Sunday 22 February 2015

குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்'

By dn, சென்னை
First Published : 22 February 2015 04:25 AM IST

குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் என மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வி.வசந்திதேவி கூறினார்.

குழந்தை உரிமைக்கான முன்னணி, பெண் கருக்கொலைக்கு எதிரான பிரசாரம், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு, யுனிசெப் ஆகிய அமைப்புகளின் சார்பில் குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான 2 நாள் கருத்தரங்கு சென்னையில் அண்மையில் நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கில் வசந்திதேவி பேசியது:

இந்தியாவில் குழந்தைகளின் உரிமையைப் பாதுகாக்க பல சட்டங்கள் இருந்தும், அவை முழுமையாக செயல்படுத்தப்படாமல் இருப்பதால் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாமல் உள்ளது.

இதனால், குழந்தைகள் மீதான தாக்குதல்கள், வன்முறைச் சம்பவங்கள், பாலியல் துன்புறுத்தல்கள் போன்றவை அதிகரித்து வருவதால், குழந்தைகளின் வளர்ச்சி தடைபடுகிறது.

தலித் குழந்தைகள், அடித்தட்டு குழந்தைகள், குடிசைகளில் வசிப்பவர்களின் குழந்தைகள், வேலைக்காக நகரங்களுக்கு இடம்பெயர்ந்தவர்களின் குழந்தைகள் என 80 சதவீத குழந்தைகளுக்கு கல்வி, சத்தான உணவு, சமூகத்தில் வாழ்வதற்கு ஏற்ற சூழல், மருத்துவம் போன்றவை முழுமையாகக் கிடைப்பதில்லை.

மத்திய அரசு 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மட்டுமே கட்டாயக் கல்வி வழங்குகிறது. பிறந்த குழந்தை முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளும், 14 வயது முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளும் இதில் விடுபட்டுள்ளனர். இவர்களையும் பாதுகாக்கும் வகையில் 18 வயது வரையுள்ளவர்களுக்கு இலவச, கட்டாயக் கல்வி என அறிவிக்க வேண்டும்.

குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் 18 வயது வரையுள்ள அனைவரையும் குழந்தைகள் என குழந்தைத் தொழிலாளர் சட்டம் உள்ளிட்ட சட்டங்களில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றார். 

No comments:

Post a Comment