Saturday 21 February 2015

குழந்தைப் பருவத் திருமணத்தின் தீமைகள்: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி




அடையாறு புற்றுநோய் மருத்துவமனை

(சென்னை மாகாண சட்டசபையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆற்றிய உரை)

“ஆணின் திருமண வயதை 21 என்றும், பெண்ணின் திருமண வயதை 16 என்றும் உயர்த்த வேண்டியது அவசியம் என்ற இந்த கருத்தை இந்திய அரசுக்குத் தெரிவிக்க, இந்த அவை பரிந்துரைக்கிறது.”

நான் இந்தத் தீர்மானத்தை இந்த நாட்டு மக்களின், முக்கியமாக நம் நாட்டுப் பெண்களின், சார்பில் கொண்டுவர விழைகிறேன். ஏனென்றால், இங்கே இளம் பருவத்திலேயே திருமணம் செய்யும் வழக்கம் இந்து மேல்வகுப்பினரிடையே நடைமுறையில் இருந்துவருவதால், ஒரு பெண் குழந்தையின் பிறப்பு வரவேற்கப்படுவதில்லை. ஒரு பெண் குழந்தை பிறந்துவிட்டால், அதைப் பெரும் துர்ப்பாக்கியமாகப் பார்க்கின்றனர். முக்கியமாகப் பெற்றோர்கள் ஏழைகளாக இருந்தால் இப்படி நடக்கிறது. ஒரு கண்ணியமான, தகுதி வாய்ந்த கணவனைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு எந்த அளவுக்குப் பெற்றோர்களுடையதாகிவிடுகிறது என்றால், அந்த உணர்வு தந்தைக்கும், தாய்க்கும் குழந்தையிடம் உள்ள பாசத்தையே அழித்துவிடுவதாக இருக்கிறது. நிறைய ஏழைக் குடும்பங்களில் பெண் சிசுக்கள், பிறந்த நிமிடத்திலிருந்தே உதாசீனப்படுத்தப்படுகின்றன.

பிரசவ வேதனை முடிந்து, குழந்தையின் முதல் அழுகைச் சத்தம் கேட்டவுடன் பெற்றோர்கள், தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்களில் ஒவ்வொருவரும் குழந்தையின் பாலினத்தைத் தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். குழந்தை பெண்ணாக இருந்தால், மகிழ்ச்சியற்ற இந்தச் செய்தியை அவர்களிடம் கூறாமல் பல முறை நானே மறைத்திருக்கிறேன். ஏனென்றால், வசதி படைத்தவர்களிடையேகூட இந்தச் செய்தி, வருத்தத்துடனும் ஏமாற்றத்துடனும்தான் உணரப்படு கிறது. பல முறை நான் இந்தச் செய்தியைத் தாயிடம் கூறு வதைத் தவிர்த்திருக்கிறேன். இந்தச் செய்தி தாய்க்கு ஒரு அதிர்ச்சியாக இருந்துவிடக் கூடாது.

பெண் சிசுவை வளர்க்கும் விதம்

பெண் சிசுவை இளம்பருவத்திலேயே திருமணம் செய்து வைக்கும் கெட்ட பழக்கத்தால் அவள் பிறந்ததிலிருந்தே கவலைக்குரியவளாகி, குடும்பத்துக்கு ஒரு சுமையாகிறாள். எட்டு அல்லது ஒன்பதாவது வயதை எட்டும்போது, அவள் பெற்றோர்கள் அவளது திருமணத்தைப் பற்றியும், அவளது வருங்காலக் கணவர் பற்றியும், ஆகக்கூடிய செலவைப் பற்றியும் பேசத் தொடங்குவார்கள். குடும்பத்தின் கவனமும் கவலையும் இவளைச் சுற்றியே இருக்கும்.

இளம் பெண்கள் கள்ளம்கபடமற்ற, தூய்மையான வாழ்க்கையைத் தியாகம் செய்தும் இந்த வெறுக்கத் தக்க தீய பழக்கத்தை ஒழித்துக்கட்ட முடியவில்லை. பழக்கவழக்கங்கள் எவ்வாறு நம் சமூகத்தில் வேரூன்றிப்போயிருக்கின்றன என்பதை இது காட்டுகிறது. பல சமயங்களில் பெண் குழந்தை பள்ளியிலிருந்து நிறுத்தப்படுகிறாள். மாப்பிள்ளை நிச்சயமான பிறகு, திருமணத்தைப் பற்றியும் அதற்கான ஏற்பாடுகளைப் பற்றியுமே வீட்டில் பேச்சு நடைபெறுகிறது.

இழப்புகளே அதிகம்


இளம் பெண், குழந்தையின் கள்ளங்கபடமற்ற தன் இயல்பை இழக்கிறாள். வெட்கப்பட்டு, பேசாது ஒதுங்கி நிற்கிறாள். வீட்டில் உள்ள வயதான பெண்களின் வழிமுறை களைப் பின்பற்றத் தொடங்குகிறாள். வீட்டிலுள்ள பெண் களுக்கு வெளியில் எந்தப் பொழுதுபோக்கும் இல்லாத தால், இந்த இளம் பெண்களின் மூளையில் முற்றிய பெண்களின் பாலுறவுக் கருத்துகளை அவர்கள் புகுத்து கின்றனர். திருமணத்துக்குப் பிறகு, மாப்பிள்ளையின் பெற்றோர் களுக்கான சொத்தாகிறாள் பெண். அவளது இயல்பான செயல்பாடுகளுக்குத் தடைகள் விதிக்கப்படுகின்றன. அவள் தன் மாமியார், மற்ற அயலார் முன்பு ஓடி விளையாடவோ, சத்தமாகப் பேசவோ, உரக்கச் சிரிக்கவோ கூடாது. இவ்வாறு அவளது இளம்பெண் பருவம், மிகவும் ஒளிவாய்ந்த பருவம், அவளிடமிருந்து பறிக்கப்படுகிறது. அவளுக்குக் குழந்தைப் பருவமும், முதிர்ந்த பெண்ணின் பருவமும் மட்டும்தான் தெரியும். “ஆகவே, சிறு குழந்தைப் பருவத்திலிருந்தே அவள் குழந்தை பெறும் பருவத்துக்குத் தள்ளப்படுகிறாள்.”

சிறிய நகரங்களில் சூழ்நிலை மாறலாம். ஆனால், கிராமப்புறங்களில் உள்ள நம் பெண்கள் எப்போதும் இதைப் போன்றுதான் இருக்கின்றனர். இதைப் போன்ற தாய்மை அடைவது கருச்சிதைவுக்கும் கரு கலைந்துபோவதற்கும் காரணமாகிறது. கர்ப்பப்பை சிறிய வயதில் வலுப்பெறாமல் இருப்பதால், தாய்மையின் மாற்றங்களைத் தக்கவைத்துக்கொண்டு, முழு வளர்ச்சிக்கும், முழுப் பேறுகாலத்துக்கும் இருக்கும் வகையில் ஊட்டத்தைப் பெற முடிவதில்லை.

குழந்தைத் தாய்

ஒரு வருடத்தில் இப்பெண்களுக்கு மூன்று நான்கு கருச் சிதைவுகள் நிகழ்கின்றன. அப்படி முழுக் கர்ப்பகாலம் அடைந்தாலும் பலருக்கு மிக நீண்ட, சோர்வு அளிக்கக் கூடிய, ஆயுதம் போட வேண்டிய நிலைமையே உண்டாகிறது. இது குழந்தையையும் தாயையும் பலவீனமாக்கிவிடுகிறது.

நான் என்னுடைய 16 வருட மருத்துவப் பயிற்சியில், மேல்வகுப்பு இந்துக் குடும்பங்களில் 12-லிருந்து 15 வரை வயதுள்ள குழந்தைத் தாய்களின் பிரசவ காலத்தைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் பேறுகாலம் கடைசியில் என்னவாகுமோ என்ற பயத்தையும் பிரசவத்தைப் பற்றிய பதற்றத்தையும் கொண்டிருந்தனர்.

