Tuesday 24 December 2013

சேலத்தில் மாற்றுக்கல்விக்கான மாநில அளவிலான புத்தக வாசிப்பு முகாம்-டிசம்பர், 28,29


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கான மாற்றுக் கல்விக்கான புத்தக வாசிப்பு முகாம் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கும் முகாமாக நடத்தபடுகிறது. இதுவரை 8 முறை புத்தக வாசிப்பு முகாம் நடைபெற்றுள்ளது. தற்போது ஒன்பதாவது முறையாக சேலத்தில் நடைபெறுகிறது. எனவே தங்களுக்கு தொடர்புடைய ஆசிரியர்களை இப்புத்தக வாசிப்பு முகாமில் பங்கு பெறச் செய்யும்படி கேட்டு கொள்கிறோம். இரண்டு நாள் முகாமில் ஒவ்வொரு அமர்விலும் கல்வியின் அரசியல், சமகாலக் கல்விக்கூட பிரச்சினைகள், வகுப்பறை ஜனநாயகம் என பல்வேறு தலைப்புகளில் கருத்தாளர்கள் கலந்துரையாடுகின்றனர்.

பங்கேற்கும் கல்வியாளர்கள்: பேராசிரியர் ச.மாடசாமி, பேரா.கே.ராஜீ, ஆயிஷா நடராஜன், பிரின்ஸ் கஜேந்திர பாபு, பேரா.விஜயகுமார், பேரா.என்.மணி


புத்தகம்:திருமிகு இரா நடராஜன் அவர்களின்  “இது யாருடைய வகுப்பறை

பதிவுக்கு:
1. திருமிகு நீலா, புத்தக வாசிப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் – 97866 26273
2. திருமிகு பாலசரவணன், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் – 94861 61283

நிகழ்ச்சி நடைபெறும் நாள்:
2013 டிசம்பர் 28ந் தேதி காலை 9.00 மணி முதல் 29ந் தேதி மாலை 05.00 மணி வரை.

நிகழ்ச்சி நடைபெறும்  இடம்:
சமுதாய கூடம், சேலம் உருக்காலை, கணபதி பாளையம். கேட் எண்.1
Admin Hall. Salem Steel Plant, Ganapathypalayam.

போக்குவரத்து:
1. சேலம் புதிய பஸ் நிலையம் மற்றும் ஜங்சன் இரண்டு இடங்களிலிருந்தும் தாரமங்கலம் செல்லும் அனைத்து டவுன் பஸ் மற்றும் ரூட் பஸ்ஸும் செல்லும்.
2. பஸ் நிறுத்தம் – சேலம் ஸ்டீல் பிளான்ட், முதல் கேட்.

தொடர்புக்கு:
1. திருமிகு ராமமூர்த்தி – 94864 86755,
2. திருமிகு பாலசரவணன் - 94861 61283, 89031 61283
3. திருமிகு K.P. சுரேஷ்குமார் – 94433 91777
4. திருமிகு மீனாட்சி சுந்திரம் – 75986 70004.

என்னமோ நடக்குது...? (தமிழகப்பள்ளிகளின் குழப்பநிலை!!!??)

நண்பர்களே... முதலில் கல்விப்பணியில் மகத்தான பங்களிப்பைச் செய்து வரும் நமது இயக்கச் செயல்பாட்டாளர்களுக்கும் ஆசிரியர் நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!


கல்வியில் நாம்:

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழக கல்விச்சூழலில் ஆகச்சிறந்த பங்களிப்பைச் செய்திருக்கிறது. தமிழக கல்விச்சூழலில் ஏற்பட்டுள்ள முற்போக்கான சில மாற்றங்களைப் பேச முனைகின்ற நடுநிலையாளர்கள் / நண்பர்கள் எவரும் அறிவியல் இயக்கத்தைக் குறிப்பிடாமல் பேச முடியாது. 

கல்வி, சுகாதார விழிப்புணர்வுக்காக ஆரம்பகாலத்தில் நாடு தழுவிய அளவிலான கலைப்பயணங்களில் நமது பங்களிப்பாக இருந்தாலும், அரசின் திட்டமாக இருந்தாலும் மக்கள் இயக்கமாக நாம் மாற்றிக்காட்டிய அறிவொளிப் பணியாக இருந்தாலும் சரி, கற்றலில் இனிமை, கற்பது கற்கண்டே, சிட்டுக்கள் மையம், இரவுப்பள்ளி என நீளும் நமது இயக்கத்தின் முன்முயற்சிகளின் நெடும்பட்டியலாக இருந்தாலும் சரி... நிகழ்காலத்தில் செயல்வழிக்கற்றல், பொதுப்பாடத்திட்டம், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை ஆகியவற்றில் நமது ஆய்வுகளும் அரசுக்கு நாம் வைத்த முன்மொழிவுகளும் நமது ஆழமான தலையீட்டிற்கு அழுத்தமான சான்றுகள்.

செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ஆசிரியர் தினம், 8ஆம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினம், (பிற தினங்களை நண்பர்கள் பட்டியலிட்டுக் கொள்வீர்கள் என நம்புகின்றேன்).. வாழ்த்துச்சொல்லி குறுஞ்செய்திகள் பறந்தன.. இது தொடரட்டும்.

அதே நேரத்தில் நாம் கல்வி குறித்து பரிமாறிக்கொள்ளவும் விவாதிக்கவும் தொடர்செயல்பாடுகளைத் திட்டமிடவும் தேவையிருக்கிறது. இந்திய, தமிழகக் கல்விச்சூழலில் நமது செவிகளில் கேட்பதற்கினிய சொல்லாடல்கள் ஒலிக்கின்றன. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009, செயல்வழிக்கற்றல் (அட்டை வழிக்கற்றல் என்றாலும்), சமச்சீர்கல்வி மூலம் பொதுப்பாடத்திட்டம், முப்பருவக்கல்வி, தொடர்ச்சியான முழுமையான மதிப்பீட்டு முறை, அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி... மீண்டும் ஒருமுறை வாசித்துப்பாருங்கள்.. குறுகிய காலத்தில் இத்தனை மாற்றங்களா...!?

தமிழகக் கல்வியில் உருவாகியுள்ள புதிய குழப்ப நிலை

2007 ஜனவரியில் இருந்து செயல்வழிக்கற்றல் அமுலாகி வந்தது. இந்தச்சூழ்நிலையில் பேரா.யஷ்பால் குழு வலியுறுத்திய சுமையின்றிக் கற்றல் என்ற முப்பருவக்கல்வி இன்று நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் குழந்தைகளின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கு வழிகோலும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு அறிமுகமானது. சிக்கலும் துவங்கியது. 

மாணவர்களின் சுயவேகத்தில் கற்பது, விட்ட படிநிலையிலிருந்து தொடர்வது போன்ற பல சிறப்பம்சங்கள் செயல் வழிக்கற்றலில் இருந்தது. உண்மையில் நடக்கவும் செய்தது. ஆனால் தற்போது அந்தந்தப் பருவத்திற்குரிய பாடங்கள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என மாணவர் மையச் சிறப்புகள் ஆசிரியர் மையமாக்கப்பட்டது.

மூன்று பருவங்களுக்குத் தக்கவாறு பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. கல்வியாண்டு முழுவதுக்குமாக வழக்கம்போல் அட்டைகள் அச்சிடப்பட்டன. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சியில் நூற்றுக்கணக்கான திருத்தங்களை ஆசிரியர்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கக்கூடிய ஆசிரிய நண்பர்களுக்கு இது மேலும் குழப்பத்தினையே ஏற்படுத்தி உள்ளது. மேலும் தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் 4000க்கும் மேற்பட்ட குறுவள மையங்களில் பயிற்சி கொடுத்தே மேம்படுத்த முடியாத கல்வியை இனிவரும் ஆண்டுகளில் 50ரூ ஆசிரியர்களுக்கு மட்டுமே பயிற்சி கொடுத்து (பயிற்சி எடுத்தவர்கள் பள்ளிக்குச் சென்று சக ஆசிரியர்களுக்கு சொல்ல வேண்டுமாம்.. அதற்கும் ஒரு பதிவேடாம்) சாதிக்க முடியும் எனக் கல்வித்துறை கனவு காண்பது எந்த விதத்தில் நியாயம் நண்பர்களே?

இனி, புதிய மதிப்பீட்டு முறையும் சில குழப்பங்கள்! செயல்வழிக்கற்றலில் மதிப்பீடு இருக்கும் ஆனால் இருக்காது. மதிப்பெண்கள் நிச்சயம் இல்லை. ஆனால் ஊஊநு வந்த பிறகு நின்றால் மதிப்பெண்.. உட்கார்ந்தால் மதிப்பெண்.. அனைத்தும் மதிப்பெண் மயமாக்கப்படுகிறது. ஆனால் கடைசியில் மட்டும் மாணவர்களுக்கு தரமிடுங்கள்... படம் முழுக்க அடிதடி.. கடைசி நிமிடம் அகிம்சை பேசும் விநோதமன்றி வேறென்ன?

மேலும் எதற்கெடுத்தாலும் ரிக்காடு/ஆவணம்.. வளரறி மதிப்பீடு-அ, வளரறி மதிப்பீடு-ஆ,(பாடவாரியாக) தொகுத்தறி மதிப்பீடு, பாட ஆசிரியர்/வகுப்பாசிரியர் பதிவேடுகள்... இன்னும் இன்னும் நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய..... (கேட்டால் அவையெல்லாம் ஹளு ருளுருஹடு) மாவட்டந்தோறும் எஸ்.எஸ்.எ. கடைகள் என்றே முளைக்குமளவிற்கு நிலைமை மோசமாகி விட்டது. அந்தப் பெருமை அனைவருக்கும் கல்வி இயக்கத்தினையே சாரும்.. 

நடைமுறைப் படுத்தப்பட்ட பல முற்போக்கான புதிய முறைகளை கருத்து ரீதியாகச் சரியாக உள்வாங்காமல் அவற்றைக் காட்சிப் படுத்துவதிலேயே (நடக்கவில்லையென்றாலும் பரவாயில்லை.. ரிக்கார்டாவது போட்டு வையுங்கள்..) குறியாக இருந்ததன் விளைவுதான் இது.. ஆக ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் ரெகார்ட் கிளார்க் ஆகியுள்ளது இன்றைய கல்விச்சூழல்.. 

எத்தனை எத்தனை விலையில்லாப் பொருட்கள்.. உள்ளூர் மாணவர்களுக்கும் கூட இலவசப் பேருந்து பயண அனுமதி அட்டைகள்.. மாணவர்கள் பயன் பெறட்டும்..பாராட்டுக்கள்! ஆனால் அதே மாணவர் களுக்கு பாடங்களுக்கான பயிற்சி புத்தகங்கள் கேட்டால் நிதியில்லை.. திரள் பதிவேடுகள் கேட்டால் பதிலில்லை.. ஓவியம், கலையும் கைவண்ணமும், விளையாட்டு, யோகா, கணினி பயிற்சி, தமிழ் உள்ளிட்ட எல்லாப் பாடங்களையும் நடத்த என அனைத்திற்கும் ஒரே ஆசிரியர்தான்.. இவற்றிற்கெல்லாம் பயிற்சி? என்றோ கொடுத்த அரைநாள் பயிற்சிதான்.. பள்ளிக்கொருவர் வேண்டாம் ஒன்றிய அளவுகளில் உள்ள வட்டார மையங்களுக்காவது ஒரு ஓவிய / விளையாட்டு / யோகா /கலை / கணினி/ தொழில் ஆசிரியர்களை நியமிக்கலாமல்லவா? சுழற்சி முறையில் அனைத்துப் பள்ளிகளுக்கும் குறைந்த அளவிலான பயிற்சிகளாவது சென்றடையும் அல்லவா?

இதையெல்லாம் சரிசெய்யாமல் ஆங்கில வழிக் கல்வி மட்டும் கொண்டு வந்து அரசுப்பள்ளிகளைக் காப்பாற்ற முடியாது. வசதியற்ற மாணவ்ர்களுக்கான ஆங்கில வழிக்கல்வி மேலும் கல்வியின் தரத்தை கீழே தள்ளும். அரசுப்பள்ளிகளுக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. ஆங்கிலவழிக்கல்வி தீர்வாகாது. பள்ளிகள் அனைத்தும் இன்று குழப்பத்தில் உள்ளன.முதல் பருவம் முடிந்து விட்டது. இந்தக் குழப்பங்களும் புலம்பல்களும் இனியும் தொடர்தலாகாது. மாவட்டந்தோறும் ஆய்வுகள், விவாதங்கள் நடக்க வேண்டும்.. இக்குறைகளுக்கான மாற்றுக்களை நாம் கண்டறிந்து நல்லதொரு கல்விச்சூழலை உருவாக்குவோம்! அறிவியல் இயக்கத்திற்கான அடுத்த சவால் இது!

தேனி சுந்தர்
நன்றி: விஞ்ஞானச்சிறகு, டிசம்பர்,2013

Friday 13 December 2013

21-வது தேசிய அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகத்தின் சிறந்த இளம் விஞ்ஞானிகள் 30 பேர் தேர்வு

பதிவு செய்த நாள் : Dec 10 | 12:17 am

திருப்பூர், -

21-வது தேசிய அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகத்தின் சிறந்த இளம் விஞ்ஞானிகள் 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

அறிவியல் மாநாடு

மாநில அளவிலான 21-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் 3 நாட்கள் நடந்தது. இதில் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 209 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் 210 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் ஈரோடு ஜியன்தொட்டி தேசிய குழந்தைதொழிலாளர் பயிற்சி மைய மாணவர் கவின், விஜய், மீனா, நந்தினி ஆகியோர் குழந்தை திருமணங்களால் ஏற்படும் மனித ஆற்றல் இழப்பு குறித்து ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தனர். இது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இளம் விஞ்ஞானிகள்

மாநாட்டில் சிறந்த 30 ஆய்வுக்கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன. இதை சமர்ப்பித்த 30 குழுக்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் 150 பேரும் இளம் விஞ்ஞானிகளாக அறிவிக்கப்பட்டனர். போபாலில் வருகிற 21-ந் தேதி நடைபெறும் தேசிய அறிவியல் மாநாட்டில் 30 குழுக்களின் தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

தேசிய மாநாட்டில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளின் குழு தலைவர்கள் விவரம் வருமாறு:-

நெல்லை

தேனி மாவட்டம் ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி என்.லிசா, திருவண்ணாமலை மாவட்டம் மேலராணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கவுசல்யா, விருதுநகர் நாடார் மகமை பெண் கள் மேல் நிலைப்பள்ளி மாணவி தமிழமுதா, மதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரித்தா,

கன்னியாகுமரி கார்மல் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜே.ஜே.அருண், கிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கே.கனிமொழி, நெல்லை திருமால்நகர் கலிலியோ துளிர் இல்ல மாணவன் ஆர்.முகிலன், புதுக்கோட்டை கல்ப்நகர் கலிலியோ கலிலி துளிர் இல்ல மாணவர் அடைக்கல அமலன்,

திருப்பூர்

காஞ்சிபுரம் மாவட்டம் வெங்கம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் தினேஷ், புதுக்கோட்டை மாவட்டம் மருதாந்தலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் பூ.கபிலன், சேலம் ஜி.டி.நாயுடு துளிர் இல்ல மாணவர் எம்.அப்துல் ரகுமான், ஈரோடு ஜியன்தொட்டி தேசிய குழந்தைதொழிலாளர் பயிற்சி மைய மாணவர் கவின்,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வாணிவிலாஸ் உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவி நந்தினி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதேஸ்வரன் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி சுவேதா, கரூர் மாவட்டம் ஆர்.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ரம்யகலா, கடலூர் மாவட்டம் ஜவகர் மேல்நிலைப்பள்ளி மாணவர் முகேஷ்ராஜ்,

நீலகிரி, கோவை

திண்டுக்கல் மாவட்டம் சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கிருபா, சென்னை மாவட்டம் தி இந்து சீனியர் உயர்நிலைப்பள்ளி மாணவி ரஞ்சினி, விருதுநகர் மாவட்டம் தி இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர் டெனித் ஆதித்யா, நீலகிரி மாவட்டம் அரிஸ்டோ துளிர் இல்ல மாண வர்கள் முகமதுசெபின், ராமநாதபுரம் மாவட்டம் நேசனல் அகாடமி மவுண்ட் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவர் பெனின் தாமஸ், சிவகங்கை மாவட்டம் பாபா அமிர்பாதுசா மேல்நிலைப்பள்ளி மாணவி மீனா நாச்சியார்,

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர் ஜெகதீஸ்ராஜ், தஞ்சாவூர் மாவட்டம் மகரிஷி வித்யாலயா பள்ளி மாணவர் கற்பகமுத்து, வேலூர் மாவட்டம் ராணிபேட்டை தேவ்பெல் பள்ளி மாணவி எஸ்.சாய்பிரியா, அரியலூர் மாவட்டம் தி ஆதித்யா பிர்லா பப்ளிக் பள்ளி மாணவி நவீனா, மதுரை மாவட்டம் மகாத்தா மாண்டச்சோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அக்ஷய ரத்னா, திருவாரூர் மாவட்டம் அசோகாசிசூ விகார் மெட்ரிக் பள்ளி மாணவர் ஆகாஸ், திருவள்ளூர் விவேகானந்தா மெட்ரிக்பள்ளி மாணவி கார்த்திக்ஜோதி, நாகப்பட்டினம் ஏ.ஜே.சி. பப்ளிக் பள்ளி மாணவி சுபிக்ஷா.

விஞ்ஞானிகள் மாநாடு

இந்த 30 குழு தலைவர்களில் இருந்து கிராம சூழ்நிலையில் வீட்டு விலங்குகள் ஆற்றல் பயன்பாடு பற்றி மதிப்பீடு மற்றும் அளவிடுதல் என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்த புதுக்கோட்டை மாவட்டம் மருதாந்தலை அரசு பள்ளி மாணவர் பூ.கபிலன், இயற்கையாக ஆற்றல் உற்பத்தி செய்வது குறித்து ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்த விருதுநகர் தி இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர் டெனித் ஆதித்யா ஆகியோர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் அகில இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டில் கலந்து கொண்டு தங்கள் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்க உள்ளனர்.

Source: Dailythanthi

Monday 11 November 2013

PPP திட்டம்: தமிழக முதல்வர் அறிக்கை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை - 10.11.2013

""""பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது"" என்ற பழமொழிக்கேற்ப, தான் ஆட்சியில் இருந்த போது தன்னலத்திற்காக மத்திய அரசின் ‘ராஷ்டீரிய ஆதர்ஷ் வித்யாலயா’ திட்டம் குறித்து வாய்மூடி மவுனியாக இருந்தது மட்டுமல்லாமல், அதற்கு ஆதரவு தெரிவித்து, அதை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்திவிட்டு, இப்போது """"மத்திய அரசுக்கு மறுப்புத் தெரிவிக்க மாநில அரசு முன் வருமா?"" என்ற தலைப்பிலே மாநில சுயாட்சி குறித்து திரு. கருணாநிதி நீட்டி முழக்கி அறிக்கை வெளியிட்டு இருப்பது பித்தலாட்டத்தின் உச்சகட்டம்.

திரு. கருணாநிதியின் அறிக்கையைப் பார்க்கும் போது, இந்தத் திட்டத்தின் விவரத்தை முழுவதுமாக தெரிந்து கொண்டு பேசுகிறாரா? அல்லது எழுதுவதற்கு வேறு தலைப்பு கிடைக்காமல் வெத்துவேட்டு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறாரா? அல்லது இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு சரியான, திடமான, தமிழர்களுக்கு ஆதரவான, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய முடிவினை எடுக்காததால், யாருடன் கூட்டணி வைப்பது என்ற குழப்ப நிலையில் மத்திய காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து அறிக்கை விடுகிறாரா என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. 

எது எப்படியோ, நுணலும் தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கேற்ப திரு. கருணாநிதியின் அறிக்கை அமைந்துள்ளது. இந்தத் திட்டம் குறித்த உண்மை நிலையை விரிவாக எடுத்துரைப்பது எனது கடமையென கருதுகிறேன். 

2007 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பாரதப் பிரதமர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பிற்கு ஏற்ப, """"மாதிரிப் பள்ளி திட்டம்"", அதாவது ஆடினநட ளுஉhடிடிட ளுஉhநஅந திட்டத்தினை செயல்படுத்தும் பணியை மத்திய அரசு 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துவக்கியது. இந்தத் திட்டத்தில், இந்தியா முழுவதும் 6,000 மாதிரி பள்ளிகள் துவங்கப்பட வேண்டும் என்றும்; இதில் 3,500 மாதிரி பள்ளிகள் கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் மாநில அரசுகள் மூலம் துவக்கப்படும் என்றும்; எஞ்சிய 2,500 பள்ளிகள் கல்வியில் பின்தங்கிய வட்டாரங்கள் அல்லாத ஏனைய வட்டாரங்களில் பொது - தனியார் பங்கீட்டுடன், அதாவது ஞரடெiஉ ஞசiஎயவந ஞயசவநேசளாiயீ மூலம் துவங்கப்படும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. 

இந்தத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில், இது குறித்த திட்ட அறிக்கையினை அளிக்குமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் 19.11.2008 தேதியிட்ட கடிதம் மூலம் அனைத்து மாநில அரசுகளும் கேட்டுக் கொள்ளப்பட்டன.

இதன் அடிப்படையில், சுற்றோட்டக் குறிப்பு அப்போதைய தமிழக முதலமைச்சர் திரு. கருணாநிதிக்கு அனுப்பப்பட்டு, அந்தக் கோப்பில் """"அமைச்சரவையில் பேசலாம்"" என்று திரு. கருணாநிதி தன் கைப்பட எழுதி இருக்கிறார். 

அப்போதைய முதலமைச்சர் திரு. கருணாநிதியின் அறிவுரைக்கேற்ப, இந்தக் கருத்துரு 22.7.2009 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டது. பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சரவைக்கான கூட்டக் குறிப்பின் இரண்டாவது பத்தியில் """"தொடங்கப்படவுள்ள 6000 மாதிரிப் பள்ளிகளில், 2500 மாதிரிப் பள்ளிகள் கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் தொடங்கப்படும். அடுத்த 2500 மாதிரிப் பள்ளிகள் பொது தனியார் கூட்டுறவு (ஞரடெiஉ ஞசiஎயவந ஞயசவநேசளாiயீ) என்ற முறையில் தொடங்கப்படும். எஞ்சிய 

1000 பள்ளிகளை தொடங்குவதற்கான வழிமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை"" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், """"விரிவான விவாதத்திற்குப் பின், தமிழ்நாட்டில் கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் 20 மாதிரிப் பள்ளிகளை மைய அரசு உதவியுடன் 

ரூ. 75.40 கோடி மதிப்பீட்டில் தொடங்க விழையும் பள்ளிக் கல்வித் துறையின் கருத்துருவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது"" என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

அதாவது, திரு கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் திட்டத்திற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் மத்திய - மாநில அரசுகள் இணைந்து நடத்தும் மாதிரி பள்ளிகளுக்கும், இதர வட்டாரங்களில் பொது - தனியார் பங்களிப்புடன் தொடங்கப்படும் மாதிரி பள்ளிகளுக்கும் திரு கருணாநிதியின் அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், மத்திய அரசின் இந்தத் திட்டத்திற்கு தனது முழு ஒப்புதலை முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு அளித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு எதிராக அப்போது வாய் திறக்காமல் ஒப்புதல் அளித்த திரு. கருணாநிதி; இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு ஒரு கடிதம் கூட எழுதாத திரு. கருணாநிதி; தற்போது எதிர்ப்பு தெரிவிப்பது அரசியல் ஆதாயம் தேடுவதற்காகத்தான் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். 

இந்தப் பள்ளிகளில் சேரும் மாணவ - மாணவியருக்கு பொது நுழைவுத் தேர்வு உண்டு என்பதும் இந்தப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி மட்டுமே கற்பிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது ஆங்கில வழிக் கல்வி குறித்து வாய்கிழிய பேசும் திரு. கருணாநிதி, அப்போது ஏன் இந்தத் திட்டத்திற்கு அனுமதி அளித்தார் என்பதை திரு. கருணாநிதி தான் தெரிவிக்க வேண்டும். 

இப்படி மாநில சுயாட்சிக்கு எதிராக மாநிலத்தில் ஆட்சியில் இருந்த போது செயல்பட்ட திரு. கருணாநிதி, தற்போது மாநில சுயாட்சி குறித்து பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. 

திரு. கருணாநிதி தனது நீண்ட அறிக்கையில், இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ளார். அதில், """"இதற்கு முன் கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் இத்தகைய மாதிரிப் பள்ளிகளை மத்திய அரசு அறிவித்த போது, தனியாரை அனுமதிக்காமல் தமிழக அரசே அந்தப் பள்ளிகளைத் தொடங்கி நடத்தி வருகிறது. அதே போல இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 356 மாதிரிப் பள்ளிகளையும் தமிழக அரசே தொடங்கி நடத்த வேண்டும்"" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எள்ளளவும் உண்மை இல்லை. ஏனெனில், கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களைப் பொறுத்தவரையில், மத்திய - மாநில அரசு பங்களிப்புடன் மாதிரி பள்ளிகள் துவங்கப்பட வேண்டும் என்பது தான் மத்திய அரசின் திட்டம். அதன்படி, தமிழக அரசே மாதிரி பள்ளிகளை துவங்கியது. ஆனால், தற்போது கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்கள் அல்லாத பகுதிகளில் துவங்கப்படும் மாதிரி பள்ளிகள் பொது - தனியார் முறையில் துவங்கப்பட வேண்டும் என்பது தான் மத்திய அரசின் திட்டம். எனவே தான், இந்தக் கருத்தை தனது கருத்தாக கூற திரு. கருணாநிதிக்கு கூச்சம் ஏற்பட்டு, திரு. ராமதாஸ் அவர்களின் அறிக்கையை மேற்கோள் காட்டியிருக்கிறார் போலும்!

6,000 மாதிரி பள்ளிகள் துவங்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ், பொது - தனியார் பங்களிப்புடன் 2,500 மாதிரி பள்ளிகள் துவங்கும் திட்டமும் இடம்பெற்றுள்ளதா, இல்லையா?

இந்தத் திட்டத்திற்கு முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு ஒப்புதல் அளித்ததா, இல்லையா?

இந்த மாதிரி பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி மட்டுமே கற்பிக்கப்படுவது திரு. கருணாநிதிக்கு தெரியுமா, தெரியாதா?

இந்த மாதிரிப் பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு 2010-2011ஆம் ஆண்டில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது திரு. கருணாநிதிக்கு தெரியுமா, தெரியாதா? இத்தகைய கேள்விகளுக்கு திரு கருணாநிதி விடையளிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான சேர்க்கை பொது நுழைவுத் தேர்வின் அடிப்படையில் அமைய வேண்டும் என்கிற இந்திய மருத்துவக் குழுவின் கருத்துருவை தி.மு.க. அங்கம் வகித்த மத்திய அரசு ஆதரித்த போது, மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் என்ற வகையில், கூட்டு அதிகாரப் பட்டியலில் (ஊடிnஉரசசநவே டுளைவ) உள்ள ‘கல்வி’, மாநிலப் பட்டியலில் (ளுவயவந டுளைவ) சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்று வரும் சூழ்நிலையில், இருக்கின்ற அதிகாரங்களையும் பறிக்கின்ற வகையில் மத்திய அரசு இது போன்ற நடவடிக்கையை எடுத்திருப்பது மாநில சுயாட்சிக்கு எதிரான செயல் என்பதை நான் எனது அறிக்கை மூலம் நினைவூட்டியதை திரு. கருணாநிதி மறந்துவிட்டார் போலும்!

இயல்பான மத்திய உதவி மூலம் மாநில அரசின் திட்டங்களுக்கு தொகை ஒதுக்கப்பட வேண்டும் என்பதும், இதில் மத்திய அரசின் திட்டங்களை இணைக்கக் கூடாது என்பதும் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை. இதை நான் திட்டக் குழுத் துணைத் தலைவர் உடனான கூட்டங்களிலும், தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்திலும் எடுத்துரைத்து இருக்கிறேன் என்பதை திரு. கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விழைகிறேன். 

சில்லரை விற்பனையில் அந்நிய முதலீடு; உணவுப் பாதுகாப்புச் சட்டம்; மதிப்புக் கூட்டுவரி சட்டம் என மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் அல்லது குறைக்கும் பல்வேறு மத்திய காங்கிரஸ் அரசின் நடவடிக்கைகளை ஆதரித்த திரு. கருணாநிதி; மாநில சுயாட்சியை காலில் போட்டு மிதித்த திரு. கருணாநிதி; இன்று மாநில சுயாட்சி குறித்து பேசுவது கேலிக்கூத்தானது, எள்ளி நகையாடத்தக்கது. 

இதே போன்று, காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு, பாலாறு போன்ற பல்வேறு விஷயங்களில் தமிழகத்தின் உரிமையை தன்னலத்திற்காக காவு கொடுத்த திரு. கருணாநிதி, மாநில சுயாட்சிக்காகவும், தமிழர்களின் உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் எனது தலைமையிலான அரசிற்கு அறிவுரை கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது. 

மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ், பொது - தனியார் பங்களிப்புடன் இந்தியாவில் முதல் கட்டமாக, 41 மாதிரிப் பள்ளிகள் துவங்கப்பட உள்ளன. இதில் ஒன்று கூட தமிழ்நாட்டில் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 500 ஒன்றியங்களில் மாதிரிப் பள்ளிகள் துவங்குவதற்கான ஒப்பந்தத்தினை மத்திய அரசு கோரியுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 15.11.2013 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இது வரையில் தமிழ்நாட்டிலிருந்து இந்த ஒப்பந்தத்தில் யாரும் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிய வருகிறது. 

காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தது போல்; முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டியது போல்; கச்சத்தீவு பிரச்சனையில் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளது போல்; என்.எல்.சி. நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்கவிடாமல் தடுத்தது போல்; சிங்களர்களுக்கு தமிழ்நாட்டில் ராணுவப் பயிற்சி அளித்ததை தடுத்தது போல்; இந்தப் பிரச்சனையிலும் எனது தலைமையிலான அரசு உறுதியான, தமிழர்களுக்கு பயனளிக்கக் கூடிய நடவடிக்கைகளை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இலங்கை தமிழர்கள் பிரச்சனை; மீனவர் பிரச்சனை; மண்ணெண்ணெய் ஒதுக்கீடு பிரச்சனை; புதிய மின் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில் காலம் தாழ்த்துதல் என பல்வேறு பிரச்சனைகளில் மத்திய அரசு செவிசாய்க்காமல் இருப்பதைப் போல், இந்த விஷயத்திலும் மத்திய அரசு மவுனம் சாதிக்கும். 

இருப்பினும், இந்த மாதிரிப் பள்ளிகளை அடுத்த கல்வி ஆண்டுக்கு முன்னர் தொடங்க முடியாது என்பதால், அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் முடிவிற்குப் பிறகு ஆட்சி மாறும், தமிழக மக்களுக்கு ஏற்றம் தரக்கூடிய மாற்றம் வரும், அதன் மூலம் இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

PPP மாதிரிப்பள்ளிகள் திட்டம்- அறிவியல் இயக்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை

கடந்த அக்டோபர் இறுதியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் PPP திட்டம் குறித்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு அனுப்பிய கடிதம்:

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையானது தன்னிச்சையாக மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமல் PPP என்ற வடிவில் அரசு-தனியார் கூட்டின் அடிப்படையில் கல்வியில் பின்தங்கிய மற்றும் பின்தங்காப் பகுதிகளில் மாதிரிப்பள்ளிகள் தொடங்குவது தொடர்பாக ஒரு சுற்றறிக்கையினை அனுப்பியுள்ளது. இதனடிப்படையில் அக்.28,2013க்குள் மாநில அரசுகள் கருத்து தெரிவிக்கவேண்டுமென்றும் அக்.30ம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக அறியவருகிறோம். மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயல்பாடு கீழ்க்காணும் காரணங்களுக்காக வன்மையாக கண்டிக்கத்தக்கவை. மறுபரிசீலனைக்கும் உட்படுத்தப்படவேண்டியவை எனக் கருதுகிறோம்.

1. பள்ளிக்கல்வியில் மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமல் மாநில அரசுகளின் கருத்துக்களுக்கு இடமளிக்காமல் மத்திய அரசு தன்ன்னிச்சையாக எடுக்கின்ற முடிவுகளை அமல்படுத்தும் ஏதுவாளரைப் போல, உதவியாளரைப்போல மாநில அரசுகளைக் கருதுவது.

2. PPP திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் பள்ளிகள் அனைத்தும் மத்திய அரசின் CBSE கல்வித்திட்டத்தின்படியே இருக்கும், இயங்கும் என மத்திய அரசு கூறுகிறது. இதன் மூலம் இந்திய நாட்டின் பன்முகத்தன்மையையும் பன்முகக் கலாச்சாரத்தினையும் பிராந்திய வேறுபாடுகளுக்கு தக்கவாறு கல்வித்திட்டத்தை அமைத்துக்கொள்ளுதல் என்ற நடைமுறைக்கு முரணானது.

3. PPP என்ற திட்டம் மறைமுகமாக தனியார்மயத்தை ஊக்குவிப்பதே ஆகும். குறிப்பாக PPP திட்டத்தின் மூலம் பள்ளிக்கல்வியை முழுவதுமாக கார்ப்ரேட் நிறுவனங்களின் வணிக லாபத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது. ஏற்கனவே தனியார்மயத்தால் கல்வித்தரம் சீரழிந்துபோயுள்ள இந்திய சமூகத்தில் மேலும் சீரழிவையும் ஏற்றத்தாழ்வுகளையும் உருவாக்கும் எனவே தமிழக அரசு நாளை நடக்க இருக்கும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கூட்டத்தில் கலந்துகொண்டு தன்னிச்சையானதும் கூட்டாட்சிமுறைக்கு விரோதமானதுமான இச்செயல்பாட்டை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அதன் பின்னர் தமிழக மக்களின் நலனையும் தமிழக பள்ளிக்கல்வி நலனையும் கருத்தில்கொண்டு இத்திட்டத்தினை ஆழமாகப் பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தங்களை வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறது. 

மாநிலப்பொதுச்செயலாளர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

Wednesday 6 November 2013

மாதிரிப்பள்ளிகள் - யாருக்கானது? ஜோ. ராஜ்மோகன்

மத்திய அரசு நாடு முழுவதும் பின் தங்கியுள்ள பகுதிகளை தேர்வுசெய்து தனி யார் பங்களிப்புடன் மாதிரிப்பள்ளிகளை தொடங்குவதற்கு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றது. நவீன தாராளமய கொள்கையினை தீவிரமாக கடைபிடித்து வருகின்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை கடும் வணிகமயமாக்கியுள்ள நிலை யில் 2500 மாதிரிப்பள்ளிகளை அரசு தனியார் கூட்டு (ஞஞஞ) என்ற திட்டத்தின் அடிப்படை யில் துவங்கிட தனியார் மற்றும் கல்வி முத லாளிகளை விண்ணப்பிக்குமாறு அறிவிக் கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதுவரை 400க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனம் 20 பள்ளிகள் வரை துவங்கி நடத்திட அனுமதியினை வழங்கியுள் ளது. இப்பள்ளிகள் துவங்குவதற்கான நிலம் முழுவதையும் அரசு தேர்வு செய்து கொடுக்க உள்ளது. மேலும் இப்பள்ளிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீட்டையும் உறுதிசெய்திட உள்ளது. சிபிஎஸ்இ (மத்திய பள்ளிக் கல்வி வாரியம்) பாடத்திட்டத்தின் அடிப்படையில் இப்பள்ளி கள் இயங்கும். மேலும் இப்பள்ளிகளில் 60 சதவீத மாணவர்களுக்கான கட்டணங்களை பள்ளி நிர்வாகமே எவ்வளவு வேண்டுமானா லும் தீர் மானித்துக்கொள்ளலாம். 40 சதவீத மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டின் அடிப்படை யில் இங்கு சேர்க்கப்படுவர். இவர்களுக்கான கட்டணங்களில் பெரும் பகுதியை அரசு ஏற்கும் எனவும் ஒருபகுதி கட்டணங்களை மாணவர் கள் செலுத்திடவும் வகை செய்யப்பட்டுள்ளது.

மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசே நேரடியாக தனியார் முதலாளிகளை மாதிரிப் பள்ளிகள் நடத்தி அனுமதிக்கும் இந்த நடவடிக்கை மாநில அரசின் சுயாட்சி உரிமையை குழிதோண்டி புதைக்கும் நட வடிக்கை. ஆகவே மாநில அரசுகளின் சுயாட்சி உரிமையை பறிக்கும் இந்த நடவடிக்கைக்கு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திட வேண்டும். தொடர்ந்து மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிராக வலு வாக குரல் கொடுத்து வரும் தமிழக முதல்வர் இந்த நடவடிக்கையை எதிர்த்து உறுதி யோடு குரல்கொடுத்திட வேண்டும். இந்திய நாட்டில் அவசரநிலை அமலில் இருந்த போது கல்வி மாநிலப்பட்டியலி லிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இன்று வரை இதே நிலை தொடர்கிறது. கல் வியை மிக விரைவாக வணிகமயமாக்கிட வும், அதற்கேற்றாற்போல் சட்டத்தை வளைத்திடவுமே மத்திய அரசு இந்த அதி காரத்தை பயன்படுத்தியுள்ளது.

வரலாற்றை கூர்ந்து கவனித்து வரும் எவருக்கும் தெளிவாக புலப்படும். புதிய பொருளாதாரக் கொள்கை அமலாக்கப்பட்ட 1980களுக்கு பிறகே கல்வி தனியார்மயமானதன் வேகம் மிகவும் அதிகரித்துள்ளது. அது வரை கல்வி என்பது அரசின் கடமையாக கருதப் பட்டது. சில செல்வந்தர்கள் துவங்கிய பள்ளி கள் அரசின் உதவியோடு, வர்த்தக நோக்க மற்று இயங்கிவந்தன. இந்த நிலைமை 1980 களுக்கு பிறகே மாறத்துவங்கியது. புற்றீசல் கள் போல் மெட்ரிக்பள்ளிகள் துவங்கப்பட் டன. பள்ளியின் கட்டமைப்பு தகுந்த அள வுக்கு உள்ளதா? விளையாட்டு மைதானம் உள்ளதா? போதிய ஆசிரியர்கள் உள்ளனரா? இதுபோல பல கேள்விகளுக்கு முறையான பதிலின்றி பட்டிதொட்டிகள் எங்கும் மெட்ரிக் குலேஷன் பள்ளிகள் துவங்க அனுமதிக்கப் பட்டது. இங்கு ஆங்கில வழிக்கல்வி பயிற்று விக்கப்பட்டதால் பெற்றோரும் தங்கள் குழந் தைகளை அப்பள்ளிகளில் சேர்க்க துடித்த னர். இதன் விளைவாக மெட்ரிக்பள்ளிகள் பிர பலமடைந்தன. “ஆங்கிலமே அறிவு” என்ற திட்டமிட்ட கருத்துருவாக்கமும் செய்யப்பட் டது.

தாய்மொழி வழிக்கல்வியின் பயிற்றுவிக் கப்பட்ட அரசுப்பள்ளிகளை மத்தியதர வர்க்கம் முழுமையாக புறக்கணித்ததோடு அரசு பள்ளிகள் மோசம் என்ற தவறான கருத் தையும் திட்டமிட்டே உருவாக்கினர். இதன் பின்னரே தமிழகத்தில் பள்ளிக் கல்வி கடும் வணிகமயமாக்கப்பட்டது.வசதிக்கேற்ற வகை வகையான பள்ளி களும் துவங்கப்பட்டன. மாநில அரசுப்பள்ளி கள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், ஆங் கிலோ இந்தியன் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள் மற்றும் மத்திய அரசால் நேரடியாக நடத்தப்படும் பள்ளிகள், மத்திய அரசின் அனுமதிபெற்ற (சி.பி.எஸ்.இ) தனியார்பள்ளி கள் இவைதவிர பன்னாட்டு உண்டு, உறை விடப் பள்ளிகள் என பல்வகை பள்ளிகளும் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. இப்பள்ளி கள் சமூக ஏற்றத்தாழ்வை மேலும் வளர்த் தெடுக்கவே செய்கின்றன.

ஆகவே தமிழகத் தில் சமத்துவமான வாய்ப்பினை உருவாக் கிடும் வகையில் சமச்சீர் கல்விக்கான நீண்ட போராட்டத்தை இந்திய மாணவர் சங்கமும், ஜனநாயக இயக்கங்களும் நடத்தியதன் விளைவாக மனமில்லாத ஆட்சியாளர் களால் வேறுவழியின்றி சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது சமச்சீரான பாடத்திட் டம் பாடப்புத்தகம் மட்டுமே நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வியின் முக் கியமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத் தாமல் நீர்த்துப்போகச் செய்ய தொடர் முயற்சி களை மாநில அரசு மேற்கொண்டது.சமச்சீர் கல்வி திட்டத்தின்படி மாநில அரசுப்பள்ளிகள், மெட்ரிக்பள்ளிகள், ஆங் கிலோ- இந்தியன் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள் ஆகிய நான்கு வாரியங்களும் கலைக்கப்பட்டு அதிகாரமுள்ள ஒரே வாரிய மாக உருவாக்கப்பட வேண்டும். ஆனால் ஒரே பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டதை மெட்ரிக்பள்ளிகள் விரும்பவில்லை.

ஆகவே புதிதாக துவங்கப்படும் பள்ளிகள் எதுவும் மெட்ரிக் பள்ளிகளாக இருப்பதில்லை. தங்க ளது வியாபாரம் தடைபடாமல் இருக்க மத்திய அரசின் அனுமதிபெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளாகவே துவங்கப்படுகின்றன. பல மெட்ரிக் பள்ளி களும் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்றுவதற் கான முயற்சியில் உள்ளன. ஆகவே இப் பள்ளிகளின் வியாபாரத்தை கட்டுப்படுத்து வதும், முறைப்படுத்துவதும் இன்றைய அவ சியமாகின்றது. புதிதாக துவக்கப்படும் சர்வ தேச உண்டு, உறைவிடப்பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு செய்யப்படும் விளம்பரங்களைப் பார்த்தாலே அவற்றின் வணிக நோக்கம் தெளிவாகத்தெரியும்.

தேவை - பொதுப்பள்ளி முறை

நூறு சதவீதம் கல்வி கொடுப்பதில் வெற்றி கண்ட நாடுகள் பெரும்பாலும் பொதுப்பள்ளி முறையைத்தான் பின்பற்றியுள் ளன. உலக நாடுகளின் அனுபவத்திலிருந்து நமது ஆட்சியாளர்கள் பாடம்கற்க மறுக்கின் றார்கள். நமது நாடு விடுதலையடைந்த பின்னர் அரசு நியமித்த கல்வி குறித்த குழுக் கள் யாவும் பொதுப்பள்ளி முறையை உரு வாக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள் ளன. கோத்தாரிக்குழு (1964-66), இராம மூர்த்தி குழு 1991, யஷ்பால்குழு 1993 ஆகி யவை பொதுப் பள்ளி முறையை விரைந்து கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தியுள் ளன. 1986ல் வடிவமைக்கப்பட்டு 1992ல் இறுதிப்படுத்தப்பட்டு நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசிய கல்விக் கொள்கை பொதுப்பள்ளி முறை குறித்து சாதி, மதம், இனம், இடம் வேறுபாடு இன்றி எல்லா மாணவருக்கும் சமச்சீரான கல்வி கிடைக் கும் வாய்ப்பை உருவாக்குவது என விளக்க மளிக்கிறது. பொதுப்பள்ளி முறையில் தரம் தாழ்ந்து போகும் என்ற கருத்து திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இது உண்மைக்கு புறம் பானது.

தனியார் பள்ளிகளையும் பொதுப் பள்ளி முறையில் இணைய வழிவகையை யும் செய்யமுடியும்.அருகமைப்பள்ளிகளை கொண்ட பொதுப் பள்ளி முறையே சமுதாயத்தை முழுமையாக ஊடுருவும் இப்பள்ளி முறையே சமுதாயத் தை உயர்த்தும். ஆனால் நம்மை 66 ஆண்டு காலமாக ஆட்சி செய்துள்ள காங்கிரஸ், பாஜக ஆட்சியாளர்கள் இந்திய நாட்டிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் முழுமை யான பள்ளிக்கல்வியை கொடுக்க முன்வர வில்லையே ஏன்? இவர்கள் முதலாளி களின் வர்க்க நலனை பாதுகாக்க ஆட்சி அதிகாரத்தை இதுவரை பயன்படுத்தியவர் கள். ஆகவே அவர்களது வர்க்க நலனி லிருந்தே கல்விக்கொள்கையும் வகுக்கப்பட் டது.

இவர்கள் நாட்டின் கடைகோடியிலுள்ள ஏழைக்குழந்தையின் கல்வி குறித்து எப்படி அக்கறை கொள்வார்கள்?கல்வி வணிகமயத்தை தீவிரப்படுத்தும் நோக்கோடுதான் மத்திய அரசு மாதிரிப்பள்ளி களை தனியார் பங்களிப்போடு துவங்குவதற் கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மத்திய அரசு கல்வி கொடுக்கும் பொறுப்பி லிருந்து முழுமையாக விலகிக்கொள்ளவே முயற்சிக்கிறது.ஏற்கனவே மாநில அரசு தமிழகத்தின் பின் தங்கிய பகுதிகளில் மாதிரிப்பள்ளிகளை நடத்தி வருகின்றது. 2010 ஜுன் 15 காமராஜர் பிறந்த நாள் அன்று தமிழக அரசு பின்தங்கிய ஒன்றியங்களில் 18 அரசு மாதிரிப் பள்ளி களை துவக்கியது.

இப்பள்ளிகளும் போது மான நிதி ஒதுக்கீடு இல்லாமல் அடிப்படை வசதிகளற்று வேறுமாதிரியான பள்ளிக ளாகவே காட்சியளிக்கின்றன.அரசு பள்ளிகளை பாதுகாப்பதோடு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து வளர்த் தெடுக்க வேண்டியது இன்றைய அவசிய அவசரம். ஆகவே மத்திய அரசின் நிதி உதவி யுடன் தனியாருக்கு இடமளிக்காமல் மாநில அரசே மாதிரிப்பள்ளிகளை துவங்கிட வகை செய்வதே, ஏழைக்குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றும்.

(கட்டுரையாளர்: இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர்)
நன்றி: தீக்கதிர்

இந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு! -நா. மணி

தாகூர் “இந்தியாவில் அனைத்துத் துயரங்களுக்கும் அடிப்படைக் காரணம் கல்வியறிவின்மை” என்றார். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கும் ஜப்பான், தென்கொரியா, தைவான், சிங்கப்பூர், ஹாங்காங்கில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கும் கல்வியில் அரசின் முதலீடுகளே காரணம் என்கிறார்கள் பொருளாதார அறிஞர் அமார்த்தியா சென்னும் பொருளாதார வல்லுநர் ழான் டிரீஸும். பொருளியலின் தந்தை என்று போற்றப்படுகிற ஆடம் ஸ்மித்தும் “கல்விக்காகச் செலவிடும் ஒவ்வொரு சிறு தொகையும் கல்வியின் அத்தியாவசியக் கூறுகளை ஊக்குவிக்கும்” என்றுதான் சொல்கிறார்.

அரசுப் பள்ளிகளில் குறைபாடுகள் உண்டு. ஆனால், அவற்றை எல்லாம் சரிசெய்ய முடியும். தனியார் பள்ளிகளின் குறைபாடுகளோ சரிசெய்ய இயலாதவை. தனியாரிடம் கல்வி என்பது பண்டம். பொருளின் தரத்தை, சந்தையில் போட்டியே தீர்மானிக்கிறது. கல்வி வணிகப் போட்டியின் தன்மையே வேறு. சந்தை விதிகளும்கூட கல்வி என்னும் பண்டத்துக்குப் பொருந்தாது. எனவே, தனியாரால் தரமான கல்வியைத் தர முடியாது. ஆனால், அரசாங்கம் கல்வியைத் தனியாரிடம் ஒப்படைக்கத் துடிக்கிறது.

புதிய திட்டம்

பொதுப்பள்ளி முறையில் உள்ள குறைகளைக் களைந்து வலுப்படுத்தாமல் நட்டாற்றில் விட்டுவிட்ட அரசு, இப்போது தன் பணத்தில் ஒரு தனியார்மயக் கல்வித் திட்டத்தை வேகமாக நடைமுறைப்படுத்த இருக்கிறது. அதுதான் அரசு-தனியார் கூட்டுப் பங்கேற்பில் செயல்படுத்தப்படவுள்ள (பிபிபி) பள்ளிக்கூடத் திட்டம். கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளுக்கு நிகரான பள்ளிகள் என்ற பெயரில் கொண்டுவரப்பட உள்ள இந்தப் பள்ளிகளில், சி.பி.எஸ்.இ. கல்வி முறை, பயிற்றுமொழி ஆங்கிலம் என்கிறது அரசு.

இதில், 40% மாணவர்களை அரசு நுழைவுத்தேர்வின் மூலம் சேர்க்கும். 60% மாணவர்களைப் பள்ளி உரிமையாளர் தன் விருப்பம்போல் சேர்த்துக்கொள்ளலாம். அரசு சேர்க்கும் மாணவர்களுக்கும் எட்டாம் வகுப்புக்கு மேல் கட்டணம் உண்டு. 60 விழுக்காடு மாணவர்களின் கட்டணம், ஆசிரியர்களின் சம்பளம், இதர பணி நிலைகள் எல்லாம் தனியார் விருப்பப்படி அமைத்துக்கொள்ளலாம். பள்ளியைப் பள்ளிசாரா பணிக்கும் பயன்படுத்தலாம். மத்திய அரசின் மானியம் 10 ஆண்டுகள் மட்டுமே.

இப்போதைய நிலையில், மாநில அரசு களின் பணி, நிலம் ஒதுக்குதல் அல்லது ஏற்கெனவே இருக்கும் பள்ளியை ஒப்படைத்தல் மட்டுமே. பள்ளியின் முழுக் கட்டுப்பாடு, பள்ளியின் முழு நிர்வாக மேலாண்மை முழுவதும் தனியாருக்கே சொந்தம். நாடு முழுவதும் 3,162 பள்ளிகள் இப்படித் தொடங்கப்பட உள்ளன (தமிழ்நாட்டில் 355).

தனியார் தங்கள் இஷ்டம்போல் பள்ளிக்குப் பெயர் வைத்துக்கொள்ளலாம். பெயருடன் ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்யாலயா என்னும் பெயரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இதுவே அரசு-தனியார் பங்கேற்பு அடிப்படையில் தொடங்கப்படும் மாதிரிப் பள்ளிகளைப் பற்றிய சுருக்கம்.

பாதிப்புகள் என்ன?

இதனால் ஏற்படவிருக்கும் பாதிப்புகளைப் பட்டியலிட்டு கல்வியாளர்கள் மத்திய அரசுக்குக் குறிப்பு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர். அவை: 1. தனியார் துறை என்பது எல்லா விதத்திலும் பொதுத்துறையைவிட மேம்பட்டது என்பதை அரசே இத்திட்டத்தின் மூலம் ஒப்புக்கொள்கிறது. 2. அரசுப் பள்ளி முறையைவிட, தனியார் கல்விமுறையே சிறந்தது என அரசே முதல்முறையாக ஒப்புக்கொண்ட திட்டம் இது. 3. அனை வருக்கும் சமமான தரமான கல்வி தரப்படும் என்ற அரசியல் சாசனச் சட்ட விதி இதன் மூலம் அப்பட்டமாக மீறப்படுகிறது. 4. கல்வியின் நோக்கம், தேசத்தையும் சமூகத்தையும் ஆரோக்கியமானதாகக் கட்டமைக்கும் செயல்பாடு என்ற அரசியல் சாசனமும் கைவிடப்பட்டிருக்கிறது. 5. உலகில் எங்கெல்லாம் அரசின் கட்டுப்பாட்டில் கல்வி உள்ளதோ அங்கெல்லாம் எழுத்தறிவும் கல்வித்தரமும் அதிகமாக உள்ளது. அதே சமயம், எங்கெல்லாம் தனியாரிடம் கல்வி உள்ளதோ அங்கெல்லாம் எழுத்தறிவும் கல்வித்தரமும் குறைவாகவே உள்ளது. 6. இத்திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் பங்குபெறலாம் என்பது, இந்திய அரசின் அடிப்படைக் கல்விக் கொள்கைக்கும் ஆவணங்களுக்கும் எதிரானது. காரணம், கல்வி ஒரு வணிகப் பொருள் என எங்கும் சொல்லப்படவில்லை. 7. இத்திட்டமே லாபம் ஈட்டும் துறைகளுக்கானது. லாபம் வராத துறைகளுக்கு இவற்றைப் பொருத்துவதில் சிக்கல் உள்ளது. 8. கல்வியுரிமைச் சட்டம், தேசிய கலைத் திட்டம் ஆகியவற்றை மீறும் பல அம்சங்கள் இதில் உள்ளன. 9. சமூகப் பங்கேற்பும் சமூகக் கண்காணிப்பும் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. 10. தனியாரின் கல்வித் தரம், திறமை, சமூகப் பொறுப்பு போன்றவற்றைப் பற்றி அரசு மிகை மதிப்பீடு கொண்டிருக்கிறது. 11. தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைகளை மீறுவது என்பது மாநகரங்களில்கூட சர்வசாதாரண நிகழ்வு. இந்நிலையில், அரசுப் பணத்தையும் நிலத்தையும் கொடுத்துத் தனியாரை நிர்வகிக்கச் சொல்வது விதிமுறை மீறலே; நீதித் துறையில்கூட இவர்களது ஒழுங்குமுறை மீறல்களைக் கட்டுப்படுத்த முடியாது. 12. இத்திட்டம் கட்டற்ற லஞ்சலாவண்யத்தை ஊடுருவச் செய்து, மிக மோசமான விளைவுகளைச் சமூகத்தில் உருவாக்கும். 13. ஜனநாயக நாடுகளில் தற்காலிக நிதிப் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பானதே. இதைப் பயன்படுத்திக்கொண்டு, கல்வித் துறையில் தனியார்மயத்துக்கு வித்திடுவது, அளவிட முடியாத, சரிசெய்ய இயலாத விளைவுகளை இந்தியக் கல்வி முறையில் உருவாக்கும். 30-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். இவற்றைப் புறம்தள்ளிவிட முடியாது.

அவசரநிலைக் காலக் கோலம்

இந்தியாவில் அவசரநிலைக் காலத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுவிட்டதால் ஏற்பட்ட பல பாதகங்களில் ஒன்றுதான் இந்தத் திட்டம். மாநில அரசு என்பது மத்திய அரசின் உதவியாளர் என்ற பாணியில் மத்திய அரசு நடத்துகிறது. எனவேதான் மாநில அரசுகளின் கருத்தைப் பற்றி சிறிதும் கருத்தில் கொள்ளாமல், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணியில் மத்திய அரசு வேகமாக இயங்குகிறது. மத்திய அரசு பள்ளிக்கல்வி வளர்ச்சிக்குச் செய்ய வேண்டியது எல்லாம் மாநிலங்களுக்கு நிதியைப் பகிர்ந்தளிப்பது மட்டுமே.

அதேபோல், பன்முகத்தன்மை, பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரம் கொண்ட நாட்டில் ‘சி.பி.எஸ்.இ.’ என்னும் ஒற்றைக் கல்விமுறையை நடைமுறைப்படுத்த முனைவது தவறு என மத்திய அரசு உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. இன்று இயங்கிவரும் எந்தப் பள்ளியும் பள்ளியல்ல, இனி வரவிருக்கும் பள்ளிகளே பள்ளிகள் என்னும் தொனியை மாதிரிப் பள்ளிகள் என்ற அறிவிப்பு தோற்றுவிக்கிறது. ஆண்டு ஒன்றுக்கு ஐந்து லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலு கையை அள்ளித் தருகிற அரசு, கனிமவள மேலாண்மையில் தனியார்மயமாக்கல் கொள்கை வழியாகச் சட்டரீதியாகவும், சட்டத்துக்குப் புறம்பான வழிகளிலும் பல லட்சம் கோடி ரூபாய்களை அதே கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொட்டிக்கொடுக்கும் அரசு இப்போது கல்வித் துறையையும் முழுக்க தாரைவார்க்க நினைக்கிறது.

ஆப்பிரிக்காவுக்கும் பின்னே

உலகில் முன்னேறிய நாடுகள் மட்டுமல்ல, ஏழை நாடுகள்கூட நம்மைவிட அதிகமாகக் கல்வியில் முதலீடு செய்கின்றன. 16 ஆப்பிரிக்க நாடுகளைப் பட்டியலிட்டு, அந்த நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியும் தனிநபர் வருவாயும் நம் நாட்டைவிடப் பன்மடங்கு குறைவு எனக் கூறிவிட்டு, அந்நாடுகளின் சமூக வளர்ச்சிக் குறியீடுகளும் மனிதவள மேம்பாடும் நம்மைவிடப் பன்மடங்கு அதிகம் என்று சென்னும் டிரீஸும் சுட்டிக் காட்டுகிறார்கள். ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம் என்னும் ஒரு அளவீட்டில்கூட நாம் இன்னும் எத்தியோப்பியாவைக்கூட எட்டிப்பிடிக்க முடியாது. இதெல்லாம் தற்போதைய மத்திய அரசின் அக்கறையில் இல்லை. கட்டற்ற தனியார்மயத்தில்தான் மக்கள்நலன் மலரும் என்ற மூடநம்பிக்கையில் மத்திய அரசு அது ஆழமாக மூழ்கியுள்ளது!
- நா. மணி, பேராசிரியர் - தொடர்புக்கு: tnsfnmani@gmail.com
நன்றி: தி இந்து தமிழ் பதிப்பு நாள்: நவம்பர்.6,2013

Tuesday 5 November 2013

தங்க மீன்கள் திரைப்படம் - மாற்றுக் கல்விக்கான பிரச்சாரக்கருவி :


’’தங்கமீன்கள் திரைப்படம், அப்பா-மகள் உறவைப் பற்றி மட்டுமே பேசுவதாகப் பொதுப் பார்வைக்குத் தோன்றும். அந்த சென்டிமென்ட்டை முன்வைத்து நான் மக்களைத் திரையரங்கத்தை நோக்கி அழைத்து வருகிறேன். கதையில் தனியார் கல்வியின் வன்முறை முகத்தையும், அது நம் குழந்தையின் உலகத்தை, நம் குடும்பங்களை; நம் மகிழ்ச்சியை எப்படி சிதைக்கிறது என்பதையும் சொல்லியிருக்கிறேன். சென்டிமென்ட்டால் உள்ளே ஈர்க்கப்படும் ஒருவர், அரசியல் புரிதலுடன் வெளியே செல்கிறார்.நான் சொல்ல விரும்பிய இந்த கருத்து சினிமா விமர்சனம் செய்பவர்களுக்கு புரிய வில்லை என்பது என்னைக் காயப்படுத்துகிறது.’’ ஒரு வாரப் பத்திரிக்கை செய்திருந்த விமர்சனத்திற்கு எதிராக அத்திரைப்பட இயக்குனர் ராம் தெரிவித்திருக்கும் கருத்து இது.

மாற்றுக்கல்விக்கான பணிகளில் இயங்கிவரும் அறிவியல் இயக்கத்தின் கவனத்திற்குள் வந்திருக்கும் திரைப்படம் தங்கமீன்கள். ஒரு கருத்தை மக்களிடம் எளிமையாய் கொண்டுசேர்க்கும் பலமிக்க ஊடகம் சினிமா.  எதிலெல்லாம் நாம் மாற்றத்தை விரும்புகிறோமோ அதில் ஒன்றைக் கருப்பொருளாகக் கொண்டு பேசுகிற சினிமாக்களை நாம் கவனிக்கவும் விமர்சிக்கவும் தவறக் கூடாது. சமீபகாலமாக தனியார் கல்வியின் மீதான எரிச்சலை துணிச்சலாக  சில படங்கள் பதிவு செய்துவருவது ஆரோக்கியமானதே. அந்த வரிசையில் தோனி, சாட்டை படங்களைத் தொடர்ந்து இன்று தங்கமீன்கள் வந்திருக்கிறது.

ஒரு நல்ல திரைப்படத்திற்கான குறியீடுகள்! இப்படத்திற்கும் உள்ளன. வழக்கம் போல குறைவான தியேட்டர்களிலேயே வெளியிடப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய அளவிலான, பகட்டான விளம்பரங்கள் இல்லை. படத்தின் போக்கில் வணிகத்தன்மை இல்லை. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி, படம் வெகுஜனங்களை சென்றடைந்து கொண்டிருக்கிறது. இதன் அடைவை அதிகப் படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.  கதையின் முடிவு குழந்தைகளுக்கான கல்விகூடத்தை  ஒர் அப்பா தேர்வு செய்வதில் இருக்கிறது. அது அரசுப்பள்ளியாக இருப்பதே நாம் இப்படத்தை கவனிக்க, கொண்டாடக் காரணம்.

அப்பா மகள் பாசத்தை சொல்லுகிற, பள்ளிக்கூடத்தை கிண்டல் செய்கிற, நச்சென சில வசனங்கள் உள்ள படமாக மட்டும் இப்படம் பேசப்படுகிறது. மூன்று மணிநேர கதையின் முடிவில் சொல்லப்படும்- ’குழந்தையை அரசுப்பள்ளியில் சேர்ப்பதே சரி என்கிற கருத்தை ஆதரித்தோ, அல்லது விமர்சித்தோ எந்த ஊடகமும் பேசவில்லை. அந்த பகுதியை அப்படியே விட்டு விட்டன.  இதுவும் ஒர் ஊடக அரசியலாகவே பார்க்கவேண்டியுள்ளது. இப்படத்தின் பெரும்பான்மைப்பகுதி கல்வி சூழல் பற்றியதே. அதற்கான தீர்வை நோக்கியே கதை நகர்கிறது.

இயக்குனர் ராம், இன்றைய கல்விச்சூழலில் ஒரு குழந்தை படுகிற அவஸ்தைகளை  அப்படியே அசலாக முன் வத்திருக்கிறார்.குழந்தைகள் உலகத்தை புரிந்து கொள்ளாத செக்குமாட்டுப் புத்தியுள்ள ஒர்  தனியார் பள்ளிகூடத்தைக் காட்டியிருக்கிறார். கேள்விகேட்கும் திறனுள்ள குழந்தைகளோடு இன்றைய கல்விகூடங்களும், கல்விமுறையும் பொருத்தப்பாடில்லாமல் பயணிக்கிறது என்பதை பதிவு செய்திருக்கிறார். இதில் செயல் வழிக் கற்றல் பற்றிய பதிவு முக்கியமானது. பள்ளிக்கூடத்திற்கு பணம் கட்ட முடியாத பாசக்கார அப்பனின் பொருளாதாரச் சிக்கலை சொல்லுகிறார்.

’’நித்யஸ்ரீ ஸ்கூல்ல ஹோம் வொர்க் இல்லையாம், ஒரு நாளைக்கு ரெண்டு முட்டை போடுறாங்களாம், ஸ்கூல் ஃபீஸ் கூட இல்லையாம் ப்பா. நான் அங்கயே சேந்துகிறவாப்பா…?’’ என்று கேட்கும் குழந்தையிடம் அது கவர்மெண்ட் ஸ்கூல் ப்பா.. நீ படிக்கிற பிரைவேட் ஸ்கூல் தான் நல்ல ஸ்கூல்’’ என்று படத்தின் ஆரம்பகட்டத்தில் பேசும் அப்பா கதா பாத்திரம் கடைசியில்…..  தன் மகளை அரசுப்பள்ளியில் கொண்டு சேர்ப்பதும், அதற்கு காரணமாக தனியார் பள்ளி நடவடிக்கைகள் இருப்பதும், அரசுப் பள்ளிக்கு ஆதரவான  கிளைமாக்ஸ் வசனக்களும் சூப்பர்.

’’கவர்மெண்ட் ஸ்கூல்லாம் வேண்டாம் டா’’ என்று குழந்தையின் தாத்தா சொல்ல, ‘’ஏம்ப்பா இதே கவர்மெண்ட் ஸ்கூல்ல வேல பாத்துதான நீங்க நல்லாசிரியர் விருது வாங்குனீங்க..’’ என்கிற ராமின் பதிலடி, குழந்தைகளை தனியார்பள்ளியில் படிக்கவைக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கன்னத்திற்கானது. ‘’பிரைவேட் ஸ்கூல்ல படிக்க வை நான் பணம் தாறேன்’’ என்று ஆஸ்திரேலிய தங்கச்சி சொல்ல, ‘’இதே கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சுதான நீ ஆஸ்திரேலியா போன! மடில வச்சு லொட்டுலொட்டுன்னு தட்டிட்டு இருக்கிறய்யே லேப் டாப் அது கவர்மெண்ட் ஸ்கூல படிச்சு சம்பாதிச்சது  தான?’’ என்கிற பதிலடி அரசுப்பள்ளியில் படித்து முன்னேறி இன்று தனியார் பள்ளியை ஆதரிப்பவர்களின் முகத்திற்கானது. இது போன்ற  பேருண்மைகளை துணிச்சலோடு படத்தின் கிளைமாக்ஸில் வைத்ததிற்காக இயக்குனருக்கு எழுந்து நின்று கை தட்டலாம்.  நாமெல்லாம் பேசித்திரிவது தான் என்றாலும் ராம் நின்று பேசியிருப்பது சினிமா எனும் ஆற்றல் மிக்க மேடையில்.. தமிழகத்தில் இதை திரையில் பேசிய முதல் இயக்குனராக ராம் இருக்கிறார் அவருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்

’’போதுமான வசதிகள் இல்லா விட்டாலும், போதிய ஊதியம் இல்லாவிட்டாலும், தன்னார்வத்தினால் பணிபுரிகிற ஆசிரியர்களுக்கு’’ - சமர்ப்பணம் செய்வதாய் படம் நிறைவடைகிறது இதில் போதிய ஊதியம் இல்லாவிட்டாலும் என்ற வரி மட்டும் நிச்சயமாய் அரசுப்பள்ளி ஆசிரியர்களைக் குறிக்கவில்லை என்பது வெளிப்படை. ஆக அரசுப்பள்ளியில் ஆயிரம் ரெண்டாயிரத்திற்கு தன்னார்வமாகப் பணிபுரியும் பி.டி.எ போன்ற தற்காலிக ஆசிரியர்களுக்கானது என அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கிறது.  மொத்தத்தில் படம்  அரசு பள்ளியை ஆதரித்து நிற்கிறது.  

. ஆக இதுவொரு கல்வி குறித்த நல்ல சினிமா என்று மட்டும் முடித்துவிட முடியாது. இது ஒரு மறைமுகப் பிரச்சாரம்.  நாம் இப்படத்தைப் பார்க்க,  பாராட்ட, பரிந்துரைக்க, பரப்ப முயல வேண்டும்.
_ சக.முத்துக்கண்ணன். 
மாவட்ட ஒருங்கிணைப்பாளர், கல்வி உபகுழு.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம். தேனி.
9944094428
நன்றி: பாவையர் மலர், அக்.2013

Sunday 3 November 2013

ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்யாலயா திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது

சென்னை, அக். 28

பள்ளிக் கல்வியை வணிக மயமாக்கும் மத்திய அரசின் ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்யாலயா திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:

பள்ளிக் கல்வியை வணிகமயமாக்கும் மத்திய அரசின் ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்யாலயா திட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாடு அரசு மத்திய அரசிற்கு தனது ஆட்சேபனையை தெரிவிக்க வேண்டும்.

இந்திய அரசின், மனித வள மேம்பாட்டுத் துறை அரசு தனியார் கூட்டு என்ற அடிப்படையில் மாதிரி பள்ளிகளை நாடு முழுக்க தொடங்கி வருகிறது. இதன் அடுத்த கட்டமாக, கல்வியில் பின்தங்கிய பகுதிகள் அல்லாத பகுதிகளில் மாதிரி பள்ளிகளை தொடங்க விண்ணப்பிக்குமாறு தனியாரை கோரும் அறிவிக்கையை வெளியிட்டு அதன் மீது முடிவு எடுக்கும் தருவாயில் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை உள்ளது. இந்த அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் கல்வியில் பின் தங்கிய பகுதிகள் அல்லாத பகுதிகளில் 356 மாதிரி பள்ளிகளை மத்திய அரசு நேரடியாக அதன் கல்வி வாரியமான சிபிஎஸ்சி ஏற்புடன் அனுமதிக்க உள்ளது.

இந்த நடைமுறையில் மாநில அரசு முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் ஒப்புதலோ, ஆலோசனையோ இல்லாமல் இந்திய அரசு நேரடியாக தனியார் அரசு கூட்டு என்ற பெயரில் கல்வியில் தனியார்மயத்தையும் வணிகமயத்தையும் அனுமதிப்பது ஜனநாயகத் தன்மையற்ற செயலாகும். இது மாநில அரசின் அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் இழக்கச் செய்யும் நடவடிக்கையாகும்.

இந்த ஏற்பாட்டின்படி மாநில அரசுகளை வெறும் தனியாருக்கு பள்ளி நடத்த நிலம் ஏற்பாடு செய்து கொடுக்கும் ஏதுவாளர்களாகவும், தனியார் பள்ளி நடத்த உதவக் கூடிய உதவியாளர் நிலையில் மாநில அரசுகளை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் இத்தகைய தவறான கொள்கைக்கு தனது எதிர்ப்பை தெரிவிப்பதுடன், அரசு நேரடியாக மாதிரி பள்ளிகள் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின்படி தமிழ்நாட்டில் தொடங்குவதற்கு தனது ஆட்சேபனையை உடனடியாக தெரிவிக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றி: தின இதழ்

மத்திய அரசு , தனியார் கூட்டு திட்டத்தில் 2,500 பள்ளிகளை திறக்க நடவடிக்கை



Monday
2013-07-22
புதுடெல்லி : அரசு , தனியார் கூட்டு திட்டத்தில், நாடு முழுவதும் 2,500 பள்ளிகளை திறந்து, ஏழை குழந்தைகளுக்கு படிப்பறிவு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தில் சேருவதற்கு 65 தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதுகுறித்து மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏழை குழந்தைகளுக்கு கல்வியறிவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காகவே, அடிப்படை கல்வி உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. எனினும் கூட இன்னமும் நிலைமை மேம்படவில்லை. இதனால், 6,000 பள்ளிகளை திறக்க மத்திய அரசு முடிவு செய்தது.

இதில், முதல்கட்டமாக நாடு முழுவதும் சிறப்பான தரத்துடன் 2,500 பள்ளிகளை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இப்பள்ளிகள் அனைத்தும் அரசு , தனியார் கூட்டு திட்டத்தில் நிறுவப்பட உள்ளன. அதாவது பள்ளிகள் அமைக்க தேவையான நிலத்தை தனியாருக்கு அரசு ஒதுக்கும். மேலும், கட்டிடங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுக்கான நிதியும் ஒதுக்கப்படும். 

இப்பள்ளிகளில் 40 சதவீத இடங்களை ஏழை குழந்தைகளுக்கு ஒதுக்கி இலவசமாக கல்வி அளிக்க வேண்டும். மற்ற குழந்தைகளிடம் தனியார் நிறுவனங்கள் கல்விக் கட்டணத்தை வசூலித்து கொள்ளலாம். 7ம் வகுப்பில் இருந்து ஏழை குழந்தைகளுக்கு மாதம் ரூ.50 வரை தனியார் நிறுவனங்கள் வசூலித்துக் கொள்ளலாம்.

இந்த மாதிரி பள்ளிகளில் 6ம் வகுப்பில் இருந்து குறைந்தபட்சம் 1,000 மாணவர்களையும், அதிகபட்சம் 2,500 மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். தற்போது 7ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.2,500 வரை மத்திய அரசு செலவழிக்கிறது. இதனடிப்படையில் 2,500 மாணவர்களுக்கு மாதம் ரூ.1.20 கோடியை தனியாருக்கு அரசு அளிக்கும். இதுபோன்று ஏழை மாணவர்களுக்கான கல்வித் தொகையை மத்திய அரசு 10 ஆண்டுகளுக்கு வழங்கும். 

இதிலும் ஆண்டுக்கு 5 சதவீத கூடுதல் தொகை அளிக்கப்படும். இத்திட்டத்தில் சேர 65 தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் சலுகைகள் குறித்து வரும் 31ம் தேதி நடைபெற உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

நன்றி: தினகரன்

புதிய மாதிரி பள்ளிகள் கல்வியை தனியார் மயமாக்கிவிடும்: கல்வியாளர் வசந்திதேவி

First Published : 06 September 2013 02:41 AM

அரசு-தனியார் ஒத்துழைப்புடன் தொடங்கப்பட உள்ள புதிய மாதிரிப் பள்ளிகள் கல்வியை தனியார்மயமாக்கிவிடும் என கல்வியாளரும் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான வி.வசந்திதேவி கூறினார

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் அரசு-தனியார் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட உள்ள மாதிரிப் பள்ளிகள் தொடர்பான கலந்துரையாடல் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்று வி.வசந்திதேவி கூறியது:

அரசு-தனியார் ஒத்துழைப்புடன் இந்தியா முழுவதும் புதிதாக 2,500 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, நாடு முழுவதும் கல்வியில் பின்தங்கிய வட்டங்களில் இந்த மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன.

இந்தப் பள்ளிகளில் 40 சதவீத மாணவர்களின் கல்விச் செலவை அரசும், 60 சதவீத மாணவர்களுக்கான கல்விச் செலவை தனியாரும் ஏற்றுக்கொள்வார்கள். இந்த 60 சதவீத மாணவர்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்துக்கு எந்தவித வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை.

மேலும், இந்தப் பள்ளிகளுக்கான மத்திய அரசின் உதவி 10 ஆண்டுகள் வரை மட்டுமே வழங்கப்படும். அதன் பிறகு, இந்த மாதிரிப் பள்ளிகள் முழுவதும் தனியார்வசமாகிவிடும் நிலை உள்ளது.

எனவே, அரசு-தனியார் ஒத்துழைப்புடன் கூடிய மாதிரிப் பள்ளிகள் கல்வியை தனியார்மயமாக்கும் முயற்சிதான் என்றார் வசந்திதேவி.

கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்: கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த ஏழை மாணவர்கள் பாகுபாடில்லாமல் நடத்தப்படுகின்றனரா என்பதை கல்வித் துறை உறுதி செய்ய வேண்டும். இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர ஏழைகளுக்கான வருமான வரம்பு ரூ.2 லட்சம் வரை என வரையறுக்கப்பட்டுள்ளது. இது ஏழைகளுக்கு உதவாது. புதிய மாதிரிப் பள்ளிகளால் யாருக்கு நன்மை எனப் புரியவில்லை. பொதுப்பள்ளிகளை மேம்படுத்துவதை விட்டுவிட்டு இத்தகைய விஷயங்களுக்கு மக்களின் பணத்தை வீணடிப்பது நியாயமா என யோசிக்க வேண்டும் என்றார்.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு: இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் சிறுபான்மையின பள்ளிகளுக்கு நீதிமன்றம் விலக்கு அளித்திருப்பது தவறானது. இதை தனியார் பள்ளிகள் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புள்ளது. ஏழைகள், நலிவடைந்த பிரிவினர் உள்பட அனைத்துப் பிரிவினருக்கும் சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள்தான் கல்வி வழங்கின. ஆனால், இன்று சில நிறுவனங்கள் லாப நோக்கில் தவறுகளைச் செய்கின்றன.

அனைவருக்கும் கல்வி உரிமையை தனியார் பள்ளிகள் மூலம் வழங்க முடியாது. அதைப் பொதுப்பள்ளிகள் மூலமாக மட்டுமே வழங்க முடியும் என்றார் அவர்.

மனித உரிமை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் இயக்குநர் ஓ.பெர்னாண்டஸ், கல்வி உரிமை கூட்டமைப்பின் அமைப்பாளர் கே.மூர்த்தி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் பேராசிரியர் அருணன் உள்ளிட்டோர் இதில் பேசினர்.

நன்றி: தினமணி

மத்திய அரசின் மாதிரி பள்ளிகள் திட்டத்துக்கு எதிர்ப்பு

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2013,23:47

சென்னை: ""மக்கள் வரிப்பணத்தில், தனியாருக்கு பள்ளிகள் கட்டிக் கொடுக்கும், மத்திய அரசின் மாதிரி பள்ளிகள் திட்டத்தை, உடனடியாக கைவிட வேண்டும்,'' என, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி கூறினார். மனித உரிமை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையம், தமிழக கல்வி உரிமை கூட்டமைப்பு ஆகியவை இணைந்து, அரசு - தனியார் மாதிரி பள்ளிகள் அமைக்கும், மத்திய அரசின் திட்டம் குறித்த கலந்துரையாடல் கூட்டத்தை, சென்னை, எழும்பூர், "இக்சா' மையத்தில் நடத்தின.

இதில், வசந்தி தேவி பேசியதாவது: மத்திய அரசு, நாடு முழுவதும் உள்ள, 6,000 வட்டாரங்களில், மாதிரிப் பள்ளிகளை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதில், 3,500 பள்ளிகள், மத்திய, மாநில அரசுகள் இணைந்தும், 2,500 பள்ளிகள், தனியாருடன் இணைந்தும் அமைக்கப்படுகின்றன. தனியாருடன் அமைக்கும் மாதிரிப் பள்ளிக்கு, நிலம், கட்டடம் ஆகியவற்றுக்குத் தேவையான நிதியில், 40 சதவீதத்தை, மத்திய, மாநில அரசுகள் அளிக்கின்றன. 10 ஆண்டுகள், அரசு - தனியார் இணைந்து நடத்தும் இப்பள்ளிகள், அதன்பின் தனியாருக்கு அளிக்கப்படும். மக்கள் வரிப்பணத்தில், துவங்கும் இப்பள்ளிகளை, தனியாருக்கு தாரை வார்க்கும், மத்திய அரசின் திட்டம் கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே, அரசு உதவி பெறும் கல்வி நிலையங்கள் நடைமுறையில் உள்ளன. இதற்கு மாறாக, மாதிரிப் பள்ளிகளை துவங்குகின்றனர். இப்பள்ளிகளில், ஆறாம் வகுப்பிலிருந்து, பிளஸ் 2 வரை இருக்கும். இதில், 40 சதவீத மாணவர்கள் இட ஒதுக்கீட்டிலும், 60 சதவீத மாணவர்கள், பள்ளியை நிர்வகிக்கும் தனியாரின் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் நடக்கும். இட ஒதுக்கீடு மாணவர்களுக்கு, அரசு கல்விக் கட்டணத்தை அளிக்கும். மீதமுள்ளவர்களுக்கு, பள்ளி நிர்வாகம் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம்.

இதனால், மாதிரிப் பள்ளிகள் மாணவர்கள் மத்தியில், பெரும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். ஒரு கட்டத்தில், அரசின் இட ஒதுக்கீடு முற்றிலும் கைவிடப்பட்டு, தனியார் பள்ளிகளாகி விடும். எனவே, அரசு - தனியார் கூட்டு மாதிரிப் பள்ளிகள் திட்டத்தை, உடனே கைவிட வேண்டும். இவ்வாறு, வசந்தி தேவி பேசினார்.

நன்றி: தினமலர்