Saturday 11 April 2015

அறிவொளி இயக்க நினைவுகள் – 3

மையம் துவங்கியது

வீடு திரும்பியதும் அடுத்த வாரம் திங்கள் கிழமை அன்று எங்கள் மையம் தொடங்கப்பட்டது. எங்கள் ஏரியா பிபிசி கஸ்தூரி ரங்கன் (பள்ளி ஆசிரியர்), கலைச்செல்விதான் எங்கள் ஏரியா சிபிசி, இளவழகன், படிக்க வந்த பத்துப் பேர். குத்துவிளக்கேற்றி மையத்தை துவக்கி வைத்தனர். ஏற்கெனவே ப்ளாக் போர்ட் சுவரில் மாட்டுவது போன்றது. பலப்பம், சிலேட், அறிவொளி தீபம்-1 புத்தகம், சாக்பீஸ் எல்லாம் இளவழகன் கொடுத்திருந்தார்.

அடுத்து அறிமுகப்படலம். நான் முதலில் என் பெயர் ஜெயந்தி உங்கள் பெயரை ஒவ்வொருவராக சொல்லுங்கள் என்றவுடன் மாணவிகள் ஒவ்வொருவராக அறிமுகம் செய்துகொண்டனர். செல்வி, சுதா, ஜெயா, தேன்மொழி, உமா, ராஜேஜ்வரி, புவனேஷ்வரி, குமுதா, லலிதா, சாந்தி. இதில் சாந்தி மட்டும் திருமணமானவர். மற்றவர்களெல்லாம் 18-22 வயதுள்ள பெண்கள். இதில் செல்வி, சுதா, ஜெயா, லலிதா, உமா இவங்களெல்லாம் அங்குள்ள தோலினால் ஆன ஷு, ஹேண்ட் பேக் போன்ற பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகளில் வேலை செய்தனர். ராஜேஜ்வரியும், புவனேஷ்வரியும் வீட்டு வேலை செய்தனர். குமுதா பூக்கட்டிக்கொடுக்கும் வேலை செய்தாள். இதில் பெரும்பாலோர் வீடுகளில் அவங்க அம்மாக்கள் பீடியில் லேபிள் சுற்றும் வேலை செய்தனர்.

என் வீடு இருந்த தெரு, குறுக்குத் தெருக்களில்தான் இவர்கள் அனைவரும் இருந்தனர். எங்க வீடு எப்டின்னா ஒரு கதவுக்குள்ள இரண்டு வீடு. இதுக்கு முன்ன நாங்க இருந்த வீடு ஒரு கதவுக்குள்ள ஐந்து வீடு. பக்கத்தில் கீதா இருந்தாள். என் தோழிதான். ஒரு ரூம் ஒரு சமையலறை மட்டும்தான். கீதா வீடும் அதே போலதான். ரெண்டுமே சின்னச் சின்னது. ரூமுக்குள்ள பத்து பேரு நெருக்கியடித்து உட்கார்ந்திருந்தனர். நல்ல வேளை எங்க வீட்டுல கட்டில், பீரோ எதுவுமில்லை. மூலையில் இரண்டு டிரங்க் பெட்டி, அதன் மேல் இரண்டு தலையணை ஓரமாக ஒரு பாய் அவ்வளவுதான்.

அவ்வளவுதானா? எங்க வீட்டுல இருக்கற புத்தகங்கள நீங்க பாத்திக்கீங்களா? எங்க வீட்டுல புத்தகம் இருக்காது. புத்தகத்துக்குள்ள எங்க வீடு இருக்கும். இந்த வீட்டைப் பொறுத்தவரை யாரோட நல்ல நேரமோ தெரியல ஒரு பரண் ஒன்னு இருந்துச்சு அதுல போயி சேர்ந்திருச்சு. இந்தப் புத்தகக் கதைய நான் தனியா ஒரு பதிவே போடுறேன்.

வகுப்பு தொடங்கி ஒரு இரண்டு மூன்று நாட்கள் கழித்து, எங்கள் வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி இருந்த காயத்திரி என்பவர் என்னிடம் வந்து “எனக்கும் தமிழ் சொல்லித்தருவீங்களா?” என்று கேட்டார்கள். அவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

அவங்க கேட்டது எனக்கு கிண்டல்போல தோணுச்சு. ஏன்னா அவங்க டிகிரி முடிச்சவங்க. வேலைக்கு வேற போறாங்க.
“என்ன சொல்றீங்க” என்றேன்.
“நான் பெங்களூருல படிச்சவ. எனக்கு கன்னடம், ஹிந்தி, இங்கிலீஸ் எல்லாம் தெரியும் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. சொல்லிக்குடுப்பீங்களா?” ன்னு கேட்டாங்க.
“வாங்க வாங்க அதுக்குத்தான நான் இருக்கேன்” என்று அழைத்தேன்.
மேலும் ஒரு மூன்று பேரை இளவழகன் கொண்டு வந்து சேர்த்துவிட்டார். 
எங்கள் மையத்தில் எப்போதும் 13, 14 பேர் இருந்தார்கள்.

கற்க வந்த அந்தப் பெண்களில் ஒவ்வொருவருக்கும் எத்தனை எத்தனையோ பிரச்சனைகள். குமுதா, உமா இவர்களின் அப்பாக்கள் குடிகாரர்கள். ராஜேஜ்வரி, புவனேஸ்வரிக்கு அப்பா இல்லை. சுதாவின் தந்தை நோயாளி. ஜெயாவுக்கு அப்பா உடன் இல்லை. அம்மாவும் மனநோயாளி. இவர்களின் சம்பாத்தியம் அவர்களின் வீட்டுக்கு அவசியமான ஒன்று. ஒவ்வொருவரிடமும் ஓராயிரம் கவலைகள்.

சாயங்காலம் ஆறு மணியானால் போதும் பட்டாம்பூச்சிக்கள் போல் சிறகடித்து வந்து விடுவார்கள். எங்கள் வகுப்பு தொடங்கியது முதல் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். பாடங்களை ஆர்வமாக கற்றுக்கொண்டார்கள். பாடங்களின் ஊடே பாட்டு, கதை, பொது விஷயங்கள் எல்லாம் இருக்கும். இளவழகன் சொன்னதுபோல் அரைமணி நேரத்தில் எல்லாம் எங்கள் வகுப்பு முடியாது. 6 மணிக்குத் துவங்கினால் 8 மணிக்கு மேல் அந்தப் பிள்ளைகள் போனால் போகிறதென்று கிளம்பிப்போவார்கள்.



படத்தில் வைலட் கலர் சேலைதான் நான். பக்கத்தில் பட்டுச்சேலையில் காயத்திரி. இது காயத்திரி வீடு. அவர்கள் கேமராவில் எடுத்த படம். இதில் ஜெயா, தேன்மொழி, ராஜேஸ்வரி, உமா முதலியோர் உள்ளனர்.

(இன்னும் இருக்கு)

No comments:

Post a Comment