Tuesday 24 December 2013

சேலத்தில் மாற்றுக்கல்விக்கான மாநில அளவிலான புத்தக வாசிப்பு முகாம்-டிசம்பர், 28,29


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கான மாற்றுக் கல்விக்கான புத்தக வாசிப்பு முகாம் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கும் முகாமாக நடத்தபடுகிறது. இதுவரை 8 முறை புத்தக வாசிப்பு முகாம் நடைபெற்றுள்ளது. தற்போது ஒன்பதாவது முறையாக சேலத்தில் நடைபெறுகிறது. எனவே தங்களுக்கு தொடர்புடைய ஆசிரியர்களை இப்புத்தக வாசிப்பு முகாமில் பங்கு பெறச் செய்யும்படி கேட்டு கொள்கிறோம். இரண்டு நாள் முகாமில் ஒவ்வொரு அமர்விலும் கல்வியின் அரசியல், சமகாலக் கல்விக்கூட பிரச்சினைகள், வகுப்பறை ஜனநாயகம் என பல்வேறு தலைப்புகளில் கருத்தாளர்கள் கலந்துரையாடுகின்றனர்.

பங்கேற்கும் கல்வியாளர்கள்: பேராசிரியர் ச.மாடசாமி, பேரா.கே.ராஜீ, ஆயிஷா நடராஜன், பிரின்ஸ் கஜேந்திர பாபு, பேரா.விஜயகுமார், பேரா.என்.மணி


புத்தகம்:திருமிகு இரா நடராஜன் அவர்களின்  “இது யாருடைய வகுப்பறை

பதிவுக்கு:
1. திருமிகு நீலா, புத்தக வாசிப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் – 97866 26273
2. திருமிகு பாலசரவணன், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் – 94861 61283

நிகழ்ச்சி நடைபெறும் நாள்:
2013 டிசம்பர் 28ந் தேதி காலை 9.00 மணி முதல் 29ந் தேதி மாலை 05.00 மணி வரை.

நிகழ்ச்சி நடைபெறும்  இடம்:
சமுதாய கூடம், சேலம் உருக்காலை, கணபதி பாளையம். கேட் எண்.1
Admin Hall. Salem Steel Plant, Ganapathypalayam.

போக்குவரத்து:
1. சேலம் புதிய பஸ் நிலையம் மற்றும் ஜங்சன் இரண்டு இடங்களிலிருந்தும் தாரமங்கலம் செல்லும் அனைத்து டவுன் பஸ் மற்றும் ரூட் பஸ்ஸும் செல்லும்.
2. பஸ் நிறுத்தம் – சேலம் ஸ்டீல் பிளான்ட், முதல் கேட்.

தொடர்புக்கு:
1. திருமிகு ராமமூர்த்தி – 94864 86755,
2. திருமிகு பாலசரவணன் - 94861 61283, 89031 61283
3. திருமிகு K.P. சுரேஷ்குமார் – 94433 91777
4. திருமிகு மீனாட்சி சுந்திரம் – 75986 70004.

என்னமோ நடக்குது...? (தமிழகப்பள்ளிகளின் குழப்பநிலை!!!??)

நண்பர்களே... முதலில் கல்விப்பணியில் மகத்தான பங்களிப்பைச் செய்து வரும் நமது இயக்கச் செயல்பாட்டாளர்களுக்கும் ஆசிரியர் நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!


கல்வியில் நாம்:

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழக கல்விச்சூழலில் ஆகச்சிறந்த பங்களிப்பைச் செய்திருக்கிறது. தமிழக கல்விச்சூழலில் ஏற்பட்டுள்ள முற்போக்கான சில மாற்றங்களைப் பேச முனைகின்ற நடுநிலையாளர்கள் / நண்பர்கள் எவரும் அறிவியல் இயக்கத்தைக் குறிப்பிடாமல் பேச முடியாது. 

கல்வி, சுகாதார விழிப்புணர்வுக்காக ஆரம்பகாலத்தில் நாடு தழுவிய அளவிலான கலைப்பயணங்களில் நமது பங்களிப்பாக இருந்தாலும், அரசின் திட்டமாக இருந்தாலும் மக்கள் இயக்கமாக நாம் மாற்றிக்காட்டிய அறிவொளிப் பணியாக இருந்தாலும் சரி, கற்றலில் இனிமை, கற்பது கற்கண்டே, சிட்டுக்கள் மையம், இரவுப்பள்ளி என நீளும் நமது இயக்கத்தின் முன்முயற்சிகளின் நெடும்பட்டியலாக இருந்தாலும் சரி... நிகழ்காலத்தில் செயல்வழிக்கற்றல், பொதுப்பாடத்திட்டம், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை ஆகியவற்றில் நமது ஆய்வுகளும் அரசுக்கு நாம் வைத்த முன்மொழிவுகளும் நமது ஆழமான தலையீட்டிற்கு அழுத்தமான சான்றுகள்.

செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ஆசிரியர் தினம், 8ஆம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினம், (பிற தினங்களை நண்பர்கள் பட்டியலிட்டுக் கொள்வீர்கள் என நம்புகின்றேன்).. வாழ்த்துச்சொல்லி குறுஞ்செய்திகள் பறந்தன.. இது தொடரட்டும்.

அதே நேரத்தில் நாம் கல்வி குறித்து பரிமாறிக்கொள்ளவும் விவாதிக்கவும் தொடர்செயல்பாடுகளைத் திட்டமிடவும் தேவையிருக்கிறது. இந்திய, தமிழகக் கல்விச்சூழலில் நமது செவிகளில் கேட்பதற்கினிய சொல்லாடல்கள் ஒலிக்கின்றன. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009, செயல்வழிக்கற்றல் (அட்டை வழிக்கற்றல் என்றாலும்), சமச்சீர்கல்வி மூலம் பொதுப்பாடத்திட்டம், முப்பருவக்கல்வி, தொடர்ச்சியான முழுமையான மதிப்பீட்டு முறை, அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி... மீண்டும் ஒருமுறை வாசித்துப்பாருங்கள்.. குறுகிய காலத்தில் இத்தனை மாற்றங்களா...!?

தமிழகக் கல்வியில் உருவாகியுள்ள புதிய குழப்ப நிலை

2007 ஜனவரியில் இருந்து செயல்வழிக்கற்றல் அமுலாகி வந்தது. இந்தச்சூழ்நிலையில் பேரா.யஷ்பால் குழு வலியுறுத்திய சுமையின்றிக் கற்றல் என்ற முப்பருவக்கல்வி இன்று நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் குழந்தைகளின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கு வழிகோலும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு அறிமுகமானது. சிக்கலும் துவங்கியது. 

மாணவர்களின் சுயவேகத்தில் கற்பது, விட்ட படிநிலையிலிருந்து தொடர்வது போன்ற பல சிறப்பம்சங்கள் செயல் வழிக்கற்றலில் இருந்தது. உண்மையில் நடக்கவும் செய்தது. ஆனால் தற்போது அந்தந்தப் பருவத்திற்குரிய பாடங்கள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என மாணவர் மையச் சிறப்புகள் ஆசிரியர் மையமாக்கப்பட்டது.

மூன்று பருவங்களுக்குத் தக்கவாறு பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. கல்வியாண்டு முழுவதுக்குமாக வழக்கம்போல் அட்டைகள் அச்சிடப்பட்டன. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சியில் நூற்றுக்கணக்கான திருத்தங்களை ஆசிரியர்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கக்கூடிய ஆசிரிய நண்பர்களுக்கு இது மேலும் குழப்பத்தினையே ஏற்படுத்தி உள்ளது. மேலும் தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் 4000க்கும் மேற்பட்ட குறுவள மையங்களில் பயிற்சி கொடுத்தே மேம்படுத்த முடியாத கல்வியை இனிவரும் ஆண்டுகளில் 50ரூ ஆசிரியர்களுக்கு மட்டுமே பயிற்சி கொடுத்து (பயிற்சி எடுத்தவர்கள் பள்ளிக்குச் சென்று சக ஆசிரியர்களுக்கு சொல்ல வேண்டுமாம்.. அதற்கும் ஒரு பதிவேடாம்) சாதிக்க முடியும் எனக் கல்வித்துறை கனவு காண்பது எந்த விதத்தில் நியாயம் நண்பர்களே?

இனி, புதிய மதிப்பீட்டு முறையும் சில குழப்பங்கள்! செயல்வழிக்கற்றலில் மதிப்பீடு இருக்கும் ஆனால் இருக்காது. மதிப்பெண்கள் நிச்சயம் இல்லை. ஆனால் ஊஊநு வந்த பிறகு நின்றால் மதிப்பெண்.. உட்கார்ந்தால் மதிப்பெண்.. அனைத்தும் மதிப்பெண் மயமாக்கப்படுகிறது. ஆனால் கடைசியில் மட்டும் மாணவர்களுக்கு தரமிடுங்கள்... படம் முழுக்க அடிதடி.. கடைசி நிமிடம் அகிம்சை பேசும் விநோதமன்றி வேறென்ன?

மேலும் எதற்கெடுத்தாலும் ரிக்காடு/ஆவணம்.. வளரறி மதிப்பீடு-அ, வளரறி மதிப்பீடு-ஆ,(பாடவாரியாக) தொகுத்தறி மதிப்பீடு, பாட ஆசிரியர்/வகுப்பாசிரியர் பதிவேடுகள்... இன்னும் இன்னும் நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய..... (கேட்டால் அவையெல்லாம் ஹளு ருளுருஹடு) மாவட்டந்தோறும் எஸ்.எஸ்.எ. கடைகள் என்றே முளைக்குமளவிற்கு நிலைமை மோசமாகி விட்டது. அந்தப் பெருமை அனைவருக்கும் கல்வி இயக்கத்தினையே சாரும்.. 

நடைமுறைப் படுத்தப்பட்ட பல முற்போக்கான புதிய முறைகளை கருத்து ரீதியாகச் சரியாக உள்வாங்காமல் அவற்றைக் காட்சிப் படுத்துவதிலேயே (நடக்கவில்லையென்றாலும் பரவாயில்லை.. ரிக்கார்டாவது போட்டு வையுங்கள்..) குறியாக இருந்ததன் விளைவுதான் இது.. ஆக ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் ரெகார்ட் கிளார்க் ஆகியுள்ளது இன்றைய கல்விச்சூழல்.. 

எத்தனை எத்தனை விலையில்லாப் பொருட்கள்.. உள்ளூர் மாணவர்களுக்கும் கூட இலவசப் பேருந்து பயண அனுமதி அட்டைகள்.. மாணவர்கள் பயன் பெறட்டும்..பாராட்டுக்கள்! ஆனால் அதே மாணவர் களுக்கு பாடங்களுக்கான பயிற்சி புத்தகங்கள் கேட்டால் நிதியில்லை.. திரள் பதிவேடுகள் கேட்டால் பதிலில்லை.. ஓவியம், கலையும் கைவண்ணமும், விளையாட்டு, யோகா, கணினி பயிற்சி, தமிழ் உள்ளிட்ட எல்லாப் பாடங்களையும் நடத்த என அனைத்திற்கும் ஒரே ஆசிரியர்தான்.. இவற்றிற்கெல்லாம் பயிற்சி? என்றோ கொடுத்த அரைநாள் பயிற்சிதான்.. பள்ளிக்கொருவர் வேண்டாம் ஒன்றிய அளவுகளில் உள்ள வட்டார மையங்களுக்காவது ஒரு ஓவிய / விளையாட்டு / யோகா /கலை / கணினி/ தொழில் ஆசிரியர்களை நியமிக்கலாமல்லவா? சுழற்சி முறையில் அனைத்துப் பள்ளிகளுக்கும் குறைந்த அளவிலான பயிற்சிகளாவது சென்றடையும் அல்லவா?

இதையெல்லாம் சரிசெய்யாமல் ஆங்கில வழிக் கல்வி மட்டும் கொண்டு வந்து அரசுப்பள்ளிகளைக் காப்பாற்ற முடியாது. வசதியற்ற மாணவ்ர்களுக்கான ஆங்கில வழிக்கல்வி மேலும் கல்வியின் தரத்தை கீழே தள்ளும். அரசுப்பள்ளிகளுக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. ஆங்கிலவழிக்கல்வி தீர்வாகாது. பள்ளிகள் அனைத்தும் இன்று குழப்பத்தில் உள்ளன.முதல் பருவம் முடிந்து விட்டது. இந்தக் குழப்பங்களும் புலம்பல்களும் இனியும் தொடர்தலாகாது. மாவட்டந்தோறும் ஆய்வுகள், விவாதங்கள் நடக்க வேண்டும்.. இக்குறைகளுக்கான மாற்றுக்களை நாம் கண்டறிந்து நல்லதொரு கல்விச்சூழலை உருவாக்குவோம்! அறிவியல் இயக்கத்திற்கான அடுத்த சவால் இது!

தேனி சுந்தர்
நன்றி: விஞ்ஞானச்சிறகு, டிசம்பர்,2013

Friday 13 December 2013

21-வது தேசிய அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகத்தின் சிறந்த இளம் விஞ்ஞானிகள் 30 பேர் தேர்வு

பதிவு செய்த நாள் : Dec 10 | 12:17 am

திருப்பூர், -

21-வது தேசிய அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகத்தின் சிறந்த இளம் விஞ்ஞானிகள் 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

அறிவியல் மாநாடு

மாநில அளவிலான 21-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் 3 நாட்கள் நடந்தது. இதில் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 209 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் 210 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் ஈரோடு ஜியன்தொட்டி தேசிய குழந்தைதொழிலாளர் பயிற்சி மைய மாணவர் கவின், விஜய், மீனா, நந்தினி ஆகியோர் குழந்தை திருமணங்களால் ஏற்படும் மனித ஆற்றல் இழப்பு குறித்து ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தனர். இது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இளம் விஞ்ஞானிகள்

