Tuesday 5 November 2013

தங்க மீன்கள் திரைப்படம் - மாற்றுக் கல்விக்கான பிரச்சாரக்கருவி :


’’தங்கமீன்கள் திரைப்படம், அப்பா-மகள் உறவைப் பற்றி மட்டுமே பேசுவதாகப் பொதுப் பார்வைக்குத் தோன்றும். அந்த சென்டிமென்ட்டை முன்வைத்து நான் மக்களைத் திரையரங்கத்தை நோக்கி அழைத்து வருகிறேன். கதையில் தனியார் கல்வியின் வன்முறை முகத்தையும், அது நம் குழந்தையின் உலகத்தை, நம் குடும்பங்களை; நம் மகிழ்ச்சியை எப்படி சிதைக்கிறது என்பதையும் சொல்லியிருக்கிறேன். சென்டிமென்ட்டால் உள்ளே ஈர்க்கப்படும் ஒருவர், அரசியல் புரிதலுடன் வெளியே செல்கிறார்.நான் சொல்ல விரும்பிய இந்த கருத்து சினிமா விமர்சனம் செய்பவர்களுக்கு புரிய வில்லை என்பது என்னைக் காயப்படுத்துகிறது.’’ ஒரு வாரப் பத்திரிக்கை செய்திருந்த விமர்சனத்திற்கு எதிராக அத்திரைப்பட இயக்குனர் ராம் தெரிவித்திருக்கும் கருத்து இது.

மாற்றுக்கல்விக்கான பணிகளில் இயங்கிவரும் அறிவியல் இயக்கத்தின் கவனத்திற்குள் வந்திருக்கும் திரைப்படம் தங்கமீன்கள். ஒரு கருத்தை மக்களிடம் எளிமையாய் கொண்டுசேர்க்கும் பலமிக்க ஊடகம் சினிமா.  எதிலெல்லாம் நாம் மாற்றத்தை விரும்புகிறோமோ அதில் ஒன்றைக் கருப்பொருளாகக் கொண்டு பேசுகிற சினிமாக்களை நாம் கவனிக்கவும் விமர்சிக்கவும் தவறக் கூடாது. சமீபகாலமாக தனியார் கல்வியின் மீதான எரிச்சலை துணிச்சலாக  சில படங்கள் பதிவு செய்துவருவது ஆரோக்கியமானதே. அந்த வரிசையில் தோனி, சாட்டை படங்களைத் தொடர்ந்து இன்று தங்கமீன்கள் வந்திருக்கிறது.

ஒரு நல்ல திரைப்படத்திற்கான குறியீடுகள்! இப்படத்திற்கும் உள்ளன. வழக்கம் போல குறைவான தியேட்டர்களிலேயே வெளியிடப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய அளவிலான, பகட்டான விளம்பரங்கள் இல்லை. படத்தின் போக்கில் வணிகத்தன்மை இல்லை. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி, படம் வெகுஜனங்களை சென்றடைந்து கொண்டிருக்கிறது. இதன் அடைவை அதிகப் படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.  கதையின் முடிவு குழந்தைகளுக்கான கல்விகூடத்தை  ஒர் அப்பா தேர்வு செய்வதில் இருக்கிறது. அது அரசுப்பள்ளியாக இருப்பதே நாம் இப்படத்தை கவனிக்க, கொண்டாடக் காரணம்.

அப்பா மகள் பாசத்தை சொல்லுகிற, பள்ளிக்கூடத்தை கிண்டல் செய்கிற, நச்சென சில வசனங்கள் உள்ள படமாக மட்டும் இப்படம் பேசப்படுகிறது. மூன்று மணிநேர கதையின் முடிவில் சொல்லப்படும்- ’குழந்தையை அரசுப்பள்ளியில் சேர்ப்பதே சரி என்கிற கருத்தை ஆதரித்தோ, அல்லது விமர்சித்தோ எந்த ஊடகமும் பேசவில்லை. அந்த பகுதியை அப்படியே விட்டு விட்டன.  இதுவும் ஒர் ஊடக அரசியலாகவே பார்க்கவேண்டியுள்ளது. இப்படத்தின் பெரும்பான்மைப்பகுதி கல்வி சூழல் பற்றியதே. அதற்கான தீர்வை நோக்கியே கதை நகர்கிறது.

இயக்குனர் ராம், இன்றைய கல்விச்சூழலில் ஒரு குழந்தை படுகிற அவஸ்தைகளை  அப்படியே அசலாக முன் வத்திருக்கிறார்.குழந்தைகள் உலகத்தை புரிந்து கொள்ளாத செக்குமாட்டுப் புத்தியுள்ள ஒர்  தனியார் பள்ளிகூடத்தைக் காட்டியிருக்கிறார். கேள்விகேட்கும் திறனுள்ள குழந்தைகளோடு இன்றைய கல்விகூடங்களும், கல்விமுறையும் பொருத்தப்பாடில்லாமல் பயணிக்கிறது என்பதை பதிவு செய்திருக்கிறார். இதில் செயல் வழிக் கற்றல் பற்றிய பதிவு முக்கியமானது. பள்ளிக்கூடத்திற்கு பணம் கட்ட முடியாத பாசக்கார அப்பனின் பொருளாதாரச் சிக்கலை சொல்லுகிறார்.

’’நித்யஸ்ரீ ஸ்கூல்ல ஹோம் வொர்க் இல்லையாம், ஒரு நாளைக்கு ரெண்டு முட்டை போடுறாங்களாம், ஸ்கூல் ஃபீஸ் கூட இல்லையாம் ப்பா. நான் அங்கயே சேந்துகிறவாப்பா…?’’ என்று கேட்கும் குழந்தையிடம் அது கவர்மெண்ட் ஸ்கூல் ப்பா.. நீ படிக்கிற பிரைவேட் ஸ்கூல் தான் நல்ல ஸ்கூல்’’ என்று படத்தின் ஆரம்பகட்டத்தில் பேசும் அப்பா கதா பாத்திரம் கடைசியில்…..  தன் மகளை அரசுப்பள்ளியில் கொண்டு சேர்ப்பதும், அதற்கு காரணமாக தனியார் பள்ளி நடவடிக்கைகள் இருப்பதும், அரசுப் பள்ளிக்கு ஆதரவான  கிளைமாக்ஸ் வசனக்களும் சூப்பர்.

’’கவர்மெண்ட் ஸ்கூல்லாம் வேண்டாம் டா’’ என்று குழந்தையின் தாத்தா சொல்ல, ‘’ஏம்ப்பா இதே கவர்மெண்ட் ஸ்கூல்ல வேல பாத்துதான நீங்க நல்லாசிரியர் விருது வாங்குனீங்க..’’ என்கிற ராமின் பதிலடி, குழந்தைகளை தனியார்பள்ளியில் படிக்கவைக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கன்னத்திற்கானது. ‘’பிரைவேட் ஸ்கூல்ல படிக்க வை நான் பணம் தாறேன்’’ என்று ஆஸ்திரேலிய தங்கச்சி சொல்ல, ‘’இதே கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சுதான நீ ஆஸ்திரேலியா போன! மடில வச்சு லொட்டுலொட்டுன்னு தட்டிட்டு இருக்கிறய்யே லேப் டாப் அது கவர்மெண்ட் ஸ்கூல படிச்சு சம்பாதிச்சது  தான?’’ என்கிற பதிலடி அரசுப்பள்ளியில் படித்து முன்னேறி இன்று தனியார் பள்ளியை ஆதரிப்பவர்களின் முகத்திற்கானது. இது போன்ற  பேருண்மைகளை துணிச்சலோடு படத்தின் கிளைமாக்ஸில் வைத்ததிற்காக இயக்குனருக்கு எழுந்து நின்று கை தட்டலாம்.  நாமெல்லாம் பேசித்திரிவது தான் என்றாலும் ராம் நின்று பேசியிருப்பது சினிமா எனும் ஆற்றல் மிக்க மேடையில்.. தமிழகத்தில் இதை திரையில் பேசிய முதல் இயக்குனராக ராம் இருக்கிறார் அவருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்

’’போதுமான வசதிகள் இல்லா விட்டாலும், போதிய ஊதியம் இல்லாவிட்டாலும், தன்னார்வத்தினால் பணிபுரிகிற ஆசிரியர்களுக்கு’’ - சமர்ப்பணம் செய்வதாய் படம் நிறைவடைகிறது இதில் போதிய ஊதியம் இல்லாவிட்டாலும் என்ற வரி மட்டும் நிச்சயமாய் அரசுப்பள்ளி ஆசிரியர்களைக் குறிக்கவில்லை என்பது வெளிப்படை. ஆக அரசுப்பள்ளியில் ஆயிரம் ரெண்டாயிரத்திற்கு தன்னார்வமாகப் பணிபுரியும் பி.டி.எ போன்ற தற்காலிக ஆசிரியர்களுக்கானது என அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கிறது.  மொத்தத்தில் படம்  அரசு பள்ளியை ஆதரித்து நிற்கிறது.  

. ஆக இதுவொரு கல்வி குறித்த நல்ல சினிமா என்று மட்டும் முடித்துவிட முடியாது. இது ஒரு மறைமுகப் பிரச்சாரம்.  நாம் இப்படத்தைப் பார்க்க,  பாராட்ட, பரிந்துரைக்க, பரப்ப முயல வேண்டும்.
_ சக.முத்துக்கண்ணன். 
மாவட்ட ஒருங்கிணைப்பாளர், கல்வி உபகுழு.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம். தேனி.
9944094428
நன்றி: பாவையர் மலர், அக்.2013

No comments:

Post a Comment