Tuesday 18 August 2015

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை: கொஞ்சம் கல்வி......அதிக நிர்வாகம்.. ( Less Education…..More Governance)

இது இந்த அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்த முழுமையான விளக்கமும் விவாதமும் விமர்சனமும் அல்ல. கல்விக் கொள்கை எவ்வாறு விவாதத்துக்கு விடப்பட்டுள்ளது என்ப்து குறித்த விமர்சனமும் அதில் பங்கேற்பதற்கான வழிமுறைகளும் மட்டுமே முதற்கட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அத்ன் பின்னர் கல்வியின் நோக்கமும் மாற்றுத் திட்டமும் நமது கண்ணோட்டமும் பின்னர் வைக்கபப்டுவதாக தீர்மானிக்கப்பட்டது.




திருவாளர் மோடி அவர்களின் மத்திய அரசு திட்டம் உருவாக்குதலை மிகப் பெருமையாக மேலிருந்து கீழ் என்ற பழைய அரசுகளின் முறையில் இருந்து மாற்றி கீழிருந்து மேல் என்ற முறையில் கலந்தாலோசித்து இக் கொள்கை தயாரிக்கப்பட உள்ளது எனக் கூறுகிறது. ஆனால் உண்மையில் இது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட திட்டத்தை மக்களிடம் விவாதிப்பது என்ற போர்வையில் திட்டமிட்ட கேள்விகள் மூலம் செய்திருப்பதே அதற்கு சாட்சியாகும். 

மேலும் ஆரம்பக்கல்வி குறித்த பல்வேறு அறிக்கைகளைப் புறந்தள்ளியும், கல்வி உரிமைச் சட்டத்தை மீறியும் இக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்களிடம் விவாதிக்கப்பட வேண்டிய பொருள்கள் என்ற அடிப்படையில் ஆரம்பக்கல்விக்கு 13 வகையான தலைப்புகளிலும் உயர்கல்வியில் 20 வகையான தலைப்புகளிலும் கேள்விகளை அரசே கொடுத்து பல கேள்விகளுக்கு விடையவே multiple choice அடிப்படையில் கொடுத்திருப்பதே அதற்கு சாட்சி ஆகும்.

2015, ஏப்ரல்-மே மாதங்களில் கிராமப் பஞ்சாயத்தில் (2.5 லட்சம் கூட்டங்கள்), ஜூன்-ஜூலையில் மாதங்களில் ஒன்றிய அளவிலும்,நகர அளவிலும் (10,300 கூட்டங்கள்), ஆகஸ்ட் மாதத்தில் மாவட்ட அள்வில் (676 கூட்டங்கள்) செப்டம்பர் மாதத்தில் மாநில அள்வில் தலா மூன்று கூட்டங்கள் என 36 மாநில, யூனியன் பிரதேசங்களில் (சுமார் 100 கூட்டங்களும்) கருத்துக் கேட்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இது தவிர இணைய வழி கருத்துக் கேட்பும் ஜனவரி 26 முதல் 30 ஏபரல் வரை நடத்தப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. 

இதன் பின்னர் ஆறு மண்டலங்களில் மாநிலங்களின் பரிந்துரைகள் தொகுக்கப்பட்டு அகில இந்திய அளவில் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் பிரிவுத் தலைவர்களால் இந்த அமைச்சகத்தின் கீழ் இயங்கும் NCTE, NUEPA, NCERT, AICTE, UGC ஆகிய அமைப்புகளின் உதவியோடு தொகுக்கப்படும் எனக் கூறுகிறது. 

இதன் பின்னர் தேசிய அளவில் சம்பந்தபப்ட்டமத்திய அமைச்சர்கள் உட்பட் பல்வேறு கல்விப் பங்கேற்பாளர்களுடன் ஒரே ஒரு கருத்துருவாகத் தயாரிக்கபப்ட்டு தேசிய கல்விக் கொள்கை செயல்பாட்டுக் குழுவுக்கு (National Educational Task Force) பரிந்துரைக்கப்படும். இக் குழு இதனைப் பரிசீலித்து தேசிய கல்விக் கொள்கை-2015 முன் பரிந்துரைக் கொள்கையாக மத்திய கல்வி ஆலோசனைக் குழுமத்திடம் (CABE-Central Advisory Board on Education) சமர்ப்பிக்கபப்டும். 

