Wednesday 21 May 2014

கூடலூர் முகாம் கண்ட மாஸ்டர் யார்? :க.காந்திமதி ஈரோடு

மேற்குத் தொடர்ச்சி மலையின் தொட்டிலில் தவழும் தென்மேற்கு மூலைச் சிறுநகரம் அது. கடைக்கோடி ஊர் என்றாலும், தமிழ்நாட்டின் எந்த நகரைக் காட்டிலும் முன்னரே விழித்துக்கொள்ளும் மக்கள். அதிகாலை 3.45 மணிக்கெல்லாம் களைகட்டத் துவங்கிவிடுகிறது நகரம். வேலைக்குச் செல்லும் உழைப்பாளி மக்களால் வீதிகள் நிரம்பிவழிகிறது. அந்நேரத்திற்கே உணவகங்களும் சுறுசுறுப்பு அடைந்துவிடுகின்றன. தேநீரகங்களில் செரட்டை முட்டாஸ் (தேங்காய் செரடையில் ஊற்றி சுடப்படும் ஜேலேப்பி போன்ற ஒரு வகை இனிப்பு), பால் பன், மெதுவடை என எல்லாம் மெகா சைசில் குவிந்துகிடக்கிறது. ஹோட்டல்களில் இட்லி, தோசை, பூரி, பரோட்டா என எங்கும் காலையில் கிடைக்கும் உணவுப் பண்டங்களோடு அதிகாலை 4 மணிக்கே முழுச்சாப்பாடே 20 ரூபாய் விலையிலும் கிடைக்கிறது. வயிறு முட்டத் தின்றுவிட்டு காசை எடுத்து நீட்டும் போது, இங்கு ஏதேனும் வேலை கிடைத்து ஆயுள் முழுவதும் வாழ்ந்து விட முடியாதா என மனம் ஏங்குகிறது. இங்குள்ள உணவகங்களில் அந்தக் காலத்தில் அண்டாவில் தண்ணீரை வைத்துக் கோதி, கோதிக் குடித்ததைப் போல் குடிக்கிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு மாசற்ற நீரைப் நேரிடையாகப் பருகும் வாய்ப்புக்கிட்டியது. மூன்று புறமும் கடலால் சூழப்பட்ட இந்திய தீபகற்பத்தை ஓர் இடத்தில் இருந்து பார்க்க முடியாது. ஆனால் மூன்று புறமும் மேற்குத் தொடர்ச்சி மலையைப் போர்த்திக் கொண்டு, ஒரு புறம் தமிழ்நாட்டின் பசுமைப் பள்ளத்தாக்கு என்னும் கம்பம் பள்ளத்தாக்கோடு இணைந்து நின்று அழகு காட்டும் கூடலூர் நகரத்தை மனம் குளிரபார்க்கமுடியும்.


இந்த கூடலூர் நகரின் வளர்ச்சியில் இரண்டறக் கலந்து நிற்கும் ஒற்றை உந்து சக்தியான NSKP பொன்னையா கவுடர் மேல்நிலைப்பள்ளி . உதவி பெரும் பள்ளிகளில் மிகப் பெரும்பாலானவற்றில் தொண்டுள்ளமும், சமூகசேவையும் தொலைந்து போய் எத்தனையோ ஆண்டுகள் ஆனபின்பும், இன்றும் தூயசேவையும், கறார் தன்மையும், பணம் காசு இன்றி தகுதி அடிப்படையில் ஆசிரியர்கள் பணி நியமனம் நீடிப்பது இதன் சிறப்பு இயல்பு. கூடலூர் நகர வீதிகளைப் போலவே இந்தப் பள்ளியும் அதிகாலை 4 மணி முதல் சுறுசுறுப்பு அடைந்துவிடுகிறது. அதன் விளையாட்டு மைதானம் நடைப்பயிற்சியாளர்கள், கூடைப்பந்து விளையாட்டாளர்கள் என நிரம்பி வழிகிறது. இந்தப் பள்ளியைத்தான் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உயிர்த்துடிப்புடன் நடத்திவரும் மாற்றுக் கல்விக்கான 10வது வாசிப்பு முகாமிற்கான இடமாக தேர்வு செய்திருந்தது தேனி மாவட்டக் குழு. 


கோடை காலத்தில் நடைபெறும் முகாம் மூன்று நாட்களாக நடைபெறுவது வழக்கம். இதன் அடிப்படையில் இந்த முகாமும் மே 3, 4, 5 தேதிகளில் நடைபெற்றது. முதல் நாள் தேக்கடி, பென்னி குவிக் நினைவு மண்டபம் என மக்கள் சுற்றிப் பார்த்துவிட்டு, உள்ளத்துள்ளலுடன் 3ஆம் தேதி மாலை 6 மணிக்கு வாசிப்பு முகாமைத் தொடங்கினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர் தேனி சுந்தர் தலைமையில், தேனி மாவட்டச் செயலாளர் வெங்கட் வரவேற்புரையாற்ற, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் பேரா.என்.மணி துவக்கவுரையாற்றினார். வாசிப்பு முகாம் கடந்து வந்த பாதை, வாசிப்பின் முக்கியத்துவம், வாசிப்பின் அரசியல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அவரது உரை இருந்தது. 


வகுப்பறையில் வாசிப்பு முகாம்கள் எத்தகைய தாக்கத்தை செலுத்தி வருகிறது என்பதற்கு வந்திருந்தவர்களின் சாட்சியங்கள் கட்டியம் கூறியன.ஒரே ஒரு முகாம் தன் ஒட்டுமொத்த கற்றல், கற்பித்தல் முறையைஎவ்வாறு புரட்டிப் போட்டிருக்கிறது என தாட்சாயினி ஆசிரியர் விவரித்தார், "டே, நம்ம இங்கிலீஷ் டீச்சர் நெஜமாலுமே திருந்தீட்டாங்கடா." என்று த னது மாணவர்கள் பேசிக்கொள்வதை மகிழ்ச்சியுடன் பதிவு செய்தார். பத்து முகாம்களில் முழுமையாக பங்கேற்ற முருகேசன்,"தன்னை ஒரு முழுமையான ஆசிரியனாக பரிணாம வளர்ச்சி அடையச் செய்து வருகிறது வாசிப்பு இயக்கம் " என்றார் . வந்திருந்தவர்களில் பெரும் பகுதியினர் கடந்த முகாமக்களில் பங்குபெற்றவர்கள். ஒவ்வொரு பங்கேற்பாளரும் தன்னை வாசிப்பு முகாம்ங்கள் எப்படி செதுக்கி, செழுமைப்படுத்தியது என்ற வகைமையை எடுத்துக் கூறினர். சுயஅறிமுகம் என்று தொடங்கிய இந்த பகிர்தல் சுமார் இரண்டு மணி நேரத்தை துவக்கவிழாவில் எடுத்துக்கொண்டது. "இந்த முகாமில் ஒரு நூல். அடுத்த முகாமில்ஒரு நூல். படிப்பது. விவாதிப்பது. அப்படியே விட்டுவிட்டுச் செல்வதால்என்ன பயன்?" என்ற யோசிக்கும் அல்லது கேள்வி கேட்டும் விமர்சனங்களுக்குஇந்த துவக்கவிழாவே பதிலாக அமைந்தது. "தமிழ்நாடு அறிவியல்இயக்கமும் வாசிப்பு இயக்கமும் அறிமுகமானது கடந்த முகாமில் தான். ஆனால்அது எனது ஆளுமையில், கல்வி குறித்த கருத்துக்களை தைரியமாக பகிர்ந்துகொள்வதில் பெரும் பங்கு வகிக்கிறது" என்றார், திண்டுக்கல் ஆசிரியர் மனோகரன்." நான் பெற்ற இன்பத்தைத் துய்க்க என்னுடன் இம்முறை ஏழுபேரை அமைத்து வந்திருக்கிறேன்" என்றார், இராமநாதபுரம் காந்தி. "ஒவ்வொரு முகாமிற்கும் ஒருவரையாவது அழைத்து வர வேண்டும் என்பதில் இப்பொழுதுதான் வெற்றி பெற்று இருக்கிறேன் "என்றார், கரூர் ரவி. "எனது வாசிப்பின் வாசல் திறந்தது பாமாவின் கருக்கு நாவல் வழியாகத்தான். ஆனால் எனது கற்பித்தலுக்கான வாசல், பாவ்லோ பிரைரேயின் 'ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான கல்விமுறை' நூல் வழியாகத்தான்" என்றார், சென்னை சக்திவேல். வாசிப்பு முகாம்களில் பங்குபெறும் ஆசிரியர்கள் தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களோடு ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவுதான். ஆனால் பங்குபெறும் ஆசிரியர்களின் வகுப்பறையில் அது நிகழ்த்தியிருக்கும் தாக்கம் அதிகம். மாணவர்களிடத்தில் மேலும் மேலும் நெருங்கிச் செல்ல அது ஏற்படுத்தும் உந்துதல் மிக மிக அதிகம்.


இம்முகாமில் வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ”நினைவுகள் அழிவதில்லை” நாவலின் வாசிப்பு அன்று இரவு உணவுக்குப் பின் துவங்கியது. பொதுவாக வாசிப்பு முகாம்களில் இடம்பெற்ற குழு வாசிப்பு முறை தவிர்க்கப்பட்டு, இந்நாவலை ரசித்து, ருசித்து, இதயம் முழுவதும் உள்வாங்க வேண்டும். அப்பு, சிருகண்டன், அபுபக்கர், குஞ்ஞம்புவின் செயல்பாடுகள், சம்பாஷனைகள், அர்பணிப்பு அதனை நாவல் என்னும் படைப்பிலக்கியம் வழியாக எடுத்துச் செல்லும் விதம், தூக்குக் கயிற்றை முத்தமிடும் இவர்களது நெஞ்சுரம், விவசாயிகள் போராட்ட வாழ்க்கை இவற்றை வாசிக்கும்போது எவ்வளவுதான் கட்டுப்படுத்திப் பார்த்தாலும் மாலை, மாலையாக கோர்த்து வரும் வாசகனின் கண்ணீர் ஆகியவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக, இம்முறை தனி வாசிப்புக்கு விடப்பட்டது. 


நூல் வாசிப்பின் ஊடாக, நாவலின் கருப்பொருள் சார்ந்த கருத்துரை ஒன்றை பேராசிரியர் மாடசாமி நிகழ்த்தினார். அவரது உரை கையூர் விவசாயிகளின் போராட்டத்தில் இருந்து துவங்காமல், தமிழக விவசாயிகள் போராட்டம், தூக்கிட்டும், நஞ்சிட்டும், சுடப்பட்டும் செத்து மடிந்த விவசாயிகளின் வீர வரலாறோடு துவங்கியது. நாவலில் வரும் மாஸ்டரின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் நிரம்பியிருக்கும் பாடம் பற்றிப் பேசினார். தான் ஆசிரியர் சங்க முன்னணி செயல்பாட்டாளனாக இருந்த போது, இந்த நாவல் வாசிப்பின் வழி தன்னுள் கலந்த மாஸ்டர் தனக்குக் கற்றுக் கொடுத்தப் பாடம் என்ன? என்பதைக் கூறி நீங்கள் அவரிடம் இருந்து என்ன பாடம் கற்றுக் கொள்ளப்போகிறீர்கள் எனக் கேட்டார். வகுப்பறை ஜனநாயகம், வகுப்பறை நிர்வாகம், இயல்பான கற்றல் ஆகியவற்றை இத்துடன் இணைத்தார். நமது வகுப்பறைச் செயல்பாடு, வகுப்பறையின் ஏற்றத்தாழ்வையும் சமூக ஏற்றத்தாழ்வையும் குறைத்து சமூக மாற்றம் என்னும் பல்சக்கரத்தில் ஒரு கண்ணியையாவது நகர்த்த வேண்டும் என்றார். இவரது பேச்சை கருத்துரை என்றோ உரைவீச்சு என்றோ கூறுவது பொருத்தப்பாடானது அல்ல. அவரது பகிர்வு, ஆரோக்கியமான கலந்துரையாடலாக இருந்தது.


