Friday 11 July 2014

கல்வி உரிமைச் சட்டம் – ஓர் அறிமுகம் - கே. சத்யநாராயன்

உரிமை: இந்தச் சட்டத்தின்மூலம் ஆறு வயதிலிருந்து பதினான்கு வயது வரையுள்ள குழந்தைகள் அனைவருக்கும் இலவசமாகக் கல்வி பெறும்  உரிமை கொடுக்கப்படுகிறது.
கடமை: இந்தக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் கடமை அரசுக்கும் உண்டு, பெற்றோர்களுக்கும் உண்டு. ஆனால், பெற்றோர் தம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்தால் அவர்கள்மீது நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாது; தண்டனை ஏதும் தரமுடியாது. அவர்களை அரசால் வற்புறுத்த மட்டுமே முடியும். மொத்தத்தில் குழந்தைகளுக்குக் கல்வி தரும் பொறுப்பு முழுவதும் அரசின்மீது மட்டுமே விழுகிறது.
இலவசம்: ஏழைகள் மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்குமே கல்வி இலவசமாகத் தரப்படும். பொருளாதார நிலைமை பற்றிக் கவலையின்றி, அனைத்துப் பிள்ளைகளும் அரசுப் பள்ளிகளில்  அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் முற்றிலும் இலவசமாகக் கல்வி கற்கலாம்.

ஊனமுற்றோர்: ஊனமுற்ற குழந்தைகளுக்கான பிரத்யேக உதவிகளையும் அரசே ஏற்கவேண்டும்.
வயதுக்கேற்ற வகுப்பு: பள்ளிக்கூடத்துக்கே போகாத குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும்போது அவர்களது வயதுக்கு ஏற்ற வகுப்பில் சேர்க்கவேண்டும். அதாவது, 12 வயதுக் குழந்தையாக இருந்தால் அந்தக் குழந்தை அதற்குமுன் பள்ளிக்கே சென்றிருக்காவிட்டாலும் 6ம் வகுப்பில் சேர்க்கவேண்டும். சேர்த்த பின், அந்தக் குழந்தைக்காக பிரத்யேகமான கல்வியைத் தருவது அரசின் பொறுப்பு. பள்ளியே சென்றிருக்காத குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படும்போது, அவர்கள் வயது 14ஐத் தாண்டிவிட்டாலும் இந்தச் சட்டம் அவர்களுக்குச் செல்லுபடியாகும்.
தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு: அரசின் உதவி பெறாத தனியார் பள்ளிகளாக இருந்தாலும், 25% இடங்களை பின்தங்கிய வகுப்பினருக்கும் ஏழைகளுக்கும் ஒதுக்கவேண்டும். பின்தங்கிய வகுப்பினர் என்றால் சமூகரீதியில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் போன்ற வகுப்பினர். ஏழைகள் என்றால் ஆண்டு வருமானம் குறிப்பிட்ட அளவுக்குக் கீழ் இருப்போர். ஒவ்வொரு மாநில அரசும் இது குறித்து தத்தம் மாநிலங்களுக்கான வரையறைகளை நிறுவிக்கொள்ளலாம். இந்த இடங்களுக்கு தனியாக விண்ணப்பம் கோரப்பட்டு, குலுக்கல் மூலம் தீர்மானிக்கப்படும். தமிழ்நாட்டில், ஆண்டு வருமானம் இரண்டு லட்ச ரூபாய்க்குக் கீழ் இருந்தால் ஏழைகள் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளே இல்லாத இடத்தில் பள்ளிகள்: ஒவ்வோர் இடத்திலும் ஒரு கிமீ தூரத்துக்குள் ஆரம்பப் பள்ளி ஒன்றும், மூன்று கிமீ தூரத்துக்குள் நடுநிலைப் பள்ளியும் இருக்கவேண்டும். இதனை ஏப்ரல் 2013க்குள் நிறுவவேண்டும். எங்கெல்லாம் இதுபோன்ற பள்ளிகளை நிறுவ முடியாமல் உள்ளதோ, அங்கெல்லாம் மாணவர்களுக்குப் போக்குவரத்து வசதி அல்லது உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் படிக்கும் வசதியை அரசு செய்து தரவேண்டும்.
பள்ளிக்கூட வசதிகள்: எல்லாக் காலநிலைக்கும் பொருந்தக்கூடிய கட்டடம், ஒவ்வோர் ஆசிரியருக்கும் ஒரு வகுப்பறை, அலுவலகம், தலைமை ஆசிரியர் அறை, பொருள்கள் சேகரிப்பு அறை, நூலகம், விளையாட்டு வசதிகள், பிற வசதிகள் ஆகியவை இருக்கவேண்டும். தடையின்றிப் பிள்ளைகள் செல்லக்கூடியதாக, சுத்தமான குடிநீரும் தேவையான அளவு கழிவறைகளும் கொண்டதாக பள்ளிகள் இருக்கவேண்டும். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி தரப்படவேண்டுமானால் மாநகராட்சி என்றால் ஆறு கிரவுண்டு, மாவட்டத் தலைநகர் என்றால் எட்டு கிரவுண்டு, நகராட்சி என்றால் பத்து கிரவுண்டு, டௌன்ஷிப் என்றால் ஒரு ஏக்கர், கிராமம் என்றால் மூன்று ஏக்கர் நிலமாவது அவர்களிடம் இருக்கவேண்டும். நிலம் சொந்தமானதாகவோ அல்லது குறைந்தபட்சம் முப்பது ஆண்டு லீஸில் இருக்கவேண்டும்.
ஆசிரியர்கள்: டி.எட் அல்லது பி.எட் சான்றிதழ் இல்லாத ஆசிரியர்கள் ஏப்ரல் 2015க்குள் தேர்வு எழுதி சான்றிதழ் பெறவேண்டும். அத்துடன் மத்திய அல்லது மாநில அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி அதில் தேர்வு பெற்றிருக்கவேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம் எவ்வளவு என்பதை மாநில அரசு அவ்வப்போது நிர்ணயிக்கும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, முப்பது முதல் நாற்பது மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற கணக்கில் ஆசிரியர் எண்ணிக்கை இருக்கவேண்டும். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பத்தைந்து மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர், ஒவ்வொரு பாடத்துக்கும் தனி ஆசிரியர் என்று இருக்கவேண்டும். நூறு மாணவர்களுக்குமேல் இருந்தால், அப்பள்ளியில் நுண்கலை, விளையாட்டு, கைவேலை ஆகியவற்றுக்குத் தனி ஆசிரியர்கள் இருக்கவேண்டும். எந்த ஆசிரியரும் தனியாக டியூஷன் நடத்தக்கூடாது.
பள்ளி நிர்வாகக் குழு: அரசு உதவி பெறாத பள்ளிகளைத் தவிர்த்து, அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி நிர்வாகக் குழு ஒன்று அமைக்கப்படவேண்டும். இக்குழுவின் உறுப்பினர்களில் 75% பேர் பெற்றோர்கள், 8% உள்ளாட்சி உறுப்பினர்கள், 8% ஆசிரியர்கள், மீதம் பள்ளி மாணவர்கள் அல்லது கல்வியாளர்கள் இருக்கவேண்டும். மொத்த உறுப்பினர்களில் பாதிப் பேராவது பெண்களாக இருக்கவேண்டும். இந்தக் குழு, அரசு நிதியை பள்ளி எப்படிப் பயன்படுத்துகிறது என்பதையும் பள்ளி ஆசிரியர் யாரும் தனி டியூஷன் நடத்தாமல் இருப்பதையும் கண்காணிக்கும்.
நுழைவுத் தேர்வு, நன்கொடை: பள்ளியில் குழந்தைகளை அனுமதிக்க, நன்கொடை கேட்கக்கூடாது. எவ்விதமான நுழைவுத் தேர்வோ நேர்முகத்தேர்வோ வைக்கக்கூடாது.
குழந்தைகளை நடத்துவது: ஐந்தாம் வகுப்பு வரை எந்தக் குழந்தையையும் ஃபெயில் ஆக்கக்கூடாது. எந்தக் குழந்தையையும் உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்தக்கூடாது.
000
ஏற்கெனவே உள்ள தனியார் பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 2013க்குள் கல்வி உரிமச் சட்டத்தின் ஷரத்துகளைப் பின்பற்றுவதாக உறுதிமொழி எடுத்து, அரசின் அனுமதியைப் பெறவேண்டும். இனி வரப்போகும் எந்தப் புதுப் பள்ளியாக இருந்தாலும் கல்வி உரிமைச் சட்டத்தின் ஷரத்துகளுக்கு உட்பட்டுத்தான் ஆரம்பிக்க முடியும்.
இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இச்சட்டம் எல்லாத் தனியார் பள்ளிகளுக்கும் செல்லுபடியாகும் என்றும், சிறுபான்மையினர் நடத்தும் அரசு உதவி பெறாத பள்ளிகளுக்கு மட்டும் செல்லுபடியாகாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

No comments:

Post a Comment