Sunday 3 November 2013

ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்யாலயா திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது

சென்னை, அக். 28

பள்ளிக் கல்வியை வணிக மயமாக்கும் மத்திய அரசின் ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்யாலயா திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:

பள்ளிக் கல்வியை வணிகமயமாக்கும் மத்திய அரசின் ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்யாலயா திட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாடு அரசு மத்திய அரசிற்கு தனது ஆட்சேபனையை தெரிவிக்க வேண்டும்.

இந்திய அரசின், மனித வள மேம்பாட்டுத் துறை அரசு தனியார் கூட்டு என்ற அடிப்படையில் மாதிரி பள்ளிகளை நாடு முழுக்க தொடங்கி வருகிறது. இதன் அடுத்த கட்டமாக, கல்வியில் பின்தங்கிய பகுதிகள் அல்லாத பகுதிகளில் மாதிரி பள்ளிகளை தொடங்க விண்ணப்பிக்குமாறு தனியாரை கோரும் அறிவிக்கையை வெளியிட்டு அதன் மீது முடிவு எடுக்கும் தருவாயில் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை உள்ளது. இந்த அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் கல்வியில் பின் தங்கிய பகுதிகள் அல்லாத பகுதிகளில் 356 மாதிரி பள்ளிகளை மத்திய அரசு நேரடியாக அதன் கல்வி வாரியமான சிபிஎஸ்சி ஏற்புடன் அனுமதிக்க உள்ளது.

இந்த நடைமுறையில் மாநில அரசு முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் ஒப்புதலோ, ஆலோசனையோ இல்லாமல் இந்திய அரசு நேரடியாக தனியார் அரசு கூட்டு என்ற பெயரில் கல்வியில் தனியார்மயத்தையும் வணிகமயத்தையும் அனுமதிப்பது ஜனநாயகத் தன்மையற்ற செயலாகும். இது மாநில அரசின் அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் இழக்கச் செய்யும் நடவடிக்கையாகும்.

இந்த ஏற்பாட்டின்படி மாநில அரசுகளை வெறும் தனியாருக்கு பள்ளி நடத்த நிலம் ஏற்பாடு செய்து கொடுக்கும் ஏதுவாளர்களாகவும், தனியார் பள்ளி நடத்த உதவக் கூடிய உதவியாளர் நிலையில் மாநில அரசுகளை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் இத்தகைய தவறான கொள்கைக்கு தனது எதிர்ப்பை தெரிவிப்பதுடன், அரசு நேரடியாக மாதிரி பள்ளிகள் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின்படி தமிழ்நாட்டில் தொடங்குவதற்கு தனது ஆட்சேபனையை உடனடியாக தெரிவிக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றி: தின இதழ்

No comments:

Post a Comment