Tuesday 25 February 2014

கல்வி உரிமை வெறும் கனவு : வே. வசந்தி தேவி


கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 கல்வி உரிமையை நிலைநாட்டுகிறதா?

தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி குறித்து இன்று எழுந்துள்ள விவாதம், நடுவண் அரசால் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 குறித்த சிந்தனைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. இச்சட்டம் ஓரளவு வரவேற்கப்பட்டாலும், கூடவே அது குறித்த ஆழ்ந்த கவலைகளும் கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன. கல்வி குறித்த கரிசனை கொள்கை வகுப்போரிடம் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இச்சட்டம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டபோது மொத்தம் 250 உறுப்பினர்களில் 54 பேர்தான் அவையில் இருந்தனர். எந்த விவாதமும் இன்றிக் குரல் வாக்கு (voice vote) மூலம் மசோதா சட்டமாக்கப்பட்டது.

பள்ளிக் கல்வியை அடிப்படை உரிமையாக்காத நாடுகள் ஒரு சிலவே. அதில் இந்தியாவும் ஒன்று. வாழ்வுரிமையினின்று பிரிக்கவியலாதது என உச்ச நீதிமன்றம் அறுதியிட்ட கல்வியுரிமையை இச்சட்டம் நிலைநிறுத்துவதாகச் சொல்லப்பட்டுள்ளது. பல காலம் காத்து, தவித்து இன்று பெற்றுள்ள இச்சட்டம் இத்தனை காலம் இந்தியக் குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் சட்டமா? அல்லது ஒரு வரலாற்று வாய்ப்பைத் தவறவிட்ட சட்டமா?

இந்திய ஜனநாயகம், தன் குழந்தைகளுக்குக் கல்வி அடிப்படை உரிமை என்று ஏற்றுக்கொள்ளவே இத்தனை காலம் சென்றிருக்கிறது. 1993இல் உச்ச நீதிமன்றத்தின் பெரும் மைல்கல்லான உன்னிகிருஷ்ணன் வழக்குத் தீர்ப்பு, கல்வி 14 வயதிற்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளின் அடிப்படை உரிமை என்று அறுதியிட்டது. அதன் பின் ஒன்பது ஆண்டுகள் கழித்து நடுவண் அரசு 2002இல் 86ஆம் அரசியல் சாசனத் திருத்தம் 21ஏ மூலம் அதை ஏற்றுக்கொண்டது. அதற்குப் பின் ஏழு ஆண்டுகள் சென்று, கல்வி உரிமையை நடைமுறைப்படுத்தும் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இன்று கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டம் குறித்து எழுந்துள்ள முக்கிய விமர்சனங்களை இங்கே தொகுப்போம்.

சட்டத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய கூறுகள்
1) 6-14 வயதுக் குழந்தைகள் அனைவருக்கும் கல்வி அடிப்படை உரிமை என்பதைச் சட்டம் ஏற்றுக்கொண்டுள்ளது. அவர்களுக்குக் கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டுமென்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளது. இது ஏற்கெனவே 86ஆம் அரசியல் சாசனத் திருத்தம் அளித்திருக்கும் உரிமை.

2) அங்கீகாரமற்ற பள்ளிகள் அனுமதிக்கப்படமாட்டா. பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்குமான தர (norms and standards) நிர்ணயம், போதுமானதாக இல்லையென்றாலும், ஓரளவு செய்யப்பட்டுள்ளது. விதிக்கப்பட்ட தர வரைவுகளை (norms and conditions) நிறைவேற்றாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் மறுக்கப்படும். ஏற்கெனவே உள்ள பள்ளிகள் தர வரைவுகளைப் பூர்த்திசெய்ய மூன்று ஆண்டுகள் கொடுக்கப்படும். அப்போதும் நிறைவேற்றாவிட்டால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

3) குழந்தைகளைப் பள்ளியை விட்டு அனுப்புவதோ எட்டாம் வகுப்புவரை ஒரே வகுப்பில் தக்க (detention) வைப்பதோ தடுக்கப்படுகிறது. குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தல் எளிமையாக்கப்பட்டுள்ளது. வயதுக்கான சான்றிதழ், மாறுதல் சான்றிதழ் (Transfer Certificate) ஆகியவை பள்ளிச் சேர்க்கையின் போது வலியுறுத்தப்படக் கூடாது. பள்ளியில் சேராத குழந்தைகள், இடைவிலகிவிட்ட குழந்தைகள் மீண்டும் சேர்க்கப்படும்போது, வயதுக்கேற்ற வகுப்பில் (age appropriate class) சேர்க்கப்பட வேண்டும். அவர்கள் அந்த வகுப்பிற்கான கல்வித் தகுதியைப் பெறுவதற்குப் பள்ளியிலேயே இலவசமாக சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். புலம்பெயரும் குடும்பக் (migrant families) குழந்தைகளுக்குப் பள்ளிச் சேர்க்கை மறுக்க இயலாது. குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கு எத்தகைய தெரிவு செய்தலும் (screening procedure) கூடாது. ஆசிரியரின் பொறுப்புகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. தனிப்பயிற்சி (டியூஷன்) தடைசெய்யப்படுகிறது. குழந்தைகளுக்கு உடல்ரீதியான தண்டனை (corporal punishment) அல்லது மனரீதியான புண்படுத்துதல் தடைசெய்யப்படுகிறது. இந்தக் கூறுகள் பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகளுக்குப் பயனளிக்கும்.

4) கலைத் திட்டம், கற்பித்தல் முறைகள் குறித்துச் சில சிறந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கலைத் திட்டம் அரசியல் சாசன விழுமியங்களை ஒட்டி இருக்க வேண்டும்; குழந்தைகளின் பல்திறன் வளர்க்கும் முழுமைத்துவக் கல்வி; செயல் வழி, குழந்தையை மையமாகக் கொண்ட, குழந்தைக்கு உகந்த கற்பித்தல் முறைகள்; அறிவுத் தேடலையும் புதுமை படைத்தலையும் ஊக்குவித்தல்; அச்சமும் தவிப்பும் இன்றிக் குழந்தைகள் கருத்துகளை வெளிப்படுத்தும் வகுப்பறை ஆகியவை வலியுறுத்தப்படுவது மிகவும் வரவேற்கத்தக்கது. இன்றுள்ள தேர்வுமுறைக்கு மாற்றாகக் குழந்தைகளின் அறிவையும் அறிவைப் பயன்படுத்துதலையும் மதிப்பிடும் முழுமையான, தொடர்மதிப்பீட்டு முறை வலியுறுத்தப்படுகிறது. தேர்வுகள் அளிக்கும் அச்சுறுத்தலும் சுமையும் தடுக்கப்படுகின்றன.

5) மூன்று முதல் ஆறு வயதுக் குழந்தைகளுக்கு இலவச முன் பருவக் கல்வி வழங்க அரசுகள் ஏற்பாடு செய்யலாம்.

6) பள்ளி நிர்வாகம் அதிகாரிகள் கையிலிருந்து எடுக்கப்பட்டு, சமுதாயத்தின் பொறுப்புக்கு மாற்றப்படுகிறது. இதனால் ஏற்படும் debureaucratization வரவேற்கப்பட வேண்டியதே. பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பு பள்ளி உள்ளாட்சி உறுப்பினர்கள், பெற்றோர் ஆகியோர் இடம்பெறும் நிர்வாகக் குழுவிடம் (School Management Committee) அளிக்கப்படுகிறது.

இத்தகைய நன்மைகளைப் பயக்கக்கூடிய சட்டமாக இது தோன்றினாலும், உண்மையாகவே அனைத்துக் குழந்தைகளுக்கும் பாகுபாடின்றி அவை கிடைப்பதற்கான வழிமுறைகளையும் உத்திரவாதத்தையும் சட்டம் அளிக்கிறதா என்பது குறித்த ஐயமும் அச்சமும் நாடெங்கும் கிளம்பியுள்ளன. அவற்றைக் கீழே காண்போம்.

பள்ளிச் சேர்க்கை
இன்று பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகள் பள்ளிகளில் இல்லை. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இந்த எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால் பீஹார் போன்ற மாநிலங்களில் இது கணிசமானது. பள்ளிச் சேர்க்கை கடந்த சில பத்தாண்டுகளில் உயர்ந்துள்ளது உண்மைதான். மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் காட்டுவது: 2005-2006 ஆண்டில் வகுப்பு I - VIII இல் பள்ளிச் சேர்க்கை 94.9சதவிகிதம்; வகுப்பு I - XII வரை: 77 சதவிகிதம். இது மொத்த பள்ளிச் சேர்க்கை விகிதம்தான் (Gross Enrollment Ratio). ஆனால் இதை வைத்து எவ்வளவு குழந்தைகள் க்ஷிமிமிமி வகுப்புவரை கல்வி பெறுகின்றனர் என்பதைக் கணக்கிட முடியாது. மாணவர் வருகை, இடை விலகல் (drop out) ஆகியவற்றை வைத்துத் தான் கல்வி கற்கும் மாணவர் எண்ணிக்கையைக் கணிக்க முடியும். பள்ளி வருகை (attendance), பள்ளிச் சேர்க்கை (enrollment) எண்ணிக்கையைவிட ஏறத்தாழ 25 சதவிகிதம் குறைவாக உள்ளதாக அனுமானிக்கப்படுகிறது. இடைவிலகல் மிக அதிகம். நாடு முழுவதிலும் I-X வகுப்பு மாணவரில் 61.6 சதவிகிதத்தினர் இடை நின்று விடுபவர். பல மாநிலங்களில் இடை நிற்பவர் இதைவிட மிக அதிகம். ஆகவே 30 சதவிகிதம் பள்ளி வயதுக் குழந்தைகள் குறைந்தபட்சக் கல்வி பெறுவதில்லை.

இத்தனை பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பள்ளியில் எட்டு வகுப்புவரையேனும் தக்கவைத்து, தரமான கல்வி அளிப்பதற்கான உத்திரவாதம் சட்டத்தில் காணப்படவில்லை.

பல்மட்டப் பள்ளிகளும் பாகுபாடும்
இந்தியக் கல்வியின் பெரும் குற்றம் அதன் கொடிய ஏற்றத்தாழ்வு. சமுதாயத்தின் அனைத்து வர்க்க-சாதிப் பிரிவினைகள் பள்ளிகளிலும் தொடர்கின்றன. இந்திய சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகள் தொடர்வதற்கு, கல்வியில் ஏற்றத்தாழ்வு முக்கியக் காரணம். இதனால், அனைவரின் கல்வியும் தரமற்ற கல்வியாகிவிடுகிறது. பல ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மை என்னவென்றால், பல வர்க்கங்களையும் சமூக அமைப்புகளையும் சேர்ந்த குழந்தைகள் ஒன்றாக ஒரே பள்ளியில் படிக்கும்போதுதான் சிறந்த கல்வி பெறுகின்றனர். இது வசதிபெற்ற குழந்தைகளுக்கும் பொருந்தும்.


கல்வி உரிமைச் சட்டம் இப்போது உள்ள பல மட்டங்கள் கொண்ட, பாகுபடுத்தும் பள்ளிக் கல்வியைத் தொடருகிறது. இப்போது உள்ள நான்கு வகைப் பள்ளிகளுக்குச் சட்டரீதியான அங்கீகாரம் அளிக்கிறது - அ) அரசுப் பள்ளிகள், ஆ) அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், இ) விசேஷப் பள்ளிகள்/ குறிப்பிடப்பட்ட பள்ளிகள் ( specified category), கேந்திரிய வித்யாலயா, நவோதயாப் பள்ளிகள் போன்றவை, ஈ) உதவி பெறாத தனியார் பள்ளிகள். இந்தச் சட்டத்தின்படி அ) அரசுப் பள்ளிகள் 6-14 வயது அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய, இலவசக் கல்வி அளிக்கும். ஆ) உதவி பெறும் தனியார் பள்ளிகள், தாங்கள் அரசிடம் பெறும் உதவிக்கு ஏற்ற விகிதத்தில், குறைந்தபட்சம் 25 சதவிகிதம் குழந்தைகளுக்கு அத்தகைய கல்வி அளிக்கும். இ) & ஈ) விசேஷ வகைப் பள்ளிகளும் உதவி பெறாத தனியார் பள்ளிகளும் தங்கள் அருகாமையில் வசிக்கும் நலிந்த பிரிவினரைக் குறைந்தபட்சம் 25 சதவிகிதம், முதல் வகுப்பில் சேர்த்து, பள்ளிக் கல்வி முடியும்வரை கட்டாய இலவசக் கல்வி அளிக்கும். ‘ஈ’ பிரிவு பள்ளிகளுக்கு இதனால் ஏற்படும் செலவை ஈடுசெய்ய, அரசுப் பள்ளிகளில் ஒரு குழந்தைக்கான தலா செலவோ அல்லது தனியார் பள்ளிகள் விதிக்கும் கட்டணமோ இதில் எது குறைவோ அதை அரசு அளிக்கும்.

மேற்சொன்ன பிரிவுகளில் ‘இ’ பிரிவு விசேஷப் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா, நவோதயாப் பள்ளிகள் போன்ற, மத்திய அரசால் நடத்தப்படும் பள்ளிகள். இவை முழுவதும் அரசின் செலவில் நடக்கும் பள்ளிகள். இவற்றிற்கு ஏன் மற்ற அரசுப் பள்ளிகள்போல் அனைத்துக் குழந்தைகளையும் சேர்க்கும் கடமை விதிக்கப்படவில்லை? உதவி பெறாத பள்ளிகள் போன்று 25 சதவிகிதம் அடித்தட்டுக் குழந்தைகளைச் சேர்த்தால் போதும் என்று ஏன் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது? காரணம் கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகளில் மத்தியதர, மேல்தட்டு வர்க்கக் குழந்தைகள் கற்கின்றனர். ஆகவே இவற்றிற்கு விதிவிலக்கு. இன்று இந்த விசேஷ வகைப் பள்ளிகளில் ஆண்டுக்கு ஒரு மாணவருக்கு அரசு செய்யும் தலா செலவினம் ரூ.11,000. ஆனால் மாநில அரசுகள் நடத்தும் அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவருக்கான அரசு நிதி ஒதுக்கீடு ரூ.1,100 முதல் ரூ.1,500 வரைதான். கேந்திரிய வித்யாலயாக்களில் செய்யப்படும் பெருமளவு நிதி ஒதுக்கீடு சாமான்யரின் குழந்தைகளுக்குச் செல்வதை இந்த வர்க்க அரசு எப்படி அனுமதிக்கும்?

ஆகவே இன்று உள்ள பல்மட்டப் பள்ளிகள் தொடரும். இது அரசியல் சாசனத்தின் 21ஏ பிரிவிற்கு முரணானது. 6-14 வயதான அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய, இலவசக் கல்வி அளிக்க வேண்டும் என்று 21ஏ பிரிவு சொல்கிறது. ஆனால் பின் இருவகைப்பட்ட பள்ளி மாணவரில் 25 சதவிகிதம், இரண்டாம் வகைப் பள்ளிகளில் அதைவிடச் சிறிது அதிக அளவிலும்தான் கட்டாய இலவசக் கல்வி பெறுவர். ஆகவே இது 21ஏக்கு எதிரானது.

அரசு கீழ்வரும் இருவகைகளில் இந்தியக் கல்வியின் பாகுபாடுகளை இக்கட்டத்தில் களைந்திருக்கலாம் அல்லது குறைத்திருக்கலாம்.

அ) தேவையெனில் நீதிமன்றம் செல்லும் வாய்ப்பளிக்கும் (justiciable), விவரமான தர வரைவுகள் (norms and standards) உருவாக்கி, அவற்றைக் கண்டிப்பாக அனைத்து அரசு, தனியார் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தல்.

ஆ) அருகாமைப் பள்ளிகள் (neighbourhood schools) என்ற கொள்கையை ஏற்று, ஒவ்வொரு பள்ளிக்குமான அருகாமையை வகுத்து, அங்கு வசிக்கும் அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்து, பள்ளிக் கல்வி முடிவுறும்வரை இலவசக் கல்வி அளிக்க வேண்டுமென்ற கட்டாயத்தை அனைத்துப் பள்ளிகளுக்கும் விதித்தல்.இவற்றைச் செய்ய அரசு தவறிவிட்டது; தெரியாமலல்ல, தெரிந்தே தவறிவிட்டது.

வயது வரம்பு
கல்வி உரிமைச் சட்டம் பள்ளிக் கல்வி முழுவதையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அதாவது, முன்பருவக் கல்வி உட்கொண்டு, 18 வயதுவரைக்கும் கல்வி உரிமை அளிக்கப்பட வேண்டும். பள்ளிக் கல்வியை முன்பருவக் கல்வி, ஆரம்பக் கல்வி, உயர்நிலைப் பள்ளிக் கல்வி என்று பிரித்தல் கற்றல்-கற்பித்தல் முறைகளின் பிரிவுகள் தானே ஒழிய, கல்வி உரிமையைப் பொறுத்தமட்டில், இது பொருளற்றது. பல முன்னணி வளரும் நாடுகளில் - சீனா, மெக்ஸிகோ, பிரேஸில், தென் ஆப்பிரிக்கா, இந்தோனிஷியா போன்றவற்றில் - 18 வயதுவரை கட்டாயக் கல்வி அளிக்கப்படுகிறது. இந்நாடுகள் பல ஆண்டுகளுக்கு முன்பே அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்ற இலக்கை எட்டிவிட்டு, இன்று 12ஆம் வகுப்புவரை கட்டாயக் கல்வியை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

இச்சட்டம் 3-6 வயதுக் குழந்தைகளுக்குக் கல்வி உரிமை மறுப்பது எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத, மனித உரிமை மீறலே. இந்திய அரசியல் சாசனத்தின் 45 ஆம் பிரிவு, 14 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்க வேண்டுமென்று அரசுக்குப் பணித்தது ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும் இணைத்துத்தான். உச்ச நீதிமன்றத்தின் புகழ்பெற்ற உன்னிகிருஷ்னன் வழக்குத் தீர்ப்பு, கல்வி உரிமை உயிர்வாழ் உரிமையின் பிரிக்க இயலா அம்சம் என்று கூறியதும் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளை இணைத்துத்தான்.

ஆனால், 2002ஆம் ஆண்டு 86ஆம் அரசியல் சாசனத் திருத்தம் கொண்டுவந்து, பிரிவு 21ஏ சேர்க்கப்பட்டபோது, திடீரென்று, எந்த வகையான ஆதாரமும் இன்றி, ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சட்டத்தின் பயன் மறுக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 170 மில்லியன் குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி உரிமை மறுக்கப்பட்டது. சட்டம் சொல்வது: மூன்றிலிருந்து, ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மழலையர் நலனும் கல்வியும் வழங்க மாநில அரசுகள் முயலலாம். ஆனால் இக்கல்வி அளிக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தரமான கல்வி அளிக்காவிட்டால், நமது கல்வி அமைப்பின் அஸ்திவாரமே பலவீனமாகத்தான் இருக்கும். அத்துடன், நம் நாட்டின் மனித வள மேம்பாட்டையும் கடுமையாகப் பாதிக்கும்.


இந்தச் சட்டம் 15-18 வயது இளைஞர்களுக்கும் கல்வியை அடிப்படை உரிமையாக்கி, அனைவருக்கும் மேல்நிலைவரை கல்வி என்ற தேவையையும் உறுதிப்படுத்தி இருக்க வேண்டும். குழந்தை என்ற இலக்கணத்திற்கு ஐக்கிய நாடுகளின் குழந்தை உரிமை சாசனம் (Convention on the Rights of the Child) நிர்ணயித்திருக்கும் வயது வரம்பு 18. இந்தியா இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருக்கிறது. இந்தியாவிலும் Juvenile Justice Act போன்ற சட்டங்கள் 18 வயது வரம்பைத்தான் ஏற்றுள்ளன. அத்துடன் க்ஷிமிமிமி வகுப்புவரை அனைவருக்கும் கல்வியை உறுதிப்படுத்துவ தன், தவிர்க்க இயலாத தொடர்ச்சி தான் உயர்கல்வி உரிமையை உத்திரவாதப்படுத்துவதும். ஏனென்றால், உயர்கல்வி உத்திரவாதம் இல்லையென்றால், க்ஷிமிமிமி வகுப்பு முடித்த மாணவர் போக இடமின்றி, பள்ளியைவிட்டு விலகத்தான் நேரிடும். இன்றைய விதிமுறைகளின்படி ஒரு மாணவன் ஙீமிமி வகுப்பு முடித்தால்தான் உயர்கல்வி அல்லது தொழிற்கல்வி நிறுவனங்களில் சேர முடியும். அந்தத் தகுதி பெற்றால்தான் வேலைச் சந்தைக்குள் (job market) காலடி எடுத்துவைக்க முடியும். ஆகவே கல்வி உரிமைச் சட்டம் பள்ளிக் கல்வி முழுவதற்கும், மழலையர் கல்வியிலிருந்து, ஙீமிமி வகுப்பு முடியும்வரை உரியதாக இருக்க வேண்டும்.

கல்வியின் தரம்
அடுத்த பெரும் பிரச்சினை கல்வியின் தாழ்ந்த தரம். இதைப் பல ஆய்வுகள் தெள்ளத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளன. 2005 முதல் ஆண்டுதோறும் வெளியிடப்படும் கல்வித் தரம் குறித்த தேசிய அளவிலான ஆய்வறிக்கை [Annual Status of Education Report, (ASER)] நாட்டில் கிராமப்புறக் குழந்தைகளின் கல்வித் திறமைகள் மிகத் தாழ்ந்து கிடப்பதை ஆண்டு தோறும் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. கல்வித் தரத்தை உறுதிசெய்வதற்குச் சிறந்த வழி பள்ளிக் கல்வியின் அனைத்துத் தேவைகள் குறித்த தர நிர்ணயம் (norms & standards) செய்து, அனைத்துப் பள்ளிகளிலும் அவை அனைத்தும் நிறுவுதல். இச்சட்டத்தில் ஒரு சில அம்சங்கள் குறித்துத் தர நிர்ணயம் (norms schedule) கொடுக்கப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அவை போதுமானவை அல்ல. சில முக்கியமான தரங்கள் குறிக்கப்படவில்லை. குழந்தையின் வாழ்விடத்திலிருந்து பள்ளியின் தூரம், ஒரு குழந்தைக்கு ஒதுக்க வேண்டிய உட்காரும் இடம், ஒரு பள்ளியில் அனுமதிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, வகுப்பறைத் தளவாடங்கள், கற்பித்தல் உபகரணங்கள், கணினிகள், பரிசோதனைக்கூட உபகரணங்கள், ஆசிரியர் தகுதி, பயிற்சி, ஊதியம், படிகள் (allowances), பதவி உயர்வு விதிகள் போன்றவையெல்லாம் குறிப்பிடப்படவில்லை. சில அம்சங்களின் பெயர் மட்டும் கொடுக்கப்பட்டு, அதனுடன் “நிர்ணயித்த வண்ணம்” என்று குறிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால், அவற்றை நீதிமன்றத்தில் எழுப்ப இயலாது. அவை நிர்ணயிக்கப்படாமலே போகலாம். கடைப்பிடிக்கப்பட வேண்டிய தர வரைவுகள் இவை என்று சட்டம் சொல்லாவிட்டால், தரம் குறித்துப் பேசுவது பொருளற்றது.

நிதி ஒதுக்கீடு
இன்றைய இந்தியக் கல்வியின் பல கேடுகளுக்கும் அநீதிகளுக்கும் உண்மையான காரணம் இந்தியாவில் கல்விக்காகச் செய்யப்படும் மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடு. இந்தச் சட்டத்துடன், அதை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியைக் குறிப்பிட்டு, ஒரு Financial Memorandum சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். சட்டம் சொல்வதெல்லாம் அதை நிறைவேற்றத் தேவையான நிதிப் பொறுப்பு மத்திய-மாநில அரசுகள் இரண்டிற்குமானது ஆகும். சில மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி தேவைப்பட்டால், அளிக்குமாறு Finance Commissionக்குப் பரிந்துரைக்கக் குடியரசுத் தலைவரை வேண்டலாம். இந்தப் பலவீனமான உத்திரவாதத்தின் அடிப்படையில்தான் இச்சட்டமே நிலைகொண்டுள்ளது.

பல வயது நிலைகள் சேர்ந்த குழந்தைகளுக்குக் கட்டாய இலவசக் கல்வி அளிப்பதற்கு எவ்வளவு நிதி தேவை என்பது கடந்த பத்து ஆண்டுகளில் பலமுறை நாட்டில் கணிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு நியமித்த இரு வல்லுநர் குழுக்கள், பீஹார் பொதுப்பள்ளி கமிஷன் ஆகிய மூன்றும் இத்தகைய கணிப்புகள் செய்துள்ளன. தரமான கல்விக்குத் தேவைப்படும் தர வரைவுகள் (norms and standards) எவை என்று வகுத்து, அவை ஒவ்வொன்றுக்கும் தேவையான நிதியைக் கணக்கிட்டு, அதன் அடிப்படையில், ஒரு காலக்கெடுவிற்குள் 6-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி அளிப்பதற்கும் அனைவருக்கும் பள்ளிக் கல்வி என்ற இலக்கை எட்டுவதற்கும் கூடுதலாக எவ்வளவு நிதி தேவை என்று கணித்திருக்கின்றன. 1999இல் மத்திய அரசால் நிறுவப்பட்ட பேராசிரியர் தபஸ் மஜும்தார் தலைமையிலான குழு, கூடுதலாக ஆண்டுக்கு ரூ.13,700 கோடி என்ற கணக்கில் அடுத்த பத்து ஆண்டுகளுக்குத் தேவைப்படும் என்று சொல்லிற்று. 2004இல் Central Advisory Board on Education (CABE) நியமித்த வல்லுநர் குழு அதே இலக்கை ஆறு ஆண்டுகளில் அடைய ஆண்டுக்கு ரூ.73,000 கோடி கூடுதலாக ஆகும் என்று கணித்தது. பேரா. தபஸ் மஜும்தார் குழு அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றாததன் காரணமாக, தேவைகள் ஏகமாகக் குவிந்து, 2004ஆம் ஆண்டில் பல மடங்கு கூடுதல் தேவையை உருவாக்கிவிட்டது. இரண்டாம் குழுவின் பரிந்துரைகளையும் இதுவரை நிறைவேற்றவில்லை. இது தொடர்ந்தால், அடுத்த பத்து ஆண்டுகளில் இதுவும் பன்மடங்கு பெருகி, தேவைப்படும் நிதி பிரம்மாண்டமாக உருவெடுத்து விடும். ஒருவேளை அந்தக் கட்டத்தில், அரசு அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்பது இந்தியாவில் சமாளிக்க முடியாத எட்டாக் கனவு என்று கையை விரித்துவிடலாம். இந்தியா பல பல ஆண்டுகளுக்குத் தரமற்ற கல்வியைத் தன் குழந்தைகளுக்கு அளித்துவரும் அவலத்தை ஒப்புக்கொண்டுவிட்டு, நாட்டின் ஒற்றுமையையும் வளர்ச்சியையும் பணயம் வைக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம்.

பதினோராம் ஐந்தாண்டுத் திட்டத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்காக (SSA) ஒதுக்கப்பட்டிருக்கும் நிதிச் சட்டத்தின் தேவைகளைக் கவனித்துக்கொள்ளப்போதும் என்ற எண்ணம் இருக்கலாம். இந்த நிதி ஒதுக்கீடு 10ஆம் திட்ட ஒதுக்கீடுபோல் இரண்டு மடங்கு என்றாலும், அது ஆண்டுக்கு ரூ.30,000 கோடிதான். இது சிகிஙிணி குழு நிர்ணயித்த ஆண்டுக்கு ரூ.73,000 கோடி என்பதில் பாதிக்கும் குறைவு.

இந்தியாவின் தேசியக் கல்விக் கொள்கை தேச வருமானத்தில் (GDP) ஆறு சதவிகிதத்திற்குக் குறையாமல் கல்விக்காக ஒதுக்க வேண்டுமென்று சொல்கிறது. கோதாரிக் கமிஷனால் முதல்முறை நிறுவப்பட்ட இந்த இலக்கு நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை கல்விக்கான ஒதுக்கீடு நான்கு சதவிகிதத்தைத் தாண்டியதில்லை; பெரும்பாலும் மூன்று சதவிகிதத்தை ஒட்டியே இருந்துள்ளது. பெரும்பாலான வளர்ந்த நாடுகளிலும் வளரும் நாடுகளில் முன்னணி நாடுகளிலும் கல்விக்கான நிதி தேசிய வருமானத்தில் 10 சதவிகிதமோ அதற்கும் மேலாகவோ இருக்கிறது. மனித வள மேம்பாட்டு அமைச்சர் கல்விக்கான நிதி ஒதுக்கீடு மிகக் குறைவு என்று சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். இதையெல்லாம் ஒப்புக்கொள்ளும் அமைச்சர் தனியார் துறைதான் இந்தக் குறையை நிவர்த்திசெய்ய வேண்டும் என்கிறார். ஆகவே அரசு-தனியார்-கூட்டு (public-private-partnership) வேண்டுமென்று வலியுறுத்துகிறார்.

அரசு-தனியார்-கூட்டு
இந்த P-P-P (Public-Private-Partner ship) என்பது கடந்த சில ஆண்டுகளாகப் பேசப்பட்டுவருகிறது. இந்தியாவில் இது சிறிதளவேனும் சாத்தியமா என்ற சிந்தனையே இல்லாமல் பேசப்படுகிறது. நாட்டின் மொத்தத் தொடக்கப் பள்ளிகளில் 89.1 சதவிகிதம் அரசால் (அரசு, உள்ளாட்சி) நடத்தப்படுபவை. 10 சதவிகிதம்தான் தனியார் நடத்துபவை. 90 சதவிகிதம் மாணவர் அரசுப் பள்ளிகளில்தான் படிக்கின்றனர். பீஹார் போன்ற மாநிலங்களில் ஆறு சதவிகிதம்தான் தனியார் பள்ளிகளில் உள்ளனர். இதற்குக் காரணம் என்ன? தனியார் பள்ளிகள் நடத்துவதற்கு எந்தத் தடங்கலுமற்ற, அனைத்துச் சலுகைகளும் அவற்றிற்கு அள்ளித் தரப்படுகின்ற சூழலிலும் ஏன் இத்தனை குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகள்தாம் தனியார் பள்ளிகளில் உள்ளனர்? காரணம் கட்டணம் செலுத்திக் கல்வி பெறும் வசதி 90 சதவிகிதக் குடும்பங்களுக்கு இல்லை. இந்திய நாட்டின் கொடிய வறுமைதான் இதற்குக் காரணம். நம் நாட்டில் 77 சதவிகித மக்கள் நாளுக்கு ரூ.20 வருமானத்தில்தான் உயிர் வாழ்கின்றனர் (அர்ஜுன் சென் குப்தா கமிட்டி) என்பதை மறந்துவிடலாகாது. ஆகவே இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் சென்றாலும், தனியார் பெருமளவுக்குப் பள்ளிக் கல்வியை ஏற்று நடத்தக்கூடிய சாத்தியமேயில்லை. ஆகவே றிறிறி என்பது அந்த 10 சதவிகிதக் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த நாட்டின் வாய்ப்புகளை எல்லாம் உரிமையாக்கும் வர்க்க நோக்கம்தான். பள்ளிக் கல்வி ஒரு சமூக நலன், சமூகப் பொறுப்பு. ஆகவே அதை அளிப்பது அரசின் கடமையாகும். 6-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கல்வி இன்று ஒரு அடிப்படை உரிமை. ஆகவே, அதை உடனே உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமை. அதைத் தனியார் துறையின் கருணைக்கு விடுதல் எந்த வகையிலும் ஏற்கக்கூடியது அல்ல.

அருகமைப் பள்ளிகள் (Neighbourhood Schools)
இந்தியாவில் அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய ஆரம்பக் கல்வியை உத்திரவாதம் செய்வதற்கு ஒரே வழி அருகமைப் பள்ளிகள் மூலம் இயங்கும் பொதுப்பள்ளிகள் தான் என்று கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேல் அனைத்துக் கல்விக் கமிஷன்களாலும், கரிசனைகொண்ட கல்வியாளர்களாலும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இதை நாடாளுமன்றமும் ஏற்று, கல்விக் கொள்கைகளின் ஒரு அம்சமாக மூன்று முறை நிறைவேற்றியிருக்கிறது. உலகின் அனைத்து வளர்ந்த நாடுகளிலும், பல முன்னணி வளரும் நாடுகளிலும் அருகமைப் பள்ளிகளில்தான் அனைத்துக் குழந்தைகளும் கற்கின்றனர்.

இம்முறையில் ஏழை-பணக்காரரென்ற எந்தப் பாகுபாடுமின்றி, அனைத்து வர்க்கக் குழந்தைகளும் தாங்கள் வசிக்குமிடத்திற்கு அருகில் இருக்கும் பள்ளிகளில்தான் கற்க வேண்டுமென்ற தேசிய விதி நடைமுறைப்படுத்தப்படுகிறது.

நம் நாட்டில் தனிமனித சுதந்திரத்தின் காவலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அருகமைப் பள்ளிகள் தனிமனித சுதந்திரத்தை மறுப்பதால் ஏற்றுக்கொள்ள இயலாதவை என்று வாதிடுகின்றனர். அதாவது பெற்றோர்களுக்குத் தங்கள் குழந்தைகளை எந்தப் பள்ளியில் சேர்க்க வேண்டுமென்ற உரிமை இருக்க வேண்டும் என்று சொல்கின்றனர். ஆனால் நம்மைவிட ஜனநாயகம் ஆழ வேரூன்றியுள்ள, தனிமனித சுதந்திரம் நம்மைவிட அதிகம் மதிக்கப்படும் நாடுகளிலெல்லாம் பல்லாண்டுகளாக, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, அருகமைப் பள்ளிகள் என்ற கொள்கை ஒப்புக்கொள்ளப்பட்டு, கடைப்பிடிக்கப்படுகின்றது. நம் நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கோ ஐரோப்பாவிற்கோ சென்றுள்ள பெற்றோர்கள் அனைவரும் அறிந்த ஒன்று இது. தனிமனித உரிமை, அரசியல் சாசனம் உறுதி செய்யும் சமூகக் கடமையாகிய சமத்துவத்திற்கு எதிராக நிற்க முடியாது. சரி இந்தத் தனிமனித சுதந்திரம் என்ற கருத்தை நாம் ஏற்றுக்கொண்டாலும், வசதியுடைய பெற்றோர்களுக்குத் தங்கள் குழந்தைகளை எந்தப் பள்ளியிலும் சேர்க்கும் உரிமை அளிக்க வேண்டுமென்றால், வசதியற்ற பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளை விரும்பும் பள்ளிகளில் சேர்க்கும் உரிமை அளிக்க முடியுமா? பெரும் கட்டணம் வசூலிக்கும் பள்ளியில் சேர்க்க விரும்பினால், பள்ளிகள் சேர்த்துக்கொள்ளுமா? ஆகவே, பிரச்சினை சுதந்திரம் அல்ல. பெற்றோரின் வசதிதான்.

இச்சட்டம் அருகமைப் பள்ளிகளை நிலைநிறுத்தும் என்ற நம்பிக்கையில் மண்விழுந்துவிட்டது. இச்சட்டத்தில் ‘அருகமைப் பள்ளி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஒரு இடத்தில்தான். நாம் மேலே கண்ட, நான்கு வகைப் பள்ளிகளில் வசதி படைத்த பள்ளிகள் தங்கள் அருகமையிலுள்ள நலிந்த பிரிவுக் குழந்தைகளை 25 சதவிகிதம் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்பது மட்டுமே. இதற்கும் உலகெங்கும் இயங்கும் அருகமைப் பள்ளிகளுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.

காலக்கெடு
இச்சட்டம் சொல்லும் உரிமைகளை நிலைநிறுத்த காலக்கெடு குறிக்கப்படவில்லை. வெவ்வேறு தேவைகள் நிறைவேற்றுவதற்கு வெவ்வேறு காலக்கெடு குறிக்கப்பட்டிருக்கிறது. அவற்றிற்கான திட்டமோ நிதி ஒதுக்கீடோ குறிப்பிடாத நிலையில் அவை நிறைவேற்றப்படுவது சந்தேகத்திற்குரியதே. முக்கியமானது பகுதி ஆறு குறிப்பிடுவது, “இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த, அந்தந்த அரசும் உள்ளாட்சியும் வரையறுக்கப்படும் எல்லைக்குள், பள்ளிகள் இல்லையென்றால், இந்தச் சட்டம் தொடங்கியதிலிருந்து மூன்று ஆண்டுக்குள், பள்ளியை நிறுவ வேண்டும்.” அத்துடன், ஆசிரியர்கள் நிர்ணயிக்கப்பட்ட தகுதியையும் பயிற்சியையும் ஐந்து ஆண்டுகளுக்குள் பெற வேண்டும். சட்டத்தின் மற்றொரு பகுதியில் சொல்லப்பட்டிருப்பது: மாணவர் ஆசிரியர் விகிதம் 40:1 என்று சட்டம் நிர்ணயித்திருப்பது ஆறு மாதங்களுக்குள் நடை முறைப்படுத்த வேண்டும். அப்படியென்றால், ஆறு மாதங்களுக்குள் தேவையான ஆசிரியர், தகுதியற்றவராயினும் நியமிக்கப்படுவரா? இது சாத்தியமா? அப்படியே சாத்தியமென்றாலும், பள்ளிகள் இல்லாவிட்டால், அவர்கள் எங்கு பணியாற்றுவர்? கூடுதலாகக் கட்டப்பட வேண்டிய பள்ளிகள், நியமனம் செய்ய வேண்டிய, பயிற்சி பெற வேண்டிய ஆசிரியர், தேவைப்படும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் இவை எது குறித்தும் சட்டம் எந்தக் கணிப்பும் செய்யவில்லை. அந்தந்த அரசுகளின் முடிவுக்கே விடப்பட்டிருக்கிறது. ஆகவே சட்டத்தின் குறிக்கோளும் அனைவருக்கும் கல்வி என்பதும் சாத்தியமாவது பெரும் கேள்விக்குறியதே.

மொழிக் கொள்கை
கல்வி உரிமைச் சட்டம் மொழிக் கொள்கையையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். அனைத்துக் குழந்தைகளின் கற்கும் திறன், சிந்தனைத் திறன், விமர்சனப் பார்வை, படைப்புத் திறன் ஆகியவற்றைச் சிறப்புடன் வளர்த்தெடுப்பது தாய் மொழி வழிக் கல்விதான் என்பது உலகளவில், விவாதத்திற்கு அப்பாற்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்று. அதை இச் சட்டம் ஏற்று, தெளிவாக்கியிருக்க வேண்டும். ஆனால் சட்டம் இதைச் செய்யத் தவறிவிட்டது. சட்டத்தில் மொழிக் கொள்கை ஏதும் இல்லை. அது கூறுவதெல்லாம், “கல்வி மொழி, கூடியமட்டும் குழந்தையின் தாய் மொழியாக இருத்தல் வேண்டும்.” அப்படியென்றால், “கூடியமட்டும்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்திக்கொண்டு, தனியார் பள்ளிகள் இன்றுபோல் ஆங்கில வழிக் கல்வியைத் தொடர முழுச்சுதந்திரம் அளிக்கப்படுகிறது என்றுதான் பொருள். அத்துடன், ‘தாய் மொழி’ என்பதற்கும் சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை. அது மாநில மொழியைக் குறிக்கிறதா அல்லது மாநிலத்தின் சிறுபான்மையினருக்கோ அல்லது வேறு பீவீணீறீமீநீt பேசுபவருக்கோ அவர்களது மொழி வழியாகவே கற்க ஆரம்ப வகுப்புகளிலாவது உரிமை அளிக்கப்படுமா என்ற விளக்கமும் அளிக்கப்படவில்லை.

கல்வியின் பெருமை
இன்றைய இந்தியக் கல்வியின் மற்றொரு பெரும் குறை கல்வி தன் பெருமையை, மகத்துவத்தை, பொருளை, இன்று இழந்துவிட்டது. உலகமயமாதலும் தாராளமயமாதலும் இந்தச் சிறப்புகளை எல்லாம் கொன்றுவிட்டன. கல்வி என்பதே சந்தைக்காக மாணவரைத் தயாரிப்பது என்று மட்டுமே பொருள் கொள்ளப்படுகிறது. கல்வி வணிகமயமாகிவிட்டது என்று அங்கலாய்க்கும்போது, கல்வி நிலையங்கள் அடிக்கும் கொள்ளையை, வசதிக்கேற்ற கல்வி என்ற அவலத்தைப் பற்றி மட்டுமே என்று பொருள்கொள்ளக் கூடாது. கல்வியின் பணியே சந்தைக்காக மாணவர்களைத் தயாரிப்பது என்பது மிகப் பெரும் சீரழிவு. இன்று ஆன்மாவையே தொலைத்துவிட்டோம். கல்வியின் சித்தாந்தமும் சமுதாயப் பணியும் தொலைக்கப்பட்டதன் காரணமாக, கல்விக்குத் தேச நிர்மாணத்தில், சமூக மூலதனத்தைப் (social capital) படைப்பதில், சமூக மனிதனை உருவாக்குவதில் உள்ள பொறுப்பு மறைந்துவிட்டது. வளர்ந்த நாடுகளில் கல்வியின் இத்தகைய குறிக்கோள்கள் பல நூற்றாண்டுகளாக ஏற்று, மதிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு கல்வியின் பொருளும் குறிக்கோளும் சொல்லொணாத் திரிபுகளுக்கு உள்ளாகியிருப்பதை மாற்ற இந்தக் கல்வி உரிமைச் சட்டம் ஏதும் செய்யவில்லை.

உரிமை பாதுகாக்கும், கண்காணிக்கும், குறை தீர்க்கும் அமைப்பு
இறுதியாக, இச்சட்டம் அளிப்பது ஒரு அடிப்படை உரிமை. அப்படியென்றால், சட்டம் மீறப்படும்போது, பாதிக்கப்பட்டோர் நீதிமன்றம் சென்று, மறுக்கப்பட்ட உரிமையைப் பெறுவதற்கான வழிமுறைகள், மற்ற அடிப்படை உரிமைகளைப் போலவே, இதற்கும் வகுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தத் தேவையைப் பொறுத்தவரை இச்சட்டம் ஒரு கேலிக்கூத்து என்றுதான் சொல்ல வேண்டும். 1) சட்டம் மீறப்பட்டால், வழக்குத் தொடருமுன் அரசு நிர்ணயித்திருக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரியின் அனுமதி பெற வேண்டும். பெரும்பாலும் குற்றவாளி அரசோ கல்வி நிர்வாகமோவாகத் தான் இருக்கும். இவர்களை எதிர்த்து வழக்குத் தொடரும் அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்க இயலுமா? இத்தகைய கட்டாயம் மற்ற அடிப்படை உரிமைகளுக்கு விதிக்கப்படாதபோது, கல்வி உரிமைக்கு மட்டும் ஏன்? 2) அனுமதி பெற்றுவிட்டால், அடுத்த கட்டமாக வழக்குத் தொடுக்க வேண்டியது நீதிமன்றத்திலல்ல. மத்திய / மாநில குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையங்கள்தாம் (National Commission for Protection of Child Rights) இச்சட்டத்திற்கான நீதிமன்றங்கள். இவை ஏற்கெனவே அவற்றிற்கு விதிக்கப்பட்ட கடமைகளுடன் இச் சட்டத்தின் கீழ் எழும் வழக்குகளையும் விசாரிக்கும். மத்திய ஆணையம் நிறுவப்பட்டு, நான்கு ஆண்டுகள் சென்ற பின்னும், மூன்றே உறுப்பினர்களுடன், மிகக் குறைந்த நிர்வாக-நிதி வசதிகளுடன் இயங்கிவருகிறது. மாநிலங்களைப் பொறுத்தவரை ஓரிரண்டுதான் மாநில ஆணையங்களை இதுவரை நிறுவியுள்ளன. கல்வியின் இன்றைய அவலநிலையின் பின்னணியில் அனுமானித்தால், சட்டம் அமலுக்கு வந்தவுடனேயே ஆயிரக் கணக்கான வழக்குகள் எழும் என்று எவரும் எதிர்பார்க்கலாம். அந்த வழக்குகளின் கதி என்னவாகும்? வழக்குகள் தீர்க்கப்படாவிட்டால், உரிமை இருந்து என்ன பயன்?
கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 குறித்து மேற்கூறிய விமர்சனங்களை முன்னிறுத்திப் பார்த்தால், இது இன்றைய உரிமை மறுப்புக்கு முடிவுகட்டும் சட்டமல்ல. உண்மை என்னவென்றால், பல காலமாக மோசமான புறக்கணிப்புக்கும் கொடிய ஏற்றத்தாழ்வுகளுக்கும் இலக்காகியிருக்கும் கல்வியில் முழுமையான மாற்றம் ஏற்பட்டாலொழிய கல்வி உரிமை வெறும் கனவுதான்.
நன்றி: http://www.kalachuvadu.com/

No comments:

Post a Comment