Sunday 22 February 2015

குழந்தை உரிமைகளை பாதுகாப்பதில் தோல்வி மத்திய-மாநில அரசுகள் மீது குற்றச்சாட்டு



சென்னை, பிப்.21-

குழந்தை உரிமைகள் தொடர்பான 1989ம் ஆண்டின் ஐ.நா. மாநாட்டு உடன்பாட்டை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் மத்திய, மாநில அரசுகள் அதை முழுமையாக நிறைவேற்றத் தவறிவிட்டன என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.உடன்பாடு உருவாக்கப்பட்டதன் 25ம் ஆண்டு விழா கடந்த நவம்பரில் கடைப்பிடிக்கப்பட்டது. இந்திய அரசு அதை ஏற்றதன் 25ம் ஆண்டு விழா 2017ல் வருகிறது. இதையொட்டி சென்னையில் பிப்.18, 19ல் கலந்தாய்வு - பயிலரங்கம் நடைபெற்றது.அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,

“குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சட்டங்கள், அரசாணைகள் உள்ள போதிலும், குழந்தை உரிமைகள் மீறப்படுவது தொடர்கிறது. உடல்ரீதியான - மனரீதியான சித்ரவதைகள், பொருளாதாரச் சுரண்டல்கள், குழந்தைத் திருமணம்,

பள்ளிகளிலும் விடுதிகளிலும் அண்டை இடங்களிலும் பாலியல் அத்துமீறல்கள், சிறார் இல்லங்களில் அத்துமீறல்கள், குழந்தைகள் கடத்தப்படுதல், ஆபாசப் படமெடுக்கப் பயன்படுத்தப்படுதல், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுதல் போன்ற செயல்கள் மூலம் குழந்தை உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்படுகின்றன,”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நகரம், கிராமம் ஆகிய இரு பகுதிகளிலுமே பள்ளிகளில் குழந்தைகளுக்கு உடல்ரீதியான தண்டனைகள் அளிக்கப்படுவது, வாழ்க்கைக்கான அடிப்படை உரிமைகளும் பாதுகாப்பும் மரியாதையும் மறுக்கப்படுவது,

வசிப்பிடத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுவதால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது போன்றவை தொடர்கின்றன. காவல்துறை, வழக்குகளை நடத்துவதற்கான அரசுத் துறை, நீதித்துறை ஆகியவை போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை, இத்தகைய அத்துமீறல்கள் குறித்து அரசு அதிகாரிகளின் எதிர்வினை ஏமாற்றம் அளிப்பதாகஉள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது.காவலில் வைக்கப்பட்டிருக்கும் குழந்தைகளின் அடிப்படை உரிமைகள் மிகக் கடுமையாக மீறப்படுகின்றன.

உடல் ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாவது சர்வசாதாரணமாக நடக்கின்றது. கைது செய்யப்படும்போதும், விசாரிக்கப்படும்போதும் குழந்தைகள் ஆழமான உணர்ச்சிச் சிக்கல்களுக்கு உள்ளாகிறார்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஆதிக்க வர்க்கத்தாலும், சாதியத்தாலும், மதவெறி தாக்குதல்களாலும் ஏற்படும் நெருக்கடியான நிலைமைகள், வன்முறைகள் ஆகிய சூழல்களில் குழந்தைகளின் பாதுகாப்பு மிகவும் கவலைக்குரியதாகிவிடுகிறது என்றும் அறிக்கை கூறுகிறது.இந்தியாவின் சில சட்டங்களில் குழந்தை நிலைக்கான அதிகபட்ச வயது 18 என்று உள்ளது. ஆனால் ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளுக்கான சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களில் அதிகபட்ச வயது 14 என்று உள்ளது.

இது பல்வேறு அத்துமீறல்களுக்குத் தோதாக இருக்கிறது என்று கலந்தாய்வில் பங்கேற்றோர் கூறினர்.ஐ.நா. உடன்பாட்டை இந்தியாவில் நிறைவேற்றுகையில், அந்தந்த நாட்டின் நிலைமைக்கும் பண்பாட்டிற்கும் ஏற்ப செயல்படுத்தப்படும் என்ற திருத்தம் சேர்க்கப்பட்டது. இதன் மூலம், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான பல விதிகள் கொண்டுவரப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்தத் திருத்தத்தை எப்போதோ விலக்கிக்கொண்டிருக்க வேண்டும். 18 வயதுக்குக் குறைந்தோரை எந்த ஒரு தொழிலிலும் ஈடுபடுத்துவதைத் தடை செய்யும் சட்டத்தை இனியாவது அரசு அத்தகைய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர்.துப்புரவுத் தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கான கல்வி உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தவும்,

உடல் நலம் உள்ளிட்ட பராமரிப்புகளில் கவனம் செலுத்தவும் உதவியாக அவர்களது வேலை நேரங்களை மாநில அரசு மாற்றியமைக்கக் கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட வாரியாக குழந்தை உரிமை செயல்பாட்டாளர்கள் கூட்டமைப்பை ஏற்படுத்துதல், பொதுநல வழக்குகள் தொடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நெருக்கடி நிலை நிதி (யுனிசெப்) அமைப்புடன் இணைந்து இந்தக் கலந்தாய்வை தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு,

குழந்தை உரிமைக்கான முன்னணி, பெண் கருக்கொலைக்கு எதிரான பிரச்சாரம், மனிதஉரிமை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு ஆகியவை நடத்தின.மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் வே. வசந்தி தேவி, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய முன்னாள் தலைவர் சாந்தா சின்ஹா, யுனிசெப் இயக்குநர் ஆர். வித்யாசாகர், கூட்டமைப்பின் அமைப்பாளர் ஆஸி பெர்னாண்டஸ், முன்னணியின் அமைப்பாளர் தாமஸ் ஜெயராஜ், பெண் கருக்கொலை எதிர்ப்புப் பிரச்சார அமைப்பின் எம். ஜீவா, வழக்குரைஞர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment