Friday 14 February 2014

பள்ளி கல்விக்கான நிதிஒதுக்கீடு சரிவு

சென்னை: பள்ளி கல்வி துறைக்கான நிதி ஒதுக்கீட்டு அளவு, கடந்த ஆண்டை விட வெகுவாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு 2,412 கோடி ரூபாய் அதிகரித்த நிலையில் இந்த ஆண்டு வெறும், 766 கோடி தான் அதிகரித்துள்ளது.

அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கடந்த, மூன்று ஆண்டுகளில், பள்ளி கல்விக்கான நிதி ஒதுக்கீடு, கணிசமாக அதிகரித்து வந்தது. 2011-12ம் ஆண்டில் 13,000 கோடி; 2012-13ம் ஆண்டில் 15,000 கோடி; 2013-14ம் ஆண்டில் 17,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு இருந்தது. படிப்படியாக, நிதி அதிகரித்து வந்ததால், நடப்பு ஆண்டில் 19 ஆயிரம் கோடி வரை உயரலாம் என, எதிர்பார்க்கப்பட்டது.

சென்னையில் நடந்த ஒரு விழாவில், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், சபிதாவும், இதை சூசகமாக தெரிவித்தார். ஆனால், மூன்று ஆண்டுக்கான கூடுதல் நிதி அதிகரிப்பு இந்த ஆண்டு தடாலடியாக சரிந்துள்ளது. நடப்பு ஆண்டில் பள்ளி கல்வித்துறைக்கு, கடந்த ஆண்டை விட 766 கோடி ரூபாய் தான் அதிகம்.

புதிய அறிவிப்புகள் இல்லை: வழக்கமாக புதிய பள்ளிகள் திறப்பு, ஆசிரியர் நியமனம், மாணவர்களுக்கான புதிய இலவச திட்டங்கள் என, பல அறிவிப்புகள் இடம்பெறும். அதுபோல், எதுவும் இடம்பெறவில்லை. "பள்ளிகளின் கட்டமைப்பிற்கு, நபார்டு மூலம், ரூ.250 கோடி செலவு செய்யப்படும்" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிதி அதிகரிப்பு சரிவு மற்றும் புதிய திட்டங்கள் இல்லாதது குறித்து, அதிகாரிகள் சிலர் கூறியதாவது: ஏற்கனவே, ஏராளமான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு, போதும் போதும் என்ற அளவிற்கு, 14 பொருட்கள், இலவசமாக வழங்கப்படுகின்றன.

மத்திய, மாநில அரசு நிதி ஒதுக்கீடு மூலம், 44 மாதிரிப் பள்ளிகள், அரசு பள்ளிகளில், கூடுதல் கட்டட வசதி, வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும், அனைத்துப் பள்ளிகளிலும், 100 சதவீத குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு மேலும், புதிதாக செயல் படுத்துவதற்கு என எதுவும் இல்லை. இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி: தினமலர், பிப்.14.2014

No comments:

Post a Comment