Thursday 30 April 2015

ஜெயமோகன்களாலேயே அஜிதன்கள் உருவாகிறார்கள்

வணக்கம் ஜெயமோகன். என்னை உங்களுக்குத் தெரியாது. தெரிந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. நான் உங்கள் ரசிகன் அல்ல. சொல்லப் போனால், உங்களை எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது; காரணம் ஏதும் இல்லை.

நவீனப் புதினங்கள் பிடிக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். மேலும், உங்களைப் பற்றியும், உங்கள் சகாக்களான சாருநிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன் தொடர்பாகவெல்லாம் ஃபேஸ்புக்கில் விவாதிக்கப்படும் விஷயங்களையெல்லாம்கூட இதுவரை ஆர்வம் இல்லாமல் தான் கடந்து சென்றிருக்கிறேன்.

நீங்கள் எத்தனையோ ஆயிரம் பக்கங்களை எழுதியிருக்கிறீர்கள். ஆனால், உங்களின் ஆயிரத்துச் சொச்சம் வார்த்தைகளை மட்டுமே கொண்ட ஒரு கட்டுரை என்னுள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது ஜெயமோகன்.

ஏப்ரல் 27 காலை 7 மணி இருக்கும். நண்பரின் வீட்டுக்கு ஒரு துக்கத்துக்காகச் சென்றிருந்தேன். யதேச்சையாக, அங்கு இருந்த ‘தி இந்து’ தமிழ் நாளிதழைப் புரட்டியபோது, உங்கள் கட்டுரை படிக்க நேர்ந்தது. நிச்சயம் அந்தக் கட்டுரையை உங்களுக்காகப் படிக்கவில்லை. அரசுப் பள்ளி என்ற வார்த்தை மட்டும் தலைப்பில் வராமல் இருந்திருந்தால் நிச்சயம் நான் அந்தக் கட்டுரையைப் படித்திருக்க மாட்டேன். அரசுப் பள்ளி எனும் வார்த்தை ஏற்படுத்திய ஈர்ப்பால், கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தேன்.

முழுக் கட்டுரையும் படித்து முடிப்பதற்குள் இரண்டு முறை அழுதுவிட்டேன். இருந்தது ஒரு துக்க வீட்டில், இறந்தவருடன் எனக்கு நேரடி அறிமுகம் கிடையாது. அவருடைய மகன் நல்ல நண்பர். அறிமுகமே இல்லாத ஒருவருக்காக நான் ஏன் அழுகிறேன் என்று நினைத்து துக்க வீட்டில் இருந்த பலரும் என்னை ஒரு மாதிரி பார்த்தாக உணர்ந்தேன்.

உங்கள் மகன் அஜிதனுடன், உங்கள் கட்டுரையின் ஒவ்வொரு புள்ளியிலும் என்னைத் தொடர்புபடுத்திக்கொண்டேன் ஜெயமோகன்.

நான் படித்தது ஓர் அரசு உதவி பெறும் பள்ளியான தஞ்சை கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளியில். தஞ்சையில் நான் படித்த காலகட்டத்தில் அது ஒரு சிறந்த பள்ளி. அந்தப் பள்ளியில் இடம் கிடைப்பதே மிகவும் கஷ்டம். ஆனால், அந்தப் பள்ளியின் துரதிர்ஷ்டம் எனக்கு அங்கு இடம் கிடைத்தது. பத்தாவது வரை அங்குதான் படித்தேன். படித்தேன் அல்ல; சென்று வந்தேன் என்பதே சரி.

மதிப்பெண்களைக் கொண்டு மட்டுமே ஒரு மாணவனின் திறமைகளை மதிப்பிடும் ஆசிரியர்களுக்கு நான் ஒரு உருப்படாத மாணவன்.



எதற்குமே லாயக்கில்லாதவனோ நான்?

உங்களைப் போல என் தந்தையும் பிஎஸ்என்எல் ஊழியர் தான். எழுத்தாளர்தான். அப்போது மாலை நேரங்களில் அந்தப் பகுதிக் குழந்தைகளுக்கு வீட்டின் மேல் தளத்தில் டியூஷன் எடுத்துக்கொண்டிருந்தார். ஒருநாள் சிவப்பு மை அடித்தல்களால் நிறைந்த என் தேர்வு விடைத்தாளை அவரிடம் நீட்டுகிறேன். எல்லா விடைத்தாள்களிலும் கையெழுத்திட்டுவிட்டுச் சொன்னார்: “இனி, நீ மேல் தளத்துக்கு வராதே. உன் மதிப்பெண்களைப் பார்த்தால் மற்ற குழந்தைகளும் கெட்டுவிடும்!”

நான் முழுவதுமாக உடைந்துபோனேன். அன்றிரவு என் படுக்கைத் தலையணைகள் கண்ணீரால் ஈரமாயின. அந்தப் பருவ மாணவர்கள் அதிகம் விரும்பும் கிரிக்கெட்டும் அப்போது எனக்கு விளையாட வராது. அவர்களும் என்னைக் கிண்டல் செய்த காலம் அது. எனக்கே என் மீது கடும் அவநம்பிக்கை ஏற்பட்டது. “எதற்குமே லாயக்கில்லாதவனோ நான்?”

தந்தையின் மாயாஜாலம்!

ஆனால், ஒரு மாயாஜாலம்போல என் தந்தை அனைத்தையும் அடுத்த நாளே சரிசெய்தார். அப்போது, தஞ்சை ராஜராஜன் திரையரங்கில் ‘முதல்வன்’ படம் திரை யரங்கில் ஓடிக்கொண்டிருந்தது. நல்ல விஸ்தாரமான அந்தத் திரையரங்குக்கு என்னை அழைத்துச் சென்றார். டிக்கெட் எடுத்துவிட்டு, திரையரங்கு வளாகத்தில் இருந்த செயற்கை நீர் ஊற்று அருகே உட்காருகிறோம்.

“டேய்... உனக்கு எது பிடிக்குதோ அதைச் செய்டா... மார்க்கெல்லாம் சும்மா. அதுக்கும் அறிவுக்கும் சம்பந்த மில்லை. எது செஞ்சாலும் முழு ஈடுபாட்டோட செய்... அவ்ளோதான். உனக்கு என்னவாகணும்னு ஆசை ?” என்கிறார்.

“தெரியலை பாப்பு” (அப்பாவை அப்படித்தான் அழைப்பேன்).

“சரி, உனக்கு எதுல ஈடுபாடு வருதோ, அப்ப சொல்லு. அதுல உன்னை நீ வளர்த்துக்கிறதுக்கு என்னால முடிஞ்சதை யெல்லாம் பண்றேன்.”

எனக்கு அந்தக் காலகட்டத்தில்தான் ஊடகத் துறையின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. ஏழாம் வகுப்பு ஆண்டு விடு முறையில், சுட்டி விகடன் திருச்சியில் ஒரு வார ஓவிய வகுப்பு நடத்தியது. அதில் சேர வேண்டுமென்று ஆசை. அதில் சேர்த்துவிட்டார். அது மட்டுமல்லாமல், ஒரு வார காலம் முழுவதும் என்னை அழைத்துக்கொண்டு திருச்சிக்கும் தஞ்சைக்குமாக அலைந்தார்.

சூப்பர்டா... சூப்பர்டா

பத்தாம் வகுப்புக்கு வந்தேன். என் குடும்பம் என்னிடம் அதிகபட்சம் எதிர்பார்த்ததே நான் தேர்வில் தேர்வாகிவிட வேண்டும் என்பதை மட்டும்தான். ஏனென்றால், அப்போதெல் லாம் 40 மதிப்பெண்களை நான் எடுப்பதே பெரிய காரியம். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் 423 மதிப்பெண்கள் எடுத்தேன். அப்பாவின் அலுவலகத்துக்கு ஓடினேன். மதிப்பெண்களைச் சொன்னபோது அவரால் நம்ப முடியவில்லை.

“டேய்... ஒண்ணும் சொல்ல மாட்டேன், உண்மையைச் சொல்லு… எவ்வளவு மார்க்?”

“பாப்பு... உண்மையிலயே இதுதான்...”

“டேய் சூப்பர்டா... சூப்பர்டா” என்றவர் கொஞ்ச நேரம் கழித்துச் சொன்னார். “ஆனாடா, இப்பவும் சொல்றேன்... மார்க்குக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை. இதையெல் லாம் பெரிசா மண்டையில ஏத்திக்காத... உனக்கு என்னா வாகணும்னு தோணுதோ அதையே செய்யி.”

முதல்முறையாகச் சொல்கிறேன். “சினிமா டைரக்டர் ஆகணும் பாப்பு...”

எல்லாமே தந்தையால்தான்

சினிமா பார்ப்பதையே ஹராம் என்று ஒதுக்கும் ஒரு மதப் பின்னணி கொண்ட ஒரு குடும்பத்திலிருந்து வந்தவன், சினிமா எடுக்கச் செல்ல வேண்டும் என்கிறேன். ஆனால், அதற்கு அவர் எந்த மறுப்பும் சொல்லவில்லை. “நல்ல விஷயம்டா... நிறைய புத்தகம் படி, தினமும் பேப்பர் படி...” என்றார்.

உடன் படித்த எல்லா மாணவர்களும் ப்ளஸ் டூ முடித்த பிறகு மெடிக்கல், இன்ஜினீயரிங்குக்காக கவுன்சலிங், கோச்சிங் என்று பரபரப்பாக இருந்தபோது, எனக்கு எந்த நெருக்கடியும் அவர் கொடுக்கவில்லை. த்ரீடிஸ் மேக்ஸ், மாயா என்று நான் விரும்பிய அனிமேஷன் படிப்புகளில் சேர்த்துவிட்டார். அடுத்து என்னை விஷுவல் கம்யூனிகேஷனில் சேர்த்துவிட்டார்.

கல்லூரிக் காலத்தில் என் விருப்பம் அச்சு ஊடகம் மீது மாறியது. விகடனில் மாணவப் பத்திரிகையாளராகத் தேர்வானேன். அந்தப் பிரிவில் சிறந்த மாணவப் பத்திரிகை யாளனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். எல்லாமே என் தந்தையால்தான்!

அரணாகத் தந்தை

இதுநாள் வரை பெரிதாக ஏதும் சம்பாதிக்கவில்லை. சம்பாதிக்கும் பணத்தின் பெரும் பகுதி பயணத்துக்கும், புத்தகங்களுக்குமே செலவாகிறது. ஆனால், இதுவரை அவர் எதுவும் என்னிடம் கேட்டதில்லை. ஒரு முஸ்லிம் குடும்பத்துக்கென்றே சில அபிலாஷைகள் இருக்கும். இதுவரை அவற்றில் நான் எதையும் நிறைவேற்றியதில்லை. அதனால், என் சுற்றத்தார் என் மீது எறியும் எந்தக் கல்லும் என் மீது விழாமல் ஒரு அரணாக அவர் இருக்கிறார்.

அன்புக்குரிய ஜெயமோகன்... என்னை எப்படி அஜிதனுடன் நான் பொருத்திப்பார்த்தேனோ, அதேபோல உங்களை என் தந்தையுடன் பொருத்திப் பார்க்கிறேன். ஆமாம், ஜெயமோகன். அரசுப் பள்ளிகள் மட்டும் அஜிதன்களை உருவாக்குவதில்லை... ஜெயமோகன்களும் சேர்ந்துதான் அஜிதன்களை உருவாக்குகிறார்கள்!

பின்குறிப்பு: நீங்கள் ஆனந்த விகடன், குமுதம் வாசகராக இருந்தால் தஞ்சை தாமு என்ற புனைபெயரில் எழுதும் என் தந்தையை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. வல்லம் தாஜூபால் என்ற பெயரில் கவிதைகளையும் அவர் எழுதியிருக்கிறார். ஐம்பதின் பிற்பகுதியில் இருந்தாலும் அவர் என்னைவிட அதிகம் வாசிக்கிறார்; உழைக்கிறார்!

- நியாஸ் அஹம்மது,
‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் செய்தியாளர்.
தொடர்புக்கு: nomadniya@gmail.com


அந்த நாள் வந்திடாதோ?

பெங்களூரில் இன்னும் இருள் பிரியாத நேரம். காலை ஏழு மணிக்கு எங்கள் அடுக்குமாடிக் கட்டிட வளாகத்தின் கேட்டுக்கு வெளியே நிற்கிறது ஒரு பள்ளிப் பேருந்து. ஓட்டுநர் பொறுமையிழந்து இரண்டு முறை ஹாரன் அடிக்கும்போது, இரு சிறுவர் சிறுமியர் அவர்களது தாய்மார்கள் பின்தொடர ஓடுகிறார்கள். தாய்களின் கையில் பாதி பிரெட் துண்டு அல்லது ஒரு அரைக் கோப்பைப் பால். அவர்களது கெஞ்சல் ஓய்வதற்குள் சிறுவர்கள் வண்டியில் ஏறிவிட்டார்கள்.

கனத்த பைகள் முதுகை முன்னுக்கு வளைத்து முகம் அதில் மறைந்து... பள்ளிக்குச் செல்லும் இன்றைய சிறுமிகளையும் சிறார்களையும் கண்டால் எனக்குக் காரணம் புரியாமல் வயிற்றைக் கலக்குகிறது. இந்தப் பொதி சுமையும் அரை வயிற்று ஓட்டமும் மாலை களைத்துவந்ததும் வீட்டுப்பாடமும், களைப்பைப் போக்க கம்ப்யூட்டர் கேம்ஸும்... பறவைகளின் கீதத்தைக் கேட்கப்போதில்லை. பெங்களூரு மரங்களில் பூத்துக்குலுங்கும் மலர்களை அண்ணாந்து பார்க்க முதுகு நிமிராது.

ரம்மியமான நாட்கள்

ஐம்பது அறுபது ஆண்டுக்கு முந்தைய பெங்களூரில் எனது பள்ளி நாட்களை நினைக்கும்போதே மனசு பொங்குகிறது உவகையில். எத்தனை ரம்மியமான, சந்தோஷமான வருடங்கள் அவை! எங்கள் பைகள் கனத்ததில்லை. முதுகு கூனியதில்லை. காலை உணவு முடித்த பிறகு, சவுகரியமாக பள்ளிப் பேருந்து வரும், எட்டரை மணிக்கு. வழி அனுப்பக் கவலை தோய்ந்த முகத்துடன் எவரும் நிற்க மாட்டார்கள். வீட்டில் வானொலிப் பெட்டிகூட இல்லாத காலம். தொலைபேசியா? கேள்விபட்டதுகூட இல்லை. வீடு நிறையப் புத்தகங்கள்.

நான் படித்தது கான்வென்ட் பள்ளி இல்லை. சென்னை மாகாணத்தைச் சேர்ந்த இந்து பள்ளி. திருவேங்கடசாமி முதலியார் என்ற பெருந்தகை, தனது மனைவி பேரில் கட்டியிருந்த மாபெரும் பள்ளி. ஆரம்பப் பள்ளியிலிருந்து உயர் நிலைப்பள்ளி முடிய. பெங்களூரின் தண்ணென்ற சூழலில் மரங்களும் பூச்செடிகள் நிறைந்த பூங்காவுடனான இரண்டு பிரம்மாண்ட கல் கட்டிடங்கள் எதிரும் புதிருமாக. இரண்டுக்கும் இடையே, மிக விசாலமான ஏற்றமும் இறக்கமுமாக பூங்கா. ஒரு சினிமா செட்டைப் போல இருக்கும். பலதரப்பட்ட, பல மொழி பேசும் மாணவியர். அதனால், படிப்பும் பேச்சும் இயல்பாக ஆங்கில வழியிலேயே அமைந்தது. ஆனால், அங்கு தமிழை இரண்டாம் மொழியாக எடுக்கும் வசதியும் இருந்தது. அதனாலேயே மதுரையைச் சேர்ந்த என் தந்தையின் யோசனையின் பேரில் அந்தப் பள்ளியில் நான் சேர்க்கப்பட்டேன்.


