Tuesday 9 September 2014

கல்வி உரிமைச் சட்ட விதிகளை அமல்படுத்தினால் 95% தனியார் பள்ளிகள் மூடப்படும்: கல்வியாளர் வசந்திதேவி

By DN, சென்னை
First Published : 09 September 2014 04:48 AM IST

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளை முழுமையாக அமல்படுத்தினால், இப்போதுள்ள தனியார் பள்ளிகளில் 95 சதவீத பள்ளிகள் மூடப்படும் என்று கல்வியாளரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான வி.வசந்திதேவி கூறினார்.

உலக எழுத்தறிவு தினத்தையொட்டி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பது தொடர்பான பிரசார இயக்கம் சென்னையில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

இந்த இயக்கத்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், வி.வசந்திதேவி பேசியது: இன்றைய கல்வி முறையின் மூலம் பொருளாதார, சமூக ஏற்றத்தாழ்வுகள் நிலைப்படுத்தப்படுகின்றன. இதை மாற்ற தனியார் பள்ளிகளை மூட வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள விதிகளை 3 ஆண்டுகளுக்குள் அனைத்துப் பள்ளிகளும் பின்பற்றியிருக்க வேண்டும்.

விளையாட்டுத் திடல், சுற்றுச்சுவர், மாணவ, மாணவியருக்கான தனித்தனி கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பள்ளிகளில் இன்னமும் பின்பற்றப்படாத நிலை உள்ளது. இந்த விதிகளை முழுமையாகச் செயல்படுத்தினால் 95 சதவீத தனியார் பள்ளிகள் மூடப்படும்.

தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்களை ஈர்க்க வேண்டுமானால், ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு ஆசிரியர் என்பதையும், அனைத்துப் பாடங்களுக்கான ஆசிரியர்களையும் அரசுப் பள்ளிகளில் உறுதிப்படுத்த வேண்டும்.

ஆங்கில வழிக் கல்வி படிப்பதால் மட்டும் குழந்தைளுக்கு நல்ல வேலை கிடைத்துவிடாது. நமது அரசுப் பள்ளிகளிலும் இப்போது ஆங்கில வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுவரை, தமிழ் வழியில் கற்பித்து வந்த நமது ஆசிரியர்கள், வகுப்புகளில் தவறில்லாமல் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதை உறுதி செய்ய முடியாத நிலையே உள்ளது. தாய்மொழி வழியில் அரசுப் பள்ளிகளில் படிப்பதுதான் சிறந்தது.

கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒவ்வொரு பள்ளியிலும் இருக்க வேண்டிய வசதிகள் குறித்து அந்தந்தப் பள்ளிகளில் பெற்றோர்கள் அறியும் வகையில் ஒட்டப்பட வேண்டும்.

ஏழைக் குழந்தைகள் மட்டுமில்லாமல், வசதிப் படைத்தவர்கள், நடுத்தர வர்க்கத்தினரின் குழந்தைகளும் அரசு பள்ளிகளில் படித்தால்தான் அவை மேம்படும் என்றார் அவர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் மணி பேசுகையில், இந்தப் பிரசார இயக்கத்தின்போது, ஓராசிரியர் பள்ளிகள், மூடப்படும் அரசுப் பள்ளிகள், அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கு மக்கள் தடையாகக் கருதுவது என்ன, அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள ஆங்கில வழி வகுப்புகளின் நிலை என்ன போன்றவை தொடர்பாக கள ஆய்வு நடத்தப்படும்.

அதன் பிறகு, இது தொடர்பான புத்தகங்கள் வெளியிடப்பட்டு, அரசுப் பள்ளிகளைப் பலப்படுத்துவது தொடர்பாக 10 லட்சம் பேரின் கையெழுத்துகள் பெறப்படும்.

வரும் 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், அரசுப் பள்ளிகளை பலப்படுத்துவதை முக்கியமான விவாதப் பொருளாக மாற்றும் வகையில் இந்தப் பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த நிகழ்ச்சியில், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.முத்துக்குமரன், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் அருமைநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment