Saturday 28 March 2015

66(ஏ): தீர்ப்பின் முக்கியத்துவம் என்ன?

ஓவியம்: கேசவ்

ஆக்சிஜன் போன்ற அடிப்படை உரிமைகளை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 (ஏ) பிரிவு இந்திய அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் மார்ச் 24-ல் தீர்ப்பளித்து வரலாறு படைத்துள்ளது. இந்த சட்டப் பிரிவு அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று மட்டும் இந்தத் தீர்ப்பின் மூலம் அது கூறிவிடவில்லை; ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையை அது தூக்கிப் பிடித்திருக்கிறது. சுதந்திரமாகப் பேசவும், எல்லா விதமான கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளவும், அரசை அல்லது ஆளும் கட்சியை விமர்சிக்கவும், குறிப்பிட்ட விவகாரத்தில் தங்களுடைய மனதில் இருப்பதை மக்கள் வெளிப்படையாகப் பேசவும், அரசின் கருத்து தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று எதிர்ப்பைத் தெரிவிக்கவும், அரசுக்கு எதிராகவும் அதன் கொள்கைகளுக்கு எதிராகவும் துணிச்சலாகவும் சுதந்திரமாகவும் கருத்துகளைத் தெரிவிக்கவும் மக்களுக்கு உரிமை உண்டு என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிவிக்கப்பட்டிருக் கிறது. ஜனநாயகத்துக்கு ஆக்சிஜன் போன்ற அடிப்படை உரிமைகளை உச்ச நீதிமன்றம் உறுதிப் படுத்தியிருக்கிறது.

ஸ்ரேயா சிங்கால் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?
ஜனநாயகம் வெற்றிகரமாக அமைய குடிமக்கள் விவரம் அறிந்தவர்களாக இருக்க வேண்டும்; அரசின் கொள்கைகள், திட்டங்கள், சட்டங்கள், வழிமுறைகள் போன்றவற்றைக் கேள்வி கேட்க, கண்டிக்க, தாங்கள் ஏற்கவில்லை என்பதைத் தெரிவிக்க, ஆதரிக்க அல்லது விமர்சிக்க மக்களுக்கு சமூக, அரசியல் தளங்கள் அவசியம். ஜனநாயகம் உயிர்த்துடிப்புடன் இருக்க வேண்டும் என்றால், அனைத்துவிதமான கருத்துகளும் மக்கள்முன் வைக்கப்பட வேண்டும். அவற்றிலிருந்து மக்கள் தாங்களாகவே ஒரு கருத்தை உருவாக்கிக்கொள்ளவும் அதை வெளிப்படுத்தவும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும், ஆட்சியில் இருக்கும் அரசுகள் அல்லது அரசியல் அமைப்புகளின் கருத்துகளை எதிர்க்கவும், விமர்சிக்கவும் வாய்ப்புகள் தரப்பட வேண்டும்.

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66(ஏ) பிரிவு மிகவும் ஆபத்தானது, ஏனென்றால் இணையதளம் மூலம், குறிப்பாக மின்னஞ்சல் மூலம் அனுப்பும் தகவல்கள்கூட யாருக்காவது எரிச்சலூட்டினால், அசௌகரியத்தை ஏற்படுத்தினால், ஆபத்து என்று கருதப்பட்டால், தடையாக விளங்கினால், வசவாகக் கருதப்பட்டால், காயத்தை ஏற்படுத்தினால், அச்சமூட்டும் விதத்தில் அச்சுறுத்தினால், விரோதத்தை ஏற்படுத்தினால், கசப்புணர்வை உண்டாக்கினால் அது குற்றமாகக் கருதப்படும். இதன் விளைவாக அந்தத் தகவலை அல்லது கடிதத்தை அனுப்பியவர் மட்டுமல்ல, தெரிந்தோ தெரியாமலோ அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டவர்களும் கைது செய்யப்படுவார்கள்.

இந்த சட்டப் பிரிவைப் பயன்படுத்தி வெவ்வேறு மாநிலங்களில் பலர் கைதுசெய்யப்பட்டனர். சிவசேனைத் தலைவர் பால் தாக்கரேவின் இறுதிச் சடங்கின்போது ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த இரண்டு இளம் பெண்கள், நாடாளுமன்றத்தை அரசியல்வாதிகள் விரும்பாத வகையில் கேலிச்சித்திரமாக வரைந்த கேலிச் சித்திரக்காரர், ஆளும் கட்சியைச் சேர்ந்தவரும் மாநில அமைச்சருமான ஒரு தலைவரைப் பற்றிக் கருத்து தெரிவித்த உத்தரப் பிரதேச மாநில பள்ளி மாணவர் போன்றோர் கைதுசெய்யப்பட்டனர்.

எட்டு சூழ்நிலைகள்

அமெரிக்க உச்ச நீதிமன்ற வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளை மேற்கோள் காட்டிய நீதிபதிகள் சலமேஸ்வர், ரோஹின்டன் நாரிமன் அடங்கிய அமர்வு, எட்டு சூழ்நிலைகளில் மட்டுமே பேச்சுரிமைக்கும் கருத்துரிமைக்கும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்றது. பரிமாறிக்கொள்ளப்படும் ஒரு தகவல் நாட்டின் பாதுகாப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தினால், வெளிநாட்டுடனான உறவைக் குலைப்பதாக இருந்தால், பொது அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தினால், கண்ணியம் அல்லது தார்மிக நெறிகளைச் சிதைத்தால், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குபற்றி விமர்சிப்பதால் நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் நேரும் என்றால், அவதூறு செய்தால், குற்றச் செயலில் ஈடுபடுமாறு தூண்டினால் மட்டுமே கருத்துரிமை, பேச்சுரிமையைக் கட்டுப்படுத்தலாம் என்று அமர்வு விவரித்துள்ளது.

எனவே, பரிமாறிக்கொள்ளப்படும் தகவல் இந்த எட்டுச் சூழ்நிலைகளில் அடங்கவில்லை என்றால், அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது என்று தெளிவாகத் தெரிவித்தது. அரசியல் சட்டத்தின் 19(1)(ஏ) பிரிவு அளிக்கும் பேச்சுரிமை, கருத்துரிமைகளை மீறுகிறது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66(ஏ) பிரிவு என்பதை இந்தத் தீர்ப்பு தெளிவாக்கிவிட்டது. அத்துடன், அந்தப் பிரிவு தெளிவில்லாமல், அவரவர் நோக்கில் பொருள்கொள்ளும்படி இருக்கிறது என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது. ஒரு சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும் தகவல், மற்றவர்களால் விரும்பப்படலாம். அதே போல ஒருவருக்கு அவமதிப்பாக இருக்கும் தகவல் மற்றவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம். இப்படித் தெளிவில்லாத வார்த்தைகளைக் கொண்ட வாசகங்களால் அப்பிரிவு இயற்றப்பட்டிருப்பதால் செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்

அமர்வு சார்பில் தீர்ப்பை எழுதிய நீதிபதி நாரிமன், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு பிரிவினர் ஒரே விஷயத்தை வெவ்வேறு கண்ணோட்டங்களில் பார்க்கக்கூடும் என்பதை உதாரணங்களுடன் சுட்டி யிருந்தார். ஆண் - பெண் பாலின வேறுபாடு, சாதி ஒழிப்பு, மதமாற்றம் போன்றவை அதில் சில. இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக யார் ஒரு கருத்தை வெளி யிட்டாலும், அது மற்றொரு பிரிவினருக்கு எரிச்சலையும் அதிருப்தியையும் ஏற்படுத்தும். அந்த நிலையில், மக்களைக் கைது செய்யவும் வழக்கு போடவும் இந்த கொடுங்கோல் சட்டப்பிரிவு இடம்கொடுக்கிறது. அரசியல் சட்டம் உறுதியளிக்கும் கருத்துச் சுதந்திரத்தை அது பாதிக்கிறது.

பொது அமைதியை ஒரு தகவல் பாதிக்கிறது என்று அரசு கருதினால், அது எப்படி பாதிக்கிறது என்பதை அரசு காட்ட வேண்டும் என்றும் தீர்ப்பு வரையறுக்கிறது. அவ்வாறு இல்லாமல் தகவல்களுக்குத் தடை விதிக்கப்பட்டால், பேச்சுச் சுதந்திரத்துக்கும் அதன் மூலம் ஜனநாயகத்துக்கும் அது அச்சுறுத்தலாக மாறிவிடும்.

வெறுப்பின் காலகட்டம்

வரலாற்றில் மிகவும் முக்கியமான கட்டத்தை இந்தியா கடந்துகொண்டிருக்கிறது; வெறுப்பை விதைக்கும் பேச்சுகள், விரோதத்தை வளர்க்கும் குற்றச் செயல்கள், சாதி, மத அடிப்படையிலான மோதல்கள் இன்றைய நடைமுறைகளாக இருக்கின்றன. இந்தச் சூழலில் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரில் சிலரின் நடவடிக்கைகள் கவலைக்குரியவையாக இருக்கின்றன. சாதி, மத உணர்வுகள் தூண்டப்பட்டு மோதல்கள் ஏற்படுத்தப் படுகின்றன. ஒரு சில ஊடகங்களைத் தவிர, பெரும்பாலானவை விருப்புவெறுப்பு இல்லாமல் பிரச்சினைகளை அணுகுவதில்லை.

இத்தகைய நிலையில், மக்கள் சமூக ஊடகங்களைத் தான் உண்மையான தகவல்களுக்கு நம்பியிருக்கின்றனர். சமூக ஊடகங்கள் இப்போது மக்களிடையே மிகவும் பிரபலமாகிவருகின்றன. எனவே, ஆள்வோருக்கும் ஊழல் பேர்வழிகளுக்கும் அரசியல், வர்த்தக நலன்களை மட்டுமே கொண்டு செயல்படுவோருக்கும் அவைகுறித்து அச்சம் நிலவுகிறது. எனவே, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66(ஏ) பிரிவைப் பயன்படுத்தித் தங்களுக்கு வேண்டாதவர்களைக் கைது செய்யவைக்க முடிந்தது. அந்தப் பிரிவே அரசியல் சட்டம் அளிக்கும் உரிமை களுக்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டதால், இனி அவர்களால் அவ்வாறு செயல்பட முடியாது என்பது பெரிதும் நிம்மதியை அளிக்கிறது.

- வி. சுரேஷ், அனைத்திந்திய பொதுச் செயலாளர், மக்கள் சிவில் உரிமைக் கழகம், 66 (ஏ) தொடர்பான வழக்கில் மனு தாக்கல் செய்தவர்களில் இவரும் ஒருவர். தொடர்புக்கு: rightstn@gmail.com
 

Thursday 26 March 2015

நியூட்ரினோ நோக்குக்கூடம் : அச்சங்களும் அறிவியலும்

 

கேள்வி: நியூட்ரினோ என்பது என்ன?
 
ப: அணுவின் அடிப்படைத் துகளான புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் போல ஓர் அடிப்படைத் துகள் நியூட்ரினோ ஆகும். பல கோடி கோடி நியூட்ரினோக்கள் நொடிக்கு நொடி நம்மை சுற்றிப் பாய்ந்து ஊடுருவிச் சென்று கொண்டே உள்ளன. இவை எந்தப் பொருளையும் ஊடுருவிச் செல்லக்கூடியவை. விண்ணிலிருந்தும் காலுக்கு அடியில் பூமியிலிருந்தும் வெளிப்படும் நியூட்ரினோ துகள்கள் கோடி கோடியாக எந்நேரமும் நம்மைச் சுற்றிப் பாய்ந்து கொண்டே உள்ளன. ஆனாலும் இந்தத் துகளை இனம் காண்பது எளிதல்ல. இப்படி ஓர் அடிப்படைத்துகள் இருக்கிறது என்ற யூகம் தர்க்க ரீதியாக 1930களில் வெளிப்படுத்தப்பட்டாலும் தற்காலத்தில்தான் இந்தத் துகள் குறித்து நுணுக்கமாக ஆராய கருவிகள் படைக்க முடிந்துள்ளது. இன்றும்கூட இந்தத் துகள் குறித்த அறிவை விட அறியாமைதான் அதிகம்.

கே: இந்தியாவில் நியூட்ரினோ ஆய்வு என்பது என்ன?
 
ப: ஜப்பான், கனடா, இத்தாலி மற்றும் பூமியின் தென்துருவம் ஆகிய இடங்களில் தற்போது நியூட்ரினோ ஆய்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் நடத்தப்படும் நியூட்ரினோ ஆய்வுக்கு ஐஎன்ஓ (India based Neutrino Observatory-INO) என்று பெயரிடப் பட்டுள்ளது. நியூட்ரினோ துகளைக் குறித்த நுண் ஆய்வுதான் தேனியில் அமையவிருக்கிற இந்திய நியூட்ரினோ நோக்குக்கூடத்தின் பணி. இரும்பின் வழியே ஊடுருவும் நியூட்ரினோக்களை சென்சார் கருவிகள் மூலம் உணர்ந்து, ஆய்வு செய்யப் போகிறர்கள். இந்தப் புதிய முறையிலான ஆய்வுக் கூடம் உலகிலேயே இந்தியாவில்தான் முதன்முதலாக அமைக்கப்படுகிறது.

கே: இதை ஏன் சுரங்கம் அமைத்து ஆராய்ச்சி செய்ய வேண்டும்?
 