மண்ணும் மணமும்

படிப்பு என்பதை ஒரு சுமையாகக் கலக்கத்துடன் நாங்கள் அணுகிய பேச்சே இல்லை. மிஸ் டேவிட், மிஸ் எட்வர்ட்ஸ், மிஸ் லீலா, மிஸ் லக்ஷ்மி என்று உற்சாகமாகப் பாடம் நடத்தும் ஆசிரியைகள். மிஸ் டேவிட் எங்களுக்கு மண்ணை நேசிக்கக் கற்றுக்கொடுத்தார். தோட்டம் போட என்று நேரம் உண்டு. எங்கள் வகுப்புக்கு என்று ஒரு சதுரமான இடம் இருந்தது. மண்ணைக் கிளறவும் பாத்தி கட்டவும் அளவாக நீர் ஊற்றவும் கற்றுக்கொண்டோம். மண்ணிலிருந்து சுருண்டு நெளிந்து வரும் மண் புழுக்கள் நமது சினேகிதர்கள் என்று புரிந்துகொண்டோம். மிஸ் டேவிட் சொல்வதெல்லாம் எங்களுக்கு வேதவாக்கு. விதையிலிருந்து செடி முளைத்து, இலை துளிர்விடும்போது எங்களுக்கு ஏற்படும் பரவசம் மிஸ் டேவிட்டுக்கும் ஏற்படும். ஆங்கிலத்தில் ரசனை ஏற்படுத்தியது மிஸ் டேவிட். வோர்ட்ஸ்வெர்த்தின் ‘தி டஃபடில்ஸ்’ கவிதையை மிஸ் டேவிட் படிக்கும்போது, நாங்கள் அவருடன் இங்கிலாந்துக்குப் பயணப்பட்டிருப்போம். மற்றவரைப் புண்படுத்தாமல் பேசச் சொல்லிக்கொடுத்தது மிஸ் டேவிட். எதைச் செய்தாலும் நேர்த்தியாகச் செய்யச் சொல்லிக்கொடுத்தது மிஸ் டேவிட்.

தமிழ்க் கதாநாயகி

தமிழ்ப் பற்று என்னைச் சிக்கென்று பிடித்துக்கொள்ளவும் எங்களுக்கு வாய்த்த ஆசிரியைகளே காரணம். தமிழ் வகுப்பு எப்போது வரும் என்று நாங்கள் காத்திருப்போம். தமிழ்ப் பற்று என்பதால் அல்ல - அது பின்னால் வந்தது. தமிழ் டீச்சர் பிரேமா எங்களுடைய கதாநாயகி. கோயில் சிலைபோல உடம்பில் மிக ஸ்டைலாக சேலை அணிந்திருப்பார். நம்ப முடியாத நீளத்துக்கு ஜடை. அவரை எங்களுக்குப் பிடிக்க வேறு காரணம் இருந்தது. பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல் என்று கழுத்தை அறுக்காமல் எங்களுக்கு இணையாக ஆடவும் பாடவும் தயாராக இருப்பார். அவர் பாடம் நடத்துவதுபோலவே இராது.

மழையும் குளிரும் இல்லாத நாட்களில் மரத்தடியில் வெட்டவெளியில்தான் வகுப்பு. தமிழ்ப் பாடத்தோடு அது நிற்காது. பறவைகள், மலர்கள், மரங்கள், விலங்குகள், நட்சத்திரங்கள் என்று பிரபஞ்ச ரகசியமே அங்கு விரியும். ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை இருக்கும். கதை மூலமே எனது உலகம் இதழ் இதழாகப் பூ விரிவதுபோல மலர்ந்தது, வண்ணங்கள் மிகுந்த சினேகிதமான உலகமாக. அதுவே சத்தியம் என்று தோன்றிற்று. அது ஒரு கற்பித உலகமாக நிச்சயம் இருக்கவில்லை. உயர் நிலைப்பள்ளியில் மிஸ் கோமளம் கம்பனையும் வள்ளுவனையும் இளங்கோவையும் நேசிக்கக் கற்றுக்கொடுத்தார். பாண்டியனின் சபையில் கண்ணகி வந்து நின்று நீதி கேட்ட அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் ‘யானோ அரசன், யானே கள்வன்’ என்று பாண்டியன் இறந்ததும் ‘தன்னுயிர் கொண்டு அவனுயிர் தேடினள் போல் பெருங்கோப்பெண்டும் ஒறுங்குடன் மாய்ந்தனள்’ என்ற வரியைச் சொல்லிச் சொல்லி ரசிப்பார். ஆண்டாளின் ‘பால்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழிவார’ என்ற வரிகளை அவர் விளக்கும்போது எங்கள் நாவில் நீர் ஊறும். இப்பவும் சர்க்கரைப் பொங்கல் சாப்பிடும் போதெல்லாம் மிஸ் கோமளத்தின் நினைவு வருகிறது.

ஜனகம்மாவும் பாரதியும்

தீவிர காந்தி பக்தையும் பாரதியின் உபாசகியுமான எங்கள் பாட்டு டீச்சர் ஜனகம்மா பாடும் ‘விடுதலை, விடுதலை, விடுதலை!’ என்ற ஓங்கிய குரல் மனசைச் சிலிர்த்து பாரதியிடம் நேசம் கொள்ளவைத்தது. பாரதியின் பல பாடல்கள் பாடம் ஆனது பத்து வயதில்.

ஆசிரியைகளின் ஈடுபாடே என்னைத் தீவிர வாசிப்புக்கு அழைத்துச் சென்றது. நான் எட்டாம் வகுப்பை முடிப்பதற்குள் ஜேன் ஆஸ்டின் , ப்ராண்டே சகோதரிகள், அலெக்சாண்டர் ட்யூமா, சார்ல்ஸ் டிக்கன்ஸ் என்று கைக்குக் கிடைத்த புத்தகங்களை எல்லாம் வாசித்திருந்தேன். விகடன், கல்கி, கலைமகள் ஆகிய பத்திரிகைகளில் வந்த கதைகளையெல்லாம் வரி விடாமல் படிப்பேன். அத்துடன் அது நிற்காது. பள்ளிக்குச் செல்லும் வழியில் தமிழ் தெரியாத என் சினேகிதிகளுக்கு லக்ஷ்மி, கல்கி, ஜெயகாந்தன் ஆகியோரின் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்வேன். அதைக் கேட்க ஆசிரியைகள்கூடக் காத்திருப்பார்கள்!

ஓடி ஓடி விளையாடு

இப்போது நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது - பள்ளிப் படிப்பு மிகச் சரளமாக நகர்ந்ததும், பத்தாம் வகுப்பில் மிக அதிக மதிப்பெண் வாங்கித் தேர்ந்ததும், எந்தவித டென்ஷனும் இல்லாமல் முடிந்தது எப்படி என்று. அந்தக் காலத்தில் தரம் குறைவாக இருந்ததா? குறைவுதான் என்று இன்றைய பாடத்திட்டங்களைப் பார்க்கும்போது மலைப்பு ஏற்படுகிறது. இன்றைய குழந்தைகள் அவர்களுக்குக் கிடைக்கும் அனுபவங்களால் அதிக புத்திசாலிகளாக இருக்கிறார்கள். சந்தேகமே இல்லை. ஆனால், அன்று பல திசைகளில் மனசு சிதறாமல் குறிப்பிட்ட விஷயங்களில் மட்டும் கவனம் குவிந்திருந்தது. விளையாட்டுக்கு என்று ஒரு வகுப்பு தினமும் உண்டு. விளையாடியே ஆக வேண்டும். நான் சற்று சோம்பேறி. ஒரு புத்தகத்துடன் ஒதுங்குவதைப் பார்த்தால் டீச்சர் உடனடியாகத் துரத்த வருவார். ‘‘வெறும் புத்தகப் புழுவாக இருந்தால் வெளி உலகத்தில் நீ சுழிப்பாய்’’ என்பார்.

கொண்டாட்டமோ கொண்டாட்டம்

எது எப்படியோ அன்று பெற்றோர்கள் அதிக நிம்மதியுடன் இருந்தார்கள். பள்ளியில் சுலபமாகச் சேர்க்க முடிந்தது. கட்டணம் மிகக் குறைவாக இருந்தது. பள்ளிச் சிறுவர்களுக்கோ வாழ்வே கொண்டாட்டமாக இருந்தது. படிப்பில் ஆசை இருந்தவர்கள் சுயமாகப் படித்தார்கள். நல்லாசிரியர்கள் அவர்களிடம் அக்கறைகொண்டு உற்சாகப்படுத்தினார்கள். எந்தத் திணிப்பும் இல்லை. நிர்ப்பந்தமும் இல்லை. இன்றைய வாய்ப்புகள் அன்று இல்லை. அதனாலேயே இன்றைய போட்டியும் அழுத்தமும் அன்று இல்லை.

ரொம்பப் படிக்காதே

எனது பள்ளிப் பருவத்துத் தாக்கமே எனது இரு குழந்தைகள் வளர்ப்பில் என்னை வழிநடத்திற்று. நல்ல வேளையாக அவர்கள் வளரும் சமயத்தில் அதிகபட்ச தொலைக் காட்சி அலைவரிசைகள், கம்ப்யூட்டர் கேம்ஸ், கைபேசிகள் என்கிற கவன ஈர்ப்புகள் இல்லை. நான் அவர்களுக்கு விளையாட்டுச் சாமான்களே வாங்கிக்கொடுத்ததில்லை. பரிசாக வந்தவையே வீட்டில் இருக்கும். நான் அவர்கள் முதல் வார்த்தை பேசுவதற்கு முன்பே புத்தகங்கள் வாங்க ஆரம்பிப்பேன். அவர்களது கவனமெல்லாம் புத்தகத்தில் செல்லும்படி கதைகள் சொல்வதும் சொற்களைப் பழக்குவதும் எங்களுக்குள் நடந்த விளையாட்டு. இருவரும் இன்றும் தீவிர வாசிப்பாளர்களாக இருப்பதற்கு அதுவே காரணம் என்று தோன்றுகிறது. அவர்கள் எனது ஆசான்களாக உணர்கிறேன். அவர்கள் பள்ளியில் படிக்கும்போது அவர்களை நான் ‘படி படி’ என்று வற்புறுத்தியதில்லை. ‘ரொம்பப் படிக்காதே’ என்று சொன்ன முட்டாள் தாய் நான்.

இன்றைய பள்ளிப் படிப்பு? நினைத்தாலே தலை சுற்றுகிறது. வாழ்க்கை இப்போது அதிக சிக்கலானது - பெற்றோர் களுக்கு. அது ஒரு பத்ம வியூகம். அதில் சிக்கிக் கொண்ட அபிமன்யுகள் நாம்.

- வாஸந்தி, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: vaasanthi.sundaram@gmail.com
தமிழ் இந்து நாளிதழ் கட்டுரை

Tuesday 28 April 2015

சட்டத்துக்கு சவால் விடும் தனியார் பள்ளிகள்

அடிப்படை உரிமையான “கல்வி உரிமைச் சட்டத்தை” அமல்படுத்த முடியாது என்றும் கல்வி உரிமைச் சட்டத்தின் முக்கியசரத்துக்களுக்கு எதிராகவும் கோரிக்கைகளை உருவாக்கி தமிழக ஆளுநர் ரோசையா தலைமையிலேயே, தனியார் பள்ளி முதலாளிகள் தீர்மானம் இயற்றியுள்ளனர்.தமிழகத்தில் உள்ள மெட்ரிக், நர்சரி, பிரைமரி மற்றும் சிபிஎஸ்இ ஆகிய தனியார் பள்ளிகளின் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வெள்ளிவிழா மாநாடு கடந்த ஏப்ரல் 23 அன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழக ஆளுநர் ரோசையா தலைமை தாங்கினார்.



கல்வி உரிமைச் சட்டத்தின் பல்வேறு முக்கிய சரத்துக்களை நிறைவேற்ற முடியாது என்றும் அதற்கு எதிரான கோரிக்கைகளை தீர்மானங்களாக உருவாக்கியும் இந்த மாநாடு அறிவித்துள்ளது. இந்த செய்தி பிப்ரவரி 24 தேதியிட்ட அனைத்துப் பத்திரிக்கைகளிலும் வெளிவந்துள்ளது. ஒரு மாநில ஆளுநர் தலைமையில் நடைபெற்ற தனியார் பள்ளி உரிமையாளர்களின் மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்களை இயற்றியுள்ளது ஜனநாயகத்தைக் கேலிக்கூத் தாக்குவதாக உள்ளது.

தீர்மானங்கள்

கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவீத இடஒதுக்கீட்டின்படி சேர்க்கப்பட்ட குழந்தைகளுக் கான கட்டணங்களை தமிழக அரசு இதுவரை கொடுக்காமல் இருப்பதால், இந்த ஆண்டு முதல் கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவீத இட ஒதுக்கீட்டின்படி சேர்க்கைகள் நடத்த முடியாது.

அங்கீகாரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பல்லாயிரம் பள்ளிகளுக்கும் எந்தவிதமான நிபந்தனையும் இன்றி உடனே அங்கீகாரம் வழங்க வேண்டும்.

மாணவர்களைக் கண்டிக்கும் உரிமையை ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

விதிமீறி கட்டப்பட்ட பள்ளிக் கட்டடங்களை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

அங்கீகாரம் பெற்று பத்து ஆண்டுகள் ஆன அனைத்துப் பள்ளிகளுக்கும் நிரந்தர அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

நில விதிமுறையில் விலக்கு அளிக்க வேண்டும்.

அரசு வசூலிக்கும் கல்வி வரியை தனியார் பள்ளிகளுக்கும் செலவிட வேண்டும்.

எட்டாம் வகுப்புவரை கட்டாயத் தேர்ச்சி என்ற முறையை உடனே ரத்து செய்ய வேண்டும்.

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாநில அரசிடம் தடையில்லா சான்று பெறும் முறையை ரத்து செய்ய வேண்டும்.

பள்ளிப் பேருந்துகள் மாநிலம் முழுவதும் செல்ல பெர்மிட் கொடுக்க வேண்டும்.

என்றெல்லாம் கோரியுள்ளனர்.

பெரும்பாலான தனியார் பள்ளிகள் கல்வி உரிமைச்சட்டத்தை அமல்படுத்துவதில் ஏற்கனவே காட்டி வரும் வெறுப்பைப் பற்றி நாம் அறிவோம். கல்வி உரிமைச்சட்டத்தின் எந்த விதமான சரத்துக்களையும் அமல்படுத்துவ தில்லை என்று தொடர்ந்து மறுத்து வரும் தனியார் பள்ளிகள் தற்போது ஆளுநர் தலைமையிலேயே, அரசியல் சாசனத்திற்கு எதிரான தீர்மானங்களை இயற்றி எதிர்க்கத் துணிந்து உள்ளனர் என்பதுதான் இங்கு முக்கியமான விசயமாகும். தமிழகத்தில் விரல் விட்டு எண்ணும் எண்ணிக்கையில் உள்ள ஓரிரு தனியார் பள்ளிகள் மட்டுமே 25 சதவீத இட ஒதுக்கீடு முறையை ஓரளவு நிறைவேற்றின. மற்ற அனைத்துப் பள்ளிகளும் இந்த சரத்தை வெறும் காகித அளவில் மட்டுமே நிறைவேற்றியுள்ளன எனலாம்.

கடந்த 2011ஆம் ஆண்டு, தேசியக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உத்தரவுப்படி, மதுரையில் உள்ள மனித உரிமைக் கல்வி நிறுவனத்தின் மூலம் சிவகங்கை, வேலூர், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில், குறிப்பிட்ட பள்ளிகளில் இது சம்பந்தமாக ஆய்வுசெய்த போது 25 சதவீத இட ஒதுக்கீடு சரத்து எந்தத் தனியார் பள்ளியிலும்முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வில்லை என்ற உண்மை தெரிய வந்தது.

இதற்குநம்மை ஆளும் மத்திய மற்றும் மாநில அரசாங் கங்களின் கண்டுகொள்ளா போக்குதான் அடிப்படைக் காரணமாகும். இதுவரை பெரும்பாலான தனியார் பள்ளிகள் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் படியான சேர்க்கை முறையை வெளிப்படைத் தன்மையுடன் கடைப்பிடிக்கவே இல்லை. சில பள்ளிகள் மட்டும் இவ்வாண்டு முதல் 25சதவீத இட ஒதுக்கீட்டின் படி கடைப்பிடிப்பதாகக் கூறி சேர்க்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களிடம் கட்டணத்தை நீங்கள் கட்டிவிடுங்கள்; அரசு கொடுத்ததும் நாங்கள் உங்களை அழைத்து திருப்பி தந்து விடுகின்றோம்;

இதை வெளியில் யாரிடமும் கூற வேண்டாம் என்று கூறி நடைமுறைப் படுத்துகின்றனர். நமது அரசியல் அமைப்பு சாசனத்தின் பிரிவு 21 ஏ யின்படி இந்திய நாடாளுமன்றத்தால், கடந்த 2010 - ஏப்ரல் 1 முதல், கல்வி உரிமை என்பது அடிப்படை உரிமை ஆக்கப்பட்டு “குழந்தைகளின் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் - 2009” என்ற சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. அடிப்படை உரிமைகள் என்றால் இந்த உரிமைகளை ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கவேண்டியது அரசின் கடமை ஆகும். இந்த உரிமைகளைப் பெறுவதில் எந்த அரசாங்கமோ, நீதிமன்றமோ மறுக்க முடியாது என்பதாகும். இந்தச் சட்டம் இயற்றப்பட்ட போது, இதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், குழந்தைகள் நிபுணர்கள், இடதுசாரிகள் மற்றும் இந்திய மாணவர் சங்கம் ஆகியோர் ஆலோசனை தெரிவித்தார்கள். ஆனால் அப்போதைய மத்திய அரசு இவற்றைக் கண்டுகொள்ளவில்லை.

சர்வதேச அளவில் கல்வி உரிமைக்கான சட்டம் இயற்றிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 128-வது நாடாகும். கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்படுவதற்காக சுதந்திரத்திற்கு முன்னரும், சுதந்திரத்திற்கு பின்னருமாக சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேல் போராட்ட வரலாறும், 1992ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் இந்தச் சட்டம் வருவதற்கான மைல் கற்கள் ஆகும்.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கியக் கடமைகளும் உள்ளன. அதன்படி...

தனியார் பள்ளிகளில், அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது.

பள்ளிச் சேர்க்கையின் போது எந்தவித நுழைவுத்தேர்வும் நடத்துதல் கூடாது.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளியின் சேர்க்கையின் போது, முதல் வகுப்பில் அருகாமையில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு செய்தல் வேண்டும். இந்தக் குழந்தைகளுக்குரிய கட்டணத்தை அரசு செலுத்திவிடும்.

கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள தர நிர்ணயங்களின் (கட்டிடம், மைதானம், சுற்றுச்சுவர், ஆசிரியர் நியமனம் ஆகியவைகளில்) படி பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதை உறுதிப்படுத்தி அரசு அங்கீகாரம் வழங்கப்படும். அதே போல் பழைய பள்ளிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் அங்கீகாரம் புதுப்பிக்கப்படும்.

குழந்தைகளை மனதளவிலோ அல்லது உடலளவிலோ எந்தவிதத் துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கக் கூடாது.

எட்டாம் வகுப்பு வரையுள்ள எந்தக் குழந்தையையும் தேர்வு என்ற காரணத்தைக்காட்டி, பள்ளியை விட்டு வெளியேற்றக் கூடாது.

தரமான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை நாடு முழுமைக்கும் உறுதிப்படுத்த வேண்டும்.

மேற்கண்ட சரத்துக்கள் அனைத்தும், கல்வி உரிமைச் சட்டத்தில், தனியார் பள்ளிகள் பின்பற்ற வேண்டிய ஒரு சில சரத்துக்களே ஆகும்.இந்த நேரத்தில் சமீபத்திய ஒரு தகவலை நினைவு கூர்வது அவசியமாகும். குஜராத் மாநிலத்தில் 175 தனியார் பள்ளிகள் தொடர்ந்து கல்வி உரிமைச் சட்டத்தின் மாணவர் சேர்க்கையில் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மறுத்தன.

இது சம்பந்தமாக குஜராத்தில் உயர்நீதிமன்றத்தில், தலித்ஹாக் ரக்சாக்மஞ்ச் என்ற தன்னார்வ நிறுவனம் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தது. இதன் முடிவில் குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் 19ஆம் தேதி அன்று ஒரு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி அடிப்படை உரிமையான கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த மறுக்கும்பள்ளிகள் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யப்பட வில்லை? என்றும் இந்தச் சட்டத்தின் பிரிவு 12 ன் படியான கடமைகளை மறுக்கும் பள்ளிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தலைமை நீதிபதி வீ.எம்.சஹாய் மற்றும் நீதிபதி ஆர்.பி.தோலாரியா ஆகியோர் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே தமிழக அரசு உடனடியாக தனியார் பள்ளி உரிமையாளர்களின் இந்த சட்டவிரோதப் போக்கைக் கண்டித்து நீதிமன்றம் செல்ல வேண்டும். தமிழகத்தின் உயர்நீதி மன்றம் தன்னிச்சையான வழக்காக எடுத்து இந்தத் தீர்மானங்கள் பற்றி விசாரிக்க வேண்டும். மேலும் தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்துவதுடன் கீழ்க்கண்ட நடைமுறைகளை அமல்படுத்த முன்வர வேண்டும்.குழந்தைகளுக்கான கட்டணங்களை, தனியார் பள்ளிகள் அனைத்தும் வங்கி மூலம் மட்டுமே பெறுதல் வேண்டும்.கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் படியான பள்ளிச் சேர்க்கையை ஒவ்வொரு தாலுகா/ஒன்றிய அளவிலும் குழுக்கள் ஏற்படுத்தி=- வெளிப்படைத் தன்மையுடன் நடைமுறைப்படுத்த வேண்டும்.

கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் படியான பள்ளிச் சேர்க்கைக்காக அரசு செலுத்த வேண்டிய தொகையை ஒவ்வொரு ஆண்டும் சரியான நேரத்தில் உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலமாக தனியார் பள்ளிகளுக்கு செலுத்தி பள்ளிச் சேர்க்கையை ஒவ்வொரு முறையும் சமூகத் தணிக்கை செய்தல் வேண்டும்.தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் அனைத்து சரத்துக்களும் முழுமையாக நடைமுறைப்படுத்த வைக்கப்படவேண்டும். தனியார் பள்ளிகள் அனைத்திலும் பெற் றோர் குழுக்கள் அமைக்கப்பட்டு அரசு விதிமுறைகள் மீறாமல் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதே கல்வி உரிமை ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

ரா.சொக்கு
கட்டுரையாளர், மனித உரிமைக் கல்வி நிறுவன ஆய்வாளர், மதுரை
நன்றி:தீக்கதிர் நாளிதழ்


கல்வி உரிமைச் சட்டத்தை அமலாக்குமா தமிழக அரசு?


சென்னை, நவ. 28-

கல்வி உரிமைச் சட்டத்தின்படி 2015-16ம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழகப் பள்ளிக் கல்வி இயக்குநரை, இந்திய மாணவர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக நலிந்த சமூகத்தினரது குழந்தைகளுக்கு 25 சதவீதம் இலவசமான மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்திட வேண்டும்.

ஆனால் தனியார் பள்ளிகள் கடந்த சில வருடங்களாக இதில் வெளிப்படைத் தன்மையோடு மாணவர்களைச் சேர்க்காமல் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. பொய்யான பெயர் பட்டியலை தயார் செய்து மோசடியில் ஈடுபடவும், இதன்படி அரசிடம் நிதி பெறவும் முயற்சிக்கின்றன. ஆகவே இக்கல்வியாண்டில் வெளிப்படைத் தன்மையோடு பள்ளிக் கல்வித்துறை உறுதியோடு மாணவர் சேர்க்கை நடைபெறுவதையும் மாநிலம் முழுவதும் குறிப்பிட்ட ஒரே காலத்திற்குள் மாணவர் சேர்க்கை நடைபெறுவதையும் உறுதிப்படுத்திட வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.உச்சிமாகாளி, செயலாளர் ஜோ.ராஜ்மோகன் ஆகியோர் பள்ளிக்கல்வி இயக்குநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளனர்.

மேலும், இதற்கான பொதுவிண்ணப்ப படிவத்தை பள்ளிக் கல்வித்துறை வெளியிடுவதோடு, அனைத்து பள்ளிகளிலும் விண்ணப்பங்கள் கிடைப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். இதனடிப்படையிலான மாணவர் சேர்க்கையில் எவ்வளவு விண்ணப்பங்கள் வந்துள்ளன என்பதையும், ஒற்றைச் சாளரமுறையிலான மாணவர் சேர்க்கையின் முழுவிவரங்களை பெயர் பட்டியலோடும் பள்ளி தகவல் பலகையில் வெளியிட வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை இணைய தளத்திலும் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணங்களுக்கு மேல் கூடுதலாக வசூலிக்கும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கையை பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும். கட்டணம் செலுத்துவதை முழுவதும் வங்கி நடவடிக்கையோடு இணைத்திட வேண்டும். கட்டாய நன்கொடை என்ற பெயரில் நிதி வசூலிப்பதையும் தடுத்திட வேண்டும். சட்டத்திற்கும், அரசின் உத்தரவுகளுக்கும் எதிராக செயல்படும் பள்ளி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வதை உறுதி செய்திட வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணங்களுக்கு மேல் கூடுதலாக வசூலிக்கும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கையை பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும்.-இந்திய மாணவர் சங்கம்

அஜிதனும் அரசுப் பள்ளியும்

அஜிதனுக்கு எல்கேஜி, யுகேஜி முடிந்ததும் பத்மநாபபுரம் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்த்தோம். பள்ளியில் சொன்னார்கள், “பையன் சராசரிக்கும் மிகக் கீழே, அவனுக்கு எழுதவே வரவில்லை” என. சோதித்துப் பார்த்தால் அது உண்மை. அஜிதனுக்கு சிறு வயதிலேயே இடது கைப்பழக்கம். அதைப் பொது வாகக் கவனித்திருந்தோம் என்றாலும், பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மழலையர் பள்ளியில் அவனை முரட்டுத்தனமாக வலது கைக்குப் பழக்கியிருக்கிறார்கள். அவன் அதற்குச் சரிவராதபோது அவனைத் தொடர்ந்து அடித்திருக்கிறார்கள். சின்ன வயதில் மழலையர் பள்ளிக்குப் போக மாட்டேன் என்று அவன் தொடர்ந்து அடம்பிடிப்பான். அது சிறுவயதில் என் வழக்கமும்கூட.

நான் ஐந்தாம் வகுப்பு வரை அடம்பிடித்தவன். “நீ இப்படி ராப்பகலா அவன்கிட்டே கொஞ்சிக் குலவினா அவன் எப்படி ஸ்கூலுக்குப் போவான்..?” என்று என் மனைவி கேட்பாள். அதற்காகப் பிள்ளையைக் கொஞ்சாமல் விட முடியுமா? ஆக, அஜிதன் மனதில் பள்ளிக் கல்வி பற்றி மிக ஆழமான ஒரு கசப்பை, எதிர்ப்புணர்வை அந்த மழலையர் பள்ளி உருவாக்கியிருந்தது.

நான் அவனை மீண்டும் இடது கைக்கு மாற்ற முயன்றேன். அது இன்னும் சிக்கலை உருவாக்குகிறது என்று தோன்றவே விட்டுவிட்டேன். வலது கைக்குப் பழகிவிட்டிருந்தான். ஆனால், எழுத்துகள் மிகமிகச் சிக்கலாக இருக்கும். சுந்தர ராமசாமியிடம் ஒருமுறை இதைப் பற்றிச் சொன்னேன். “நீங்க டீச் பண்ணாதீங்கோ… நீங்க அவன் எதிர்காலத்தைப் பத்தி கவலைப்பட்டு, அவன் மேல ஏறி உட்கார டிரை பண்ணுவீங்க… வேணுமின்னா, ட்யூஷன் வைங்க… அப்டியே விட்டுருங்க… செடிகள்லாம் பாறையையே மீறி வளந்திருது. குழந்தைகளுக்கு எல்லாத்தையும் தாண்டி வளரக்கூடிய உயிர்ச்சக்தி இருக்கு…” என்றார்.

அப்போது ஆரம்பித்த டியூஷன். ஆனால், டியூஷன் ஆசிரியர்கள் என்னைத் தெருவில் பார்த்தால் புலம்புவார்கள். “இ-ங்கிற எழுத்தை மட்டும் ஒரு ரெண்டாம் கிளாஸ் பையனுக்கு ஒரு வாரமா சொல்லித் தாறேன் சார்…” என்பார்கள். அவன் எப்படியோ ஒன்றை மட்டும் கற்றுக் கொண்டான். அது, மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளைப் போன்ற பாவனை. இதை எங்கோ அவன் கவனித்திருக்க வேண்டும். ஆசிரியைகள் எது சொன்னாலும் வாயை ஒருமாதிரி காட்டுவான். மண்டையை உருட்டுவான். அவர்கள் மெல்லமெல்ல அவனை அடிப்பதை நிறுத்தவே அதைத் தொடர ஆரம்பித்தான். ஆனால், இது வெளியேதான். வீட்டில் அவன் அசாதாரணமான சுட்டி. அவனுடைய நகைச்சுவை உணர்வையும் சாகசத்தன்மையையும் நான் ஒவ்வொரு கணமும் வியந்துகொண்டிருந்தேன்.

இரண்டாம் வகுப்பு ஆசிரியை என்னிடம் சொன்னார், “சார், பையனுக்கு எதாவது டிரீட்மென்ட் எடுங்க சார்… பொறவு சொல்லலேன்னு சொல்லப்படாது.”

அடிவயிற்றைக் கவ்விய அச்சத்துடன் “என்ன மேடம்?” என்றேன்.

“அவனுக்கு பிரெய்ன் குரோத்ல என்னமோ பிரச்சினை இருக்கு சார்….”

நான் கடும் சினத்துடன், “சும்மா எதாவது சொல்லி அவன் வாழ்க்கையக் கெடுத்திராதீங்க… அவனுக்கு ஒண்ணு மில்லை. கைமாறி எழுதவெச்சதுனால கொஞ்சம் எழுத்து மோசமா இருக்கும்… அதுக்காக?” என்றேன். எனக்குக் கண்ணீரே வந்துவிட்டது.

“நாங்க சொல்லியாச்சு... இனி எங்க மேலே பழி சொல்லக் கூடாது.”

“ ஏய்… இனி இந்தப் பேச்சை யாராவது எடுத்தீங்கன்னா வெட்டிப் போட்ருவேன்…” என்று தெருவில் நின்று கூவினேன். பையனை அணைத்தபடி கிட்டத்தட்ட ஓடினேன்.

என் மனைவியிடம் சொன்னபோது அவள் கதறிவிட்டாள். ஒன்றும் தெரியாமல் அஜிதனும் அழுதான். அவனையே பார்த்தேன். உண்மையிலேயே மூளைத்திறனில் ஏதாவது சிக்கலா? வீடு முழுக்கப் புத்தகங்கள். இரவுபகலாகப் புத்தகம் பார்க்கும் புத்தகப் பிரியன் அவன். அந்த வயதிலேயே நான் அவனுக்குப் பல நூறு கதைகளைச் சொல்லியிருந்தேன். கணிசமான கதைகளை அவனே மீண்டும் சொல்வான். மந்த புத்தி என்று சொல்லும்படி என்ன இருக்கிறது? ஒருவேளை வளர வளரத்தான் தெரியுமோ? ஒன்றும் புரியவில்லை.

சில நாட்கள் கழித்துத்தான் அவன் பள்ளியில் அப்படி நடிப்பதைக் கண்டுபிடித்தேன். ஆனால், அது அவனுக்கே தெரியாது. அவனுக்கு எல்லா மிஸ்ஸும் ‘கெட்ட மிஸ்’தான். ஆசிரியர்கள் அவனை மனமார வெறுத்தார்கள். எல்லாப் பாடங்களிலும் அவனுக்குச் சிவப்பு மைதான். எப்போதோ ஒருமுறை எழுபது மதிப்பெண் கணிதத்துக்கு வாங்கியது தவிர்த்தால், அவன் எப்போதுமே தேர்வுகளில் வென்றதில்லை.

ஆனால், மூன்றாம் வகுப்பு முதல் அவன் பெரும் வாசகன். அவன் ‘சிவகாமியின் சபத’த்தை வாசிக்கும்போது ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். ஆசிரியையோ அவனுக்கு நூற்றுக்கு பூஜ்யம் மதிப்பெண் அளித்தார். சோவியத் ருஷ்ய வெளியீடுகளான அறிவியல் நூல்களை இரவுபகலாகப் படிப்பவனுக்கு அறிவியலில் ஒரே பாடத்தில் ஒரே வினாவைக்கூட எழுதத் தெரியவில்லை. முனைவர் அ.க.பெருமாளின் அத்தனை வரலாற்று நூல்களையும் ஆறாம் வகுப்புக்குள் அவன் வாசித்திருந்தான். வரலாற்றில் ஒருபோதும் இரட்டை இலக்க மதிப்பெண் வென்றதில்லை.

முதல் பிரச்சினை எழுத்துதான். பூக்கோ சொல்லியிருக்கிறார் என்று நினைவு, நம் பண்பாட்டில் முதலில் குழந்தையின் விரல்களுக்கு ஆக்ரோபேடிக்ஸ் சொல்லிக் கொடுக்கிறோம் என. அதைக் கற்காமல் உலகமே அவனுக்கு இல்லை. எழுத முடியாமையில் இருந்து உருவான கசப்பு காரணமாகப் பள்ளி மேலேயே கடும் துவேஷம்.

அதன் பின் நகர்கோவிலில் புகழ்பெற்ற கிறிஸ்துவப் பள்ளியில் அவனைச் சேர்த்தோம். அவன் வாழ்க்கையை நரகமாக்கியது அந்தப் பள்ளி. கூடவே, என் வாழ்க்கையையும். அனேகமாகத் தினமும் எனக்கான கட்டளைகள். அதன்படி பள்ளிக்குச் சென்றால், மணிக் கணக்காக யார் யாருக்காகவோ காத்திருக்க வேண்டும். அப்புறம், கொலைக் குற்றவாளியை நடத்துவதுபோல நடத்துவார்கள். இதுநாள் வரையிலான வாழ்க்கையில் நான் மிக அதிகமாக எங்காவது அவமானமும் சிறுமையும் பட்டிருக்கிறேன் என்றால், அது அந்தப் பள்ளியில்தான்.

அஜிதனை, அவன் ஒரு உதவாக்கரை என்றும் முட்டாள் என்றும் முழுமையாக நம்பச் செய்தது அந்தப் பள்ளி. அந்தப் பள்ளி அளித்த அழுத்தம் காரணமாக நானும் அக்காலத்தில் அவனிடம் சற்றே கடுமையாக நடந்துகொண்டிருக்கிறேன். அடித்திருக்கிறேன். புத்தகங்களைக் கிழித்து எறிந்திருக்கிறேன். அதன் பின் அவனை அணைத்துக் கண்ணீருடன் சமாதானம் செய்வேன். இரவில் தூங்கும் அவனைப் பார்த்தபடி நிற்பேன்.

அவன் ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஒருநாள் என் கழுத்துவலிக்காக காயத்திருமேனி எண்ணெயைப் போட்டு நீவிவிட அவனிடம் சொன்னேன். நான் குப்புறக் கிடக்க அவன் என் மீது அமர்ந்திருந்தான். மனைவி அவ்வழியாகச் சென்றாள். என்னிடம் “ஏன், சொல்லியிருந்தா நான் போட்டுவிட மாட்டேனா?” என்றாள்.

“இதுல போட்டிருக்கு… உலகத்திலேயே நமக்கு யாரை ரொம்பப் பிடிக்குமோ அவங்கதான் போட்டுவிடணும்னு…” என்றேன்.

சட்டென்று முதுகில் கண்ணீர் சூடாக விழுவதை அறிந்தேன். எழுந்து பார்த்தால் அழுதுகொண்டிருந்தான்.

“என்னடா?” என்றேன்.

குறுகி அமர்ந்து அழுதவன், “உனக்கு நெஜமாவே என்னைய ரொம்பப் பிடிக்குமா?” என்றான். “என்னடா… இது முட்டாள்தனமா கேட்டுட்டு… அப்பாவுக்கு உலகத்துலயே உன்னைத்தாண்டா ரொம்பப் பிடிக்கும்” என்றேன். அப்படியே சீறல்போன்று ஒலி எழுப்பி அழுதான். “நான் நெனைச்சேன், உனக்கு என்னைப் பிடிக்கல்லேன்னு… நீ பெரிய ஆளு… எனக்கு ஒண்ணுமே தெரியல. அதான் நீயும் அம்மாவும் என்னை அடிக்கிறீங்க. நான் இனிமே ஸ்கூலுக்குப் போகல. என்னைய ஓட்டலிலே சேத்துவிடு. நான் கஷ்டப்பட்டு வேலை செஞ்சு ரூபா கொண்டுவந்து அம்மாட்ட குடுப்பேன்.”

அந்த நிமிடத்தில் என் நெஞ்சு பொங்கியதை இப்போதும் கை நடுங்காமல் எண்ண இயலவில்லை. எப்போதோ அந்த ஓட்டல் பேச்சு மனைவி வாயில் வந்திருக்கிறது - படிக்காவிட்டால் ஓட்டல் வேலைக்குத்தான் போக வேண்டும் என்று. அப்படியே அவனை அணைத்துக்கொண்டேன். “நீ மக்குனு யாருடா சொன்னா?” என்றேன்.

“எங்க மிஸ் எல்லாருமே சொல்றாங்க. அம்மாவும் சொன்னாங்க. நீகூடத்தான் சொன்னே...” என்றவனை அணைத்துக்கொண்டு, “நீ மக்குன்னா உலகத்துல யாருமே புத்திசாலி இல்லடா” என்றேன்.

அன்று அவனை வெளியே கூட்டிப்போய்ப் பேசினேன். நான் ஒரு மாணவனாக எத்தனை கொடுமைப்படுத்தப்பட்டேன் என்று சொன்னேன். என்னைப் பெரும்பாலான ஆசிரியர்கள் வெறுத்தார்கள். அடித்தார்கள். எனக்குக் கணக்கு கொஞ்சம் கூட வரவில்லை. என் அப்பா என் விருப்பத்தை மீறி என்னை வணிகவியல் பாடத்தில் சேர்த்தார். நான் அதில் ஒரு முறைகூடத் தேர்ச்சி பெறவில்லை, படிப்பை முடிக்கவும் இல்லை.

“எங்க அப்பாட்ட பணம் இல்லை. அதனால பயப்பட்டார். நான் அப்படி இல்லை. நீ இனிமே உனக்குப் பிடிச்சதை மட்டும் படி. இன்னும் மூணு மாசம். இந்தப் பள்ளிக்கூடத்திலேருந்து உன்னைக் கூட்டிட்டுப்போய் கவர்மென்ட் ஸ்கூலிலே சேர்க்கிறேன். இனிமே உன்னை யாருமே படிப்பு விஷயமா திட்ட மாட்டாங்க… போருமா?”

மறு வருடம் அரசுப் பள்ளியில் சேர்த்தபோது நண்பர்கள் பலரும் எதிர்த்தார்கள். ஆனால், அப்பள்ளி அவனுக்குக் காட்டிய உலகமே வேறு. வீட்டில் சாப்பாடு இல்லாமல், பையன்கள் மதியம் சாப்பிடாமல் பசித்திருப்பார்கள் என்ற தகவல் அவன் உலகையே பல நாட்கள், பல மாதங்கள் கொந்தளிக்கச் செய்திருக்கிறது. தனிமையில் அதை எண்ணி அவன் கண்ணீர் விட்டிருக்கிறான். அவனது சக மாணவர்கள் சனி, ஞாயிறில் கூலிவேலைக்குச் சென்று வருவார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளவே அவனுக்குக் கஷ்டமாக இருந்தது. பெரும்பாலான நாட்களில் அவன் கொண்டுபோகும் சாப்பாட்டை பையன்கள் சாப்பிட, அவன் சத்துணவாக அளிக்கப்படும் உணவை உண்பான். மீன், இறைச்சி கொண்டுபோகும் நாட்களில் பெரிய டிபன் கேரியர் நிறைய கொண்டுசென்றாக வேண்டும். எங்கே முத்தாரம்மன் கோயிலில் கஞ்சி ஊற்றினாலும் பையன் களுடன் சேர்ந்து போய்ச் சாப்பிட்டு விடுவான். புதிய பள்ளி அவனுக்கு நண்பர்களை அளித்தது. நண்பர்கள் அவனுக்கு தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்தார்கள். பள்ளிக்கு மகிழ்ச்சியாகச் செல்லும் அஜிதனை முதல்முறையாகக் காண ஆரம்பித்தோம். பழைய பள்ளியில் விளையாட்டுகூட விளையாட்டு ஆசிரியரால் அளிக்கப்படும் ஒரு பயிற்சி. ஒருவரோடு ஒருவர் பேசுவதும் சிரிப்பதும் கடுமையான குற்றம். அதைவிட மோசமான விஷயம், நட்பு என்றால் தவறு என்றே கற்பிக்கப்பட்ட குழந்தைகள் அங்கே படித்தார்கள். அந்தஸ்து, சாதி, மதம் நோக்கி கணக்கிட்டே அங்கே நட்பு இருந்தது.

இந்த அரசுப் பள்ளியில் எல்லாமே கட்டற்றுதான். சட்டை கிழியாமல் அஜிதன் பள்ளி விட்டு வரும் நாட்கள் குறைவு. சண்டைகள் சச்சரவுகள். அதைவிடத் தீவிரமான நட்புகள். பரீட்சைக்கு முந்தைய நாள் இரவில் கூப்பிட்டுப் பொங்கும் பேரார்வத்துடன் சிலபஸ் என்ன என்று கேட்கும் சக மாணவன் அஜய்குமார்தான் அஜிதனின் உயிர் நண்பன். ஒருவனின் பையிலிருந்து பணத்தைப் பிடுங்கி இன்னொருவன் சாப்பிடலாம். “எங்க வீட்ல அம்மை தேங்காத் தொவையலையே போட்டுக் கழுத்தறுக்கிறாடா. பணமில்ல பாத்துக்கோ…உங்கம்மைட்ட நல்ல கோழியா குடுத்தனுப்பச் சொல்லு’’ என்று எந்தவிதமான கூச்சமும் இல்லாமல் சொல்லியனுப்பலாம். இந்த உலகமே வேறு.

அவனுடன் எப்போதும் பேசிக்கொண்டே இருந்தேன். அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருந்தேன். அவனிடம் நான் எதை வேண்டுமானாலும் பேசலாம். “தோளுக்கு மேலே வளர்ந்தா தோழன்னு சொல்றாங்களே அப்பா” என்பான். “ஆமாடா. அது ரைட்டுதான்..” என்றால், “அப்றம் சொல்லு மச்சி…” என்பான். அதுதான் அவன் பாணி.

ஒரு கட்டத்தில் அஜிதனுக்குப் புனைகதைகளில் ஆர்வம் போய் இயற்கையியலில் ஆர்வம் பிறந்தது. அதற்கு முதற்காரணம், சு.தியடோர் பாஸ்கரன். இரண்டாம் காரணம், அ.முத்துலிங்கம். அது தீயாகப் பற்றிக்கொள்ள அதிலேயே நாட்கள் நகர்ந்தன. பறவைகளைப் பார்ப்பது ‘லைஃப் லிஸ்ட்’ தயாரிப்பது, அதைப் பற்றிய நூல்களைச் சேகரிப்பது என ஒரு உக்கிரமான பொழுதுபோக்கு பற்றிக்கொண்டது. ‘நேஷனல் ஜியாக்ரஃபிக்’ சேனலில் ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு பெயர்கள் ஓடிக்கொண்டிருந்தன.

“எவ்ளவு பேரு…” என்றேன். “அந்த லிஸ்ட்டுல ஒரு நாள் ஜெ.அஜிதன் பேரும் இருக்கும்” என்றான். அவனிடம் ஒரு கனவு உருவாகிவிட்டிருப்பதை நான் கண்டேன். வெற்றியும் தோல்வியும் காலத்தின் அளவிலா ஆட்டத்தில் எங்கோ, எப்படியோ தீர்மானமாகிறது. ஆனால், இதேவயதில் என்னை அலைக்கழித்தது இதேபோன்ற ஒரு பெருங்கனவுதான். உக்கிரமான மின்சாரம் ஓடும் கம்பிபோல என்னை அது தகிக்க வைத்தது அன்று. அந்த தகிப்பைக் கண்டேன். இளமைக்கு அழகு அத்தகைய கனவுதான்.

அவனுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி இடையில் படி என்று சொல்வதும் இல்லை. அவன் மதிப்பெண்களைக் கவனிப்பதில்லை. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முடிந்தன. 460/500. 92%. கணிதத்தில் 99%. அறிவியலில் 97%. “அப்பா உன் மூஞ்சியில கரிய அள்ளிப் பூசிட்டேன்ல?” என்றான் சிரித்தபடி. “ஆமாடா” என்றேன். அஜிதன் சொன்னான்: “சும்மா ஜாலியாச் சொன்னேன்பா… உனக்காகத்தானே நான் படிச்சதே!”

(ஜெயமோகன் எழுதிய ‘தேர்வு’ கட்டுரையின் சுருக்கம் இது. அஜிதன் இப்போது உதவி இயக்குநர். ‘ஓ காதல் கண்மணி’யில் பணியாற்றியிருக்கிறார். )

- ஜெயமோகன்,
தொடர்புக்கு: jeyamohan.novelist@gmail.com
நன்றி: தமிழ் இந்து நாளிதழ்

மூடப்படும் நிலையிலிருந்து மீண்ட கிராம பள்ளி: ஆசிரியைகளின் முயற்சியால் நடுநிலை பள்ளியாக தரம் உயர்வு

மதுரை அருகே மூடப்படும் நிலையிலிருந்து மீண்ட அரசு தொடக்கப் பள்ளி, ஆசிரியைகளின் தொடர் முயற்சியால், தற்போது நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததாலும், ஆசிரியர்களின் அலட்சியப் போக்காலும், கிராமப் புறங்களில் மாணவர் சேர்க்கை குறைந்து பல பள்ளிகள் மூடப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானூத்து கிராமத்தில் மூடப்பட்ட நிலையில் இருந்த தொடக்கப் பள்ளி, ஆசிரியைகளின் தொடர் முயற்சியால் தற்போது நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.



இக்கிராமத்தில், கடந்த 1960-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. அப்பகுதிக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் இங்கு படித்தனர். நாளடைவில் இப்பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததாலும், பிற காரணங்களாலும் போதிய மாணவர் சேர்க்கையின்றி கடந்த 2000-ம் ஆண்டில், இந்தப் பள்ளியை மூட கல்வித்துறை ஆலோசித்தது.

அப்போது, இப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியைகளின் தொடர் முயற்சியால் தற்போது இப்பள்ளி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை அமிர்த சிரோன்மணி ‘தி இந்து’ விடம் கூறியது: கடந்த 2000-ம் ஆண்டு ஆசிரியை பணியில் சேர இப்பள்ளியை தேர்வு செய்தேன். ஆனால், போதுமான மாணவர் சேர்க்கையின்றி இந்த பள்ளியில் 6 பேர் மட்டும் படித்து வந்ததால் மூட ஆலோசிக்கப்பட்டது.

இதனால், என்னை வேறு பள்ளியை தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தினர். ஆனால், சில நாட்கள் இங்கு பணிபுரிய அனுமதி தரும்படி கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து பணியில் சேர்ந்தேன்.

பின்னர் சீமானூத்து கிராமத்தில் ஒவ்வொரு வீடாகச் சென்று பெற்றோரிடம் மாணவர்களை பள்ளியில் சேர்க்கும்படி வலியுறுத் தினோம். அடிக்கடி பெற்றோர் கூட்டங்களை நடத்தி, கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்தோம். அதற்கு பெற்றோரும் ஒத்துழைப்பு கொடுத்ததால், தற்போது எந்தவொரு மாணவரும் பிற ஊர்களுக்கு படிக்கச் செல்வதில்லை. மாணவர்களின் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தியதால் ஒவ்வொரு ஆண்டும் சேர்க்கை அதிகரித்தது. 2008-ம் ஆண்டில் இங்கு 40 மாணவர்கள் படித்தனர். அப்போது, இப்பள்ளி சிறந்த மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது.

இதையடுத்து, 2009-ம் ஆண்டில் இப்பள்ளி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்பின் பாண்டி உமாதேவி என்பவர் தலைமை ஆசிரியையாக இங்கு பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். தற்போது இங்கு 107 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு ஆரம்பக் கல்வியை முடித்து, உசிலம்பட்டி மற்றும் பிற ஊர்களில் உயர்நிலைப் பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவ, மாணவியர் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் எடுத்துவருவது எங்களுக்கு மகிழ்ச் சியாக உள்ளது. எங்களது உழைப்பு வீண் போகவில்லை.

ஆனால், இப்பள்ளிக்கு இன்னும் சுற்றுச்சுவர் இல்லை. போதுமான கழிப்பறை வசதிகளும் இல்லை. ஆசிரியர் பற்றாக்குறையும் நிலவுகிறது. இதுபோன்ற குறைபாடுகளை களைய கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டால் இப் பள்ளியில் மாணவர் சேர்க்கை மேலும் அதிகரிக்கும் என்றார்.


ஆசிரியர்கள் அன்றும்... இன்றும்... என்றும்!

நம் கல்வி... நம் உரிமை!- 

ஆங்கிலேயர் காலந்தொட்டு, விடுதலைக்குப் பின்னர் நெடுங்காலம் வரை கல்வி அளிக்கும் பொறுப்பை அரசு ஏற்றது கிடையாது. கல்வித் துறையின் நேரடி நிர்வாகத்தில் ஆசிரியர் கல்வி நிறுவனங்களோடு இணைந்த மாதிரிப் பள்ளிகள், இஸ்லாமிய மகளிர்க்கான பள்ளிகள் மட்டுமே இருந்தன. ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தில் மொத்தம் 20 பள்ளிகளுக்குக் குறைந்தவையே அரசுப் பள்ளிகள். மற்றவையெல்லாம் உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் பள்ளிகள் அல்லது உதவி பெறும் தனியார் பள்ளிகள். இந்த இரு வகைப் பள்ளிகளுக்கும் அரசு மானியம் மட்டும் வழங்கிவந்தது. அப்பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், ஆய்வு நடத்தும் கடமை கல்வித் துறைக்கு இருந்தது. ஆண்டாய்வும், திடீர் ஆய்வுகளும் நடத்தப்பெற்றதால் பள்ளிகள் சீராக இயங்கின.







விடுதலை பெற்ற சமயத்தில் நான்கு நிலைகளில் ஆசிரியர் கல்வி அளிக்கப்பட்டது. ஐந்தாம் வகுப்பு முடித்தவருக்கு கீழ்நிலை ஆசிரியர் (Lower Grade) சான்றிதழும், எட்டாம் வகுப்பு முடித்தவருக்கு உயர்நிலைச் சான்றிதழும் (Higher Grade), எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவருக்கு இடைநிலைச் சான்றிதழும் (Secondary Grade) ஆசிரியர் கல்வி முடித்த பின் கல்வித் துறையால் வழங்கப்பட்டது. பட்டப் படிப்புக்குப் பின் ஆசிரியர் கல்வி முடித்தவர் பல்கலைக்கழகப் பட்டயம் பெற்றனர். பல்கலைக்கழகம் அளிக்கும் பட்டங்களை ரத்துசெய்ய அரசுக்கு அதிகாரமில்லை என்பதால், ஆசிரியர் கல்வி முடித்தவரும் பொதுக் கல்வி இயக்குநர் அளிக்கும் ஆசிரியர் சான்றிதழைப் பெற வேண்டும். ஆசிரியர்கள் மீது அரசு ஒரு கண் எப்போதும் வைத்திருக்கும். ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ரத்துசெய்யப்பட்டால் அவர்கள் ஆசிரியராகப் பணிபுரிய முடியாது.

சுதந்திரத்துக்குப் பின் புதிய பள்ளிகள் பட்டிதொட்டி யெல்லாம் தொடங்கப்பட்டன. அவற்றுக்கான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாத நிலையில், பயிற்சி பெறாதவர்களையும் தற்காலிகமாக நியமித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. அவர்களுக்கான பணித் தகுதி விலக்கும் அளிக்கப்பட்டது. இந்நிலை ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. இத்தகைய ஆசிரியர்களிடம் கற்றவர்கள் பல துறைகளிலும் முத்திரை பதித்துவருகிறார்கள். ஆசிரியர் பயிற்சிக்கும் கற்றலுக்கும் தொடர்பு இல்லையோ என்ற ஐயம் எழக்கூடும். இந்த தற்காலிக ஆசிரியர்கள் வேறு பணி கிடைக்கும் வரையில்தான் ஆசிரியப் பணியில் இருந்தார்கள். செய்யும் பணியை ஒரே நாளாயினும் நிறைவாகச் செய்ய வேண்டும் என்ற மன உறுதியே அவர்களது தொழில் வெற்றிக்குக் காரணம்.

ஒருகட்டத்தில் கீழ்நிலையும், பின்னர் உயர்நிலையும் நிறுத்தப்பட்டன. தற்போது இடைநிலைக்கு அடிப்படைக் கல்வித் தகுதி மேனிலைக் கல்வியாக உயர்த்தப்பட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டம் பொதுத் தகுதி, ஆசிரியர் கல்விப் படிப்போடு ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது. ஆக, இன்றைய ஆசிரியரது தகுதிகள் முன்னர் இருந்ததைவிடப் பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், பழைய ஆசிரியர்களுக்கு இணையாக இவர்கள் இல்லை என்ற கூற்றை ஏற்பது கடினமாக உள்ளது.

அக்கால ஆசிரியர்கள்

அக்காலத்தில் மிகச் சாதாரணமான குடும்பங்களிலிருந்து தான் பெரும்பாலானோர் ஆசிரியர் தொழிலுக்கு வந்தனர். அவர்கள் ஆசிரியர் கல்வி படிக்கும்போது உதவித்தொகை கொடுப்பார்கள். ஆசிரியர் கல்வி பயிலக் கட்டணம் ஏதும் கிடையாது. உதவித்தொகை விடுதிக் கட்டணத்துக்கும் பிற செலவுகளுக்கும் போதுமானது. இன்னும் ஒரு வகை ஆசிரியர்கள் உண்டு. நிலபுலம் உள்ளவர்கள், வட்டித் தொழிலில் ஈடுபடுபவர்கள் போன்றவர்கள். பெரும்பாலும் உள்ளூரில் உள்ள பள்ளியில் ஆசிரியர் பணி மேற்கொள் வார்கள். வறுமை நிலையிலுள்ள ஆசிரியர்கள் தனிப்படிப்பு எடுக்க வேண்டும்.

தனியார் பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு நிர்வாகி உண்டு. அவர் பள்ளியின் செயல்பாட்டில் அக்கறை கொண்டிருப்பார். ஆசிரியர்கள் மீது முழுக் கட்டுப்பாட்டை வைத்திருப்பார். விடுப்புகூட எடுக்க இயலாத நிலையில் ஆசிரியர்கள் இருப்பார்கள். நெடுங்காலத்துக்கு அரசு ஓய்வூதியம், விடுப்பு விதிகள் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது. 1971-ல்தான் அவை தனியார் பள்ளி ஆசிரியர் களுக்கும் விரிவுபடுத்தப்பட்டன. தனியார் பள்ளிகளில் அலைமோதிய அத்துமீறல்களை எதிர்த்து ஆசிரியர்கள் போராட தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தல் சட்டம் 1976-ல் நிறைவேற்றப்பட்டது. பள்ளிகளின் மீதான கல்வித் துறையின் பிடி இறுகியது மட்டுமல்லாமல், ஆசிரியர்களும் சிறிதளவு சுதந்திரக் காற்றை அனுபவிக்க முடிந்தது. அதேசமயம், ஆசிரியர் பணியில் தொய்வு ஏற்பட இச்சட்டமே காரணமென்று நிர்வாகிகள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர்.

சுயநிதித் தனியார் பள்ளிகள்

1978-ல் அரசு மானியம் பெறாது நடத்த சுயநிதிப் பள்ளிகளுக்கு அரசு அனுமதி அளித்தது. அவை பல்கிப் பெருகிப் பட்டிதொட்டியெல்லாம் இன்று கோலோச்சுகின்றன. இப்பள்ளிகளுக்குத் தனியார் பள்ளி (ஒழுங்குபடுத்தல்) சட்டம் பொருந்தாது என்று அரசு முடிவெடுத்தது. ஆசிரியர்களுக்குக் குறைந்த ஊதியம், பணிப் பாதுகாப்பின்மை, விடுப்பு விதிகள் இல்லாமை போன்ற பல குறைபாடுகளுடன் இவை இயங்கிவருகின்றன. ஆசிரியர்களில் பலரும் தகுதி பெறாதவர். அரைச் சம்பளத்தில் எவ்விதச் சலுகையும் இல்லாமல் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பள்ளி மீதோ மாணவர் மீதோ எப்படி உள்ளார்ந்த பற்று இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்?

ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களின் உதவியோடுதான் பெரும்பான்மையான சுயநிதிப் பள்ளிகள் நடைபெற்றன. ஒரு காலகட்டத்தில் பணியிலிருந்துகொண்டே சுயநிதிப் பள்ளிகளை ஆசிரியர்கள் நடத்தத் தொடங்கினார்கள். தம் முழு நேரப் பணியை ஓரங்கட்டிவிட்டு, தம் கவனம் முழுவதும் தம் சொந்தப் பள்ளிக்குச் செலுத்த ஆரம்பித்ததும் அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சிக்கு அடிகோலியது.

இதேபோல தனியார் உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகி களும் அதே வளாகத்திலோ அருகிலோ தம் பள்ளிக்குப் போட்டியாக சுயநிதிப் பள்ளியையும் தொடங்கி, அதன் வளர்ச்சியில் அக்கறை எடுத்துக்கொண்டனர். சுயநிதிப் பள்ளியில் சேர்க்கையை முடித்த பின்தான் அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்க்கையைத் தொடங்குவார்கள்.

தமிழகக் கல்வித் துறை இம்முறைகேடுகளையெல்லாம் காணாதது மட்டுமின்றி ஆதரவும் கொடுத்தது, தமிழகக் கல்வி வரலாற்றில் ஒரு சோக நிகழ்வு.

உள்ளாட்சிப் பள்ளிகள்

உள்ளாட்சிப் பள்ளிகள் ஆங்கில ஆட்சியின்போது இயற்றப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் இயங்கின. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் இவ்வமைப்புகள் செயல்பட்டன. இவற்றின் மேலாண்மையில் நடைபெறும் பள்ளிகள் சீராக இயங்குவதில் அவ்வமைப்பின் உறுப் பினர்கள் அக்கறை கொள்வார்கள். ஆசிரியர்கள் பணிபுரியும் ஊரிலிருந்து 8 கி.மீ. தூரத்துக்குள் குடியிருக்க வேண்டும் என்பது விதி. பெரும்பாலும் ஆசிரியர்கள் அந்தந்த ஊரிலேயே வசித்துவந்தனர். மாணவர்களை மட்டுமின்றி அவர்களது பெற்றோரோடும் ஆசிரியர்களுக்கு ஒரு நெருக்கம் இருந்தது. சமூகத்தின் சொத்தாக உள்ளாட்சிப் பள்ளிகள் திகழ்ந்தன. ஒவ்வொரு ஆண்டும் எஸ்.எஸ்.எல்.சி. முடிவுகள் வந்தவுடன் அவை அலசப்பட்டு, முன்னேற்றம் காண்பித்த ஆசிரியர்களுக்குப் பாராட்டும் சுணக்கமாக இருந்த பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டன.

படிப்படியாக இந்த உள்ளாட்சிப் பள்ளிகள் யாவும் ஒரே அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. 1970-ல் கல்வித் துறையின் நேரடி நிர்வாகத்துக்கு வந்தன. 35,000 தொடக்கப் பள்ளிகள், 8,000 உயர்நிலை-மேனிலைப் பள்ளிகளைச் சென்னையிலிருந்து நிர்வகிப்பது இயலாத காரியம் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளவில்லை.

ஆசிரியர்களால் முடியும்

இன்றைய கல்வி வந்தடைந்திருக்கும் இடத்துக்கும் பொதுக்கல்விக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவுக்கும் இப்படி எவ்வளவோ காரணங்கள் உண்டு. அவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடுவது ஒருபுறம் என்றால், எல்லாவற்றையும் தாண்டி ஒரு பள்ளிக்கூடத்தின் தரத்தைத் தூக்கி நிறுத்த ஒருவரால் முடியும் என்றால், அவர் ஆசிரியர்.

நான் பணியில் சேர்ந்த முதல் நாள் காலை எனது தலைமை யாசிரியர் எனக்களித்த அறிவுரை மறக்க இயலாது. “உனக்கு இரண்டு கண்கள். ஆனால், உன்னை ஆயிரம் ஜோடிக் கண்கள் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள். வகுப்பறையிலும் பள்ளி வளாகத்திலும் மட்டும் அல்ல; சாலையிலும் பொது இடங்களிலும் வீட்டிலும்கூட நீ எப்படி நடந்துகொள்கிறாய் என்பதை எல்லோரும் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். ஏனென்றால், நீ ஒரு ஆசிரியர்.”

உண்மைதான். வேறு தொழில் செய்பவர் யாரும் இந்த அளவு சமூகத்தின் பார்வையில் சிக்க மாட்டார்கள். எப்போதுமே கல்வித் தகுதிக்கு மேல் ஆசிரியர்களிடம் ஒன்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கான நியாயமும் இருக்கிறது. நான் ஆசிரியப் பணியை ஒரு சின்ன கிராமத்தில் தொடங்கினேன். தினமும் கடைவீதி வழியாகப் பள்ளிக்குச் செல்வேன்.

பல வணிகர்களும் எழுந்து நின்று வணக்கம் சொல்வார்கள். அப்போது எனக்கு வயது 19. அவர்களுக்கோ என் தந்தை, தாத்தா வயது. சங்கடப்பட்டுக்கொண்டு வேறு வழியாகப் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியபோது, ஏன் இப்படிச் சுற்றிக் கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் காரணத்தைச் சொன்னேன். அப்போது ஒரு பெரியவர் சொன்னார்: “உங்களைப் பார்க்கும்போதெல்லாம் வெறும் ஆசிரியராகப் பார்ப்பதில்லை. எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தருபவராகப் பார்க்கிறோம். அதனால்தான் வணங்குகிறோம்.”

பெற்றோரின், சமூகத்தின் இந்த நம்பிக்கைதான் ஒரு ஆசிரியர் எதிர்கொள்ளும் பெரிய சவால். ஒரு ஆசிரியர் தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டியது இந்த நம்பிக்கைக்குத்தான். இந்த நம்பிக்கைக்கு ஒரு ஆசிரியர் நேர்மையாக நடந்துகொள்ளும்போது ஒரு பள்ளிக்கூடம் தானாக தலைநிமிரும்!

- ச.சீ. இராஜகோபாலன், மூத்த கல்வியாளர்,
தொடர்புக்கு: rajagopalan31@gmail.com



Sunday 12 April 2015

கடவுள் மறுப்பின் விஸ்வரூபம்


ஏற்கெனவே ஆதி மனிதன் யுகம், ஆண்டான் யுகம், நிலப்பிரபு யுகம் எனும் யுகங்களை உலகம் கண்டுவிட்டது. தற்போது முதலாளி யுகத்தைக் கண்டுகொண்டிருக்கிறது. அப்படியெனில் இதனினும் ஒரு சிறந்த யுகம் வரத்தானே செய்யும். அதைக்காண மனிதர்கள் இருப்பார்கள், ஆனால் கடவுள் இருக்க மாட்டார். அவர் கதை முடிந்திருக்கும்“- அறிஞர் அருணன் எழுதிவந்த கடவுளின் கதை ஐந்தாவது பாகத்தை இவ்வாறு முடித்திருக்கிறார்.இப்போது வரை கடவுளின் கதை முடியவில்லை.

அது மேலும் மேலும் விரிந்து கொண்டே இருக்கிறது. வெளிச்சம் வந்தால் இருள் தொலையும் என்பது அறிவியல். ஆனால் அறிவியல் தொழில்நுட்பம் என்ற வெளிச்சத்தைப் பயன்படுத்திக்கொண்டும் கடவுள் பற்றிய கதைகள் விதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. கடவுளின் கதை என்கிற இந்தப் பெருநூல் முடிவடைந்தாலும், கடவுளின் கதையும் ஒரு நாள் உண்மையில் முடியத்தான் செய்யும் என்ற நம்பிக்கையோடு அருணன் இந்த நூலை முடித்திருக்கிறார். கடவுள் உண்டா இல்லையா என்ற விவாதம் முடிவின்றி நடந்து கொண்டே இருக்கிறது.

