Sunday 3 November 2013

மத்திய அரசு , தனியார் கூட்டு திட்டத்தில் 2,500 பள்ளிகளை திறக்க நடவடிக்கை



Monday
2013-07-22
புதுடெல்லி : அரசு , தனியார் கூட்டு திட்டத்தில், நாடு முழுவதும் 2,500 பள்ளிகளை திறந்து, ஏழை குழந்தைகளுக்கு படிப்பறிவு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தில் சேருவதற்கு 65 தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதுகுறித்து மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏழை குழந்தைகளுக்கு கல்வியறிவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காகவே, அடிப்படை கல்வி உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. எனினும் கூட இன்னமும் நிலைமை மேம்படவில்லை. இதனால், 6,000 பள்ளிகளை திறக்க மத்திய அரசு முடிவு செய்தது.

இதில், முதல்கட்டமாக நாடு முழுவதும் சிறப்பான தரத்துடன் 2,500 பள்ளிகளை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இப்பள்ளிகள் அனைத்தும் அரசு , தனியார் கூட்டு திட்டத்தில் நிறுவப்பட உள்ளன. அதாவது பள்ளிகள் அமைக்க தேவையான நிலத்தை தனியாருக்கு அரசு ஒதுக்கும். மேலும், கட்டிடங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுக்கான நிதியும் ஒதுக்கப்படும். 

இப்பள்ளிகளில் 40 சதவீத இடங்களை ஏழை குழந்தைகளுக்கு ஒதுக்கி இலவசமாக கல்வி அளிக்க வேண்டும். மற்ற குழந்தைகளிடம் தனியார் நிறுவனங்கள் கல்விக் கட்டணத்தை வசூலித்து கொள்ளலாம். 7ம் வகுப்பில் இருந்து ஏழை குழந்தைகளுக்கு மாதம் ரூ.50 வரை தனியார் நிறுவனங்கள் வசூலித்துக் கொள்ளலாம்.

இந்த மாதிரி பள்ளிகளில் 6ம் வகுப்பில் இருந்து குறைந்தபட்சம் 1,000 மாணவர்களையும், அதிகபட்சம் 2,500 மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். தற்போது 7ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.2,500 வரை மத்திய அரசு செலவழிக்கிறது. இதனடிப்படையில் 2,500 மாணவர்களுக்கு மாதம் ரூ.1.20 கோடியை தனியாருக்கு அரசு அளிக்கும். இதுபோன்று ஏழை மாணவர்களுக்கான கல்வித் தொகையை மத்திய அரசு 10 ஆண்டுகளுக்கு வழங்கும். 

இதிலும் ஆண்டுக்கு 5 சதவீத கூடுதல் தொகை அளிக்கப்படும். இத்திட்டத்தில் சேர 65 தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் சலுகைகள் குறித்து வரும் 31ம் தேதி நடைபெற உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

நன்றி: தினகரன்

No comments:

Post a Comment