Friday 11 July 2014

இலவசக் கல்வி : சட்டப்படி சரியா? - எஸ்.பி. சொக்கலிங்கம்

1950ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, தன் குடிமக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், பாதுகாப்பு, மருத்துவ உதவி, கல்வி, வேலைவாய்ப்பு முதலியவற்றை வழங்கவேண்டும் என்பதுதான்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் பகுதி 3, இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளை வரையறுக்கிறது. பகுதி 4, அரசாங்கத்தின் பொது கொள்கைகள் (டைரக்டிவ் பிரின்ஸிபிள்ஸ்). அடிப்படை உரிமைக்கும், பொது கொள்கைக்கும் ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை மீறப்பட்டால், அரசை எதிர்த்து வழக்குத் தொடுத்து தன் உரிமையை நிலைநாட்டலாம். ஆனால், பொது கொள்கைகள் செயல்படுத்தப்படவில்லை என்றால் அதற்காக வழக்கு தொடுக்கமுடியாது.
அரசியல் அமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்குள் 6 வயதிலிருந்து 14 வயது உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமாக இலவசக் கல்வி கிடைக்கச் செய்வது அரசின் கடமை என்பது பொது கொள்கைகளில் ஒன்று. நிதி போதாமையால் இது நிறைவேறவில்லை.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அமலில் வருவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பு, ஐக்கிய நாடுகளின் பொதுசபை 1948ம் ஆண்டு மனித உரிமைகளின் சர்வதேச  தீர்மானத்தை பிரகடனப்படுத்தியது. அதன்படி, உலக மக்கள் அனைவரும் இலவசமாக கல்வி பெறுவது அவர்களுடைய உரிமை. இதனை ஏற்று சுமார் 135 உலக நாடுகள் இலவசக் கல்வியை அடிப்படை உரிமையாக அங்கீகரித்துள்ளன.
· · ·
1991ம் ஆண்டு, மோகினி ஜெயின் என்பவர் கர்நாடக அரசின் ஓர் அரசிதழ் அறிவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று கர்நாடக அரசு அறிவித்திருந்தது. அனைவருக்கும் இலவசக் கல்வி என்பது பொது கொள்கைதான் என்பதால் அதை வலியுறுத்தமுடியாது என்பது அரசின் வாதம்.
உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு அரசுக்குச் சாதகமாக இருக்கவில்லை. ‘ஒருவர் கௌரவத்துடன் வாழ கல்வி அவசியம்.  எனவே அரசாங்கம் தம் மக்களுக்கு கல்வி வழங்குவது வெறும் பொது கொள்கையாக எடுத்துக்கொள்ளமுடியாது, அது அடிப்படை உரிமையாகத்தான் கருதப்பட வேண்டும்’ என்றது தீர்ப்பு.
இரண்டாண்டுகள் கழித்து மேலும் ஒரு வழக்கு (உன்னிகிருஷ்ணன் vs ஆந்திரப்பிரதேச மாநிலம்) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மோகினி ஜெயின் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு சரிதானா என்று 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விவாதித்தது. விசாரணையின் முடிவில்,  முந்தைய தீர்ப்பு சரிதான் என்று தீர்ப்பானது.
இந்த தீர்ப்பு வெளியாகி சுமார் 9 ஆண்டுகள் கழித்து, 2002ம் ஆண்டு அரசியல் அமைப்புச் சட்டத்தில் புதிதாக 21ஏ என்னும் சட்டவிதி சேர்க்கப்பட்டது. அதன்படி, அரசாங்கத்திடமிருந்து கல்வி பெறுவது அடிப்படை உரிமை. 6 வயதிலிருந்து 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அரசாங்கம் கட்டாயமாக இலவசக் கல்வியை வழங்கி ஆக வேண்டும்.
ஆனால், இதிலுள்ள சிக்கல்களையும் சவால்களையும் எப்படி எதிர்கொள்வது? அனைத்து மாணவர்களுக்கும் போதிப்பதற்கு லட்சக்கணக்கான ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள். எப்படி அவர்களைப் பணியில் அமர்த்துவது? எப்படிச் சம்பளம் கொடுப்பது? எத்தனை புதிய பள்ளிகளைக் கட்டுவது?
2009ம் ஆண்டு கொண்டு வரப் பட்ட இலவசக் கல்விச் சட்டம் (The Right of Children to Free and Compulsory Education Act, 2009) சில தீர்வுகளை முன் வைத்தது. இந்தச் சட்டம், தனியார் பள்ளிகள், அரசாங்கத்தின் நிதி உதவியுடன் செயல்படும் பள்ளிகள், அரசிடம் நிதி உதவி பெற்று சிறுபான்மையினருக்காக நடத்தப்படும் பள்ளிகள் ஆகிய அனைத்துக்கும் பொருந்தும். இவர்கள் அனைவரும் தங்கள் பள்ளிகளில் உள்ள இடத்தில் 25 சதவிகிதத்தை சமுதாயத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். பள்ளிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை அரசாங்கம் ஓரளவுக்கு சரி செய்யும். அதாவது, அரசாங்கப் பள்ளியில் ஒரு மாணவன் படிக்க எவ்வளவு செலவாகும் என்பதை கணக்கிட்டு, அந்தத் தொகை தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும்.
பல தனியார் பள்ளிகள் இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. தீர்ப்பு அவர்களுக்கு எதிராகவே இருந்தது. அரசாங்கத் திடமிருந்து நிதி உதவி பெறாத சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் தவிர மற்றபடி இலவசக் கட்டாய கல்விச் சட்டம் செல்லுபடியாகும் என்று தீர்ப்பானது.
நம் முன் உள்ள முக்கியக் கேள்வி, அரசாங்கம் இந்தச் சட்டத்தை எப்படி செயல்படுத்தப்போகிறது என்பதுதான். உண்மையாகவே இந்தியாவில் உள்ள 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி கிடைக்குமா அல்லது மற்ற சட்டங்களைப் போல் இதுவும் ஒரு காகிதப் புலியாகத்தான் இருக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment