Wednesday 5 February 2014

கல்வி புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறோம்: நூறு சதவீத கல்வி அறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் திகழும் சட்டசபையில் ஜெயலலிதா பெருமிதம்

பதிவு செய்த நாள் : Feb 04 | 03:15 am


சென்னை,

தமிழகம் 100 சதவீத கல்வி அறிவு பெற்ற மாநிலமாக திகழும் என்று சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உரையாற்றினார்.

நல்லதும் கெட்டதும்

தமிழ்நாடு சட்டசபையில் கடந்த ஜனவரி 30–ந் தேதி கவர்னர் ரோசய்யா உரையாற்றினார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது கடந்த 3 நாட்களாக சட்டசபையில் விவாதம் நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் புரிந்த விவாதத்துக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்த அவையில் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு இருந்தும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளாமல், அரசின் மீது குற்றங்களை மட்டுமே சுமத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவைக்கு வெளியே மனம் போன போக்கில் சிலர் பேசியிருக்கிறார்கள். பொத்தாம் பொதுவாக பொறுப்பற்ற முறையில் பேசி இருக்கிறார்கள். மக்களுக்காக தீட்டப்பட்ட திட்டங்கள் மக்களை சென்றடைகின்றன.

அந்த திட்டங்களிலும், மக்களை சென்றடைவதிலும் ஒரு சில குறைகள் இருக்கலாம். அவற்றைச் சுட்டிக்காட்டினால், அவற்றை சரிசெய்ய நாங்கள் தயங்க மாட்டோம். ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது. எந்த திட்டத்திலும் நல்லதையும் காணலாம், கெட்டதையும் காணலாம். அவரவர்களுடைய மனதை பொறுத்து நல்லதும் கெட்டதும் தெரியும்.

மக்கள் எங்கள் பக்கம்

நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்து இந்த அரசின் மீது குற்றங்களை சில உறுப்பினர்கள் சுமத்தி இருக்கிறார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புழுதிவாரி இறைக்கின்றவர்கள் பக்கம் மக்கள் இல்லை. அவர்களும் மக்கள் பக்கம் இல்லை. அண்ணா சொன்னதுபோல, அவர்களது வீழ்ச்சி, அழிவுக்கு, அவர்களது கட்சிக்காரர்களோ, குடும்ப உறுப்பினர்களோ காரணமாக இருப்பார்கள்.

எங்களை பொறுத்தவரையில், எவ்வித தடுமாற்றமும் இல்லாமல் இருக்கிறோம். ஏனெனில், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துகின்ற எங்கள் பக்கம் மக்கள் இருக்கிறார்கள். மக்களின் பக்கம் நாங்கள் இருக்கிறோம்.

மன அழுத்தம்

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள், எங்கும் அலையாமல், வேலைவாய்ப்பு பதிவை பள்ளிகளிலேயே செய்வதை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ் ஆகியவற்றையும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடமிருந்து பள்ளி தலைமை ஆசிரியர் பெற்று மாணவ, மாணவியருக்கு வழங்கும் முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மன அழுத்தமின்றி, தேர்வு பயமின்றி மகிழ்ச்சியுடன் கல்வி கற்க ஏதுவாக, முப்பருவ முறை திட்டம் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் கடுமையான புத்தகச் சுமை குறைக்கப்பட்டு உள்ளது. மாணவர்களது படைப்புச் சிந்தனை மற்றும் திறன்களை வளர்க்கும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, நகரும் ஆலோசனை மையங்கள் மூலம், 46 ஆயிரத்து 794 குழந்தைகள் பயனடைந்துள்ளனர். மாணவர்களது திறமைகளை அதிகரிக்க அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு சதுரங்க விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டு, இதற்கான போட்டிகளில் 11 லட்சத்து, 25 ஆயிரத்து 628 மாணவ மாணவியர் பங்கு பெற்றுள்ளனர்.

அதிக கட்டணம்

குழந்தைகள் ஆங்கில மொழியை கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தனியார் பள்ளிகளில் பெற்றோர் சேர்க்கின்றனர். அவர்களின் நிதிச் சுமையினை குறைக்கும் வகையில் சில அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டு ஆங்கில வழிப்பிரிவு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு 6 ஆயிரத்து 594 பள்ளிகளில் ஒன்றாம் மற்றும் 6–ம் வகுப்புகளில் ஆங்கில வழிப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இது தவிர ஆங்கில பேச்சாற்றல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

தனியார் பள்ளிகள் எல்லாம் ஆங்கில மொழி வழியில் வகுப்புகளை நடத்தி அதிக கட்டணம் வசூலிக்கின்றன. எனவேதான், கட்டணம் ஏதும் செலுத்தாமல் ஏழை, எளிய மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காகத்தான், 6 ஆயிரத்து 594 அரசு பள்ளிகளில், ஒரு பிரிவில் ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

54 புதிய பள்ளிகள்

கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில் 68 ஆயிரத்து 481 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நான் உத்தரவிட்டுள்ளேன். இதுநாள் வரை 51 ஆயிரத்து 757 ஆசிரியர்கள், இடஒதுக்கீட்டு முறையில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். ஒரே நாளில் 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி சாதனை புரிந்த அரசு எனது தலைமையிலான அரசு. ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் இதுவரை, 19 ஆயிரத்து 673 பணியிடங்களுக்கு என்னால் ஒப்புதல் அளிக்கப்பட்டு 10 ஆயிரத்து 220 பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.

பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்காக ரூ.366 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. 300–க்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள இடத்தில் ஒரு கிலோ மீட்டர் சுற்றுவட்டத்தில் தொடக்க பள்ளிகள் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 54 புதிய தொடக்க பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தேர்ச்சி விகிதம் உயர்வு

எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து, ஆயிரத்து 125 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அரசுத்தேர்வில் தோல்வியுறும் மாணவ, மாணவிகள் அதே ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் உடனடி தேர்வு எழுதுவது உட்பட பல்வேறு புதுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. தற்போது பத்தாம் வகுப்பு பயின்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 2010–11–ம் ஆண்டு 8 லட்சத்து 38 ஆயிரத்து 165 என்று இருந்த பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, 2013–14–ம் ஆண்டு 11 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பை பொறுத்த வரையில், 2010–11–ம் ஆண்டு 7 லட்சத்து 16 ஆயிரத்து 543 என்று இருந்த எண்ணிக்கை, 2013–14–ம் ஆண்டில் 8 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 2011–ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 85.3 சதவீதம் என்றிருந்த தேர்ச்சி விகிதம், 2013–ம் ஆண்டு 89 சதவீதமாக உயர்ந்தது. 2011–ம் ஆண்டு நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 85.9 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம், 2013–ம் ஆண்டு 88.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கல்விப்புரட்சி

திருச்சி, தேனி, தர்மபுரி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள், 11 பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள், 24 பல்கலைக்கழக உறுப்புக்கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டப்பள்ளி ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன. கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிக்கென 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன. மொத்தத்தில் ஒரு கல்விப் புரட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி இருக்கிறோம். விரைவில் 100 சதவீதம் கல்வி அறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் திகழும் என்பதை மிகுந்த பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆங்கில ஆர்வம்

குழந்தைகள் ஆங்கில மொழியை கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தனியார் பள்ளிகளில் பெற்றோர் சேர்க்கின்றனர். அவர்களின் நிதிச் சுமையினை குறைக்கும் வகையில் சில அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டு ஆங்கில வழிப் பிரிவு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு 6 ஆயிரத்து 594 பள்ளிகளில் ஒன்றாம் மற்றும் 6–ம் வகுப்புகளில் ஆங்கில வழி பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இது தவிர ஆங்கில பேச்சாற்றல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

இதில் குறை கூறுவோர், தங்கள் பிள்ளைகளை தமிழ் மொழி வழிக்கல்வியில் படிக்க வைத்தார்களா? தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தனது பிள்ளைகளை தமிழ் மொழி வழிக்கல்வியில் படிக்க வைத்தாரா? இல்லையே. அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் வைத்திருக்கும் பள்ளிகளிலாவது தமிழ் மொழி வழிக்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. பள்ளிகளின் பெயர்கள் கூட ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன.

துர்காவதி கல்வி அறக்கட்டளை என்ற அமைப்பு, சென்னை மேத்தா நகர், ராஜேஸ்வரி தெருவில் சன்ஷைன் அகாடமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி என்ற பள்ளியை இயக்கி வருகிறது. இந்த பள்ளியின் இயக்குனர், மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை சபரீசன். மு.க.ஸ்டாலினின் மருமகள் கிருத்திகா உதயநிதியும் இந்த அறக்கட்டளையில் உறுப்பினராக இருக்கிறார். இங்கு தமிழ்வழிக்கல்வி போதிக்கப்படுகிறதா?

அதிக கல்வி கட்டணம்

சென்னை, வேளச்சேரி, டாக்டர் சீத்தாபதி நகர், ராணி தெருவில், சன்ஷைன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியும், மடிப்பாக்கத்தில் சன்ஷைன் சென்னை சீனியர் செகண்டரி ஸ்கூல்–ம் இயங்கி வருகின்றன. இந்த இரண்டு பள்ளிகளுக்கும் இயக்குனராக இருப்பவர் செந்தாமரை சபரீசன். இங்கு ஆங்கில வழிக் கல்வியோடு இந்தியும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. மழலையர் வகுப்பிற்கான ஆண்டு கட்டணம் ஒன்பதாயிரம் ரூபாய். 11 மற்றும் 12–ம் வகுப்புகளுக்கான கட்டணம் 15 ஆயிரத்து 400 ரூபாய்.

தனியார் பள்ளிகள் எல்லாம் இதேபோன்று ஆங்கில மொழி வழியில் வகுப்புகளை நடத்தி அதிக கட்டணம் வசூலிக்கின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

thanks: daily thanthi

No comments:

Post a Comment