புதிய கல்விக் கொள்கை குறித்த பொதுவான விமர்சனங்கள்:

திறன் என்ற கல்வித் தரம் (Quality Measurement ) : தற்போதைய கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் எந்தவிதமான மாற்றம் தேவை என்பதில் தெளிவு இல்லை எனபது மட்டுமல்ல அது தவறுதலாகவும் சித்தரிக்கப்படுகிறது. இந்தத் தவ்று 1990 களில் இருந்தே இருக்கிறது. அதாவது குறைந்தபட்ச அடைவுகள் (MLL) என்ற கொள்கை. குறைந்தபட்ச அடைவுகள் மட்டுமே தரமான கல்வி என்று நாம் ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலயில் திறன் மட்டுமே தரமான கல்வி என இக் கொள்கை பிரேரித்து,அதற்கு என்னென்ன செய்யலாம் என கேள்விகளை வடிவமைத்து இருக்கிறது.

அளவு நிர்ணயித்தல் ( Quantification) : மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை கல்வியின் அளவு நிர்ணயிக்கபப்ட்டுள்ளது. 

மையப்படுத்துதல் ( Centralization) : விவாக்க முறையில் கல்ந்தாலோசித்தல் என்று சொல்லிவிட்டு கல்வியை ஒருமுகப்படுத்தி மையபப்டுத்துதல் என்ற கொள்கையை முன்னிறுத்துகிறது. 20 சதவீத மாற்றமே மாநில அரசுகள் செய்துகொள்ள முடியும் எனக்கூறி இருக்கிறது. எடுத்துக்காட்டாக மையப் பல்கலைக் கழகங்கள் அடை காக்கும் ( Incubation) நிறுவனங்களாக மாற்றப்படுதல். கல்லூரி, பல்கலை ஆசிரியர்களை தேசிய அளவில் தேர்ந்தெடுத்தல், பொதுப் பாடத்திட்டம், மைய தர மதிப்பீடு, மைய நிர்வாகம் என உயர்கல்வியில் மையபப்டுத்துதல் என்பதே பெரும்பான்மையான பரிந்துரையாக உள்ளது. இத்ற்கு ஏற்றவாறு கேள்விகள் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன.. 

நிர்வாகமயமாக்குதல்: எல்லா மட்டங்களிலும் கல்வித் திறன் மேம்பட நிர்வாகம் சிறப்பானதாக இருந்தால் தான் முடியும் என்ற கருத்து மேலோங்கி ஒலிக்கிறது. ஆசிரியர் , மாண்வர்களின் நிர்வாகக் கண்காணிப்பு குறித்து அதிகம் கூறப்படுகிறது. பள்ளிக் கல்வியில் பணி உயர்வு அவ்ர்களின் செயல்திறன் சார்ந்ததாக இருக்கலாம என்ற கேள்வியையும் (ஆரம்பக் கல்வி-பக்கம் 11) உயர்கல்வியில் ஆசிரியர்களின் வேலை சிறப்பாக இல்லையென்றால் அவர்களை வேலை நீக்கம் செய்யலாமா, கல்வியில்லாத துறைகளுக்கு மாற்றலாமா போன்ற உள்ளிட்ட கேள்விகளை முன் வைக்கிறது (உயர் கல்வி-பக்கம் 6).அதே போல் திறமையான ஆசிரியர்களைக் கண்டறிய காண்ட்ராக்ட் முறையைக் கைகொள்ளலாமா அல்லது மைப்படுத்தப்பட்ட ஆசிரியர் தொகுப்பு உருவாக்கி அதிலிருந்து ஆசிரியர்களை அனுப்பலாம் எனக் கேள்விகளை முன் வைக்கிறது. 



ஒரே சீராக்குதல் ( Uniformity): அனைத்து மட்டங்களிலும் ( நகரம், கிராமம், மலைப் பகுதி, கடலோரம்) ஒரே மாதிரியான அள்வுகளைப் பெற நினைத்தல் என்பது பல்வேறு பன்முகஇயற்கை, சமுதாயம்,கலாச்சாரம் கொண்டுள்ள நாட்டில் இது கேலிக்கூத்தாக உள்ளது. 



சர்வதேச மயமாக்கல் (Internationalization): பள்ளிக் கல்வியில் முதல் (ஆரம்பக் கல்வி பக்கம்-4) உயர்கல்வி வரை சர்வதேசத் தரம் என்றும், உலகப் பாடத்திட்டம் (Global Syllabus) என உளறி உள்ளது. அந்நியப் பல்கலைகழகங்களுக்கு திறந்து விடும் நோக்கம் பளிச்செனத்தெரிகிறது (உயர் கல்வி-பக்கம் 47)



தொழில்மயக் கல்வி (Vocationalisation): கல்வி என்பது அறிவை விருத்தி செய்யும் கருவியாகும். தொழில் கல்வி எனபது ஒரு வேலையைச் செய்வதற்கான அறிவைப் பெறுவது என்பது போய் வேலைக்கான திறனைப் பெறுவதே இதன் நோக்கமாக உள்ளது (ஆரம்பக்கல்வி-பக்கம் 8) வேலை, வேலைச் சந்தை எனச் சுற்றிச் சுற்றிப் பேசி எட்டாம் வகுப்பில் இருந்து தொழில்மயக் கல்வியைத் துவக்க உள்ளது. தற்போது வேலை வாய்ப்புகள் (Feasible Employment), வேலைக்கேற்ற திறன் (Employability) என்று எல்லோரும் விரும்பும் பொதுப் புத்தியைப் பயன்படுத்தி இந்த சூழ்ச்சியைச் செய்துள்ளது. 

இதனால் பெரும் பகுதியினர் எட்டாம் வகுப்புடன் தண்டவாளம் மாறி செல்ல உள்ளனர். தொழில்நுட்பக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அறிவு-தொழிநுட்ப பிரிவினர் என இரு சாதியினர் உருவாக உள்ளனர். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் அறிவு சாதியினராகவும் பெரும் பகுதியினர் தொழிற்கல்வி கற்ற கூலி வேலைக்கர்ரர்களாக மாற உள்ளனர். மாண்வர்களின் எண்ணிகைக்கு ஏற்றவாறு கல்லூரிகள் அதிகரிக்கப்படாமல் கலை அறிவியல் கல்லூரிகள் மூடப்பட்டு சமுதாயக் கல்லூரிகளாக மாற்றப்பட உள்ளன.

தகவல், தொடர்பு, தொழில்நுட்ப வழிக் கல்வி ( Information, Communication, Technology) : கல்வியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்த்ப் பேசாமலும் அது கல்விக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என பரிந்துரைக்காமலும் கல்வியவே தகவல், தொடர்பு, தொழில்நுட்ப வழி கொடுக்க முனைவதே இந்த கொள்கையின் பரிந்துரையாக உள்ளது (ஆரம்பக் கல்வி-பக்கம் 6) அதாவது ஆன் லைன் படிப்பு, திறந்த வெளிப் பல்கலைப் படிப்பு எனப் பரிந்துரை செய்கிறது. 

சந்தைமயமாக்கல் ( Market oriented) : அறிவு என்பது சந்தைக்கானதாகக் கருதப்படுகிறது. அறிவியல், கணிதம் பற்றிய கல்விக்கு முக்கியத்துவம் (ஆரம்பக் கல்வி-பக்கம் 6) கொடுக்கிறது. அது அறிவியலுக்கானதாக இல்லாமல் வணிகத்திற்கானதாக மாறும் வாய்ப்புள்ளது எனவே கல்வியை சந்தைக்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளது. அதன் பின்னர் வணிகம், கன்சல்டன்சி போன்ற கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. பேட்டண்ட் பெறுதல் போன்ற அறிவைத் தனியுடமை ஆக்கும் முயற்சிக்கு வழி வகுக்கிறது. சமூக அறிவியல் புறந்தள்ளப்பட்டு தூக்கி எறியப்பட்டுள்ளது. 

மூன்று “பீ”க்கள்-”PPP” ( Public Private Partnership): நிதி ஒதுக்கீடு பற்றி எந்தவிதமான பரிந்துரைகளும் இல்லாமல் அனைத்து மட்டங்களிலும் ஆரம்பக்கல்வி (ஆரம்பக் கல்வி- பக்கம் 6) முதல் உயர் கல்வி வரை மூன்று “பீ”க்கள் வர இருக்கிறது. தனியார் பங்களிப்பு போதிய பயன் தரவில்லை எனக் கூறி தனியார் நிறுவனங்கள் கலை அறிவியல் கல்லூரிகள் மீது பணத்தை போட விரும்பாத போது அவை தொழில் நிறுவன வணிகக் கல்வி நிறுவனங்களாக ( Entrepreneurial Business School) மாற்றப்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. தனியாருக்கு அனைத்து வகையிலும் அவுட் சோர்சிங் செய்யப் பரிந்துரைக்கிறது. தனியார் பங்களிப்பு போதிய பயன் தரவில்லை எனக் கூறும் இந்தக் கொள்கைக்குறிப்பு இதை விலக்கிக் கொள்ளாமல் எப்படி இதனை பயன்படுத்தலாம் என்ற வகையில் விவாததிற்கு விட்டுள்ளது.

சமூக நீதி (Social Justice) இல்லாமை: எந்த இடத்திலும் சமூக நீதி என்ற வார்த்தையே இல்லை. ஆனால் கல்வியில் விடுபடுபவர்களை தலித், மலை ஜாதியினர், சிறுபான்மையோர், பெண்கள், சிறப்புக் கவனம் பெற வேண்டியவர்கள் ஆகியோர்களை Gaps என்ற வகையில் குறிப்பிடுகிறது. இவர்களுக்கான கல்வி எப்படி இருக்க வேண்டும் என கேள்விகளை முன் வைக்கிறது. அதில் ஒரு கேள்வி: கல்வி உரிமைச் சட்டம் மைனாரிட்டி நிறுவனங்களுக்கு விதிவிலக்கு அளித்துள்ளதால் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் என்னென்ன என உள் குத்து விட்டிருக்கிறது. (ஆரம்பக்கல்வி-பக்கம் 21)

Inclusion என்ற பெயரில் தகுதி அடிப்படையில் வர இயலாதவர்களை உள்ளிழுத்துக் கொள்வது அரசின் பெருந்தன்மை என்று குறிப்பிடுகிறது. சமூக நீதி என்ற கடமை கைவிடப்படுகிறது. கல்வி என்பது அடிப்படை உரிமை எனப்தும் மறுக்கபப்டுகிறது. கற்பவர்கள் பயனாளிகள் என்ற கண்ணோட்டம் உருவாக்கப்படுகிறது. தலித், மலை ஜாதியினர், சிறுபான்மையோர், பெண்கள் ஆகியோருக்கான சமூக நீதி இதில் இல்லை. விவசாயம், கைத்தொழில்கள் பற்றிய அக்கறை எங்கும் இல்லை.

கலாச்சார ஒருங்கிணைப்பு ( Cultural Integration): கலாச்சார ஒருங்கிணைப்பு என்ற பெயரில் உயர்கல்வியில் ஃப்வுண்டேசன் கோர்ஸ் குறித்தும், இண்டாலஜி (Indology) ஆகியன பாடத்திட்டத்தின் ஒருபகுதியாக இருக்கலாம என்ற கேள்விகளை முன் வைத்துள்ளது. மேலும் மொழி மூலமாக ஒருங்கிணைப்பு சாத்தியமா என்பதையும் அனைத்து பல்கலைக் கழ்கங்களும் முக்கிய மொழித் துறை ஆரம்பித்து அதில் சாகும் தறுவாயில் உள்ள மொழிகள் அல்லது மறந்து போன மொழிகள் குறித்த முக்கிய கவனம் செலுத்தலாமா என்ற கேள்வியையும் போடுள்ளதின் உள் நோக்கம் புரிகிறதா? (உய்ர்கல்வி-பக்கம் 39)  

இறுதியாக ஆரம்பக்கல்வியில் பல்வேறு கொள்கைகள், அமுலாக்கல், மதிப்பீடுகள் என பல வகையான தரவுகள் உள்ளன..கோத்தாரிக் கமிஷன், ஆச்சார்யா ராமமூர்த்தி அறிக்கை, யஷ்பால் அறிக்கை, 1986 கல்விக் கொள்கை, அனைவருக்கும் ஆரம்பக்கல்வி இயக்கம், கல்வி உரிமைச் சட்டம் இருந்தும் எதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. 