இரண்டாம் நாள் மாலை 6 மணிக்கு நினைவுகள் அழிவதில்லை நாவலின் மீதான விவாதம் தொடங்கியது. நாற்பதுகளில் பள்ளி படிப்பு வாய்த்திராத கிராமப்புற விவசாயிகளிடம் கருக்கொண்ட நிலப்பிரபத்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, அதை சங்கமாக ஒன்று திரண்டு வெளிப்படுத்திய விதம் தற்காலத்தில் கூட அரிதாக உள்ளதே என்பதில் தொடங்கி நாவலின் மையப் பொருளைச்சுற்றி பல்வேறு சமகால பிரச்சனைகளும் இணைத்து விவாதிக்கப்பட்டது. இதனைத் பிரின்ஸ் கஜேந்திர பாபு, மிக நேர்த்தியாக தொகுத்தளித்தார். அப்பு, சிருகண்டன், அபுபக்கர், குஞ்ஞம்புவின் தியாகங்கள் போராட்டங்கள் பெயரளவிற்கான ஜனநாயகத்திற்கான போராட்டம் அல்ல சமூக மாற்றத்திற்கான போராட்டம் என விளக்கிக் கூறினார். இந்த நாவல் வாசிப்புக்கு எடுத்துக் கொண்டதன் நோக்கமே, 1940களில் ஒரு ஜமீந்தார் நடத்திய தொடக்கப்பள்ளியில் வேலை செய்த ஆசிரியர் எப்படி அந்த மாணவர்களிடமும் மக்களிடமும் இரண்டறக் கலந்து நின்றார்? மாற்று பொருளாதார கருத்துக்களை வேருன்ற செய்ய முடிந்தது? அப்படியாயின் இன்றைய நிலையில் எனது பணிச் சூழல் சரியில்லை, தலைமை ஆசிரியர் சரியில்லை, AEEO சரியில்லை, மக்கள் சரியில்லை, மாணவர்கள் சரியில்லை எனக் கூறி நமது சமூகப் பொறுப்புகளை எப்படித் தட்டிக் கழிப்பது எந்தவகையில் நியாயம் ஆகும்? நாவலில் வரும் மாஸ்டரைப் போன்ற பணிகளை செய்யாவிட்டாலும், ஒரு ஆசிரியராக மாணவருக்கும் சமூகத்திற்கும் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை அவரது உரை சிந்திக்கத் தூண்டியது.


சென்னை அறிக்கையின் சிறப்பைப் பறைசாற்றும் மிக முக்கியமான வெளிப்பாடு, டெல்லியில் உள்ள தெற்காசியப் பல்கலைக்கழகத்தில் உள்ள ரோசாலக்ஸ்சம்பர்க் ஆய்வு மையம் இதனை நூலாக வெளியிட்டு இருப்பது, இத்தகைய சிறப்பான அறிக்கையை சென்னையில் கூடிய கல்வி உரிமைக்கான அகில இந்திய மாநாடு வெளியிட்டிருப்பதும், அதனைப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை ஒருங்கிணைந்து நடத்தியதும் பெருமைக்குரிய விசயமே. இந்த அறிக்கையை அறிமுகம் செய்து பேராசிரியர் விஜயகுமார் பேசும்போது, இதன் முக்கியத்துவத்தை உச்சி முகர்ந்தார். இவ்வளவு சிறந்த ஆவணத்தை இதுநாள்வரை படிக்காமல் விட்டது தமது பெரும் தவறு என்று சாட்சியம் அளித்தார். இவ்வறிக்கையை வாசித்துவிட்டு, விவாதித்த ஆசிரியர்கள், தமிழகப் பள்ளிக் கல்வியும் இந்தியக் கல்வி நிலையிலும் உள்ள அபாயகரமான நிலையை உணர்ந்து தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர். பங்கேற்பாளர்கள் எழுப்பிய எல்லாக் கேள்விகளுக்கும் சென்னை அறிக்கையிலேயே பதில் இருந்தது. பொதுத்தேர்தல் முடிந்ததும் முன்வர உள்ள PPP மாதிரிப் பள்ளிகள் எனப்படும் பொது-தனியார் கூட்டுப் பள்ளிகள் என்னும் அபாயத்தைத் தடுத்து நிறுத்தும் வழிமுறைகள் என்ன? என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார். கல்வி உரிமை என்பது அருகாமைப்பள்ளி பொதுப்பள்ளி வாயிலாக மட்டுமே சாத்தியம். இந்த சாத்தியப்பாட்டை நிகழ்த்த ஏதாவது செய்தாக வேண்டும் என்றும் அதற்கான முயற்சிகளுக்கு ஒத்துழைப்போம் என்றும் முகாமில் பங்கேற்றவர்கள் உறுதியேற்றனர். 

இந்த அறிக்கையின் மீதான விவாதத்தைத் தொகுத்துப் பேசிய பிரின்ஸ் கஜேந்திர பாபு, சென்னை அறிக்கை உருவாக காரணமாக இருந்த 2010ல் நடந்த அகில இந்திய கல்வி உரிமை மாநாடு, அது உருவான பின்னணியையும் எடுத்துக்கூறினார். அருகாமைப்பள்ளி, பொதுப்பள்ளிக்கு அகில இந்திய அளவிலும், தமிழக அளவிலும் பாடுபட்டவர்களை பட்டியலிட்டார். கல்வியின் வழி அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவர முதன்முதலில் தேர்தலின் வழியாக கேரளத்தில் அமைந்த ஈ.எம்.எஸ். தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு பலியான கதையையும் பகிர்ந்து கொண்டார். இன்றுள்ள அரசியல் கட்சிகளில் தனது கட்சித் திட்டத்திலேயே அருகாமைப்பள்ளி, பொதுப்பள்ளி இலட்சியத்தை வரித்துக்கொண்டுள்ள ஒரே ஒரு அரசியல் கட்சி CPI(M). கல்வி உரிமையை அடிப்படை உரிமையாக்க அரசியல் சாசனத்தில் அதை இயற்றிய காலத்திலேயே வழிவகை செய்ய முயற்சித்தார் அம்பேத்கர். முயற்சிகளை முறியடித்து, கல்வி உரிமையை மறுதளிக்க அடிப்படைக் காரணமாக இருந்தார் மோடி தன் முன்மாதிரியாகக் கொள்ளும் வல்லபாய் பட்டேல். தனது முயற்சியை கைவிடாத அம்பேத்கார், வழிகாட்டும் நெறிமுறையிலேனும் கல்வி உரிமையை இணைத்து, அரசியல் சாசனத்தில் கல்வி உரிமை முச்சுவிட காரணமாக இருந்தார். கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறை சாத்தியமற்ற, நவீன தாராளமயத்தின் வழி நின்று உருவாகியுள்ள விதம் ஆகியன பற்றி பட்டியலிட்டார். தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி வர வேண்டும் என்பதற்காக இந்திய மாணவர் சங்கம் ஆற்றிய பங்கு, அதன் அன்றைய தலைவர்கள் பட்ட அடி, சிந்திய இரத்தம் மூலமாகவே சமச்சீர் கல்வி என்ற பேச்சே தமிழ்நாட்டில் எழுந்தது என்றார். இவ்வாறு பாடுபட்டு முன்னுக்கு கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி என்பது சமச்சீர் கல்வியாக இல்லாமல் நீர்த்துப்போய் சமச்சீர் பாடத்திட்டமாய் சுருங்கிப்போன சோகம். உண்மையான சமச்சீர் கல்வி என்பது அருகாமைப்பள்ளி, பொதுப்பள்ளி தான். இதனை அரசு தனது பொது நிதியில் உருவாக்கி பராமரிக்க வேண்டும். அதற்காக சென்னை அறிக்கையில் உள்ள வழிமுறைகளை நடைமுறைப்படுத்த பாடுபட வேண்டும் என்று கோரி முடித்தார். 




