Saturday 11 April 2015

அறிவொளி இயக்க நினைவுகள் – 2

ஏலகிரி மலை

எங்கள் வீடு வேலூரில் வேலப்பாடி என்ற இடத்தில் இருந்தது. பிள்ளைகளை கணவர் வசம் ஒப்படைத்துவிட்டு நான் மட்டுமே கிளம்பிவிட்டேன். வேலூர் பஸ் ஸ்டாண்டில் குறிப்பிட்ட நேரத்தில் சென்று சேர்ந்தேன். அங்கு நின்றிருந்த இளவழகன் அருகிலிருந்த சிலரை அறிமுகப்படுத்தினார். இவங்க உங்க வீட்டுலயிருந்து இன்னும் உள்ளே போனா பூந்தோட்டம்னு ஒரு இடம் வரும் அங்கேயிருக்கிற லேடீஸ் ஹாஸ்டல்ல இருக்காங்க. கவர்ன்மென்ட் இன்ஜினியரிங் காலேஜ்ல படிக்கிறாங்க. இவங்க பேரு ராஜ திலகம், அவங்க பேரு மைத்ரேயி. என்று அறிமுகப்படுத்தி வைத்தார். அவங்க கூட விஜயன் என்ற அவங்களுடன் படிக்கும் இன்னொருவரும் இருந்தார். இன்னும் சிலர் வந்தவுடன் அங்கிருந்து கிளம்பினோம். அந்த நிமிடத்தில் இருந்து அந்த மூன்று நாட்களும் எனக்கு புதியதான ஒரு உலகம் திறந்து கொண்டநாட்கள்.



ஏலகிரி மலைக்கு எங்களைப்போல் நிறையப்பேர் வந்திருந்தனர். கலைச்செல்வி, மலர், உமா, தேன்மொழி, சிவராமன், பப்லு (சிவ சங்கர்), சீனிவாசன், ஆனந்தன்… இவங்கெல்லாம் ஏபிசி-ங்க.

அது எப்படின்னா அறிவொளி இயக்கத்துக்கு தலைவர் கலெக்டர். அவருக்கு அடுத்து டிபிசி, அவர் ஒருவர்தான். அவருக்கு அடுத்த நிலையில் பிபிசி இவங்க ஆறேழு பேர் இருந்தனர். அவர்களுக்கு அடுத்த நிலையில் சிபிசி எனப்படுபவர்கள். இவங்க நிறையப் பேர் இருந்தனர். இவர்களுக்கு அடுத்து அமைப்பாளர் எனப்படும் இளவழகன் போன்றோர். அவர்களுக்கு அடுத்து என்னைப்போன்ற தன்னார்வலர் என்கிற வாலண்டியர்ஸ். இந்த சிபிசிக்கள் எங்களோடு (தன்னார்வலர்கள்) நேரடி தொடர்பில் இருப்பார்கள். சிபிசிக்களை இயக்குவது பிபிசிக்கள். அவர்களுக்கு மேல் உள்ளவர்தான் டிபிசி.

எங்கள் மாவட்டத்துக்கு வந்திருந்த கலெக்டர் அப்போதுதான் டிரெயினிங் முடித்துவிட்டு வந்திருந்த இளைஞர் ராமசுந்தரம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற துடிப்புள்ளவர். அவரது காதல் மனைவி அர்ச்சனா. இரண்டுபேரும் டிரெயினிங் பீரியடின்போது காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அவரது அழகான மனைவி அர்ச்சனா ஐபிஎஸ் அதிகாரி. அவர் வேறு மாவட்டத்தில் பொறுப்பேற்று பணியாற்றிக்கொண்டிருந்தார்.

டிபிசியாக இருந்தவர் செந்தமிழ்ச் செல்வன். வங்கி மேனேஜராக பணியாற்றிக்கொண்டிருந்தவர். அவருக்கு கவர்ன்மென்ட் சம்பளத்துடன் லீவு கொடுத்து அறிவொளி இயக்கப் பணிக்கு அனுப்பியிருந்தது. இவர் அறிவியல் இயக்கம் மூலமாக வந்திருந்தார். அறிவொளி இயக்கத்தை நடத்துவது அறிவியல் இயக்கம்தான். அவர்கள்தான் அந்த புத்தகம் வடிவமைப்பிலிருந்து, படிக்காதவர்களை கணக்கெடுப்பதிலிருந்து, எப்படி மக்களிடம் கொண்டு செல்வது என்பது வரை சிந்தித்து செலாற்றிக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் செயல்படும் விதத்தை நேரில் பார்த்திருந்ததால் அவர்கள் செலாற்றிய விதம் எனக்கு பிரமிப்பைக் கொடுத்திருந்தது. எப்படி எல்லாவற்றையும் மிகச் சரியாக யோசனை செய்து செயல்படுத்தியிருக்கிறார்கள். எனக்கு இப்போதும் அந்த பிரமிப்பு உண்டு.

ஒவ்வொன்றையும் யோசித்துப் பார்க்கிறேன். கலைக்குழுக்கள் உருவாக்கியிருந்தார்கள். கலைக்குழுவினருடன் நானும் ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தேன். கலைக்குழுவில் ஆறேழு பேர் இருப்பார்கள். அப்புறம் அந்த ஏரியா சிபிசி, அமைப்பாளர், தன்னார்வலர் எல்லோரும் சேர்ந்து ஒரு பத்துப் பேருக்கு மேல் இருப்பார்கள். முதலில் தவிலை அடித்துக்கொண்டே ஊரைச் சுற்றி வருவார்கள். ஊரே ஒன்றுதிரண்டு பின்னால் வரும். நடுமையமாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே நாடகம் போடுவார்கள், பாட்டுப் பாடுவார்கள். படிக்காததுதால என்ன கஷ்டம் வருது அதுனால படிக்கணும்னு வழியுறுத்தும் நாடகங்களும் பாட்டுக்களும் இருக்கும். அது முடிந்தவுடன் அனைவரும் ஒவ்வொரு வீடாக உள்ளே சென்று அந்த மக்களுடன் பேசுவார்கள். அந்த மக்களுக்கு வெளியாட்கள் வந்து அவர்களுடன் இவ்வளவு உரிமையாக பாசமாக பேசுவது புதுமையாக இருக்கும். உடனேயே அவர்கள் நம்மோடு ஒன்றிவிடுவார்கள். அவர்களை படிக்க வைப்பது எளிதாகிவிடுகிறதல்லவா?



அப்பறம் இந்த டிபிசி, பிபிசி, சிபிசி ங்கற வளைபோன்ற அமைப்பு. பிபிசிங்க ஒன்றிரண்டு பேரைத் தவிர அனைவரும் கவர்ன்ெம்ண்ட் வேலை செய்பவர்கள். இவர்களுக்கு கவர்ன்மென்ட் சம்பளத்துடன் லீவு கொடுத்து அனுப்பி இருக்கும். இந்த வேலையால இவங்களுக்கு ப்ரமோஷன் கிடையாது, இன்கிரிமெண்ட்டும் கிடையாது. ஏன்னா அந்த நாட்கள் லீவு நாட்களாக கணக்கு வைக்கப்படுமாம். அடுத்து வர்ற சிபிசிங்கள அவங்க எப்படித் தேர்ந்தெடுத்திருந்தாங்கன்னா அவங்க எல்லோரும் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர்கள். அவர்களுக்கு போக்குவரத்திற்கு மட்டும் டிஏ போல கொடுத்திருந்தார்கள். எங்களைப்போன்ற தன்னார்வலர்கள் பேரே தன்னார்வலர் தன் ஆர்வத்தினால் வருபவர்கள். அவர்கள் இலவச சேவைதான். ஒன்று இந்த ஸ்கீமிற்கு கொடுக்கும் பணம் மிகவும் குறைந்த அளவானதே. அதை வைத்து சிறப்பாக செய்ய வேண்டும். இரண்டாவது பணத்திற்காக வேலைக்கு வருகிறவர்கள் வேலையை சரியாக செய்ய மாட்டார்கள் அல்லவா? இதில் செயல்பட்டவர்களில் பெரும்பாலானோர் இடதுசாரி தோழர்கள்தான். அவர்களின் இயல்பான சேவை எண்ணம் மீண்டும் ஒருமுறை காணக் கிடைத்தது.

அடுத்து இந்த புத்தகம் வடிவமைப்பு. பள்ளிக்கூடப் புத்தகம் போல அம்மா ஆடு என்று இருக்காது. எடுத்தவுடன் பட்டா படி என்றுதான் ஆரம்பிக்கும். நான் பாடம் சொல்லிக்கொடுத்திருந்ததனால் அது எவ்வளவு எளிமையாக கற்பவருக்கு இருந்தது என்று நேரடியாக பார்த்திருக்கிறேன். அப்போதான் நெனச்சேன் இவங்ககிட்ட பாடப்புத்தங்கள வடிவமைக்க கொடுத்திருந்தா ஒருவேள என்னப்போன்றவங்க நல்லா படிச்சிருப்போமோ?

கிராமங்கள் தோறும் அறிவொளி மையங்களுக்கு தினத்தந்தி பேப்பர் போடச் செய்தார்கள். அதுதான் எளிமையாக செய்தி கொடுக்கும் பத்திரிகை.

கிராமங்கள் தோறும் லைப்ரரி அமைத்தார்கள்.

புதிதாக கற்றவர்களுக்கு படிக்க எளிதாக இருக்க வேண்டும் என்று பெரிய எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்தனர். அவற்றை கற்போர் படிக்கும் முறையில் சின்னச் சின்ன வாக்கியங்களாக, எளிமையான வாக்கியங்களாக, பாராக்களும் சின்னச்சின்னதாக வடிவமைத்துக்கொண்டிருந்தார்கள் சா.தமிழ்ச்செலவன், கமலாலயன் (கணவர்), முகில் போன்றோர். அவைகள் சிறிய புத்தகங்களாக பெரிய எழுத்துக்களில் படங்களுடன் படிக்க சுவாரசியமாக வந்தது.

எனக்குத் தெரிந்து இவைகள். இன்னும் எனக்குத் தெரியாதவைகள் எவ்வளவோ.

சரி எங்க விட்டேன். ஏலகிரிமலையா? மூணு நாளும் எங்களுக்கு டிரெயினிங் கொடுத்தாங்க. எப்படி பாடம் நடத்த வேண்டும், அது கூடவே பொது அறிவு விஷயங்கள் பேசணும், தகவல்கள் சொல்லணும் எல்லாம் சொல்லிக்கொடுத்தாங்க. நிறைய பாட்டு சொல்லிக்கொடுத்தாங்க. இந்த எஸ்.ஜே.சூர்யா படத்துல ஒரு பாட்டு வருமே “ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா?” இந்த பாட்டு படத்துக்கு எப்படி போச்சுன்னு தெரியல. “காலம் மாறும் மாறுமுன்னா மாறுமா ஒரு கையெழுத்து போடத்தெரியல, கவல தீரும் தீரும்னா தீருமா ஒரு கடுதாசி படிக்க முடியல…” அப்புறம் ஒரு பாட்டு நடுவுலதான் ஞாபகம் இருக்கு அப்போதெல்லாம் இளம் வயது திருமணங்கள் கிராமங்களில் நிறைய நடக்கும். அதைப்பற்றி “……..உடம்பு வளரும் முன்னால அவ பிள்ள பெறுவதும்…”ன்னு வரும்.

அப்பறம் எல்லாரும் வட்டமாக அமர்ந்துகொண்டு ஒருவர் பக்கத்தில் இருப்பவர் காதில் ஒன்று சொல்ல அவர் அடுத்தவரிடம் சொல்ல இப்படியே கடைசியாக விஷயத்தைச் சொன்னவரிடம் அவர் சொன்னதற்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத வாக்கியம் வரும். அப்பறம் வந்து ஒருவர் ஒரு கதையை ஆரம்பிப்பார் அடுத்தவர் அதைத் தொடர வேண்டும். இது ரெண்டு வெளையாட்டுமே விளையாடுறப்ப ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். இதுபோல விளையாட்டுக்கள் சிலவும் சொல்லிக்கொடுத்தார்கள்.

எங்களுக்கு டிரெயினர்களாக வந்தவர்கள் ராமானுஜம் (சென்னை மேக்ஸ் சயின்ஸ் இன்ஸ்டிடியூட்டில் சயின்டிஸ்ட்), ஜே.கிருஷ்ணமூர்த்தி, முகில் பரமானந்தம் (பிஎச்இஎல்-லில் ஆபீசர், ராணிப்பேட்டையில் பிபிசியாகவும் இருந்தார், எழுத்தாளரும் கூட) சுதா சுந்தரராமன் (அஇஜமாச), நிலவு குப்புசாமி (எழுத்தாளர்), த.வி.வெங்கடேஸ்வரன் (இவர் இப்போது டில்லியில் கவர்ன்மென்ட் சயின்ஸ் சென்டர்ல பணியாற்றுகிறார்.)

இந்த சிபிசி டீம் வந்து காலேஜ் படிக்கிற பசங்கன்னு சொன்னேன்னில்லையா? அந்த டீம் எப்படி இருக்கும்னு நான் சொல்லவே தேவையில்லை. சரி ஜாலியான டீம். அதுலயும் இந்த கலைச்செல்வி இருக்குதே வாய் மூடவே மூடாது. சரியான அரட்டை. நான் கொஞ்சம் அமைதியான சுபாவம்னால இந்த மாதிரி பேசறவங்கள பாத்துக்கிட்டே இருப்பேன். எப்படித்தான் பேசுறாங்களோ?

மூணு நாளும் போனதே தெரியல. அந்த மலைப் பிரதேசத்தின் பசுமையும், அந்த கேம்ப்பு கொடுத்த உற்சாகமும், அங்க கத்துக்கிட்ட விஷயங்களும் என்னை புது மனுசியாக்கியது.

(இன்னும் இருக்கு)

No comments:

Post a Comment