Tuesday 25 February 2014

கல்வி உரிமை சட்டம்.




இலவச - கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இனி 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். தமிழக அரசு வெளியிட்டுள்ள அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துக்கான விதிமுறைகளில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. இந்த சட்டமானது ஒரு முழுமையான கல்வி உரிமை சட்டம். இதில் பல குறைபாடுகள் உள்ளன. இருந்த போதிலும் ஏழை மாணவர்கள் இலவச கல்வி பெறவேண்டும் என்பது பொது அறிவு உலகத்தின் விருப்பம். அந்த வகையில் கல்விக்கான உரிமைச் சட்டத்தை முறையாக அமுல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தை களுக்கும் கல்வி அளிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலவச - கட்டாய கல்வி சட்டத்தை கொண்டுவந்தது. இந்தச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனம், பள்ளிகளுக்கு அங்கீகாரம், ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரம், பள்ளி வளர்ச்சி, கல்வி மேம்பாடு உள்பட பல்வேறு இனங்களில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அதன்படி, தனியார் பள்ளிகள் அருகே வசிக்கும் ஏழை மாணவர்கள், சமூகத்தில் நலிலிந்த பிரிவினர் ஆகியோருக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும். 

அவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்திவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எல்.கே.ஜி. உள்பட கீழ்நிலை வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது. எட்டாம் வகுப்பு வரை எந்த குழந்தையையும் ஃபெயில் ஆக்கக்கூடாது. அவர்களை அடிக்கக்கூடாது. மனரீதியாக துன்புறுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் மத்திய அரசு கொண்டுவந்த இலவச, கட்டாய கல்வி சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், மத்திய அரசின் இலவச, கட்டாய கல்விச் சட்டத்தை அமல்படுத்தும் வகையில் தமிழக அரசு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசிதழில் வெளியான விவரம்:

தனியார் சுயநிதி பள்ளிகளில் ஏழைகள் (குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள்), நலிலிந்த பிரிவினர் (தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்), கைவிடப் பட்டோர் (அனாதைகள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப் பட்டோர், திருநங்கைகள், துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகள்) ஆகியோருக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்க வேண்டும். அவர்களின் படிப்பு செலவை அரசே ஏற்றுக்கொள்ளும்.

படிப்பு செலவு என்பது அரசு பள்ளி களில் ஒரு மாணவருக்கு செய்யப்படும் செலவு அல்லது தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்படும் கல்விக் கட்டணம். இதில் எது குறைவான நிதியோ அது நிர்ணயிக்கப்படும். இந்த நிதியை பெறுவதற்காக தனியார் பள்ளிகள் தனி வங்கிக் கணக்கை பராமரிக்க வேண்டும். உரியதொகை அந்த கணக்கில் ஆன்லைனில் (இ.சி.எஸ்.) செலுத்தப்படும். பெற்றோர் தங்கள் குழந்தை களை பள்ளியில் சேர்க்க வரும்போது வயது சான்றிதழ் இல்லை என்ற காரணத்தி னால் மாணவர் சேர்க்கையை நிராகரிக்கக் கூடாது. பிறப்பு சான்றிதழ் கொண்டுவராத பட்சத்தில் குழந்தை பிறந்த மருத்துவமனையில் கொடுத்த ஆவணத்தையோ, அங்கன்வாடி ஆவணத்தையோ, அதுவும் இல்லாவிட்டால் பெற்றோர் அல்லது குழந்தையின் பாதுகாவலர் பிறந்த தேதியை குறிப்பிட்டு அளிக்கும் உறுதிமொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பள்ளிகள் அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கும்போது அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணத்தை மட்டுமே வசூலிலிப்போம் என்று உறுதிமொழி அளிக்க வேண்டும். அங்கீகார விதிமுறைகளை மீறினால் ஆய்வு செய்து அங்கீகாரம் ரத்துசெய்யப்படும். ஒவ்வொரு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியிலும் 9 பேர் கொண்ட பள்ளி நிர்வாகக்குழு அமைக்கப்பட வேண்டும். அதில் 6 பேர் மாணவர்களின் பெற்றோராக இருக்க வேண்டும். எஞ்சிய இடங்களில் ஆசிரியர், உள்ளாட்சி நிர்வாகி, உள்ளூர் கல்வியாளர் ஆகியோருக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப் பட வேண்டும். கல்வி சார்ந்த பணிகளைவிட ஆசிரியர்களுக்கு இதர பணிச்சுமைகளை கொடுக்கக் கூடாது. உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ எந்த குழந்தையையும் துன்புறுத்தக்கூடாது. தனியார் பள்ளி களில், ஆசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் கல்வித்தகுதி இல்லாமல் பணிபுரிபவர்கள் இந்த சட்டம் அமலுக்கு வந்த 5 ஆண்டிற்குள் அந்த தகுதியை பெற்றால்தான் தொடர்ந்து பணிபுரிய முடியும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்காக அரசு நிர்ணயித்துள்ள சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் முக்கியத்துவம் 

குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய ஆரம்பக் கல்விக்கான உரிமைச் சட்டம், 2009 [Right of Children to Free and Compulsory Education – (RTE) Act 2009] நிறைவேற்றப்பட்டிருப்பது, இந்திய குழந்தைகளுக்கு வரலாற்று சிறப்புமிக்க தருணமாகும். குடும்பங்கள் மற்றும் சமுதாயத்தின் உதவியுடன், ஒவ்வொரு குழந்தையும் தங்கள் உரிமையான தரமான ஆரம்பக் கல்வி பெறுவதை அரசு உறுதி செய்வதற்கு, இது ஒரு துவக்கத்தை அளித்துள்ளது. உலகிலுள்ள ஒருசில நாடுகளில் மட்டுமே இவ்வாறான, குழந்தைகளை மையப்படுத்திய மற்றும் அவர்கள் விரும்பும் வகையிலான இலவச கல்வி பெற, தேச அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலவச கட்டாய ஆரம்பக் கல்வி 

6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தை களும், தங்கள் வீட்டிற்கு அருகாமையிலுள்ள பள்ளியில், இலவச மற்றும் கட்டாயக் கல்வி கற்க உரிமை பெறு கிறார்கள். ஆரம்பக் கல்வி பெற, குழந்தைகளோ அல்லது பெற்றோரோ நேரடியான (பள்ளிக் கட்டணம்) மற்றும் மறைமுகமான (சீருடைகள், பாடப் புத்தகங்கள், மதிய உணவு, போக்குவரத்து) எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. குழந்தைகளின் ஆரம்பக் கல்வி பூர்த்தியாகும் வரை, கல்விக்கான அனைத்துச் செலவு களையும் அரசே ஏற்கும். 

சமுதாயத்தின் பங்கு 

ஒவ்வொரு பள்ளியிலும் ஏற்படுத்தப்படும் பள்ளி நிர்வாகக் குழுவில் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள், பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுப்பினர்களாக இருப்பர். பள்ளி நிர்வாகக் குழு, பள்ளிக்கான மேம்பாட்டு திட்டங்களை வகுப்பது, அரசு நிதியை முறையாகப் பயன்படுத்துவது மற்றும் ஒட்டுமொத்த பள்ளியின் சூழலைக் கண்காணிப்பது ஆகிய பணிகளை செய்யும். பள்ளி நிர்வாகக் குழுக்களில் 50 சதவீதம் பெண்கள் மற்றும் நலிலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதை இச்சட்டம் கட்டாயமாக்கி உள்ளது. சிறுவர் மற்றும் சிறுமியருக்கான தனித்தனி கழிப்பறைகளை ஏற்படுத்துவது, உடல் நலம், சுகாதாரம், மற்றும் தூய்மை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து கல்வியை முழுமை பெற வைப்பது ஆகியவற்றில் இவ்வாறான சமுதாய பங்கேற்பு பெரிதும் உதவும்.

குழந்தைகள் விரும்பும் பள்ளி

நல்ல கல்விச் சூழலை ஏற்படுத்த, அனைத்து பள்ளி களும் கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான நெறிகளை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். ஆரம்பக் கல்வி நிலையில், ஒவ்வொரு 60 குழந்தைகளுக்கும் நன்கு பயிற்சிப் பெற்ற இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப் படுவார்கள்.

குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் பள்ளிக்கு வருகை தருவது, பாடத்திட்டத்தை முழுமை செய்வது, குழந்தை களின் கற்றுக்கொள்ளும் திறனை மதிப்பிடுவது, தவறாமல் பெற்றோர்- ஆசிரியர் கூட்டங்களை நடத்துவது ஆகியவற்றை ஆசிரியர்கள் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும். வகுப்புக்கு தகுந்தவாறு அல்லாமல், மாணவர்கள் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு ஆசிரியர் களின் எண்ணிக்கை இருக்கும். குழந்தைகள் சிறப்பாகக் கற்பதை உறுதி செய்ய ஆசிரியர்களுக்கு தேவையான உறுதுணையை அரசு நிறைவேற்றும். பள்ளி நிர்வாகக் குழுவுடன் இணைந்து, பள்ளியின் தரத்தையும் சமத்து வத்தையும் உறுதி செய்வதில் சமுதாயமும், பெற்றோரும் முக்கிய பங்காற்ற வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் கல்வி உரிமைக் கனவை நனவாக்குவதற்கு தேவையான அனைத்து சட்ட வடிவங்களையும், ஏதுவான சூழ்நிலை களையும் அரசு உருவாக்கும்.

நடைமுறை மற்றும் நிதி

குடும்பங்கள் மற்றும் சமுதாயத்தின் உதவியுடன், ஒவ்வொரு குழந்தையும் தங்கள் உரிமையான தரமான ஆரம்பக் கல்வி பெறுவதை அரசு உறுதி செய்வதற்கு இச்சட்டம் ஒரு துவக்கத்தை அளித்துள்ளது. 

இதற்கு தேவைப்படும் நிதியை, மத்திய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும். மத்திய அரசு. தேவைப்படும் நிதியை கணக்கிடும். மாநில அரசுகளுக்கு, இதிலிலிருந்து குறிப்பிட்ட சதவீதம் நிதியாக வழங்கப்படும். கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றத் தேவையான கூடுதல் நிதியை மாநிலங்களுக்கு வழங்குவதை பரிசீலிலிக்கும்படி, மத்திய அரசு, மத்திய நிதிக் குழுவை (Finance Commission) கேட்டுக்கொள்ளும். சட்டத்தை நடை முறைபடுத்த தேவைப்படும் கூடுதல் நிதிக்கு மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். சமுதாய அமைப்புகள், மேம்பாட்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் குடிமக்களின் பங்களிப்புடன் நிதிப்பற்றாக் குறையை போக்க முடியும்.

கல்வி உரிமைச் சட்டத்தை மீறினால் 

இச்சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பாதுகாக்கத் தேவைப்படும் ஆய்வுகளைச் செய்வதற்கும், புகார்களை விசாரிப்பதற்கும், குழந்தை உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய கமிஷனுக்கு (The National Commission for the Protection of Child Rights), வழக்குகளை விசாரிக்க ஒரு குடிமை நீதிமன்றத்திற்கு அளிக்கப்படும் அனைத்து அதிகாரங்களும் வழங்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலமும் குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாநில கமிஷன்கள் (State Commission for the Protection of Child Rights - SCPCR) அல்லது கல்வி உரிமைப் பாதுகாப்பு ஆணையங்களை (Right to Education Protection Authority - REPA) அமைந்துள்ளது. குறைகள் பற்றி மனு அளிக்க விரும்பும் எவரும், உள்ளூர் அதிகாரிகளிடம் எழுத்து மூலமான புகார் அளிக்கலாம். குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாநில கமிஷன்கள் (State Commission for the Protection of Child Rights - SCPCR) அல்லது கல்வி உரிமை பாதுகாப்பு ஆணையங்களால் மேல்முறையீடுகள் மீது முடிவுகள் எடுக்கப்படும். அவற்றால் வழங்கப்படும் தண்டனைகளை நிறைவேற்ற, மாநில அரசின் நியமனம் பெற்ற அதிகாரியின் ஒப்புதல் தேவைப்படும்.

பள்ளிச் சேர்க்கை நெறிமுறைகள்

நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும், குழந்தை களின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி (RTE Act, 2009), பள்ளிச் சேர்க்கை நெறிமுறைகள் இருப்பதை உறுதிசெய்ய, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தின் விதிகளின்படி குழந்தைகளின் சேர்க்கை நடைபெற வேண்டும்.

வகுத்துரைக்கப்பட்ட பிரிவு மற்றும் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளைப் போன்றே, நலிலிவுற்ற பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 25% இடஒதுக்கீட்டை உத்தரவாதப் படுத்த வேண்டும். மேலும், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகள் குறித்த அட்டவணை தயாரிக்கப்பட்டு, அருகாமைப் பகுதி குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நவோதயா பள்ளிகள் "வகுத்துரைக்கப் பட்ட பிரிவை' சார்ந்ததாக இருப்பதால், இச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. ஆனால், இச்சட்டத்தின் பிரிவு 13 விதி விலக்குகள் இன்றி அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. 

இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் பிரிவு 13

எந்தப் பள்ளியோ அல்லது தனிநபரோ, குழந்தையின் பள்ளிச் சேர்க்கையின் போது, அதன் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளரிடமிருந்து தலைக் கட்டணம் (ஸ்ரீஹல்ண்ற்ஹற்ண்ர்ய் ச்ங்ங்) வசூலிலிப்பதோ அல்லது முன்தேர்வு முறைக்கு உட்படுத்துதலோ கூடாது. உட்பிரிவு (1) க்கு புறம்பாக, தலைக்கட்டணம் வாங்கும் பள்ளிகள் மற்றும் தனி நபர்களுக்கு வசூலிலிக்கப்பட்ட கட்டணத்தைவிட பத்து மடங்கு வரை அபராதம் விதிக்கப்படும். குழந்தைகளை பள்ளியில் அனுமதிப்பதற்கு முன் தேர்வு முறைக்கு உட்படுத்தினால், முதல் தடவையாக மீறும் பொழுது ரூ 25,000/- வரையிலும், தொடர்ந்து மீறும் ஒவ்வொரு முறையும் ரூ 50,000/- வரையிலும் அபராதம் விதிக்கப் படும்.

குழந்தை உரிமைகள் ஆணையம்

சட்டப்பூர்வமான அமைப்பு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையமாகும். இவ்வாணையம் புதுடெல்லிலியைத் தலைநகரமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கல்வி உரிமைச் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் மற்றும் குழந்தைகள் உரிமைமீறல் களைக் கண்காணிக்கவும், தேவையான தலையீட்டை மேற்கொள்ள செய்யும் மேலும் இவ்வாணையத்தின் பணிகளில் உதவிடும் வகையிலும் தமிழகத்தில் நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளின் பணி அமையும். பள்ளிகளில் நடைபெறும் வகுப்பறை வன்முறைகள் (குறிப்பாக, மாணவர்களுக்கு பல்வேறு வழிமுறைகளில் தண்டனை வழங்குவது). மனரீதியான சித்திரவதைகள் செய்வது, பள்ளிக் குழந்தைகள் மீதான பாலிலியல் ரீதியான துன்புறுத்துதல்கள் உள்ளிட்ட சம்பவங்கள் நிகழும்போது மாணவர்கள் அல்லது பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் இப்பிரதிநிதிகளை நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமோ தொடர்பு கொண்டு தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம்.

தமிழகப் பிரதிநிதிகள்:

வழக்கறிஞர் ஹென்றி திபேன், 
நிர்வாக இயக்குனர், 
மக்கள் கண்காணிப்பகம், மதுரை.
ஆசி பெர்னாண்டஸ், 
இயக்குநர், மனித உரிமைகள் பயிற்சி 
மற்றும் ஆராய்ச்சி மையம், சென்னை.
குழந்தைகள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் தங்களது புகார்களை தெரிவிக்க வேண்டிய 
தொலைபேசி, அலைபேசி எண்கள்: 
9994368500, 9994368501, 9994368523, 9994368526, 044-22355905, 044-22352503.



இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் அமலுக்கு வந்து விட்டது. மக்கள் கண்காணிப்பு இருந்தால் தான் மாற்றம் வரும். இல்லை என்றால் இதே நிலைதான் தொடரும். இந்தச் சட்டத்தில், தனியார் பள்ளிகளில் 25 சதவீம் ஏழைக் குழந்தைகளை இலவசமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, சென்னையிலுள்ள சில தனியார் பள்ளிகள் மாணவர்களின் பெற்றோர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளன. அவற்றில், ஏழைக் குழந்தைகளுக்கு நிறைய கெட்ட பழக்கங்கள் இருக்கும். மோசமான பின்னணி யிலிலிருந்து வருகிறார்கள். கீழ்ப்படிதலும் ஒழுக்கமும் இருக்காது. இவர்களுடன் உங்கள் குழந்தைகள் படித்தால், அவர்களுக்கு பிரச்சினை ஏற்படும். இவை தவிர, இலவசமாக மாணவர்களைச் சேர்ப்பதால், உங்கள் குழந்தைகளுக்கான கட்டணம் மிக அதிகமாகி விடும் என்று சொல்லிலி, இதற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தச் சொல்கிறார்கள். இந்தப் பள்ளிகள் கற்றுத் தரும் சமுதாய விழுமியங்கள் இவைதான். இவர்கள் எப்படி வளர்வார்கள் என்று யோசித்துப்பாருங்கள். சமுதாயத்தை மேம்படுத்தும் பொறுப்பு அரசுக்கு மட்டும் இல்லை. குடிமக்கள் அனைவருக்கும் உண்டு. குறிப்பாகக் கல்வி நிறுவனங்களுக்கு உண்டு. சீனா நம்மைவிட வேகமாக வளர்ச்சி பெற்றுவருவதன் காரணமே அங்கு பின்பற்றப்பட்டுவரும் பொதுக் கல்வி முறைதான்.

நன்றி: நக்கீரன் இதழ்

தனியார்மயத்தைக் கொழுக்க வைக்கும் கல்வி பெறும் உரிமைச்சட்டம்!

2009ஆம் அமைந்த காங்கிரசு தலைமையிலான இரண்டாவது ஐக்கிய முன்னணி அரசாங்கம், தனது தேர்தல் வாக்குறுதிளில் ஒன்றான கல்வி பெறும் உரிமைக்கான சட்டத்தை ஏப்ரல் 1, 2010 அன்று அமலுக்குக் கொண்டு வந்தது. 6 வயது முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி பெறும் உரிமையை உத்தரவாதம் செய்வதாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு கடந்த நவம்பர் 8ம் தேதி வெளியிட்டது.


’தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட வேண்டும்’ என்பது இந்த சட்டத்தின் முக்கியமான அம்சம். இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்படும் ஏழைக் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசே சம்பந்தப்பட்ட பள்ளிக்குக் கொடுத்து விடுமாம். இப்படி மக்கள் நலனுக்காக தனியார் பள்ளிகள் மீது கட்டுப்பாடு விதிக்கும் சட்டமாக இது சித்தரிக்கப்படுகிறது. ’அரசுப் பள்ளிகள் தரம் குறைந்தவை, தனியார் பள்ளிகள்தான் உயர்தரக் கல்வி தர முடியும்’ என்ற பொதுக்கருத்து உருவாக்கப்பட்டுள்ள நிலையில் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்க வழி செய்து தருகிறது என்ற வகையிலும் இது கவர்ச்சிகரமான நடவடிக்கையாக காட்டப்படுகிறது.
தனியார்மயத்தை ஆதரித்துவிட்டு, ஆரம்பக் கல்வி அடிப்படை உரிமையாம் - இந்திய அரசு விளம்பரம்
தமிழ்நாட்டில், தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை ரவிராஜ பாண்டியன் கமிட்டி நிர்ண்யித்துக் கொடுத்த பிறகு, அதை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போன முதலாளிகள், அப்பரிந்துரைகளை குப்பைத் தொட்டியில் வீசி விட்டு தம் விருப்பப்படி கட்டணக் கொள்ளை அடிக்கின்றனர். அதைத் தடுக்க முடியாத ஆட்சியாளர்கள் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க தனியார் பள்ளிகளை கட்டாயப்படுத்துவதற்கு சட்டம் கொண்டு வந்திருப்பதாக சொல்லும்போது அதை கவனமாக அலசிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

1947க்குப் பிறகு இலவச தாய்மொழி வழிக்கல்வி தருவதற்காக அரசு பள்ளிகள் கிராமம் தோறும் தொடங்கப்பட்டன. பல குற்றம் குறைகளுடன் இயங்கினாலும், எல்லாக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி, அனைவருக்கு ஒரே மாதிரியான கல்வி என்ற நோக்கத்தை அவை நிறைவேற்றின. 1980களுக்குப் பிறகு மெட்ரிகுலேசன் பள்ளிகள் என்ற பெயர்ப்பலகையுடன் தனியார் பள்ளிகள் காளான்கள் போல முளைத்தன. லாபம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பள்ளிகளில் பலவற்றுக்கு சரியான கட்டிட வசதிகள் கிடையாது, தகுதியுள்ள ஆசிரியர்கள் கிடையாது.
ஆனால், அரசுப் பள்ளிகளின் நிர்வாகம் அடுத்தடுத்த அரசுகளின் புறக்கணிப்பின் மூலம் சீரழிக்கப்பட்டு அரசுப் பள்ளிகள் என்றால் தரம் குறைந்தவை, தனியார் பள்ளிகள் மூலம் ஆங்கில வழிக் கல்வி பயில்வதுதான் சிறந்தது என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டது. இதனால் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவது என்பது மக்கள் மீது பெருத்த சுமையாக மாற்றப்பட்டிருக்கிறது. உழைக்கும் மக்கள் கூட பல ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி குழந்தைகளை மெட்ரிக் பள்ளிகளுக்கு அனுப்புவதை நகர்ப்புறங்களில் பார்க்க முடிகிறது.
இப்படிப்பட்ட நிலையில் அரசுப் பள்ளிகளின் நிர்வாகத்தை மேம்படுத்தி, தேவைப்படும் இடங்களில் புதிய பள்ளிகளைத் திறந்து, குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வியில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, எல்லாக் குழந்தைகளுக்கும் தாய்மொழி வழியில் தரமான கல்வி வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதுதான் நியாயமான திட்டமாக இருக்க முடியும்.  ஆனால் இப்போது நடைமுறைப்படுத்தப்படும் கல்வி பெறும் உரிமைச் சட்டம், இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகளை சரி செய்து எல்லாக் குழந்தைகளுக்கும் சமமான கல்வி வழங்கும் திசையில் போகவில்லை என்பதோடு, ஏற்றத் தாழ்வுகளை இன்னமும் கெட்டித்துப் போக வழி செய்கிறது. கல்வியை வணிகமயமாக்கி லாபம் சம்பாதிக்கும் நடவடிக்கையாக மாற்றும் தனியார்மயப் போக்கை இந்தச் சட்டம் எந்த வகையிலும் தடுக்கப் போவதில்லை. மாறாக கல்வி தனியார்மயம் என்ற எதார்த்தத்தை அங்கீகரித்து, அதற்கேற்ப மாறிக்கொள்ளுமாறு மக்களுக்கு இது அறிவுருத்துகிறது.
தனியார்மயத்தை ஆதரித்துவிட்டு, ஆரம்பக் கல்வி அடிப்படை உரிமையாம் - இந்திய அரசு விளம்பரம்
படம் - thehindu.com
தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் 5,255 தனியார் ஆரம்பப் பள்ளிகளில் சுமார் 11 லட்சம் மாணவர்களும், 1,716 தனியார் நடுநிலைப் பள்ளிகளில் சுமார் 8 லட்சம் மாணவர்களும் படிக்கிறார்கள். 8ம் வகுப்பு வரையிலான மொத்த மாணவர்களில் சுமார் 29% இந்த தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். தனியார் பள்ளிகளில் கட்டணங்களைக் கட்டுப்படுத்தி அவற்றின் நிர்வாகத்தை ஒழுங்கு படுத்த வகை செய்யவும் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் முன்வராத இந்த சட்டம், அரசு பள்ளிகளின் எண்ணிக்கையைக் குறைத்து ஆரம்பப் பள்ளிக் கல்வியை மேலும் மேலும் தனியார் கைகளில் விடுவதற்கான நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டுள்ளது.
முதலாவதாக, அரசு உதவி பெறும் பள்ளிகள், கேந்திரீய வித்யாலயா/நவோதயா போன்ற சிறப்புப் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் என்று பல அடுக்குகளாக இருக்கும் பள்ளிக் கல்வி முறையை அங்கீகரித்து பள்ளிக் கல்வியில் இருக்கும் வசதி படைத்தவர்களின் குழந்தைகளுக்கும் ஏழைகளின் குழந்தைகளுக்கும் இடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகளை தொடர்ந்து பராமரிக்க வழி செய்கிறது.
இரண்டாவதாக, எல்லாக் குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி கிடைக்கும் என்று சட்டத்தில் குறிப்பிடப்படவேயில்லை.
தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்வது தனியார் கல்வி முதலாளிகளுக்கு கட்டாயம் ஏற்படுத்துவது போல தோன்றினாலும் ஏற்கனவே பல்கி பெருகி விட்ட தனியார் பள்ளிகளுக்கு கூடுதல் அங்கீகாரம் அளித்து கணிசமான அரசு நிதியையும் திருப்பி விடுவது இதன் முக்கியமான பணியாக இருக்கப் போகிறது.  அரசுப் பள்ளிகள் தரம் குறைந்தவை என்று கருதப்படும் சூழ்நிலையில் ஏழை மக்கள் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் தமது குழந்தைகள் தனியார் பள்ளிகளுக்கு அனுப்புவதை பெரிய சலுகையாக நினைப்பார்கள். அதன் மூலம் அரசுப் பள்ளிகள் புறக்கணிக்கப்படுவது இன்னும் தீவிரமாகி அவை முற்றிலும் ஒழிக்கப்படும் சூழ்நிலை உருவாக்கப்படும்.
மூன்றாவதாக குழந்தைகளுக்கு ஆறு வயது வரையிலான இளநிலைக் கல்வி, 14 வயதுக்குப் பிறகான உயர்கல்வி தொடர்பான தனது பொறுப்பை முற்றிலும் கைகழுவி விடும் நோக்கத்தையும் இந்தச் சட்டத்தின் மூலம் அரசு வெளிப்படுத்தியிருக்கிறது.  உயர்கல்விக்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்ய முடியாத ஏழை மாணவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக வேலைச் சந்தையில் விடப்படுவார்கள்.
இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களான ஐஐடிகளுக்கு தன்னாட்சி உரிமை வழங்குவது குறித்து ‘அடுத்த 5 ஆண்டுகளில் தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து எவ்வளவு நிதி திரட்ட முடியும் என்று அவர்கள் சொன்னால், அதற்கேற்ப அவர்களுக்கு கூடுதல் சுயநிர்வாக உரிமை தருவோம்’ என்று மனித வளத் துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்தார்.  அதாவது உயர் கல்வி நிறுவனங்கள், தமக்கு நிதி வழங்கும் தனியார் நிறுவனங்களின் விருப்பப்படி செயல்படவிருப்பதைத்தான் தன்னாட்சி என்று சித்தரிக்கிறது அரசு.
“உழைக்கும் வர்க்கத்தினருக்கு அவர்களது வாழ்க்கை நிலைக்கு மேற்பட்ட கல்வி அளிக்கப்படக் கூடாது” என்று 19ம் நூற்றாண்டில் இங்கிலாந்து அரசு கடைப்பிடித்த கொள்கை கூறுகிறது. உழைக்கும் மக்களைப் பொருத்தவரை தற்போதைய சட்டமும் நடைமுறையில் பத்தொன்பதாம் நூற்றாண்டை நோக்கிய பயணமாகவே இருக்கும்.
நான்காவதாக, தனியார் பள்ளிகள் தமது விருப்பப்படி தன்னிச்சையாக நிர்வாகம் செய்து கொள்ளவும், கட்டணங்கள் நிர்ணயித்துக் கொள்ளவும் எந்தத் தடையும் இருக்கப் போவதில்லை. இப்போது இருப்பதைப் போலவே பெற்றோர் பள்ளி நிர்வாகத்துக்கு அஞ்சி நடுங்கி கேட்ட தொகையைக் கட்டி கல்வியை வாங்குவது நடைமுறையாக தொடரும்.  ’தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் பள்ளிக் கட்டணங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள், மத்திய அரசின் கல்வி பெறும் உரிமை சட்டம் அமலுக்கு வந்த பின்னர் செல்லாமல் போய் விடும்’ என்று கபில் சிபல் தனியார் பள்ளி உரிமையாளர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
மெட்ரிக் பள்ளிகளில் கட்டணத்தை நிர்ணயிக்க சட்டம் நிறைவேற்றப் பட்டாலும், அவற்றை விட பல மடங்கு அதிகமான கட்டணங்களை அந்த பள்ளிகள் வசூலித்துக் கொண்டிருப்பதை யாராலும் தடுக்க முடியவில்லை என்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அப்பல்லோ மருத்துவமனைக்கு போக முடிவதை மகிழ்ச்சியாக கருதும் மக்கள் அந்த மருத்துவமனை காப்பீடு மூலம் பெறும் பணத்துக்கும் மேல் கூடுதலாக கேட்பதை ’மனமுவந்து’ கட்டி விடுவதைப் போல,  குழந்தையின் கல்விக்கான கூடுதல் நன்கொடையை சுமக்கவும் மக்கள் தயாராகிக் கொள்ள வேண்டியிருக்கும்.
25% இடங்களை ஏழைகளுக்கு ஒதுக்கீடு செய்யும் சுமையைத் தாங்கிக் கொள்வதால் கூடுதல் கட்டணம் விதிக்க வேண்டியிருக்கிறது என்ற ’தார்மீகக்’ கடமையை தனியார் பள்ளிகள் ‘சுமப்பதால்’, அவர்கள் விதிக்கும் கட்டணங்களை சட்ட ரீதியாகவோ, தார்மீக ரீதியாகவோ தட்டிக் கேட்கும் உரிமை யாருக்கும் இல்லாமல் போய் விடும்.
ஐந்தாவதாக, இந்தச் சட்டம் 60 குழந்தைகளுக்குக் குறைவாகப் படிக்கும் சுமார் 40% ஆரம்பப் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர், இரண்டு வகுப்பறை முறை தொடர்ந்து நிலவுவதை மாற்றப் போவதில்லை என்று தெரிகிறது. அரசு ஒப்பந்த முறையில் தற்காலிக, பயிற்சியளிக்கப்படாத, துணை ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளவும் இந்தச் சட்டம் வழி செய்கிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்களை தேர்தல் வேலை, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நிவாரணப் பணிகள் போனவற்றுக்கு அனுப்புவதற்கு இடம் அளிக்கிறது. தனியார் பள்ளியில் குழந்தைகளுக்கு தினமும் பாடம் நடக்கும் போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இப்போது இருப்பது போலவே அவ்வப்போது மட்டும் பாடம் நடப்பது தொடரும். பிஎட் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் திறமை பற்றி சட்டம் எந்த வரையறையும் செய்யவில்லை.
ஆறாவதாக, குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவை என்று கல்வியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தாய்மொழி வழிக் கல்வி வழங்குவதிலிருந்து தன்னை முழுவதும் விடுவித்துக் கொள்ளும் முகமாக ’சாத்தியமான சூழ்நிலைகளில் மட்டும் தாய்மொழி வழிக் கல்வி வழங்கப்பட்டால் போதும்’ என்று சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆங்கில வழிக் கல்வி என்ற மாயையின் மூலம் கல்வி வியாபாரிகள் பணம் சம்பாதிப்பதை தொடர்ந்து ஊக்குவித்து, குழந்தைகள் தாய்மொழி வழி கற்பதற்கு இருக்கின்ற வாய்ப்புகளும் ஒழிந்து விடும்.
கல்வி பெறும் உரிமைச்சட்டம் (RTE) மாபெரும் மோசடி
தனியார்மயத்தை ஆதரித்துவிட்டு, ஆரம்பக் கல்வி அடிப்படை உரிமையாம் - இந்திய அரசு விளம்பரம்
வர்த்தகம் தொடர்பான சேவைகள் குறித்த பொது ஒப்பந்தத்தின் (General Agreement on Trade Related Services) கீழ் கல்வி, சில்லறை வணிகம், வழக்கறிஞர்கள் பணி, குடிநீர் வழங்குதல், குப்பை அள்ளுவது, தொலைபேசித் துறை, தபால் துறை, மருத்துவத் துறை என்று பல சேவைகள் வணிகம் சார்ந்த சேவைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. அந்தத் துறைகளில் தலையிட்டு சுதந்திரச் சந்தையின் செயல்பாட்டை பாதிக்க அரசுக்கு உரிமை இல்லை. இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ள இந்திய அரசுக்கு கல்வி உள்ளிட்ட சேவைத் துறைகளை தனியார் சந்தைப் போட்டிக்கு திறந்து விடப்பட வேண்டும் என்ற பன்னாட்டு கடமை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு அரசியல் சூழ்நிலைகள், மக்கள் போராட்டங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு செயல்படுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்துக் கொள்ளலாமே தவிர அரசு புதிய மருத்துவமனை கட்டுவதோ, பள்ளி கட்டுவதோ, மருந்து செய்வதோ முற்றிலும் நிறுத்தப்பட்டு தனியார் மயமாக்கப்பட்டே தீர வேண்டும்.
உயர் கல்வியையும் தொழிற்கல்வியையும் விற்பனை பண்டமாக மாற்றுவதற்கான ஒரு பரிந்துரையை நமது அரசாங்கம் உலக வர்த்தக நிறுவனத்திடம் சமர்ப்பித்திருக்கிறது. வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை இந்தியாவில் அனுமதிப்பதற்கான மசோதாவும் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட இருக்கிறது. சந்தைக்கு ஆதரவாக செயல்படும் அரசுகள் ’மெரிடோகிரசி’ மூலம் ஈவு இரக்கமில்லாத கழித்துக் கட்டலை மக்களிடையே செயல்படுத்த முனைகின்றன. மனிதர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து உதவிக் கொள்வது என்பது சந்தை போட்டி சூழ்நிலையில் நடக்க முடியாத ஒன்று.
தனியார்மயத்தை ஆதரித்துவிட்டு, ஆரம்பக் கல்வி அடிப்படை உரிமையாம் - இந்திய அரசு விளம்பரம்
கல்வி பெறும் வாய்ப்புகளை ஜனநாயக முறைப்படி செயல்படுத்தினால் கல்வி விலைபொருளாக இருக்க முடியாது. ஆனால், மூலதனம் தன்னைத்தானே இயற்கையானதாகவும், சுதந்திரமானதாகவும், ஜனநாயகபூர்வமானதாகவும் காட்டிக் கொள்கிறது. சுதந்திரச் சந்தை அடிப்படையிலான முதலாளித்துவத்தின் மீது வைக்கப்படும் எந்த விமர்சனத்தையும் ஜனநாயக விரோதமானது என்று முத்திரை குத்தவும் செய்கிறது. சந்தைப் போட்டி, தனியார் மயமாக்கம், தரம் குறைந்த பொதுத் துறை சேவைகள், பணம் படைத்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே ஏற்றத் தாழ்வுகள் எல்லாமே நியாயமானவை, இயல்பானவை என்று மக்களை நம்ப வைக்க வேண்டியிருக்கிறது.