ப: நியூட்ரினோவை தனியாக ஆய்வு செய்ய வேண்டுமானால், அதனுடன் வேறு எந்த துகளும் உணர்விக் கருவியில் படக்கூடாது. சூரியன் மற்றும் அண்டவெளியிலிருந்து வரும் நியூட்ரினோக்கள் தனியாக வருவதில்லை. காஸ்மிக் கதிர் போன்ற பல்வேறு துகள்கள் இணைந்து கலந்துதான் வருகின்றன. மலையைக் குடைந்து அதில் நியூட்ரினோவை உணரும் ஆய்வுக் கருவியை வைக்கும் போது, அந்த ஆய்வுக்கருவியில் நியூட்ரினோ மட்டும் வந்து விழும். மற்ற பொருட்களை எல்லாம் மலை வடிகட்டி விடும். காஸ்மிக் கதிர்களின் பாதிப்பு இல்லாமல் நியூட்ரினோ துகள்களை மட்டும் ஆய்வு செய்ய வேண்டுமானால், எல்லா திசைகளிலிருந்தும் குறைந்தது 1,000 மீட்டர் கற்களால் சூழப்பட்ட நிலையில், மலையின் உள்ளே அமைந்த குகைக்குள் மட்டுமே ஆய்வு நடத்த முடியும்.

கே: இதற்கு ஏன் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தேனியைத் தேர்வு செய்தார்கள்? இந்தியாவின் வேறு மலைகளை ஏன் தேர்வு செய்யவில்லை?
 
ப: நியூட்ரினோவை மட்டும் ஆய்வு செய்வதற்கு வேறு துகள்களை வடிகட்ட காலத்தால் மிகப்பழைய மலையாக இருக்க வேண்டும். இமயமலை உயரமானதுதான். ஆனால் கடினமானது அல்ல. பழைய மலைகள்தான் கடினமாக இருக்கும். இமயமலைப் பகுதி பெரும்பாலும் படிமப் பாறைகளால் ஆனது. சிறு சிறு பாறைகளால் ஆன தொகுப்பாக அந்த மலைப் பகுதி உள்ளதால், அங்குள்ள பாறைகளில் உறுதித்தன்மை மிகவும் குறைவு. மற்ற மாநிலங்களிலும் பாறைகளின் தன்மை இந்த ஆய்வுக்கு ஏற்றதாக இல்லை. ஆனால், தேனி மாவட்டத்தின் மேற்கு போடி மலையிலுள்ள பாறைகள் மிகவும் கடினமான சார்னோக்கைட் பாறைகளால் ஆனவை. அதுமட்டுமல்ல காடுகள் அடர்ந்த பகுதி என்றால் மரங்களை வெட்ட வேண்டிவரும். விவசாய நிலம் இருக்கும் பகுதி என்றால் விவசாய நிலத்தை கையகப்படுத்த வேண்டி வரும். அவ்வாறு விவசாய நிலமற்ற, மரங்கள் அடர்ந்து இல்லாத இடமாக தேடித் தேடித் தான் இந்த மலை இறுதிசெய்யப்பட்டது.

நேரடியாக இந்தக் கருவியால் மனிதன், விலங்கு, பறவை எதற்கும் பாதிப்பு இல்லை. விவசாயம் போன்ற பயன்பாட்டில் உள்ள நிலத்தை கையகப்படுத்தக் கூடாது, மரங்கள் செறிவாக உள்ள பகுதிகள் தவிர்க்கப்படவேண்டும் என கவனத்தில் கொள்ளப்பட்டது. எனவே இறுதியில் தேனி மாவட்டத்தில் பயனற்ற தரிசுப் பகுதியாக உள்ள குறிப்பிட்ட மலைப் பகுதிதான் பொருத்தமானது எனத் தேர்வு செய்யப்பட்டது.

கே: கோலார் தங்கச்சுரங்கத்தில் நடந்த ஆய்வு குறித்து?
 
ப: 1970களில் கோலார் தங்கச்சுரங்கத்தில் காஸ்மிக் கதிர்கள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. அங்கு காஸ்மிக் கதிர்களை உணரும் கருவிதான் வைக்கப்பட்டது. காஸ்மிக் கதிர்கள் குறித்த உலக அறிவுத் தொகுப்பில் இந்த ஆய்வுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு. கோலார் தங்கச்சுரங்கம் சிதிலமடைந்து வெள்ளம் புகுந்த பின் அந்த ஆய்வுக் கூடம் மூடப்பட்டது. இன்று காஸ்மிக் கதிர் ஆராய்ச்சி விண்வெளியிலிருந்து செயல்படுகிறது. எனவே சுரங்கம் தேவையில்லை.

கே: நியூட்ரினோ திட்டத்தால் நீர்வளம் குறைந்து விவசாயம் பாதிக்குமா? பாசனப் பற்றாக்குறை ஏற்படுமா?
 
ப: இந்தத் திட்டத்திற்கு நீர் அவசியம்தான். அங்கு ஏற்படுத்தப்போகும் அலுவலர் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு நீர் தேவை. மின்காந்தத்தை குளிர்விக்க நீர் தேவை. ஆனால் இந்தத் திட்டத்திற்கு தேவைப்படும் நீர், முன்னூறு குடும்பங்களுக்கு குடிக்க, குளிக்க, சமைக்கத் தேவையான நீரின் அளவு மட்டுமே. இன்று இருக்கும் விவசாய நீருக்கு இந்தத் திட்டத்தால் எந்த பாதிப்பும் இருக்காது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கே: வெடிபொருள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்ற கருத்து நிலவுகிறதே?
 
ப: இந்த ஆய்வுக் காலம் முழுவதும் வெடிபொருள்கள் பயன்படுத்தப்போவது இல்லை. இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு மலையில் பக்கவாட்டில் சுரங்கப்பாதை அமைக்க மட்டுமே பயன்படுத்தப்படும். கல் குவாரிகளில் செய்வது போல வெடி வைத்து பாறைகளை வெடித்துத் தகர்ப்பது அல்ல. சுரங்கம் அமைப்பதுதான் இலக்கு. எனவே controlled explosions என்கிற முறையில் வெடிப்பு ஒரு சில நொடிகள் மட்டுமே இருக்கும். சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அதிர்வு உணர்வுகூட உணர முடியாது. ஆகவே சுரங்கம் தோண்டுவதால் சூழல் பாதிப்பு எதுவும் இருக்காது.

கே: குகையை உருவாக்க வெடி வைப்பதால் அணைகளுக்கு பாதிப்பு உண்டா?
 
ப: சுரங்கம் தோண்டும்போது தினமும் இரண்டு முறை மட்டுமே வெடிபொருள் வெடிக்கப்படும். இதனால் ஏற்படும் இரைச்சல் மற்றும் அதிர்வுகள் வெளிப்பகுதியில் உணராத வகையில் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தடுக்கப்படும். இந்த அதிர்வுகளால் அணைகளுக்கு பாதிப்பு ஏற்படாது. சென்னையிலும் தில்லியிலும் நிலத்தடி மெட்ரோ ரயிலுக்காக தினமும் சுரங்கம் தோண்டிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

கே: கதிர் வீச்சு ஆபத்து இருக்கிறது என்று சொல்கிறார்களே?
 
ப: இது அறியாமை. உண்மையில் இங்கு எந்த உற்பத்தியும் நடக்கப்போவதில்லை. நியூட்ரினோவை பொறுத்தவரையில் கதிர்வீச்சு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் நியூட்ரினோ என்பது ஒரு அணுத்துகள் அல்ல, அடிப்படைத்துகள். இது எதிர்வினையாற்றாத ஒரு அடிப்படைத்துகள். எனவே இதனால் பாதிப்பு எதுவும் இல்லை. மேலும் இந்த நோக்குக் கூடத்தில் இயல்பாக பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் நியூட்ரினோவைப் பற்றிய ஆய்வுதான் நடக்கப் போகிறது. அந்த ஆய்வால் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. ஆய்வு நடந்தாலும் நடக்காவிட்டாலும் ட்ரில்லியன் ட்ரில்லியன் நியூட்ரினோக்கள் பூமியில் விழுந்து கொண்டுதானே இருக்கின்றன? இன்று நேற்றல்ல, பூமி பிறந்தது முதல் இவ்வாறு நியூட்ரினோ அடைமழை பெய்த வண்ணம்தான் உள்ளது.

கே: சுரங்கம் தோண்டுவதால் வெளியேறும் கழிவுகளை அந்தப்பகுதியில் கொட்டும்போது சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படாதா?
 
ப: சுரங்கத்துக்காக வெட்டியெடுக்கப்படும் பாறைகளில் 90 சதவீதம் முழுப் பாறைகளாகக் கிடைக்கும். அவை அதிக தரமும், மதிப்பும் மிக்க கிரானைட் பாறைகளாகும். அந்த கிரானைட் பாறைகள் முழுவதும் தமிழக அரசுக்குச் சொந்தமானது என்பதால், அவற்றை வெளிச்சந்தையில் அரசு விற்பனை செய்யும். இதனால் அரசுக்கு பெரும் வருவாய் கிடைக்கும். மீதமுள்ள 10 சதவீதம் மட்டுமே தூளாகக் கிடைக்கும். இந்தத் தூளில் 20 சதவிகிதம் கட்டுமானப் பணிகளில் பயனாகும். மீதமுள்ள கழிவு மட்டுமே நான்குபக்க சுவர் எழுப்பி அதற்குள் கொட்டி வைக்கப்படும். எனவே, பாறைகளை உடைப்பதால் தூசு மண்டலம் ஏற்படும் என்பதற்கோ, அண்டைப் பகுதிகள் பாதிக்கப்படவோ வாய்ப்பு இல்லை.


கே: ஏன் இரசியமாக குகைக்குள் ஆய்வு? வெளிப்படையாக நடத்தவேண்டியதுதானே? இந்த கருவியில் எதோ ஆபத்து இருப்பதால் தானே குகைக்குள் வைக்கப்படுகிறது
 
ப: குகை என்றதுமே இது ரகசிய ஆய்வு என்று சிலர் கற்பனை செய்ய துவங்கி விட்டனர். உள்ளபடியே இந்த ஆய்வுத் திட்டம், நியூட்ரினோ என்ற அடிப்படையான துகளின் குணங்கள் குறித்தான ஆராய்ச்சியே தவிர, அணுசக்தி ஆராய்ச்சியோ, கதிரியக்கம், ராணுவம், பாதுகாப்புத் துறை தொடர்பான வேறு எந்த ஆராய்ச்சியோ இல்லை. அணு உலைக் கழிவுகளை சேகரித்து வைக்கும் இடமாக இந்த ஆய்வுக் கூடம் பயன்படுத்தப்படும் என்பதும் வதந்தியே. இந்தத் திட்டத்தால் மக்களுக்கு கதிரியக்க பாதிப்புகள் வரும் என்பதும் வதந்தியே. இயல்பாக, பூமியின் மேற்பரப்பில் துகள்களின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், அந்தச் சூழலில் நியூட்ரினோ துகள்களை ஆராய முடியாது. எனவேதான், ஏனைய துகள்களை வடிகட்டி அவற்றின் தாக்கம் இல்லாத வகையில் மலையைக் குடைந்து ஆய்வுக் கூடம் அமைக்கப்படுகிறது.

கே: இந்தக் கருவி அல்லது ஆய்வுக்கூடம் கதிர்களை வெளிப் படுத்துமா? அந்தபகுதியில் வெப்பத்தைக் கூட்டுமா?
 
ப: Neutrino detector – அதாவது ‘நியூட்ரினோ உணர் கருவி’ என்பதுதான் இதன் பெயர். மழையை அளக்கும் மழைமானி வைப்பதால் மழை வந்து விடாது, வெப்ப மானி இருப்பதால் வெப்பம் ஏற்பட்டு விடாது அல்லவா? இந்தக் கருவி வெப்ப மானி, மழை மானி போல ஒரு உணர்வி கருவிதான். இதனால் எந்தவிதமான கதிர்வீச்சும் ஏற்படாது. புகை, கழிவு நீர் போன்ற சூழல் ஆபத்தும் இல்லை. வெப்பமும் ஏற்படாது. இரண்டு கிலோமீட்டர் உள்ளே சுரங்கத்தில் வைக்கப்படும் இந்தக் கருவியால் யாருக்கும் உயிர், பொருள், வாழ்வு, சூழல் ஆபத்து முற்றிலும் கிடையாது.

கே : வறுமை பஞ்சம் பசி, போன்ற பல பிரச்சனைகள் உள்ளபோது இவ்வளவு செலவு செய்து இந்த ஆய்வு தேவைதானா?
 
ப : பசி, பட்டினி, வறுமை, போதிய மருத்துவ வசதியின்மை, கல்வியின்மை எனப் பல பிரச்சினைகளை இந்தியா சந்தித்துக் கொண்டிருக்கிறது. இவையெல்லாம் உள்ளபடியே பிரச்சினைகள்தாம். இந்த சமூக அவலங்களை களைவது நமது கடமைதான். ஆனால், இவை எல்லாவற்றையும் தீர்த்தபிறகுதான் நியூட்ரினோ போன்ற அடிப்படை ஆராய்ச்சி செய்யலாம் என்பதுதான் ஏற்க முடியாத வாதமாக இருக்கிறது. அல்லது நியூட்ரினோ ஆய்வு போன்ற “அத்தியாவசியமற்ற” ஆய்வுகளுக்கு பணம் செலவிடப்படுவதால்தான் வளர்ச்சித் திட்டங்களுக்கு காசு இல்லை என்பதும் உண்மைக்கு புறம்பான கூற்றுகள். கடந்த நிதியாண்டில் மத்திய அரசின் மொத்த செலவு 17,94,892 கோடி ரூபாய்கள். இதில் வெறும் 1,500 கோடி ருபாய் என்பது வெறும் தூசு. எனவே இந்தச் செலவால்தான் சமூக வளர்சிக்கு நிதியில்லாமல் போயிற்று என்பதில்லை. எனவே இந்த திட்டச் செலவை வறுமை-ஏழ்மை-வளர்ச்சியின்மைக்கு
க் காரணமாகக் காட்டுவது அறீவீனம்.

மொத்த பட்ஜெட்டில் பெரும் தொகை இது போன்ற திட்டங்களுக்குச் செல்கிறது என்றால் நாம் கேள்வி கேட்பது சரியாக இருக்கலாம். மொத்தச் செலவில் எல்லா விதமான அறிவியல் ஆய்வுக்கும் – மருத்துவம், பொறியியல், கணிதவியல், அடிப்படை அறிவியல், தொழில்நுட்பம் – சேர்த்து நாம் செலவழிக்கும் தொகை GDPயில் ஒருசதவிகிதம் கூட இல்லை! அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுக்கு இந்தியா செலவிடும் தொகை மிகச் சொற்பமே.

குறிப்பிட்ட குளிர்பானம் மட்டும் ஆண்டுதோறும் ஈட்டும் வருவாய் 2,21,000 கோடி ரூபாய். இந்தியாவில் ஆண்டுதோறும் திரைப்படத் துறையின் வருவாய் 15,000 கோடி. தமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும் டாஸ்மாக் வருவாய் 23,401 கோடி.   சிகெரட் பீடி போன்ற புகையிலைப் பொருள்களின் விற்பனையில் கிடைக்கும் கலால் வரி மட்டும் 10,271 கோடி.   அவ்வளவு ஏன், நமது நாட்டில் வெடிக்கப்படும் தீபாவளி பட்டாசு 3,300 கோடி.


எது வீண் செலவு? அறிவைப் பெருக்குவது செலவா, இல்லை முதலீடா? இந்த நிலையில், ஆய்வுகளுக்குச் செய்வது வீண் செலவு என்பது போலவும், இதனால்தான் வளர்ச்சி ஏற்படவில்லை, ஏழ்மை ஒழியவில்லை என்பது போலவும் வாதம் செய்வது வியப்பாகத்தான் இருக்கிறது. தகவல் தெரியாத சாதாரண மக்கள், ஏழை விவசாயிகள், வீட்டுப் பெண்கள் ஆயிரத்து ஐநூறு கோடி என்றதும் ஆவென வாயைப் பிளந்து ஆச்சரியத்துடன் இவ்வளவு செலவா என கருதுவதில் வியப்பில்லை. ஆனால் இதையே சில அரசியல் அமைப்புகளும் சமூக நிறுவனங்களும் வாதமாக முன்வைக்கும் போது வியக்கத்தான் தோன்றுகிறது.

கே: இத்திட்டத்தால் என்ன லாபம்? என்ன பயன்?
 
ப: இந்த ஆய்வுத் திட்டம் அடிப்படை ஆய்வு. அடிப்படை ஆய்வு வழி உடனடி பொருளாயத லாபம் எதுவும் இராது. ஆயினும் அடிப்படை அறிவியல் ஆய்வு இல்லாமல் பயன்பாட்டு அறிவியல் – தொழில்நுட்பம் சாத்தியம் இல்லை. இன்று அடிப்படை ஆய்வு – நாளை பயன்பாடு என்பதே அறிவியல் வரலாறு.

நேரடி உடனடி லாபம் எதுவும் இத்திட்டத்தால் விளையாது என்றாலும் மறைமுகப் பயன்கள் உண்டு. இத்திட்டத்திற்கு என உலகின் மிகப்பெரிய மின்காந்தம் உருவாக்கப்படும். இதற்கு வேண்டிய தொழில்நுட்பம் மற்றும் பொருட்கள் உட்பட எல்லா கருவிகளும் இந்தியாவில் தயாரிக்க இருக்கிறார்கள். இந்தக் கருவிகளை, பொருட்களை இந்தியக் கம்பெனிகள் உற்பத்தி செய்யும்போது அதன் வழி இந்நிறுவனங்களின் தொழில்திறன் கூடும். இவ்வாறு சில மறைமுகப் பயன்கள் உள்ளன. அதுமட்டுமல்ல. இந்தக் கருவி வேலைசெய்ய பல சென்சர்கள் – தரவு பதியும் கருவிகள், கணினி அமைப்புகள் போன்ற பல மின்னணுவியல் கருவிகள் தேவை. இவை அனைத்தும் இந்தியாவில் செய்யப்படுவதால் இந்தத் துறை மேலும் வளரும். சுமார் 20 ஆண்டுகள் நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்கள் முதலானோர் நோடிப் பயன்பெறுவர். இதன் வழியாக நமது நாட்டில் அறிவியல் தொழில்நுட்ப மனித வள மேம்பாடு காண முடியும்.

கே : இந்தத் திட்டத்தால் வேலை வாய்ப்பு உள்ளதா?
 
ப: இத்திட்டத்தின் விளைவாக வெகுவான வேலைவாய்ப்பு எதுவுமிராது. குறிப்பாக, பகுதி வாழ் மக்களுக்கு வேலைவாய்ப்புத் தரவல்ல திட்டம் அல்ல. துப்புரவுப் பணி, காவல் பணி, ஓட்டுநர் பணி, கட்டுமானப்பணி போன்ற ஒருசில பணிகளில் மட்டுமே வாய்ப்பு உள்ளது. இத்திட்டம் ஆய்வுநோக்கம் கொண்டது, வேலை வாய்ப்பு நோக்கம் கொண்டதல்ல. வேலைவாய்ப்பு இல்லை என்பதற்காக இத்திட்டம் எதிர்க்கப்பட்டால் எல்லாவித ஆய்வுத் திட்டங்களையும் கிடப்பில்தான் போட வேண்டும். எந்த அறிவியல் அடிப்படை ஆய்வையும் செய்ய இயலாது போகும்.

கே: ஆழ்துளைக் கிணறை அதிக ஆழமாகப் போடுவதால் நிலத்தடி நீர்வளத்திற்கு ஆபத்து உண்டா?
ப: இந்தத் திட்டத்தில் ஆழ்துளைக் கிணறு போன்றவை இடுவதாக திட்டமே இல்லை. அப்படி அங்கு ஏதாவது ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டு வந்தால் அதற்கும் இந்தத் திட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

கே: கிராம மக்கள் வெளியேற்றப்படுவார்களா? ஆடு மாடுகள் மேய்ச்சல் செய்ய தடை உண்டா?
 
ப: இந்தத் திட்டத்திற்கான இடத்தேர்வு செய்யும்போதே அடர்த்தியான காடுகளை வெட்டக் கூடாது, விவசாய-கிராம நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என கருதித்தான் இடத்தேர்வு செய்யப்பட்டது. எனவேதான் எந்த விவசாய நிலமும் குடியிருப்பும் அடர்ந்த காடும் இல்லாத பொட்டிபுரம் மலையும் அதில் உள்ள 66 ஏக்கர் புறம்போக்குத் தரிசு நிலமும் தேர்வு செய்யப்பட்டது. எனவே யாரையும் அப்புறப்படுத்த வேண்டியதே இல்லை. இந்த ஆய்வுக் கூடம், வெறும் அளவை மானி கொண்டது, ஆகவே ஆபத்து அற்றது. எனவே யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள்.

கே: நியூட்ரினோ ஆய்வுகள் உலகின் பல பகுதிகளில் தோல்வியில் முடிந்து மூடப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் துவங்கப்படுவது ஏன்?
ப: இது மிகவும் தவறான செய்தி. ஆய்வு தோல்வி என எந்த நியூட்ரினோ ஆய்வும் இதுவரை மூடப்படவில்லை. சீனா, தென் கொரியா போன்ற நாடுகளில் புதிதாக மேலும் ஆய்வு மையங்கள் உருவாக இருக்கின்றன.


கே: இத்தாலியில் க்ரான் சாஸ்ஸோ மையத்தில் ரசாயனக் கசிவு ஏற்பட்டு மூடப்பட்டதாகச் சொல்கிறார்களே?

 
ப: க்ரான் சாஸ்ஸோ மையத்தில் ஒருகாலத்தில் இராசயனங்கள் பயன்படுத்தி ஆய்வு செய்யப்பட்டது. ஊழியர் ஒருவரின் தவறால் 50 லிட்டர் ரசாயனம் கொட்டிவிட்டது. ஐரோப்பிய நாடுகளில் சுற்றுச்சூழல் விதிகள் மிகக் கடுமையானவை. உடனே இந்த ஆய்வு நிறுத்தப்பட்டது. இப்போதைய ஆய்வுகளில் இரசாயனங்கள் ஏதும் இல்லை. மின்காந்தம் பயன்படுத்தி ஆய்வு செய்யப்படுகிறது. தவிர, அதே க்ரான் சாஸ்ஸோ மையம் மீண்டும் செயல்பட்டு வருகிறது, கடந்த சில ஆண்டுகளில் நியூட்ரினோ துகள்களை தொடர்ந்து கண்டறிந்திருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.
 
(மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி. த.வி.வெங்கடேஸ்வரன் அவர்கள் எழுதிய “ நியூட்ரினோ நோக்குக்கூடம்: அச்சங்களும் அறிவியலும் என்ற நூலில் இருந்து........ இந்நூல் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.. விலை. ரூ.75/-)

தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 66ஏ ரத்து : அரசியல் சாசனத்துக்கு எதிரானது: உச்சநீதிமன்றம்

புதுதில்லி, மார்ச் 24-
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கருத்துச் சுதந்திரம் தொடர்பான வழக்கில், சட்டப் பிரிவு 66-ஏ என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட வலைத்தளப் பக்கங்களில் வெளியிடப்படும் கருத்துகள், விமர்சனங்கள் அவதூறாக இருந்தால் சம்பந்தப் பட்டவரைக் கைது செய்ய வழி செய்யும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66ஏ முறையானதுதானா என்பது தொடர்பான வழக்கில் அந்தப் பிரிவை ரத்து செய்து நீதிமன்றம் செவ்வாயன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தியாவில் சுதந்திரமாக கருத்துகளைத் தெரிவிக்கவும் வெளியிடவுமான உரிமை அரசியல் சாசனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2000ம் ஆண்டு இயற்றப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66ஏ மற்றும் அதில் 2009-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, சுதந்திரமாக கருத்துகள் வெளியிடத் தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித் துள்ள நீதிபதிகள் ஜெ.செல்வேஸ்வர் மற்றும்ரோஹிண்டன் எப்.நாரிமன் ஆகியோர், “சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள், விமர்சனங்கள் அவதூறாக இருந்தால் தொடர்புடையவரை கைதுசெய்ய வழிவகை செய்யும் சட்டப் பிரிவு 66-ஏ , அரசியல் சாசனத்துக்கு எதிரானது.

பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தை நேரடியாகப் பறிப்பதாகவே இது உள்ளது. மேலும் இச்சட்டப்பிரிவில் உள்ள சில வார்த்தைகள் பொதுப்படையாக இருப்பது ஏற்புடையதல்ல. ஒருவருக்கு அவதூறாக தெரியும் விஷயம், மற்றவருக்கு அவதூறாக இல்லாமல் இருக்கலாம். எனவே இச்சட்டப்பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66-ஏ ரத்தாகிறது” என அறிவித்தனர்.கடந்த 2012-ல், சிவசேனா முன்னாள் தலைவர் பால் தாக்கரே மறைவை அடுத்து மும்பையில் அக்கட்சியினர் நடத்திய கடையடைப்புப் போராட்டத்தை விமர்சித்து பேஸ்புக்கில் கருத்து வெளியிட்ட ஷாஹீன் தாதாஎன்ற இளம்பெண்ணும் அதற்கு விருப்பம் வெளியிட்ட அவரது தோழியும் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, ஸ்ரேயா சிங்கால் என்ற சட்ட மாணவி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கிலேயே தற்போது மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.நீதி கிடைத்துவிட்டது‘லைக்’ போட வேண்டிய தீர்ப்பு


எனக்கு நீதி கிடைத்துவிட்டது

கடந்த 2013ல் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர் கபில்சிபல் மற்றும் சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் குறித்து விமர்சனங்கள் மற்றும் கேலிச்சித்திரங்களை சஞ்சய் சௌத்ரி என்பவர் தனது முகநூல் பக்கத்தில் வரைந்ததற்காக கைது செய்யப்பட்டார்.* மனோஜ் ஆஸ்வால் என்பவர் தனது இணைய தளத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் குறித்து ஆட்சேபகரமாக கூற்றுக்களை எழுதியதாக கைது செய்யப்பட்டார்.

மேற்குவங்கத்தில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அம்பிகேஷ் மஹாபத்ரா என்பவர், அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை கேலிச்சித்திரம் வரைந்ததற்காக கைது செய்யப்பட்டார்.* புதுச்சேரியைச் சேர்ந்த ரவி சீனிவாசன் என்ற வணிகர் அன்றைய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனைப் பற்றி விமர்சித்து எழுதியதற்காக கைது செய்யப்பட்டார்.* முகநூலிலும், டுவிட்டரிலும் ஒரு அரசியல்வாதி குறித்து விமர் சித்து எழுதியதற்காக ஏர் இந்தியா ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

 
நாடாளுமன்றம் மற்றும் அரசியல் சட்டத்தின் குறைவான திறனு டைய செயல்பாடுகள் குறித்து கேலிச்சித்திரம் வரைந்ததற்காக அசீம் திரிவேதி என்பவர் கைது செய்யப்பட்டார்.* கடைசியாக இரு கைதுகள்தான் நாட்டை உலுக்கியவை, அதில்முதலாவது, சிவசேனாவின் தலைவர் பால் தாக்கரேயின் மறைவுக்குப் பின்னர் கடையடைப்பு நடத்தப்பட்டதால் அதனால்பாதிக்கப்பட்ட மக்களின் சிரமங்களைப் பார்த்து முகநூலில் விமர்சனங்களை சாஹதீன் தாதா என்ற பெண் பதிவிட்டிருந்தார். இந்த விமர்சனத்திற்கு ரினு சீனிவாசன் என்ற இன்னொருஇளம்பெண் லைக் போட்டிருந்தார். அதனால் அவர்கள் இரு வரும் கைது செய்யப்பட்டனர்.* இரண்டாவது சம்பவம் 16 வயது மாணவர் ஒருவர் சமாஜ்வாதிக்கட்சியின் மூத்த தலைவர் ஆசம்கான் பற்றி தனது முகநூலில்விமர்சனங்கள் எழுதியதற்காக கைது செய்யப்பட்டார்.இப்படி ஏராளமான பேர் கைது செய்யப்பட்டதன் விளைவாக உச்சநீதிமன்றம், கடந்த 2013ல் “யாராவது ஆட்சேபகரமானதகவல்களை இணையதளத்திலோ அல்லது முகநூலிலோ அல்லது டுவிட்டரிலோ பதிவிட்டிருந்தால் அந்த நபரை போலீஸ் ஐ.ஜிஅல்லது துணை போலீஸ் கமிஷனரின் அனுமதியின்றி கைதுசெய்யக்கூடாது” என்று உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் இந்த சட்டப்பிரிவை தவறாகப் பயன்படுத்தி அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு கைதுகள் தொடர்ந்தன.
 
66 ஏ என்ன சொல்கிறது?

ஒரு கணிப்பொறி மூலமாக அல்லது தொடர்பு சாதனத்தின் மூலமாக (1) எந்த தகவலாக இருந்தாலும் அது தாக்குதலாகவோ அல்லது தொந்தரவு தரும் வகையில் இருந்தாலோ (அல்லது) (2) ஒரு தகவல் தொந்தரவு, சங்கடம், இடையூறு, அவமானப்படுத்துதல், காயப்படுத்துதல், குற்றவியல்ரீதியாக அச்சுறுத்தல், வெறுப்பு அல்லது கெட்டபெயரை உருவாக்குதல் போன்ற நோக்கத்தோடு மேற்கொள்ளப் பட்டிருந்தால், (அல்லது) (3) எந்த ஒரு மின்னஞ்சல் செய்தியும் தொந்தரவு அளிக்கும் அல்லது சங்கடத்தை விளைவிக்கும் நோக்கத்தோடு அல்லது அந்த தகவலைப் பெறுபவரை ஏமாற்றும் நோக்கத்தோடு அல்லது குழப்புவது ஆகிய குற்றங்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.



இந்த ‘தகவல்கள்’ கீழ்க்கண்ட வடிவங்களில் இருந்தால்...செய்தியாக, படங்களாக, ஆடியோ ஒலியாக, காணொலியாக, எந்த மின்னணுப் பதிவும் செய்தியும் பரிமாறப்பட்டிருந்தால்.இச்சட்டப்பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் குற்றத்தின் தன்மையைப்பொறுத்த அபராதமும் விதிக்கப்படும். இச்சட்டம் கடந்த 2000ம் ஆண்டு பாஜக ஆட்சியின் போது கொண்டுவரப்பட்டு, 2008ல் பிரிவு 66ஏ என்பதனைக் கொண்டு வருவதற்காக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 2009ல் குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. பிரிட்டிஷ் தகவல் தொழில் நுட்பச்சட்டத்தினை முன்மாதிரியாக கொண்டு இது இயற்றப்பட்டது.

  ‘என் மகளுக்கே பெருமை சேரும்’

மும்பை, மார்ச் 24-
சட்டப் பிரிவு 66-ஏ ரத்தானதற்கான பெருமை தன் மகளையே சேரும் என இச்சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட கார ணமாக இருந்த இளம் பெண் ஷாஹீன் தாதாவின் தந்தை முகமது ஃப்ரூக் தாதா தெரிவித்துள்ளார்.அவர் அளித்துள்ள பேட்டியில், “சட்டப்பிரிவு 66-ஏ ரத்ததானதற்கான பெருமை என் மகளையே சேரும். பேஸ்புக் பகிர்வுக்காக அவர் கைது செய்யப்பட்டபோது அவரை நான் கடிந்துகொள்ளவில்லை. அவர் எந்த தவறும் செய்யவில்லை என எனக்குத் தெரியும். எனவே அவருக்கு நான் எப்போதும் ஆதரவாகவே இருந்தேன். இப்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



இந்த தீர்ப்பை நான் வெகுவாக வரவேற்கிறேன்“ எனக் கூறினார்.பாதிக்கப்பட்ட இளம் பெண்களில் ஒருவரான ரினு சீனிவாசன், “எனக்கு நீதி கிடைத்துவிட்டது. இந்த தீர்ப்பு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தவறுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த மக்களுக்கு கிடைத்த வெற்றி இது. நான் லைக் செய்த பதிவு தவறானதும் அல்ல; யாரையும் புண்படுத்துவதாகவும் இல்லை. இதனை புரிந்துகொண்டு ஆரம்பம் முதலே என் குடும்பத்தினர் எனக்கு துணை நின்றனர்” எனக் கூறியுள்ளார்.

லைக்’ போட வேண்டிய ஒரு சிறப்பான தீர்ப்பு

பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத் தளங்கள் ஜனநாயகத்தின் புதிய பரிணாமமாக விரிந்துள்ளது. குடிமக்கள் குறிப்பாக இளைஞர்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்கின்றனர். இதையொட்டி விரிவான அளவில் விவாதங்களும் நடைபெறுகின்றன. ஆட்சியாளர்களும் ஆளும் வர்க்கத்தினரும் இயன்றவரை கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கவே முயல்கின்றனர். அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் கருத்துக் கள், விமர்சனங்கள் அவதூறாக இருந்தால் சம்பந்தப்பட்டவரை கைது செய்ய வகை செய்யும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ கொண்டுவரப்பட்டது.

இந்தச்சட்டப்பிரிவு அரசியல் சட்டத்திற்கு முரணானது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் செவ்வாயன்று வழங்கி யுள்ளது. இதுதொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66ஏ பொதுமக்களின் கருத்துச்சுதந்திரத்தை நேரடியாகவே பறிப்பதாக உள்ளது என்று மிகச்சரியாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்தச் சட்டப்பிரிவில் உள்ள சில வார்த்தைகள் பொதுப்படையாக இருப்பது ஏற்கத்தக்கதல்ல. ஒருவருக்கு அவதூறாகத் தெரியும் ஒரு விஷயம் மற்றவருக்கு அவதூறாக இல்லாமல் இருக்கலாம்.

எனவே அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்துரிமைக்கு எதிரான இச்சட்டப்பிரிவை ரத்து செய்வதாக அறிவித்துள்ள னர். கருத்துரிமையை உறுதி செய்யும் வகையில்வெளிவந்துள்ள இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. 2012ம் ஆண்டு சிவசேனை முன்னாள் தலைவர் பால்தாக்கரே மறைவைத் தொடர்ந்து சிவசே னைக் கட்சியினர் மும்பை உள்ளிட்ட நகரங் களில் மக்களை மிரட்டி கடையடைப்பு செய்ய வைத்தனர். இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. இதை விமர்சிக்கும் வகையில் ஷாஹீன் தாதா என்ற இளம் பெண் கருத்து தெரிவித்திருந்தார். அவரதுதோழி ஒருவர் இதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார்.

அவர்களைக் கண்டித்து சிவசேனைக் கட்சியினர் வன்முறையில் இறங்கினர். அவர்களை தாஜா செய்ய இளம் பெண்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஸ்ரேயா சிங்கால் என்ற மாணவி உச்சநீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கில் நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர். பிரதமர் மோடி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி போன்றவர்களை சமூக வலைத்தளங்களில் விமர்சித்தவர்களும் மிரட்டப்பட்ட சம்பவங்கள் நடந்தன. இந்தப்பின்னணியில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிக முக்கியமானது.

இந்த சட்டப்பிரிவு துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்புள்ளது என்ற ஒரே காரணத்திற்காக இந்த சட்டப்பிரிவை ரத்து செய்வது முறையல்ல என்ற அரசுத்தரப்பு வாதத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.கருத்துரிமையை பாதுகாக்கும் வகையில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிக முக்கியமானது, வரவேற்கத்தக்கது என்றாலும் சமூக வலைத்தளங்களில் செயல்படுவோர் தங்களுக்குத் தாங்களே ஒரு சுய தணிக்கையை மேற்கொள் வது அவசியமாகும். அன்றாடம் விமர்சிக்க வேண்டிய, கண்டிக்க வேண்டிய எத்தனையோ சமூகவிஷயங்கள் உள்ளன. அதை விடுத்து சாதிய, மதவெறி அடிப்படையிலான கருத்துப்பரிமாற்றங்களுக்கும், மூட நம்பிக்கைகளை பரப்புவதற்கும்சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாமல் இருப்பது அவசியமாகும்.

  

Wednesday 25 March 2015

சமகாலப் பேரவலம்!

தேர்வுகளும் மதிப்பெண்களும் இந்தியக் கல்வித் துறையையும் நம்முடைய பெற்றோர்களையும் எப்படியெல்லாம் ஆட்டு விக்கின்ற ன என்பதை முகத்தில் அடித்துச் சொல்கிறது பிஹார் சம்பவம். மனார் வித்யா நிகேதன் பள்ளியில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பெற்றோர்களும் நண்பர்களும் போட்டி போட்டுக்கொண்டு விடைகளை உள்ளே வீசும் படம் ஏற்படுத்திய அதிர்ச்சியைவிடப் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன, இந்தச் சம்பவத்தை பிஹார் அரசும் சமூகமும் எதிர்கொள்ளும் விதம். 

பிஹார் கல்வி அமைச்சர் பி.கே.ஷாஹியின் வார்த்தைகளில் எவ்வளவு பொறுப்பற்றத்தனம்! “14 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மாநில அரசுக்கு இருக்கும் வசதிக்கு இந்த அளவுக்குத்தான் தேர்வுக்கூடங்களில் காவலையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க முடியும். தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால், தேர்வெழுதும் மாணவர்களின் பெற்றோர்தான் அரசுடன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார் ஷாஹி. இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கும் பாட்னா உயர் நீதிமன்றம், அமைச்சரின் பேச்சை வெட்கக்கேடு என்று சாடியிருக்கிறது. வெட்கக்கேடுதான்! கூடவே, அசிங்கங்கள் எந்த அளவுக்கு நமக்குப் பழகிவிட்டன என்பதையும் ஷாஹியின் வார்த்தைகள் அம்பலப்படுத்துகின்றன. 

தேர்ச்சி ஒன்றே குறிக்கோள்; மதிப்பெண்களே மாணவர்களின் இறுதி இலக்கு எனும் எண்ணம் இந்தியப் பள்ளிகளில் தொடங்கி, எல்லா வீடுகளையும் ஆக்கிரமிக்க ஆரம்பித்து நீண்ட காலம் ஆகிறது. இதற்காக எந்த விலையையும் கொடுக்க எல்லோருமே தயாராக இருக்கின்றனர். இதற்கு எந்த மாநிலமும் விதிவிலக்கு அல்ல என்பதற்கு ஓசூர் சம்பவத்தையே உதாரணமாகச் சொல்லலாம். பிளஸ் டூ தேர்வு வினாத்தாளை ‘வாட்ஸ் அப்’ மூலம் அனுப்பிப் பிடிபட்டிருக்கின்றனர் ஓசூர் தனியார் பள்ளி ஆசிரியர்கள். இதுதொடர்பாக, ஓசூர் மாவட்டக் கல்வி அலுவலர் வேதகண் தன்ராஜ் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் எத்தனை பள்ளிகள் ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான விடைகளை மாணவர்களுக்கு அளிப்பதை ஒரு கலாச்சாரமாகவே வளர்த்தெடுத்திருக்கின்றன என்பது கல்வித் துறையினருக்குத் தெரியும். 

தேர்வு அறைகளில் பெற்றோர்களும் மாணவர்களின் நண்பர்களும் அத்துமீறி உள்ளே நுழைவது, தடுக்கும் ஆசிரியர்களை அடித்து உதைப்பது, காவலுக்கு நிற்கும் போலீஸ்காரர்களே பணம் வாங்கிக் கொண்டு ‘பிட்டு’களை உள்ளே சென்று கொடுப்பது, இன்னும் பல இடங்களில் பள்ளிகளே நேரடியாக விடைகளைத் தருவது, இதையெல்லாம் தடுத்து நிறுத்துவது சவாலான காரியம் என்று அமைச்சர் பேசுவது… இவையெல்லாம் எதன் வெளிப்பாடு என்றால், அரசாங்கத்துக்கு இந்த விஷயங்களெல்லாம் அசிங்கம் என்று துளியும் உறைக்கவில்லை என்பதன் வெளிப்பாடு. அரசாங்கம் தன்னுடைய பொறுப்புகளில் தரமான கல்விக்கு எந்த அளவுக்குக் கவனம் அளிக்கிறது என்பதன் வெளிப்பாடு. பிஹார் சம்பவம் குறித்து நாடு முழுவதும் எழுந்த கடும் கண்டனங்களுக்குப் பின், தேர்வுகளில் பிட் அடித்ததாக 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கைதுசெய்து, ரூ.15 லட்சம் அபராதம் விதித்திருக்கிறது பிஹார் அரசு. இந்த நடவடிக்கைகள் எல்லாம் இத்தனை நாட்கள் ஏன் உறைக்கவில்லை? 

பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரை முழுமையாக இந்த விவகாரத்தில் குற்றவாளியாக்க முடியாது என்றாலும், இந்தக் குற்றக் கலாச்சாரத்தின் பின்னணியில் அவருக்கும் ஒருவிதத்தில் பங்கு இருப்பதை எவரும் மறுக்க முடியாது. ஒரு ஆரோக்கிய சமூகத்துக்கான கட்டுமானம் கல்வியையே அடித்தளமாகக்கொண்டு கட்டமைக்கப்படுகிறது. நல்ல நிர்வாகத்தைப் பற்றிப் பேசுபவர்களுக்குக்கூட கல்வித் துறை வீழ்ச்சி கண்ணிலேயே படாதது சமகாலத்தின் பேரவலம்! 


பொதுத் தேர்வுகளும் முறைகேடுகளும்

பிளஸ் 2 வினாத்தாள் லீக் : தேர்வு பணியிலிருந்து ஓசூர் டிஇஓ விடுவிப்பு : தேர்வுகளை கண்காணிக்க பேராசிரியர் குழு அமைப்பு




கிருஷ்ணகிரி: வாட்ஸ் அப்பில் பிளஸ்-2 கேள்வித்தாள் அனுப்பிய விவகாரத்தால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் நடைபெறும் தேர்வை கண்காணிக்க, அண்ணா பல்கலைகழக பேராசிரியர்களை கொண்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. புகாரில் சிக்கியுள்ள ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தின்னூர் அருகில் பரிமளம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், கடந்த 18ம் தேதி நடந்த கணித தேர்வின் போது, ஓசூர் விஜய் வித்யாலயா பள்ளியின் ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன் கண்காணிப்பாளர்களாக பணியாற்றினர். அவர்கள் கணித தேர்வு தாளை செல்போன் மூலம் படம் பிடித்து, வாட்ஸ் அப்பில் தங்களுடன் பணியாற்றும் உதயகுமார் மற்றும் கார்த்திகேயன் ஆகியோருக்கு அனுப்பியுள்ளனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி கொடுத்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விஜய் வித்யாலயா பள்ளியை சேர்ந்த 4 ஆசிரியர்களையும் கைது செய்தனர்.

சம்பவம் நடந்த பரிமளம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய இடங்களில் உள்ள விஜய் வித்யாலயா பள்ளிகளில் தற்போது வகுப்பறை கண்காணிப்பாளர்களாக பணியாற்றி வந்த அனைத்து ஆசிரியர்களையும், கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். அத்துடன் இந்த பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்கு இரண்டு கண்காணிப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே தனியார் பள்ளி ஆசிரியர்களை, வகுப்பறை கண்காணிப்பாளர்களாக எவ்வாறு நியமித்தனர் என்பது குறித்து ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் வேதகண் தன்ராஜூக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு அவர் அளித்த பதிலில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து போன் வந்ததால் தான், அவர்களை நியமித்ததாக கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை, சட்ட விரோதமாக தேர்வறை கண்காணிப்பாளர்களாக நியமித்ததில், மாவட்ட கல்வி அலுவலகத்தில் பெரும் அளவில் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. எனவே மாவட்ட கல்வி அலுவலக ஊழியர்கள் மீதும் நடவடிக்கை பாயுமென தெரிகிறது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் பிளஸ்-2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வினை கண்காணிக்க, தற்போது நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களை கொண்டு சிறப்பு பறக்கும் படை ஒன்றையும், பள்ளி கல்வித்துறை நியமித்துள்ளது. இவர்கள் இன்று முதல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் தேர்வினை கண்காணிப்பார்கள்.

வாட்ஸ் அப் மூலம் கேள்வித்தாளை அனுப்பிய செல்போன்களை பறிமுதல் செய்துள்ள போலீசார், அவற்றை கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கவுள்ளனர். அதை ஆய்வு செய்து, இதுபோல் வேறு ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.இதனிடையே தேர்வு பணியில் அலட்சியம் காட்டியதாக, நாமக்கல் மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில், பணியாற்றி வந்த, முதன்மை கண்காணிப்பாளர்கள் வேறு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் 4 பேரும் தலைமை ஆசிரியர்கள் ஆவர்.
அதிகளவில் புகார்கள் கிளம்பியுள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் நடைபெறும் பிளஸ்-2 பொதுத்தேர்வினை கண்காணிக்க, சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களை கொண்ட 5 குழுக்களை அமைத்து, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவினர் குறித்து ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. இவர்கள் எந்நேரத்திலும் அதிரடியாக தேர்வு மையங்களில் சோதனை நடத்துவார்கள் என தெரிகிறது.

மேலும் புகாரில் சிக்கியுள்ள ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் வேதகண் தன்ராஜ், தேர்வு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே பள்ளிக்கல்வி தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன், இன்று கிருஷ்ணகிரிக்கு வருகை தர உள்ளார். அங்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், சம்பவம் நடந்த பரிமளம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் இதர தேர்வு மையங்களிலும், அவர் அதிரடி ஆய்வு நடத்த உள்ளார். இதனால் இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இன்று பிளஸ்-2 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட விஜய் வித்யாலயா பள்ளியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. ஆர்ப்பாட்ட அறிவிப்பால் இன்று காலை பள்ளி முன்பு, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

பிளஸ்-2 தேர்வு முறைகேடு: கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு
கிருஷ்ணகிரியில், பிளஸ்-2 தேர்வு முறைகேட்டில் ஆசிரியர்கள் ஈடுபட்டதாக எழுந்த புகாரையடுத்து சம்மந்தப்பட்ட தேர்வு மையங்களில் கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக்கப்பட்டுள்ளது.

கடந்த 18ம் தேதி பிளஸ்-2 மாணவர்களுக்கு கணிதத் தேர்வு நடைபெற்றது. அப்போது, ஓசூரில் உள்ள பள்ளி ஒன்றில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் 4 பேர் அதன் வினாத்தாளை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் மூலம் பரஸ்பரம் பரிமாரிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தெரியவந்ததையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கணித வினாக்களுக்கான விடைகளை தாங்கள் பணிபுரியும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு தெரிவிக்கும் முயற்சியில் அந்த ஆசிரியர்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அந்த தனியார் பள்ளியின் ஆசிரியர்கள் உள்பட 3 பள்ளிகளில் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட 94 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து அந்த தேர்வு மையங்களில் கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கை இருமடங்காக்கப்பட்டுள்ளது. 188 அரசு ஆசிரியர்கள் அந்த தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
நன்றி: புதிய தலைமுறை
தேர்வு மையங்களின் கண்காணிப்பாளர்கள் மாற்றம்: தினமணி நாளிதழ்
வினாத்தாளை எடுத்துச் சென்ற ஆசிரியை: மாலைமலர்


Sunday 22 March 2015

வரும் கல்வியாண்டில் பள்ளிப் பாடத்தில் பகவத் கீதை..........




ஹரியாணா மாநிலத்தில், வரும் கல்வியாண்டில் பள்ளிப் பாடத் திட்டத்தில் பகவத் கீதை அறிமுகப்படுத்தப்படும் என அந்த மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறினார்.

இதுகுறித்து சண்டீகரில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

வரும் கல்வியாண்டு முதல், பள்ளி மாணவர்களுக்கு பகவத் கீதை மந்திரங்கள் கற்பிக்கப்படும்.

தற்போது நடைபெற்று வரும் மாநில பட்ஜெட் கூட்டத்தில், பசுவதை தடை சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும், மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் பணியிட மாற்றத்தில் புதிய கொள்கையை அரசு அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, இடமாற்றம் என்பது ஒழுங்கு நடவடிக்கையாக மட்டும் இல்லாமல், அவர்களின் செயல்பாட்டை பொருத்தும் இருக்கும்.

அதேபோல, ஹரியாணாவை நோக்கி முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் புதிய தொழில் கொள்கை அறிமுகப்படுத்தப்படும். சூரிய ஒளி முலம் 400 மெகாவாட் மின்சார உற்பத்திக்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

விவசாயிகளின் மின்கட்டண நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் இல்லை. மாறாக, உரிய காலத்துக்குள் மின் கட்டணத்தை செலுத்தும் விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம்.

இந்த ஆண்டு இறுதிக்குள் 4,000 கிராமங்களுக்கு இணையதள இணைப்பு வழங்கப்படும் என்று மனோகர் லால் கட்டார் கூறினார். 
 
 

பள்ளிப் பாடத்தில் பகவத் கீதை: விரைவில் ஹரியாணா அரசு அறிமுகம் 

ஹரியாணா மாநிலத்தில் பள்ளிப் பாடத் திட்டத்தில் பகவத் கீதையை அறிமுகம் செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, பிடிஐ செய்தியாளரிடம் மாநில கல்வியமைச்சர் ராம்விலாஸ் சர்மா, வியாழக்கிழமை கூறியதாவது:
பள்ளிப் பாடத் திட்டத்தில் பகவத் கீதையை அறிமுகம் செய்வது குறித்து ஆராய்வதற்காக, பிரபல கல்வியாளர்களைக் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது.
இத்திட்டம், வரும் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்படக்கூடும். பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்ப்பதற்கு, முஸ்லிம் அமைப்பான "தரூல் உலூம்' உள்பட பல்வேறு தரப்பினரும், பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தத் தகவல்களும், ஆலோசனைகளும் கல்வியாளர் குழு முன்பாக வைக்கப்படும். அதன் பிறகு இறுதி முடிவெடுக்கப்படும்.
தில்லியில் கடந்த 6ஆம் தேதி மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஏற்பாடு செய்திருந்த கல்வி அமைச்சர்களுக்கான கருத்தரங்கில், பகவத் கீதையை பாடத்திட்டத்தில் அறிமுகம் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தேன்.
இதுகுறித்து, மத்திய அரசு நிலையிலும் பரிசீலிக்கப்படும் என நம்புகிறேன் என்று ராம்விலாஸ் சர்மா கூறினார்.



பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

புதுடில்லி: மகாராஷ்டிர மாநிலத்தில், பா.ஜ., கட்சியின் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. கிழக்கு மும்பை பகுதியில் உள்ள, பள்ளி மாணவர்களிடையே தார்மீக பலத்தை அதிகரிப்பதற்கு, பள்ளிகளில் பகவத் கீதையை கற்பிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவை எதிர்த்து, டில்லி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு மும்பை நகராட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ’மாணவர்கள் சுயமாக முடிவெடுக்கும் வகையில் அவர்களுடைய திறனை அதிகரிப்பதற்காக, பகவத் கீதையை கற்பிக்க முடிவு செய்யப்பட்டது’ என்று கூறப்பட்டது. 

இந்த வழக்கை நேற்று விசாரித்த, உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்டது.             

Friday 20 March 2015

பள்ளிகளைக் காக்க ஒரு படைப்பு



பரிசு பெறும் அபர்ணா நவீனா, ஸ்ரீபிரீத்தி, சாரதா, கிருஷ்ணவேனி


அபர்ணா ஸ்ரீபிரீத்தி - சாரதா - நவீனா


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இளைஞர் அறிவியல் திருவிழா சென்னை வண்டலூரில் உள்ள பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த வாரம் (மார்ச் 14, 15) நடைபெற்றது. புதியதோர் சமூகம் படைப்போம் என்ற கருப்பொருளுடன் நடத்தப்பட்ட இந்த விழாவில், ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல், குறும்படம், போஸ்டர் வடிவமைப்பு, கார்ட்டூன் என்று 4 தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழகம் முழுவதும் இருந்து 17 வயது முதல் 25 வயது வரையுள்ள இளைஞர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில், மதுரை பாத்திமா கல்லூரி மாணவிகளின் குறும்படம் முதல் பரிசு பெற்றுள்ளது.

அரசுப் பள்ளிகளின் இன்றைய நிலை, பெற்றோரின் ஆங்கில மோகமும், கல்வி தனியார் மயமும், அரசு செய்ய வேண்டியது என்ன போன்றவற்றை உள்ளடக்கியது இந்தக் குறும்படத்தின் மையக்கருத்து. “எது நம்முடைய பள்ளி?” என்பது அதன் தலைப்பு. இந்தக் குறும்படத்தை எடுத்த நான்கு பேர் கொண்ட மாணவிகள் குழுவில் ஒருவர்கூட அரசுப் பள்ளியில் படித்தவரல்ல.

தங்களுக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு விஷயத்தை மாணவிகள் குறும்படமாக்கி வெற்றி பெற்றது எப்படி? தங்களுக்கு உயர் கல்வி பயில வாய்ப்பு கிடைத்தபோதும், நிறையப் பெண் குழந்தைகள் பள்ளிப்படிப்பையே முடிப்பதில்லையே ஏன் என்ற கேள்விக்கு விடை காண முயன்றுள்ளார்கள் அந்த மாணவிகள். அரசுப் பள்ளிகளின் செயல்படாத தன்மையும், அவற்றைக் கபளீகரம் செய்த தனியார் பள்ளிகளும் இதற்கு ஒரு காரணம் என்று புரிந்து கொண்டுள்ளார்கள் அவர்கள்.

அந்த நேரத்தில்தான் போட்டி பற்றிய அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. அதில் வெறுமனே ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தால், தேர்வுக் குழுவைத் தவிர யாரும் படிக்க மாட்டார்கள். ஆனால், குறும்படம் அப்படியல்ல. நன்றாக இருந்தால், அதன் கருத்து போட்டியைத் தாண்டியும் பரவும் என்பது அவர்கள் நம்பிக்கையாக இருந்துள்ளது. எனவே, அரசுப் பள்ளிகளின் நிலையைப் பற்றிக் குறும்படம் எடுக்க முடிவு செய்துள்ளார்கள். இதை எல்லாம் தெரிவித்த மாணவி என்.நவீனா, “நாங்கள் படமெடுக்கத் துணை முதல்வர் பாத்திமா மேரியும், வேர்கள் பாலகிருஷ்ணனும் பெரிதும் உதவியாக இருந்தனர்” என்று நன்றியுடன் கூறினார்.

அரசுப் பள்ளிகள் சிறந்தவையா, தனியார் பள்ளிகள் சிறந்தவையா? என்ற குழப்பம் அவர்களுக்கும் இருந்துள்ளது. அதற்குத் தீர்வு காணும் முயற்சியாக இந்தக் குறும்படத்தைக் கருதியுள்ளார்கள். படமெடுப்பதற்கு முன்னர், ‘ கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’ போன்ற படங்களை இயக்கிய ராம் தொடங்கி, சிவகாமி ஐ.ஏ.எஸ்., ‘நீயா நானா’ இயக்குநர் ஆண்டனி, கவிஞர் ஆதவன் தீட்சன்யா, கவிஞர் யாழன் ஆதி, பத்திரிகையாளர் மாலன், முன்னாள் துணை வேந்தர் வே.வசந்திதேவி, எழுத்தாளர் ஆயிஷா நடராஜன், மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன், கல்வி ஆர்வலர் பிரின்ஸ் கஜேந்திரன் என்று பலரைத் தேடிச் சென்று விவாதித்துள்ளனர். அந்த விவாதத்தின் தொகுப்புதான் இந்தப் படம் என்று குறும்படம் உருவான கதையைச் சொல்கிறார் அபர்ணா பிரீத்தி.

அரசுப் பள்ளிகளில் ஆயிரம் குறைகள் இருக்கின்றன என்பதை அவர்கள் அறியாமல் இல்லை. சமச்சீர் கல்வியிலும்கூடக் குறைபாடுகள் இருப்பதை உணர முடிகிறது என்று சொன்ன சாரதா, “ ஆனால், ஏழை, பணக்காரர், நகரம், கிராமம் கடந்து அனைத்துக் குழந்தைகளும் கல்வி பயில வேண்டும் என்றால் அரசுப் பள்ளிகளும் அவசியம் என்பதைப் புரிந்து கொண்டோம்” என்கிறார் உற்சாகத்துடன். தங்களைப் பொறுத்தவரையில் அந்தப் புரிதலே ஒரு பரிசுதான் என்றும் போட்டியில் கிடைத்த பரிசுகூட இரண்டாம் பட்சம்தான் என்றும் கூறிய அவர், பிரச்சினையை இன்னும் கொஞ்சம் விரிவாக அலசி, இந்த 15 நிமிடக் குறும்படத்தை 30 நிமிட ஆவணப் படமாக்குவதே தங்களது அடுத்த திட்டம் என நம்பிக்கை தொனிக்கப் பேசினார்.  
கே.கே.மகேஷ்
 

கல்வியை விற்கிறதா மத்திய அரசு..?

 
அரசுப் பள்ளிகள் அனைத்தையும் இழுத்து மூடிவிட்டு கல்வியை தனியாரின் பாக்கெட்டில் போடாமல் ஓயாது போலிருக்கிறது மத்திய அரசு. அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைதான் ‘ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயாÕ. அதாவது, ‘தேசிய மாதிரிப் பள்ளிகள்’. இந்தியா முழுவதும் 2500 தேசிய மாதிரிப் பள்ளிகளைத் தொடங்க இருக்கிறது மத்திய அரசு. தமிழகத்தில் மட்டும் 356 பள்ளிகள்.

நல்ல விஷயம்தானே... இதில் என்ன விபரீதம்?

இந்தப் பள்ளிகள் அனைத்தையும் நிர்வகிக்கப் போவது தனியார் நிர்வாகங்கள். ஏற்கனவே கல்வியை கடைச்சரக்காக மாற்றி விட்டவர்களின் கையில் இப்போது மாதிரிப் பள்ளியும். நுழைவுத்தேர்வு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை. 40% இடங்கள் அரசுக்கு; 60% இடத்தை நிர்வாகம் விருப்பம் போல ஒதுக்கிக் கொள்ளலாம். கட்டணம்..? சந்தை நிலவரத்துக்கேற்ப (?) விருப்பம் போல வசூலித்துக் கொள்ளலாம்.

இதில் மாநில அரசின் பங்கு?

பள்ளி தொடங்க இடம் கிடைக்கவில்லை என்றால் வாங்கிக் கொடுக்க வேண்டும். மற்றபடி பள்ளி வளாகத்துக்குள் கூட நுழைய முடியாது. மாநில அரசின் எந்த சட்டமும் இவர்களைக் கட்டுப்படுத்தாது. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின்படி வகுப்புகள் நடக்கும். இதற்கு மத்திய அரசு கணிசமான நிதியுதவிகளை வழங்கும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனியார் நிர்வாகத்திடமே பள்ளி முழுமையாக ஒப்படைக்கப்படும். இதுதான் பிசினஸ் டீல்.

நல்ல கட்டிடங்கள் இல்லாமல், கழிவறை இல்லாமல், ஆசிரியர்கள் இல்லாமல் அரசுப் பள்ளிகள் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில், சிறிதும் குற்ற உணர்வு இல்லாமல் மக்களின் வரிப்பணத்தை தனியாருக்கு அள்ளிக் கொடுக்கிற மத்திய அரசின் செயல்பாட்டை என்னவென்று சொல்வது..?

‘‘முதலில் ‘மாதிரிப் பள்ளி’ என்ற வார்த்தையே தவறானது. எல்லா குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்கவேண்டியது அரசின் கடமை. ஒரு பள்ளி மட்டும் மாதிரிப் பள்ளி என்றால், மற்ற பள்ளிகள் தரமற்றவையா? இது பிள்ளைகளுக்கு மிகப்பெரும் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடும். இது இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14, முன்வைக்கும் சமத்துவ உரிமைக்கு முற்றிலும் எதிரானது. பரவலாக்கப்பட்ட, சமச்சீரான கற்றல் சூழலை உருவாக்குவதற்கான கோரிக்கைகள் எழுந்துவரும் காலகட்டத்தில், கல்வியை வெளிப்படையாகவே விற்பனைப் பொருளாக மாற்றுவது காலச்சக்கரத்தை பின்நோக்கி சுற்றுவதற்கு சமம்.

 
தனியார் நிர்வாகங்களுக்கு லாப நோக்கம்தான் பிரதானம். மாதிரிப் பள்ளிக்கான நடைமுறைகளைப் படிக்கும்போது ரத்தம் கொதிக்கிறது. சொசைட்டி, கம்பெனி சட்டத்தில் பதிவு செய்த எந்த நிறுவனமும் பள்ளி தொடங்கலாம். ஒரு நிறுவனம் 20 பள்ளிகளை நடத்தலாம். 3 ஏக்கர் நிலம் வேண்டும். நிலம் வாங்குவதில் சிக்கல் வந்தால் மாநில அரசு உதவவேண்டும். ரியல் எஸ்டேட் தரகர் செய்யும் பணியை மட்டும்தான் மாநில அரசு செய்ய வேண்டும்.

5 முதல் 7 கோடி ரூபாய் முதலீட்டுக்கான கியாரண்டி தேவை. ஒரு பள்ளியில் அதிகபட்சம் 2450 மாணவர்களைச் சேர்க்கலாம். இதில் 980 (40%) பேர் அரசு மூலம் நிரப்பப்படுவார்கள். 1470 (60%) இடங்களை நிர்வாகம் விருப்பம் போல ஒதுக்கிக் கொள்ளலாம். ‘மார்க்கெட் அடிப்படையிலான கட்டணம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். உருளைக்கிழங்கு, தக்காளியைப் போல அப்போதைக்கு சந்தையில் கல்வி என்ன விலை விற்கிறதோ அந்த விலையை மாணவர்களிடம் ‘சட்டப்படி’ வசூலிக்கலாம். அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை கேந்திரிய வித்யாலயா பள்ளி விதிப்படி (ஆண்டுக்கு ரூ.11 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை) மத்திய அரசு வழங்கும். இதுதவிர, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மாதந்தோறும் 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ‘இப்படி கட்டணம் செலுத்திப் படித்தால்தான் மாணவர்களுக்கு ஒழுங்கும், பொறுப்பும் வரும்’ என்கிறார்கள். என்றால் அரசுப் பள்ளியில் கட்டணம் செலுத்தாமல் படிக்கும் பிள்ளைகள் ஒழுங்கில்லாதவர்களா..?

பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் தொழில்பயிற்சி வகுப்புகள், தனிப்பயிற்சி வகுப்புகள் என பள்ளி வளாகத்தை நிர்வாகத்தின் விருப்பம் போல பயன்படுத்திப் பணம் பார்க்கலாம். இதில் அரசு தலையீடு இருக்காது. இதுபோக, ‘நிர்வாக உதவி நிதி’ என்ற பெயரில் ஒவ்வொரு மாணவனுக்கும் அரசு செலுத்தும் கல்விக்கட்டணத்தில் 25% தொகையை கணக்கிட்டு, கூடுதலாக அரசு வழங்கும். இதை எதற்காகவும் நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால், அரசு ஒதுக்கீட்டிலான 40%த்தில் மட்டுமே இட ஒதுக்கீடு. குழந்தைகள் எண்ணிக்கையில் சரிபாதி இருக்கிற பெண்களுக்கு வெறும் 33%தான். இதைவிட அநீதி உண்டா..? இன்னொரு கொடுமையும் உண்டு. தனியார் நடத்துகிற இந்த ‘மாதிரிப் பள்ளி’ சுற்று வட்டாரத்தில் இருக்கிற அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியர், தலைமையாசிரியர்களுக்கு பாடம் நடத்துவது பற்றியும், பள்ளியை நிர்வகிப்பது பற்றியும் பயிற்சி அளிக்குமாம்.


நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, ‘தமிழைக் கட்டாயப் பாடமாகப் படிக்கவேண்டும்’ என்ற விதி கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த மாதிரிப் பள்ளிகள் மூலம் தமிழைப் படிக்காமலே பட்டம் வாங்கி விடலாம். இந்தியா, பன்முக பண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட நாடு. மாதிரிப் பள்ளிகள் மூலம் ஒற்றைக் கலாச்சாரத்தை திணிக்க முயல்கிறார்கள். இதனால் சமூகம் மேம்படாது. கல்விநிலை உயராது. கற்றல் திறன் அதிகரிக்காது. மாறாக, மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மை, ஏமாற்றம், விரக்தி அதிகமாகும். அதன்மூலம் வன்முறை பெருகும். மத்திய அரசு அப்படியான சூழலைத்தான் உருவாக்குகிறது’’ என்கிறார் ‘பொதுப்பள்ளிக்கான மாநில மேடை’ அமைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

‘‘கல்விக்காக மக்களிடம் 3% வரி (நீமீss) வசூலிக்கிற மத்திய அரசு, நியாயப்படி அந்தந்த மாநிலத்திடம் அந்த நிதியைக் கொடுத்து கல்வியை மேம்படுத்த வலியுறுத்த வேண்டும். அல்லது மாநில அரசோடு இணைந்து அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும். இதைச் செய்யாமல் மக்களின் வரிப் பணத்தை தனியாருக்கு அள்ளித் தருவது அநீதி’’ என்கிறார் கல்வியாளர் முனைவர் முருகையன்.

‘‘மாதிரிப் பள்ளிகளில் மாநில அரசின் எந்த சட்டமும் செல்லுபடியாகாது. தனி அரசாங்கமாக பள்ளிகள் செயல்படும். 5 மாநிலங்களுக்கு ஒரு சி.பி.எஸ்.இ இயக்குனர் இருக்கிறார். அவரால் ஒரு பள்ளியைக் கூட முழுமையாகக் கண்காணிக்க இயலாது. கல்வி என்பது, பொதுப்பட்டியலில் இருக்கிறது. மாநிலத்தை ஒதுக்கிவிட்டு முற்றிலும் தன் கைக்குள் கொண்டுவந்து தனியாருக்கு தாரை வார்க்க முனைகிறது மத்திய அரசு. அதற்கு வசதியாக சட்டங்களும் திருத்தப்படுகின்றன. 2002ல், ‘6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி அடிப்படை உரிமை என்றும், அரசு விரும்பும் வகையில் கல்வியை வழங்கலாம்’ என்றும் திருத்தம் கொண்டு வந்தார்கள். அடுத்து, ‘குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பை உருவாக்குவது, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கடமை’ என்று ஒரு பிரிவு சேர்க்கப்பட்டது. அதை கேடயமாக வைத்துக்கொண்டே அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது’’ என்கிறார் முருகையன்.

தனியார் பள்ளிகளில் பணியாற்றி நீண்ட அனுபவம் கொண்ட கல்வியாளர் டாக்டர் சி.சதீஷிடம் இதுபற்றிப் பேசினோம்.

‘‘கல்வியைப் பொறுத்தவரை தனியார் பங்களிப்பு தவிர்க்க முடியாதது. ஆனால், மாதிரிப் பள்ளிகள் அனைத்து தரப்புக்கும் பயன்பட வேண்டு மானால், நிச்சயமாக மாநில அரசின் பங்களிப்பு வேண்டும். இல்லாவிட்டால் முற்றிலும் வணிகமாகி விடும். இதற்கென்று மாநில அளவில் ஒரு கமிட்டி அமைக்க வேண்டும். அந்த கமிட்டி பள்ளியைக் கண்காணிக்க வேண்டும். விதிமுறைக்கு ஏற்ப கட்டணம் தீர்மானிக்கப்பட வேண்டும். அதேபோல, சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தையும் திணிக்கக்கூடாது. இந்தியாவில் 42 கல்வி வாரியங்களும், 2 தேசியக் கல்வி வாரியங்களும் உண்டு. ஒவ்வொன்றும் தனித்துவமானவை. மாதிரிப் பள்ளிகளில் மாநில பாடத் திட்டமே இருக்க வேண்டும். ஆனால், கணிதமும், அறிவியலும் உலகம் முழுவதும் ஒன்றுதான். இந்தப் பாடங்களுக்கு மட்டும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வரலாம்’’ என்கிறார் சதீஷ்.
மருத்துவம் தனியாரிடம். கல்வி தனியாரிடம். மிச்சமிருப்பது நாடு மட்டும்தான்..!                 
                                                                                  - வெ.நீலகண்டன்

Tuesday 10 March 2015

எப்போது கிடைக்கும் அனைவருக்கும் எழுத்தறிவு?

நாம் 1947-ல் சுதந்திரம் அடைந்தபோது 12 % பேர்தான் கையெழுத்துப் போடத் தெரிந்தவர்கள். மற்றவர்கள் எல்லாம் கைநாட்டுதான்.
‘‘(மனுசன்) சந்திரன் மேல கால வைச்ச காலம்
நீ கைநாட்டு வைக்கிறது அலங்கோலம்.”
இந்தப் பாடலை 1990-களில் நீங்கள் தமிழகத்தின் கிராமங்களில் கேட்டிருக்கலாம். எழுதப் படிக்கத் தெரியாத மனிதர்கள் உருவாக்கிய இலக்கியம் அது. 

இந்நிலை மெல்ல மாறியது. எழுத்தறிவு பெற்ற இந்தியர்கள் 74 % பேர் என 2011- மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிவித்துள்ளது. இது தற்போது உலக அளவில் மனிதர்களிடம் உள்ள எழுத்தறிவின் சராசரியைவிட 10 % குறைவு. இன்றைய உலகில் இந்தியாவில்தான் எழுத்தறிவு பெறாதவர்கள் அதிகம் உள்ளனர். யாரெல்லாம் படிக்காதவர்கள் என்று பார்த்தால், சமூகத்தின் சாதி அடுக்குகளில் மேலிருந்து கீழே போகப் போக எழுத்தறிவு குறைகிறது. ஆண்களைவிடப் பெண்களிடம் எழுத்தறிவு குறைகிறது என மக்கள்தொகைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

எல்லோருக்கும் கல்வி
இந்தியர்கள் எல்லோரையும் படிக்க வைத்துவிட வேண்டும் என்ற விவாதமும் திட்டமும் 1944-ல் எழுந்தன. அதை நிறைவேற்ற ‘சார்ஜெண்ட் திட்டம்’ என்ற ஒன்று உருவானது. அதில் 1984-க்குள் மொத்த இந்தியாவையும் படிக்க வைத்துவிடலாம் என்ற கருத்து இருந்தது. “40 ஆண்டுக் காலம் மிகவும் அதிகம். அதற்குள்ளாகவே எல்லோரை யும் படிக்க வைக்க முடியும்” என சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் ஆங்கிலேய அரசை அப்போது விமர்சித்ததாகத் தகவல்கள் உள்ளன. 

அதற்கு மூன்றாண்டுகள் கழித்துச் சுதந்திரம் கிடைத்து விட்டது. அதன் பிறகு, எத்தனையோ ஆண்டுகளும் கழிந்துவிட்டன. மாற்றம் வராததால் 2010-ல் ‘இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்’ வர வேண்டிய கட்டாயம் வந்தது. 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் தற்போது இந்தியாவில் 23 கோடியே 70 லட்சம் பேர் உள்ளனர். இத்தகைய குழந்தைகள் கட்டாயமாகப் படிக்க வேண்டும். அவர்களுக்கு இலவச ஆரம்ப கல்வியைத் தர வேண்டும் என்கிறது அந்தச் சட்டம். 

2013-க்குள் அனைத்துக் குழந்தைகளும் பள்ளியில் இருக்க வேண்டும் என அதில் இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது. சட்டத்தை நிறைவேற்ற ‘சர்வ சிக்ஷ அபியான்’ (அனைவருக்கும் கல்வி இயக்கம்) எனும் தனித்திட்டமும் உருவாக்கப்பட்டது. 

தேவை ஆசிரியர்
பணியில் உள்ள ஆசிரியர்களின் கல்வித் தகுதியை உயர்த்துவது, பணிக்குத் தேர்வு செய்கிற ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு நடத்துவது, 2015-க்குள் அனைத்துப் பள்ளிகளிலும் தகுதி பெற்ற ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்றெல்லாம் அந்தச் சட்டம் கூறுகிறது. ஆனால், ஆசிரியர் பயிற்சிக்கான படிப்புகள் எல்லாம் 90 % தனியார் நிறுவனங்களில் இருக்கின்றன. 

தகுதியான ஆசிரியரை உருவாக்கும் பணியில் அரசின் நேரடிப் பொறுப்பு இல்லாத நிலையில், உலகத்தரமான கல்வியை எப்படி இந்தியக் குழந்தைகளுக்குத் தர முடியும் என்கிறார்கள் கல்வியை வியாபாரம் ஆக்குவதை எதிர்க்கும் செயல்பாட்டாளர்கள். இந்தியாவின் 8.3 % ஆரம்பப் பள்ளிகளில் ஒரு ஆசிரியர்தான் இருக்கிறார். 2012-ல் 19 லட்சத்து 80 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்கச் சொன்னது சட்டம். ஆனால், 14 லட்சம் ஆசிரியர்கள்தான் நியமிக்கப்பட்டனர். இதுவும் போதாது, இன்னமும் 9 லட்சத்து 40 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்கின்றனர் கல்வியாளர்கள். 

கல்விச் சந்தை
எல்லாக் குழந்தைகளும் பள்ளியில் சேர்வதை உத்தரவாதப்படுத்துவதற்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி வருடந்தோறும் ஒவ்வொரு குடியிருப்புகளிலும் ஆரம்பித்து, பள்ளிகள், வட்டாரம், மாவட்டம், மாநிலம் வழியாக,தேசிய மட்டத்துக்குச் சென்று முடிவாகிச் செயல்பட வேண்டும் என்கிறது சட்டம். ஆனால், இன்னமும் மாவட்ட அளவில் உள்ள விவரங்களை வைத்து அங்கிருந்தே திட்ட ஆலோசனைகள் தொடங்கப்படுகின்றன. 

மொத்தத்தில், எல்லோருக்கும் கல்வி அளிப்பதற்காக அறிவிக்கப்பட்ட சட்டமும் அதற்காகவே உருவாக்கப்பட்ட திட்டமும் தயங்கித் தயங்கித் தேங்கி நிற்கின்றன. இந்த நிலையால், மக்களிடையே தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும் போக்கு அதிகரித்துள்ளது. இந்தப் போக்கை நல்ல வியாபார வாய்ப்பாகக் கருதுகிற நிலையும் வளர்ந்துள்ளது. ‘சி.எல்.எஸ்.ஏ. ஆசியா - பசிபிக் மார்க்கெட்’ எனும் பத்திரிகை 4,000 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ஒரு சந்தையாக இந்தியாவின் கல்விச் சூழலை மதிப்பிட்டுள்ளது. 

ஆறு பந்தில் 50 ரன்கள்
கல்வித் துறையின் பொருளாதாரம் என்று பார்க்கும்போது இயல்பாகவே மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையின் மீது கவனம் திரும்புகிறது. “நாடு முன்னேற வலுவான அரசுப் பள்ளிகளும் கல்விமுறையும் வேண்டும். ஆனால், தனியாரிடம் கல்வியை மெல்ல ஒப்படைக்கிற பணியையே இந்த பட்ஜெட்டும் செய்துள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கங்களுக்கு எதிரானது” என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு. 

“அடிப்படையான கல்வியில் மாற்றம் இல்லாமல் ‘இந்தியாவில் உருவாக்குவோம்’(மேக் இன் இந்தியா) திட்டமோ, ‘தேசியத் திறன் வளர்ச்சி’(ஸ்கில் மிஷன்) இயக்கமோ வெற்றி பெறாது. இந்தியா உலக அளவில் போட்டி போடுவதற்குத் தற்போதைய உடனடித் தேவை திறன்மிக்க உழைப்பு. அதை உருவாக்க நமக்குத் தேவை தரமான கல்வி. ஆறு பந்துகளில் 50 ரன்கள் எடுக்கிற மாதிரியான நெருக்கடியில் நாடு இருக்கிறது” என்கிறார் மனிதவள ஆலோசகரான டாக்டர் டி.கார்த்திகேயன். 

அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்கான நிதி ஒதுக்கீடு, அவற்றின் செயல்திட்டம் உள்ளிட்டவற்றில் போதுமான அளவுக்கு வெளிப்படைத் தன்மை இல்லை. மாவட்ட அளவிலான நிர்வாகத்துக்கு ஆண்டின் கடைசியில்தான் நிதி வந்து சேருகிறது. அதற்கு அரசாங்கங்கள் சரியான காரணங்களைச் சொல்வதில்லை. இப்போது வெளியிடப்பட்டுள்ள பட்ஜெட்டிலும் அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டும் என்பதற்கான முன்முயற்சி போதுமான அளவுக்கு இல்லை. 1966-ல் கோத்தாரி கமிஷன் உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 6%-ஐ கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்றது. ஆனால் 4.2% தான் இன்னமும் ஒதுக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 6% தேவை. தேவையானால் அதற்கு மேலும் ஒதுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்கிறது பட்ஜெட் மற்றும் ஆளுகையின் கடமைப் பொறுப்புணர்ச்சிக்கான மையம் எனும் அமைப்பு. 

அரசாங்கம் அறிவித்துள்ள கட்டாய இலவச ஆரம்பக் கல்வியை ஏன் 6 வயது முதல் தொடங்க வேண்டும் என்ற கேள்வியையும் கல்விசார் தொண்டு அமைப்புகள் எழுப்புகின்றன. 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளின் முன்பருவக் கல்வியையும் அதில் இணைக்க வேண்டும். பக்கத்து நாடான இலங்கையில் இருப்பதுபோல ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை கட்டாய இலவசக் கல்வியை நம்மால் தர முடியாதா என்கின்றன கல்வி உரிமைக்காகப் போராடும் அமைப்புகள். 

தமிழகத்தின் பெருமை
தமிழகத்தில் 80 % பேர் எழுதப் படிக்கக் கற்றுவிட்டனர். பெண்கள், தலித்துகள், பழங்குடிகள் ஆகியோரிடையே படிக்காதவர்களின் சதவீதம் இந்தச் சராசரியைவிடக் குறைவாக இருந்தாலும், இந்த 80 % என்பது இந்தியாவின் சராசரியைவிட அதிகம்தான். இருந்தாலும் இந்தியாவில்தான் உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இருக்கின்றனர். 

இந்தியாவில் எப்போது கிடைக்கும் அனைவருக்கும் எழுத்தறிவு? 

த. நீதிராஜன், தொடர்புக்கு: neethirajan.t@thehindutamil.co.in

தடைகளுக்கு அஞ்சாத முதல் பெண் ஆசிரியை

சாவித்திரிபாய் பூலே நினைவுதினம்: மார்ச் 10
தேசிய அளவிலும், மகாராஷ்டிரத்திலும் சமூக சீர்திருத்த இயக்கத்தைத் தொடங்கியவர்களில் முதன்மையானவர்கள் மகாத்மா ஜோதிராவ் பூலே என்றழைக்கப்பட்ட ஜோதிபா பூலேயும் அவருடைய மனைவி சாவித்திரி பாய் பூலேயும். 

தேசிய அளவில் பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கல்வி அளிக்கும் முயற்சிகளை முதன்முதலில் தொடங்கியவர்கள் அவர்கள்தான். நாடு விடுதலை பெறுவதற்கு முன் 19-ம் நூற்றாண்டில் அவர்கள் செய்த பணிகள், நிச்சயம் சமூகப் புரட்சிதான். 

யாருக்குக் கல்வி?
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பல சமூக சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட்ட ஜோதிபா பூலே, விவசாய குடும்பங்களுக்கு கல்வி சென்று சேராமல் இருப்பதால்தான் அவர்கள் சுயசார்பு இல்லாமல், புத்திசாலி வர்க்கத்தினரின் நிழலில் இருக்கிறார்கள். 

அரசு வரி வருவாயில் பெருமளவு மேல்தட்டு வர்க்கத்தினரின் கல்விக்கு மட்டுமே செலவிடப்படுவதால், அரசு அலுவலகங்களில் பிராமணர்களே இருக்கின்றனர். இது தவறான போக்கு என்று ஜோதிபா பூலே ஆங்கிலேய அரசிடம் வாதிட்டார். மெக்காலே கல்வி முறைக்கு எதிராகவும் பேசினார். 

பெண்கள், தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி பெற வேண்டும், அதுவே அவர்களுடைய முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்று கருதினார். பெண் குழந்தைகளுக்கு பெண்ணே ஆசிரியையாக இருக்க வேண்டும் என்று நினைத்த ஜோதிபா பூலே, தன் மனைவி சாவித்திரி பாய்க்கு வழிகாட்டியாக இருந்தார். ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும் சேர்த்துவிட்டார். 

பிதேவாடா பள்ளி 
 
அவர் பயிற்சி பெற்றுத் திரும்பியவுடன் 1848-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பூனாவில் உள்ள நாராயண்பேத் என்ற இடத்தில் பிதேவாடா என்ற பெண்களுக்கான பள்ளியை ஆரம்பித்தார்கள். இந்தியாவின் இரண்டாவது பெண்கள் பள்ளி அது. அந்தப் பள்ளியில் 9 சிறுமிகள் ஆரம்பத்தில் சேர்ந்தார்கள். அதே ஆண்டே மேலும் 5 பள்ளிகளைத் தொடங்கினர். திட்டமிட்டபடியே 1852-ம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட தலித் சிறுமிகளுக்கான பள்ளியையும் தொடங்கினார்கள். 

ஆனால், தாழ்த்தப்பட்ட குழந்தைகள் சேர்க்கப்பட்ட பள்ளியில் கற்றுத்தர ஆசிரியர்கள் முன்வரவில்லை. இதை முன்கூட்டியே யூகித்திருந்த ஜோதிபா, சாவித்திரி பாயை ஆசிரியர் பயிற்சி பெற வைத்திருந்தார். அந்த வகையில் தேசிய அளவில் பெண்கள் பள்ளியின் முதல் பெண் ஆசிரியையாக சாவித்திரி பாய் உருவானார். 

பல்முனை எதிர்ப்பு 
 
ஆனால், சொந்தமாக ஆரம்பித்த பள்ளியில் வேலை பார்க்கவும் அவர் பல எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. சாவித்திரி பாய் வெளியே சென்ற பல நேரங்களில், கட்டுப்பெட்டித்தனமாக பழமைவாதம் பேசும் ஆண்கள் அவரைக் கேவலமாகப் பேசினார்கள். 

சில நேரம் கல், சாணியைக்கூட வீசினார்கள். ஜோதிபா, சாவித்திரிக்கு எதிராக தவறான பிரச்சாரத்தையும் பழமைவாதிகள் மேற்கொண்டார்கள். அதைப் பற்றியெல்லாம் சாவித்திரி பாய் கவலைப்படவில்லை. எடுத்த காரியத்தில் உறுதியோடு, மாணவிகளுக்கும், தலித் சிறுமிகளுக்கும் கற்றுத் தந்தார். 

அத்துடன் நிற்காமல், “இந்த பள்ளி நடவடிக்கைகளில் இருந்து நீங்கள் விலகியிருக்காவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும்”, என்று ஜோதிபா பூலேயின் தந்தை கோவிந்தராவையும் சிலர் மிரட்டினார்கள். தன்னுடைய மகன், மருமகளிடம் பள்ளியை மூடிவிடுமாறு அவர் கூறினார். 

இந்த உயர்ந்த முயற்சியை கைவிடமாட்டோம் என்று ஜோதிபா பூலேயும், சாவித்திரிபாயும் மறுத்ததால், அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றினார் கோவிந்தராவ். ஆனாலும் அவர்களுடைய பணி தொடர்ந்தது. அதனால்தான் அவர்களது பணி மிகப்
பெரிய சமூகப் புரட்சியாக இன்றைக்கும் நிலைத்திருக்கிறது.- ஆதி

Monday 2 March 2015

பாவ்லோ பிரைரேவின் மாற்றுக் கல்வி வாசிப்பு முகாம் 1





பாவ்லோ பிரைரேவின் மாற்றுக் கல்வி வாசிப்பு முகாம்





ஜனநாயகத்தின் நாற்றுகளை 'உற்பத்தி' செய்யும் அரசுப் பள்ளிகள்


 
'தி இந்து' தமிழ் இணையதளத்தில் பிப்ரவரி 27-ல் வெளியான மாணவர்களை அரசுப் பள்ளிகள் "உற்பத்தி" செய்வது எப்படி? என்ற கட்டுரையை வாசித்தேன்.

ஒட்டுமொத்த சமூக அமைப்பின் யதார்த்தமான சமூக, அரசியல், பொருளாதார அவலங்கள் அனைத்தையும் சமூக அமைப்பின் ஒரு சிறு நிறுவனமான அரசுப் பள்ளியின் கல்வி முறையின் விளைபொருள் என்று எழுதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

"இன்று தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களாக உள்ளனர், தற்போது மாணவர்களும் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி வருவது வேதனையாக உள்ளது. வேலூரில் 10-ம் வகுப்பு மாணவன், ஆறாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யும் சூழலை உருவாக்கியது, நமது கல்வி முறையின் மிகப்பெரிய தோல்வி என்பதை நவீன மெக்காலேக்கள் உணர்வார்களா?" என்று கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.

எந்த மெக்காலேவின் ஆய்வை ஆதாரமாகக் கொண்டு இந்தக் கண்டுபிடிப்பைக் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார் என்பதுஆய்வுக்குரியது. ஒரு சமூகக் குற்றம் நடப்பதற்கு ஒரு குறிப்பிட்ட பிரிவினரே காரணம் என்றும், அரசுப் பள்ளியின் கல்விச் சூழல் மட்டுமே காரணம் என்றும் கருத்தை உருவாக்கும் வகையில் குற்றம்சாட்டுவது ஏற்புடையதல்ல.

ஓர் அரசுப் பள்ளி மாணவன், ஒரு மாணவியைக் பலாத்காரம் செய்து கொலை செய்யும் சூழல் உருவாக அரசுப் பள்ளியின் கல்வி முறையும், அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும் மட்டுமே காரணம் என்று குற்றம் சுமத்துவது நியாயமற்றது. இப்படிப் பேசுவதைக் கூட, பணக்கார வர்க்கக் கல்வியாளர்கள் பின்பற்றிவரும் நவீனத் தீண்டாமைக் கொள்கை என்றுதான் குறிப்பிட வேண்டும்.

அரசுப் பள்ளிப் பெற்றோர்கள் ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்க முடியாதவர்கள் என்ற துணிவில் இந்தக் கருத்தைக் கட்டுரையாளர் கூறியிருக்கிறார் என்றும் கருதத் தோன்றுகிறது. ஒட்டு மொத்த சமூகத்தின் அவலங்களையும், கல்வியின் அவலங்களையும் ஏழைகள் மீதும் ஏழைகளின் பள்ளிகளின் மீதும் மட்டுமே சுமத்துவது நியாயமற்ற செயலாகவே கருத முடியும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் படித்த ஒன்பதாம் வகுப்பு மாணவர், தனது ஆசிரியை ஒருவரை வகுப்பறையில் கத்தியால் குத்திக் கொன்றார். இந்தச் சூழல் உருவானதற்கு ஆங்கிலோ இந்தியக் கல்வி முறை மாணவர்களை இப்படி "உற்பத்தி" செய்கிறது என்றும், இதற்கு மாணவர்களின் பெற்றோர்களும் காரணம் என்றும் யாராவது குற்றம் சாட்டினார்களா? குற்றங்களைப் பற்றிப் பேசுவதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஓர் அணுகுமுறை, ஆங்கிலோ இந்தியப் பள்ளி மாணவர்களுக்கு ஓர் அணுகுமுறை என்ற பாகுபாடு உருவாக்கப்படுவது கல்வியில் ஜனநாயகத் தன்மைகளை அழித்துவிடும்.

"ஒரு மாணவன் வருடம் முழுவதும் என்ன கற்றுக்கொண்டான்? அதை எப்படி தேர்வில் எழுதினான் என்பெதெல்லாம் தாண்டி, அன்றைய தேர்வுக்கு யார் அறைக் கண்காணிப்பாளராக வந்தார்கள், எப்படி தாராளமாக நடந்து கொண்டார்கள் என்பதைப் பொறுத்தே மாணவர்களின் தேர்ச்சி நிர்ணயிக்கப்படுறது" என்று கட்டுரையாளர் கூறியுள்ள குற்றச்சாட்டு தனியார் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும். கண்காணிப்பாளருக்குக் கப்பம் கட்ட அரசுப் பள்ளிகளுக்கு என்ன வாய்ப்பு இருக்கப்போகிறது? கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளது போலக் குடிகாரப் பெற்றோர்களின் பிள்ளைகளல்லவா அரசுப் பள்ளியில் படிக்கிறார்கள்? கண்காணிப்பாளர்களுக்கு கப்பம் கட்ட வாய்ப்புள்ள தனியார் பள்ளிகளில்தானே இப்படியெல்லாம் மாணவர்களின் தேர்ச்சியை நிர்ணயிக்க முடியும்.

பெரும்பாலான தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பத்தாம் வகுப்புப் பாடங்கள் ஒன்பதாம் வகுப்பிலும், பன்னிரெண்டாம் வகுப்பு பாடங்கள் பதினோராம் வகுப்பிலும் கற்பிக்கப்படுகின்றன. இந்த முறைகேட்டின் மூலமே தனியார் பள்ளி மாணவர்கள் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்களைவிட அதிக தேர்ச்சி விகிதமும் மதிப்பெண் விகிதமும் பெறுகின்றனர். இதனால் அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களின் உயர் கல்விச் சேர்க்கை வாய்ப்புகள் பறிபோகின்றன. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளியில் படித்த ஒரு விழுக்காட்டினர்கூட இடம் பெற முடிவதில்லை. இந்தச் சமூக அநீதிக்குக் காரணமான தனியார் பள்ளிகளின் முறைகேட்டைத் தடுக்க பதினோராம் வகுப்பிலும் அரசு பொதுத்தேர்வு முறையைக் கொண்டுவரவேண்டும். மேலும் தவறு செய்யும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படவேண்டும் என்று இதுவரை எத்தனைபேர் கேட்டிருக்கிறார்கள்?

கேட்கும் தகுதியுடைய பெற்றோர்களின் குழந்தைகள் அனைவரும் எப்படியாவது மதிப்பெண் பெற்றால் போதும் என்ற ஒரே குறிக்கோளில் தனியார் பள்ளிகளில் கேட்ட அளவுக்குக் கட்டணம் செலுத்திப் படித்துவருகிறார்கள். இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைப் படிக்கவைக்கும் ஏழைப் பெற்றோர்களோ இதையெல்லாம் கேள்வி கேட்பதற்கு இயலாத நிலையில் இருக்கிறார்கள் என்பதுதானே உண்மை நிலை.

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எல்லாம் குற்றவாளிகளாக உருவாக்கப்படுகிறார்களா? அரசுப் பள்ளிக் கல்வி முறைதான் நாட்டில் பெண்களைப் பலாத்காரம் செய்து கொலை செய்பவர்களை "உற்பத்தி" செய்கிறதா?

அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரும் படிக்காமல் தேர்வில் காப்பி அடித்து மதிப்பெண் வாங்கினார்களா? அரசுப் பள்ளி ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் மாணவர்களைத் தேர்வில் பார்த்து எழுதவைத்துதான் மதிப்பெண் வாங்க வைக்கிறார்களா? என்று கேள்வி கேட்கும் வகையில் ஒட்டு மொத்தமாக அனைவர்மீதும் தவறான ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைப்பது நியாயமற்றது.

அனைத்துக் குழந்தைகளும் உயிர் வாழ்வதற்கும், தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் முன்னேறுவதற்கும் சமவய்ப்புகளையும் சமஉரிமைகளையும் பெற்றுக் கொடுக்கும் கல்வி முறை ஒன்றே நமது ஒரே குறிக்கோளாக இருக்க முடியம். மேலும் ஓர் உண்மையான மக்களாட்சி அமைப்பை உருவாக்குவதற்கான அடிப்படைக் கடமையும் கூட இதுவாகத்தான் இருக்க முடியும். இந்த உயரிய நோக்கத்தை அடைவதற்கு நாம் அரசுப் பள்ளிகளைக் காப்பதையும் மேம்படுத்துவதையும் முதன்மை இலக்காகக் கொள்ளவேண்டும். அரசுப் பள்ளிகளின் மதிப்பைத் தாழ்த்தும் படியான வகையில் நியாயமற்ற கருத்துகளைப் பொத்தாம் பொதுவாக கூறிவருவது ஆபத்தானது.

அரசுப் பள்ளிகள் மூலம்தான் தமிழகத்தில் இதுவரையில் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் கட்டணமில்லாமல் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் கல்விக் கூடங்களுக்குள் காலடிவைத்த முதல் தலைமுறையினர் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். குடியரசுத் தலைவர், தலைமை நீதிபதி, சந்திராயன் திட்ட இயக்குனர் போன்ற சிகரங்களைத் தொட்ட தமிழர்கள் பலர் அரசுப் பள்ளியில் தாய்மொழிவழியில் படித்தவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.

ஏழைகளின் அறிவுக்கூடமாய் விளங்கும் அரசுப் பள்ளிகளில் பல குறைகள் இருக்கலாம். அவை களையப்படவேண்டியவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. கல்வி அமைப்பில் மாற்றம் வேண்டும் என்பதையும் யாரும் மறுக்கவில்லை.

எனவே, இருக்கின்ற குறைகளைக் களைய உதவுவதே ஆக்கபூர்வமான பணியாக இருக்க முடியும். அரசுப் பள்ளிகள் மீது அவநம்பிக்கைச் சேற்றை இறைப்பதால் எதிர் விளைவுகளே ஏற்படும். அரசுப் பள்ளிகள் ஜனநாயகப் பயிர்களை வளர்த்தெடுக்கும் நாற்றங்கால்கள் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுவோம்.

அரசுப் பள்ளியில் இரண்டு மகன்களைப் படிக்க வைக்கும் ஒரு தந்தை என்ற உரிமை காரணமாகவும், அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் என்ற பொறுப்புணர்வினாலும் இந்த வேண்டுதலை அனைவருக்கும் முன்வைக்கிறேன்.

சு.மூர்த்தி, கட்டுரையாளர் - ஒருங்கிணைப்பாளர். கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு, திருப்பூர் மாவட்டம். தொடர்புக்கு- moorthy.teach@gmail.com