இதே போல் உயர்கல்வியில் உருப்படியான ஆய்வுகள், அறிக்கைகள் இல்லாவிட்டாலும் யுஜிசி அமைத்தது, புதிய பொருளாதாரக் கொள்கை, பிர்லா- அம்பானி அறிக்கை, தேசிய அறிவுக் கமிஷன் (National Knowledge Commission) என சிற்சில அனுபவங்கள் இருந்தும் அவைகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

மேலும் நமது கல்வியில் பலமும் பல்வீனமும் தொடர்ந்து இருந்து வந்து கொண்டே இருக்கிறது. அதனை ஆராய்ந்து புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படவில்லை. மக்களில் பலர் குறிப்பாக மத்திய தர வர்க்கத்தினர் நமது கல்வி மீது நம்பிக்கை இல்லாமல் அதிருப்தியில் இருக்கின்றனர் என்பது உண்மை. இதைப் பயன்படுத்திக் கொண்டு மத்திய அரசு இக்கல்விக் கொள்கையைத் தயாரித்து உள்ளது. ஆனால் அதே சமயத்தில் நமது சமூகத்தில் 40% மேல் உள்ள சாதாரண மக்களின் கருத்துக்களைக் கண்டு கொண்டதாக இல்லை. 

நாமும் கல்வியில் மாற்றம் வேண்டுமென விரும்புகிறோம். கல்வியில் உள்ள பிரச்சினைகள், சவால்கள் ஆகியனவற்றைக் கணக்கில் கொள்ளாமல் கல்வியினால் வேலைக்கான வாய்ப்பில்லை ( Un employable) என்றும் கல்வி பெற்று வருபவர்கள் வேலைக்கான் திறன் பெறவில்லை ( Employability) என்ற ஒரே கருத்தை மையப்படுத்தி மட்டுமே இக்கொள்கை வடிவமைக்கப் பட்டுள்ளது. கல்வி என்பது வேலை சார்ந்தது மட்டுமல்ல அறிவு வளர்ச்சி, சமூக மாற்றம் ஆகியன சார்ந்தது உயரிய கண்ணோட்டம் கைவிடப்பட்டுள்ளது. 

எனவே இக் கருத்துக்களின் அடிப்படையில் கருத்துக் கேட்கும் கூட்டங்களில் நாம் பங்கேற்க வேண்டும். ஆனால் அரசின் விவாதத்திற்கு விடப்பட்டுள்ள தலைப்புகளுக்கு (Themes) மாற்றாக பின் வரும் தலைப்புகளில் நாம் மக்களிடம் விவாதிக்கலாம் எனத் திட்டமிடபப்ட்டுள்ளது:

பள்ளிக் கல்வி:  கல்வியின் நோக்கம், பாடத்திட்டம், கல்வியின் படிநிலைகள், கற்பிக்கும் முறை , அமைப்பின் பிரச்சினைகள் , சமமான, தரமான கல்வி உரிமை,  ஆசிரியருக்கான கல்வி, தேர்வு முறை, உடற் பயிற்சி & உடல் நலம், பாரம்பரியம் (Heritage) , கைத்திறன் (Crafts), கல்வியில் தொழில்நுட்பத்தின் பங்கு, வேலைசார் கல்வி, நிதி , வயது வந்தோர் கல்வி, சமூகப்பங்கேற்பு. 

உயர்கல்வி : உயர்கல்வியின் இலக்கு ,உயர்கல்வியின் விரிவாக்கம் , சமூகப்பிரச்சினைகள் , ஆசிரியர், அவர்களின் திறன் வளர்ப்பு , சமூகத்திற்கான ஆராய்ச்சி & கண்டுபிடிப்பு , கல்வியில் தொழில்நுட்பத்தில் பங்கு, தொழிற் நிறுவனங்களின் பங்கு , பரவலாக்குதல் (Decentralization) கொள்கை , ஒழுங்குபடுத்துதல் ( Regulation) , வேலை வாய்ப்புகள் உருவாக்குதல் 

(சென்னையில் நடைபெற்ற அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்புபின் (AIPSN) தென் மண்டலக் கூட்டத்தில் 2015 ஜூலை 4&5 விவாதிக்கப்பட்ட்டது) 
பொ.இராஜமாணிக்கம்
துணைத் தலைவர்
 அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு (AIPSN)

No comments:

Post a Comment