கல்வி நிலையங்கள் வழியாக அரசாங்கம் முதலாளித்துவத்தை இயற்கையானதாக காட்ட முயற்சிக்கிறது. சந்தையின் தேவைகளுக்கு அப்படியே பொருந்தும் மனிதர்களை உருவாக்குவதே மூலதனத்தின் தேவையாக இருக்கிறது. அறிவியல் பூர்வமான சிந்திக்கும் திறனுக்குப் பதிலாக வணிக நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட கால கட்டத்தில் தேவைப்படும் திறன்களை வழங்குவதே கல்வியின் வேலையாக திட்டமிடப்படுகிறது. நியோ லிபரல் பொருளாதாரவாதிகள் இளைஞர்களை சந்தையில் வேலை செய்யத் தேவைப்படும் விலைபொருளாக ஒரு பக்கமும், சந்தையில் விற்கப்படும் பொருட்களை வாங்கும் நுகர்வோர்களாக இன்னொரு பக்கமும் பார்க்கிறார்கள். இந்த இரண்டிலும் ஏதாவது தடங்கல் ஏற்பட்டால் அவர்கள்  ஒரு சமூகப் பிரச்சனையாக மாறி விடுகிறார்கள்.
10% மக்களை மட்டும் ஆரோக்கியமாகவும், அறிவுள்ளவர்களாகவும், பணக்காரர்களாகவும் வைத்திருப்பதற்கான எல்லா முயற்சிகளையும் மன்மோகன், சோனியா கும்பல் அமெரிக்க/பன்னாட்டு ஏகாதிபத்தியங்களின் வழிகாட்டலில் செய்து வருகின்றார்கள். அத்தகைய முதலாளித்துவ சொர்க்கத்தில் பெரும்பான்மை மக்கள் அவர்களுக்கென ஏற்படுத்தப்பட்ட கருணை இல்லங்களில் வசித்து, தர்ம பிரபுக்கள் மனமுவந்து போடும் கஞ்சியைக் குடித்துக் கொண்டு, வாய்ப்புக் கிடைக்கும் போது கிடைத்த வேலையைச் செய்து முடித்து விட்டு மீண்டும் இல்லங்களுக்குத் திரும்பி விடுவது மட்டுமே விதியாக இருக்கும்.
 புதிய கலாச்சாரம், மார்ச் – 2012.

கல்வி உரிமை வெறும் கனவு : வே. வசந்தி தேவி


கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 கல்வி உரிமையை நிலைநாட்டுகிறதா?

தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி குறித்து இன்று எழுந்துள்ள விவாதம், நடுவண் அரசால் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 குறித்த சிந்தனைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. இச்சட்டம் ஓரளவு வரவேற்கப்பட்டாலும், கூடவே அது குறித்த ஆழ்ந்த கவலைகளும் கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன. கல்வி குறித்த கரிசனை கொள்கை வகுப்போரிடம் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இச்சட்டம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டபோது மொத்தம் 250 உறுப்பினர்களில் 54 பேர்தான் அவையில் இருந்தனர். எந்த விவாதமும் இன்றிக் குரல் வாக்கு (voice vote) மூலம் மசோதா சட்டமாக்கப்பட்டது.

பள்ளிக் கல்வியை அடிப்படை உரிமையாக்காத நாடுகள் ஒரு சிலவே. அதில் இந்தியாவும் ஒன்று. வாழ்வுரிமையினின்று பிரிக்கவியலாதது என உச்ச நீதிமன்றம் அறுதியிட்ட கல்வியுரிமையை இச்சட்டம் நிலைநிறுத்துவதாகச் சொல்லப்பட்டுள்ளது. பல காலம் காத்து, தவித்து இன்று பெற்றுள்ள இச்சட்டம் இத்தனை காலம் இந்தியக் குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் சட்டமா? அல்லது ஒரு வரலாற்று வாய்ப்பைத் தவறவிட்ட சட்டமா?

இந்திய ஜனநாயகம், தன் குழந்தைகளுக்குக் கல்வி அடிப்படை உரிமை என்று ஏற்றுக்கொள்ளவே இத்தனை காலம் சென்றிருக்கிறது. 1993இல் உச்ச நீதிமன்றத்தின் பெரும் மைல்கல்லான உன்னிகிருஷ்ணன் வழக்குத் தீர்ப்பு, கல்வி 14 வயதிற்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளின் அடிப்படை உரிமை என்று அறுதியிட்டது. அதன் பின் ஒன்பது ஆண்டுகள் கழித்து நடுவண் அரசு 2002இல் 86ஆம் அரசியல் சாசனத் திருத்தம் 21ஏ மூலம் அதை ஏற்றுக்கொண்டது. அதற்குப் பின் ஏழு ஆண்டுகள் சென்று, கல்வி உரிமையை நடைமுறைப்படுத்தும் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இன்று கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டம் குறித்து எழுந்துள்ள முக்கிய விமர்சனங்களை இங்கே தொகுப்போம்.

சட்டத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய கூறுகள்
1) 6-14 வயதுக் குழந்தைகள் அனைவருக்கும் கல்வி அடிப்படை உரிமை என்பதைச் சட்டம் ஏற்றுக்கொண்டுள்ளது. அவர்களுக்குக் கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டுமென்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளது. இது ஏற்கெனவே 86ஆம் அரசியல் சாசனத் திருத்தம் அளித்திருக்கும் உரிமை.

2) அங்கீகாரமற்ற பள்ளிகள் அனுமதிக்கப்படமாட்டா. பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்குமான தர (norms and standards) நிர்ணயம், போதுமானதாக இல்லையென்றாலும், ஓரளவு செய்யப்பட்டுள்ளது. விதிக்கப்பட்ட தர வரைவுகளை (norms and conditions) நிறைவேற்றாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் மறுக்கப்படும். ஏற்கெனவே உள்ள பள்ளிகள் தர வரைவுகளைப் பூர்த்திசெய்ய மூன்று ஆண்டுகள் கொடுக்கப்படும். அப்போதும் நிறைவேற்றாவிட்டால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

3) குழந்தைகளைப் பள்ளியை விட்டு அனுப்புவதோ எட்டாம் வகுப்புவரை ஒரே வகுப்பில் தக்க (detention) வைப்பதோ தடுக்கப்படுகிறது. குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தல் எளிமையாக்கப்பட்டுள்ளது. வயதுக்கான சான்றிதழ், மாறுதல் சான்றிதழ் (Transfer Certificate) ஆகியவை பள்ளிச் சேர்க்கையின் போது வலியுறுத்தப்படக் கூடாது. பள்ளியில் சேராத குழந்தைகள், இடைவிலகிவிட்ட குழந்தைகள் மீண்டும் சேர்க்கப்படும்போது, வயதுக்கேற்ற வகுப்பில் (age appropriate class) சேர்க்கப்பட வேண்டும். அவர்கள் அந்த வகுப்பிற்கான கல்வித் தகுதியைப் பெறுவதற்குப் பள்ளியிலேயே இலவசமாக சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். புலம்பெயரும் குடும்பக் (migrant families) குழந்தைகளுக்குப் பள்ளிச் சேர்க்கை மறுக்க இயலாது. குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கு எத்தகைய தெரிவு செய்தலும் (screening procedure) கூடாது. ஆசிரியரின் பொறுப்புகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. தனிப்பயிற்சி (டியூஷன்) தடைசெய்யப்படுகிறது. குழந்தைகளுக்கு உடல்ரீதியான தண்டனை (corporal punishment) அல்லது மனரீதியான புண்படுத்துதல் தடைசெய்யப்படுகிறது. இந்தக் கூறுகள் பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகளுக்குப் பயனளிக்கும்.

4) கலைத் திட்டம், கற்பித்தல் முறைகள் குறித்துச் சில சிறந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கலைத் திட்டம் அரசியல் சாசன விழுமியங்களை ஒட்டி இருக்க வேண்டும்; குழந்தைகளின் பல்திறன் வளர்க்கும் முழுமைத்துவக் கல்வி; செயல் வழி, குழந்தையை மையமாகக் கொண்ட, குழந்தைக்கு உகந்த கற்பித்தல் முறைகள்; அறிவுத் தேடலையும் புதுமை படைத்தலையும் ஊக்குவித்தல்; அச்சமும் தவிப்பும் இன்றிக் குழந்தைகள் கருத்துகளை வெளிப்படுத்தும் வகுப்பறை ஆகியவை வலியுறுத்தப்படுவது மிகவும் வரவேற்கத்தக்கது. இன்றுள்ள தேர்வுமுறைக்கு மாற்றாகக் குழந்தைகளின் அறிவையும் அறிவைப் பயன்படுத்துதலையும் மதிப்பிடும் முழுமையான, தொடர்மதிப்பீட்டு முறை வலியுறுத்தப்படுகிறது. தேர்வுகள் அளிக்கும் அச்சுறுத்தலும் சுமையும் தடுக்கப்படுகின்றன.

5) மூன்று முதல் ஆறு வயதுக் குழந்தைகளுக்கு இலவச முன் பருவக் கல்வி வழங்க அரசுகள் ஏற்பாடு செய்யலாம்.

6) பள்ளி நிர்வாகம் அதிகாரிகள் கையிலிருந்து எடுக்கப்பட்டு, சமுதாயத்தின் பொறுப்புக்கு மாற்றப்படுகிறது. இதனால் ஏற்படும் debureaucratization வரவேற்கப்பட வேண்டியதே. பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பு பள்ளி உள்ளாட்சி உறுப்பினர்கள், பெற்றோர் ஆகியோர் இடம்பெறும் நிர்வாகக் குழுவிடம் (School Management Committee) அளிக்கப்படுகிறது.

இத்தகைய நன்மைகளைப் பயக்கக்கூடிய சட்டமாக இது தோன்றினாலும், உண்மையாகவே அனைத்துக் குழந்தைகளுக்கும் பாகுபாடின்றி அவை கிடைப்பதற்கான வழிமுறைகளையும் உத்திரவாதத்தையும் சட்டம் அளிக்கிறதா என்பது குறித்த ஐயமும் அச்சமும் நாடெங்கும் கிளம்பியுள்ளன. அவற்றைக் கீழே காண்போம்.

பள்ளிச் சேர்க்கை
இன்று பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகள் பள்ளிகளில் இல்லை. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இந்த எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால் பீஹார் போன்ற மாநிலங்களில் இது கணிசமானது. பள்ளிச் சேர்க்கை கடந்த சில பத்தாண்டுகளில் உயர்ந்துள்ளது உண்மைதான். மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் காட்டுவது: 2005-2006 ஆண்டில் வகுப்பு I - VIII இல் பள்ளிச் சேர்க்கை 94.9சதவிகிதம்; வகுப்பு I - XII வரை: 77 சதவிகிதம். இது மொத்த பள்ளிச் சேர்க்கை விகிதம்தான் (Gross Enrollment Ratio). ஆனால் இதை வைத்து எவ்வளவு குழந்தைகள் க்ஷிமிமிமி வகுப்புவரை கல்வி பெறுகின்றனர் என்பதைக் கணக்கிட முடியாது. மாணவர் வருகை, இடை விலகல் (drop out) ஆகியவற்றை வைத்துத் தான் கல்வி கற்கும் மாணவர் எண்ணிக்கையைக் கணிக்க முடியும். பள்ளி வருகை (attendance), பள்ளிச் சேர்க்கை (enrollment) எண்ணிக்கையைவிட ஏறத்தாழ 25 சதவிகிதம் குறைவாக உள்ளதாக அனுமானிக்கப்படுகிறது. இடைவிலகல் மிக அதிகம். நாடு முழுவதிலும் I-X வகுப்பு மாணவரில் 61.6 சதவிகிதத்தினர் இடை நின்று விடுபவர். பல மாநிலங்களில் இடை நிற்பவர் இதைவிட மிக அதிகம். ஆகவே 30 சதவிகிதம் பள்ளி வயதுக் குழந்தைகள் குறைந்தபட்சக் கல்வி பெறுவதில்லை.

இத்தனை பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பள்ளியில் எட்டு வகுப்புவரையேனும் தக்கவைத்து, தரமான கல்வி அளிப்பதற்கான உத்திரவாதம் சட்டத்தில் காணப்படவில்லை.

பல்மட்டப் பள்ளிகளும் பாகுபாடும்
இந்தியக் கல்வியின் பெரும் குற்றம் அதன் கொடிய ஏற்றத்தாழ்வு. சமுதாயத்தின் அனைத்து வர்க்க-சாதிப் பிரிவினைகள் பள்ளிகளிலும் தொடர்கின்றன. இந்திய சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகள் தொடர்வதற்கு, கல்வியில் ஏற்றத்தாழ்வு முக்கியக் காரணம். இதனால், அனைவரின் கல்வியும் தரமற்ற கல்வியாகிவிடுகிறது. பல ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மை என்னவென்றால், பல வர்க்கங்களையும் சமூக அமைப்புகளையும் சேர்ந்த குழந்தைகள் ஒன்றாக ஒரே பள்ளியில் படிக்கும்போதுதான் சிறந்த கல்வி பெறுகின்றனர். இது வசதிபெற்ற குழந்தைகளுக்கும் பொருந்தும்.


கல்வி உரிமைச் சட்டம் இப்போது உள்ள பல மட்டங்கள் கொண்ட, பாகுபடுத்தும் பள்ளிக் கல்வியைத் தொடருகிறது. இப்போது உள்ள நான்கு வகைப் பள்ளிகளுக்குச் சட்டரீதியான அங்கீகாரம் அளிக்கிறது - அ) அரசுப் பள்ளிகள், ஆ) அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், இ) விசேஷப் பள்ளிகள்/ குறிப்பிடப்பட்ட பள்ளிகள் ( specified category), கேந்திரிய வித்யாலயா, நவோதயாப் பள்ளிகள் போன்றவை, ஈ) உதவி பெறாத தனியார் பள்ளிகள். இந்தச் சட்டத்தின்படி அ) அரசுப் பள்ளிகள் 6-14 வயது அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய, இலவசக் கல்வி அளிக்கும். ஆ) உதவி பெறும் தனியார் பள்ளிகள், தாங்கள் அரசிடம் பெறும் உதவிக்கு ஏற்ற விகிதத்தில், குறைந்தபட்சம் 25 சதவிகிதம் குழந்தைகளுக்கு அத்தகைய கல்வி அளிக்கும். இ) & ஈ) விசேஷ வகைப் பள்ளிகளும் உதவி பெறாத தனியார் பள்ளிகளும் தங்கள் அருகாமையில் வசிக்கும் நலிந்த பிரிவினரைக் குறைந்தபட்சம் 25 சதவிகிதம், முதல் வகுப்பில் சேர்த்து, பள்ளிக் கல்வி முடியும்வரை கட்டாய இலவசக் கல்வி அளிக்கும். ‘ஈ’ பிரிவு பள்ளிகளுக்கு இதனால் ஏற்படும் செலவை ஈடுசெய்ய, அரசுப் பள்ளிகளில் ஒரு குழந்தைக்கான தலா செலவோ அல்லது தனியார் பள்ளிகள் விதிக்கும் கட்டணமோ இதில் எது குறைவோ அதை அரசு அளிக்கும்.

மேற்சொன்ன பிரிவுகளில் ‘இ’ பிரிவு விசேஷப் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா, நவோதயாப் பள்ளிகள் போன்ற, மத்திய அரசால் நடத்தப்படும் பள்ளிகள். இவை முழுவதும் அரசின் செலவில் நடக்கும் பள்ளிகள். இவற்றிற்கு ஏன் மற்ற அரசுப் பள்ளிகள்போல் அனைத்துக் குழந்தைகளையும் சேர்க்கும் கடமை விதிக்கப்படவில்லை? உதவி பெறாத பள்ளிகள் போன்று 25 சதவிகிதம் அடித்தட்டுக் குழந்தைகளைச் சேர்த்தால் போதும் என்று ஏன் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது? காரணம் கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகளில் மத்தியதர, மேல்தட்டு வர்க்கக் குழந்தைகள் கற்கின்றனர். ஆகவே இவற்றிற்கு விதிவிலக்கு. இன்று இந்த விசேஷ வகைப் பள்ளிகளில் ஆண்டுக்கு ஒரு மாணவருக்கு அரசு செய்யும் தலா செலவினம் ரூ.11,000. ஆனால் மாநில அரசுகள் நடத்தும் அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவருக்கான அரசு நிதி ஒதுக்கீடு ரூ.1,100 முதல் ரூ.1,500 வரைதான். கேந்திரிய வித்யாலயாக்களில் செய்யப்படும் பெருமளவு நிதி ஒதுக்கீடு சாமான்யரின் குழந்தைகளுக்குச் செல்வதை இந்த வர்க்க அரசு எப்படி அனுமதிக்கும்?

ஆகவே இன்று உள்ள பல்மட்டப் பள்ளிகள் தொடரும். இது அரசியல் சாசனத்தின் 21ஏ பிரிவிற்கு முரணானது. 6-14 வயதான அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய, இலவசக் கல்வி அளிக்க வேண்டும் என்று 21ஏ பிரிவு சொல்கிறது. ஆனால் பின் இருவகைப்பட்ட பள்ளி மாணவரில் 25 சதவிகிதம், இரண்டாம் வகைப் பள்ளிகளில் அதைவிடச் சிறிது அதிக அளவிலும்தான் கட்டாய இலவசக் கல்வி பெறுவர். ஆகவே இது 21ஏக்கு எதிரானது.

அரசு கீழ்வரும் இருவகைகளில் இந்தியக் கல்வியின் பாகுபாடுகளை இக்கட்டத்தில் களைந்திருக்கலாம் அல்லது குறைத்திருக்கலாம்.

அ) தேவையெனில் நீதிமன்றம் செல்லும் வாய்ப்பளிக்கும் (justiciable), விவரமான தர வரைவுகள் (norms and standards) உருவாக்கி, அவற்றைக் கண்டிப்பாக அனைத்து அரசு, தனியார் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தல்.

ஆ) அருகாமைப் பள்ளிகள் (neighbourhood schools) என்ற கொள்கையை ஏற்று, ஒவ்வொரு பள்ளிக்குமான அருகாமையை வகுத்து, அங்கு வசிக்கும் அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்து, பள்ளிக் கல்வி முடிவுறும்வரை இலவசக் கல்வி அளிக்க வேண்டுமென்ற கட்டாயத்தை அனைத்துப் பள்ளிகளுக்கும் விதித்தல்.இவற்றைச் செய்ய அரசு தவறிவிட்டது; தெரியாமலல்ல, தெரிந்தே தவறிவிட்டது.

வயது வரம்பு
கல்வி உரிமைச் சட்டம் பள்ளிக் கல்வி முழுவதையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அதாவது, முன்பருவக் கல்வி உட்கொண்டு, 18 வயதுவரைக்கும் கல்வி உரிமை அளிக்கப்பட வேண்டும். பள்ளிக் கல்வியை முன்பருவக் கல்வி, ஆரம்பக் கல்வி, உயர்நிலைப் பள்ளிக் கல்வி என்று பிரித்தல் கற்றல்-கற்பித்தல் முறைகளின் பிரிவுகள் தானே ஒழிய, கல்வி உரிமையைப் பொறுத்தமட்டில், இது பொருளற்றது. பல முன்னணி வளரும் நாடுகளில் - சீனா, மெக்ஸிகோ, பிரேஸில், தென் ஆப்பிரிக்கா, இந்தோனிஷியா போன்றவற்றில் - 18 வயதுவரை கட்டாயக் கல்வி அளிக்கப்படுகிறது. இந்நாடுகள் பல ஆண்டுகளுக்கு முன்பே அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்ற இலக்கை எட்டிவிட்டு, இன்று 12ஆம் வகுப்புவரை கட்டாயக் கல்வியை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

இச்சட்டம் 3-6 வயதுக் குழந்தைகளுக்குக் கல்வி உரிமை மறுப்பது எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத, மனித உரிமை மீறலே. இந்திய அரசியல் சாசனத்தின் 45 ஆம் பிரிவு, 14 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்க வேண்டுமென்று அரசுக்குப் பணித்தது ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும் இணைத்துத்தான். உச்ச நீதிமன்றத்தின் புகழ்பெற்ற உன்னிகிருஷ்னன் வழக்குத் தீர்ப்பு, கல்வி உரிமை உயிர்வாழ் உரிமையின் பிரிக்க இயலா அம்சம் என்று கூறியதும் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளை இணைத்துத்தான்.

ஆனால், 2002ஆம் ஆண்டு 86ஆம் அரசியல் சாசனத் திருத்தம் கொண்டுவந்து, பிரிவு 21ஏ சேர்க்கப்பட்டபோது, திடீரென்று, எந்த வகையான ஆதாரமும் இன்றி, ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சட்டத்தின் பயன் மறுக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 170 மில்லியன் குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி உரிமை மறுக்கப்பட்டது. சட்டம் சொல்வது: மூன்றிலிருந்து, ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மழலையர் நலனும் கல்வியும் வழங்க மாநில அரசுகள் முயலலாம். ஆனால் இக்கல்வி அளிக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தரமான கல்வி அளிக்காவிட்டால், நமது கல்வி அமைப்பின் அஸ்திவாரமே பலவீனமாகத்தான் இருக்கும். அத்துடன், நம் நாட்டின் மனித வள மேம்பாட்டையும் கடுமையாகப் பாதிக்கும்.


இந்தச் சட்டம் 15-18 வயது இளைஞர்களுக்கும் கல்வியை அடிப்படை உரிமையாக்கி, அனைவருக்கும் மேல்நிலைவரை கல்வி என்ற தேவையையும் உறுதிப்படுத்தி இருக்க வேண்டும். குழந்தை என்ற இலக்கணத்திற்கு ஐக்கிய நாடுகளின் குழந்தை உரிமை சாசனம் (Convention on the Rights of the Child) நிர்ணயித்திருக்கும் வயது வரம்பு 18. இந்தியா இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருக்கிறது. இந்தியாவிலும் Juvenile Justice Act போன்ற சட்டங்கள் 18 வயது வரம்பைத்தான் ஏற்றுள்ளன. அத்துடன் க்ஷிமிமிமி வகுப்புவரை அனைவருக்கும் கல்வியை உறுதிப்படுத்துவ தன், தவிர்க்க இயலாத தொடர்ச்சி தான் உயர்கல்வி உரிமையை உத்திரவாதப்படுத்துவதும். ஏனென்றால், உயர்கல்வி உத்திரவாதம் இல்லையென்றால், க்ஷிமிமிமி வகுப்பு முடித்த மாணவர் போக இடமின்றி, பள்ளியைவிட்டு விலகத்தான் நேரிடும். இன்றைய விதிமுறைகளின்படி ஒரு மாணவன் ஙீமிமி வகுப்பு முடித்தால்தான் உயர்கல்வி அல்லது தொழிற்கல்வி நிறுவனங்களில் சேர முடியும். அந்தத் தகுதி பெற்றால்தான் வேலைச் சந்தைக்குள் (job market) காலடி எடுத்துவைக்க முடியும். ஆகவே கல்வி உரிமைச் சட்டம் பள்ளிக் கல்வி முழுவதற்கும், மழலையர் கல்வியிலிருந்து, ஙீமிமி வகுப்பு முடியும்வரை உரியதாக இருக்க வேண்டும்.

கல்வியின் தரம்
அடுத்த பெரும் பிரச்சினை கல்வியின் தாழ்ந்த தரம். இதைப் பல ஆய்வுகள் தெள்ளத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளன. 2005 முதல் ஆண்டுதோறும் வெளியிடப்படும் கல்வித் தரம் குறித்த தேசிய அளவிலான ஆய்வறிக்கை [Annual Status of Education Report, (ASER)] நாட்டில் கிராமப்புறக் குழந்தைகளின் கல்வித் திறமைகள் மிகத் தாழ்ந்து கிடப்பதை ஆண்டு தோறும் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. கல்வித் தரத்தை உறுதிசெய்வதற்குச் சிறந்த வழி பள்ளிக் கல்வியின் அனைத்துத் தேவைகள் குறித்த தர நிர்ணயம் (norms & standards) செய்து, அனைத்துப் பள்ளிகளிலும் அவை அனைத்தும் நிறுவுதல். இச்சட்டத்தில் ஒரு சில அம்சங்கள் குறித்துத் தர நிர்ணயம் (norms schedule) கொடுக்கப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அவை போதுமானவை அல்ல. சில முக்கியமான தரங்கள் குறிக்கப்படவில்லை. குழந்தையின் வாழ்விடத்திலிருந்து பள்ளியின் தூரம், ஒரு குழந்தைக்கு ஒதுக்க வேண்டிய உட்காரும் இடம், ஒரு பள்ளியில் அனுமதிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, வகுப்பறைத் தளவாடங்கள், கற்பித்தல் உபகரணங்கள், கணினிகள், பரிசோதனைக்கூட உபகரணங்கள், ஆசிரியர் தகுதி, பயிற்சி, ஊதியம், படிகள் (allowances), பதவி உயர்வு விதிகள் போன்றவையெல்லாம் குறிப்பிடப்படவில்லை. சில அம்சங்களின் பெயர் மட்டும் கொடுக்கப்பட்டு, அதனுடன் “நிர்ணயித்த வண்ணம்” என்று குறிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால், அவற்றை நீதிமன்றத்தில் எழுப்ப இயலாது. அவை நிர்ணயிக்கப்படாமலே போகலாம். கடைப்பிடிக்கப்பட வேண்டிய தர வரைவுகள் இவை என்று சட்டம் சொல்லாவிட்டால், தரம் குறித்துப் பேசுவது பொருளற்றது.

நிதி ஒதுக்கீடு
இன்றைய இந்தியக் கல்வியின் பல கேடுகளுக்கும் அநீதிகளுக்கும் உண்மையான காரணம் இந்தியாவில் கல்விக்காகச் செய்யப்படும் மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடு. இந்தச் சட்டத்துடன், அதை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியைக் குறிப்பிட்டு, ஒரு Financial Memorandum சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். சட்டம் சொல்வதெல்லாம் அதை நிறைவேற்றத் தேவையான நிதிப் பொறுப்பு மத்திய-மாநில அரசுகள் இரண்டிற்குமானது ஆகும். சில மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி தேவைப்பட்டால், அளிக்குமாறு Finance Commissionக்குப் பரிந்துரைக்கக் குடியரசுத் தலைவரை வேண்டலாம். இந்தப் பலவீனமான உத்திரவாதத்தின் அடிப்படையில்தான் இச்சட்டமே நிலைகொண்டுள்ளது.

பல வயது நிலைகள் சேர்ந்த குழந்தைகளுக்குக் கட்டாய இலவசக் கல்வி அளிப்பதற்கு எவ்வளவு நிதி தேவை என்பது கடந்த பத்து ஆண்டுகளில் பலமுறை நாட்டில் கணிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு நியமித்த இரு வல்லுநர் குழுக்கள், பீஹார் பொதுப்பள்ளி கமிஷன் ஆகிய மூன்றும் இத்தகைய கணிப்புகள் செய்துள்ளன. தரமான கல்விக்குத் தேவைப்படும் தர வரைவுகள் (norms and standards) எவை என்று வகுத்து, அவை ஒவ்வொன்றுக்கும் தேவையான நிதியைக் கணக்கிட்டு, அதன் அடிப்படையில், ஒரு காலக்கெடுவிற்குள் 6-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி அளிப்பதற்கும் அனைவருக்கும் பள்ளிக் கல்வி என்ற இலக்கை எட்டுவதற்கும் கூடுதலாக எவ்வளவு நிதி தேவை என்று கணித்திருக்கின்றன. 1999இல் மத்திய அரசால் நிறுவப்பட்ட பேராசிரியர் தபஸ் மஜும்தார் தலைமையிலான குழு, கூடுதலாக ஆண்டுக்கு ரூ.13,700 கோடி என்ற கணக்கில் அடுத்த பத்து ஆண்டுகளுக்குத் தேவைப்படும் என்று சொல்லிற்று. 2004இல் Central Advisory Board on Education (CABE) நியமித்த வல்லுநர் குழு அதே இலக்கை ஆறு ஆண்டுகளில் அடைய ஆண்டுக்கு ரூ.73,000 கோடி கூடுதலாக ஆகும் என்று கணித்தது. பேரா. தபஸ் மஜும்தார் குழு அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றாததன் காரணமாக, தேவைகள் ஏகமாகக் குவிந்து, 2004ஆம் ஆண்டில் பல மடங்கு கூடுதல் தேவையை உருவாக்கிவிட்டது. இரண்டாம் குழுவின் பரிந்துரைகளையும் இதுவரை நிறைவேற்றவில்லை. இது தொடர்ந்தால், அடுத்த பத்து ஆண்டுகளில் இதுவும் பன்மடங்கு பெருகி, தேவைப்படும் நிதி பிரம்மாண்டமாக உருவெடுத்து விடும். ஒருவேளை அந்தக் கட்டத்தில், அரசு அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்பது இந்தியாவில் சமாளிக்க முடியாத எட்டாக் கனவு என்று கையை விரித்துவிடலாம். இந்தியா பல பல ஆண்டுகளுக்குத் தரமற்ற கல்வியைத் தன் குழந்தைகளுக்கு அளித்துவரும் அவலத்தை ஒப்புக்கொண்டுவிட்டு, நாட்டின் ஒற்றுமையையும் வளர்ச்சியையும் பணயம் வைக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம்.

பதினோராம் ஐந்தாண்டுத் திட்டத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்காக (SSA) ஒதுக்கப்பட்டிருக்கும் நிதிச் சட்டத்தின் தேவைகளைக் கவனித்துக்கொள்ளப்போதும் என்ற எண்ணம் இருக்கலாம். இந்த நிதி ஒதுக்கீடு 10ஆம் திட்ட ஒதுக்கீடுபோல் இரண்டு மடங்கு என்றாலும், அது ஆண்டுக்கு ரூ.30,000 கோடிதான். இது சிகிஙிணி குழு நிர்ணயித்த ஆண்டுக்கு ரூ.73,000 கோடி என்பதில் பாதிக்கும் குறைவு.

இந்தியாவின் தேசியக் கல்விக் கொள்கை தேச வருமானத்தில் (GDP) ஆறு சதவிகிதத்திற்குக் குறையாமல் கல்விக்காக ஒதுக்க வேண்டுமென்று சொல்கிறது. கோதாரிக் கமிஷனால் முதல்முறை நிறுவப்பட்ட இந்த இலக்கு நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை கல்விக்கான ஒதுக்கீடு நான்கு சதவிகிதத்தைத் தாண்டியதில்லை; பெரும்பாலும் மூன்று சதவிகிதத்தை ஒட்டியே இருந்துள்ளது. பெரும்பாலான வளர்ந்த நாடுகளிலும் வளரும் நாடுகளில் முன்னணி நாடுகளிலும் கல்விக்கான நிதி தேசிய வருமானத்தில் 10 சதவிகிதமோ அதற்கும் மேலாகவோ இருக்கிறது. மனித வள மேம்பாட்டு அமைச்சர் கல்விக்கான நிதி ஒதுக்கீடு மிகக் குறைவு என்று சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். இதையெல்லாம் ஒப்புக்கொள்ளும் அமைச்சர் தனியார் துறைதான் இந்தக் குறையை நிவர்த்திசெய்ய வேண்டும் என்கிறார். ஆகவே அரசு-தனியார்-கூட்டு (public-private-partnership) வேண்டுமென்று வலியுறுத்துகிறார்.

அரசு-தனியார்-கூட்டு
இந்த P-P-P (Public-Private-Partner ship) என்பது கடந்த சில ஆண்டுகளாகப் பேசப்பட்டுவருகிறது. இந்தியாவில் இது சிறிதளவேனும் சாத்தியமா என்ற சிந்தனையே இல்லாமல் பேசப்படுகிறது. நாட்டின் மொத்தத் தொடக்கப் பள்ளிகளில் 89.1 சதவிகிதம் அரசால் (அரசு, உள்ளாட்சி) நடத்தப்படுபவை. 10 சதவிகிதம்தான் தனியார் நடத்துபவை. 90 சதவிகிதம் மாணவர் அரசுப் பள்ளிகளில்தான் படிக்கின்றனர். பீஹார் போன்ற மாநிலங்களில் ஆறு சதவிகிதம்தான் தனியார் பள்ளிகளில் உள்ளனர். இதற்குக் காரணம் என்ன? தனியார் பள்ளிகள் நடத்துவதற்கு எந்தத் தடங்கலுமற்ற, அனைத்துச் சலுகைகளும் அவற்றிற்கு அள்ளித் தரப்படுகின்ற சூழலிலும் ஏன் இத்தனை குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகள்தாம் தனியார் பள்ளிகளில் உள்ளனர்? காரணம் கட்டணம் செலுத்திக் கல்வி பெறும் வசதி 90 சதவிகிதக் குடும்பங்களுக்கு இல்லை. இந்திய நாட்டின் கொடிய வறுமைதான் இதற்குக் காரணம். நம் நாட்டில் 77 சதவிகித மக்கள் நாளுக்கு ரூ.20 வருமானத்தில்தான் உயிர் வாழ்கின்றனர் (அர்ஜுன் சென் குப்தா கமிட்டி) என்பதை மறந்துவிடலாகாது. ஆகவே இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் சென்றாலும், தனியார் பெருமளவுக்குப் பள்ளிக் கல்வியை ஏற்று நடத்தக்கூடிய சாத்தியமேயில்லை. ஆகவே றிறிறி என்பது அந்த 10 சதவிகிதக் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த நாட்டின் வாய்ப்புகளை எல்லாம் உரிமையாக்கும் வர்க்க நோக்கம்தான். பள்ளிக் கல்வி ஒரு சமூக நலன், சமூகப் பொறுப்பு. ஆகவே அதை அளிப்பது அரசின் கடமையாகும். 6-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கல்வி இன்று ஒரு அடிப்படை உரிமை. ஆகவே, அதை உடனே உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமை. அதைத் தனியார் துறையின் கருணைக்கு விடுதல் எந்த வகையிலும் ஏற்கக்கூடியது அல்ல.