மூன்றாம் நாள் மூன்று மணிக்கு முகாமை முடிக்க வேண்டும் என்பது முடிவு. மாலை 5.30மணி கடந்தும் ஒருவரும் அசையாமல் முழுமையாய் பங்கேற்றனர். 24 மாவட்டங்களில் இருந்து 120 ஆசிரியர்கள் பங்கு பெற்றனர். இந்த வாசிப்பு முகாம்களின் தனிச்சிறப்பு, ஒரு முகாமுக்கு வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப்படும் நூல்கள், முகாமிற்கான செலவு என எல்லாச் செலவுகளையும் பங்கேற்பு அடிப்படையில் பகிர்ந்து கொள்வது. அவ்வாறே இந்த முகாமிலும் தலைக்கு 430/- ரூபாய் செலவானது. ஒவ்வொரு முகாமும் அதற்க்கு முந்தைய முகாமைக் காட்டிலும் எழுச்சியையும் வீச்சையும் தந்து வருகிறது. அதேபோல, இந்த முகாமும் கடந்த முகாம்களைக் காட்டிலும் 25 பேர்களின் கூடுதல் பங்கேற்போடும், பள்ளிக்கல்வி அவலம் தீர ஏதேனும் செய்தே ஆகவேண்டும் என்ற அர்பணிப்பு உணர்வையும் தந்தது. முகாமில் நிறைவுரையாற்றிய பேரா.R.மனோகரன் வாசிப்பின் முக்கியத்துவம் பற்றியும், ஆசிரியர் சங்கத்தோடு இணைத்து மேலும் மேலும் மெருகேற்ற வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார். 10வது வாசிப்பு முகாம் மேலும் ஒரு படி முன்னேறி, ஒவ்வொரு முகாமுக்கும் இடையில் உள்ள நான்கு மாத இடைவெளியிலான காலத்திற்கு ஒரு செயல் திட்டத்தை உருவாக்கியது. அதன்படி அடுத்த முகாம் நடைபெற உள்ள திண்டுக்கல் நகரின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாக இருக்கும் தோல் தொழிலை மையப்படுத்தி எழுதப்பட்ட 'தோல்' நாவலை வாசித்துவிட்டு, அதன் மீதான எழுத்துப் பூர்வமான மதிப்புரை ஒன்றை ஒவ்வொருவரும் கொண்டுவர வேண்டும். அவ்வாறு மதிப்புரை எழுதிவரும் நபர்களை மட்டுமே விவாதத்தில் பங்குபெற அனுமதிப்பது, மீதமுள்ள பங்கேற்பாளர்கள் பார்வையாளர்களாக மட்டுமே அந்த அமர்வில் இருப்பது என முடிவு செய்தது.


அடுத்த முகாமில் வாசிப்புக்கும் விவாதத்திற்குமான நூல்களாக பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள ”ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம்”, ”இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி? ” மற்றும் அறிவியல் வெளியீடுகள் வெளியிட்டுள்ள ”வாழ்வே அறிவியல்” ஆகிய நூல்கள்எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.


செப்டம்பர் 27, 28ல் நடக்கவிருக்கும் இம்முகாமுக்கு இப்போதே குறுஞ்செய்திகள் பறக்கத் தொடங்கிவிட்டன. குழு மின் அஞ்சல்களில் செய்தி ஊடாட்டம் தொடங்கிவிட்டது. தமிழக பள்ளிக்கல்வியிலும் வகுப்பறையிலும் வியத்தகு மாற்றத்தை நிகழ்த்த இருக்கும் வாசிப்பு முகாமில் நீங்களும் பங்குபெற விருப்பமா அழையுங்களேன் -9488011128,8903161283. 


தொகுப்பு:க.காந்திமதி, ஈரோடு

No comments:

Post a Comment