மாநாட்டில் சிறந்த 30 ஆய்வுக்கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன. இதை சமர்ப்பித்த 30 குழுக்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் 150 பேரும் இளம் விஞ்ஞானிகளாக அறிவிக்கப்பட்டனர். போபாலில் வருகிற 21-ந் தேதி நடைபெறும் தேசிய அறிவியல் மாநாட்டில் 30 குழுக்களின் தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

தேசிய மாநாட்டில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளின் குழு தலைவர்கள் விவரம் வருமாறு:-

நெல்லை

தேனி மாவட்டம் ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி என்.லிசா, திருவண்ணாமலை மாவட்டம் மேலராணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கவுசல்யா, விருதுநகர் நாடார் மகமை பெண் கள் மேல் நிலைப்பள்ளி மாணவி தமிழமுதா, மதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரித்தா,

கன்னியாகுமரி கார்மல் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜே.ஜே.அருண், கிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கே.கனிமொழி, நெல்லை திருமால்நகர் கலிலியோ துளிர் இல்ல மாணவன் ஆர்.முகிலன், புதுக்கோட்டை கல்ப்நகர் கலிலியோ கலிலி துளிர் இல்ல மாணவர் அடைக்கல அமலன்,

திருப்பூர்

காஞ்சிபுரம் மாவட்டம் வெங்கம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் தினேஷ், புதுக்கோட்டை மாவட்டம் மருதாந்தலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் பூ.கபிலன், சேலம் ஜி.டி.நாயுடு துளிர் இல்ல மாணவர் எம்.அப்துல் ரகுமான், ஈரோடு ஜியன்தொட்டி தேசிய குழந்தைதொழிலாளர் பயிற்சி மைய மாணவர் கவின்,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வாணிவிலாஸ் உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவி நந்தினி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதேஸ்வரன் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி சுவேதா, கரூர் மாவட்டம் ஆர்.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ரம்யகலா, கடலூர் மாவட்டம் ஜவகர் மேல்நிலைப்பள்ளி மாணவர் முகேஷ்ராஜ்,

நீலகிரி, கோவை

திண்டுக்கல் மாவட்டம் சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கிருபா, சென்னை மாவட்டம் தி இந்து சீனியர் உயர்நிலைப்பள்ளி மாணவி ரஞ்சினி, விருதுநகர் மாவட்டம் தி இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர் டெனித் ஆதித்யா, நீலகிரி மாவட்டம் அரிஸ்டோ துளிர் இல்ல மாண வர்கள் முகமதுசெபின், ராமநாதபுரம் மாவட்டம் நேசனல் அகாடமி மவுண்ட் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவர் பெனின் தாமஸ், சிவகங்கை மாவட்டம் பாபா அமிர்பாதுசா மேல்நிலைப்பள்ளி மாணவி மீனா நாச்சியார்,

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர் ஜெகதீஸ்ராஜ், தஞ்சாவூர் மாவட்டம் மகரிஷி வித்யாலயா பள்ளி மாணவர் கற்பகமுத்து, வேலூர் மாவட்டம் ராணிபேட்டை தேவ்பெல் பள்ளி மாணவி எஸ்.சாய்பிரியா, அரியலூர் மாவட்டம் தி ஆதித்யா பிர்லா பப்ளிக் பள்ளி மாணவி நவீனா, மதுரை மாவட்டம் மகாத்தா மாண்டச்சோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அக்ஷய ரத்னா, திருவாரூர் மாவட்டம் அசோகாசிசூ விகார் மெட்ரிக் பள்ளி மாணவர் ஆகாஸ், திருவள்ளூர் விவேகானந்தா மெட்ரிக்பள்ளி மாணவி கார்த்திக்ஜோதி, நாகப்பட்டினம் ஏ.ஜே.சி. பப்ளிக் பள்ளி மாணவி சுபிக்ஷா.

விஞ்ஞானிகள் மாநாடு

இந்த 30 குழு தலைவர்களில் இருந்து கிராம சூழ்நிலையில் வீட்டு விலங்குகள் ஆற்றல் பயன்பாடு பற்றி மதிப்பீடு மற்றும் அளவிடுதல் என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்த புதுக்கோட்டை மாவட்டம் மருதாந்தலை அரசு பள்ளி மாணவர் பூ.கபிலன், இயற்கையாக ஆற்றல் உற்பத்தி செய்வது குறித்து ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்த விருதுநகர் தி இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர் டெனித் ஆதித்யா ஆகியோர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் அகில இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டில் கலந்து கொண்டு தங்கள் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்க உள்ளனர்.

Source: Dailythanthi