Saturday 7 June 2014

பாட நூல்கள் ஆய்வுக்கு உட்பட வேண்டும்: ச.சீ.இராஜகோபாலன்

ஒரு பிரபலக் கல்லூரி ஆண்டுவிழாவின் பொழுது கல்லூரி முதல்வர் தம் கல்லூரியில் 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் முனைவர் பட்டம் பெற்றுவிட்டனர். அடுத்தஇரு ஆண்டுகளுக்குள்ளாக அனைத்தா சிரியர்களும் முனைவர் பட்டம் பெறுவார் களென்றும், ஐஐடி உள்ளிட்டு அனைத்துக் கல்விக்கூடங்களிலும் அனைவரும் முனைவர் பட்டம் பெற்று விளங்கும் முதல்கல்லூரியாக மிளிரும் என்றும் பெருமிதத் துடன் கூறினார்.

நிகழ்ச்சித் தலைமை வகித்த அந்நாள் யு.ஜி.சி. தலைவர் தமது உரையில் கல்லூரி ஆசிரியர்களைப் பாராட்டிவிட்டு, முனைவர் பட்டம் முதுநிலைப்பட்டத்தைவிட மேலானதல்ல. படித்த பாடத்தில் ஒரு சிறு பகுதிகள் ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது. ஆய்வு முறைகளை அறிந்து அவற்றைப் புதிய சூழலில் பயன்படுத்த முற்படுவதே அதன் சிறப்பு. அம்முறைகளைக் கல்லூரி வளாகத்திலும், சமூகச் சூழலிலும் பிரச்சனை களுக்குத் தீர்வுகாண முற்படுவதே முக்கியம். எனவே முனைவர் பட்டம் பெற்றபின் இவ்வாசிரியர்கள் தம் ஆய்வு முறை அறிவை எவ்வாறு பயன்படுத்தினர்.

அவர்கள் கண்ட பிரச்சனைகள் யாவை. எவ்வாறு தீர்வுகண்டனர் என்று முதல்வர் கூறியிருந்தால் மகிழ்ந்திருப்பேன் என்று கூறினார்.பல நாடுகளின் ஆசிரியர் இயக்கங்களில் ஆராய்ச்சிப் பகுதி கண்டிப்பாக இருக்கும். ஏன் நம் நாட்டின் மிகப்பழமையான ஆசிரியர் இயக்கத்திலும் ஒரு ஆராய்ச்சிப்பிரிவு இருந்தது. இயக்கக் கோரிக்கைகளுக்கு வலுவூட்டத் தேவையான ஆய்வுப் பின்னணியைத் தருவதோடு கல்விப் பிரச்சனைகளைப் பற்றிய ஆய்வுகளும் நடைபெறும். அவற்றின் இதழ்களில் வினா எழுப்பி பிரச்சனையின் இரு பக்கங்களையும் வகுப்பறைக் கற்பித்தலில் ஈடுபட்டுள்ள மூத்த ஆசிரியர் கள் விளக்கிக் கட்டுரை எழுதுவார்கள்.

தம் நிலைப்பாட்டிற்கான ஆய்வு முடிவு களையும் தர வேண்டும் என்ற நியதியும் வைக்கப்படும்.பாடத்திட்டம், பாடநூல்கள், தேர்வு வினாத்தாள்கள், தேர்வு முடிவுகள் இவை எவையும் எவ்வித ஆய்விற்கும் உட்படாது இருப்பது பற்றிக் கவலைப்படாமல் இருப்பது வியப்பிற்குரியது. தலைமுறைகளைப் பாதிப்பவை சீரிய ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தேர்வுகள் மாணவர் கற்றலை அறிய உதவுபவன மட்டுமல்ல, நமது கல்விமுறையின் வெற்றி, தோல்வியை கண்டறிந்து உரிய மாற்றங்களை எடுக்க உதவும் ஒப்பற்ற கருவிகளாகும்.