அருகமைப் பள்ளிகள் (Neighbourhood Schools)
இந்தியாவில் அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய ஆரம்பக் கல்வியை உத்திரவாதம் செய்வதற்கு ஒரே வழி அருகமைப் பள்ளிகள் மூலம் இயங்கும் பொதுப்பள்ளிகள் தான் என்று கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேல் அனைத்துக் கல்விக் கமிஷன்களாலும், கரிசனைகொண்ட கல்வியாளர்களாலும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இதை நாடாளுமன்றமும் ஏற்று, கல்விக் கொள்கைகளின் ஒரு அம்சமாக மூன்று முறை நிறைவேற்றியிருக்கிறது. உலகின் அனைத்து வளர்ந்த நாடுகளிலும், பல முன்னணி வளரும் நாடுகளிலும் அருகமைப் பள்ளிகளில்தான் அனைத்துக் குழந்தைகளும் கற்கின்றனர்.

இம்முறையில் ஏழை-பணக்காரரென்ற எந்தப் பாகுபாடுமின்றி, அனைத்து வர்க்கக் குழந்தைகளும் தாங்கள் வசிக்குமிடத்திற்கு அருகில் இருக்கும் பள்ளிகளில்தான் கற்க வேண்டுமென்ற தேசிய விதி நடைமுறைப்படுத்தப்படுகிறது.

நம் நாட்டில் தனிமனித சுதந்திரத்தின் காவலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அருகமைப் பள்ளிகள் தனிமனித சுதந்திரத்தை மறுப்பதால் ஏற்றுக்கொள்ள இயலாதவை என்று வாதிடுகின்றனர். அதாவது பெற்றோர்களுக்குத் தங்கள் குழந்தைகளை எந்தப் பள்ளியில் சேர்க்க வேண்டுமென்ற உரிமை இருக்க வேண்டும் என்று சொல்கின்றனர். ஆனால் நம்மைவிட ஜனநாயகம் ஆழ வேரூன்றியுள்ள, தனிமனித சுதந்திரம் நம்மைவிட அதிகம் மதிக்கப்படும் நாடுகளிலெல்லாம் பல்லாண்டுகளாக, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, அருகமைப் பள்ளிகள் என்ற கொள்கை ஒப்புக்கொள்ளப்பட்டு, கடைப்பிடிக்கப்படுகின்றது. நம் நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கோ ஐரோப்பாவிற்கோ சென்றுள்ள பெற்றோர்கள் அனைவரும் அறிந்த ஒன்று இது. தனிமனித உரிமை, அரசியல் சாசனம் உறுதி செய்யும் சமூகக் கடமையாகிய சமத்துவத்திற்கு எதிராக நிற்க முடியாது. சரி இந்தத் தனிமனித சுதந்திரம் என்ற கருத்தை நாம் ஏற்றுக்கொண்டாலும், வசதியுடைய பெற்றோர்களுக்குத் தங்கள் குழந்தைகளை எந்தப் பள்ளியிலும் சேர்க்கும் உரிமை அளிக்க வேண்டுமென்றால், வசதியற்ற பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளை விரும்பும் பள்ளிகளில் சேர்க்கும் உரிமை அளிக்க முடியுமா? பெரும் கட்டணம் வசூலிக்கும் பள்ளியில் சேர்க்க விரும்பினால், பள்ளிகள் சேர்த்துக்கொள்ளுமா? ஆகவே, பிரச்சினை சுதந்திரம் அல்ல. பெற்றோரின் வசதிதான்.

இச்சட்டம் அருகமைப் பள்ளிகளை நிலைநிறுத்தும் என்ற நம்பிக்கையில் மண்விழுந்துவிட்டது. இச்சட்டத்தில் ‘அருகமைப் பள்ளி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஒரு இடத்தில்தான். நாம் மேலே கண்ட, நான்கு வகைப் பள்ளிகளில் வசதி படைத்த பள்ளிகள் தங்கள் அருகமையிலுள்ள நலிந்த பிரிவுக் குழந்தைகளை 25 சதவிகிதம் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்பது மட்டுமே. இதற்கும் உலகெங்கும் இயங்கும் அருகமைப் பள்ளிகளுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.

காலக்கெடு
இச்சட்டம் சொல்லும் உரிமைகளை நிலைநிறுத்த காலக்கெடு குறிக்கப்படவில்லை. வெவ்வேறு தேவைகள் நிறைவேற்றுவதற்கு வெவ்வேறு காலக்கெடு குறிக்கப்பட்டிருக்கிறது. அவற்றிற்கான திட்டமோ நிதி ஒதுக்கீடோ குறிப்பிடாத நிலையில் அவை நிறைவேற்றப்படுவது சந்தேகத்திற்குரியதே. முக்கியமானது பகுதி ஆறு குறிப்பிடுவது, “இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த, அந்தந்த அரசும் உள்ளாட்சியும் வரையறுக்கப்படும் எல்லைக்குள், பள்ளிகள் இல்லையென்றால், இந்தச் சட்டம் தொடங்கியதிலிருந்து மூன்று ஆண்டுக்குள், பள்ளியை நிறுவ வேண்டும்.” அத்துடன், ஆசிரியர்கள் நிர்ணயிக்கப்பட்ட தகுதியையும் பயிற்சியையும் ஐந்து ஆண்டுகளுக்குள் பெற வேண்டும். சட்டத்தின் மற்றொரு பகுதியில் சொல்லப்பட்டிருப்பது: மாணவர் ஆசிரியர் விகிதம் 40:1 என்று சட்டம் நிர்ணயித்திருப்பது ஆறு மாதங்களுக்குள் நடை முறைப்படுத்த வேண்டும். அப்படியென்றால், ஆறு மாதங்களுக்குள் தேவையான ஆசிரியர், தகுதியற்றவராயினும் நியமிக்கப்படுவரா? இது சாத்தியமா? அப்படியே சாத்தியமென்றாலும், பள்ளிகள் இல்லாவிட்டால், அவர்கள் எங்கு பணியாற்றுவர்? கூடுதலாகக் கட்டப்பட வேண்டிய பள்ளிகள், நியமனம் செய்ய வேண்டிய, பயிற்சி பெற வேண்டிய ஆசிரியர், தேவைப்படும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் இவை எது குறித்தும் சட்டம் எந்தக் கணிப்பும் செய்யவில்லை. அந்தந்த அரசுகளின் முடிவுக்கே விடப்பட்டிருக்கிறது. ஆகவே சட்டத்தின் குறிக்கோளும் அனைவருக்கும் கல்வி என்பதும் சாத்தியமாவது பெரும் கேள்விக்குறியதே.

மொழிக் கொள்கை
கல்வி உரிமைச் சட்டம் மொழிக் கொள்கையையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். அனைத்துக் குழந்தைகளின் கற்கும் திறன், சிந்தனைத் திறன், விமர்சனப் பார்வை, படைப்புத் திறன் ஆகியவற்றைச் சிறப்புடன் வளர்த்தெடுப்பது தாய் மொழி வழிக் கல்விதான் என்பது உலகளவில், விவாதத்திற்கு அப்பாற்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்று. அதை இச் சட்டம் ஏற்று, தெளிவாக்கியிருக்க வேண்டும். ஆனால் சட்டம் இதைச் செய்யத் தவறிவிட்டது. சட்டத்தில் மொழிக் கொள்கை ஏதும் இல்லை. அது கூறுவதெல்லாம், “கல்வி மொழி, கூடியமட்டும் குழந்தையின் தாய் மொழியாக இருத்தல் வேண்டும்.” அப்படியென்றால், “கூடியமட்டும்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்திக்கொண்டு, தனியார் பள்ளிகள் இன்றுபோல் ஆங்கில வழிக் கல்வியைத் தொடர முழுச்சுதந்திரம் அளிக்கப்படுகிறது என்றுதான் பொருள். அத்துடன், ‘தாய் மொழி’ என்பதற்கும் சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை. அது மாநில மொழியைக் குறிக்கிறதா அல்லது மாநிலத்தின் சிறுபான்மையினருக்கோ அல்லது வேறு பீவீணீறீமீநீt பேசுபவருக்கோ அவர்களது மொழி வழியாகவே கற்க ஆரம்ப வகுப்புகளிலாவது உரிமை அளிக்கப்படுமா என்ற விளக்கமும் அளிக்கப்படவில்லை.

கல்வியின் பெருமை
இன்றைய இந்தியக் கல்வியின் மற்றொரு பெரும் குறை கல்வி தன் பெருமையை, மகத்துவத்தை, பொருளை, இன்று இழந்துவிட்டது. உலகமயமாதலும் தாராளமயமாதலும் இந்தச் சிறப்புகளை எல்லாம் கொன்றுவிட்டன. கல்வி என்பதே சந்தைக்காக மாணவரைத் தயாரிப்பது என்று மட்டுமே பொருள் கொள்ளப்படுகிறது. கல்வி வணிகமயமாகிவிட்டது என்று அங்கலாய்க்கும்போது, கல்வி நிலையங்கள் அடிக்கும் கொள்ளையை, வசதிக்கேற்ற கல்வி என்ற அவலத்தைப் பற்றி மட்டுமே என்று பொருள்கொள்ளக் கூடாது. கல்வியின் பணியே சந்தைக்காக மாணவர்களைத் தயாரிப்பது என்பது மிகப் பெரும் சீரழிவு. இன்று ஆன்மாவையே தொலைத்துவிட்டோம். கல்வியின் சித்தாந்தமும் சமுதாயப் பணியும் தொலைக்கப்பட்டதன் காரணமாக, கல்விக்குத் தேச நிர்மாணத்தில், சமூக மூலதனத்தைப் (social capital) படைப்பதில், சமூக மனிதனை உருவாக்குவதில் உள்ள பொறுப்பு மறைந்துவிட்டது. வளர்ந்த நாடுகளில் கல்வியின் இத்தகைய குறிக்கோள்கள் பல நூற்றாண்டுகளாக ஏற்று, மதிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு கல்வியின் பொருளும் குறிக்கோளும் சொல்லொணாத் திரிபுகளுக்கு உள்ளாகியிருப்பதை மாற்ற இந்தக் கல்வி உரிமைச் சட்டம் ஏதும் செய்யவில்லை.

உரிமை பாதுகாக்கும், கண்காணிக்கும், குறை தீர்க்கும் அமைப்பு
இறுதியாக, இச்சட்டம் அளிப்பது ஒரு அடிப்படை உரிமை. அப்படியென்றால், சட்டம் மீறப்படும்போது, பாதிக்கப்பட்டோர் நீதிமன்றம் சென்று, மறுக்கப்பட்ட உரிமையைப் பெறுவதற்கான வழிமுறைகள், மற்ற அடிப்படை உரிமைகளைப் போலவே, இதற்கும் வகுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தத் தேவையைப் பொறுத்தவரை இச்சட்டம் ஒரு கேலிக்கூத்து என்றுதான் சொல்ல வேண்டும். 1) சட்டம் மீறப்பட்டால், வழக்குத் தொடருமுன் அரசு நிர்ணயித்திருக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரியின் அனுமதி பெற வேண்டும். பெரும்பாலும் குற்றவாளி அரசோ கல்வி நிர்வாகமோவாகத் தான் இருக்கும். இவர்களை எதிர்த்து வழக்குத் தொடரும் அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்க இயலுமா? இத்தகைய கட்டாயம் மற்ற அடிப்படை உரிமைகளுக்கு விதிக்கப்படாதபோது, கல்வி உரிமைக்கு மட்டும் ஏன்? 2) அனுமதி பெற்றுவிட்டால், அடுத்த கட்டமாக வழக்குத் தொடுக்க வேண்டியது நீதிமன்றத்திலல்ல. மத்திய / மாநில குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையங்கள்தாம் (National Commission for Protection of Child Rights) இச்சட்டத்திற்கான நீதிமன்றங்கள். இவை ஏற்கெனவே அவற்றிற்கு விதிக்கப்பட்ட கடமைகளுடன் இச் சட்டத்தின் கீழ் எழும் வழக்குகளையும் விசாரிக்கும். மத்திய ஆணையம் நிறுவப்பட்டு, நான்கு ஆண்டுகள் சென்ற பின்னும், மூன்றே உறுப்பினர்களுடன், மிகக் குறைந்த நிர்வாக-நிதி வசதிகளுடன் இயங்கிவருகிறது. மாநிலங்களைப் பொறுத்தவரை ஓரிரண்டுதான் மாநில ஆணையங்களை இதுவரை நிறுவியுள்ளன. கல்வியின் இன்றைய அவலநிலையின் பின்னணியில் அனுமானித்தால், சட்டம் அமலுக்கு வந்தவுடனேயே ஆயிரக் கணக்கான வழக்குகள் எழும் என்று எவரும் எதிர்பார்க்கலாம். அந்த வழக்குகளின் கதி என்னவாகும்? வழக்குகள் தீர்க்கப்படாவிட்டால், உரிமை இருந்து என்ன பயன்?
கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 குறித்து மேற்கூறிய விமர்சனங்களை முன்னிறுத்திப் பார்த்தால், இது இன்றைய உரிமை மறுப்புக்கு முடிவுகட்டும் சட்டமல்ல. உண்மை என்னவென்றால், பல காலமாக மோசமான புறக்கணிப்புக்கும் கொடிய ஏற்றத்தாழ்வுகளுக்கும் இலக்காகியிருக்கும் கல்வியில் முழுமையான மாற்றம் ஏற்பட்டாலொழிய கல்வி உரிமை வெறும் கனவுதான்.
நன்றி: http://www.kalachuvadu.com/

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டுத் திட்டத்தின் படி மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசின் புதிய வழிகாட்டி அறிக்கை:

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் (சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் உள்பட) ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தங்கள் இருப்பிடங்களுக்கு அருகே இருக்கும் பள்ளிகளில் இந்த மாணவர்கள் சேருவதற்கு தகுதி உடையவர். தொடக்கப்பள்ளி என்றால் ஒரு கிலோ மீட்டர், நடுநிலைப்பள்ளி என்றால் 3 கிலோ மீட்டர் என்ற தூர எல்லை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
25 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் தலைமையில் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.  அந்த குழு சமர்ப்பித்த வழிகாட்டி நெறிமுறைகளை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
அந்த வழிகாட்டி நெறிமுறைகள் வருமாறு:
வழிகாட்டி நெறிமுறைகள்
  1. தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தயாரிக்க வேண்டும்.
  2. 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் எத்தனை மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்? என்பதை அன்றைய தினமே கணக்கிட்டு பள்ளியின் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும்.
  3. மாணவர் சேர்க்கையின் விண்ணப்ப படிவங்கள் ஒரே வடிவில் இருக்க வேண்டும். விண்ணப்பம் எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பை மே மாதம் 2-ந் தேதி வரை வெளியிட வேண்டும்.
  4. மே மாதம் 3-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கபட வேண்டும்.
தேர்வு பட்டியல் வெளியீடு
  1. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே மாதம் 9-ந் தேதி மாலை வரை பெற்றுக் கொள்ள வேண்டும்.
  2. விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டதிற்கு பெற்றோருக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்பட வேண்டும்.
  3. மே மாதம் 11-ந் தேதி தகுதியான விண்ணப்பங்களுக்கு உரிய நபர்களின் பெயர்களை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நபர்களின் விவரங்களையும் அதற்கான காரணத்தையும் இதே போன்று வெளியிட வேண்டும்.
  4. தகுதியான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 25 சதவீதத்திற்கு மேல் இருந்தால் ரேண்டம் முறையில் விண்ணப்பங்களை தேர்வு செய்ய வேண்டும். ரேண்டம் முறையை மே மாதம் 14-ந் தேதி செய்து, தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலை அன்றைய தினமே வெளியிட வேண்டும்.
கல்வி அதிகாரிக்கு தகவல்
  1. மேலும், கூடுதலாக 10 சதவீத காத்திருப்போர் பட்டியல் ஒன்றும் வெளியிடப்பட வேண்டும்.
  2. மாணவர் சேர்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களை மாவட்ட கல்வி அதிகாரிக்கு மே மாதம் 20-ந் தேதி தெரிவிக்க வேண்டும்.
நன்றி: http://www.teachersofindia.org/2013

கல்வி உரிமைச் சட்டம் : குறைபாடுகள்: - பல்லவன்

1. குழந்தைகள் பெறும் கல்வியின் தரத்தைப் பற்றி சட்டம் கண்டுகொள்ளவில்லை.

குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்களா என்பது பற்றி சட்டம் இயற்றுபவர்கள் கவலைப்படவே இல்லை. பள்ளி இருக்கவேண்டும், வகுப்பறை இருக்கவேண்டும், ஆசிரியர் இருக்கவேண்டும் என்றெல்லாம் சொல்பவர்கள், அவற்றைக்கொண்டு எவ்விதமான கல்வியை மாணவர்களுக்குத் தரவேண்டும் என்பது பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. அதைவிட மோசமாக,மாணவர்கள் கற்றுக்கொண்டிருக்கிறார்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்காமல் அவர்கள் கற்றுக்கொள்ளாவிட்டாலும் அவர்களை அடுத்த வகுப்புக்கு அனுப்பிவிடவேண்டும் என்கிறது சட்டம். கணிதத்தில் கூட்டல், கழித்தல் தெரியாவிட்டாலும் மாணவர்களுக்கு பெருக்கல், வகுத்தல் சொல்லிக்கொடுக்கப்படவேண்டும். இவை எதுவும் தெரியாவிட்டாலும் உயர் கணிதத்தைச் சொல்லித்தரவேண்டும் என்கிறது சட்டம்.


2. பள்ளிகளை அதிகப்படுத்த விரும்புகிறது சட்டம். மாறாக, பள்ளிகள் குறைவதற்கே சாத்தியம் அதிகம்.

ஒவ்வொரு பள்ளிக்கும் இத்தனை இடம் இருக்கவேண்டும், இத்தனை மாணவர்களுக்கு இத்தனை ஆசிரியர்கள் இருக்கவேண்டும், ஒவ்வோர் ஆசிரியருக்கும் குறிப்பிட்ட தகுதி இருக்கவேண்டும், ஆசிரியர்களுக்கு அரசு குறிப்பிடும் சம்பளம் தரப்படவேண்டும் என்கிறது சட்டம். இந்த விதிமுறைகளில் அடங்காவிட்டால் பள்ளியின் அனுமதி குறிப்பிட்ட காலத்துக்குள் ரத்து செய்யப்படும் என்றும் சொல்கிறது சட்டம்.

இன்றைய தேதியில் மிகப் பெரும்பான்மையான தனியார் பள்ளிகளிடம் அரசு கோரும் இடம் இல்லை. ஆசிரியர்களுக்கு அவர்கள் தரும் சம்பளமும் குறைவு. இவற்றையெல்லாம் சரி செய்வதற்கு வாய்ப்பே இல்லை. நகரங்களில் பள்ளிகளை விரிவாக்க இடமே இல்லை. கட்டணங்கள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும் 25% இட ஒதுக்கீட்டுக்கு அரசு தரும் கட்டணம் குறைவாக இருக்கும் நிலையிலும் ஆசிரியர்களுக்கு அரசு தீர்மானிக்கும் சம்பளத்தைக் கொடுக்க பெரும்பான்மைத் தனியார் பள்ளிகளால் முடியவே முடியாது.

எனவே, இந்தப் பள்ளிகள் ஒன்று தாமாகவே கல்வித் துறையிலிருந்து விலகிக்கொள்ளும். அல்லது சட்டத்தின்படி அவர்களது அங்கீகாரம் ரத்து செய்யப்படும். அரசிடம் புதிய பள்ளிகளை உருவாக்கத் தேவையான பணம் இல்லை என்பதால்தான் தனியார் கல்விக்கூடங்களில் 25% இடத்தை அரசு கேட்டுப் பெற்றது. இப்போது, தனியார் பள்ளிகள் மூடப்பட்டால் அங்கு படிக்கும் குழந்தைகள் அனைவரையும் எங்கு கொண்டுபோய் சேர்ப்பது?

3. தனியார் யாருக்கும் புதிதாகப் பள்ளிக்கூடம் கட்ட ஊக்கம் வரப்போவதில்லை.

இதுவரை, குறிப்பாக எந்தச் சட்டமும் கல்வி நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கக்கூடாது என்று சொன்னதாகத் தெரியவில்லை. அவ்வப்போது சில உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் இவ்வாறு சொல்லியுள்ளன. ஆனால், நடைமுறையில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஏதோ ஒருவகையில் லாபம் சம்பாதித்துதான் வந்துள்ளன. இப்போது கல்வி உரிமைச் சட்டம் மிகத் தெளிவாக, கல்விக்கூடங்கள் அனைத்தும் லாப நோக்கு அற்றவையாகவே இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டது.

லாப நோக்கு இல்லை என்றால் லாபத்தை விரும்பும் யாருமே பள்ளிகளைக் கட்டப்போவதில்லை. இப்போது நடப்பதைப் போல, சட்டத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்கள்தான், தவறு என்று தெரிந்தும்கூட கல்விக்கூடங்களைக் கட்டி முறையற்ற வழியில் லாபம் சம்பாதிக்கப்போகிறார்கள். இவர்கள் யாருக்கும் கல்வியின்மீது அக்கறை கிடையாது. மொத்தத்தில் லாபத்தை விலக்குவதன் மூலமாக, நிஜமாகவே கல்வியின்மீது அக்கறை கொண்ட, சட்டபூர்வமாக நடந்துகொள்ளக்கூடிய நிறுவனங்கள் அனைத்தும் கல்வித்துறையில் இருக்கவே போவதில்லை. இதனால் நஷ்டம் பொதுமக்களுக்குத்தான்.

4. தனியார் பள்ளிகள்மீது விதிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள் எவையுமே அரசுப் பள்ளிகளுக்குக் கிடையாது.

தமிழகத்தில் எத்தனையோ அரசுப் பள்ளிகளில் தேவையான ஆசிரியர்கள் கிடையாது. ஆசிரியர்மாணவர் விகிதம் பல அரசுப் பள்ளிகளிலும் படுமோசமாக உள்ளது. மிகப் பெரும்பான்மையான அரசுப் பள்ளிகளில் கழிவறை வசதி தொடங்கி, குடிநீர் வசதிவரை எந்தவித அடிப்படைத் தேவையுமே சரியில்லை. இந்த வசதிகள் இல்லாத எந்தத் தனியார் பள்ளியையும் அரசால் மூடமுடியும். ஆனால், தன் பள்ளிகளில் இந்த வசதி இல்லை என்றால் அரசு என்ன செய்யும் என்பது சட்டத்திலேயே இல்லை. இந்த வசதிகள் ஒருவேளை நாளடைவில் அரசுப் பள்ளிகளில் ஏற்படலாம் என்று வைத்துக்கொண்டால்கூட, அதற்கென கெடு ஏதும் விதிக்கப்படவில்லை. ஆனால், தனியார் பள்ளிகளுக்குக் கடுமையான கெடு இருப்பதுடன், இந்தப் புதிய வசதிகளைச் செய்து தருவதற்காக அரசு மானியம் ஏதும் தருவதாகவும் சொல்லவில்லை. அதே நேரம், தமிழகத் தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணம் கட்டுப்படுத்தப்படுகிறது. மேற்கொண்டு 25% மாணவர்களுக்கான கட்டணம் குறைக்கப்படப்போகிறது. இதைத் தாண்டி எப்படி அந்தப் பள்ளி இந்த வசதிகளைச் செய்துதரப்போகிறது என்பது பற்றி சட்டம் கவலைப்படவே இல்லை. அரசுப் பள்ளிகளில் வசதிகள் சரியில்லை என்றால் யார்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டம் சொல்லவில்லை.

5. அரசுப் பள்ளி அல்லது அரசு உதவி பெறும் பள்ளி ஒவ்வொன்றிலும் பள்ளி நிர்வாகக் குழு என்றொரு குழு அமைக்கப்படவேண்டும். ஆசிரியர்கள் ஒழுங்காகப் பள்ளிக்கு வருவதையும் ஆசிரியர்கள் பிரத்யேகமாக டியூஷன் நடத்தாமல் இருப்பதையும் இந்த நிர்வாகக் குழுதான் செயல்படுத்தவேண்டும் என்கிறது சட்டம். ஆனால், அதற்கேற்ற எந்த அதிகாரத்தையும் இந்தக் குழுவுக்குச் சட்டம் வழங்கவில்லை. தவறு செய்யும் ஆசிரியர்களை நீக்கும் அதிகாரம் இந்த நிர்வாகக் குழுவுக்கு அளிக்கப்படவில்லை. எனவே நிர்வாகக் குழுவால் தமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பணிகளை ஒழுங்காகச் செய்ய முடியாது.

இந்தச் சட்டம் பல்வேறு ஆட்கள் எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று சொல்கிறது ஆனால், ஒருவர் ஒரு செயலைச் செய்யவில்லை என்றால் என்ன தண்டனை, செய்யாவிட்டால் யார் அவரைச் செய்ய வைப்பது என்று எதுவுமே சொல்லப்படவில்லை. மொத்தத்தில் எந்தவிதச் சிந்தனையும் இன்றி இயற்றப்பட்ட ஒரு சட்டமாகவே தெரிகிறது.

பெட்டிச் செய்தி

சிக்கல்களே அதிகம்!

கல்வி உரிமைச் சட்டம் பல சிக்கலான கேள்விகளை எழுப்பியுள்ளது. நாடு முழுவதிலும் சீர்குலைந்து கிடக்கும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தாமல், 25 சதவிகிதம் இடம் அளிக்குமாறு தனியார் பள்ளிகளைக் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? வரும் நாள்களில் இந்த 25 என்பது 50 அல்லது 60 சதவிகிதமாக உயராது என்பதற்கு என்ன உத்தரவாதம்? இந்த 25 சதவிகித மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஆகும் செலவை அரசுப் பள்ளிகளுக்கு எப்படிப் பட்டுவாடா செய்யப்போகிறது?

கல்வி கற்பிப்பதற்கான அடிப்படை வசதிகளை அனைத்துப் பள்ளிகளும் கொண்டிருக்கவேண்டும் என்பதும் அதற்கான விதிமுறைகள் வகுக்கப்படவேண்டும் என்பதும் வரவேற்கத்தக்க முடிவுதான். விதிமுறைகளுக்குப் பொருந்தாத மற்றும் அரசு அங்கீகாரம் பெறாத பள்ளிகள் இனி தடை செய்யப்படும் என்கிறது சட்டம். இந்த விதிகளால் அதிகம் பாதிக்கப்படப்போவது என்னவோ தனியார் பள்ளிகள்தாம். தனியார் பள்ளிகள் குறித்த அடிப்படை புள்ளிவிவரங்கள் எதையும் தெரிந்துகொள்ளாமலேயே இப்படியொரு சட்டம் வகுக்கப்பட்டுள்ளது வேதனைக்குரியது.

நான் ஒரு தீர்வை முன்வைக்க விரும்புகிறேன். 25 சதகிவிதம் மாணவர்களுக்கான கட்டணத்தைச் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்குவதற்கு பதி லாக, குழந்தைகளின் பெற்றோருக்கு கூப்பன் வடிவில் வழங்கிவிடலாம். எந்தப் பள்ளியில் தங்கள் குழந்தையைச் சேர்க்கவேண்டும் என்பதை பெற்றோர் தீர்மானித்துக்கொள்ளட்டும்.எது தரமான பள்ளி, எதில் சேர்ப்பது எதிர்காலத்துக்கு நல்லது என்பதை அவர்களே ஒப்பிட்டுப் பார்த்து முடிவு செய்துகொள்ளட்டும். பண விநியோகம் தொடர்பான ஊழலையும் இதன் மூலம் கட்டுப்படுத்தமுடியும்.

(பா. சந்திரசேகரன், ஆலோசகர், மத்திய திட்டக்குழு. இது கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்து).
http://www.aazham.in/

கல்விக்கான உரிமைச் சட்டம்

இந்த சட்டம் எதைப் பற்றியது?


ஆறிலிருந்து பதினான்கு வயது வரையிலான ஒவ்வொரு குழந்தையும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் உரிமை பெற்றுள்ளது. அரசியல் அமைப்புச் சட்ட 86ஆவது பிரிவில் சேர்க்கப்பட்ட சட்டப்பிரிவு 21ஏ சட்டத் திருத்தத்தின்படி, கல்வி உரிமை மசோதா இந்தச் சட்டப் பிரிவு சட்டத்திற்கு வலு சேர்க்கிறது,

அரசால் நடத்தப்படும் அரசுப் பள்ளிகள் அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச கல்வி வழங்கும். இந்தப் பள்ளிகள் அரசு நிர்வாகக் குழுக்களால், (ஷிவிசி ) நிர்வகிக்கப்படும் தனியார் பள்ளிகள் குறைந்தது 25% குழந்தைகளையாவது அவர்களுடைய பள்ளிகளில் கட்டணம் இல்லாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தொடக்கக் கல்விக்கான எல்லாவிதமான அம்சங்களையும் தரத்தையும் கண்காணிப்பதற்காக தொடக்கக்கல்விக்கான தேசிய கமிஷன் ஒன்று அமைக்கப்படும்

மசோதா உருவான வரலாறு:

டிசம்பர் 2002
அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் 86ஆவது பிரிவு(2002) உட்பிரிவு சட்டம் 21ஏ (பிரிவு111)-ன்படி 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளும் இலவச கட்டாயக் கல்வி பெறுவது அவர்களின் அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும்,

அக்டோபர் 2003 
மேற்குறிப்பிட்ட சட்டப்பிரிவின் முதல் அறிவிப்பு, அதாவது குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி வழங்குவது பற்றிய இந்தச் சட்ட மசோதா, 2003 மிகப் பெரிய அளவில் பொது மக்கள் கருத்து மற்றும் விமர்சனங்களுக்காக அக்டோபர் 2003 இணையதளத்தில் வெளியிடப்பட்டது,

2004
இந்த சட்ட நகலைப் பற்றி பெறப்பட்ட ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு, இலவச கட்டாய கல்வி மசோதா 2004 என்று பெயரிடப்பட்ட ஒரு புதிய மசோதா தயாரிக்கப்பட்டு http://education.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

ஜூன் 2005 
மத்திய கல்வி ஆலோசனை குழு 'கல்வி பெறும் உரிமை' என்ற மசோதாவை தயாரித்து மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தது, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அதை திருமதி சோனியா காந்தி தலைமை வகிக்கும் தேசிய ஆலோசனை கமிட்டிக்கு அனுப்பி வைத்தது. தேசிய ஆலோசனை கமிட்டி அதை பிரதம மந்திரிக்கு பார்வைக்கு அனுப்பி வைத்தது.

ஜூலை 2006 
மத்திய நிதிக்குழு மற்றும் ஆலோசனை குழு நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி இந்த மசோதாவை நிராகரித்தது. அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்காக மாநிலங்களுக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது, (அரசியலமைப்பு சட்டத் திருத்தம் 86ஆவது பிரிவு தேசிய அளவில் நிதிப் பற்றாக்குறை என்று குறிப்பிடப்பட்ட மசோதா)

ஜூலை 19, 2006 
சி.ஏ.சி.எல்., எஸ்.ஏ.எஃப்.ஈ., என்.ஏ.எஃப்.ஆர்.ஈ., சி.ஏ.பி.ஈ. போன்றவை ஐ.எல்.பி. மற்றும் பிற அமைப்புகளை பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளினால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றியும் மாவட்ட அளவிலும் கிராம அளவிலும் செய்ய வேண்டியவை குறித்தும் ஆதரவு நடவடிக்கை மற்றும் வழிகாட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டத்திற்காக அழைப்பு விடுத்துள்ளன.

இந்த சட்டம் பற்றிய பொதுவான கேள்விகளும், பதில்களும்


1. இந்த சட்டம் ஏன் இன்றியமையாதது?
அரசியல் அமைப்புச் சட்டத்திருத்த அமலாக்கத்தை உறுதிபடுத்துதற்கான திசையில் அரசின் முதல் நடவடிக்கை என்ற கோணத்தில் இந்த சட்ட மசோதா முக்கித்துவம் வாய்ந்தது. இதைப்போலவேஇந்த மசோதா மேலும்:

இலவச கட்டாய தொடக்க மற்றும் மேல்நிலை கல்வி வழங்குவதற்கான சட்டம் எல்லா இடங்களிலும் பள்ளிக்கூடம் ஏற்படுத்தவது. பள்ளி கண்காணிப்பு குழு அமைப்பது _ முறையாக இயங்குவதைக் கண்காணிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். 6-14 வயது வரையிலான குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்படக்கூடாது என்பதை கண்காணிக்கிறது. இவை அனைத்தும் முறைசார்ந்த பொதுகல்வித்திட்டத்தை மேம்படுத்தி அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதன் மூலம் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினர் உருவாவதை தடுப்பதற்கான அடிப்படை நடவடிக்கைகளை வழங்குகிறது.

2. இந்த சட்டத்தில் 6 முதல் 14 வரையிலான வயது தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்?
அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பப் பள்ளி கல்வி முதல் மேல்நிலைப் பள்ளி கல்வி வரை கட்டாயக் கல்வி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த மசோதா, இந்த வயதில் வழங்கப்படும் கல்வி அவர்களுடைய எதிர்காலத்திற்காக போடப்படும் அஸ்திவாரமாக அமையும் என்ற கருத்தைக் கொண்டு உருவானது.

இந்த சட்டத்தின் முக்கியத்துவம் என்ன மற்றும் இதனால் நம் நாட்டுக்கு என்ன பயன்?

குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய ஆரம்பக் கல்விக்கான உரிமைச் சட்டம், 2009 [Right of Children to Free and Compulsory Education – (RTE) Act 2009] நிறைவேற்றப்பட்டிருப்பது, இந்திய குழந்தைகளுக்கு வரலாற்று சிறப்பு மிக்க கணமாகும்.

குடும்பங்கள் மற்றும் சமுதாயத்தின் உதவியுடன், ஒவ்வொரு குழந்தையும் தங்கள் உரிமையான தரமான ஆரம்பக் கல்வி பெறுவதை அரசு உறுதி செய்வதற்கு, இது ஒரு துவக்கத்தை அளித்துள்ளது.

உலகிலுள்ள ஒரு சில நாடுகளில் மட்டுமே இவ்வாறான, குழந்தைகளை மையப்படுத்திய மற்றும் அவர்கள் விரும்பும் வகையிலான இலவச கல்வி பெற, தேச அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலவச கட்டாய ஆரம்பக் கல்வி என்றால் என்ன?

6 முதல் 14 வயது வரையான அனைத்து குழந்தைகளும், தங்கள் வீட்டிற்கு அருகாமையிலுள்ள பள்ளியில், இலவச மற்றும் கட்டாயக் கல்வி கற்க உரிமை பெறுகிறார்கள்.

ஆரம்பக் கல்வி பெற, குழந்தைகளோ அல்லது பெற்றோரோ நேரடியான (பள்ளிக் கட்டணம்) மற்றும் மறைமுகமான (சீருடைகள், பாட புத்தகங்கள், மதிய உணவு, போக்குவரத்து) எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. குழந்தைகளின் ஆரம்பக் கல்வி பூர்த்தியாகும் வரை, கல்விக்கான அனைத்துச் செலவுகளையும் அரசே ஏற்கும்.

கல்விக்கான உரிமை நிலைநாட்டப்படுவதில், பெற்றோர் மற்றும் சமுதாயத்தின் பங்கு என்ன?

குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய ஆரம்பக் கல்விக்கான உரிமைச் சட்டம், 2009 நிறைவேற்றப்பட்டிருப்பது, இந்திய குழந்தைகளுக்கு வரலாற்று சிறப்பு மிக்க கணமாகும். இந்தியாவில் முதல் முறையாக, குடும்பங்கள் மற்றும் சமுதாயத்தின் உதவியுடன், குழந்தைகள் தங்கள் உரிமையான ஆரம்பக் கல்வி பெறுவதற்கு அரசு உத்திரவாதம் அளிக்கிறது.

உலகிலுள்ள ஒரு சில நாடுகளில் மட்டுமே, குழந்தைகளின் முழுத் திறனும் வெளிப்படும் வகையில், குழந்தைகளை மையப்படுத்திய மற்றும் அவர்கள் விரும்புக் வகையிலான இலவச கல்வி பெற, தேச அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2009 ம் ஆண்டில், இந்தியாவில் 6 முதல் 14 வயது வரையான 8 மில்லியன் குழந்தைகள் பள்ளி செல்லவில்லை என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியாவை தவிர்த்து விட்டு, 2015- க்குள் அனைத்து குழந்தைகளும் ஆரம்பக் கல்வி முடிக்கும் இலக்கை உலகால் அடைய முடியாது.

ஒவ்வொரு பள்ளியிலும் ஏற்படுத்தப்படும் பள்ளி நிர்வாகக் குழுவில் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள், பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுப்பினர்களாக இருப்பர்.பள்ளி நிர்வாகக் குழு, பள்ளிக்கான மேம்பாட்டு திட்டங்களை வகுப்பது, அரசு நிதியை முறையாகப் பயன்படுத்துவது மற்றும் ஒட்டுமொத்த பள்ளியின் சூழலைக் கண்காணிப்பது ஆகிய பணிகளை செய்யும். பள்ளி நிர்வாகக் குழுக்களில் 50 சதவீதம் பெண்கள் மற்றும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதை இச்சட்டம் கட்டாயமாக்கி உள்ளது. சிறுவர் மற்றும் சிறுமியருக்கான தனித்தனி கழிப்பறைகளை ஏற்படுத்துவது, உடல் நலம், சுகாதாரம், மற்றும் தூய்மை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து கல்வியை முழுமை பெற வைப்பது ஆகியவற்றில் இவ்வாறான சமுதாய பங்கேற்பு பெரிதும் உதவும்.

கல்விக்கான உரிமைச் சட்டத்தால் எவ்வாறு குழந்தைகள் விரும்பும் பள்ளிகளை உருவாக்க முடியும்?

நல்ல கல்விச் சூழலை ஏற்படுத்த, அனைத்து பள்ளிகளும் கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான நெறிகளை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். ஆரம்பக் கல்வி நிலையில், ஒவ்வொரு 60 குழந்தைகளுக்கும் நன்கு பயிற்சி பெற்ற இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் பள்ளிக்கு வருகை தருவது, பாடத்திட்டத்தை முழுமை செய்வது, குழந்தைகளின் கற்றுக்கொள்ளும் திறனை மதிப்பிடுவது, தவறாமல் பெற்றோர் - ஆசிரியர் கூட்டங்களை நடத்துவது ஆகியவற்றை ஆசிரியர்கள் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும். வகுப்புக்கு தகுந்தவாறு அல்லாமல், மாணவர்கள் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு ஆசிரியர்களின் எண்ணிக்கை இருக்கும்.

குழந்தைகள் சிறப்பாகக் கற்பதை உறுதி செய்ய ஆசிரியர்களுக்கு தேவையான உறுதுணையை அரசு நிறைவேற்றும். பள்ளி நிர்வாகக் குழுவுடன் இணைந்து, பள்ளியின் தரத்தையும் சமத்துவத்தையும் உறுதி செய்வதில் சமுதாயமும், பெற்றோரும் முக்கிய பங்காற்ற வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் கல்வி உரிமைக் கனவை நனவாக்குவதற்கு தேவையான அனைத்து சட்ட வடிவங்களையும், ஏதுவான சூழ்நிலைகளையும் அரசு உருவாக்கும்.

இந்தியாவில், எவ்வாறு கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் அதற்கான நிதியைப் பெறுவது?

குடும்பங்கள் மற்றும் சமுதாயத்தின் உதவியுடன், ஒவ்வொரு குழந்தையும் தங்கள் உரிமையான தரமான ஆரம்பக் கல்வி பெறுவதை அரசு உறுதி செய்வதற்கு இச்சட்டம் ஒரு துவக்கத்தை அளித்துள்ளது.

உலகிலுள்ள ஒரு சில நாடுகளில் மட்டுமே இவ்வாறான, குழந்தைகளை மையப்படுத்திய மற்றும் அவர்கள் விரும்பும் வகையிலான இலவச கல்வி பெற, தேச அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு தேவைப்படும் நிதியை, மத்திய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும். மத்திய அரசு, தேவைப்படும் நிதியை கணக்கிடும்: மாநில அரசுகளுக்கு, இதிலிருந்து குறிப்பிட்ட சதவீதம் நிதியாக வழங்கப்படும்

கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றத் தேவையான கூடுதல் நிதியை மாநிலங்களுக்கு வழங்குவதை பரிசீலிக்கும்படி, மத்திய அரசு, மத்திய நிதிக் குழுவை (Finance Commission) கேட்டுக் கொள்ளலாம்.

சட்டத்தை நடைமுறைபடுத்த தேவைப்படும் மிகுதி நிதிக்கு மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். சமுதாய அமைப்புகள், மேம்பாட்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் குடிமக்களின் பங்களிப்புடன் நிதிப்பற்றாக்குறையை போக்க முடியும்.

கல்வி உரிமையை அடைவதில் உள்ள தடைகள் யாவை?

ஏப்ரல் 1 முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வருகிறது. வரைவு விதிகள் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் மாநிலங்கள் தங்களுடைய விதிகளை வடிவமைத்து, கூடிய விரைவில் அவற்றை வெளியிட வேண்டும்.

குழந்தைத் தொழிலாளர்கள், இடம் பெயர்ந்த குழந்தைகள், அதிக கவனம் தேவைப்படும் குழந்தைகள், அல்லது சமுதாயம், கலாச்சாரம், பொருளாதாரம், மொழி, வசிப்பிடம், பாலினம் போன்ற பிற அடிப்படைகளில் ஒதுக்கப்பட்ட மக்களை சென்றடையும் வகையில் சிறப்பு வழிமுறைகள் இச்சட்டத்தில் செய்யப்பட்டுள்ளன. கல்வி உரிமைச் சட்டம், கற்பித்தல் மற்றும் கற்றலில் அதிக தரத்தை அடைய முயற்சிப்பதால், இதற்கு கூடுதல் முயற்சிகளும் தகுந்த சீரமைப்புகளும் தேவைப்படுகின்றன:

குழந்தைகள் விரும்பும் வகையிலான கல்வி கற்பிக்க தேவைப்படும் 1 மில்லியனுக்கு மேற்பட்ட புதிய மற்றும் ஏற்கனவே பணியிலுள்ள ஆசிரியர்களை அடுத்த 5 ஆண்டுகளில் பயிற்றுவிக்க, புதிய வகை அணுகுமுறைகள் மற்றும் முயற்சிகள் தேவை.

இன்றைய தேதியில் பள்ளியில் கற்க வேண்டிய 190 மில்லியன் குழந்தைகளில் ஒவ்வொருவருக்கும், அவர்கள் விரும்பும் வகையில் ஆரம்பக்கல்வி பெறுவதை உறுதி செய்ய, அவர்தம் குடும்பத்தினரும் சமுதாயமும், பெரிய அளவிலான பங்களிப்பைத் தரவேண்டும்.

சீரிய தரத்தையும், சமத்துவத்தையும் அடைய, தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட வேண்டும். முன்பள்ளிக்கல்வியில் முதலீடு செய்வது குறிக்கோள்களை அடையக் உதவக்கூடிய சிறந்த அணுகுமுறையாகும்.

பள்ளிக்குச் செல்லாத 8 மில்லியன் குழந்தைகளைப் பள்ளிக்கு வரவழைப்பது, அவர்களை பள்ளியில் இருத்துவது மற்றும் அவர்களை வெற்றியடையச் செய்வது போன்ற கடுமையான சவால்களை சமாளிக்க, இலகுத்தன்மை உடைய மற்றும் புதுமையான அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன.

கல்வி உரிமைச் சட்டத்தை மீறினால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

இச்சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பாதுகாக்கத் தேவைப்படும் ஆய்வுகளைச் செய்வதற்கும், புகார்களை விசாரிப்பதற்கும், குழந்தை உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய கமிஷனுக்கு (The National Commission for the Protection of Child Rights), வழக்குகளை விசாரிக்க ஒரு குடிமை நீதிமன்றத்திற்கு அளிக்கப்படும் அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும்.

ஒவ்வொரு மாநிலமும் குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாநில கமிஷனகள் (State Commission for the Protection of Child Rights - SCPCR) அல்லது கல்வி உரிமைப் பாதுகாப்பு ஆணையங்களை (Right to Education Protection Authority - REPA), ஏப்ரல் 1 முதல் ஆறு மாதங்களுக்குள் அமைக்க வேண்டும். குறைகள் பற்றி மனு அளிக்க விரும்பும் எவரும், உள்ளூர் அதிகாரிகளிடம் எழுத்து மூலமான புகார் அளிக்கலாம்.

குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாநில கமிஷன்கள் (State Commission for the Protection of Child Rights - SCPCR) அல்லது கல்வி உரிமை பாதுகாப்பு ஆணையங்களால் மேல்முறையீடுகள் மீது முடிவுகள் எடுக்கப்படும். அவற்றால் வழங்கப்படும் தண்டனைகளை நிறைவேற்ற, மாநில அரசின் நியமனம் பெற்ற அதிகாரியின் ஒப்புதல் தேவைப்படும்.

கல்வி உரிமைச் சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும்? அது எவ்வாறு நனவாகும்?

சீரிய தரத்தையும் சமத்துவத்தையும் அடைய மற்றும் ஏற்றத்தாழ்வுகளை நீக்க, பெரிய அளவிலான முயற்சிகள் செய்வது முக்கியமாகும். அரசுகள், சமூக அமைப்புகள், ஆசிரியர் அமைப்புகள், ஊடகங்கள் மற்றும் பிரபல புள்ளிகள் ஆகிய முக்கிய பங்குதாரர்களை ஐக்கிய நாடுகள் சபையின் யூனிசெப் அமைப்பு ஒன்றுபடுத்தும்.தேவையான விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும், பணிக்கான அழைப்பு விடுக்கவும், யூனிசெப் இப்பங்குதாரர்களை ஒருங்கிணைக்கும். சட்ட வடிவமைப்புகள் மற்றும் அவற்றின் செயலாக்கம், குழந்தைகளுக்குத் தேவையான முடிவுகளை எட்டுவதற்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தும். கல்வி உரிமைச் சட்ட நடைமுறைகளை கண்காணிக்கத் தேவையான மாநில மற்றும் மத்திய அளவிலான அமைப்புகளை வலுப்படுத்தவும் யூனிசெப் பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றும்.

மூலம்: யூனிசெப்


கல்வி உரிமை மசோதாவிற்கு இந்திய அரசு ஒப்புதல்

வருடங்கள் கழித்து, மத்திய அமைச்சரவை கல்வி பெறும் உரிமை சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியது. ஒவ்வொரு குழந்தையும் இலவச கட்டாயக் கல்வி பெறும் உரிமை அவர்களின் அடிப்படை உரிமையாக மாறுவதற்கான சட்ட மசோதா பாராளுமன்ற ஒப்புதலுக்காக விரைவிலேயே தாக்கல் செய்யப்பட உள்ளது.

சுதந்திரம் பெற்று அறுபது வருடங்களுக்குப் பிறகு, இந்திய அரசு ஆறிலிருந்து பதினான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி பெறும் உரிமைக்கான சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை நீண்ட காலமாகத் தேங்கிக் கிடக்கும் ஒவ்வொரு குழந்தையும் கல்வி பெறும் உரிமைக்கான சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நடவடிக்கை நாட்டின் கல்வித் துறை முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

இந்த மசோதாவின் முக்கியமான சாராம்சங்கள்: தனியார் பள்ளிகளில் அருகில் உள்ள பின்தங்கிய குழந்தைகளுக்கு அந்தந்தப் பள்ளிகளில் 25% தொடக்கக் கல்விக்கான ஒதுக்கீடு.

அந்தந்தப் பள்ளிகளில் இப்படிப்பட்ட ஒதுக்கீடுகளினால் ஏற்படும் செலவை அரசு அவர்களுக்குத் திருப்பித் தந்துவிடும்; நன்கொடையோ, சேர்க்கையின்போது, அதிகப்படியான கட்டணங்களோ கிடையாது; குழந்தைகளுக்கோ பெற்றோர்களுக்கோ நேர்முகத் தேர்வு நடத்துவதோ, தகுதித் தேர்வு நடவடிக்கைகளோ இருக்கக் கூடாது.

உடல் ரீதியிலான தண்டனை, ஒரு குழந்தையை நீக்கம் செய்வது அல்லது வெளியேற்றுவது மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தேர்தல் பணி மற்றும் பேரழிவு மீட்புப் பணிகள் போன்ற பணிகள் தவிர, கல்வி சாராத பணிகளுக்காக ஆசிரியர்களைப் பயன்படுத்திக் கொள்வதை இந்தச் சட்டம் தடைசெய்கிறது. அங்கீகாரம் பெறாமல் பள்ளி நடத்துவது சட்டப்படியான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும்.

கல்வி குழந்தைகளின் அடிப்படை உரிமை என்ற சட்டம் ஒரு முக்கியமான உறுதி மொழியை குழந்தைகளுக்கு வழங்கும் நோக்கத்தில் பார்க்கும்போது, முன்னாள் இந்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்குவது சட்டப்படியான ஒரு கடமையாக இருக்கும் என்று கூறினார். சில மாநிலங்களில் நடக்கவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக்குப் பிறகு இந்த மசோதாவின் விவரங்களை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிடும் என்று அவர் மேலும் கூறினார்.

இந்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, இதன் உள்ளடக்கத்தை நீர்த்துப்போகச் செய்யாமல் இந்த வரைவு நகலுக்கு இந்த மாத ஆரம்பத்தில் ஒப்புதல் அளித்தது. அருகாமையில் உள்ள வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனியார் ஆரம்பப் பள்ளி சேர்க்கையில் 25 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்ட வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய ஷரத்தும் இந்த உள்ளடமக்கத்தில் இடம் பெற்றுள்ளது! இந்த அரசியலமைப்பு சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள தனது கடமையை அரசு தனியார் துறையின் தலையில் கட்டுவதாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என சிலர் கருதுகின்றனர்.

6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி பெறும் உரிமையை சட்டமாக்குவதற்கான அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 86ஆவது பிரிவு கல்வி உரிமை மசோதா வழிவகுக்கிறது. ஆனால், இது உருவாவதற்கு 61 வருடம் ஆயிற்று.

1937ல் இன்று இருப்பதுபோலவே அனைவருக்கும் கல்வி என்ற தேவையைப் பற்றி மகாத்மா காந்தி குரல் எழுப்பியபோது அதற்கு ஆகக்கூடிய செலவு என்கிற விஷயம் ஒரு பெரும் தடைக்கல்லாக அமைந்தது. "6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்குவதற்கான முனைப்பு" என்ற வேண்டுகோளாக அரசியலமைப்புச் சட்டம் அதை அரசாங்கத்திற்கே விட்டுவிட்டது. அனைவருக்கும் கல்வி கிடைப்பதற்கான வாய்ப்பு இன்னமும் நழுவிக்கொண்டேதான் இருக்கிறது.

2002ல் தான் அரசியல் அமைப்பு சட்டத்தில் 86ஆவது சட்டத் திருத்தத்தின்படி கல்வி பெறுவது ஒரு அடிப்படை உரிமையாக மாற்றப்பட்டது.

2004ல் ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஒரு சட்ட மசோதாவை தயாரித்தது. ஆனால் அது அறிமுகப்படுத்துவதற்கு முன்பே, தேர்தலில் தோற்றுவிட்டது. இப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி, அரசின் மாதிரி மசோதா மாநில மற்றும் மத்திய அரசு இவற்றிற்கிடையே நிதி ஒதுக்கீடு மற்றும் பொறுப்பெடுக்கும் பிரச்சினையில் மாட்டிக் கொண்டுள்ளன.
இந்த மசோதாவை விமர்சிப்பவர்கள் வயது வரம்பு பற்றிய கேள்விகளை எழுப்புகிறார்கள். அவர்கள் ஆறு வயதிற்குட்பட்ட மற்றும் 14 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளும் சேர்க்கப்பட வேண்டும் என்கின்றனர். மேலும், ஆசிரியர்கள் பற்றாக்குறை, பல ஆசிரியர்களின் மோசமான தரம், தற்போது இயங்கிவரும் பள்ளிகளின் உள்கட்டமைப்பில் உள்ள குறைகள், தவிர புதிய பள்ளிக் கூடங்கள் கட்டப்பட்டு முறையான உள் கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட வேண்டும் என்ற பிரச்சினைகளைப் பற்றி எல்லாம் அரசாங்கம் கண்டுகொள்ளவே இல்லை.

முதலில் அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புகள் பற்றிய பிரச்சினைகளை சட்டம் மற்றும் நிதி அமைச்சகத்தின் மூலம் இந்த மசோதா சந்திக்க நேர்ந்தது. சட்ட அமைச்சகம் 25% ஒதுக்கீடு குறித்து பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு ஒவ்வொரு வருடமும் 55,000 கோடி ரூபாய் மொத்த செலவு பிடிக்கும் என்றும் எதிர்பார்த்தன.

ஆலோசனை கமிஷன் நிதி ஏற்பாடு செய்வதில் தனக்குள்ள பிரச்சினைகளை வெளிப்படுத்தியது. மாநில அரசுகள் இதன் நிதி ஒதுக்கும் விஷயத்தில் அதன் ஒரு பகுதியைக்கூட ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. இதனால், மத்திய அரசு தானே இதனை செயல்படுத்துவதற்கான அனைத்தையும் மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.

இந்த வரைவு மசோதா மூன்று வருடத்திற்குள் அனைத்து இடங்களிலும் ஆரம்பபப்பள்ளிகளை நிறுவ உத்தேசித்திருக்கிறது.

நகர்ப்பகுதிகள் மற்றும் தொலைதூர கிராமப் பகுதிகளில் ஏற்படக்கூடிய தடைகளைக் கருத்தில் கொண்டு இந்த மசோதாவில் குறைந்தபட்ச விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடி காரணமாக பள்ளிக் கல்வி பெறும் வாய்ப்பு எந்த ஒரு குழந்தைக்கும் கிடைக்காமல் இருக்கக் கூடாது என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

"சட்டங்களோ, மசோதாக்களோ குழந்தைகளை பள்ளிக்கு வரவைப்பதில்லை. இதில் உள்ள முதல் பிரச்சினை ஒவ்வொருவரும் தமது சமூகப் பொறுப்பைப் புரிந்துகொள்ள வேண்டும், இந்தத் திட்டம் எங்குத் தேவைப்படுகிறதோ அங்குள்ள குழந்தைகளை சென்றடைய வேண்டும் என்பதுதான் முக்கியம். இதில் குறிப்பிட்டிருப்பதுபோல் இவர்களுடைய கட்டணங்களை அரசாங்கமே கொடுத்துவிடும் என்பது. ஆனால், இந்த செலவை அடுத்தவர் தலையில் கட்டுவது சரியில்லை" என்று புதுதில்லியில் உள்ள மாடர்ன் ஸ்கூல் தலைமை ஆசிரியை லதா வைத்தியநாதன் சொல்கிறார்.

என்றாலும், இந்த மசோதாவை உருவாக்கிய கல்வியாளர்களின் வாதம் இதுதான் : சமூகப் பொறுப்பில் பங்கேற்பதை ஒரு சுமையாக நினைக்காமல் பெருமையாக ஏற்கவேண்டும் என்பதே,

ஆதாரம்: இன்ஃபோ சேன்ஜ் இந்தியா


கல்விக்கான உரிமையை உறுதிப்படுத்தும் வழிக்கான வரைபடம்


அனைவருக்கும் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தினை அமுல்படுத்தும் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் நிறுவனமாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் செயல்படுகிறது. இந்தச் சட்டத்தினை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டி, பல்வேறு நிறுவனங்கள், அரசுத்துறைகள், சமூகக் குழுக்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் ஒருமித்த ஆதரவை இந்த ஆணையம் திரட்டுகிறது. இந்த ஆணையத்தின் கீழ் பல்வேறு அரசுத்துறையின் அதிகாரிகள், ஆற்றலும் அனுபவமும் மிக்க கல்வியாளர்கள் பலரைக் கொண்ட நிபுணர் குழுவும் உருவாக்கப்பட்டு, கல்வி உரிமையை உறுதிப்படுத்தும் வழிமுறைகளில் கவனம் செலுத்தப்படுகிறது.

இந்த நிபுணர் குழு இதுவரை நான்கு முறை கூடியுள்ளது. தேசிய குழந்தைகள் நல ஆணையத்தின் கீழ் கல்வி உரிமைக்கான சட்டத்தை நடைமுறைப்படுத்த மட்டுமே இரண்டு ஆணையர்கள், பிற அலுவலர்களைக் கொண்ட தனிப்பிரிவு இயங்கி வருகிறது. இப்பிரிவு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவியோடு செயல்படும்.

மனிதவள மேம்பாட்டு அமைச்சத்தோடு இணைந்து, ஒத்திசையோடு செயல்படும் வழிமுறைகள் வகுக்கப்படும். கல்வி உரிமைச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த செயல்படவேண்டியது மிகவும் அவசியமானது. மூன்றாவது வழிமுறையாக, தேசிய குழந்தைகள் நல ஆணையத்தின் கண்களாகவும், காதுகளாகவும் செயல்படக் கூடிய மாநிலப் பிரதிநிதிகளை நியமிப்பதாகும். இந்தப் பிரதிநிதிகள் கல்விப் பணியில் அனுபவம் மிக்க நபர்களாக இருப்பர். ஒவ்வொரு மாநிலத்திலும் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் குறித்த தகவலை தேசிய ஆணையத்திற்கு அனுப்புவதோடு, மாநிலங்களில் எழக்கூடய புகார்கள் குறித்து தொடர் நடவடிக்கைகளையும் இப்பிரதிநிதிகள் கண்காணிப்பர்.

கல்வி உரிமைச் சட்டத்தோடு நெருங்கிய தொடர்புடைய பிற அமைச்சகங்களான சமூக நீதி மற்றும் முன்னேற்றம், தொழிலாளர் நலம், ஆதிவாசிகள் நலம், பஞ்சாயத்துராஜ் போன்ற அமைச்சகங்களோடு தொடர் கூட்டங்கள் நடத்தப்பட்டு ஒத்த கருத்துக்களோடு செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது. உதாரணமாக, தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ் உள்ள குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புத்துறை கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். அதேபோல், ஆதிவாசிகள் நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உண்டு உறைவிடப் பள்ளிகளின் செயல்பாடுகளும் இச்சட்டத்தோடு நெருங்கிய தொடர்புள்ளது. தேசிய குழந்தைகள் நல ஆணையமும், இந்த அமைச்சகங்களும் முறையான தகவல் பரிமாற்றங்களோடு, இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.

தேசிய குழந்தைகள் நல ஆணையம் பிற தேசிய ஆணையங்களான பெண்கள், பட்டியலிடப்பட்ட இனங்கள், ஆதிவாசிகள் ஆகியவற்றின் உறுப்பினர்களையும் சந்தித்து கல்வி உரிமைச் சட்டத்தின் முறையான அமுலாக்கம் குறித்து விவாதித்துள்ளது. குறிப்பாக, பெண்குழந்தைகளின் கல்வி நிலையை மேம்படுத்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேசிய குழந்தைகள் நல ஆணையம் ஏற்பாடு செய்யும் பொதுவிசாரணை நிகழ்வுகளில் பிற ஆணையங்களின் உறுப்பினர்களையும் விசாரணை நீதிபதிகளாக அமர வைக்கும் ஆலோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில், பல மாநிலங்களின் பல பகுதிகளில் கல்வி உரிமைக்காகச் செயல்படும் பல சமூகக் குழுக்களைச் சார்ந்த 20 பேர் கொண்ட கூட்டமும் தேசிய ஆணையத்தால் ஒழுங்கு செய்யப்பட்டது. மாநில கண்காணிப்புப் பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்கான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டத்தின் முதல் கூட்டமாகும் இது.

அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தவும், கண்காணிக்கவும் பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்பும், பரந்துபட்ட விழிப்புணர்வும் மிகவும் அவசியம். இந்தச் சட்டத்தினை அனைத்து மாநில பிரச்சாரங்களையும் தேசிய அளவில் செய்ய வேண்டும். தேசிய ஆணையம் எளிய முறையிலான பிரச்சார பிரசுரங்கள், சட்டத்தின் முக்கிய ஷரத்துக்கள் சுவரொட்டிகள், முதன்மைக் கையேடுகள், துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றை தயாரித்துள்ளது. குழந்தைகளும் இந்தச் சட்டத்தினைப் புரிந்து கொள்ளக்கூடுய வகையில் மிகவும் எளிமையாக இவை தயாரிக்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் இவற்றைக் கொண்டு செல்ல மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், பிற நிறுவனங்களும் கைகோர்க்க வேண்டும்.

குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் படி பள்ளிச் சேர்க்கை நெறிமுறைகள்


நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும், குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி (RTE Act, 2009), பள்ளிச் சேர்க்கை நெறிமுறைகள் இருப்பதை உறுதி செய்ய, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இச்சட்டப்படி தடை செய்யப்பட்ட ஆரம்பக் கல்வி நிலையில் குழந்தைகளை சேர்ப்பத்ற்கு, சில மாநிலங்களில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டது தெரியவந்ததால் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.



பள்ளிச் சேர்க்கையை குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிமுறைகளின்படி முறைப்படுத்த உரிய அரசு ஆணைகள் பிறப்பிக்குமாறு, ஏப்ரல் 2010-ல் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் எழுத்துப்பூர்வமாக அறிவுறுத்தியது. மார்ச் 2010-ல் தில்லி தேசிய தலைமைப் பகுதி கல்வி இயக்குநரகம் (GNCTD), நடத்துகிற ராக்ஷ்டிரிய பிரதிபா விகாஸ் வித்யாலயங்களில் (Rajkiya Pratibha Vikas Vidyalayas) ஆறாம் வகுப்புச் சேர்க்கைக்காக தேசிய தலைமைப் பகுதி கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்தே இந்த எழுத்துப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டது

தில்லி தேசிய தலைமைப்பகுதி கல்வி இயக்குநரகம் அனைத்து நாளிதழ்கள் மற்றும் அதன் இணையதளத்தில் சேர்க்கைக்காக ரூ. 25/- செலுத்தி விண்ணப்பம் பெறவும், அதன்பின் நுழைவுத் தேர்வில் பங்கெடுக்கவும் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின் பின்னரே தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஏப்ரல் 2010-ல், உரிய அரசாணையை பிறப்பிக்குமாறு அனைத்து மாநில தலைமை செயலாளர்களையும் கோரியது. குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் 2009-ன் விதிகளின்படி, பள்ளிச் சேர்க்கைக்கு எத்தகைய நுழைவுத் தேர்வு முறையும் நடைபெறக் கூடாது என்பதால், இந்த் அறிவிப்பு, இச்சட்ட விதிமுறைகளுக்கு எதிரானதாக கருதப்பட்டது.

இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் முறையைக் கண்காணிக்கும் அமைப்பாக உள்ள தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெறவும், சட்டத்தின் விதிமுறைகளுக்கு ஒத்துச் செயல்படவும் தில்லி தேசிய தலைமைப்பகுதி கல்வி இயக்குனரகத்தின் முதன்மைச் செயலருக்கு எழுத்துபூர்வமாக அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்த அரசாணை தில்லி தலைநகரப் பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரு வார காலத்திற்குள் பிறப்பிக்கப்பட்டு, சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட தேவையான மாற்றங்களை பள்ளிகள் கொண்டு வர ஆவண செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது. 

தில்லி கல்வி இயக்குநரகம் இந்த கோரிக்கைகளை செயல்படுத்தாதலால், ஜுன் 2010-ல் ஆணையத்தின் முன் அழைக்கப்பட்டு, ஜுலை 2010-க்குள் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தின் அடிப்படையில் பள்ளிச் சேர்க்கைகளை மீண்டும் செய்யுமாறு கால அவகாசம் அளிக்கப்பட்டது. மேலும், தில்லியைப் போன்று பிற மாநிலங்களிலும் சட்ட விதிமுறைகளை மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, அரசாணையில் கீழ்க்கண்ட அம்சங்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்ற வலியுறுத்தலோடு மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது:.
இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தின் விதிகளின்படி குழந்தைகளின் சேர்க்கை நடைபெற வேண்டும்.
வகுத்துரைக்கப்பட்ட பிரிவு மற்றும் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளைப் போன்றே, நலிவுற்ற பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீட்டை உத்தரவாதப்படுத்த வேண்டும்

மேலும், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகள் குறித்த அட்டவணை தயாரிக்கப்பட்டு, அருகாமைப் பகுதி குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கை கோர முடியும் என்ற சேர்க்கைக்கான சட்டத்தின் விதிகள் குறித்த அரசாணை அனுப்பப்பட வேண்டும் என்றும், இது தொடர்பான மாநில அரசுகளின் சட்ட விதிகளும் வழிமுறைகளும் மிக விரைவில் வரையறுக்கப்பட வேண்டும் என்றும் அக்கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நவோதயா பள்ளிகள் “வகுத்துரைக்கப்பட்ட பிரிவை” சார்ந்ததாக இருப்பதால், இச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. ஆனால், இச்சட்டத்தின் பிரிவு 13 விதிவிலக்குகள் இன்றி அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. 

இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் பிரிவு 13-ன் இது தொடர்பான முக்கிய அம்சங்கள்: 

எந்தப் பள்ளியோ அல்லது தனிநபரோ, குழந்தையின் பள்ளிச் சேர்க்கையின் போது, அதன் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளரிடமிருந்து தலைக் கட்டணம் (capitation fee) வசூலிப்பதோ அல்லது முன் தேர்வு முறைக்கு உட்படுத்துதலோ கூடாது.
உட்பிரிவு (1) க்கு புறம்பாக, தலைக்கட்டணம் வாங்கும் பள்ளிகள் மற்றும் தனி நபர்களுக்கு வசூலிக்கப்பட்ட கட்டணத்தை விட பத்து மடங்கு வரை அபராதம் விதிக்கப்படும்.
குழந்தைகளை பள்ளியில் அனுமதிப்பதற்கான முன் தேர்வு முறைக்கு உட்படுத்தினால், முதல் தடவையாக மீறும் பொழுது ரூ 25,000/- வரையிலும், தொடர்ந்து மீறும் ஒவ்வொரு முறையும் ரூ 50,000/- வரையிலும் அபராதம் விதிக்கப்படும்.

ூலம்: NCPCR


நவோதயா பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கு முன் தேர்வு முறைகள் ஏதுமில்லை

ஆரம்பக் கல்வி பெறும் (வகுப்பு 1 முதல் 8 வரை) குழந்தைகளுக்கு, பள்ளிச் சேர்க்கையின்போது எந்தவொரு முன் தேர்வு முறைகளும் நட்த்தக்கூடாது என்ற இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளை அனைத்துப் பள்ளிகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR), நவோதயா பள்ளிகளின் ஆணையர் மற்றும் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் எழுத்துப்பூர்வமான கடிதம் அனுப்பியுள்ளது. தில்லியிலும், பிற மாநிலங்களிலும் நவோதயா பள்ளிகளில் பள்ளிச் சேர்க்கையின்போது குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் 2009, பிரிவு 13-ஐ மேற்கோள் காட்டி, எந்தப் பள்ளியோ அல்லது தனிநபரோ, குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கையின் போது, அதன் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளரிடமிருந்து தலைக் கட்டணம் வசூலிப்பதோ அல்லது முன் தேர்வு முறைக்கு உட்படுத்துதலோ கூடாது என்றும் உட்பிரிவு (1) க்கு புறம்பாக, தலைக்கட்டணம் வாங்கும் பள்ளிகள் மற்றும் தனி நபர்களுக்கு வசூலிக்கப்பட்ட கட்டணத்தை விட பத்து மடங்கு வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குழந்தைகளை பள்ளியில் அனுமதிப்பதற்கான முன் தேர்வு முறைக்கு உட்படுத்தினால், முதல் தடவையாக மீறும் பொழுது ரூ 25,000/- வரையிலும், தொடர்ந்து மீறும் ஒவ்வொரு முறையும் ரூ 50,000/- வரையிலும் அபராதம் விதிக்கப்படும்.

“வகுத்துரைக்கப்பட்ட பிரிவு” அட்டவணயில் உள்ள நவோதயா பள்ளிகளுக்கும் இச்சட்டத்தின் பிரிவு 13 பொருந்தும் எனவும், சேர்க்கைக்கான முன் தேர்வுகள் நடத்துவது, அப்பிரிவை மீறுவதாகும் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அனைத்து மாநில அரசுகளுக்கும் இது குறித்து அனத்து பள்ளிகளுக்கும் இச்சட்ட அம்சங்களை விளக்கி உரிய அரசாணை பிறப்பிக்குமாறும், விதிகளின்படி செயல்பட உரிய செயல்முறை மற்றும் நடைமுறை மாற்றங்களை ஒரு வார காலத்திற்குள் கொண்டுவரும்படியும் கோரியுள்ளது.

மூலம்; NCPCR
நன்றி: http://www.indg.in/