Saturday 7 June 2014

சட்டத்தை மீறும் பள்ளிகள்: நடவடிக்கை எடுக்காத மதுரை மாவட்ட நிர்வாகம்




மதுரை, ஜுன் 6-கட்டாயக் கல்வி உரிமைச்சட்டப்படி பள்ளிகளில் சேர்க்கை நடத்தாதபள்ளிகள் மீது மதுரை மாவட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வில்லையென்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் (சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் உள்பட) ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. தங்கள் இருப்பிடங்களுக்கு அருகே உள்ள பள்ளிகளில் இந்த மாணவர்கள் சேருவதற்கு தகுதி உடையவர் என்றும், தொடக்கப்பள்ளி என்றால் ஒரு கிலோ மீட்டர், நடுநிலைப்பள்ளி என்றால் 3 கிலோ மீட்டர் என்ற தூர எல்லையையும் இந்த சட்டம் நிர்ணயித்துள்ளது. அனைவருக்கும் தரமான இலவசக்கல்வியை அரசுப்பள்ளிகள் வாயிலாக செய்ய முடியாத மத்திய, மாநில அரசுகள், தனியார் கல்வி முறையில் வழங்கப்படும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாயை செலவழிக்கின்றன.

தமிழ்நாடு முழுவதும் 5,255 தனியார் ஆரம்பப் பள்ளிகளில் சுமார் 11 லட்சம் மாணவர்களும், 1,716 தனியார் நடுநிலைப் பள்ளிகளில் சுமார் 8 லட்சம் மாணவர்களும் படிக்கிறார்கள். 8ம் வகுப்பு வரையிலான மொத்த மாணவர்களில் சுமார் 29 சதவீதம் பேர் இந்த தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். வகுப்பறையில் 30 பேர் என்றால் அதில் 8 பேருக்கு கட்டாய இலவசக்கல்வி சட்டப்படி இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால், தமிழகத்தில் எத்தனை பேர் இந்த சட்டத்தின் கீழ் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.இச்சட்டம் கடந்த 2013ம் ஆண்டுதான் மதுரை மாவட்டத்தில் அமலாகியுள்ளது.

கடந்த 2013-2014ம் ஆண்டு 156பள்ளிகளில் 2509 இடங்களை நிரப்ப வேண்டும் என்று இச்சட்டம் வலியுறுத்தியுள்ளது. ஆனால், 1153 பேர் தான் இச்சட்டப்படி பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள் ளனர். இப்படி நிரப்பப்பட்ட பள்ளிகள் முழுமையாக 25 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படு த்தப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், முழுமையாக 25 சதவீத இடஒதுக்கீட்டை 11 பள்ளிகள் மேற்கொள்ளவில்லை. சிஇஓஏ மெட்ரிக்குலேசன் பள்ளி, சிஇஓஏ மெட்ரிக் பள்ளி, கிறிஸ்டெக்கிங் மெட்ரிக்குலேசன் பள்ளி, ராகவ் பப்ளிக் பள்ளி, வேலன், விரகனூரில் உள்ள வேலம்மாள் பள்ளி, மகரிஷி மெட்ரிக்குலேசன் பள்ளி, கிரசன்ட் மெட்ரிக்குலேசன் பள்ளி, அக்ஷரா மெட்ரிக்குலேசன் பள்ளி, அவனியாபுரத்தில் உள்ள எஸ்பிஜே மெட்ரிக்குலேசன் பள்ளி, வண்டியூர் தாகூர் வித்யாலயா பள்ளி ஆகியவை முழுமையாக 25 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லையென்று கூறப்படுகிறது. தகுதிவாய்ந்த மாணவர்கள் சேர்க்கைக்கு வரவில்லையென்று இப்பள்ளிகள் காரணம் சொல்லியுள்ளன. மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 40 சதவீதம் பேர் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டப்படி பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள் ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் நடைமுறைப்படுத்துகின்றனவா? என தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய கல்வி அதிகாரிகளும், மதுரை மாவட்ட நிர்வாகமும் செய்த அசட்டை, இச்சட்டம் முழுமையாக அமலாகாத நிலைக்குச் சென்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் 2014-2015ம் ஆண்டு 161 பள்ளிகளில் 2590 பேரை கட்டாயக் கல்வி உரிமைச்சட்டப்படி சேர்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் எத்தனை மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்பதை அன்றைய தினமே கணக்கிட்டு பள்ளியின் அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும் என்ற சட்டத்தை பெரும்பாலான பள்ளிகள் கடைப்பிடிக்கவில்லை.

இதுகுறித்து எந்த அறிவிப்பையும் இதுவரை இப்பள்ளிகள் செய்யவில்லை. தகுதியான நபர்களின் பெயர்களை அறிவிப்புப் பலகையில் வெளியிடுவதுடன், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் விபரங்களையும், அதற்கான காரணத்தையும் அறிவிப்புப் பலகையில் கடந்த ஆண்டு எத்தனை பள்ளிகள் வெளியிட்டன ? ஆனால், முழுமையாக இச்சட்டத்தை நிறைவேற்றாத பள்ளிகளுக்கு நோட்டீஸ் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மதுரை மாவட்ட மெட்ரிக்குலேசன் கல்வி அதிகாரிகள், தமிழக அரசின் அரசாணை 60 ஐ அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பியதுடன், மார்ச்-24 ம் தேதி ஒரு சர்க்குலரையும் அனுப்பியுள்ளனர். இந்த ஆண்டு 100 சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதுடன், இந்த ஒதுக்கீட்டின்படி காலியாக உள்ள மாணவர் சேர்க்கையில் வேறு மாணவர்களைச்சேர்க்கக்கூடாது என்றும் வலியுறுத்தி யுள்ளதாகக்கூறப்படுகிறது. கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதி முழுமையாக தனியார் பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் கிடைக்காத காரணத்தினால் தான் முழுமையாக இச்சட்டம் அமலாகவில்லையென்று பள்ளி நிர்வாகங்கள் கூறுகின்றன.

தரமான கல்வி தனியார் பள்ளிகளில்தான் கிடைக்கும் என்ற எண்ணத்தை விதைத்துள்ள மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை நடத்தும் அதே வேளையில், பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள்பணத்தைக் கொட்டி உருவாக்கப்பட் டுள்ள கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம், முழுமையாக அமலாக்கப்படுவதற்கான போராட்டத்தை முன்னெடுக்காமல் அச்சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற முடியாது.

- ப.கவிதா குமார்-தீக்கதிர்

No comments:

Post a Comment