எனக்கு பிரச்சனை ஏதுமில்லை என்று ஒருவர் கூறினால் அவர்தான் பிரச்சனை என்ற சொல்வழக்கு ஒன்றுண்டு. பிரச்சனைகள் உண்டு. அவற்றிற்கு ஒற்றிற்கு மேற்பட்ட தீர்வுகள் உண்டு. அவற்றில் மிகச்சிறந்ததைத் தெரிவு செய்திட ஆய்வுகள் வெகுவாக உதவும். ஓரிரு எடுத்துக் காட்டுகளைப் பார்க்கலாம்.தண்டனைகள் மாணவரது கற்றலிற்கு உதவும் என்பது பெற்றோரும் ஆசிரியர்களும் ஆழமாக நம்பும் ஒரு கருத்து. இதைப் பற்றி ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தண்டிக்கப்படும் மாணவனது மூளைசெயலிழக்கின்றது, மாணவர் விழித்திருந் தாலும் கற்றலில் ஈடுபட முடியாத மன அதிர்ச்சியில் உள்ளார்.

அவர் மாத்திரமல்ல, அவர் தண்டிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற சக மாணவர்களது கற்றலும் தடைபெறுகின்றது என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு நீர்நிலையில் ஒரு சிறு கல் வீசினால் எவ்வாறு சிற்றலைகள் பரவுகின்றதோ அதே போன்று ஒருவர் பெறும் தண்டனை பிற மாணவர்களையும் பாதிக்கும். இச்செயல்பாட்டிற்கு சுiயீயீடந நுககநஉவ என்று பெயரிட்டுள்ளனர். இவ்வாய்வு தண்டனை பற்றிய ஆசிரியர்களது புரிதலை வெகுவாக மாற்றியது.வாசிப்பு வேகம் பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை. சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் செலுத்தியது அமெரிக்காவிற்கு ஒரு (அவ)மானப் பிரச்சனையாயிற்று. கல்வி முறைகளை அலசியபொழுது அமெரிக்கக் கல்வி முறையின் பலவீனங்கள் பலவும் வெளிப்பட்டன. அவற்றில் ஒன்று வாசிப்புவேகம்.

அமெரிக்க மாணவரைவிட சோவியத் மாணவர் நான்கு மடங்கு வேகத்தில் தன் தாய் மொழியில் அர்த்தம் புரிந்து படிக்கின்றார் என்பது வெளிப்பட்டது. அமெரிக்க மாணவர் ஒருவர் ஒரு பக்கம் படிக்க ஆகும் நேரத்தில் சோவியத் மாணவர் நான்கு பக்கங்கள் படித்துவிடுவார். எனவே அவரது கற்றல் வேகமும் அதிகம். மொழி அறிதல் சீராக இருப்பதால் பிற பாடங்களையும் சுமையின்றிக் கற்க இயன்றது. இதன் காரணமாக அமெரிக் காவில் வாசிப்பு இயக்கம் குடியரசுத் தலைவரது திட்டமாக அறிவிக்கப்பட்டது. இதற்கான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டதால் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. பிரச்சனைக்கு ஆய்வு முறையில் தீர்வுகண்டு செயல்படுத்தியதன் பயனை அறிய இவ்வுதாரணம் உதவுகின்றது.அறிவியல் மனப்பான்மையோடு நம் பணியினை ஆற்றும் பொழுதுதான் நம் உழைப்பு முழுப் பயனைத் தரும்.

பிரச்சனைகளைக் காணாது இருப்பது ஒரு தவறு என்றால் அதற்கான தீர்வுகாண முற்படாமல் இருப்பது பெரும் தவறு ஆகும். அதுபோல பிறரது ஆய்வு முடிவுகளை அறிந்து நம் பணியினை மேம்படுத்திக் கொள்ளவும் வேண்டும். இன்று வலையில் உடனுக்குடன் பல்வேறு ஆய்வுகளைப் பற்றி அறியலாம். ஒவ்வொரு ஆசிரியரும் கணினி பயனாளராகத் திகழ வேண்டும். இது காலத்தின் கட்டாயமென்று அறிதல் வேண்டும். அரைத்த மாவை அரைத்துக் கொண்டே செயல்படும் காலம் மறைந்துவிட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். -

நன்றி : புதிய ஆசிரியன்

No comments:

Post a Comment