நான் பல இரவுகள், பகல்கள் அவர்களது படுக்கை அருகே கனத்த இதயத்துடன் உட்கார்ந்திருக்கிறேன். அவர்களுடைய பரிதாபமான நிலையைக் கண்டு இரக்கம் கொண்டிருக்கிறேன். அந்த நிலைக்கு அவர்கள் பொறுப்பல்ல. எந்தத் தவறான செயலோ எண்ணமோ இல்லாத அவர்களை இந்நிலைக்குத் தள்ளியது, சமூகத்தின் குருட்டுத்தனமான, பொருளற்ற பழக்கங்களும் பெற்றோர்களின் அறியாமையும், மூடநம்பிக்கைகளும் அல்லவா?

இந்த இளம் பெண்கள் நன்கு வளர்ச்சி அடையாத உடம்புடன் கருத்தரித்து, பிரசவத்தின்போது படும் வேதனைகளையும், வலியால் துடிப்பதையும் பார்த்திருக்கிறேன். அப்போதெல் லாம், பைத்தியக்காரத்தனமான பழக்கவழக்கத்துக்குத் தங்களது அருமையான குழந்தைகளைப் பறிகொடுக்கும் குருட்டுத்தனமான மனித இனத்தைத் தோற்றுவித்த வானை யும் மண்ணையும் தூற்றுவதைத் தவிர்க்க முடிந்ததில்லை. பிரசவத்துக்கு வரும் பலருக்குப் பிரசவ வேதனை நீண்ட நேரம் நீடிப்பதோடு, பல நாட்கள்கூடத் தொடரும். முதிர்ச்சி அடையாத பிறப்புறுப்பாலும், முழு வளர்ச்சி அடையாத தசைகளாலும் வலியால் இவர்கள் துன்பப்படுகிறார்கள்.

ஒரு குழந்தைப் பிறப்பே தாயின் உடல்நிலையைக் குலைய வைக்கிறது. பல வருடங்கள் வயதானது போன்ற தோற்றத்தை அவர்களுக்குக் கொடுத்துவிடுகிறது.

நம் நாட்டு இளம் தாய்களின் அவலமான நிலையைப் பற்றி நினைக்கும்போது என் இதயத்தில் இவர்கள் மீது இரக்க உணர்வு மேலோங்குகிறது. இந்த இளம் தாய்மார்கள் அடிக்கடி அனுபவித்த கருத்தரிப்பு, கருச்சிதைவு, கருக் கலைதல் போன்றவற்றால் உடல்நலம் கெட்டுப்போன நிலையில், அவர்கள் எப்போதும் அழுதுகொண்டும் சிணுங் கிக்கொண்டும் நோய்வாய்ப்பட்ட ஆறு, ஏழு குழந்தைகளை வேறு பார்த்துக்கொள்ள வேண்டும். நடுத்தர வர்க்கத்திலும், ஏழை மக்களிடையேயும் சிறிதும் இரக்கமில்லாத கணவன், படிக்காத, கொடிய உள்ளம் கொண்ட மாமியார் இவர் களிடையே, இளமையான ஏழை மருமகளின் நிலைமை மிகவும் கொடுமையானது. அவள் சமையற்காரியாகவும் தனது குழந்தைகளுக்குத் தாதியாகவும், வீட்டில் பொது வேலைக்காரியாகவும், மனைவியாகவும் இயங்க வேண்டும். இத்துடன் வீட்டில் உள்ள பெரியவர்கள் விதிக்கும் முட்டாள்தன மான எல்லா ஆச்சாரங்களையும் பின்பற்ற வேண்டும்.

இந்தக் குழந்தைப் பருவத் தாய்மார்கள் வாழ்க்கையைச் சிறிதும் அனுபவிப்பதில்லை. தங்களால் ஏதும் செய்ய முடியாத நிலையில், தங்கள் கஷ்டங்களை வாழ்க்கையின் ஒரு பாகமாக எடுத்துக்கொண்டு, கர்மவினைப் பயன் என்று வருந்துகின்றனர். இந்தப் பெண்களின் கணவர்களும் பெரும்பாலோர், இளமையாகவும், பொறுப்பற்றும் இருப்பதால் தங்கள் வாழ்க்கைத் துணைவிக்குக் குழந்தை பெறும் பாட்டிலிருந்து விடுதலை அளிக்கும் புலனடக்கத்தைப் பின்பற்றுவதில்லை.

சிறுமி-விதவைகளின் மாபெரும் சோகம்


எல்லாவற்றையும்விட மிக மோசமான விளைவு, இந்துக் குடும்பங்களில் நம்மிடையே பெரும் எண்ணிக்கையில் உள்ள சிறுமி சமூக அந்தஸ்தில் மோசமான நிலையில் உள்ள விதவைகள்.

ஒரு இந்துக் குடும்பத்தில் உள்ள சிறுமி-விதவை வெகு மோசமாகவும் கண்ணியமற்றும் நடத்தப்படுகிறாள். அவளது இந்த விதவை நிலைக்கு அவள் காரணம் இல்லாத போதும், அவளது வாழ்க்கை அவலமாக்கப்படுகிறது. நான் இங்கே நமது மாகாணத்தில் இந்தக் கொடுமையான வழக்கம் எவ்வளவு அநீதியை இழைத்துள்ளது என்பதைக் காட்டக் கீழ்க்கண்ட புள்ளிவிவரங்களை இந்த அவையின் முன்வைக்கிறேன்.

மொத்தப் பெண்களில் மணம் புரிந்தோர் 97 லட்சத்திலிருந்து 217 லட்சம். விதவையானோர் 40.2 லட்சம். விதவையான வர்கள், மணம்புரிந்த பெண்களில் கிட்டத்தட்ட பாதியாக உள்ளனர்.

நாகரிக உலகின் எந்தப் பாகத்திலும் இந்த வழக்கம் பின்பற்றப்படுவதில்லை. நாகரிகமடைந்த எந்த நாட்டிலும் பெண்ணின் வாழ்க்கையை இவ்வளவு மலிவாகக் கருது வதில்லை. இதைப் போன்ற வழக்கங்கள் இல்லாத நாடு களில் மக்கள் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் மிகுந்த வளத்துடனும் நம்மைவிட உடல் வலிமை உடையவர் களாகவும் இருக்கின்றனர். மதத்தின் பெயரால் பொருளற்ற நடப்புகளில் ஒட்டிக்கொண்டு, நாம் திறனற்றுத் துன்பப்படுகிறோம்.

ஏழ்மையாலும் நோய்களாலும் நாம் மிகவும் வருந்து கிறோம். நம்முடைய நாடு சுதந்திரமானதும் இல்லை. இந்தக் கள்ளமில்லாத, துன்பத்தில் உழலும் உதவியற்ற சிறுமியர் சார்பில், கோடிக் கணக்கான சிறுமியர்-மனைவிகள் சார்பில், கோடிக் கணக்கான சிறுமியர் - தாய்கள் சார்பில், குழந்தை விதவைகள் சார்பில் நான் இங்கு சட்டசபையில் இருக்கும் எல்லாப் பிரிவினர்களிடமும் இந்துக்கள், முகம்மதியர்கள், கிறிஸ்துவர்கள் என்று அனைவரிடமும் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக ஆதரிக்கக் கோருகிறேன். இது கோடிக் கணக்கான நம் சிறுமிகளை, அவர்கள் முதிர்ச்சி அடையாத வயதில் மனைவி ஆவதிலிருந்தும் தாய் ஆவதிலிருந்தும், சுமத்தப்பட்ட விதவை வாழ்க்கையிலிருந்தும் காப்பாற்றி, இந்த மெலிந்த தலைமுறைக்குப் பதிலாக எதற்கும் வளையாத, சக்தி வாய்ந்த வம்சத்தை உருவாக்க உதவும்.

(இந்தத் தீர்மானம் 1928 மார்ச் 27-ம் தேதி சென்னை மாகாண சட்டசபையால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.)

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் சுயசரிதை என்ற நூலிலிருந்து சில பகுதிகள்...,   தமிழில்: எஸ். ராஜலட்சுமி

No comments:

Post a Comment