Monday 9 February 2015

பரமேஸ்வரன் எம்.பி-யும் அறிவொளி இயக்கமும்






பரமேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல. அவருடைய பெயர் எம்.பி. பரமேஸ்வரன். கொஞ்சம் அவரைப் பற்றிச் சொல்ல வேண்டும்.

40 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். மதுரையில் அப்போது இந்திய சமூக விஞ்ஞானக் கழகம் என்ற அமைப்பில் செயலாற்றிக் கொண்டிருந்தேன். பரமேஸ்வரன், கேரள மாநில அறிவியல் இயக்கத்தில் செயலாற்றிக்கொண்டிருந்தார். சிறந்த படிப்பாளி. கல்லூரியில் சிறப்புப் பாடமாக அணுவியல் படித்தார். மாஸ்கோ சென்று ‘லுமும்பா’ பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை முடித்தார். அங்கேயே முனைவர் பட்டம் பெற்று விஞ்ஞானியாக இந்தியா வந்தார். டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார்.

விடுமுறையில் கேரளத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு வந்தபோது, மக்களின் அறியாமையையும் மூடநம்பிக்கைகளையும் பார்த்துத் திகைத்தார். ‘நான் அணு விஞ்ஞானியாகிக் கிழித்தது போதும். என் சக இந்தியனைத் தெளிவுபடுத்த வேண்டும். அதுதான் என் முதற்பணி என்று முடிவு செய்து, டாடா நிறுவனத்திலிருந்து விலகினார். புரோகமன கலா சாகித்ய சங்கத்துடன் இணைந்து, அறிவியல் இயக்கத்தைத் தொடர்ந்தார்.

மதுரையில் இந்திய சமூக விஞ்ஞானக் கழகத்தில் அவர் பேசும் கூட்டத்துக்கு நான் தலைமை வகிக்க வேண்டியதாயிற்று. இன்றும் அவர் பேசியவை என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

ஆதிமனிதனின் ‘டிராஜெக்டரி’

“நாம் வானில் ஏவுகணைகளை இன்று அனுப்புகிறோம். அந்த ஏவுகணை பயணிக்கும் பாதையை ஆங்கிலத்தில் ‘டிராஜெக்டரி’(trajectory) என்பார்கள். வேட்டைச் சமூகத்தில் மனிதன் மானை நோக்கி அம்பை விடுகிறான். மான் முந்திவிடுகிறது. இப்போது மேலும் வேகமாக அம்பை விடுகிறான். அம்பு முந்திவிடுகிறது. முன்றாவது முறை மானின் வேகத்தையும் அம்பின் வேகத்தையும் தன் அனுபவத்தால் அளந்து விடுகிறான். மான் அடிபட்டுச் சாய்கிறது. இன்றைய ‘டிராஜெக்டரி’யின் கூறுகளுக்கு வேட்டைச் சமூகத்திலேயே அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டன எனலாம். மானின் மாமிசத்தைப் புசிக்கிறான்.

அதன் தொடைக்கறி ருசியாக இருக்கிறது. குடலைவிட நெஞ்சுக் கறி நல்லது என்று உணர்கிறான். விலங்கியலுக்கு அடிக்கல் விழுகிறது. பழங்களையும் பச்சிலைகளையும் உண்கிறான். தாவரவியல் பிறக்கிறது. ஆதிமனிதனின் அனுபவத்தின் திரட்டுதான் இன்றைய நவீன விஞ்ஞானம். ஆனால், இன்றைய விஞ்ஞானம் அல்ல அது.”

அறிவியலைப் ‘பாலாடை’யில் வைத்துப் புகட்டினார். அவர் பேச்சைக் கேட்டு கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் பலரும் அறிவியலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஒரு இயக்கமாக மாறிச் செயல்பட ஆரம்பித்தார்கள். கரிகாலன் அணை கட்டியது உண்மை. அதன் தொழில் நுணுக்கம் அறிந்துகொள்ளப்பட வேண்டியதுதான். ஆனால், சிற்ப சாஸ்திரம்தான் பொறியியலின் முடிவு என்று சாதிக்கக் கூடாது. கிறிஸ்து பிறப்பதற்கு 1,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ‘மத்ஸ்ய புராணம்’ சொல்லியிருக்கிறது என்று புளுகக் கூடாது.

வடஇந்தியாவில் ஆங்கிலப் பத்திரிகைகளும் இந்தப் புளுகுணிப் பாட்டைப் பாட ஆரம்பித்து விட்டன. அறிவியல் இயக்கங்கள் ஓய்வின்றிச் செயலாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது!

-காஷ்யபன், மூத்த எழுத்தாளர், தொடர்புக்கு: kashyapan1936@gsmail.com

No comments:

Post a Comment