Friday 11 July 2014

பில்கேட்ஸ்களை அல்ல, அவருடைய வேலையாட்களைத்தான் நம் இன்றைய கல்வியால் உருவாக்க முடியும்! - பி.ஆர். மகாதேவன்

ஆயிஷா நடராசன் என்னும் பெயரால் அறியப்படும் இரா. நடராசன் அடிப்படையில் ஒரு கல்வியியலாளர் மற்றும் எழுத்தாளர்.  கடலூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வரான இவருடன் ஆழம் இதழுக்காக  மேற்கொண்ட விரிவான நேர்காணலில் இருந்து சில பகுதிகள். 
பள்ளிக் கல்வி ஒருவருக்கு எதற்காகத் தேவை? எந்த அளவுக்குத் தேவை? படித்த ஐ.ஏ.எஸ்.களைவிட அதிகம் படிக்காத காமராஜர் சிறந்த நிர்வாகியாக இருக்கவில்லையா?
இந்த இடத்தில் நீங்கள் கல்வியைப் பற்றிக் கேட்கிறீர்களா… நிர்வாகத்திறன் பற்றி கேட்கிறீர்களா என்பது முக்கியம். உங்கள் கேள்வி கல்வி குறித்து என்றால் நமது இந்தியக் கல்வி எந்த விஷயத்தில் மிகவும் பலவீனமாக உள்ளது என்பதைச் சரியாகக் கணித்துவிட்டிருக்கிறீர்கள். ‘ஒரு குழந்தைக்கு பன்னிரண்டு வயதாகும்வரை’ ஆசிரியர் தேவை கிடையாது. இயற்கையிடம், வாழ்க்கை சூழலிடம் குழந்தையை ஒப்படைத்துவிடுங்கள் என்றார் ரூசோ. அவரைப் பொறுத்தவரையில் கல்விமுறை வேறு பள்ளி முறை வேறு. காலை கண் விழித்தது முதல் இரவு உறங்கப்போவது வரை… ஏன் வாழ்நாள் முழுவதும் தொடர்வதே கல்வி. பள்ளிமுறை அப்படி அல்ல. பள்ளிக் கல்வியின் மோசமான பின்விளைவுகளை முன்வைத்து, கல்வியாளர்கள் ஜான் ஹோல்ட், கிளாட் ஆல்வாரஸ் போன்றவர்கள் வீட்டிலேயே கல்வி என்பதை முன்மொழிகிறார்கள். பள்ளி, குழந்தைப் பருவத்தை சூறையாடும் சூழ்ச்சி என்றெல்லாம்கூட எழுதுகிறார்கள்.
ஆனால் இந்தியா மாதிரியான மூன்றாம் உலக நாட்டில், கல்வி என்பது ஏழைமையிலிருந்து மீட்கும் சக்தியாக செயல்படமுடியும். அதை அறிந்திருந்ததால்தான் காந்தி 1937 வார்தா காங்கிரஸ் மகாசபை கூட்டத்தில் 6 முதல் 14 வயது வயது வரையிலான இந்திய குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வியை தனது போராட்ட அடிப்படைகளில் ஒன்றாக முன்மொழிந்தார். சாதி ஒடுக்குமுறையிலிருந்து தன்னை மீட்க கல்வியே உதவியது என்பதை அனுபவரீதியில் உணர்ந்த அம்பேத்கர் அதனை சட்டமாக்கிடத் துடித்தார். பள்ளிப் படிப்பை பாதியில் துறந்தாலும் காமராசர் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் தோற்றுவித்தார்.
நமது புதிய கல்விக் கொள்கை 1980களில் அறிமுகமானபோது அனைத்துவிதத்திலும் அதைக் கல்வியாளர்கள் எதிர்த்தார்கள். இன்றைக்கும் தொடரும் பல அவலங்களுக்கு அதுவே பெரிய காரணம். ஆனால் அதனைத் தொடர்ந்து இந்திய புதிய கல்விக் கொள்கையில் உள்ள பிரச்னைகளை தீர்க்க ஜனார்த்தன ரெட்டி கமிட்டி அமைக்கப்பட்டபோது, அது பல விஷயங்களை மாற்றிட முயன்றாலும் மூன்று வயதில் தொடங்கும் எல்.கே.ஜி. அல்லது அங்கன்வாடிகளை மூடச் சொல்லவில்லை. அதற்கு ஒரு காரணத்தை அந்த கமிட்டி வெளியிட்டது. கிராமப்புறங்களில் பெண் குழந்தைகள் வீட்டு வேலைக்குள்ளேயே முடங்குவதில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் மூன்று வயதிலேயே பள்ளிக்கு வந்துவிட்டால் போதும் என்று சொன்னது அந்த கமிட்டி. செருப்பு தைக்கும் தொழிலாளி வீட்டுப் பிள்ளை பள்ளிக்குள் நுழையும்போது தனது முந்தைய சந்ததிகள் மீது வர்ணாசிரம தர்மம் திணித்த பாரம்பரிய தொழில் செய்யும் ஆபத்திலிருந்து தப்புகிறது.
உலகில் அனைவருக்கும் கல்வி என்பது எப்போது அறிமுகம் ஆனது? இந்தியாவில் அது எப்போது அறிமுகம் ஆனது?
ஆரம்பத்தில் கல்வி மதத்தின் கையில்தான் இருந்தது. இந்தியாவின் குருகுல கல்வியும் அதில் அடக்கம். மதம் தனது சம்பிரதாயச் சடங்குகளை ஒரு மனிதன் கற்றறிவதை மட்டுமே தன் கல்வியின் நோக்கமாக வைத்திருந்தது. மனித மதிநுட்பம் (Human Intellect)   மனச்சான்று (Conscience), நுண்ணறிவுத்திறன் (insight) விருப்பாற்றல் (will) மற்றும் அந்தந்த சமூகங்களின் நன்னடத்தை விதிகள் ஆகியவற்றைத்தான் நவீன கல்வியின் உள்ளடக்கமாகக் கல்வியாளர்கள் முன்வைக்கிறார்கள். அதில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சோஃபிஸ்டுகள் (சாக்ரடீஸ், பிளாட்டோ போன்றவர்கள்) பகுத்தறிவைப் புகுத்தினார்கள். சோஃபிஸ்டுகளின் கல்வி சிந்தனை, மரபை உயர்த்தும் கிரேக்கனை உருவாக்குவதைத் தனது நோக்கமாகக் கொண்டது. நல்லரசு  ஆட்சி புரியும் பிரஜைகளை உருவாக்குவதை பிளாட்டோ தனது கல்வியின் நோக்கமாகக் கொண்டிருந்தார். சுயக்கட்டுப்பாடு கொண்ட தன்னாட்சி பிரஜைகளை உருவாக்குவதே அரிஸ்டாட்டிலிய கல்வியின் நோக்கம். கிறிஸ்தவ மதத்திடம் கல்வி அரிஸ்டாட்டில் வழியேதான் சென்றடைந்தது. மத அடிப்படைவாத கல்வியில் அரிஸ்டாட்டிலின் கல்வியை இணைத்து, தாமஸ் அக்வினாஸ் முற்போக்கு கருத்துகளை உருவாக்கும் நோக்கம் கொண்ட கல்வியை வாட்டிகன் உதவியோடு அறிமுகம் செய்தார். ஆனால் அதுகூட அனைவருக்குமான பொதுக்கல்வி அல்ல.
ஒரு நாட்டில் அனைவருக்குமான பொதுக்கல்வியை முன்வைத்தவர்கள் மறுமலர்ச்சியுகத்தின் அறிவு நேசர்களே ஆவர். இவர்கள் தங்களது புதிய அறிவியல் சித்தாந்தங்களின்மூலம் கடவுள் பாசறையான மத சம்பிரதாயங்களின் மீது கடுந்தாக்குதல் நடத்தினார்கள். அப்போது விஞ்ஞான யுகம் பிறந்திருந்தது. மார்ட்டின் லூதர் போன்ற சமய விடுதலை தலைமைகள் உருவாகின. கலீலியோ, பாஸ்கல், நியூட்டன் என அறிவியல் மாமேதைகள் சாதாரண மக்களிடமிருந்து முளைத்தனர். அறிவை வெகுஜனங்களின் அன்றாட வாழ்வில் கலக்க வைத்தவர்கள். தேவாலயத்திடமிருந்து கல்வியைப் பிடுங்கி மறுமலர்ச்சியுக அறிஞர்கள்தான் அதனை அரசிடம் அளித்தனர்.
அறிவியல் மனிதனை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட கல்வியை பிரான்சிஸ் பெக்கான் அறிமுகம் செய்தார். அதை ஜான் டூபி எதற்கும் வளைந்து கொடுக்கும் மனிதனை உருவாக்கும் நோக்கம் கொண்ட பள்ளிக்கூட கல்வியாக மாற்றுகிறார்.
தொழில்புரட்சி காலத்தில் தொழில்துறைக்குத் தேவையான தொழிலாளர்களை உருவாக்கும் தேவை எழுந்தது. அதாவது அனைவருக்கும் பொதுக் கல்வி என்பது ஆரம்பமானது. தொழில்புரட்சி ஆண்டுகள் கச்சா பொருட்களை தேடி பிரிட்டனை காலனித்துவ பாதைக்கு தள்ளியது. இந்திய மண்ணிலும் அதே வகை பொது கல்வியை, தனது ஆட்சி அதிகார வசதிக்காகவும் கிறிஸ்தவ மதப் பரவலுக்காகவும் பிரிட்டிஷ்காரர்கள் கொண்டு வந்தார்கள். இதுதான் வரலாறு. இது குறித்து விரிவாக நான் எனது ‘இது யாருடைய வகுப்பறை’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.
உலக அளவில் கல்வி இன்று எப்படி இருக்கிறது?
சர்வதேச அளவில் கல்வி நமது நாட்டுக் கல்வியிடமிருந்து பெரிதாக வேறுபட்டுவிடவில்லை. வாழ்வா, சாவா பிரச்னையாக தேர்வு மதிப்பெண்ணைக் கருதும் நிலையே அமெரிக்கா உட்பட எங்கும் உள்ள சூழல். ஐரோப்பா முதல் ஆப்பிரிக்கா வரை எல்லா நாடுகளிலும் பணம் கொட்டும் ‘மிஷின்’ மட்டுமே குழந்தையாகப் பிறந்திருப்பதாக நினைக்கிறார்கள். வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கைக் குழந்தைகளின் கல்விக்கு செலவிடும் அளவுக்குப் பெரும்பாலான நாடுகளில் கல்வி சந்தைப் பொருளாகி உள்ளது. மான்செஸ்டர் முதல் மாண்ட்ரியல் வரை ஸ்டான்போர்டு முதல் மெல்போர்ன் வரை பெற்றோர்கள் பெயர்பெற்ற பள்ளிக்கு அருகில் குடிபெயர்வது இந்த 21ம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டு கால நிகழ்வு. கிழக்கு மற்றும் தெற்கு ஆசிய நாடுகளின் குழந்தைகள் தங்களது பெரிய வேலை நிறுவனங்களில் வந்து எளிதில் வேலை பெற்று, சர்வதேசத் தேர்வுகளிலும் தொடர்ந்து தங்களைவிட முந்துவதை பார்த்து 80களில் குழந்தைகளின் பள்ளிச் சுமையை ஐரோப்பியர்கள் மும்மடங்கு அதிகரித்தார்கள்.
ஹாங்காங்கில் மூன்றில் ஒரு குழந்தை எப்போது வேண்டுமானாலும் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையோடு வாழ்கிறது. லண்டன் போன்ற பெருநகரங்களில் இன்னும் மோசம். பள்ளி செல்லும் குழந்தைகளில் பாதி பேர் போதைக்கு அடிமை. அமெரிக்கப் பள்ளிகளில் துப்பாக்கி, சீனத்து பள்ளிகளில் கத்திக் குத்து, ஜப்பானில் மேல்தள வகுப்பறைகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. இவையெல்லாம் கல்வி மூர்க்கத்தனமாக வியாபாரமயமானதன் பின்விளைவு. நம்ம ஊரைப் போல தெருவுக்குத் தெரு நர்சரி பள்ளிகள் வந்துவிடவில்லையே தவிர, தென்கொரியா, சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், ஜப்பான் மற்றும் அனைத்து நாடுகளிலும் ஆங்கிலம்தான் பேசவேண்டும் என்பது இன்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கான மாற்றங்களை யாரும் முன்மொழியவில்லையா?
பல நாடுகள் விழித்துக் கொண்டுள்ளன. ஆனால் பெற்றோர்களிடம் ஆதரவு இல்லை. இந்தியாவைப் போலவே பல நாடுகளில் கல்வி யுனிசெஃப் உதவிப் பணத்தில் நடக்கும் நலத்திட்ட கல்வியாகவே இருப்பதால், சபையின் மனிதவள அமைப்புகளுக்கு பயந்து சில சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. ஜப்பான் 2002ல் சுமையில்லா கல்வியை அறிமுகப்படுத்தியது. சராசரி பள்ளி வேலை நேரத்தை குறைத்தது. தென்கொரியா, ஆஸ்திரேலியா ஏன் இஸ்ரேல்கூட இதே மாதிரியான கல்விக்கு மாறியது. தேர்வுச் சுமையை நீக்குதல் என்பதே அவற்றின் நோக்கம். லீ மாடல் என்று ஹாங்காங், ஹவாய் வெனிசுலா இவற்றில் மாணவர் பிரதிகளையும் உள்ளடக்கிய பள்ளி நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளன. நூலகத்தில் எந்தப் புத்தகம் வாங்க வேண்டும் என்பதைக்கூட மாணவர்களே தீர்மானிக்கிறார்கள்.
இன்று உலகில் கல்வியில் முன்னணி நாடு பின்லாந்துதான். அங்கே பதிமூன்று வயதுவரை ரேங்க் சிஸ்டம் இல்லை. வயது அடிப்படையில் வகுப்புகள் கிடையாது. உதாரணமாக ஒன்பதாம் வகுப்பில் வகுத்தல் கணக்கில் ஒரு மாணவருக்கு சந்தேகமென்றால், அவர் நாலாம் வகுப்பில் சென்று உட்கார்ந்து ஒருவாரம் அதை மறு முறை கற்றுக்கொண்டுவிட்டு வரலாம். சர்வதேசத் தேர்வுகளில் தொடர்ந்து முதலிடம் பெறும் பின்லாந்தில் பள்ளிக் கல்வித்துறையில் தேர்வுகளே கிடையாது.
கலிபோர்னியாவின் பிரசித்திபெற்ற சரடோகா பள்ளி தடையரண் அட்டவணை (ஙிறீஷீநீளீ sநீலீமீபீuறீமீ) எனும் பாடமுறையை அறிமுகம் செய்தது. இதன்படி ஒரு பாடவேளை 95 நிமிடம் வரைகூட நீளும். ஒருநாளைக்கு எல்லா பாடத்தையும் நடத்துவதில்லை. இன்று அறிவியல் மற்றும் மொழிப்பாடம் நாளைக்குக் கணிதம் இப்படி. மெதுவாக கற்றல் என்பது அதன் பாட பயிற்று முறை. அத்தோடு வகுப்பில் எஸ்கலேட்டர் என்னும் பீரியட் உண்டு. நேற்று ரசித்த டிவி நிகழ்ச்சி, சினிமா பாட்டு, கார்ட்டூன் என குழந்தைகளின் வாழ்விலிருந்து பிரிக்க முடியாமல் போனவை பற்றி ஜாலியாகப் பேசிக்கொண்டு அரட்டை அடிக்க ஒரு பீரியட்! இங்கே எந்த அளவு சுதந்திரம் உள்ளதென்றால் ஆசிரியர் நடத்துவதை செல்போனில் படமெடுத்து கொள்ளலாம். இன்று வடஅமெரிக்கா முழுவதும் இந்த முறையை அறிமுகம் செய்யாத பள்ளியே கிடையாது. அத்தகைய விஷயங்களை ஆய்வு செய்துதான் நம்நாட்டின் கல்வியில் யஷ்பால் கமிட்டி மாற்றங்களை முன்மொழிந்தது.
இந்தியாவில் தமிழகத்தில் கல்வி சார்ந்து கம்யூனிஸ்ட்டுகள் என்ன செய்திருக்கிறார்கள். என்ன செய்திருக்க வேண்டும்? கம்யூனிஸ்ட்டுகள் முன்வைக்கும் கருத்துகளின் அடிப்படையில் ஒரு பள்ளியையாவது நடத்த முடிந்திருக்கிறதா?
நான் எந்தக் கட்சியிலும் உறுப்பினன் அல்ல. ஆனால், இடதுசாரிகள் என்ன செய்திருக்கிறார்கள் என உங்கள் கேள்வியை எடுத்துக்கொண்டால் இந்திய கல்வி வெகுஜனங்களை அடைய அவர்களது பங்களிப்பு பெரிய அளவில் இருந்திருக்கிறது. சடகோபால், ஆத்ரேயா உட்பட பலர் இந்திய அரசின் தவறான கல்விக் கொள்கைக்கு எதிராக கடும் போராட்டம் நிகழ்த்தி வெற்றி கண்டவர்கள். இந்திய மாணவர் சங்கம் போன்ற அமைப்புகளின் தொடர் போராட்டம் பழங்குடி மக்களின் கல்வி, மாதர் கல்வி ஏன் இன்றைய கட்டாய கல்வி சட்டம் உட்பட பலவற்றை நமக்கு தந்திருக்கிறது.
100 சதவிகித கல்வியறிவை அடைய அறிவொளி இயக்கம் நடத்தப்பட்டபோது, நமது தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் மக்கள் எழுதப் படிக்கக் கற்பதற்கு இடது சாரி அறிஞர்களின் கடும் உழைப்பை நினைத்து பார்க்கவில்லை எனில் அது நியாயமே கிடையாது. தற்போது கல்வி என்பது பெரும் வியாபாரமாகிவிட்ட நிலையில், வெகுஜனங்களை  வெகுவாகப் பாதிக்கும் டொனேஷன் போன்ற பிரச்னைகள் மட்டுமல்ல கல்வி கிடைக்காமல் வாடும் குழந்தைகளை மீட்கவும் களத்தில் நிற்பவர்கள் அவர்கள்தான்.
அவர்கள் கோரும் கல்வி பாவ்லோ பிரையரே முன் வைக்கும் அடிப்படை கல்வி. பாடப் பொருளைக் கற்போரே தேர்வு செய்யும் கல்வி. மக்கள் பிரச்னைகளை விவாதித்துக் கற்கும் கல்வி. இங்கே மாணவர்கள் மாணவ ஆசிரியர்களாகவும், ஆசிரியர்கள் ஆசிரிய மாணவர்களாகவும் கலந்து விவாதிக்கும்  வாசிப்பு முறை. இது போன்ற முழுவதும் மாறுபட்ட ஒருவகைக் கல்வியை இன்றைய இந்திய அரசியல் சூழல் எப்படி அனுமதிக்கும்? எனவே இடதுசாரிகள் குறிப்பிடும் வகை கல்வி இங்கே எங்கேயும் இல்லை. ஆனால் அறிவொளி இயக்க வகுப்புகளில் அதுதான் இருந்தது. கல்வியின் அட்சரம் தெரியாதவர்களைக் கூட அது எளிதில் கற்க வைத்தது. தனது சமூக நிலையையும் உணரவைத்தது.
எந்த மொழியில் கல்வி கற்கிறோம் என்பது முக்கியமா? என்ன கற்கிறோம் என்பது முக்கியமா? நல்ல மதிப்பீடுகள் பிற மொழியில் இருந்தாலும் கற்பது தவறா? இன்றைய சூழலில் தாய்மொழி கல்வியில் கூட நல்ல மதிப்பீடுகள் இல்லையே. எனவே தாய் மொழிக் கல்வி தேவை என்ற ஒரு விஷயத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவது போதுமா?
நோம் சாம்ஸ்கி சொல்கிறார், ‘மொழி என்பது வெறும் ஊடகம் அல்ல. அது ஒரு கலாசாரத்தின் உயிர், ரத்த ஓட்டம். ஒரு குழந்தை ஒவ்வொரு பொருளாக, நபராக தொட்டுணரும்போதே தனது கல்வியைத் தொடங்கிவிடுகிறது. சில மொழியியல் அறிஞர்கள் சிட்னி மால்பந்த் போன்றவர்கள் கருவின் கடைசி இரண்டுமாத காலம் முதலே அதன் கல்வி தொடங்கிவிடுவதாகவும் கூறுகின்றனர். அந்த ஆரம்ப கற்றல் நாட்களில் எந்த மொழியில் குழந்தை இயல்பாக தன் கல்வியைத் தொடங்குகிறதோ உலகுடனான தனது தொடர்பை ஏற்படுத்த எந்த மொழி ஊடகமாய் இருக்கிறதோ அதுதான் தாய்மொழி. ஒரு குழந்தை ஆரம்ப கல்வியும் அதே மொழியில் தொடரும்போது கல்வி ஒரு எளிய, இனிய செயல்பாடாக இருக்கிறது. அதேசமயம், ‘மாடு’ என்கிற ஒன்றை  சிஷீஷ் என்று ஒரு புதிய மொழி வழியில் கற்க நேர்கிறபோது கற்றல் சிக்கலானதாகவும் ‘இருமுறை நடக்கும்’ வீண் விரயமாகவும் ஆகிவிடுகிறது.
சிந்திக்கும் மொழி பிறவியிலேயே அமைந்துவிடுகிறது. ஆனால் கற்கும் மொழி வேறாகவும் சிந்திக்கும் மொழி வேறாகவும் ஆகிவிடுகிறபோது கல்வி ஒருவகை போராட்டமாக ஆகிவிடும் அபாயம் உள்ளது. மன உளைச்சல், மன அழுத்தம், ஒருவகை தாழ்வு மனப்பான்மை எல்லாம் சேர்ந்து கற்றலை சிரமமாக்கிவிடும் அபாயம் இருப்பதால்தான், ஆரம்ப கல்வி (ஐந்தாம் வகுப்பு வரை) கண்டிப்பாக தாய்மொழியில் இருக்க வேண்டுமென யஷ்பால் கமிட்டி பரிந்துரைக்கிறது. இது அறிவியல்பூர்வமான உண்மை. நீங்கள் குறிப்பிடும் மதிப்பீடு பிரச்னைக்கும் கல்வி அந்த மொழியில் இருக்க வேண்டும் என்பதற்கும் சம்பந்தம் கிடையாது. தனது சொந்த உறவுகளின் சாவு வீட்டில் எப்படி நடந்து கொள்வது என்பதைக்கூட கற்க முடியாதபடி குடும்ப உறவுகளிடமிருந்தே அறுந்துபோக வைக்கும் ஆபத்து ஆங்கில கல்வியில் இருக்கிறது.
ஆனால் இன்று ஆங்கிலம் என்பது வெறும் மொழியல்ல. அது ஒரு சமூக அந்தஸ்தாக, பணம் சம்பாதிக்கும் கருவியாகப் பார்க்கப்படுகிறது. அதனால் அரசே பிராந்திய மொழி பள்ளிகளிலும்கூட ஆங்கில வழி கல்வியை அறிமுகப்படுத்துகிறது.
ஆனால், ஆங்கிலக் கல்வியை தனது கான்வெண்ட் பள்ளிகள் வழியே கொண்டுவந்தது தாய் மொழியில் இருந்து நம்மைப் பிரித்தது கிறிஸ்தவ மிஷினரிகள்தானே. அவர்களைப் பற்றி கம்யூனிஸ்ட்கள் உட்பட யாரும் ஒரு வார்த்தை சொன்னதாகத் தெரியவில்லையே.
கிறிஸ்தவ மிஷினரிகளின் வழியே உள்ளே நுழைந்தது வெறும் ஆங்கில கல்வி மட்டுமல்லவே. 1813 சாசனம் எனும் பிரிட்டிஷ் அரசு சாசனத்தை எடுத்து படித்துப் பாருங்கள். அதுவரை குருகுலம், மதராசா, திண்ணைப்பள்ளி என மத அடிப்படையில் நடந்த கல்வியை பிரிட்டிஷ் ஆட்சி பொதுப்பள்ளிகளாக மாற்றுகிறது. தலித்துகள் உட்பட நலிந்த பிரிவு மக்கள், பெண்கள், கல்வி சாலைகளுக்குள் அங்கே அனுமதிக்கப்பட்டார்கள்.  மதமாற்றம் நடந்தது. இருக்கலாம், தாய்மொழியிடமிருந்து நம்மை அறுத்தெரியும் ஆங்கில கல்வி அரங்கேறியது. ஆனால் உலக அளவிலான பொதுமேடையாக, நமது ஒடுக்குமுறை நிலைப்படிகளிடமிருந்து விடுதலை பெறும் வழியாக அவர்களது கல்வி அமைந்தது என்பதும் உண்மை அல்லவா. அந்தக் கல்வி இல்லையெனில் ஒரு அம்பேத்கரோ, ஒரு அப்துல்கலாமோ உருவாகியிருக்க முடியுமா. இது ஒருபுறம், மறுபுறம் மதமாற்றங்கள், விவசாயத்தை முற்றிலும் சிதைத்தல், எழுத்தர் வேலைக்குத் தயார்படுத்துதல், மனப்பாட கல்வி என அதன் பலவீனங்களை, கள்ளத்தனமான மக்கள் விரோத அம்சங்களை தந்தை பெரியார், சிங்காரவேலர் உட்பட பலர் தோலுரித்திருக்கிறார்கள்.
பொதுவாக தமிழகத்தில் தாய்மொழிக் கல்வியாளர்களில் பெரும்பாலானவர்கள் இந்திய தேசியத்துக்கு எதிரானதாக தமிழ் தேசியத்தை முன்னிறுத்துபவர்களாகவே இருக்கிறார்கள். இது வேரிலேயே விஷத்தைக் கலக்கும் முயற்சிதானே. ஈழத்தில் இவ்வளவு நடந்த பிறகுதான் இப்படி என்று அல்ல… ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகளில்கூட தேசிய கீதம் பாடமாட்டோம் என்பதுதான் ஃபேஷனாக இருந்திருக்கிறது.
நமது தமிழ் தேசியவாதிகளின் இத்தகைய குரலுக்குப் பின்னே ஒரு சரித்திர உண்மை இருக்கிறது. அது மிகக் கசப்பானது. ஆங்கில வழிக்கல்வி அறிமுகமான பிறகு, பிராந்திய மொழிகளுக்குள் ஒருவித பிரித்தாளும் சூழ்ச்சியை ஆங்கிலேயர்கள் கொண்டுவந்து இறக்குகிறார்கள். ஆங்கில கல்வியோடு சேர்த்து சமஸ்கிருதம் நடத்தலாம். அரபு மொழி நடத்தலாம் என வருகிறது. செம்மொழி அந்தஸ்து தமிழுக்கு தரப்படாத நிலை. அதற்காக தமிழ் மக்களின் அடையாளங்களைக் காப்பாற்றத் தமிழ் தேசியம் முளைத்தது. பிறகு நேருவின் இந்தி மொழி ஆட்சிமொழி எனும் இன்னொரு அரசியல் மூலம் அது மரமாகி, பின் இன்று ஆங்கில மேலாதிக்கத்தின் மூலம் தமிழ் குழந்தைகளுக்கு தமிழில் வாசிக்கக் கூடத் தெரியாத கலாசார பிறழ்வும் ஈழப் போராட்டத்தின் தவிர்க்க முடியாத பாதிப்பும் சேர்ந்துகொண்டுவிடவே அந்த இடைவெளி பிரமாண்டமாகிவிட்டிருக்கிறது. ஒருவிதத்தில் அது இந்திய தேசியத்தை மறுக்கும் திசையில் பயணித்தாலும், உலகின் பிற மொழிகள் முற்றிலும் வழக்கொழிந்து போகும் அளவிற்கு தனது நவீன தொழில்நுட்ப ஆதிக்கத்தின் மூலம் ஆங்கிலம் நமது மண்ணையும் அச்சுறுத்தும் அளவுக்குப் போகும்போது, தமிழ் தேசியத்தின் குரலில் இருக்கும் குறைந்தபட்ச நியாயம் ஒரு வெகுஜன மொழியை அழிவிலிருந்து காக்கும் ஒருபடி நிலையாக மட்டும் கவனம் பெறுகிறது. ‘தமிழ் அவமானம் அல்ல… அடையாளம்!’
பண்டை காலத்தில் எல்லாமே இறை நம்பிக்கையோடு பிணைந்திருந்தது. இன்று அறிவியல் அந்த இடத்தைப் பிடித்த பிறகு எல்லாமே வணிகமயமாகிவிட்டிருக்கிறது. தான் தரும் மருந்து மட்டும் குணப்படுத்திவிடமுடியாது… தெய்வ அனுக்ரகமும் இருக்கவேண்டும் என்று சொன்ன எந்த ஆயுர்வேத சித்த வைத்தியரும் நோயாளியைப் பணம் கறக்கும் மிஷினாகப் பார்க்கவில்லை.
இன்றைக்கு என்ன இறை நம்பிக்கை இல்லாமலிருக்கிறது… இன்னும் சொல்லப்போனால், இன்றுதான் அது புரையோடிப்போய் உள்ளது. மூடநம்பிக்கை நவீன தொழில்நுட்ப அவதாரம் எடுத்து  நீண்ட ஆயுளோடு தொடரத்தானே செய்கிறது. காடுகளை வெட்டவும், அம்மன் கோயில் உண்டியல் உடைக்கவும், பூசாரிகளை கொலை செய்யவும், கூலி படை நடத்தவும்கூட பரிகார ஜோதிடம் கொடிகட்டி பறக்கிறது. அதற்கு அறிவியலை எப்படிக் குற்றம் சொல்ல முடியும்? அதற்காக பழங்குடியினர் சந்ததி மரபினர்களின் இயற்கை மீதான நம்பிக்கையை காட்டுமிராண்டித்தனம் என பரிகசிக்கும் ஒன்று அறிவியலாகவும் இருக்க முடியாது.
கல்வியில் இறை நம்பிக்கை மட்டுமே இருப்பதன் பின்விளைவுதான் பின்லேடன், பஜ்ரங் தள், மதவெறி, ரத்த ஆறுகள். இவற்றைவிடவா இன்றைய நவீன கல்வி பேரழிவுகளை ஏற்படுத்திவிட்டது. தெரிந்து கொள்ளவே கல்வி, தேர்ச்சி பெற அல்ல. முதல் ரேங்க் வாங்குவதைவிட தனக்கு அருகே நடக்கும் இயற்கை அழிவைத் தடுப்பது, ஒரு அநியாயத்தை தட்டிக்கேட்பது… எளியோர்க்கு உதவுதல்… விபத்தில் சிக்கியவரின் உயிர் பாதுகாப்புக்காகச் செயல்பாட்டில் இறங்குதல் இவற்றைப் போற்றும் கல்வி தேவை.
இலவச உணவு, சைக்கிள், சீரூடை, தினமும் தேர்வுகள் என்பது போன்ற நெருக்கடிகள் இல்லாத சூழல், மெதுவாகக் கற்றல், விசாலமான மைதானம் இத்தனை நல்ல விஷயங்கள் இருந்த பிறகும் அரசுப் பள்ளிகளுக்கு மக்கள் போவதில்லையே ஏன்… அரசுப் பள்ளி ஆசிரியர்களேகூட தங்கள் குழந்தைகளை அங்கு படிக்க வைப்பதில்லையே.
1980 வரை செல்வந்தர்களும் ஏழைகளும் ஒன்றாக உட்கார்ந்து படித்த அரசு பள்ளிகள் இருந்தன. புற்றீசல்போல் நர்சரிகள் முளைத்தது புதிய கல்விக் கொள்கையை ராஜிவ் காந்தி அரசு அறிமுகம் செய்தபோதுதான். இந்த புதிய கல்விக் கொள்கை இந்தியாவை ஒரு எகானமியாக அணுகியது. அதுவரை அரசுகள் கல்வியை ஒரு சேவையாக அணுகின. இந்த புதிய கல்விக் கொள்கை கல்வியை முதலீடு என்று அழைத்தது. சர்வதேச சந்தையின் ஆளெடுப்புக்கு நமது குழந்தைகளைத் தயார் செய்யும் புதிய வகை ‘புரட்சி’ இது. நர்சரி பள்ளிகளில் கிடைக்கும் ஆங்கிலம், +2 மதிப்பெண் வழியே பொறியியல், மருத்துவ படிப்பு, இறுதி ஆண்டு படிப்புக்குள் லட்சம் லட்சமாகக் கொட்டும் வேலை என ஒரு கல்வி அமைப்பு கட்டமைக்கப்பட்டது. இது ஆங்கிலேயர்களின் கல்வியிடமிருந்து வேறுபடவில்லை. கும்பெனி ஆபீஸ் கிளார்க் உத்தியோக கல்வி மெக்காலே கல்வி என்றால்… சர்வதேச கார்ப்பரேட் எடுபிடிக்கான கல்வி ராஜிவ் காந்தியுடையது. இந்தக் கல்வி பில்கேட்ஸ்களை உருவாக்காது. பில்கேட்ஸ்களின் வேலையாட்களைத்தான் உருவாக்கும். இப்படியான ஒரு விஷயத்தை அறிமுகம் செய்து மத்தியதர வர்க்கத்தின் பணம் சேர்க்கும் வெறிக்கு திடீர் பணக்காரர் ஆகும் வெறிக்கு பல பத்தாண்டுகள் தூபம் போட்டுவிட்டு… இன்று அந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் அரசு பள்ளியில் தன் குழந்தைகளைச் சேர்க்காதவர்கள் குற்றவாளிகள் எனச் சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? சமச்சீர் கல்வியும் கல்வி உரிமை சட்டமும், தமிழக அரசு இப்போது அறிமுகம் செய்துள்ள முப்பருவ பாடமுறையும் மாற்றம் கொண்டுவர கொஞ்ச காலம் ஆகும். குழந்தைகளின் உரிமைகளை பரிசீலிக்காத கல்வி இன்றுதான் அதனை திரும்பிப் பார்க்கிறது. குழந்தைகளின் உரிமைகள் மீதான கவனம் விரைவில் மாற்றங்களைக் கொண்டுவரும். மக்கள் மனங்களை மாற்றும் வல்லமை, அந்தப் பிஞ்சுக்கரங்களுக்கும் மிருதுவான இதயங்களுக்கும் உண்டு. கண்டிப்பாக மாற்றம் வரும்.

No comments:

Post a Comment