடம் இன்றளவும் மையப்புள்ளியாக இருப்பதை நாம் மறைத்துவிட முடியாது.
ஜனநாயகம் வந்ததால் கீழிருந்து வரும் குரல்களுக்குச் சற்றேனும் செவிமடுத்தாக வேண்டிய கட்டாயம் இந்த வர்க்க அரசுகளுக்கு உண்டு என்பதால் அவ்வப்போது கல்விமான்களைக்கொண்ட கமிட்டிகளைப் போட்டுச் சீர்திருத்தங்களைக் கொண்டுவரப்போவதாக பிலிம் காட்டுவார்கள். கோத்தாரி கமிஷன் உள்ளிட்ட பல நல்ல குழுக்கள் நல்ல ஆலோசனைகளை வழங்கினாலும் அவை போடப்பட்டதே கண் துடைப்புக்காக என்பதால் கல்வியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
ராஜிவ் காந்தி, புதிய கல்விக்கொள்கை என்ற பேரில் வளர்ந்து வந்த பன்னாட்டு மூலதனத்தின் தேவைக்கேற்ற ஒரு கல்விக்கொள்கையை முன்வைத்தார். இன்று அது மன்மோகன் சிங்கால் உலகமயப் பொருளாதாரத்தின்  தேவைக்கேற்ப மேலும் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.
ஏகலைவன்  துரோணாச்சாரியார் புராணக்கதை எந்த அளவுக்கு உண்மை? தொழிற்புரட்சி நடந்து  அச்சு ஊடகமும் போக்குவரத்து வசதிகளும் பெருகத் தொடங்கி பல்வேறு வேலைகளுக்கான தேவைகள் அதிகமான பிறகுதான் கல்வி அனைவருக்கும் விரிவாக்கப்பட்டிருக்கிறது. உலகளவில் இதுவே நிலை. அதோடு ஏட்டுக் கல்வி குறித்து முன்பு பெரிய மரியாதை இருந்ததில்லை. ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதில் ஆரம்பித்து, கல்வி கற்காத பரிசல்காரன்  நீச்சல் தெரியாத பண்டிதன் உரையாடல் வரை பல உதாரணங்கள் சொல்லலாம். எனவே, ஏட்டுக் கல்வியை அனைத்து சாதியினரும் கற்காததை வேறு கோணத்தில்தான் பார்க்கவேண்டும். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, துவிஜர்கள் நீங்கலாக பிற பிரிவினருக்கான கல்வி ஒப்பீட்டளவில் கூடுதலாகவே தரப்பட்டிருப்பதாக பிரிட்டிஷ் ஆவணங்கள் சொல்கின்றன. பல இடங்களில் பிராமணர்களைவிட சூத்திர சாதியினர் அதிகம் பேர் கல்வி கற்றிருக்கின்றனர். சூத்திர/தலித் சாதிகளில் இருந்து ஞானிகள் தோன்றியிருக்கிறார்கள். பிராமணர்களுக்கு வேதம் கற்றுத் தந்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் திராவிடர் கட்சியினர் செய்வதைப்போல் புறந்தள்ளிவிட முடியுமா என்ன?
ஏகலைவன் கதையை மட்டும் வைத்துக்கொண்டு கல்வியின் வரலாறே இதுதான் என்று சொல்லவில்லை. அனைவருக்கும் கல்வி என்பது தொழிற்புரட்சிக்குப் பிறகு சாசன இயக்கம் போன்ற தொழிலாளர் இயக்கங்களும் கம்யூனிஸ்ட் அறிக்கையும் வந்த பிறகு எழுந்த முழக்கம் என்றுதான் நானும் சொல்கிறேன்.
ஒரு சமூகத்துக்குத் திட்டமிட்டுக் கல்வி தர வேண்டிய அவசியம் அரசு உருவாக்கத்துக்குப் பிறகுதான் வந்திருக்க முடியும். அதை அவர்கள் எல்லோருக்கும் தரவில்லை. ஆனால் அதற்காக சூத்திரர்களும் பஞ்சமர்களும்  கல்வியறிவற்றவர்களாக இருக்கவில்லை. அவர்களுக்கான கல்வியை அவர்களே பார்த்துக்கொண்டார்கள். நாராயணகுரு தாழ்த்தப்பட்ட ஈழவ சமூகத்தில் பிறந்தாலும் வர்க்கலையில் சமஸ்கிருதப் பள்ளியைத் தொடங்கி எல்லாச் சாதியினரும் கற்றுக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தியது ஓர் உதாரணம். சூத்திர /தலித் சாதிகளில் ஞானிகளோ மேதைகளோ சுவாமிஜிகளோ வரவில்லை என்று யார் சொன்னது. அவர்களை உயர்சாதியினர் வணங்கினார்களா? இன்றும் வணங்குகிறார்களா? அந்தச் சாமிகளின் பெயர்களை உயர்சாதியினர் தம் பிள்ளைகளுக்குச் சூட்டுகிறார்களா? பிராமணர்கள் பள்ளிக்கூடம் நடத்தி அதில் சமஸ்கிருதத்தையும் வேதங்களையும் சூத்திரர்களுக்கும் தலித்துகளுக்கும் கற்றுக்கொடுத்தார்களா?
சூத்திரர்களும் தலித்துகளும் சர்வசாதாரணமாக அக்கிரகாரத்துக்குள்ளே போய்ப் பாடம் கற்றது போன்ற சித்திரத்தை நீங்கள் வரைய முடியாது. தமிழகத்திலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் சூத்திர சாதியினரும் தலித்துகளும் கல்விக்காகவும் சமமான கல்வி கற்றாலும் சமமான வாய்ப்பு கிட்டாததாலும் நடத்திய எண்ணற்ற போராட்ட வரலாற்றை  நீங்கள் சொல்லும் பிரிட்டிஷ் ஆவணங்களால் மறுத்துவிட முடியுமா என்ன?
அயோத்திதாசப்பண்டிதரும் பெரியாரும் அம்பேத்கரும் பல நூற்றுக்கணக்கான நிகழ்வுகளை ஆவணப்படுத்தியிருக்கிறார்களே! அவையெல்லாம் பொய்யாகிவிடுமா?அக்கிரகாரத்துக்குள் போய் சிறு வயதில் என் அப்பாவும் அடுத்த தலைமுறையில் நானும் பட்ட அவமானம் பற்றி என்னுடைய பேசாத பேச்செல்லாம் நூலில் எழுதியிருக்கிறேன். இன்றைக்கு நான் ஒரு அக்கிரகாரத்தில்தான் குடியிருந்து வருகிறேன். நுட்பமான அவமதிப்புகளைச் சந்தித்தும் இருக்கிறேன். பழைய காயங்களிலிருந்து புறப்பட்ட உணர்வுதான் இங்கே வந்து வாழ ஆசைப்பட்டது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
இன்று எனக்கு துளியும் பிராமண துவேஷம் கிடையாது. எண்ணற்ற நெருக்கமான நண்பர்கள் பிராமண சமூகத்தில் எனக்குண்டு. ஆனால் வரலாறு வரலாறுதானே? அதை தி.க.வினர் சொல்லும் பாணியில்  நான் சொல்லவில்லை. ஆனாலும் சொல்லத்தானே வேண்டும்? தவிர, தி.க சொல்வதெல்லாம் அவதூறு என்று புறக்கணிப்பதும் ஒரு பயங்கரமான அரசியல்தானே?
தமிழகக் கல்வி வரலாறு பற்றிச் சொல்லுங்கள்.
கல்வி மத்திய மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் (Concurrent list)வைக்கப்பட்டுள்ளது.இந்தியக் கல்வி வரலாற்றின் ஒரு பகுதிதான் தமிழகக் கல்வி வரலாறும். கூடுதலான சில சிறப்பு அம்சங்கள் பற்றி சொல்ல வேண்டும். பகுத்தறிவு இயக்கம் பொது வெளியில் விரிவாக நடைபெற்ற மாநிலம் தமிழ்நாடு. ஆனால் அவ்வியக்கத்தின் பகுதியான திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்து சுமார் 50 ஆண்டுகாலம் ஓடிவிட்டாலும் தமிழகக் கல்வி முறையிலும் பாடத்திட்ட வடிவமைப்பிலும் பகுத்தறிவுக்கு இன்னும் இடம் கிடைக்கவில்லை.
ராஜாஜி கொண்டுவந்த புதிய கல்வித் திட்டம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அன்று வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக இருந்தது. போதிய நிதிவசதி இல்லை. அனைவருக்கும் கல்வியைக் கொடுத்தாக வேண்டும் என்ற முனைப்பு இருந்தது. எனவே, ஷிப்ட் முறையைக் கொண்டுவந்தார். ஆனால், பலரும் குற்றம் சாட்டுவது போல் குழந்தைகள், அப்பாவின் வேலையை மட்டுமே கற்க வேண்டும் என்று அவர் சொன்னாரா? அல்லது, க்யூபக் கல்விமுறை தொடங்கி கம்யூனிச கல்விமுறைவரை பலரும் வலியுறுத்தும் தொழில் கல்வியை வெளிப்படுத்தினாரா?
1953இல் முதலமைச்சராக இருந்த ராஜாஜி ஒரு கல்வித்திட்டத்தை அறிமுகம் செய்தார். Modified Scheme of Elementary Education 1953 என்று அறிமுகப்படுத்தப்பட்ட அத்திட்டத்தின்படி மாணவர்கள் பாதிநேரம் பள்ளிக்கூடத்தில் மொழிப்பாடம், கணிதம், அறிவியல் போன்றவற்றைப் பயில்வார்கள். பள்ளிக்கு வெளியே மூன்று மணிநேரம் அவர்களுடைய தாய் தந்தையரோடு அவர்கள் செய்யும் தொழிலைக் கற்றுக்கொள்வார்கள். பெண் குழந்தைகள் அவரவர் வீடுகளில் வீட்டு வேலை செய்ய வேண்டும். இதற்கு வருகைப்பதிவேடு, கண்காணிப்பு எதுவும் இருக்காது. நேரு, ராஜேந்திர பிரசாத் போன்றோர் இத்திட்டத்தை ஆதரித்தனர்.
இத்திட்டம் குலக்கல்வித்திட்டம் என திராவிட இயக்கத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்டதோடு தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களே எதிர்க்க நேர்ந்தது. பின்னர் இத்திட்டம் கைவிடப்பட்டு, ராஜாஜி  முதலமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது.
இன்று நிதானமாக ராஜாஜி முன் வைத்த திட்டத்தை வாசித்துப்பார்த்தால் ஒரு பார்வையில்  இது மகரங்க்கோ (Anton Markarenko) சோவியத்தில் செயல்படுத்திய திட்டத்தின் கூறுகளோடு இருப்பதாகப்படும்.ஆனால் இறுகிப்போன சாதிய சமூகமான இந்தியாவில் இது சாதிகளைக் கேள்விக்குள்ளாக்குவதற்குப் பதில் அதனோடு சமரசம் செய்துகொள்ளவே உதவும் என்றே இப்போதும் எனக்குப் படுகிறது. பின்னர் வந்த காமராஜர் அனைவருக்கும் இலவசக்கல்வி,கட்டாயக்கல்வி,மதிய உணவு ஏற்பாடு என்று இயங்கியதுதான் பெரிய வெற்றியைக்கொண்டு வந்தது. ஆரம்பப்பள்ளிச் சேர்க்கை காமராசர் காலத்தில் இருமடங்காக உயர்ந்தது.
ராஜாஜி முன் வைத்த திட்டத்திலிருந்து சில கூறுகளை வேறு விதமாக மாற்றி இப்போது முயற்சி செய்யலாம். கக்கூஸ் கழுவுவது, சாக்கடை சுத்தம் செய்வது செருப்புத் தைப்பது,சவரம் செய்வது போன்ற தொழில்கள் இன்றைக்கும் சாதி ரீதியானவையாகவே தொடர்கின்றன. இதை மாற்றும் கடமை பள்ளிக்கல்விக்கு உண்டு. ஆகவே அனைத்து உயர்சாதிப் பிள்ளைகளும் இத்தொழிலில் பள்ளிக்காலத்தில் பயிற்சி பெறலாம் என கொண்டு வரலாம். தொழில்களின் மீது ஏற்றப்பட்டுள்ள சாதி இழிவுகளுக்கு எதிரான உணர்வைப் பிஞ்சு மனங்களில் விதைக்கலாம்.
சரியாகச் சொன்னீர்கள். காந்தி இதைத்தான் தென்னாப்பிரிக்காவிலேயே செய்தார். ராமகிருஷ்ண பரமஹம்சரும் இதையே முன்னெடுத்திருக்கிறார். சுலப் இண்டர்நேஷனல் என ஒன்றை ஆரம்பித்த டாக்டர் பிந்தேஷ்வர் பத்தக் கூட மிகப் பெரிய புரட்சியை அமைதியாக முன்னெடுத்திருக்கிறார். சூத்திர, தலித், கம்யூனிஸ போராளிகள் இது தொடர்பாக ஒரு துரும்பையும் கிள்ளிப் போட்டதாகத் தெரியவில்லை. ஆலய நுழைவுப் போராட்டத்துக்கு முன்னதாக பீ வாளி எதிர்ப்புப் போராட்டம் அல்லவா முதலில் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கும் மனுவாதிகள்தான் முன்வரவேண்டியிருக்கிறது.
நன்றி : ஆழம் மாதாந்திர இதழ்