உண்டு என்று சொல்பவர்கள் பதில் சொல்வது எளிது. பகுத்தறிவு அடிப்படையில் தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தால் பதற்றமடையும் நம்பிக்கையாளர்கள் புலனறிவால் கடவுளைக் கண்டறிய முடியாது. அது ஒரு நம்பிக்கை என்று முடித்துவிடுவார்கள். பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் என்று கடவுளின் இருப்பு குறித்து புரியாமல் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார் கண்ணதாசன்.கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்கிறார் திருமூலர். ஆனால் கடவுள் இல்லை என்பதைக் கண்டறிந்து விண்டுரைத்திருக்கிறார் பேராசிரியர் அருணன்.

இந்த ஐந்தாவது பாகம் முதலாளித்துவத்தின் இரண்டாம் நூற்றாண்டிலிருந்து துவங்குகிறது. இரண்டு உலகப்போர்களை மனிதகு லம் சந்தித்துள்ளது. இந்த இரண்டு போர்களிலும் வென்ற நாடுகள் சில. தோற்ற நாடுகள் சில. ஆனால் அன்பையும் சமாதானத்தையும் போதிப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படும் மதங்கள் இரண்டு போர்களிலும் பரிதாபமாக தோற்ற கதையை, மத குருபீடங்களே யுத்தங்களில் ஒரு சார்பு எடுத்து நின்ற நிலையையும் விரிவாக விளக்கியுள்ளார் ஆசிரியர். மார்க்சும் ஏங்கெல்சும் கடவுள், மதம் பற்றிய மார்க்சியக் கோட்பாட்டை உருவாக்கினார்கள் என்றால் அதை நடைமுறைப்படுத்துகிற வாய்ப்பும்,கட்டாயமும் லெனினுக்கு வாய்த்தது என்று கூறும் ஆசிரியர் உலகின் முதல் சோசலிச நாட்டில் கடவுள் கோட்பாடு எவ்வாறு அறிவியல் பூர்வமாக எதிர்கொள்ளப்பட்டது என்பதை அற்புதமாக எழுதியுள்ளார். மரணித்தபிறகு மகத்தான சொர்க்கம் காத்திருக்கிறது என்று அனைத்து மதங்களும் அல்லலுறும் மனிதர்களுக்கு ஆசை காட்டிக்கொண்டே இருக்கிறது.

லெனின் கூறுகிறார்: “மோட்ச உலகை பாதிரியார்களுக்கும், குருமார்களுக்கும், முதலாளித்துவ மதவெறியர்களுக்கும் அவன் (உணர்வு பெற்ற தொழிலாளி) விட்டுவிடுவான் தனக்கு இங்கேயே, இந்த உலகிலேயே நல்வாழ்வு கிடைக்கப் போராடுவான்.” ஆத்திக, நாத்திக விவாதத்தை அறிவுசார் விவாதமாக மட்டும் லெனின் கருதவில்லை. மனிதகுலத்தை அழுத்திக்கொண்டிருக்கும் மதம் எனும் நுகத்தடி இந்த சமுதாயத்திற்குள்ளேயே இருக்கிற பொருளாதார நுகத்தடியின் பிரதிபலிப்பு. முதலாளி வர்க்கத்தின் இருண்ட சக்திகளுக்கு எதிரான போராட்டமின்றி பாட்டாளி வர்க்கத்திற்கு விழிப்புணர்வு கிடைக்காது என்பது லெனின் கருத்து. கடவுள் மறுப்பை கட்சியில் சேர்வதற்கு முன்நிபந்தனையாக மாமேதை லெனின் முன்வைக்கவில்லை.

ஆனால், கடவுள் நம்பிக்கை உள்ளவர் கட்சியில் சேர்ந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அவரை மாற்றுவதற்கான போதனை நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்றுதெளிவாகக் கூறிய லெனின், அரசு என்று வருகிற போது ஒரு நாட்டின் குடிமக்கள் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அரசு என்பது அவர்கள் அனைவருக்குமான அரசாக இருக்க வேண்டுமானால், மத விவகாரத்திலிருந்து அரசு விலகி நிற்க வேண்டும். மதம் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரம் என்று தெளிவாக பிரகடனப்படுத்திவிட வேண்டும். அரசு பொது விவகாரங்களை மட்டுமே கவனிப்பது அதாவது கறாரான மதச்சார்பற்ற அரசு எழ வேண்டும் என்று லெனின் கூறியுள்ளதைத் தெளிவாக விளக்கியுள்ளார் ஆசிரியர்.

மதம் குறித்த மானுடவியல், சமூகவியல் நோக்கிலான ஆய்வுகளை உரிய ஆதாரங்களுடன் தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர். மதம் பற்றிய உளவியல் ஆய்வும் இடம்பெற்றுள்ளது. சிக்மண்ட் ஃபிராய்டு குறித்து தமிழில் எழுதும்பலரும் அவரது கனவு கோட்பாடு குறித்தும் செக்ஸ் கோட்பாடு குறித்தும் மட்டுமே விரிவாக பேசுகின்றனர். ஆனால் ஃபிராய்டு கடவுள் குறித்தும் விரிவாகப் பேசியுள்ளதை அருணன் விளக்கியுள்ளார். பரலோக ராஜ்ஜியம் என்பதெல்லாம் மனிதர்களுடைய ஆசையே அன்றி வேறல்ல என்று கூறும் ஃபிராய்டு மதம் எனும் மாயையின் இடத்தில் அறிவியல் அமரவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். கிறிஸ்துவம் சொல்லும் ஆதிப்பாவம் குறித்த ஃபிராய்டின் ஆய்வு சுவாரஸ்யமானது. பெட்ரண்ட் ரஸ்ஸல் கருத்துப்படி மதம் என்பது பயத்தில் தோன்றிய ஒரு வியாதி.

ஆனால் அவரும் கூட ஒரு நிலையில் கடவுள் இல்லை என்று நிரூபிக்கக்கூடிய இறுதியான வாதம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சறுக்கியதையும் அருணன் எடுத்துக்காட்டியுள்ளார். இஸ்லாம் பூமியில் முற்றிலும் செயற்கையாக யூத அரசு இஸ்ரேல் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட விநோதத்தையும் இந்நூல் விவரிக்கிறது. இந்துமதப் பழமைவாதிகளோடு போராடிக் களைத்த டாக்டர் அம்பேத்கர் நான்கு லட்சம் நேசர்களோடு புத்தமதத்தைத் தழுவினார். பவுத்தத்தின் ஹீனயானம், மகாயானத்தை நிராகரித்து நவயானம் என்பதை அவர் உருவாக்கினார். ஆனாலும் அவரது நோக்கம் நிறைவேறியதா என்றால் “மார்க்சியத்திற்கு மாற்றானது புத்தமதம் என்று கூறுவதோ உலகை உய்விக்க வல்ல தத்துவம் அது என்பதோ காலத்திற்கு ஒவ்வாதது மட்டுமல்ல.

கற்பனை மிகுந்த உயர்வு நவிற்சியாகும்” என்று ஆனந்த் டெல்டும்ப்டே கூறியதை மேற்கோள் காட்டுகிறார் அருணன். இந்து மதம் எதிர்நோக்கிய நவீன இயக்கங்கள் குறித்தும் விரிவாக அலசப்பட்டுள்ளது. குறிப்பாக பெரியார், சிங்காரவேலர் ஆகியோர் மதத்தை எதிர்த்து நடத்திய தத்துவப்போர்கள் விளக்கப்பட்டுள்ளன. நாத்திகப் பேராசிரியர்களின் புறப்பாடு ஆத்திக உலகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.இந்து மதம் பின்னோக்கி ஓடும் வண்டி எனும் அத்தியாயத்தில் ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் தகிடுதத்த வேலைகள் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. இந்தியாவில் கல்வி பரவலும் தொழில்நுட்ப வளர்ச்சியும் ஏற்பட்டிருந்தாலும் அவை மதச்சீர்திருத்தத்திற்கு இட்டுச்செல்லவில்லை. அதற்கு அடிப்படைக் காரணம் இந்த நாட்டு முதலாளித்துவம், பிராமணிய மதப்பழமைவாதத்துடன் செய்துகொண்ட சமரசம்-உழைப்பாளர்களை ஒதுக்கிவைக்க. அதனால்தான் இங்கே கல்வி அமைப்பும், நவீன ஊடகங்களும் அதற்கான அறிவு ஜீவிகளையும் உருவாக்கவில்லை. பகுத்தறிவு பிரச்சாரத்திலும் ஈடுபடவில்லை. நாளது தேதிவரை இந்துப்பழமைவாதம் இங்கே சமாளித்து நிற்பதன் ரகசியம் இதுதான் என்று இந்துப்பழமைவாதம் வேர் கொண்டிருக்கும் இடத்தை சரியாகச் சுட்டிக்காட்டுகிறார் அருணன். வேரை வெட்டுகிற அறிவு ஆயுதமாக இந்த நூல் விளங்குகிறது. பயன்படுத்திக்கொள்ள வேண்டியது இளைஞர்களின் பொறுப்பு. தொழில் வளர்ச்சியும், தனிமனிதர்களின் பொருளியல் வாழ்வும் மேம்பட மேம்பட நாத்திகம் மேலும் மேலும் உயரக்கிளம்பும் எனக்கணிக்கிறார் ஆசிரியர். தத்துவம் விஞ்ஞானத்தோடு கைகோர்த்துக்கொண்டு மனிதகுலத்திற்கு சேவை செய்ய வேண்டும். சொல்லப்போனால் கலை இலக்கியம் போன்ற இதர அறிவுத்துறைகளும் கூட்டுச்சேர வேண்டும். யுகம் யுகமாக வளர்த்தெடுக்கப்பட்ட மத உணர்வுகளையும், கடவுளையும் மக்கள் மனங்களிலிருந்து அகற்றுவது சமானியமான வேலையல்ல என்று கூறுகிறார் பேராசிரியர் அருணன்.அந்தப் பெரும் பணியை செய்வதற்கு இந்த நூல் உதவும் என்பதில் ஐயமில்லை. கடவுள் கோட்பாடு குறித்து இவ்வளவு விரிவாக சமகாலத்தில் இந்திய மொழிகள் எதிலும் இவ்வளவு பெரிய நூல் வந்திருக்குமா என்பது சந்தேகமே. அதைத் தமிழில் சாத்தியமாக்கியிருக்கும் அருணனின் உழைப்பும், தத்துவத்தெளிவும் வணக்கத்திற்குரியது.கடவுள் விஸ்வரூபம் எடுப்பார் என்று புராணிகர்கள் சொல்வார்கள். ஆனால் அருணன் எடுத்திருக்கிற கடவுள் மறுப்பு விஸ்வரூபமே இந்த நூல்.
நன்றி: மதுக்கூர் ராமலிங்கம்

Saturday 11 April 2015

தாய்மொழி வழி கல்வி ஏன்????


ஆங்கில வழிக் கல்வி - விருப்பமா? நெருக்கடியா?

சொன்னதைச் சொல்லும் ‘கிளிப்பிள்ளை’ கல்விமுறை, தகவல்களை இட்டு நிரப்பும் ‘வங்கியியல்’ கல்விமுறை, சுய சிந்தனை உள்ளவர்களையும் அடிமைகளாக இருக்க மறுப்பவர்களையும் சலித்தொதுக்கும் ‘வடிகட்டல்’ கல்விமுறை என்று, நிலவும் கல்விமுறைகள் குறிந்த உலக அறிஞர்களின் விமர்சனங்களை உள்வாங்கிக்கொண்டு, ஒரு முற்போக்கான, மாற்றுக் கல்விமுறையை நோக்கிச் சர்வதேசச் சமூகங்கள் விவாதத்தை முன்னெடுத்திருக்கும் காலமிது.

ஆனால், கற்றலையும் கற்பித்தலையும் பற்றியெல்லாம் கவலையில்லாமல், கற்பிக்கும் மொழியில் - கல்வி மொழியில் - ஒரு எதிர்ப் புரட்சியைத் தொடக்கி வைத்துள்ளது தமிழக அரசு. மொழிப் போருக்கு சிறப்பான பாரம்பரியமுடைய தமிழ்நாட்டில், அனைத்து பொதுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியை தமிழக அரசே அறிமுகப்படுத்தியுள்ளது. 1985-ல் கூட, மத்திய அரசால் ‘நவோதய வித்தியாலய’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்தி-ஆங்கிலத் திணிப்பிற்கான பள்ளிகள் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. ஆனால் தற்பொழுது ‘ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா’ என்ற பெயரில், அரசு மற்றும் தனியார் கூட்டில் ‘தனியார்களால்’ துவங்கப்படவுள்ள 2500 மாதிரிப் பள்ளிகளில் தமிழ்நாட்டில் மட்டுமே 356 பள்ளிகள் தொடங்கப்படவிருப்பதாக, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ‘தமிழ்’ பயிற்று மொழியாக மட்டுமல்ல, ஒரு பாடமாகக் கூட இருக்க வேண்டிய கட்டாயமில்லாத இப் பள்ளிகள் பற்றிய அறிவிப்பு, தமிழ்ச் சமூகத்தில் ‘தமிழ்வழிக் கல்வியா - ஆங்கில வழிக் கல்வியா’ என்ற நெடுநாள் விவாதத்திற்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

இச்சிக்கலைக் ‘குணம் நாடிக் குற்றமும் நாடி’ அறிவியல் பூர்வமாகவும் அணுகுவதற்கு ஏற்றவாறு, ஆங்கில வழிக் கல்வி என்பதை அயல்மொழி வழிக் கல்வி என்றும், தமிழ் வழிக் கல்வி என்பதை தாய்மொழி வழிக் கல்வி என்றும், அடிப்படையில் பிரித்து விளங்கிக் கொள்வது நல்லது. இது உணர்ச்சிவயப்பட்ட கருத்துகளையும் அறிவியல் பூர்வமாக அணுக உதவக் கூடும். அயல் மொழி என்பதைத் தாண்டி, ஆங்கிலத்திற்கு இருக்கும் முக்கியத்துவத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறப்போவதில்லை. அதேபோல் ‘தாய் மொழிக்கு’ இருக்கும் முக்கியத்துவத்தையும்!

தமிழ்ச் சமூகத்தில், தாய்மொழி வழிக் கல்விக்கு ஆதரவாகத் தமிழ் உணர்வாளர்கள் மொழி அறிஞர்கள் சமூக ஆர்வலர்கள் கல்வியியலாளர்கள் முற்போக்காளர்கள் என்று அறிவுசார் வட்டங்களில் ஆதரவு இருக்கிறதே தவிர, பொது மக்களில் பெரும்பான்மையினர் ஆங்கில வழிக் கல்வியையே விரும்புகின்றனர் என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

மேலோட்டமாக நோக்குமிடத்து, கணினியுகத்தில் / உலகமயச் சூழலில் ஆங்கிலத்தின் தேவையும், ஆங்கிலம்தான் ‘உலக மொழி’ ‘பொது மொழி’ ‘அறிவியல் மொழி’ போன்ற கருத்துருக்களும் தான், ஆங்கில வழிக் கல்விக்கு ஆதரவான மனநிலையை தமிழ்ச் சமூகத்தில் விதைத்திருப்பதாகத் தோன்றலாம். ஆனால், ஒரு சமூகம் முழுமைக்குமே, தன் தாய் மொழியைக் கை-கழுவிவிட்டு, அயல் மொழியில் பயில முனைப்புக் காட்டுவதும் - மேல்தட்டு மக்கள், நடுத்தர வர்க்கம், பாட்டாளிகள் என்று வர்க்க பேதமில்லாமல், துறை / தொழில் பேதமில்லாமல், சிறுவர்கள் இளைஞர்கள் பெரியவர்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல், ஆங்கில மோகத்தில் திளைத்திருப்பது, காரிய நோக்கம் கொண்டது அல்ல. அது அந்த சமூகம் சந்தித்திருக்கும் உளவியல் நெருக்கடி! அதிகார வர்க்கம் காரிய நோக்கத்தோடு ஏற்படுத்திய உளவியல் நெருக்கடி!

ஆங்கிலப் பட்டறைகளும் - ஆளனுப்பும் ஊடகங்களும்

பன்னாட்டுத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான, ஆங்கிலம் தெரிந்த 'அதிசயக் கருவி'களை உற்பத்திசெய்வதற்கும், உற்பத்தியாகும் பொருட்களை நுகர மேற்கத்திய மோகச் சமூகத்தை உருவாக்குவதற்கும் தான், நம் நாட்டுத் தரகு முதலாளிகளின் கல்வி நிறுவனங்களும் ஊடகங்களும் இரவு பகலாக கண்விழித்து வேலை செய்து வருகின்றன. எதிர்கால இந்தியாவின் தூண்களில், யார் 'அதிசயக் கருவி'யாகத் தேறிவருவார்கள் என்பது நிச்சயமில்லாத நிலையில், அத்தனை பேருக்கும் ஆங்கில மோகத்தை விதைப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

ஏனென்றால், நிச்சயத் தன்மையோடு, தேவையான எண்ணிக்கையில் மட்டும் 'கருவி'களை உற்பத்திசெய்துகொள்ளுமளவிற்கு, இன்னும் நமது கல்வி நிறுவனங்களின் 'தரம்' உயர்த்தப்படவில்லை. மனித சமூகமும், இன்னும் அந்த அளவிற்கு மடச் சமூகமாக்கப்படவில்லை. அதற்கான முயற்சியில் தான், தொலைக்காட்சி ஊடங்கள் இறங்கியுள்ளன. இருபத்து நான்கு மணிநேரமும் மக்களை அதற்காகப் பயிற்றுவித்துக் கொண்டிருக்கின்றன.

முதலாளித்துவத்தின் சாதனைகளைப் பாருங்கள்... (தொழில் வளர்ச்சி இல்லையென்றால் என்ன) தொழில்நுட்பத்தின் மகத்துவத்தைப் பாருங்கள்... அமெரிக்கர்கள் ஆவது ஒன்றும் அவ்வளவு சிரமமில்லை, அவர்களுக்கென்ன கொம்பா முளைத்திருக்கிறது? இனி... விளையாட்டு, பயணம், உரையாடல், பொழுதுபோக்கு, ஓய்வு, வாசிப்பு எல்லாம், தொலைக்காட்சியில் வருபவை. நீங்கள் எதற்கும் சிரமப்பட வேண்டியதில்லை, எல்லாம் தொலைக்காட்சிகளே பார்த்துக்கொள்ளும், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தொலைக்காட்சி பார்ப்பது மட்டும்தான். மொத்தத்தில் நீங்கள் எங்களுக்கு வேண்டும், எப்படி வேண்டுமோ அப்படி! அதனால் தொடர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே இருங்கள். இதற்குப் பிறகும் உங்களுக்குச் சிந்திக்கத் தோணுகிறதா, தவறில்லை, அது மனித இயல்பு. ஆனால் கிழக்கு தெற்கு வடக்கு எல்லாம் சூலம், ‘மேற்கே’ மட்டும் சிந்தியுங்கள் - என்று மூளையை முடமாக்கும் லேகியம் விற்றுக்கொண்டிருக்கின்றன ஊடகங்கள்.

ஆங்கிலம் தெரியாத எந்த ஒரு கிராமமும் விடுபட்டுவிடக்கூடாது என்ற சிறப்புக் கவனத்தோடு, தமிழ்நாடு முழுமைக்கும், ‘தமிழர்களுக்காக’ ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், முடிந்தவரை ‘ஆங்கிலத்தில்’ இருக்கும்படி பார்த்துக்கொள்ளப்படுகின்றன. எந்நேரமும் திரையை ஆக்கிரமித்திருக்கும் சிறிய மற்றும் பெரிய திரைக் கலைஞர்கள் சேர்ந்து அடிக்கும் ஆங்கிலக் கூத்தும், கிண்டலாக உச்சரிக்கப்படும் உரைநடைத் தமிழும், பார்க்கும் பார்வையாளர்களை, கழுத்தில் கத்தியை வைத்து ஆங்கிலப் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கின்றன. தொலைக்காட்சியை அனைத்துவிட்டு, வீட்டின் கதவைத் திறந்து வெளியில் பார்த்தால், ஆங்கிலம் நிற்குமோ என்ற அச்சத்தை உண்டு பண்ணுகின்றன.

இப்படி, மேற்கத்திய மற்றும் ஆங்கில மோகம் சமூகத்தில் முதலாளித்துவ ஊடகங்களால், தொடர்ந்து வன்முறையாகத் திணிக்கப்படுகின்றது. இத் தொடர் வன்முறை, தமிழ்ச் சூழலில், பல அசிங்கமான உளவியல் விளைவுகளை உண்டு பண்ணியிருக்கின்றது.

தமிழ்ச் சமூகத்தின் ஆங்கில உளவியல்

தமிழ்ச் சமூகத்தில், ஒரு பட்டதாரி, ஆய்வுகள் செய்து முனைவர் பட்டமே பெற்றிருந்தாலும், ஆங்கிலம் பேசத் தெரியவில்லை என்றால், சான்றிதழைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு தற்குறிகளின் வரிசையில் அமர்ந்துகொள்ள வேண்டும். அவரை இச்சமூகம் ஒருபோதும் படித்தவராகப் பார்க்காது. அந்த முனைவரும் கூட, உளவியளாக அதற்குப் பழக்கப்படுத்தப்பட்டு விடுவார். மொத்தத்தில், ஆங்கிலம் என்பது படித்தவர்கள் பேசும் மொழியாகவும் பட்டதாரிகளுக்கு இருக்கவேண்டிய அறிவாகவும் கருதும் மனப்பான்மை, நமது சமூகத்தில் பரவலாக நிலவுகிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டிலேயே படித்துப் பட்டமும் பெற்ற ஒரு பச்சைத் தமிழனின் உச்சபட்ச மரியாதை 'தமிழ் அவ்வளவாக எழுதவராது' என்பதில் இருக்கிறது.

இந்த அசிங்கமான உளவியல், ஆங்கில மோகத்தோடு நின்றுவிடவில்லை. தாய் மொழியை இகழவும், தாழ்வானதாக தரமற்றதாக நம்பவும் கற்றுக்கொடுத்துள்ளது. ஒரு கடைக்காரரிடம் brown sheet என்று ஆங்கிலத்தில் கேட்டுப்பாருங்கள். அவர், விலை மற்றும் தரம் உயர்வான பளபளப்பான (polyurethane coated) அட்டையைத் தருவார். அதையே 'காக்கி அட்டை' என்று தமிழில் கேட்டுப்பாருங்கள், தொகற்சேர்ப்ப பயினுரை (polyurethane) இல்லாத, விலை குறைவான, மட்டமான அட்டையைத் தருவார். சமூகத்தின் அனைத்து மட்டத்திலுமான, இந்தப் பாரதூரமான தாக்கம், அமெரிக்கர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்தி உருவாக்கும் நகைச்சுவைகளைப் (self deprecating jokes) போன்றது அல்ல. இது, அமெரிக்கக் கனவோடு proud to be an Indian என்று குறுஞ்செய்தி (SMS) அனுப்பும், முரண்நகை உளவியலைக்கொண்ட ஒரு சமூகத்தின் அவல நிலை!

வெண்டைக் காயை ladies finger என்பதற்குச் சிரிக்காத தமிழன், சேனைக் கிழங்கை elephant foot என்பதற்குச் சிரிக்காத தமிழன், ‘கைப்பேசி’ என்ற அழகான ‘காரணப்பெயர்’ஐக் கேட்டுத்தான் சிரிக்கின்றான். ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைக் கேட்டு, தன் மொழியைத் தானே ஏளனம் செய்து மகிழ்கிறான். இந்தக் கேள்விகள் பெரும்பாலான நேரங்களில் ‘அதிசயக் கருவிகளின்’ அறிவைப் போலவே மொன்னையாகத்தான் இருக்கின்றன. SIMக்கு நிகரான தமிழ்ச் சொல் கேட்டு குறுஞ்செய்திகளைப் பறக்கவிடுகின்றான். Subscriber Identity Module என்பதன் சுருக்கமான எஸ்.ஐ.எம் என்பதை ‘சிம்’ என்று சேர்த்து வாசிப்பதில் அவனுக்குச் சிக்கல் இல்லை. வார்த்தையல்லாத ஒன்றுக்கு இணையான தமிழ் வார்த்தையைக் கேட்டுவிட்டு, அறிவார்ந்த கணையைத் தொடுத்துவிட்டதாகப் புளங்காகிதம் அடைவதிலேயே குறியாய் இருக்கின்றான். (S.I.M. - உறுப்பாண்மையர் அடையாள மட்டுளி).

புதிய கண்டுபிடிப்புகளுக்குப் புதிதாய்த்தான் பெயரிட முடியும் என்ற அடிப்படை அறிவு அவனுக்கு இல்லாமலில்லை. தன் தாய் மொழியைத் தானே ஏளனம் செய்து புளங்காகிதம் அடையும் பரவச நிலையில், அதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதற்கு அவனுக்கு நேரமில்லை. அல்லது அவன் எடுத்துக்கொண்ட உளவியல் பயிற்சி அவனை சிந்திக்க அனுமதிப்பதில்லை.

ஆங்கில வழிக் கல்விக்கான, இச் சமூகத்தின் ஆகப் பொது ஆதரவுக் கருத்தும் கூட, கிட்டத்தட்ட இதே ஞானத்தோடுதான் இருக்கிறது. அது, 'தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது' என்பது.

சரி, ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு?

நமது மாணவர்களுக்கு எழுதப்படிக்கத் தெரியுமா!

ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள், எத்தனை வருடங்கள்... எத்தனை பாடங்கள்... எத்தனை வகுப்புகள்... எத்தனை தேர்வுகள்... எத்தனை படித்திருப்பார்கள்... எத்தனை எழுதியிருப்பார்கள்... அத்தனையும் ஆங்கிலத்தில்! அத்தனையிலும் தேர்ச்சியும் பெற்று வந்தவர்களுக்கு, ஆங்கிலம் தெரியும் என்று சொல்வதற்குத் திராணி இருக்கிறதா?. உண்மையில், ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள, அந்த மொழி வழியிலேயேதான் கல்வியே கற்க வேண்டும் என்பதே அபத்தம், மடத்தனம். ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆங்கில வழிக் கல்வி என்றால், ஸ்பானிஷ் கற்க? அல்லது வேறு மொழி ஏதேனும் கற்றுக்கொள்ள?

சமீபத்திய ஆய்வு ஒன்று தமிழ்நாட்டு மாணவர்களைத் தற்குறிகள் என்கிறது. PISA (program for international student assessment) என்பது அந்த ஆய்வு. மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச மாணவர்களுக்கு, எழுத்தறிவு கணிதவியல் அறிவியல் ஆகிய பிரிவுகளில் தேர்வுகள் நடத்தி, மதிப்பிட்டு, ஆறிக்கை தருவது அதன் வழக்கம். 2009-10-ல், 74 economies (பிரதேசங்கள்) கலந்துகொண்ட தேர்வில், முதல் முறையாக ‘இந்தியாவிலிருந்து’ இமாச்சலப் பிரதேசமும் தமிழ்நாடும் கலந்துகொண்டன. எழுத்தறிவுத் தேர்வில், தமிழ்நாடு 72-வது இடத்தையும் இமாச்சலம் 73-வது இடத்தையும் பெற்றுள்ளன. கணிதவியல் அறிவியல் தேர்வுகள் முறையே, தமிழ்நாடும் இமச்சலமும் 72, 73 - 72, 74வது இடங்களைப் பெற்றுள்ளன. எழுத்தறிவு (Literacy) என்பதற்கு PISA கொடுத்த விளக்கம் - ‘படித்த பொருளைப் புரிந்துகொண்டு, அதை வெளிப்படுத்தத் தெரிந்திருப்பது’. இதன் அடிப்படையில், இந்திய மாணவர்கள் பெரும்பான்மையினர் தற்குறிகளாக (illiterate) இருக்கிறார்கள் என்கிறது, அந்த ஆய்வு.

பொறியியல் மருத்துவம் போன்ற மேற்படிப்புகளைக்கூட தாய்மொழியில் கற்கும் சீன மாணவர்களால்தான் முதலிடம் பெற முடிந்தது. எப்படி?

மொழியும் தாய்-மொழியும்

முதலில், ‘மொழி’ என்பதை எவ்வாறு விளங்கிக்கொள்வது என்பதைப் பார்ப்போம். அயல் மொழியாக இருந்தாலும் தாய் மொழியாக இருந்தாலும் இரண்டும் மொழிகள்தான் என்றும், மனிதர்கள் தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கான 'ஒரு கருவி' என்பதைத் தாண்டி, மனித வாழ்க்கையில் மொழிக்கு வேறெந்தப் பங்கும் இல்லை என்றும், பொதுவாக நிலவும் கருத்துக்கள் சரியா? என்றால், 'இல்லை' என்கிறார் தலைசிறந்த மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி.

சர்வதேச துணை மொழிக் (International auxiliary language) கனவோடு, போலந்து நாட்டைச் சேர்ந்த எல்.எல்.சாமின்ஹோஃப் என்பவரால் கட்டமைக்கப்பட்ட மொழி 'எஸ்பெரான்டோ'. இன்று இம் மொழியை, உலகெங்கும் 20 லட்சம் பேர் அறிந்துவைத்திருக்கிறார்கள். கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள உதவினாலும், மொழிக்கான இயற்கைச் சமூகம் (native speakers) இல்லாத வகையில், எஸ்பெரான்டோ (Esperanto) மொழியே அல்ல! என்கிறார் சாம்ஸ்கி.

மொழியறிவு என்பது ‘மனித’ இனத்தின் இயற்கையான திறன் என்றும், மூளையில் அதற்கென தனிக் கட்டமைப்பே (Language Faculty) இருப்பதாகவும் கூறுகிறார் சாம்ஸ்கி. இதை ஏற்றுக்கொள்வதற்கு அல்லது புரிந்துகொள்வதற்கு சற்றே கடினமாக இருக்கலாம். ஆனால், (பரிணாம வளர்ச்சியில்) உருவாகிக்கொண்டிருந்த மனிதர்கள், தங்களுக்குள் சொல்லிக்கொள்ள ஏதோ இருந்தது - மொழியைப் படைத்தது என்னும் எங்கெல்ஸின் கூற்றோடு பொருத்திப் பார்த்தால், ‘மனித’ ‘இனம்’ தான் தோன்றிக்கொண்டிருந்த காலம்தொட்டே, சிந்தனையை ஒழுங்கமைக்கவும், கருத்துக்களை வளர்த்தெடுக்கவும், பரிமாறிக்கொள்ளவும், பதிவு செய்யவும் மொழியை தன் வரலாறு நெடுகப் பயன்படுத்தியதன் பரிணாம விளைவு (சாம்ஸ்கியின் மொழியில்- biological evolution), மூளையில் மொழிக்கென ஒரு கட்டைமைப்பை உருவாக்கியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். மனித இனத்திற்கே உரிய ‘உழைப்பு’ அதன் உடல் அமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவந்த போது, மனித இனத்தின் பிரிக்க முடியாத அங்கமான ‘மொழி’யும் மூளையில் அதற்கென ஒரு கட்டமைப்பைக் கோரியதில் வியப்பென்ன இருக்க முடியும்?

செவ்வாய் கிரகத்து மொழியியலாளர் ஒருவர், நமது மொழிகளை நோக்கினாரேயானால், பூமியிலுள்ள மொழிகள் அனைத்தும் சிறு வேறுபாடுகளுடைய ‘ஒரே மொழி’ என்ற முடிவுக்கு வரலாம் என்கிறார் சாம்ஸ்கி. ஏனென்றால் மனித மொழிகள் ஒரு பொதுவான அடிப்படையில் வளர்ச்சியடைந்தவை என்றும், அவற்றிற்கிடையிலான வேறுபாடுகள் மேம்போக்கானவையே என்றும், அவற்றின் இலக்கணங்களுக்குப் பொதுக் கூறுகள் (Universal grammar) இருப்பதாகவும் கூறுகிறார்.

இதன் அடிப்படையில்தான், ‘குழந்தைகள் மனதளவில் எந்தத் தொல்லையுமில்லாமல், ஒரு மிதிவண்டியை ஓட்டிப் பழகுவதைப்போல், தாய் மொழியை எளிமையாகக் கற்றுக்கொள்கிறார்கள்’ என்கிறார் சாம்ஸ்கி. மேலும், தாய் மொழியைக் கற்றுக்கொள்ளும் குழந்தைகள், வாக்கியங்களை அப்படியே பிரதி எடுப்பதில்லை. இலக்கணங்களை விதிகளை ஊகித்துணர்கிறார்கள் (they deduce rules from it) என்கிறார். அறிவு வளர்ச்சியின் முன் தேவையாக, இயற்கையான சிந்தனைப் பசியால் உள்வாங்கிக்கொள்ளப்படும் 'முதல்' மொழி என்பதால், விதிகளை ஊகிப்பது (rules deduction) இயல்பாகவே நடந்துவிடுகிறது. எனவேதான் குழந்தைகள் தங்கள் தாய் மொழியைப் பயில்வதை குறிக்கும் இடங்களில், கற்றல் என்ற சொல்லுக்குப் பதிலாக முயன்று அடைதல் (acquisition) என்னும் சொல்லையே அதிகம் பயன்படுத்துகிறார் சாம்ஸ்கி. இவ்வாறு மொழியை உள்வாங்கிக்கொள்ள குழந்தைகளுக்கு இயற்கையாக அமைந்துள்ள மூளைத் திறனுக்கு அல்லது திறனுக்கான தொகுதிக்கு Language acquisition device என்றே பெயரிட்டுள்ளார் சாம்ஸ்கி.

குழந்தைகள், மரத்தைக் காட்டி ‘என்ன’ என்று கேட்கும் போது ‘மரம்’ என்று சொல்லி முடித்துக்கொள்கிறோம். (நாம் வேறு எதுவும் செய்ய முடியாதுதான்). நாம் அதை மரம் என்று ஏன் சொன்னோம்? அதுதான் அந்தப் பொருளின் பெயர். ஆனால் ஒரு பொருளுக்கு ‘பெயர்’ இருக்கும் என்பதே குழந்தைகளுக்குத் தெரியாதே! இங்கேயும் ஊகித்துணரும், முயன்றடையும் செயல்கள் நடைபெறுகின்றன. (ஆம், நாம் சொன்ன பதில் குழந்தைகளுக்கு நிறைவைக் கொடுத்திருக்காது) வாக்கியக் கட்டமைப்பில் இருக்கும் விதிகளையும் குழந்தைகள் தாங்களாகவேதான் முயன்றடைகிறார்கள். இரண்டாவது மொழியில் இப்பணி நடைபெறுவதில்லை. boyன்னா பையன், girlன்னா பொண்ணு என்று, தாய் மொழி வழியாகத்தான் எந்த மொழியும் மூளையைச் சென்றடையும். இல்லையில்லை, நான் அயல் மொழியையும் வலிந்து ஊகித்துணரும், முயன்றடையும் செயல்களுக்கு உட்படுத்தப்போகிறேன் என்றால், அதற்கு முதலில் நீங்கள் அந்த மொழியைக் கற்றாக வேண்டும். ஏனென்றால் நீங்கள் செய்யப்போவது மொழி ஆராய்ச்சி!

இந்த அறிவியல் விளக்கங்களை ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ, நாம் நமது குழந்தைகளுக்கு, ஐம்பது வார்த்தைகளுக்கு மேல் கற்றுக்கொடுத்திருக்க மாட்டோம் என்பது நமக்குத் தெரியும். இலக்கணமும் அப்படியே! எந்த ஒரு குழந்தைக்கும் தாய்மொழி பிறரால் வலிந்து கற்றுக்கொடுக்கப்படுவதில்லை. குழந்தைகள் தங்கள் தாய் மொழியை, தாங்களே தங்கள் சமூகத்தோடு சேர்ந்து இயல்பாகக் கற்றுக்கொள்கிறார்கள், அல்லது முயன்று அடைகிறார்கள் என்பது தெளிவு. (தாய் மொழி என்பதற்கான சரியான விளக்கம் இதற்குள்ளாகத்தான் இருக்க முடியும்)

எனவே மொழி என்பது கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் கருவியாக மட்டும் இருக்க முடியாது. அதிலும் தாய் மொழியை அல்லது முதல் மொழியை ‘வெறும் கருவி’ என்ற வரையறைக்குள் அடைப்பது அறிவுடைமையாகாது. தாய் மொழியானது கிட்டத்தட்ட ஒரு மனிதனின் அடிப்படை அறிவுத் திறனாக அமைகிறது. மற்ற எதையும் அவன் இதன் வழியாகத்தான் கற்கிறான், அது இன்னொரு மொழியாகவே இருந்தாலும். கற்றலில் அவன் தொடும் எல்லையைத் தீர்மானிப்பதில் ‘தாய் மொழித் திறன்’ முக்கியப் பங்காற்றுகிறது. இங்கு ‘கற்றல்’ என்று நாம் குறிப்பிடுவது, கல்வி கற்றல், அறிவுசார் கற்றலைத் தான். மிதிவண்டி கற்றலை அல்ல. அது கற்கக் கூடியதும் அல்ல, பயின்று, பழகக் கூடியது. இரண்டையும் போட்டுக் குழப்பிகொள்ளக் கூடாது.

குழந்தைகள் மீதான வன்முறை

இயற்கையாக, அனைத்தையும் தங்கள் தாய் மொழியில் புரிந்துவைத்திருக்கும் குழந்தைகளுக்கு, பள்ளிக் கூடங்களில் அயல் மொழியில் கற்பிக்கும் போது, அவர்களின் சிந்தனை தொந்தரவிற்குள்ளாகிறது. இது, குழந்தைகளின் சிந்தனையில் நாம் செலுத்தும் கொடிய வன்முறை ஆகும். தொடர்ந்து கட்டாயப்படுத்தி திணிக்கப்படும் அயல் மொழி வழி கற்பிக்கும் ‘முயிற்சி’, குழந்தைகளுக்குள் வளர்ந்துகொண்டிருக்கும் தாய் மொழித் திறனையும் படிப்படியாக காலி செய்துவிடுகிறது. மாணவர்கள் தற்குறிகளாகும் புள்ளி இதுதான். முடிவாக அவர்கள் கற்பதையே நிறுத்திவிடுகின்றனர். ஆசிரியர்களும் கற்பித்தலை நிறுத்திவிடுகின்றனர். பிறகு நடப்பதெல்லாம் மதிப்பெண்களை நோக்கிய பயிற்சிதான். அவர்கள் எடுக்கும் பயிற்சி, புத்தகங்களில் இருப்பதைப் பிரதி எடுப்பதற்குத்தான். எடுக்கப்படும் பிரதிகள் ஆங்கிலத்தில் இருந்துவிடுகின்றன அவ்வளவுதான். மற்றபடி ஆங்கிலப் புலமையெல்லாம் ஆங்கிலம் கற்பதால் சாத்தியமே தவிர, ஆங்கில வழியில் பிரதி எடுப்பதால் (கற்பதால்?) அல்ல.

பிற்காலத்தில் தங்களை ‘அதிசயக் கருவி’களாகிக்கொள்வதற்கு ‘எப்படிச் சிரிப்பது’ ‘எப்படி கை-குலுக்குவது’ ‘எப்படிப் பார்ப்பது’ ‘எப்படி தன்னை விற்பது!’ (Personality Development) என்று பட்டைதீட்டி நிமிர்த்துவதற்கு முன் நிபந்தனையாக - குழந்தைகளின் ‘சுய மரியாதை’ ‘சுய சிந்தனை’ ‘படைப்புத்திறன்’ அனைத்தையும் அடித்து நொறுக்கி அழித்தொழித்துப் புடம்போடப்படும் இடமாகத்தான் இந்தப் பள்ளிக் கூடங்கள் இருக்கின்றன.

கற்றலில் மொழி

பள்ளி என்பது கற்றலைக் கற்பிக்கும் இடம் தான், உண்மையான கல்வி பள்ளியை விட்டு வெளியேறிய பிறகே நடக்கிறது - என்கிறார் கல்வியியலாளர் ஜான் டூவி (John Dewey). அயல் மொழி வழியில் கற்கும் மாணவர்களைப் பொறுத்தவரையில், பள்ளிக்குள்ளும் சரி, பள்ளிக்கு வெளியிலும் சரி, 'கற்றல்' அதன் உண்மையான பொருளில் நடப்பதே கிடையாது. என்னதான் படித்தவராக இருந்தாலும், எந்த ஒரு மொழியிலும் பாண்டித்தியம் இல்லாத ஒருவரால், எதையும் முழுமையாகக் கற்க இயலாது. ஒரு ஆழமான புத்தகத்தைக் கூட படித்துப் புரிந்துகொள்ள முடியாது. ‘வாசிக்கும் மொழியில் பாண்டித்தியம்’ அல்லது ‘வாசிக்கப்படும் பொருளில் அடிப்படை அறிவு’ இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றாவது இல்லாமல், தினத்தந்தி செய்தியைக் கூட முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.

PISA தேர்வில் நமது மாணவ மணிகளின் நிலை இதுவாகத்தான் இருந்திருக்கின்றது. சீன மாணவர்களுக்கு தாய்மொழி வழிக் கல்வி கொடுத்த மொழிப் பாண்டித்தியம், தேர்வுப் பொருள் பற்றிய அடிப்படை அறிவிற்கு ஆதாரமாக இருந்து கைகொடுத்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் PISA 2012 ஆம் ஆண்டிற்கான தேர்வு முடிவுகளும் வெளியாகிவிட்டன. இம்முறையும் சீன மாணவர்கள் தான் அசத்தியுள்ளனர். (இம் முறை, இந்தியா பங்கேற்கவில்லை! ) ஏதேனும் ஒரு மொழியில் பாண்டித்தியம் என்பது கற்றலுக்கு அவசியமான ஒன்று. தாய்மொழியில் பாண்டித்தியம் பெறுவதே இயற்கையானதும் எளிமையானதும் இயல்பானதும் ஆகும். அதற்கு தாய்மொழி வழிக் கல்வியே சிறந்த வழி.

இப்படிக் கூறுவதானது, தாய் மொழியைத் தவிர வேறு மொழிகளில் பாண்டித்தியம் பெற முடியாது என்பதாகுமா? அப்படியில்லை. ஒரு நூலை எவ்வாறு கற்பது என்பதற்கே, 1000 பக்கங்களில் விளக்கப் புத்தகங்கள் தேவைப்படுகிற நூல், காரல் மார்க்ஸின் மூலதனம் (Das Capital). அவ்வளவு கடினமான நுட்பமான நூலை, ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்க, பதின்ம வயதில் தன் வாழ்வைப் புரட்சிப் பணிக்கு அர்பணித்த தோழர் தியாகுவிற்கு முடிந்திருக்கின்றது. Das Capital -ஐப் பொருத்தவரை, இந்திய மொழிகளில் இது தான் முதல் முழுமையான மொழி பெயர்ப்பு. (தோழர் தியாகு தான், தமிழகத்தின் முதல் தாய்த் தமிழ்ப் பள்ளியைத் தொடங்கியவர். அதே பள்ளியில் தனது மகளை முதல் மாணவியாகச் சேர்த்தவரும் கூட). ஆக, அயல் மொழியில் பாண்டித்தியம் என்பது சாத்தியமே. ஆனால் இது போன்ற அரிதிலும் அரிதான சாத்தியப்பாட்டை நோக்கி, ஒரு சமூகத்தையே அயல்-மொழியில் நகர்த்துவது முட்டாள்த் தனம் என்கிறோம். பில் கேட்ஸ் (ஹாவார்டு) பல்கலைக்கழகப் படிப்பை இடைநிறுத்தியும் சாதிக்க முடிந்தது என்பதற்காக, கணினித்துறையில் சாதிக்க விரும்புபவர்களெல்லாம், கல்லூரிகளை விட்டுப் பாதியிலேயே ஓடிவந்துவிடுவதில்லையே!

அன்பிற்கினிய உழைக்கும் மக்களே!

ஆங்கிலத்தையோ வேறு ஏதேனும் அயல் மொழியையோ கூட கற்றுக்கொள்வது, இக் காலங்களில் அவ்வளவு கடினமானது அல்ல. கைப்பேசி போன்ற பல மின்னியல் உபகரணங்கள், எப்போதும் கைகளில் இருக்கும்படியான மின்னியல் அகராதிகள், இணையதளப் பயன்பாடு, ஆசிரியர்களைத் தொடர்புகொள்ள எளிமைப்படுத்தப்பட்ட வசதிகள், பன்மொழித் திரைப்படகளையும், செய்திகளையும் பார்க்கும் வாய்ப்புகள் போன்றவை, அயல் மொழி கற்றலை எளிமைப்படுத்தக் கூடியனவாக இருக்கின்றன. எனவே ஆங்கிலத்திற்காக, ஆங்கில வழியிலேயே கல்வியைத் தேர்ந்தெடுத்து, 'தற்குறி'களாக வேண்டிய அவசியமில்லை.

நம் சமூகத்திற்கு ஆங்கிலம் பயன்படலாமே தவிர, ஆங்கில - அயல் - மொழிக் கல்வி, கேடு விளைவிக்கவே செய்யும். எந்த ஒரு சமூகத்திற்குள்ளும், அதன் சமூக (தாய்) மொழியைப் புறக்கணித்துவிட்டு, அயல்மொழி வழிக் கல்வியைத் திணிப்பது, அச்சமூகத்தின் ஆளுமையைச் சீரழிக்கக் கூடியது. சமூகத்தோடு ஒன்றி வாழாத, உற்பத்தியில் பங்குகொள்ளாத, மேல்தட்டு கனவான்களுக்குச் சாதகமானது. உழைக்கும் பாட்டாளி மக்களைப் பலகீனப்படுத்தக்கூடியது. சமூகத்தின் பெருவாரி மக்களை அறிவிலிகளாக்கி, போராட்ட உணர்வை மழுங்கடித்து, ஒட்டச் சுரண்ட வழிவகுக்கக் கூடியது.

ஜெர்மனி, பிரான்ஸ், சீனா, ஜப்பான், ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகளில், மேற்படிப்புகள் கூட, தாய் மொழியில் கற்க முடிகிறது. (ஆங்கிலமே இயல்பு மொழியாகவுள்ள (de facto), இங்கிலாந்து அமெரிக்கா ஆஸ்திரேலியாவையும் கூட இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம் தானே?). உலகிலேயே, வளமையான மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்ட தேசிய இனங்களுக்கு, அடிப்படைக் கல்வியையே அயல் மொழியில் கற்பிக்கும் நாடு ‘இந்தியா’ மட்டும் தான்! வேறெந்த நாட்டிலும் இந்த அவலம் இல்லை. இதை மக்களின் விருப்பம் என்பது, எல்லோரையும் சொல்லி ராசா குசு விட்ட கதை (சொலவடை) தான்.

அன்பிற்கினிய உழைக்கும் மக்களே, இது நமக்கான உரையாடல். நமது மொழி - நமது பலம், நமது கல்வி - நமது உரிமை. அமெரிக்கா சென்றால் என்ன செய்வது... ஆஸ்திரேலியா சென்றால் என்ன செய்வது... டெல்லியில் குடியேறினால் என்ன செய்வது... குஜராத்தில் குடியேறினால் என்ன செய்வது... போன்ற, சொற்ப மேல்தட்டுக் கனவான்களின் சுய அரிப்பிற்காக, நமது உரிமைகளை விட்டுக்கொடுத்துச் சீரழிய முடியாது. இக் கனவான்கள், அங்குள்ள உழைக்கும் மக்களோடும் கூட, ஒன்றி வாழப் போவதில்லை, ஒட்டச் சுரண்டும் ஒட்டுண்ணிகளாகவே செல்கிறார்கள் என்பது திண்ணம். இவர்களின் சர்வ தேசியமும் பொது மொழிச் சிந்தனையும், ஒருபோதும் மக்கள் நலன் கருதி உதயமானது அல்ல.

ஸ்டீவ் ஜாப்ஸ்-காக கண்ணீர்விடும் இக் கனவான்களுக்கு, நமது ஆறுகளின் அவலநிலையைப் பற்றிக் கவலையில்லை. பில் கேட்ஸ் எந்தத் தேதியில் எங்கே ஒண்ணுக்குப் போனார் என்று தெரிந்த இவர்களுக்கு, தனது மாவட்டத்தில் எத்தனை ஆறுகள் ஓடுகின்றன என்பது தெரியாது. இவர்களின், ஐரோப்பிய அத்தை தேடும் கனவிற்கு, சர்வதேசியத்தைச் சாட்டையால் அடித்தா சாத்தியப்படுத்த முடியும்? சிந்தியுங்கள் தோழர்களே...!
மதியவன் ( mathiyavan@gmail.com)