Friday 8 May 2015

அரசுப் பள்ளி > ஐ.ஐ.எம். > விப்ரோ - ஒரு நிகழ்கால சாதனைக் கதை

அரசுப் பள்ளிகள் குறித்து இப்போது பேசினாலே ‘அதெல்லாம் அந்தக் காலக் கதை. சுகமான நினைவுகள். இப்போதெல்லாம் அரசுப் பள்ளிகள் எப்படி இருக்கின்றன என்பது நமக்குத் தெரியாதா?’ என்பது போன்ற விமர்சனங்களே அதிகம் முன்வைக்கப்படுகின்றன. இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் நிகழ்கால உதாரணம்தான் எர்நெஸ்டோ திலீபனின் சாதனைக் கதை.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் பள்ளியுடன் போராடி, ‘இனியும் தனியார் பள்ளியில் விட்டால் மகனின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்’ என்று அரசுப் பள்ளியில் தங்கள் மகன் எர்நெஸ்டோ திலீபனை சேர்த்தார்கள் அவரது பெற்றோர் காளிதாசனும் கலைச்செல்வியும். கலைச்செல்வி, அரசுப் பள்ளி ஆசிரியை என்பது கவனிக்கத்தக்கது. அவர்களது எதிர்பார்ப்பு வீண்போகவில்லை.

அந்த அரசுப் பள்ளிதான் திலீபனுக்கு புதிய உலகைத் திறந்து காட்டியது. அந்த அரசுப் பள்ளிதான் இந்திய மாணவர்களின் கனவான ஐ.ஐ.எம்முக்கு சிவப்புக் கம்பளம் விரித்து அழைத்துச்சென்றது. படிப்பை முடிக்கும் முன்பே ஆறு இலக்க ஊதியத்தில் வேலை கிடைக்கக் காரணமாக அமைந்தது.

இப்போது சென்னையில் விப்ரோ நிறுவனத்தின் வணிக ஆய்வியல் நிபுணராக இருக்கிறார் திலீபன். “கோவையில் பிரபலமான தனியார் பள்ளியில் என்னை சேர்த்தனர். 10-ம் வகுப்பு வரை படித்தேன். ஏனோ தெரியவில்லை பள்ளி செல்லவே அப்போது எனக்குப் பிடிக்கவில்லை. ஐந்தாம் வகுப்பு வரைக்கும் மக்குப் பிள்ளை நான் - ஆம், பள்ளியில் அப்படித்தான் என்னை அழைத்தார்கள். ரேங்க் பட்டியலில் கடைசியில் இருப்பேன். ஆறாவதுக்கு மேல்தான் ஓரளவு படித்தேன். தேர்வில் சரியான மதிப்பெண் எடுக்கவில்லை என்றால் ஆசிரியர்கள் வறுத்தெடுப்பார்கள், அடிப்பார்கள் என்பதற்காகப் படித்தேன்.

பள்ளியே சிறையானது. காலையில் எட்டரை மணிக்குப் பள்ளிக்குச் சென்றால் சிறப்பு வகுப்புகள் எல்லாம் முடித்துவிட்டு மாலை 7 மணிக்குதான் வீடு திரும்ப முடியும். அரட்டை கிடையாது, விளையாட்டு கிடையாது, முழுக்க முழுக்கப் புத்தகம், நோட்ஸ் இவையே உலகமானது.

‘சொன்னதைச் செய்’

புத்தகத்தைத் தாண்டி எதுவுமே தெரியவில்லை. தண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறது? பறவை எப்படிப் பறக்கிறது? என்பது போன்ற சிறு பொது அறிவு விஷயங்கள்கூடத் தெரியாது. பள்ளியில் கேள்வி கேட்க முடியாது. ‘சொன்னதைச் செய்’ என்பார்கள். அங்குள்ள ஆசிரியர்களையும் குறை சொல்ல முடியாது என்பதை பின்னாட்களில் உணர்ந்தேன். மதிப்பெண் எடுப்பது தொடர்பாக அவர்களும் நிர்வாகத்தின் கடும் அழுத்தத்தில் இருந்தார்கள்.

மொத்தத்தில் பள்ளிப் பிராயத்துக்கே உரிய சுட்டித்தனம் சுத்தமாக இல்லாமல் போனது. ஒரு கட்டத்தில் பேச்சே குறைந்தது. யாருடனும் சகஜமாக பேச மாட்டேன். பயங்கரக் கூச்சம், தயக்கம், இனம் புரியாத பயம்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே பத்தாம் வகுப்புப் பாடம் எடுத்தார்கள். இயந்திரத்தை விட மோசமாக மாறியது வாழ்க்கைச் சூழல். பள்ளிக்கூடம் செல்வதை நினைத்தாலே காய்ச்சல் அடிப்பதுபோல இருந்தது. பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் என்னை 90.5% மதிப்பெண் எடுக்க வைத்துவிட்டார்கள். பள்ளியில் மூன்றாவது இடம். புகைப் படம் எடுத்தார்கள். செய்தித்தாளில் போட்டார்கள். ஆனால், துளியும் மகிழ்ச்சி இல்லை அப்போது. அந்தப் பள்ளியை விட்டு சென்றால் போதும் என்றாகிவிட்டது. அங்கு செல்லவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தேன்.

தேசிய வங்கியொன்று நடத்தும் பிரபலமான பள்ளியில் இடம் கிடைத்தது. அட்மிஷன் போட்டாயிற்று. அங்கும் கடுமையான கட்டுப்பாடுகள் என்றார்கள். கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்ததுபோல ஆகிவிட்டது. படிப்பே வேண்டாம் என்றேன். என் மனவோட்டத்தைச் சரியாகப் புரிந்து கொண்டவர் என் அம்மா. “நீ வாடா, நான் வேலை பார்க்கும் அரசுப் பள்ளியில் உன்னைச் சேர்க்கிறேன்’ என்றார்.

‘அய்யே அரசுப் பள்ளியா? தனியார் பள்ளியே இந்த லட்சணம் என்றால் அரசுப் பள்ளி எப்படி இருக்கும்?’ என்றேன். நண்பர்கள், அக்கம்பக்கத்தினர், உறவினர் என எல்லோரும் ‘உங்களுக்குப் பைத்தியமா? சாதாரணமாக இடமே கிடைக்காது என்று கருதப்படும் தனியார் பள்ளியிலே இடம் கிடைத்திருக்கிறது, போயும் போயும் அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டுமா’ என்று அம்மாவைத் திட்டினார்கள்.


அம்மா என்னிடம் கேட்டார், ‘என் மீது நம்பிக்கை இருந்தால் வா. அரசுப் பள்ளி என்றால் என்னவென்று காட்டுகிறேன், அரசு ஆசிரியர்கள் என்றால் யார் என்று காட்டுகிறேன். அரசுப் பள்ளி என்றால் அவமானம் இல்லை என்று காட்டுகிறேன்...’ என்றார். அம்மா அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதை முதல்முறையாகப் பார்த்தேன். அம்மாவுக்காகச் சென்றேன்.

சுற்றுலா வந்ததுபோல் இருந்தது!

கோவை அசோகபுரம் அரசுப் பள்ளி. முதல் நாள்... பையன்கள் கிழிந்த, அழுக்கு சட்டையோடு வருவார்கள், பள்ளிக்கூடம் குப்பையாக இருக்கும் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றேன். எல்லாமே நினைத்ததற்கு மாறாக இருந்தது. பெரிய மைதானம். சுற்றிலும் மரங்கள். குறிப்பாக, யாரோடும் பேசலாம், அரட்டை அடிக்கலாம் என்ற சூழல்.

முதல்முறையாக ஐந்தாறு மாணவர்களுடன் அமர்ந்து சாப்பாட்டைப் பகிர்ந்துகொண்டு சாப்பிட்டேன். ஏதோ சுற்றுலாவுக்கு வந்ததுபோல இருந்தது. ஒரு பீரியடில் மணி அடிக்க... ‘எல்லோரும் மைதானத்துக்கு ஓடுங்க’ என்றார்கள். வாழ்க்கையில் முதல்முறையாக மைதானத்தில் ஓடினேன். ‘யாருக்கு என்ன விளையாட்டு பிடிக்கும்?’ என்று கேட்டார்கள். பேட்மின்ட்டன் கற்றேன். அங்கு விளையாடிதான் மாவட்ட அளவில் பரிசுகள் வாங்கினேன்.

