Monday 2 March 2015

அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும்: ஜி. ராமகிருஷ்ணன்

By dn, சென்னை
First Published : 30 November 2014 03:59 AM IST

அரசுப் பள்ளிகள் பாதுகாக்கப்பட்டால்தான் அனைவருக்கும் கல்வி கிடைக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம், அனைவருக்கும் கல்வியை உறுதி செய்வோம் என்ற கருத்தரங்கில் அவர் பேசியது: அனைவருக்கும் தரமான, சமமான கல்வி அளிக்காமல் நாடு வளராது. மக்களின் வாழ்க்கைத் தரம் உயராது. ஏழ்மை ஒழியாது. அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்ற முழக்கத்தை எல்லோரும் எழுப்புகிறார்கள்.

அரசுப் பள்ளிகள் மூலம்தான் ஏழை, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வி அளிக்க முடியும். 1978-இல் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. 2001-இல் 2,983 மெட்ரிக் பள்ளிகளில் 11,68,439 மாணவர்கள் படித்தனர். 2014-இல் மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கை 11,462 ஆகவும், மாணவர்களின் எண்ணிக்கை 36,17,473 ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது. இந்க காலகட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. அரசுப் பள்ளிகள் மூடப்பட்டால் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் எங்கே போவார்கள்? அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டுமானால் அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும். தாய்மொழி பயிற்றுமொழியாகத் தொடர ஊக்கம், அரசு மழலையர் பள்ளிகள், மாணவர் இடைநிற்றலைத் தடுத்தல், கல்வித் தரத்தை உயர்த்த ஆசிரியர்களுக்கு பயிற்சி, அடிப்படை வசதிகள், ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புதல் மூலம் அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கலாம் என்றார் ஜி. ராமகிருஷ்ணன்.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ம.ப. விஜயகுமார், எழுத்தாளர்கள் ஆயிஷா நடராஜன், சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment