Wednesday 9 September 2015

ஆசிரியர் தினம் : கால காலத்திற்குமான கொண்டாட்டங்கள்

துய்ஷேன் ஆகப் பெரும் படிப்பு படித்த கல்வியாளர் கிடையாது. ஆனால் சிங்கிஸ் ஐத்மாத்தவ் அவர்களது அற்புதமான படைப்பான முதல் ஆசிரியர் நாவலின் கதாநாயகனான இந்த துய்ஷேன் மட்டும் இல்லாதிருந்தால், குர்கூரெவு எனும் அந்தச் சிற்றூரில் கல்வியைப் பற்றியோ, பள்ளிக்கூடத்தைப் பற்றியோ யார் கவலைப் பட்டிருக்கப் போகிறார். வலுக்கட்டாயமாகத் திருமணச் சிறைக்குள் தள்ளப்பட இருந்த அந்தச் சிறுமி அல்தினாய் உலைமானவ்னா எப்படி தப்பி வெளியேறி நகரத்திற்குப் பெயர்ந்து படிக்கவும் செய்து, பின்னாளில் தனது கிராமத்தில் உருவாகும் புதிய பள்ளியைத் திறந்துவைக்க அழைக்கப்படும் அளவு உருவாக முடிந்தது? புரட்சிகர மாற்றம் கல்வியில் இருந்தே உருவாகிறது என்பது தன மண்டைக்குள் புகுந்து படாத பாடு படுத்தியது தவிர அந்த எளிய மனிதர் துய்ஷேன் எங்கே வேறுபட்டு நின்றார்! தன்னலமற்ற இலட்சிய வேகத்திற்குச் சொந்தமான அனைத்து ஆசிரியர்களுமே துய்ஷேன்கள் தாம், அவர்களுக்கு நமது ஆசிரியர் தின வாழ்த்துக்கள். 

வீதியில் எத்தனையோ மனிதர்கள் கடந்துபோய்க் கொண்டிருந்தாலும், பணி நிறைவுக்குப் பின்னும் அடையாளம் கண்டு பேசப்படுபவர்களாக ஆசிரியர்கள் இருக்கின்றனர். பெற்றோரை விடவும் அதிகம் தங்களோடு உரையாடுபவர் ஆசிரியர் என்பதைக் குழந்தைகள் அறிவர். ஆசிரியர்களுக்குப் பிள்ளைகள் என்று சொன்னால் தமது குழந்தைகளைவிடவும் தம்மிடம் படிப்பவர்களே சட்டென்று கவனத்திற்கு வருவார்கள். வாழ்க்கையின் முக்கிய கட்டங்களில் தமக்கு வழிகாட்டியாகவோ, நல்ல ஆலோசனை நல்கியவராகவோ ஓர் ஆசிரியர் எல்லோரது வாழ்விலும் இருக்கவே செய்வார்.பள்ளிக்கு வெளியிலும், கல்விக்காலம் முடிந்த பிறகும் ஓர் ஆசிரியர் ஆசிரியராகவே மாணவரது நெஞ்சில் உறைந்துவிடுகிறார், முன்னாள் ஆசிரியர் என்ற பதவி இறக்கம் அவர்களுக்கு நேர்வதில்லை. 

வாழ்க்கையில் சோர்வை சந்தித்த வேளையில் முதலில் தனது ஆசிரியரைத் தேடித் பகிர்ந்து கொண்ட மாணவர்கள் பெரும்பாலும் காப்பாற்றப் பட்டிருக்கின்றனர். கல்வி என்பது பாடத்திட்டம் மட்டிலுமே அல்ல என்பதை உணர்ந்திருக்கும் ஆசிரியர்கள் மிக இலகுவாக எதிர்காலத் தலைமுறையினரின் ஏற்றத்திற்குப் பங்களிப்பு செய்கின்றனர். பரந்து பட்ட மாணவர்கள் உத்தரவாதமாக அன்பை எதிர்பார்க்கும் இடமாக உருவெடுக்கும் ஆசிரியர்கள் பணிச்சுமை தெரியாது வேலை பார்க்க முடிவது வியப்புற முடியாத வியப்பு. 

பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள் எப்போதும் சவால்களுக்கிடையே பணியாற்ற வேண்டி இருக்கும் என்று நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்ட ஒரு மருத்துவர், "எப்போது என்ன நடக்கும் என்று தெரியாது. மருத்துவரது அத்தனை திட்டங்களையும் கவிழ்த்துப் போடும் இடம் டெலிவரி டேபிள்" என்றார் அவர். ஓர் ஆசிரியருக்கும் அது கிட்டத்தட்ட பொருந்தும். வகுப்பறைக்குள் நுழையுமுன் அதனுள் என்னென்ன கேள்விகள், என்னென்ன தர்ம சங்கடங்கள், என்னென்ன அதிர்ச்சிச் செய்திகள் காத்திருக்கின்றன என்பது ஆசிரியர்கள் ஊகிக்க முடியாதது. இயல்பற்று இருப்பதுதான் இயல்பு, ஆனால் சட்டென்று இயல்பு நிலைக்கு நாம் மீண்டுவிட வேண்டும் என்று அண்மையில் பேசுகையில் உளவியல் ஆலோசகர் டாக்டர் ஆர் கார்த்திகேயன் குறிப்பிட்டார். அப்படி பொருந்தும் சவாலான வேலையை மிக இலகுவாக அன்றாடம் சாதித்துக் கொண்டிருக்கிறார் ஓர் ஆசிரியர்.

உள்ளம் திறந்த அணுகுமுறைக்குத் தயாராகும் ஆசிரியர்களிடம் மாணவர்கள் தமது பாதுகாப்பை சுவாசிக்கத் தொடங்குகின்றனர். ஆசிரியர்களது அறிவுத் திறனை மெச்சிக் கொண்டாடக் கூட, அவரது அன்பின் நுழைவாயில் திறக்க வேண்டியிருக்கிறது. இனிமையான கற்றல் அனுபவத்தை மாணவர்கள் ஒருபோதும் இழக்க இசைவதில்லை. தாமதமான வருகை, சொல்லாமல் நிற்றல், தேர்வுகளைப் புறக்கணித்தல் எல்லாமே கற்றலின் சுமையாலோ, குடும்ப பிரச்சனைகளின் எரிச்சலாலோ நேரக் கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆசிரியரின் அன்பான வினவுதல் அத்தனை காயங்களையும் ஆற்றிவிடும் வலிமை கொண்டிருக்கிறது. 

இவ்வாண்டு ஆசிரிய தினத்தையொட்டி இந்த வெள்ளிக்கிழமை மாணவர்களோடு காணொளி மூலம் நேரடி உரையாடலில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி கேட்க தேர்வு செய்யப்பட்டது, ஏதேனும் சாதனை செய்த மாணவர்கள்தானாம். ஒவ்வொரு குழந்தையும் எதையேனும் சாதிக்கவே செய்கிறது. சாதனையாள மாணவரது கண்களில் நட்சத்திரம் மின்னுவதை ஆசிரியர்கள் பார்க்கட்டும் என்றாராம் மோடி. மற்ற மாணவர்கள் கண்களில் என்ன தெறிக்கும் என்பதை யார் பார்ப்பது. அனைத்துக் குழந்தைகளையும் அளவுகோல்களுக்கு அப்பால் பார்க்கும் ஆசிரியர் பேசாக் குரல்களையும் ஒலிக்க வைக்கிறார். சிரிக்கத் தயங்கும் முகங்களையும் புன்னகையால் அலங்கரிக்கச் செய்கிறார்.

தவிர்க்கத் துடிக்கும் ஒரு காயைக் கூடக் கதைகளைப் பேசி ஊட்டும் ஒரு தாய் குழந்தையை உண்ண வைத்துவிடுகிறாள். ஆனால், தாங்கள் எந்த உணவை உண்ணுகிறோம் என்பதைத் தாங்களாக ரசித்து, ருசித்து உண்ணக் கற்பிக்க வேண்டும் குழந்தைகளுக்கு என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். தண்ணீரில் முதன்முதல் உடம்பு வெடவெட என்று நடுநடுங்க நிற்க வைக்கப்படும் குழந்தை பின்னர் எப்படி உற்சாகமாக நீச்சல் போடத் தொடங்குகிறது ! கல்வியில் அந்த மாயத்தைத்தான் ஆசிரியர்கள் நிகழ்த்துகின்றனர். 

சமூகத்தின் இயங்கு விதிகளை குழந்தைகள் தமது பள்ளிக்கூடப் பருவத்திலேயே பதிய வைத்துக் கொள்கின்றனர். பகிர்தலின் பெருமையை அவர்கள் அங்கேதான் பழக்கிக் கொள்கின்றனர். கேள்வி எழுப்புதலை, சிந்தித்தலை உள்ளத்திற்குப் பயிற்சியாக்கிக் கொள்ளும் மாணவர்கள் உடற்பயிற்சியின் தொடக்க பாடங்களை பள்ளியிலேயே பெறுகின்றனர். இவற்றில் அருமையான பங்களிப்பு செய்யும் ஆசிரியர்கள் காலகாலத்திற்கும் கொண்டாடப் படுகின்றனர். 

மற்ற எல்லோர் தினங்களையும் அவரவர் கொண்டாடிக் கொள்கின்றனர். ஆசிரியர் தினத்தை சமூகம் கொண்டாடுகிறது. சமூகத்தைக் கொண்டாடும் ஆசிரியர்கள் தங்களை மேலும் சிறப்பித்துக் கொள்கின்றனர். குழந்தைகளை நேசிக்கும் யாவருக்கும் உரித்தாகிறது ஆசிரியர் தினம். எளிய மனிதர் துய்ஷேன், அதனால் தான் முதல் ஆசிரியர் ஆனார்.


எஸ் வி வேணுகோபாலன் 

No comments:

Post a Comment