சகஜமாகப் பேசவே தயங்கிய நான் பேச்சுப்போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசு வாங்குவேன் என்றெல்லாம் ஒருபோதும் நினைத்ததே இல்லை. வினாடி-வினா போட்டி, ராமானுஜம் கணிதப் போட்டி, அறிவியல் கண்காட்சி, தமிழ், ஆங்கிலம் கிளப் போட்டிகள் என அனைத்திலும் பரிசுகள். அந்த ஓர் ஆண்டு என் வாழ்க்கையில் மறக்க முடியாத இனிமையான ஆண்டு. பாடங்களைக்கூட மாணவர்களை வைத்தே எடுத்தார்கள். அதாவது, கணிதத்தில் முதல் ஸ்டெப் ஆசிரியர் போடுவார்.

இரண்டாவது ஸ்டெப்பை ஒரு மாணவர் சொல்ல ஆசிரியர் போடுவார். மூன்றாவது ஸ்டெப்பை இன்னொரு மாணவர் சொல்லுவார். விளையாட்டாக எல்லாம் கற்றோம். பாடங்களைப் புரிந்துகொண்டு படித்தோம். பன்னிரெண்டாம் வகுப்பில் கொஞ்சம் அக்கறை எடுத்துப் படிக்கச் சொன்னார்கள். அப்போதும்கூட சிறப்பு வகுப்புகள் இல்லை. ஆசிரியர்களிடம் எப்போது வேண்டுமானாலும் தயங்காமல் சந்தேகம் கேட்கலாம். நண்பர்களைப் போல பழகினார்கள். பொதுத்தேர்வில் 90% மதிப்பெண் எடுத்தேன்.

அனைத்திந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு எழுதினேன். திருச்சி என்.ஐ.டி-யில் இடம் கிடைத்தது. மாநில அளவிலான நுழைவுத் தேர்வில் கிண்டி - அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அந்த நான்கு ஆண்டுகளும் வேறு ஓர் உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தின. அடுத்து, கேட் (CAT) தேர்வு எழுதினேன். தேசிய அளவில் கடும் போட்டி அது. மேகாலய மாநிலம், ஷில்லாங் ஐ.ஐ.எம்மில் எம்.பி.ஏ. படிக்க இடம் கிடைத்தது.

எனது வகுப்பில் ஐ.ஐ.எம்முக்குத் தேர்வான ஒரே மாணவன் நான். அங்கு தேசிய அளவில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதச் சொல்லி போட்டிகள் வைத்தார்கள். நான்கு போட்டிகளில் தேசிய அளவில் தங்கம் வென்றேன். படிக்கும்போதே விப்ரோ நிறுவனத்தினரின் முதல் நேர்காணலிலேயே வேலை கிடைத்தது. படிப்பை முடித்த கையுடன் கடந்தாண்டு ஜூன் மாதம் வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். இப்போது மற்றுமொரு உலகத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். எல்லாவற்றுக்கும் காரணம் கோவை அசோகபுரம் அரசுப் பள்ளியும் அதன் அத்தனை ஆசிரியர்களும்தான்!” என்று முடித்தார் திலீபன்.

அசோகபுரம் அரசுப் பள்ளியைப் பொறுத்தவரை திலீபன் ஒரு தொடக்கப் புள்ளி! திலீபனைத் தொடர்ந்து அந்தப் பள்ளியின் வேதியியல் ஆசிரியர் குழந்தைவேல் மகன் நவீன் அங்கு வந்து சேர்ந்தார். இவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் மேற்கொண்டுவருகிறார்கள்.

திலீபன் இந்தப் பள்ளியில் சேர்ந்த அதே ஆண்டில், தனியார் பள்ளிகளில் 10-ம் வகுப்பு முடித்த ஏழு மாணவர்கள் அசோகபுரம் அரசுப் பள்ளியில் வந்து சேர்ந்தனர். இப்போதும் இது தொடர்கிறது. பெற்றோர், மாணவர், ஆசிரியர்கள் இவர்களின் ஒருங்கிணைந்த நம்பிக்கைதான் அரசுப் பள்ளிகளையும் மேலே மேலே கொண்டுசெல்லும் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா என்ன!

- டி.எல். சஞ்சீவிகுமார்,
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

No comments:

Post a Comment