Tuesday 25 February 2014

கல்வி உரிமைச் சட்டம் : குறைபாடுகள்: - பல்லவன்

1. குழந்தைகள் பெறும் கல்வியின் தரத்தைப் பற்றி சட்டம் கண்டுகொள்ளவில்லை.

குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்களா என்பது பற்றி சட்டம் இயற்றுபவர்கள் கவலைப்படவே இல்லை. பள்ளி இருக்கவேண்டும், வகுப்பறை இருக்கவேண்டும், ஆசிரியர் இருக்கவேண்டும் என்றெல்லாம் சொல்பவர்கள், அவற்றைக்கொண்டு எவ்விதமான கல்வியை மாணவர்களுக்குத் தரவேண்டும் என்பது பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. அதைவிட மோசமாக,மாணவர்கள் கற்றுக்கொண்டிருக்கிறார்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்காமல் அவர்கள் கற்றுக்கொள்ளாவிட்டாலும் அவர்களை அடுத்த வகுப்புக்கு அனுப்பிவிடவேண்டும் என்கிறது சட்டம். கணிதத்தில் கூட்டல், கழித்தல் தெரியாவிட்டாலும் மாணவர்களுக்கு பெருக்கல், வகுத்தல் சொல்லிக்கொடுக்கப்படவேண்டும். இவை எதுவும் தெரியாவிட்டாலும் உயர் கணிதத்தைச் சொல்லித்தரவேண்டும் என்கிறது சட்டம்.


2. பள்ளிகளை அதிகப்படுத்த விரும்புகிறது சட்டம். மாறாக, பள்ளிகள் குறைவதற்கே சாத்தியம் அதிகம்.

ஒவ்வொரு பள்ளிக்கும் இத்தனை இடம் இருக்கவேண்டும், இத்தனை மாணவர்களுக்கு இத்தனை ஆசிரியர்கள் இருக்கவேண்டும், ஒவ்வோர் ஆசிரியருக்கும் குறிப்பிட்ட தகுதி இருக்கவேண்டும், ஆசிரியர்களுக்கு அரசு குறிப்பிடும் சம்பளம் தரப்படவேண்டும் என்கிறது சட்டம். இந்த விதிமுறைகளில் அடங்காவிட்டால் பள்ளியின் அனுமதி குறிப்பிட்ட காலத்துக்குள் ரத்து செய்யப்படும் என்றும் சொல்கிறது சட்டம்.

இன்றைய தேதியில் மிகப் பெரும்பான்மையான தனியார் பள்ளிகளிடம் அரசு கோரும் இடம் இல்லை. ஆசிரியர்களுக்கு அவர்கள் தரும் சம்பளமும் குறைவு. இவற்றையெல்லாம் சரி செய்வதற்கு வாய்ப்பே இல்லை. நகரங்களில் பள்ளிகளை விரிவாக்க இடமே இல்லை. கட்டணங்கள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும் 25% இட ஒதுக்கீட்டுக்கு அரசு தரும் கட்டணம் குறைவாக இருக்கும் நிலையிலும் ஆசிரியர்களுக்கு அரசு தீர்மானிக்கும் சம்பளத்தைக் கொடுக்க பெரும்பான்மைத் தனியார் பள்ளிகளால் முடியவே முடியாது.

எனவே, இந்தப் பள்ளிகள் ஒன்று தாமாகவே கல்வித் துறையிலிருந்து விலகிக்கொள்ளும். அல்லது சட்டத்தின்படி அவர்களது அங்கீகாரம் ரத்து செய்யப்படும். அரசிடம் புதிய பள்ளிகளை உருவாக்கத் தேவையான பணம் இல்லை என்பதால்தான் தனியார் கல்விக்கூடங்களில் 25% இடத்தை அரசு கேட்டுப் பெற்றது. இப்போது, தனியார் பள்ளிகள் மூடப்பட்டால் அங்கு படிக்கும் குழந்தைகள் அனைவரையும் எங்கு கொண்டுபோய் சேர்ப்பது?

3. தனியார் யாருக்கும் புதிதாகப் பள்ளிக்கூடம் கட்ட ஊக்கம் வரப்போவதில்லை.

இதுவரை, குறிப்பாக எந்தச் சட்டமும் கல்வி நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கக்கூடாது என்று சொன்னதாகத் தெரியவில்லை. அவ்வப்போது சில உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் இவ்வாறு சொல்லியுள்ளன. ஆனால், நடைமுறையில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஏதோ ஒருவகையில் லாபம் சம்பாதித்துதான் வந்துள்ளன. இப்போது கல்வி உரிமைச் சட்டம் மிகத் தெளிவாக, கல்விக்கூடங்கள் அனைத்தும் லாப நோக்கு அற்றவையாகவே இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டது.

லாப நோக்கு இல்லை என்றால் லாபத்தை விரும்பும் யாருமே பள்ளிகளைக் கட்டப்போவதில்லை. இப்போது நடப்பதைப் போல, சட்டத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்கள்தான், தவறு என்று தெரிந்தும்கூட கல்விக்கூடங்களைக் கட்டி முறையற்ற வழியில் லாபம் சம்பாதிக்கப்போகிறார்கள். இவர்கள் யாருக்கும் கல்வியின்மீது அக்கறை கிடையாது. மொத்தத்தில் லாபத்தை விலக்குவதன் மூலமாக, நிஜமாகவே கல்வியின்மீது அக்கறை கொண்ட, சட்டபூர்வமாக நடந்துகொள்ளக்கூடிய நிறுவனங்கள் அனைத்தும் கல்வித்துறையில் இருக்கவே போவதில்லை. இதனால் நஷ்டம் பொதுமக்களுக்குத்தான்.

4. தனியார் பள்ளிகள்மீது விதிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள் எவையுமே அரசுப் பள்ளிகளுக்குக் கிடையாது.

தமிழகத்தில் எத்தனையோ அரசுப் பள்ளிகளில் தேவையான ஆசிரியர்கள் கிடையாது. ஆசிரியர்மாணவர் விகிதம் பல அரசுப் பள்ளிகளிலும் படுமோசமாக உள்ளது. மிகப் பெரும்பான்மையான அரசுப் பள்ளிகளில் கழிவறை வசதி தொடங்கி, குடிநீர் வசதிவரை எந்தவித அடிப்படைத் தேவையுமே சரியில்லை. இந்த வசதிகள் இல்லாத எந்தத் தனியார் பள்ளியையும் அரசால் மூடமுடியும். ஆனால், தன் பள்ளிகளில் இந்த வசதி இல்லை என்றால் அரசு என்ன செய்யும் என்பது சட்டத்திலேயே இல்லை. இந்த வசதிகள் ஒருவேளை நாளடைவில் அரசுப் பள்ளிகளில் ஏற்படலாம் என்று வைத்துக்கொண்டால்கூட, அதற்கென கெடு ஏதும் விதிக்கப்படவில்லை. ஆனால், தனியார் பள்ளிகளுக்குக் கடுமையான கெடு இருப்பதுடன், இந்தப் புதிய வசதிகளைச் செய்து தருவதற்காக அரசு மானியம் ஏதும் தருவதாகவும் சொல்லவில்லை. அதே நேரம், தமிழகத் தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணம் கட்டுப்படுத்தப்படுகிறது. மேற்கொண்டு 25% மாணவர்களுக்கான கட்டணம் குறைக்கப்படப்போகிறது. இதைத் தாண்டி எப்படி அந்தப் பள்ளி இந்த வசதிகளைச் செய்துதரப்போகிறது என்பது பற்றி சட்டம் கவலைப்படவே இல்லை. அரசுப் பள்ளிகளில் வசதிகள் சரியில்லை என்றால் யார்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டம் சொல்லவில்லை.

5. அரசுப் பள்ளி அல்லது அரசு உதவி பெறும் பள்ளி ஒவ்வொன்றிலும் பள்ளி நிர்வாகக் குழு என்றொரு குழு அமைக்கப்படவேண்டும். ஆசிரியர்கள் ஒழுங்காகப் பள்ளிக்கு வருவதையும் ஆசிரியர்கள் பிரத்யேகமாக டியூஷன் நடத்தாமல் இருப்பதையும் இந்த நிர்வாகக் குழுதான் செயல்படுத்தவேண்டும் என்கிறது சட்டம். ஆனால், அதற்கேற்ற எந்த அதிகாரத்தையும் இந்தக் குழுவுக்குச் சட்டம் வழங்கவில்லை. தவறு செய்யும் ஆசிரியர்களை நீக்கும் அதிகாரம் இந்த நிர்வாகக் குழுவுக்கு அளிக்கப்படவில்லை. எனவே நிர்வாகக் குழுவால் தமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பணிகளை ஒழுங்காகச் செய்ய முடியாது.

இந்தச் சட்டம் பல்வேறு ஆட்கள் எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று சொல்கிறது ஆனால், ஒருவர் ஒரு செயலைச் செய்யவில்லை என்றால் என்ன தண்டனை, செய்யாவிட்டால் யார் அவரைச் செய்ய வைப்பது என்று எதுவுமே சொல்லப்படவில்லை. மொத்தத்தில் எந்தவிதச் சிந்தனையும் இன்றி இயற்றப்பட்ட ஒரு சட்டமாகவே தெரிகிறது.

பெட்டிச் செய்தி

சிக்கல்களே அதிகம்!

கல்வி உரிமைச் சட்டம் பல சிக்கலான கேள்விகளை எழுப்பியுள்ளது. நாடு முழுவதிலும் சீர்குலைந்து கிடக்கும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தாமல், 25 சதவிகிதம் இடம் அளிக்குமாறு தனியார் பள்ளிகளைக் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? வரும் நாள்களில் இந்த 25 என்பது 50 அல்லது 60 சதவிகிதமாக உயராது என்பதற்கு என்ன உத்தரவாதம்? இந்த 25 சதவிகித மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஆகும் செலவை அரசுப் பள்ளிகளுக்கு எப்படிப் பட்டுவாடா செய்யப்போகிறது?

கல்வி கற்பிப்பதற்கான அடிப்படை வசதிகளை அனைத்துப் பள்ளிகளும் கொண்டிருக்கவேண்டும் என்பதும் அதற்கான விதிமுறைகள் வகுக்கப்படவேண்டும் என்பதும் வரவேற்கத்தக்க முடிவுதான். விதிமுறைகளுக்குப் பொருந்தாத மற்றும் அரசு அங்கீகாரம் பெறாத பள்ளிகள் இனி தடை செய்யப்படும் என்கிறது சட்டம். இந்த விதிகளால் அதிகம் பாதிக்கப்படப்போவது என்னவோ தனியார் பள்ளிகள்தாம். தனியார் பள்ளிகள் குறித்த அடிப்படை புள்ளிவிவரங்கள் எதையும் தெரிந்துகொள்ளாமலேயே இப்படியொரு சட்டம் வகுக்கப்பட்டுள்ளது வேதனைக்குரியது.

நான் ஒரு தீர்வை முன்வைக்க விரும்புகிறேன். 25 சதகிவிதம் மாணவர்களுக்கான கட்டணத்தைச் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்குவதற்கு பதி லாக, குழந்தைகளின் பெற்றோருக்கு கூப்பன் வடிவில் வழங்கிவிடலாம். எந்தப் பள்ளியில் தங்கள் குழந்தையைச் சேர்க்கவேண்டும் என்பதை பெற்றோர் தீர்மானித்துக்கொள்ளட்டும்.எது தரமான பள்ளி, எதில் சேர்ப்பது எதிர்காலத்துக்கு நல்லது என்பதை அவர்களே ஒப்பிட்டுப் பார்த்து முடிவு செய்துகொள்ளட்டும். பண விநியோகம் தொடர்பான ஊழலையும் இதன் மூலம் கட்டுப்படுத்தமுடியும்.

(பா. சந்திரசேகரன், ஆலோசகர், மத்திய திட்டக்குழு. இது கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்து).
http://www.aazham.in/

No comments:

Post a Comment